ஆண்டு முழுவதும் வாசி
ஆண்டு முழுவதும் வாசி

“விவிலியத்தை அறியாதவன் கிறிஸ்துவை அறியாதவன்” - புனித எரோணிமுசு. கிறிஸ்து பிறப்பின் 2025ஆம் யூபிலி ஆண்டில், உயிருள்ளதும் உயிரளிப்பதுமான இறைவார்த்தையின் மீது கூடுதல் தாகம் கொண்டவர்களாக அகில உலக தமிழ் கத்தோலிக்க நம்பிக்கையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 'ஆண்டு முழுவதும் வாசி' என்ற எளிய பணியை (உற்சாகப்படுத்தும் போட்டியாக ) தூத்துக்குடி மறைமாவட்டம் தென்மண்டல கலப்பை ஊடகப்பணிக்குழு அறிமுகப்படுத்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றது.

ஆயர்கள், அருட்தந்தையர்களை உள்ளடக்கிய விவிலிய அறிஞர்கள் குழுவின் உதவியோடு இந்தப் போட்டியானது நடத்தப்படுகின்றது. திருவிவிலியத்தை புரிந்து தெளிந்து வாசித்து வாழ்வாக்குவதற்காக, விவிலிய நூல்களின் பின்னணி மற்றும் காலச்சூழலையும், அவற்றின் உட்பொருளையும், அந்நூல்கள் இன்றைய சூழலில் நமக்கு உணர்த்தும் செய்தியையும், விவிலிய அறிஞர்கள் குழுவின் துணை கொண்டு கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்கும்போது படிக்கும் பகுதியில் எழும்புகின்ற கேள்விகளுக்கு விவிலிய அறிஞர்கள் வழியாக விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது.

இணையத்தளம் வழி நடத்தப்படுகின்ற இந்தப் போட்டியானது விவிலிய வகுப்பு போன்று நடத்தப்படுகிறது. பங்கெடுத்து இறுதிவரை நிலைத்து நின்று விவிலியம் படித்து முடிப்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படும். இணையதள பராமரிப்பு செலவுகளை மேற்கொள்வதற்காக பங்கேற்பாளர்களிடம் 200 ரூபாய் நுழைவுக் கட்டணமாக பெறப்படுகிறது. கூடுதல் தொகையும் இந்த நற்செய்திப் பணிக்காக கொடுக்க விரும்புகின்றவர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.

அருட்தந்தை தே.செல்வரத்தினம்
செயலர், கலப்பை ஊடகப் பணிக்குழு
தென்மண்டலம், தூத்துக்குடி மறைமாவட்டம்.