ஆண்டு முழுவதும் வாசி

உயிருள்ளதும், ஆற்றல் மிக்கதுமான (எபி 4:12) கடவுளின் வார்த்தை, நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் நிறைவாழ்வளிக்கும் கடவுளின் உடனிருப்பின் உன்னதச் சின்னம். காலங்கடந்த கடவுளை நம் கண்முன் நிறுத்தும் ஞானப் பெட்டகம். வாசிப்போர் அனைவருக்கும் வாழ்வினை வாக்களிக்கும் வல்லமையுள்ள அடையாளம். தொடக்கமுதல் இருந்த வாழ்வுதரும் வாக்கு மனிதரானார், நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14) என்ற மறைபொருளை ஏற்று அறிக்கையிடும் மீட்படைந்தோரின் திருக்கூட்டமாகிய திருஅவை, திருவிவிலியத்தை வாசித்து, வாழ்வாக்குவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு இடையறாது கற்பித்து வருகின்றது.

‘விவிலியத்தை இறைப்பற்றுடன் வாசிப்பதன் மூலம், அல்லது திருஅவையின் அருள்பணியாளர்களுடைய ஒப்புதலோடும் ஆதரவோடும் இன்று எங்கும் பாராட்டுக்குரிய முறையில் பரவிவரும் பிற பொருத்தமான முயற்சிகள் மற்றும் வழிவகைகள் மூலம் அனைவரும் விருப்புடன் விவிலியத்தை அண்டிச்செல்ல வேண்டும்” (இ.வெ. 25) என்ற மேலான அழைப்பை ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே நமக்குத் தந்தது இரண்டாம் வத்திக்கான சங்கம். இத்தகைய பாராட்டுக்குரிய, பொருத்தமான முயற்சிகளுள் ஒன்று, தூத்துக்குடி மறைமாவட்டத்தின் தென்மண்டல கலப்பை ஊடகப் பணியகம் அறிமுகம் செய்து செயல்படுத்தி வரும் ஆண்டு முழுவதும் வாசி 2.0. என்ற விவிலிய வினாடி வினாப் போட்டி.

‘நாம் இறைவேண்டல் செய்யும்போது இறைவனோடு பேசுகின்றோம், இறைவார்த்தையை வாசிக்கும்போது இறைவன் நம்மோடு பேசுகின்றார்” என்ற புனித அம்புரோசின் வார்த்தைகளுக்கேற்ப, இறைவன் உங்களோடு பேச இவ்வினாடி வினா ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

கிறிஸ்து பிறப்பின் 2025ஆம் ஆண்டு மாபெரும் யூபிலி நினைவை உலகம் முழுவதும் கொண்டாடி மகிழும் இச்சூழலில், அவரை வார்த்தை வடிவில் பெருமைப்படுத்தும் இப்பெருமுயற்சியை நான் உளமாரப் பாராட்டுகின்றேன். ஏற்கெனவே இப்போட்டியில் பங்கேற்று வரும் இறைவார்த்தைமீது தாகம் கொண்ட நல்லுள்ளங்களையும், இன்னும் பல குழுக்களாக இதில் இணையவிருக்கும் நல்லோரையும் வாழ்த்துகின்றேன்.

இறைவார்த்தையை வாசிப்பதன் வழியாக மீட்பின் மறையுண்மைகளை நீங்கள் நம்பவும், நம்பியதை எதிர்நோக்கவும், எதிர்நோக்குடன் ஒருவரையொருவர் அன்புசெய்யவும் இறைவார்த்தையின் ஆற்றல் உங்களைத் தூண்டுவதாக” என்ற திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுலின் வார்த்தைகளைப் பயன்படுத்தி உங்களுக்கு ஆசி வழங்குகின்றேன்.

இறையாசீருடன்
மேதகு ஆயர் அ. ஸ்டீபன்
தூத்துக்குடி மறைமாவட்டம்.