ஜெபங்கள்

உங்கள் இதயத்தில் ஊற்றெடுக்கும் அமுத இராகங்களால் இதோ! ‘‘இறையே என் இசையே என்ற படைப்பை உங்கள் கைகளில் பெருமகிழ்ச்சியோடு தந்திருக்கின்றோம். மனிதருக்குத் தரப்பட்ட உன்னதமான கொடைகளுள் ஒன்று அவர்களின் குரல்வளம். இறைவனால் தரப்பட்ட இக்கொடை இறைவனைப் புகழ்தல், இறைவனை வேண்டுதல், இறைபுகழ் பரப்புதல் ஆகிய மூன்று செயல்களுக்குப் பயன்படவேண்டும். இறைவனைப் புகழ்வதே நமது படைப்பு (எசா. 43:21) மற்றும் மீட்பின் (எபே. 1:12) நோக்கமாகும். எனவே தான் தி.பா. 5:11, 47:6-7, 100:2, 147:1 மற்றும் 96:1 ஆகிய பகுதிகள் இறைபுகழ் பாடுவதை ஒரு விருப்பமாக இல்லாமல் ஒரு கட்டளையாக நமக்குத் தருகின்றன. நாம் தனியாக இறைபுகழ் பாடுவதில்லை. மாறாக நாம் பாடுகின்றபோது எப்போதும் பாடிக்கொண்டிருக்கும் விண்ணகத்தினரோடு இணைந்து இறைவனைப் புகழ்கின்றோம் (தி.வெ. 4:5). எனவே இறைபுகழ் பாடுதல் மிகப்பெரிய பேறாகும். இசை இறையுள்ளத்தைக் கனிந்துருகச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது என்பதாலேயே தி.பா. 3-10, 12-13, 16 உள்ளிட்ட அதிகமான செபங்கள் பாடல்களாக எழுதப்பட்டன. நமது உடல், உள்ளம் மற்றும் ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைத்து முழு ஈடுபாட்டோடு நம் செபங்களைப் பாடுகின்ற போது அது இறைவனின் உள்ளத்தை ஊடுருவிப் பாய்கிறது. எனவேதான் திருவழிபாட்டில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம். இந்த உண்மையை உணர்ந்து புனித அகுஸ்தினார் "ஒருமுறைப் பாடுதல் இருமுறை செபிப்பதற்குச் சமம்" என்ற அவருடைய அனுபவத்தை வலியுறுத்துகின்றார். இந்த இணையதளத்தில் உள்ள பாடல்களை பொதுவழிபாடுகளிலும், தனிசெப நேரங்களிலும் பாடுங்கள். பெருமகிழ்வுடனும், பேரார்வத்துடனும் இறைவனைப் போற்றுங்கள். இறை ஆசீர் உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பெருகுவதாக!