2சாமூவேலஂ


2சாமூவேலஂ
முன்னுரை

‘1 சாமுவேல்’ என்னும் நூலின் தொடர்ச்சியான ‘2 சாமுவேல்’, அரசர் தாவீதின் ஆட்சி வரலாற்றைக் கூறுகிறது. முதல் நான்கு அதிகாரங்கள், தெற்கே யூதாவின்மேல் அவர் ஆட்சி புரிந்ததையும், பின்னைய அதிகாரங்கள், வட பகுதியான இஸ்ரயேல் உட்பட நாடு முழுவதன்மேலும் அவர் ஆட்சி புரிந்ததையும் விரித்துரைக்கின்றன. தாவீது தம் அரசை விரிவுபடுத்தவும், தம் நிலையை உறுதிப்படுத்தவும் நாட்டிலுள்ள எதிரிகளோடும் வேற்றரசுகளோடும் போராடியதை இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது.

தாவீது ஆண்டவரிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்ததோடு, தம் மக்களின் முழு நம்பிக்கையையும் பெற்றிருந்தார். இருப்பினும் சில நேரங்களில் தம் தவறான நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக எந்தப் பாவத்தையும் செய்யத் தயங்காதவராய் இருந்திருக்கிறார். ஆயினும், அவருடைய பாவங்களை இறைவாக்கினர் நாத்தான் அவருக்குச் சுட்டிக்காட்டியபோது, அவர் அவற்றை அறிக்கையிட்டுக் கடவுள் அளித்த தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் செய்தார்.

தாவீதின் வாழ்க்கையும் அவர்தம் வெற்றிகளும் இஸ்ரயேல் மக்களின் மனத்தில் ஆழமாய்ப் பதிந்துவிட்டன. எனவேதான் பிற்காலத்தில் நாடு தொல்லைக்குட்பட்ட நேரங்களில், அவரைப்போல் தங்களுக்காகப் போராடக்கூடிய ‘தாவீதின் மகன்’ தங்களுக்கு அரசராய் மீண்டும் வரவேண்டுமென்று அவர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.


நூலின் பிரிவுகள்


1. யூதாவின் மீது தாவீதின் ஆட்சி 1:1 - 4:12
2. அனைத்து இஸ்ரயேலின் மீதும் தாவீதின் ஆட்சி 5:1 - 24:25
அ) முற்பகுதி 5:1 - 10:19
ஆ) தாவீதும் பத்சேபாவும் 11:1 - 12:25
இ) துன்பங்களும் தொல்லைகளும் 12:26 - 20:26
ஈ) பிற்பகுதி 21:1 - 24:25


அதிகாரம் 1

சவுலின் இறப்பைத் தாவீது அறிதல்


1சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்துத் திரும்புகையில் தாவீது சிக்லாகில் இரண்டு நாள்கள் தங்கினார். 2மூன்றாம் நாள், சவுலின் பாசறையினின்று கிழிந்த ஆடைகளோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான். 3“நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று தாவீது அவனை வினவ, “நான் இஸ்ரயேல் பாசறையினின்று தப்பி வந்துவிட்டேன்” என்று அவன் பதில் கூறினான்.

4“என்ன நடந்தது? என்னிடம் சொல்” என்று தாவீது கேட்க, அவன், “வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்; அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்து விட்டனர்; சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர்” என்று கூறினான். 5“சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர் என்று உனக்கு எப்படி தெரியும்?” என்று தன்னிடம் பேசிக்கொண்டிருந்த இளைஞனிடம் தாவீது கேட்டார்.

6அதற்கு அந்த இளைஞன், “நான் தற்செயலாக கில்போவா மலையில் இருந்தேன். சவுல் தன் ஈட்டியின்மீது சாய்ந்து கொண்டிருந்தார். அப்போது தேர்களும் குதிரை வீரர்களும் அவரை நெருங்கிக் கொண்டிருந்தனர். 7அவர் தம் பின்னால் திரும்பிய போது என்னைப் பார்த்துக் கூப்பிட்டார். ‘இதோ இருக்கிறேன்’ என்று நான் கூறினேன். 8‘யார் நீ?’ என்று அவர் என்னை வினவ, ‘நான் ஓர் அமலேக்கியன்’ என்று பதிலளித்தேன். 9‘என்மீது நின்று, என்னைக் கொல், ஏனெனில், மரணவேதனையில் நான் சிக்கியுள்ளேன். ஆனால், என் உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கிறது’ என்று அவர் என்னிடம் கூறினார். 10நான் அவர்மீது நின்று அவரைக் கொன்றேன். ஏனெனில், விழுந்தபின்பு அவர் உயிர் பிழைக்க மாட்டார் என நான் அறிவேன். அவரது தலையில் இருந்த மகுடத்தையும் கையிலிருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு, என் தலைவராகிய உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறினார். 11தாவீது தம் ஆடைகளைப் பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர். 12சவுலுக்காகவும், அவருடைய மகன் யோனத்தானுக்காகவும், ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்ரயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலை வரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில், அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்கள்.

13தாவீது தமக்குச் செய்தி கொண்டு வந்த இளைஞனிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று மீண்டும் வினவ, “நான் ஒரு வேற்றினத்தான், அமலேக்கியன்” என்று மறுமொழி கூறினான்.

14“ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரைக் கையோங்கிக் கொலை செய்ய நீ அஞ்சாதது ஏன்?” என்று தாவீது அவனைக் கேட்டார். 15பின்பு, தாவீது இளைஞன் ஒருவனைக் கூப்பிட்டு, “போ, அவனை வெட்டு” என்றார். அந்த இளைஞன் அவனை வெட்டி வீழ்த்த, அவன் இறந்தான். 16“உன் இரத்தம் உன் தலைமேல் இருக்கட்டும். ஏனெனில், ‘ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை நான் கொன்றேன்’ என்று உன் வாயே உனக்கு எதிராகச் சான்று சொல்லிவிட்டது” என்று தாவீது அவனை நோக்கிக் கூறினார்.


சவுல், யோனத்தான் ஆகியோருக்காக தாவீதின் துயரம்


17பிறகு, தாவீது சவுலையும் அவருடைய மகன் யோனத்தானையும் குறித்து இரங்கற்பா ஒன்று பாடினார். 18“யூதாவின் மக்களுக்கும் இது கற்பிக்கப்பட வேண்டும் என்று யாசாரின் நூலில் எழுதப்பட்டுள்ள ‘வில்லின் பாடல்’:✠

19‘இஸ்ரயேல்! உனது மாட்சி

உன் மலைகளிலே மாண்டு

கிடக்கின்றது!

மாவீரர் எவ்வாறு மடிந்தனர்!

20காத்தில் இதைச் சொல்ல வேண்டாம்;

அஸ்கலோன் வீதிகளில் இதை

அறிவிக்க வேண்டாம்;

ஏனெனில், பெலிஸ்தியரின்

புதல்வியர் அகமகிழக்கூடாது;

விருத்தசேதனமற்றோரின்

புதல்வியர் ஆர்ப்பரிக்கக் கூடாது.

21கில்போவா மலைகளே!

பனியோ மழையோ

உம்மீது பொழியாதிருப்பதாக!

வயல்கள் முதற்கனிகளைத்

தராதிருப்பனவாக!

ஏனெனில், வீரர்களின் கேடயங்கள்

தீட்டுப்பட்டனவே!

சவுலின் கேடயமும் எண்ணெயால்

இனி மெருகு பெறாதே!

22வீழ்த்தப்பட்டோரின்

இரத்தத்தினின்றும்

வீரர்களின் கொழுப்பினின்றும்

யோனத்தானின் அம்பு

பின்வாங்கியது இல்லை!

சவுலின் வாள் வெறுமையாய்த்

திரும்பியதும் இல்லை!

23சவுல்! யோனத்தான்!

அன்புடையார், அருளுடையார்!

வாழ்விலும் சாவிலும்

இணைபிரியார்! கழுகினும்

அவர்கள் விரைந்து செல்வர்!

அரியினும் அவர்கள்

வலிமைமிக்கோர்!

24இஸ்ரயேல் புதல்வியரே!

சவுலுக்காக அழுங்கள்!

செந்நிற மென்துகிலால் உங்களை

உடுத்தியவர் அவரே!

பொன்னின் நகைகளினால் உம்

உடைகளை ஒளிரச் செய்தாரே!

25போர் முனையில் வீரர் எங்ஙனம்

வீழ்ந்துபட்டனர்!

உன் மலைகளிலே யோனத்தான்

மாண்டு கிடக்கின்றான்!

26சகோதரன் யோனத்தான்! உனக்காக

என் உளம் உடைந்து போனது!

எனக்கு உவகை அளித்தவன் நீ!

என் மீது நீ பொழிந்த பேரன்பை

என்னென்பேன்!

அது மகளிரின் காதலையும்

மிஞ்சியது அன்றோ!

27மாவீரர் எவ்வாறு மடிந்தனர்!

போர்க்கலன்கள் எங்ஙனம்

அழிந்தன!”


1:6-10 1 சாமு 31:1-6; 1 குறி 10:1-6. 1:18 யோசு 10:13.
அதிகாரம் 2

தாவீது யூதாவின் அரசராதல்


1இதன்பின் தாவீது, “நான் யூதாவின் நகர்களில் ஏதேனும் ஒன்றிற்குச் செல்லட்டுமா?” என்று ஆண்டவரிடம் கேட்டார். “செல்” என்றார் ஆண்டவர். “எங்குச் செல்லலாம்?” என்று மீண்டும் தாவீது வினவ, “எபிரோன்” என்று ஆண்டவர் பதிலளித்தார்.

2ஆகவே, தாவீது தம் இரு மனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமுடனும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலுடனும் அங்குச் சென்றார்.✠ 3தம்மோடு இருந்த ஆள்களையும் அவர்களின் குடும்பத்தினரோடு, தாவீது அங்கே கூட்டி வந்தார். அவர்கள் எபிரோன் நகர்களில் குடியேறினர். 4யூதாவின் மக்கள் வந்து, தங்கள் குலத்தின் அரசராகத் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர். “யாபோசு-கிலயாதின் ஆள்கள் தான் சவுலை அடக்கம் செய்தார்கள்” என்று அவர்கள் தாவீதிடம் கூறினர்.✠

5யாபேசு-கிலயாதின் ஆள்களுக்குத் தாவீது தூதனுப்பி, “நீங்கள் உங்கள் தலைவர் சவுல் மீது அன்புகாட்டி அவரை அடக்கம் செய்தீர்கள். ஆண்டவரின் ஆசி பெறுவீர்களாக! 6ஆண்டவர் உங்களுக்கு நிலையான அன்பும் உண்மையும் காட்டுவாராக! நீங்கள் இவ்வாறு செய்ததால் நானும் உங்களுக்கு நன்மை செய்வேன். 7வலிமை பெற்று வீரர்களாகத் திகழுங்கள்! உங்கள் தலைவர் சவுல் இறந்துவிட்டார்; எனினும், யூதா குலத்தார் தங்கள் அரசனாக என்னைத் திருப்பொழிவு செய்துள்ளனர்” என்று கூறினார்.


இஸ்பொசேத்தை இஸ்ரயேலின் அரசராய் ஏற்படுத்தல்


8இதற்கிடையில் சவுலின் படைத்தலைவனாகிய நேரின் மகன் அப்னேர், சவுலின் மகன் இஸ்பொசேத்தை மகனயிமுக்கு அழைத்துச் சென்று 9கிலயாது, அசூரி, இஸ்ரியேல், எப்ராயிம், பென்யமின் மேலும் அனைத்து இஸ்ரயேல் மேலும் அவனை அரசனாக்கினான். 10சவுலின் மகன் இஸ்பொசேத்து இஸ்ரயேல்மீது அரசாளத் தொடங்கியபோது அவனுக்கு வயது நாற்பது. இரண்டு ஆண்டுகள் அவன் அரசனாக இருந்தான். ஆனால், யூதா குலமோ தாவீதைப் பின்பற்றியது. 11தாவீது எபிரோனில் யூதா குலத்தின் மீது ஆட்சிபுரிந்த காலம் ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களுமே.


யூதா, இஸ்ரயேலிடையே போர்


12நேரின் மகன் அப்னேரும் சவுலின் மகன் இஸ்பொசேத்தின் பணியாளர்களும் மகனயிமிலிருந்து புறப்பட்டுக் கிபயோனுக்குச் சென்றனர். 13செரூயாவின் மகன் யோவாபும் தாவீதின் பணியாளர்களும் புறப்பட்டுச் சென்று அவர்களைக் கிபயோன் குளத்தருகே எதிர் கொண்டனர். ஒரு சாரார் இப்பக்கமும் மறுசாரார் அப்பக்கமும் குளத்தின் அருகே அமர்ந்தனர். 14“இளைஞர்கள் எழுந்து நமக்கு முன்பு வாள்போர் செய்யட்டும்” என்று அப்னேர் யோவாபிடம் கூறினான். “அவர்கள் அவ்வாறே செய்யட்டும்” என்று யோவாபும் கூறினான். 15பென்யமின் மற்றும் சவுலின் மகன் இஸ்பொசேத்து சார்பில் பன்னிருவரும், தாவீதின் பணியாளருள் பன்னிருவரும் எழுந்து வந்தனர். 16ஒவ்வொருவனும் தன் எதிரியின் தலையைப் பிடித்துக் கொண்டு அவனது விலாவில் வாளை ஊடுருவினான். இருவரும் ஒன்றாக மடிந்தனர். அந்த இடத்தை எல்காத் அட்சூரிம்⁕ என்று அழைத்தனர்.

17போர் அன்று மிகக் கடுமையாக உருவெடுத்தது. அப்னேரும் இஸ்ரயேல் ஆள்களும் தாவீதின் பணியாளர்கள் முன் முறியடிக்கப்பட்டனர். 18அங்கே செரூயாவின் புதல்வர் — யோவாபு, அபிசாய், அசாவேல் ஆகிய மூவரும் இருந்தனர். அசாவேல் காட்டு மான்போல் வேகமாக ஓடக் கூடியவன். 19அசாவேல் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலமோ, இடமோ விலகாமல் துரத்தினான்.

20அப்னேர் பின்னால் திரும்பி, “அசாவேல்! நீயா?’ என்று கேட்டான். “நானே தான்” என்று அவன் பதில் கூறினான். 21“உன் வலமோ இடமோ விலகி இளைஞருள் ஒருவனைப் பிடித்து, அவன் உடைமைகளைப் பிடுங்கிக்கொள்” என்று அப்னேர் அசாவேலிடம் கூறினான். ஆனால், அசாவேலுக்கு அவனைப் பின்தொடர்வதிலிருந்து விலகிவிடமனம் இல்லை.

22“என்னைப் பின்தொடர்வதிலிருந்து விலகிவிடு. நான் ஏன் உன்னைக் குத்தி வீழ்த்த வேண்டும்? உன் சகோதரன் யோவாபுக்கு நான் எவ்வாறு என் முகத்தைக் காட்டுவேன்?” என்று மீண்டும் அப்னேர் அசாவேலிடம் கூறினான். 23ஆனால், அசாவேல் அதைக் கேளாமல் தொடர்ந்தான். ஆகவே, அப்னேர் தன் ஈட்டி முனையால் அவனை வயிற்றில் குத்த, அது அவனைப் பின்னாக ஊடுருவியது. அந்த இடத்திலே அவன் விழுந்து இறந்தான். அசாவேல் விழுந்து இறந்த இடத்திற்கு வந்தவர்கள் அனைவரும் நிலைகுலைந்து நின்றனர்.

24பின் யோவாபும் அபிசாயும் அப்னேரைப் பின் தொடர்ந்தனர். கிபயோன் பாலைநிலப் பாதையில் கீகுக்கு முன்பாக இருக்கும் அம்மா மலையை அவர்கள் வந்தடைந்தபோது கதிரவன் மறைந்துகொண்டிருந்தான். 25அப்போது பென்யமினின் ஆள்கள் அப்னேருக்குப்பின் ஒரே படையாகத் திரண்டு ஒரு குன்றின் உச்சியில் நின்றனர். 26அப்னேர் யோவாபைக் கூப்பிட்டு, “வாளுக்கு இரை கொடுக்க வேண்டுமா? முடிவு கசப்பாக இருக்கும் என நீ அறியாயா? தங்கள் சகோதரர்களைப் பின்தொடராமல் திரும்பிச் செல்லுமாறு மக்களிடம் நீ சொல்ல மாட்டாயோ?”’ என்று கூறினான்.

27அதற்கு யோவாபு, “வாழும் கடவுள் மேல் ஆணை! நீ பேசாதிருந்தால், காலையிலேயே தங்கள் சகோதரர்களைப் பின்தொடராமல் மக்கள் விலகியிருப்பார்கள்” என்று கூறி, 28எக்காளம் ஊதினான். அனைத்து மக்களும் நின்றனர். அதற்குமேல் அவர்கள் இஸ்ரயேலைப் பின்தொடரவில்லை. போரிடவுமில்லை.

29அப்னேரும் அவனுடைய ஆள்களும் இரவு முழுவதும் பயணம் செய்து அராபா வழியாக யோர்தானைக் கடந்தனர். தொடர்ந்து பிக்ரோன் முழுவதும் பயணம் செய்து மகனயிமை அடைந்தனர். 30யோவாபு அப்னேரைப் பின்தொடர்வதினின்று திரும்பியபின், தன் ஆள்கள் அனைவரையும் ஒன்று திரட்டினான். அசாவேல் நீங்கலாக, தாவீதின் பணியாளருள் பத்தொன்பது பேரைக் காணவில்லை. 31தாவீதின் பணியாளர்களோ அப்னேரின் ஆள்களான முந்நூற்று அறுபது பென்யமினியரைக் கொன்றிருந்தனர். 32அவர்கள் அசாவேலின் சடலத்தைத் தூக்கி வந்து பெத்லகேமிலிருந்த அவனுடைய தந்தையின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள். யோவாபும் அவனுடைய ஆள்களும் இரவு முழுவதும் பயணம் செய்து, பொழுது புலர்ந்ததும் எபிரோனை அடைந்தனர்.


2:2 1 சாமு 25:42-43. 2:4 1 சாமு 31:11-13.


2:16 ‘வாள்களின் வயல்கள்’ என்பது பொருள்.1


அதிகாரம் 3

1சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் இடையே ஒரு நீண்ட போர் ஏற்பட்டது. தாவீது தொடர்ந்து வலிமை பெற்றார். சவுலின் வீட்டாரோ தொடர்ந்து வலிமை இழந்தனர்.


தாவீதின் மக்கள்


2எபிரோனில் தாவீதுக்குப் புதல்வர்கள் பிறந்தனர். இஸ்ரியேலைச் சார்ந்த அகினோவாமுக்குப் பிறந்த அம்னோன் அவர்தம் தலைமகன். 3கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலுக்குப் பிறந்த கிலயாபு அவர்தம் இரண்டாம் மகன்; கெசூர் மன்னனான தால்மாயின் மகள் மாக்காவுக்குப் பிறந்த அப்சலோம் அவர்தம் மூன்றாம் மகன். 4அகீத்துக்குப் பிறந்த அதோனியா நான்காம் மகன்; அபித்தாலுக்குப் பிறந்த செபற்றியா ஐந்தாம் மகன்; 5தாவீதின் மனைவி எக்லாவுக்குப் பிறந்த இத்ரயாம் ஆறாம் மகன்; இவர்கள் தாவீதுக்கு எபிரோனில் பிறந்தவர்கள்.


அப்னேர் தாவீதுடன் சேர்ந்து கொள்ளுதல்


6சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் இடையே பூசல் நிலவிய போது, சவுலின் வீட்டில் அப்னேர் தன்னையே வலுப்படுத்திக் கொண்டான்.

7அய்யாவின் மகளான இரிஸ்பா, சவுலின் வைப்பாட்டியாக இருந்தவள். இஸ்பொசேத்து அப்னேரை நோக்கி, “என் தந்தையின் வைப்பாட்டியோடு நீ ஏன் உறவு கொண்டாய்? என்று கேட்டான். 8இஸ்பொசேத்தின் கேள்வி அப்னேருக்குக் கடுஞ்சினத்தை ஏற்படுத்தியது. “நான் என்ன, யூதாவுக்கு வாலாட்டும் நாயா? உன் தந்தை சவுலின் வீட்டாருக்கும் அவருடைய சகோதரர்கள் நண்பர்களுக்கும் இன்று நான் உண்மையுள்ளவனாய் இருக்கிறேன். தாவீதின் கைகளில் உன்னை நான் ஒப்புவிக்கவில்லை. நீயோ, இன்று ஒரு பெண்ணைக்குறித்து குற்றஞ்சாட்டுகிறாய்! 9-10தாவீதுக்குக் கடவுள் ஆணையிட்டுக் கூறியவாறே, சவுலின் வீட்டிலிருந்து அரசை நான் மாற்றச்செய்து, தாணிலிருந்து பெயேர்செபா வரை இஸ்ரயேல்மீதும் யூதாமீதும் தாவீதின் அரியணையை நிறுவவில்லையென்றால், கடவுள் அப்னேருக்கு உரியதும் கொடுமையானதுமான தண்டனையை அளிப்பாராக!” என்று அப்னேர் கூறினான்.✠ 11இஸ்பொசேத்து அப்னேருக்கு அஞ்சியதால் மறுமொழி ஏதும் பேசவில்லை.

12பிறகு, அப்னேர் தன் சார்பாகத் தாவீதிடம் தூதனுப்பி, “நாடு யாருடையது? என்னோடு உடன்படிக்கை செய்துகொள்ளும். அனைத்து இஸ்ரயேலையும் உம்மிடம் கொண்டுவர, எனது கை உம்மோடு இருக்கும்” என்று கூறினான். 13தாவீது “நல்லது, நான் உன்னோடு உடன்படிக்கை செய்து கொள்கிறேன். ஆனால், ,உன்னிடமிருந்து நான் ஒன்றைக் கேட்கிறேன்: அதாவது, நீ என்முன் வரும்போது, சவுலின் மகள் மீக்காலைக் கொண்டு வரவேண்டும். இல்லையெனில் என் முகத்தில் விழிக்காதே” என்று மறுமொழி கூறினார்.

14அதற்குப்பின், தாவீது சவுலின் மகன் இஸ்பொசேத்திடம் தூதனுப்பி, “பெலிஸ்தியர் நூறுபேரின் நுனித் தோலை ஈடாகக் கொடுத்து நான் மணந்த என் மனைவி மீக்காலை எனக்குக் கொடு” என்று கேட்டார்.✠ 15இஸ்பொசேத்து ஆளனுப்பி, அவளை அவள் கணவன் இலாயிசின் மகன் பல்தியேலிடமிருந்து கொண்டுவரச் செய்தான். 16அவள் கணவனோ அழுது கொண்டே அவளைத் தொடர்ந்து பகுரிம் வரை சென்றான். அங்கே அப்னேர் அவனிடம் “திரும்பிச் செல்” என்றான்; அவனும் திரும்பிச் சென்றான்.

17அப்னேர் இஸ்ரயேலின் பெரியோர்களிடம் இவ்வாறு பேசினான்: “தாவீது உங்கள்மீது ஆட்சி செய்ய வேண்டுமென்று கடந்த சில நாள்களாக நீங்கள் விரும்பிக்கொண்டிருந்தீர்கள். 18இப்போது அதை நிலை நாட்டுங்கள்; ஏனெனில், ஆண்டவர் தாவீதிடம், ‘என் ஊழியன் தாவீதின் கையால் என் மக்கள் இஸ்ரயேலைப் பெலிஸ்தியரிடமிருந்தும் அவர்களின் அனைத்து எதிரிகளிடமிருந்தும் நான் காப்பாற்றுவேன்’ என்று கூறியுள்ளார்’. 19அப்னேர் பென்யமினியரோடு தனியாகப் பேசியபின், எபிரோனுக்குச் சென்று இஸ்ரயேலுக்கும் பென்யமின் வீட்டாருக்கும் நல்ல தெனப்பட்ட அனைத்தையும் தாவீதிடம் எடுத்துக் கூறினான்.

20அப்னேர் இருபது ஆள்களோடு தாவீதைக் காண எபிரோன் வந்தான். அப்னேருக்கும் அவனோடு இருந்த ஆள்களுக்கும் தாவீது விருந்து படைத்தார். 21பிறகு அப்னேர் தாவீதிடம், “நான் எழுந்து சென்று அனைத்து இஸ்ரயேலையும் அரசரும் என் தலைவருமாகிய உமக்குமுன் ஒன்றுதிரட்டி வருகிறேன். அவர்கள் உம்மோடு உடன்படிக்கை செய்துகொள்ளட்டும், நீரும் உம் விருப்பப்படி ஆட்சி புரியலாம்” என்று கூறினான். தாவீது அப்னேரை வழியனுப்ப அவனும் பாதுகாப்புடன் சென்றான்.


அப்னேர் கொலை செய்யப்படல்


22அப்போது தாவீதின் பணியாளர்களும் யோவாபும் கொள்ளையடித்துத் திரும்பினர். தங்களோடு மிகுதியான கொள்ளைப் பொருள்களைக் கொண்டு வந்திருந்தனர். அச்சமயம் அப்னேர் தாவீதோடு எபிரோனில் இல்லை. ஏனெனில், ஏற்கனவே அவர் வழியனுப்பப்பட்டுப் பாதுகாப்புடன் சென்றுவிட்டான். 23யோவாபும் அவனோடு இருந்த படைவீரர் அனைவரும் வந்தபொழுது, “நேரின் மகன் அப்னேர் தாவீதிடம் வந்தான். அவர் அவனை வழியனுப்ப, அவனும் பாதுகாப்புடன் சென்று விட்டான்” என்று யோவாபிடம் கூறப்பட்டது. 24யோவாபு அரசனிடம் சென்று, “நீர் என்ன காரியம் செய்தீர்! அப்னேர் உம்மிடம் வந்தானல்லவா? நீர் ஏன் அவனைப் போகவிட்டீர்? அவனும் சென்று விட்டானே! 25நேரின் மகன் அப்னேரை உமக்குத் தெரியும். உமது போக்குவரத்தையும் நீர் செய்வது அனைத்தையும் அறிந்து கொண்டு உம்மை ஏமாற்றவே அவன் வந்தான்” என்றான்.

26யோவாபு தாவீதைவிட்டுச் சென்று, அப்னேரின் பின்னால் தூதர்களை அனுப்பினான். அவர்கள் அவனைச் சீராவின் ஊற்றினருகிலிருந்து திருப்பியழைத்து வந்தார்கள். தாவீதுக்கோ இது தெரியாது. 27அப்னேர் எபிரோனுக்குத் திரும்பிவந்ததும் யோவாபு அவனோடு தனிமையில் பேசுவதற்கென ஒதுக்கமாக அவனை வாயில் மையத்திற்கு அழைத்துச் சென்றான். தன் சகோதரன் அசாவேலின் இரத்தத்திற்காக அங்கே அவனை வயிற்றில் குத்த, அவன் இறந்தான். 28பிறகு, தாவீது இதைக் கேள்வியுற்றபோது, “நேரின் மகன் அப்னேரின் இரத்தத்தின்மட்டில் நானும் எனது அரசும் ஆண்டவர் முன்பு என்றென்றும் குற்றமற்றவர்கள். 29யோவாபின் தலைமீதும், அவன் தந்தையின் வீட்டார்மீதும் அது விழட்டும். இரத்தக் கசிவு உடையவனோ, தொழுநோயாளியோ, அண்ணகனோ, வாளால் மடிபவனோ, உணவுக்காகத் தவிப்பவனோ, யோவாபின் குடும்பத்தில் இல்லாமல் போகமாட்டார்கள்’ என்றார். 30தங்கள் சகோதரன் அசாவேலைக் கிபயோனில் நடந்த போரில் அப்னேர் கொன்றதற்காக யோவாபும் அவன் சகோதரன் அபிசாயும் அவனைக் கொன்றார்கள்.


அப்னேர் அடக்கம் செய்யப்படல்


31“உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ளுங்கள்; சாக்கு உடைகளை அணியுங்கள்; அப்னேருக்காகப் புலம்புங்கள்” என்று தாவீது யோவாபுக்கும் அவனோடு இருந்த அனைத்து மக்களுக்கும் கட்டளையிட்டார். பாடையின் பின்னால் அரசர் தாவீதும் நடந்து சென்றார். 32அப்னேரை எபிரோனில் அடக்கம் செய்தார்கள். அப்னேரின் கல்லறையருகே தாவீது தம்குரலை உயர்த்தி அழுதார்; மக்கள் அனைவரும் அழுதார்கள்.

33அரசர் இவ்வாறு கூறிப் புலம்பினார்: “மூடன் மடிவதுபோல் அப்னேர் மடிய வேண்டுமா? 34உன் கைகள் விலங்கிடப்படவில்லை; உன் பாதங்கள் கட்டப்படவில்லை; தீயோர்முன் வீழ்பவன்போல, நீயும் வீழ்ந்தனயே!” மீண்டும் அனைத்து மக்களும் அவனுக்காகப் புலம்பினார்கள்.

35பிறகு மக்கள் அனைவரும் தாவீதிடம் வந்து, பகலாக இருக்கும் போதே உண்ணும்படி அவரைத் தூண்டினர். “கதிரவன் மறைவதற்குள் நான் உணவையோ வேறு எதையோ சுவைத்தேனாகில், கடவுள்அதற்குத் தக்கவாறும் அதற்கு மேலும் என்னைத்தண்டிப்பாராக!” என்று தாவீது ஆணையிட்டுக் கூறினார். 36மக்கள் அனைவரும் இதைக் கேட்டார்கள். அவர்களுக்கு அது நல்லதெனப்பட்டது. அரசன் செய்ததெல்லாம் மக்கள் அனைவருக்கும் நல்லதெனப்பட்டது. 37நேரின் மகன் அப்னேரின் கொலையில் அரசருக்குப் பங்கில்லை என்று மக்கள் அனைவருக்கும் அனைத்து இஸ்ரயேலுக்கும் அன்று தெரிய வந்தது. 38மேலும், அரசர் தம் பணியாளர்களிடம் இவ்வாறு கூறினார்: “இன்று இஸ்ரயேலில் தலைவனும் உயர்குடிமகனுமான ஒருவன் மடிந்துவிட்டான் என்று நீங்கள் அறியீரோ? 39நான் அரசனாகத் திருப்பொழிவு செய்யப்பட்டும் இன்று வலுவிழந்தனவாய் இருக்கிறேன்! செரூயாவின் புதல்வர்களான இவர்கள் என்னைவிட வலியவர் ஆகிவிட்டனர்! தீங்கிழைப்பவனுக்கு அவன் தீங்கிற்கு ஏற்ப ஆண்டவர் தண்டனை வழங்கட்டும்!”


3:9-10 1 சாமு 15:28. 3:14 1 சாமு 18:27.


அதிகாரம் 4

இஸ்பொசேத்து கொலை செய்யப்படல்


1அப்னேர் எபிரோனில் இறந்ததைக் கேட்டதும், சவுலின் மகன் இஸ்பொசேத்து நிலைகுலைந்தான். அனைத்து இஸ்ரயேலும் கலங்கியது. 2சவுலின் மகனிடம் இரண்டு படைத்தலைவர்கள் இருந்தனர். ஒருவன் பெயர் பானா; மற்றவன் பெயர் இரேக்காபு; பென்யமின் குலத்தைச் சார்ந்த பெயரோத்தில் வாழும் ரிம்மோன் என்பவனின் புதல்வர்கள் இவர்கள். பெயரோத்தும் பென்மியனியரைச் சார்ந்ததாகவே கருதப்பட்டது. 3பெயரோத்தியர் கித்தாயிமுக்குத் தப்பியோடி, இந்நாள்வரை அங்கே அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

4சவுலின் மகன் யோனத்தானுக்கு மெபிபொசேத்து என்ற மகன் ஒருவன் இருந்தான். இஸ்ரயேலிலிருந்து சவுல், யோனத்தான் ஆகியோரைப் பற்றிய செய்தி வந்தபோது அவனுக்கு வயது ஐந்து. அவனுடைய செவிலித் தாய் அவனைத் தூக்கிக்கொண்டு தப்பி ஓடுகையில் விரைந்து சென்றதால், அவன் கீழே விழுந்து கால் முடமானான்.✠

5பெயரோத்தைச் சார்ந்த ரிம்மோனின் புதல்வர்களான இரேக்காபும் பானாவும் உச்சிவேளையில் இஸ்பொசேத்தின் வீட்டுக்கு வந்தார்கள். நண்பகல் வேளையில் அவன் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான். 6கோதுமை கொண்டு செல்பவர்களைப்போல் நடுவீட்டிற்கு வந்து, அவனது வயிற்றில் ஊடுருவக் குத்திவிட்டு, இரேக்காபும் அவனுடைய சகோதரன் பானாவும் தப்பிவிட்டார்கள். 7இவ்வாறு, அவர்கள் வீட்டினுள் நுழைந்து, தன் படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருந்தபோது அவனை ஊடுருவக் குத்திக் கொன்று தலையை வெட்டினார்கள். அத்தலையை எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் அராபா வழியாகப் பயணம் செய்தார்கள். 8இஸ்பொசேத்தின் தலையை எபிரோனில் இருந்த தாவீதிடம் கொண்டு வந்தார்கள். “உமது உயிரைப் பறிக்கத் தேடிய உம் எதிரி சவுலின் மகன் இஸ்பொசேத்தின் தலை இதோ! ஆண்டவர் எம் தலைவராம் அரசர் சார்பாக சவுலையும் அவனுடைய வாரிசையும் பழிவாங்கிவிட்டார்” என்று அவர்கள் கூறினார்கள்.

9பெயரோத்தைச் சார்ந்த ரிம்மோனின் புதல்வர்களான இரேக்காபையும் அவனுடைய சகோதரன் பானாவையும் நோக்கி தாவீது இவ்வாறு கூறினார்: “அனைத்து துயரங்களினின்றும் என்னை விடுவித்த வாழும் ஆண்டவர் பெயரால் ஆணையிட்டுச் சொல்கிறேன். 10‘இதோ சவுல் இறந்து விட்டான்’ என்று எனக்குச் சொல்ல வந்தவன், தான் நற்செய்தி கொண்டு வந்ததாகவே நினைத்தான், நானோ அவனைப் பிடித்துச் சிக்லாகில் கொன்றேன். அவனுக்கு நான் வெகுமதியாகக் தந்தது அதுவே.✠ 11இப்பொழுது குற்றமற்றவனைத் தீயவர்கள் அவன் வீட்டிலே, அவனது படுக்கையிலேயே கொன்றுவிட்டார்கள். அவனது இரத்தத்தைச் சிந்திய பழிக்கு ஈடாக உங்களை நான் உலகினின்றே அழித்துவிட மாட்டேனா?” 12தாவீது ஆணையிட, அவர்தம் பணியாளர் அவர்களைக் கொன்றனர்; கைகளையும் கால்களையும் வெட்டியபின் அவர்களை எபிரோன் குளத்தருகே தொங்கவிட்டனர்; இஸ்பொசேத்தின் தலையை எடுத்து எபிரோனில் அப்னேரின் கல்லறைக்கு அருகே புதைத்தனர்.


4:4 2 சாமு 9:3. 4:10 2 சாமு 1:1-16.


அதிகாரம் 5
abcd
அதிகாரம் 6
abcd
அதிகாரம் 7

தாவீதுக்கு நாத்தானின் செய்தி

(1 குறி 17:1-15)


1அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். 2அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, “பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது” என்று கூறினார். 3அதற்கு நாத்தான், “நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில், ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்று அரசரிடம் சொன்னார். 4அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: 5“நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: ‘நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா? 6இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து நான் அழைத்துவந்தது முதல் இந்நாள் வரை நான் ஒரு நிலையான இல்லத்தில் தங்கவில்லை; மாறாக, ஒரு நடமாடும் கூடாரமே எனக்குத் தங்குமிடமாய் இருந்தது. 7இஸ்ரயேலர் அனைவரும் சென்றவிடமெல்லாம் நானும் உடன் சென்றேன். அப்பொழுது என் மக்கள் இஸ்ரயேலைப் பேணும்படி குலத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன், அவர்களுள் எவரிடமாவது ‘எனக்காகக் கேதுரு மரங்களால் ஒரு கோவில் கட்டாததேன்?’ என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பேனா?

8எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். 9நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும், உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்தேன். 10-11எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்துவாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். 12உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன்.✠ 13எனது பெயருக்காக கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். 14நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன்.✠ 15உன் முன்பாக நான் சவுலை விலக்கியதுபோல, என் பேரன்பினின்று அவனை விலக்க மாட்டேன். 16என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!’✠

17மேற்கூறிய வெளிப்பாட்டின் வார்த்தைகள் அனைத்தையும் நாத்தான் தாவீதுக்கு எடுத்துரைத்தார்.


தாவீதின் நன்றிப் பாடல்

(1 குறி 17:16-27)


18பின் தாவீது ஆண்டவர் திருமுன் வந்து அமர்ந்து இவ்வாறு பேசினார்: “என் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் என்னை வழி நடத்தி வந்தமைக்கு, நான் யார்? என் குடும்பம் யாது? 19இருப்பினும் என் தலைவராம் ஆண்டவரே, உம் திருமுன் இது சிறிதே. உம் ஊழியனின் குடும்பத்தைப்பற்றிய எதிர்காலத்தைப் பற்றியும் நீர் பேசியுள்ளீர்! என் தலைவராம் ஆண்டவரே, மனித வழக்கம் இதுவல்லவே! 20தாவீது உம்மிடம் மேலும் என்ன கூற முடியும்? என் தலைவராம் ஆண்டவரே! உம் ஊழியனைப் பற்றி உமக்கே தெரியும். 21உம் ஊழியன் அறிந்து கொள்ளட்டும் என்று உம் வார்த்தையை முன்னிட்டும் உம் இதயத்திற்கு ஏற்பவும் மாபெரும் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளீர். 22ஆகவே, என் தலைவராம் ஆண்டவரே! எங்கள் காதுகளால் கேட்ட அனைத்தின்படி, நீர் மகத்தானவர்; உம்மைப் போன்று வேறு எவரும் இலர்; உம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை. 23உம் மக்கள் இஸ்ரயேலரைப்போல் வேறு யார் உளர்? அவர்களை உம் மக்களாக்கிக் கொள்ளுமாறும் உம் பெயர் விளங்குமாறும் கடவுளாகிய நீரே சென்று உலகின் ஒப்பற்ற அந்த இனத்தை மீட்டு, அவர்களுக்காக வியத்தகு அருஞ்செயல்கள் புரிந்தீர்! எகிப்து நாட்டினின்றும் வேற்றினங்களினின்றும் அவர்களின் தெய்வங்களினின்றும் நீரே உம் மக்களை மீட்டீர்!✠ 24என்றும் உம் மக்களாகவே நிலைத்து இருக்குமாறு இஸ்ரயேலரை நீர் உமக்குரியவர் ஆக்கினீர்! ஆண்டவரே! நீரே அவர்களின் கடவுள் ஆனீர்!

25ஆண்டவராகிய கடவுளே! உமது ஊழியனைப்பற்றியும் அவனது குடும்பத்தைப்பற்றியும் நீர் தந்த உறுதி மொழியை என்றும் நிலைநாட்டும்! நீர் வாக்குறுதி அளித்தவாறே செய்யும்! 26உமது பெயர் என்றும் மாட்சி பெறுவதாக! அப்பொழுது மாந்தர் ‘படைகளின் ஆண்டவரே இஸ்ரயேலின் கடவுள்’ என்பர். உமது ஊழியன் தாவீதின் குடும்பமும் உம் திருமுன் நிலைத்திருக்கும். 27ஏனெனில், படைகளின் ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுளே! ‘நான் உனக்கு ஓர் இல்லம் எழுப்புவேன்’ என்று உமது ஊழியனுக்கு வெளிப்படுத்தியவர் நீரே! ஆகவே, இவ்வாறு மன்றாட உம் ஊழியனுக்கு மனத்துணிவு ஏற்பட்டது.

28தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை! இந்த நல்வாக்கை அடியேனுக்கு அருளியவர் நீரே! 29உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள்கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர்! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!’


7:12 திபா 89:3-4; 132:11; யோவா 7:42; திப 2:30. 7:14 திபா 89:26-27; 2 கொரி 6:18; எபி 1:5. 7:16 திபா 89:36-37. 7:23 இச 4:34.


அதிகாரம் 8

தாவீதின் வெற்றிகள்

(1 குறி 18:1-17)


1இதன்பிறகு, தாவீது பெலிஸ்தியரைத் தோற்கடித்து அவர்களை அடிமைப்படுத்தினார். மெதகம்மாவை தாவீது பெலிஸ்தியரிடமிருந்து கைப்பற்றினார்.

2அவர் மோவாபியரையும் தோற்கடித்தார். அவர்களைத் தரையில் படுக்கச்செய்து நூலால் அளந்து இரு பகுதியினரைக் கொன்று ஒரு பகுதியினரை வாழவிட்டார். மோவாபியர் தாவீதின் அடிமைகளாகி அவருக்குக் கப்பம் கட்டினார்கள்.

3மேலும், யூப்பரத்தீசு நதியருகே தனது ஆட்சியை மீண்டும் அமைக்கச் சென்ற சோபா மன்னன் இரகோபின் மகன் அததேசரையும் தாவீது தோற்கடித்தார். 4தாவீது அவனிடமிருந்து ஆயிரத்து எழுநூறு குதிரை வீரர்களையும், இருபதாயிரம் காலாள் படையினரையும் சிறைப்பிடித்தார். நூறு தேர்களுக்குத் தேவையானவற்றைத்தவிர மீதியான தேர்க்குதிரைகளைத் தாவீது நரம்பறுக்கச் செய்தார்.

5தமஸ்கு நாட்டுச் சிரியர்கள் சோபா மன்னன் அததேசருக்கு உதவ வந்தபோது, அவர்களுள் இருபத்து இரண்டாயிரம் பேரைத் தாவீது கொன்றார். 6பிறகு, தமஸ்கு நகரின் ஆராம் பகுதியில் தாவீது படைத்தளங்களை அமைத்தார். சிரியா நாட்டினர் தாவீதின் அடிமைகளாகி அவருக்குக் கப்பம் கட்டினர். தாவீது சென்ற இடமெல்லாம் ஆண்டவர் அவருக்கு வெற்றி அளித்தார். 7அததேசரின் பணியாளர் தாங்கிச் சென்ற பொற் கேடயங்களைத் தாவீது கைப்பற்றி அவற்றை எருசலேமுக்கு கொண்டு வந்தார். 8அததேசரின் நகர்களான பெற்றகுவிலிருந்து, பெரோத்தாயிலிருந்தும் தாவீது மிகுதியான வெண்கலத்தைக் கொண்டு வந்தார்.

9அததேசரின் அனைத்துப் படையையும் தாவீது முறியடித்ததை ஆமாத்து மன்னன் தோயி கேள்வியுற்றான். 10உடனே அவன் தன் மகன் யோராமைத் தாவீது அரசரிடம் அனுப்பி அவரை வாழ்த்திப் பாராட்டினான்; ஏனெனில், தோயி அததேசரைத் தோற்கடித்திருந்தான். யோராம் தன்னோடு வெள்ளி, பொன், வெண்கலத்தால் ஆகிய பொருள்களைக் கொண்டுவந்தான். 11இவற்றையும் தாம் தோற்கடித்த அனைத்து நாடுகளின் வெள்ளி, பொன்னையும் தாவீது அரசர் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கினார். 12அந்நாடுகளாவன: ஏதோம், அம்மோனியர், பெலிஸ்தியர், அமலேக்கியர். சோபாவின் மன்னன் அததேசரிடமிருந்து எடுத்த கொள்ளைப் பொருளையும் காணிக்கையாக்கினார்.

13தாவீது உப்புக் கணவாயில் பதினெட்டாயிரம் ஏதோமியரை முறியடித்துத் திரும்பியபின் அவருக்குப் பெரும் புகழ் உண்டாயிற்று.✠ 14அவர் ஏதோம் முழுவதும் படைத்தளங்களை அமைத்தார். ஏதோமியர் அனைவரும் அவருக்குக் கப்பம் கட்டலாயினர். தாவீது எங்குச் சென்றாலும் அவருக்கு ஆண்டவர் வெற்றி அளித்தார்.

15தாவீது அனைத்து இஸ்ரயேல்மீதும் ஆட்சிபுரிந்து நீதியும் நேர்மையும் விளங்கச் செய்தார். 16செரூயாவின் மகன் யோவாபு படைத்தலைவராகவும் அகிலூதின் மகன் யோசபாத்து ஆவணக் காப்பாளராகவும் 17அகிதூபின் மகன் சாதோக்கும் அபியத்தார் மகன் அகிமெலக்கும் குருக்களாகவும், செராயா செயலராகவும் பணியாற்றினர். 18யோயாதாவின் மகன் பெனாயா கெரேத்தியருக்கும் பெலேத்தியருக்கும் மேலாளராக இருந்தார். தாவீதின் புதல்வர்கள் குருக்களாக இருந்தார்கள்.


8:13 திபா 63 தலைப்பு.


அதிகாரம் 9

தாவீதும் மெபிபொசேத்தும்


1“யோனத்தானின் பொருட்டு சவுலின் வீட்டாருக்கு நான் கருணை காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா?” என்று தாவீது கேட்டார்.✠ 2சவுலின் வீட்டைச் சார்ந்த சீபா என்ற ஓர் பணியாளன் இருந்தான். அவனைத் தாவீதிடம் கூட்டிச் சென்றனர். “நீதான் சீபாவா?” என்று அரசர் அவனிடம் கேட்க, “அடியேன்தான்” என்று அவன் பதிலிறுத்தான். 3“கடவுளின் கருணையை நான் சவுலின் வீட்டாருக்குக் காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா?” என்று அரசர் கேட்டார். “யோனத்தானின் இருகால் ஊனமுற்ற மகன் ஒருவன் இருக்கிறான்” என்று அரசரிடம் சீபா பதிலளித்தான்.✠ 4“எங்கே அவன்?” என்று அரசர் அவனிடம் கேட்க, “லோதாபாரில் அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டில் அவன் இருக்கிறான்” என்று அரசனிடம் சீபா கூறினான். 5லோதபாருக்கு ஆளனுப்பி அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டிலிருந்த அவனை அரசர் தாவீது கொண்டு வரச்செய்தார். 6சவுலின் புதல்வனான யோனத்தானின் மகன் மெபிபொசேத்து தாவீதிடம் வந்து முகம் குப்புற விழுந்து வணங்கினான். “மெபிபொசேத்து” என்று தாவீது அழைக்க, “இதோ! உம் அடியான்” என்று அவன் பதிலிறுத்தான். 7தாவீது அவனிடம் “அஞ்சாதே! உன் தந்தை யோனத்தானின் பொருட்டு நான் உனக்குக் கருணை காட்டுவது உறுதி. உன் மூதாதை சவுலின் நிலம் அனைத்தையும் உனக்கு மீண்டும் கிடைக்கச் செய்வேன். நீ எப்போதும் என்னுடன் உணவருந்துவாய்” என்று கூறினார். 8அவன் வணங்கி, “நான் செத்த நாய் போன்ற பணியாளன்; நீர் என்னைக் கடைக்கண் பார்ப்பதற்கு எனக்கு என்ன தகுதி உள்ளது?” என்றான்.

9பிறகு, அரசர் சவுலின் பணியாளன் சீபாவை அழைத்து, ‘சவுலுக்கும் அவர்தம் அனைத்து வீட்டாருக்கும் உரியதெல்லாம் நான் உன் தலைவரின் பேரனுக்கு அளித்துவிட்டேன். 10உன் தலைவரின் பேரன் உண்பதற்காக நீயும், உன் பிள்ளைகளும், உன் பணியாளரும் அவனுக்காக நிலத்தை உழுது விளைச்சலைக் கொண்டுவருவீர்கள். ஆனால், உன் தலைவரின் பேரன் மெபிபோசேத்து எப்போதும் என்னுடன் உணவருந்துவான்” என்று கூறினார். 11“என் தலைவராம் அரசர் தம் பணியாளனுக்கு இட்ட கட்டளைபடியே உம் பணியாளனும் செய்வான்” என்று அரசரிடம் சீபா கூறினான். இளவரசர்களில் ஒருவரைப் போலவே மெபிபொசேத்து தாவீதுடன் உணவருந்தி வந்தான். 12மெபிபொசேத்துக்கு மீக்கா என்ற ஓர் இளம் மகன் இருந்தான். சீபாவின் வீட்டைச்சார்ந்த அனைவரும் மெபிபொசேத்தின் பணியாளராக இருந்தனர். 13இரு கால் ஊனமான மெபிபொசேத்து அரசருடன் தொடர்ந்து உணவருந்திவந்தான். எனவே, எருசலேமிலேயே தங்கியிருந்தான்.


9:1 1 சாமு 20:15-17. 9:3 2 சாமு 4:4.


அதிகாரம் 10

அம்மோனியரையும் சிரியரையும் தாவீது வெல்லல்

(1 குறி 19:1-19)


1இதன்பிறகு அம்மோனியரின் மன்னன் இறந்தான்; அவனுக்குப் பதிலாக அவன் மகன் ஆனூன் அரசாண்டான். 2‘நாகாசின் மகன் ஆனூனுடன் நான் நம்பிக்கைக்குரியவனாய் நடந்து கொள்வேன்; ஏனெனில், அவன் தந்தையும் என்னோடு அவ்வாறே நடந்துகொண்டார்’ என்று தாவீது கூறினார். அவனுடைய தந்தையைக் குறித்து அவனுக்கு ஆறுதல் சொல்லத் தாவீது தம் பணியாளரை அனுப்பினார். தாவீதின் பணியாளரும், அம்மோனியர் நாட்டுக்குச் சென்றனர். 3“ஆறுதல் கூறுமாறு ஆள்களை அனுப்பியதால் தாவீது உன் தந்தையை மேன்மைப்படுத்துகிறார் என்று நினைக்கிறாயோ? நகரைக் கண்டு, வேவுபார்த்து அதை அழிக்கவன்றோ உன்னிடம் தாவீது தம் பணியாளரை அனுப்பியுள்ளார்!” என்று ஆனூனிடம் அம்மோனியத் தலைவர்கள் கூறினார்கள். 4எனவே, ஆனூன் தாவீதின் பணியாளரைப் பிடித்து அவர்களுடைய தாடியில் ஒரு பகுதியைச் சிரைத்து அவர்களுடைய ஆடைகளை இடுப்புவரை கத்தரித்து அவர்களை அனுப்பி வைத்தான். 5இது தாவீதுக்கு அறிவிக்கப்பட, அவரும் தம் பணியாளரைச் சந்திக்க ஆளனுப்பினார். ‘உங்கள் தாடிகள் வளரும்வரை எரிகோவில் தங்கி, பிறகு திரும்புங்கள்’ என்று அரசர் சொல்லியனுப்பினார். ஏனெனில், அவர்கள் மிகவும் அவமானப்பட்டிருந்தனர்.

6அம்மோனியர் தாங்கள் தாவீதின் வெஞ்சினத்திற்கு உள்ளானதைக் கண்டனர். அவர்கள் ஆளனுப்பி பெத்ரகோபிலிருந்தும் சோபாவிலிருந்தும் இருபதாயிரம் காலாள் படையினரையும், மாக்கா நாட்டு அரசரோடும் ஆயிரம் ஆள்களோடு தோபிலிருந்து பன்னீராயிரம் ஆள்களையும் கூலிக்கு அமர்த்தினர். 7தாவீது இதைக் கேட்டு, யோவாபையும் வலிமை மிகு வீரர் அனைவரையும் அனுப்பினார். 8அம்மோனியர் புறப்பட்டு வந்து நுழைவாயில் அருகே போருக்காக அணிவகுத்தனர். சோபாவிலிருந்தும் இரகோபிலிருந்தும் வந்த சிரியர்களும் தோபையும் மாக்காவையும் சார்ந்த ஆள்களும் திறந்த வெளியில் தனியாக இருந்தனர்.

9தனக்கு எதிராக முன்னும் பின்னும் போரணிகள் இருந்ததைக் கண்ட யோவாபு இஸ்ரயேலின் வலிமை மிகு வீரருள் சிலரைத் தேர்ந்தெடுத்து சிரியருக்கு எதிராக நிறுத்தினார். 10மீதியானவரைத் தம் சகோதரன் அபிசாயின் பொறுப்பில் ஒப்படைத்தார்; அவன் அவர்களை அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினான். 11மேலும், யோவாபு “சிரியர் என்னை மேற்கொள்வதாக இருந்தால், நீ எனக்கு உதவ வரவேண்டும். 12நம் மக்களுக்காகவும் நம் கடவுளின் நகர்களுக்காகவும் நாம் வீறுகொண்டு போரிடுவோம், ஆண்டவர் தம் விருப்பப்படி செய்யட்டும்” என்று கூறினார். 13யோவாபும் அவரோடு இருந்தவர்களும் சிரியருக்கு எதிராகப் போரிடுமாறு அணிவகுத்துச் சென்றனர்; சிரியர் புறமுதுகு காட்டி ஓடினர். 14சிரியர் தப்பியோடியதைக் கண்ட அம்மோனியரும் அபிசாயிடமிருந்து தப்பியோடி நகருக்குள் வந்தனர். அம்மோனியருடன் போரிட்ட யோவாபு எருசலேமுக்குத் திரும்பிவந்தார்.

15இஸ்ரயேலரிடம் தாங்கள் தோற்றதைக் கண்ட சிரியர் மீண்டும் ஒன்றாகக் கூடினர். 16அததேசர் ஆளனுப்பி யூப்பிரத்தீசு ஆற்றுக்கு அப்பால் இருந்த சிரியரையும் திரட்டிக் கொண்டு வரச்செய்தான். படைத்தலைவனான சோபாக்கின் தலைமையில் அவர்கள் ஏலாமுக்கு வந்தனர். 17தாவீது இதைக் கேட்டவுடன், அனைத்து இஸ்ரயேலையும் ஒன்று திரட்டி, யோர்தானைக் கடந்து ஏலாமுக்கு வந்தார். சிரியர் தாவீதுக்கு எதிராக அணிவகுத்து அவரோடு போரிட்டனர். 18சிரியர் இஸ்ரயேலருக்கு முன்பாகப் புறமுதுகாட்டி ஓடினர். சிரியருள் எழுநூறு தேர்வீரர்களையும், நாற்பதாயிரம் குதிரை வீரர்களையும் தாவீது கொன்றார்; மேலும் படைத்தலைவன் சோபாக்கை அவர் வாளால் தாக்க, அவனும் அங்கே மடிந்தான். 19அததேசருக்குக் கப்பம் கட்டிவந்த மன்னர்கள் அனைவரும் இஸ்ரயேலரிடம் தாங்கள் தோற்றதைக் கண்டு, அவர்களோடு சமாதானம் செய்து அவர்களுக்குப் பணிந்திருந்தனர். இதற்குப்பின் சிரியர் அம்மோனியருக்கு உதவ அஞ்சினர்.


அதிகாரம் 11

தாவீதும் பத்சேபாவும்


1இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இரபாவை முற்றுகை இட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார்.✠

2ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததை தாவீது மாடியிலிருந்து கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்டிருந்தாள். 3தாவீது அவள் யாரென்று கேட்க, ஆளனுப்பினார். “அவள் எலியாவின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா” என்று கூறினர்.

4தாவீது தூதரை அனுப்பி அவளை வரவழைத்தார். அப்பொழுதுதான் மாத விலக்கு முடிந்து அவள் தன்னைத் தூய்மைப்படுத்தியிருந்தாள். அவள் தம்மிடம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தன் இல்லம் சென்றாள். 5அப்பெண் கருவுற்றுத் தாவீதிடம் ஆளனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள்.

6அப்பொழுது தாவீது “இத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பி வை” என்று யோவாபுக்குச் செய்தி அனுப்பினார். யோவாபு உரியாவைத் தாவீதிடம் அனுப்பிவைத்தார். 7உரியா தாவீதிடம் வந்ததும் அவர் யோவாபின் நலம் பற்றியும் வீரர்களின் நலம் பற்றியும் போரின் போக்குப் பற்றியும் விசாரித்தார். 8பிறகு தாவீது உரியாவிடம், ‘உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக்கொள்’ என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார். 9உரியாவோ தம் தலைவரின் பணியாளர் அனைவரோடும் அரண்மனை வாயிலிலேயே படுத்துக் கொண்டார்; தம் வீட்டுக்குச் செல்லவில்லை.

10உரியா தம் வீட்டுக்கு செல்லவில்லை என்று தாவீது அறிந்ததும் தாவீது அவரிடம், “நீ நெடும் தொலையிலிருந்து வரவில்லையா? பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை?” என்று கேட்டார். 11அதற்கு உரியா தாவீதிடம், “பேழையும் இஸ்ரயேலரும் யூதாவினரும் கூடாரங்களில் தங்கியிருக்கின்றனர். என் தலைவர் யோவாபும் என் தலைவரின் பணியாளரும் திறந்த வெளியில் தங்கியிருக்கின்றனர். நான் மட்டும் என் வீட்டிற்குச் சென்று உண்டு குடித்தும் என் மனைவியோடு உறவுகொண்டும் இருப்பேனா? உம்மேலும் உம் உயிர்மேலும் ஆணை! நான் அப்படிச் செய்யவே மாட்டேன்” என்று சொன்னார்.

12தாவீது உரியாவிடம், “இன்றும் இங்கேயே தங்கு. நாளை உன்னை அனுப்பி வைக்கிறேன்” என்றார். அன்றும் மறுநாளும் உரியா எருசலேமிலேயே தங்கினார். 13தாவீது அவரை அழைத்து அவரோடு உண்டு குடித்து, அவருக்கு குடிபோதையூட்டினார். மாலையில் அவர் தம் தலைவரின் பணியாளரோடு தம் படுக்கையில் தூங்கச் சென்றார். தம் வீட்டுக்கு அவர் செல்லவே இல்லை.

14காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி, அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார். 15அம்மடலில் அவர், “உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டுப் பின்வாங்கு. அவன் வெட்டுண்டு மடியட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். 16யோவாபு நகரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபொழுது வலிமைமிகு எதிர்வீரர்கள் இருந்த இடத்தை அறிந்து அங்கே உரியாவை நிறுத்தினார். 17நகரின் ஆள்கள் புறப்பட்டுவந்து யோவாபைத் தாக்கினர். அப்பொழுது போரில் வீழ்ந்தவர்களுள் தாவீதின் வீரர்களும் சிலர். இத்தியர் உரியாவும் மாண்டார்.

18பிறகு, யோவாபு போரைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் தாவீதுக்குச் சொல்லி அனுப்பினார். 19மேலும், அவர் தூதனுக்கு இவ்வாறு கட்டளையிட்டிருந்தார்; “போரைப்பற்றிய அனைத்துச் செய்திகளையும் அரசருக்குச் சொல்லி முடிப்பதற்குள் 20அரசர் ஒரு வேளை வெகுண்டெழுந்து, உன்னிடம், ‘நீங்கள் ஏன் நகரை அணுகிப் போரிட்டீர்கள்? அவர்கள் மதில்களினின்று தாக்குவார்கள் என அறியீரோ? 21எருபசத்தின் மகன் அபிமெலக்கைக் கொன்றது யார்? மதில் சுவரினின்று ஒரு எந்திரக்கல்லை எறிந்தவள் ஒரு பெண்ணல்லவா? அவன் தேபேசில் இறந்துவிட்டானே? நீங்கள் ஏன் மதில்களை நெருங்கினீர்கள்?’ என்று கேட்டால், நீ ‘உம் பணியாளன் இறந்துவிட்டான்’ என்று சொல்.”

22தூதன் புறப்பட்டுச் சென்று யோவாபு சொல்லியனுப்பிய அனைத்தையும் தாவீதிடம் கூறினான். 23தூதன் தாவீதிடம் கூறியது: "அந்த ஆள்கள் எங்களை மேற்கொண்டு எங்களுக்கு எதிராகத் திறந்த வெளிக்கு வந்தார்கள். நாங்களோ நுழைவாயில்வரை அவர்களைத் துரத்தினோம். 24அப்போது மதில்மேலிருந்து வில்வீரர் உம் பணியாளர்களைத் தாக்கினர்; அரசரின் பணியாளருள் சிலர் இறந்தனர்; இத்தியரான உம் பணியாளர் உரியாவும் இறந்துவிட்டார்”

25அப்பொழுது தாவீது தூதனிடம், “நீ யோவாபிடம் சென்று ‘இதைப்பற்றி நீ கவலைப்படவேண்டாம். இங்கொருவனும் அங்கொருவனும் வாளுக்கு இரையாகின்றனர். நகருக்கு எதிராக இன்னும் கடுமையாகப் போர்புரிந்து அதை அழித்து விடு’ என்று சொல்லி அவனை உற்சாகப்படுத்து” என்றார்.

26உரியானின் மனைவி தன் கணவன் இறந்துவிட்டதைக் கேள்வியுற்று அவருக்காகப் புலம்பி அழுதாள். 27துக்ககாலம் முடிந்ததும் தாவீது ஆளனுப்பி அவளைத் தம் வீட்டிற்குக் கொண்டு வந்தார். அவள் அவருக்கு மனைவியாகி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். தாவீது செய்த இச்செயல் ஆண்டவரின் பார்வையில் தீயதாக இருந்தது.


11:1 1 குறி 20:1.


அதிகாரம் 12

நாத்தானின் அறிவுரை-தாவீது மனமாறுதல்


1ஆண்டவர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: “ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர்; ஒருவன் செல்வன். மற்றவனோ ஏழை.✠ 2செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன. 3ஏழையிடம் ஒரு ஆட்டுக்குட்டி தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர்குடித்து, அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது. 4வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியை எடுத்து வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான்”.

5உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம்கொண்டு “ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும், 6இரக்கமின்றி அவன் இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்” என்று நாத்தானிடம் கூறினார். 7அப்போது நாத்தான் தாவீதிடம், “நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்; நான் உன்னைச் சவுலின் கையினின்று விடுவித்தேன். 8உன் தலைவரின் வீட்டை உன்னிடம் ஒப்படைத்தேன்; அவன் மனைவியரையும் உனக்கு மனைவியர் ஆக்கினேன்; இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் உனக்கு அளித்தேன்; இது போதாதென்றால் உனக்கு மேலும் மிகுதியாய்க் கொடுத்திருப்பேன். 9பின் ஏன் நீ ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்து அவர்தம் பார்வையில் தீயது செய்தாய்? இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இரையாக்கி, அவன் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்; அம்மோனியரின் வாளால் அவனை மாய்த்துவிட்டாய்! 10இனி உன் குடும்பத்தினின்று வாள் என்றுமே விலகாது; ஏனெனில், நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்.’ 11இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘உன் குடும்பத்தினின்றே நான் உனக்குத் தீங்கை வர வழைப்பேன்; உன் கண்கள் காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப் பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான். 12நீ மறைவில் செய்ததை, அனைத்து இஸ்ரயேலும் காணுமாறு நான் பட்டப்பகலில் நிகழச்செய்வேன்” என்று கூறினார்.

13அப்போது தாவீது நாத்தானிடம், “நான் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்துவிட்டேன்” என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், “ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். 14ஆயினும், ஆண்டவரின் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்ததால் உனக்குப் பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான்” என்று சொன்னார். 15பின்பு, நாத்தான் தம் வீட்டுக்குச் சென்றார். உரியாவின் மனைவி தாவீதிற்குப் பெற்றெடுத்த குழந்தையை ஆண்டவர் தாக்க, அது நோயுற்றுச் சாகக் கிடந்தது.


தாவீதின் மகன் இறத்தல்


16தாவீது அக் குழந்தைக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். உண்ணா நோன்பு மேற்கொண்டு உள்ளே சென்று இரவெல்லாம் தரையில் படுத்துக்கிடந்தார். 17அவர்தம் வீட்டின் பெரியோர்கள் தரையினின்று அவரை எழுப்பச் சென்றனர்; அவருக்கோ விருப்பமில்லை. அவர்களோடு அவர் உண்ணவுமில்லை. 18பின் ஏழாவது நாள் குழந்தை இறந்தது. குழந்தை இறந்ததைத் தாவீதின் பணியாளர் அவரிடம் சொல்ல அஞ்சினர். “குழந்தை உயிரோடு இருந்தும் நாம் அவரிடம் பேசிய போது அவர் நம் குரலுக்குச் செவி கொடுக்கவில்லையே! குழந்தை இறந்து விட்டது என்று நாம் அவரிடம் சொன்னால் அவர் தமக்கு என்ன தீங்கு இழைத்துக் கொள்வாரோ?’ என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள்.

19பணியாளர் தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக்கொண்டதைத் தாவீது கண்டு, குழந்தை இறந்துவிட்டதை உணர்ந்து, தம் பணியாளரிடம், “குழந்தை இறந்து விட்டதா?” என்று கேட்க, அவர்களும், “ஆம், இறந்துவிட்டது” என்று பதில் கூறினர். 20உடனே தாவீது தரையினின்று எழுந்தார். குளித்து, நறுநெய் பூசி, உடைகளை மாற்றிக் கொண்டார்; கடவுளின் இல்லம் சென்று அவரைத் தொழுதார்; பிறகு அவர்தம் இல்லம் வந்தார். அவரே கேட்க, உணவு பரிமாறப்பட்டது. அவர் அதை உண்டார்.

21“நீவிர் செய்ததை என்னென்போம்! உயிரோடிருந்த குழந்தைக்காக நீர் உண்ணாமல் அழுதீர்; ஆனால்,குழந்தை இறந்ததும் எழுந்து உணவு கொண்டீரே!” என்று அவருடைய பணியாளர் அவரிடம் கூறினர். 22“குழந்தை உயிரோடிருந்தபோது ஒரு வேளை ஆண்டவர் இரங்குவார்; அவனும் பிழைப்பான் என்று நினைத்து, நான் உண்ணா நோன்பிருந்து அழுதேன். 23இப்போது அவன் இறந்துவிட்டான். இனி நான் ஏன் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்? என்னால் அவனைத் திருப்பிக் கொண்டுவர முடியுமா? நான் தான் அவனிடம் செல்ல முடியுமே ஒழிய, அவன் என்னிடம் திரும்பி வர மாட்டான்” என்று கூறினார்.


சாலமோனின் பிறப்பு


24தாவீது தம் மனைவி பத்சேபாவுக்கு ஆறுதல் கூறினார். பிறகு அவளுடன் உடலுறவு கொண்டார். அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க அவனைச் சாலமோன் என்று அழைத்தார். ஆண்டவர் அவன் மீது அன்பு கொண்டிருந்தார். 25ஆண்டவர் இறைவாக்கினர் நாத்தானை அனுப்பினார். அவர் ஆண்டவரை முன்னிட்டு அவனை எதிதியா⁕ என்று அழைத்தார்.


தாவீது இரபா நகரைக் கைப்பற்றல்

(1 குறி 20:1-3)


26யோவாபு அம்மோனியரின் நகரான இரபாவுக்கு எதிராகப் போரிட்டு அதன் கோட்டையைக் கைப்பற்றினார். 27யோவாபு தாவீதிடம் தூதரை அனுப்பி, “இரபாவுக்கு எதிராகப் போரிட்டு அதன் நீருற்றுகளை கைப்பற்றிவிட்டேன். 28இப்போது எஞ்சியுள்ள மக்களை நீர் ஒன்றுதிரட்டி, நகருக்கு எதிரே கூடாரமிட்டு அதைக் கைப்பற்றிக்கொள்ளும். ஏனெனில், நான் இந்நகரைக் கைப்பற்றிக்கொண்டால், அதை என் பெயரால் அழைக்க நேரிடும் அல்லவா?” என்று கூறினார். 29தாவீது மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி இரபாவுக்குச் சென்று அதற்கு எதிராகப் போரிட்டு அதைக் கைப்பற்றினார். 30அதன் மன்னனின் தலையிலிருந்த மகுடத்தை எடுத்தார். பொன்னாலும் விலையுயர்ந்த கற்களாலுமான அம் மகுடம் ஒரு தாலந்து எடை கொண்டதாய் இருந்தது. அதைக் கொண்டு தாவீதுக்கு முடிசூட்டினர். அந்நகரிலிருந்து கொள்ளைப் பொருளையும் அவர் மிகுதியாகக் கொண்டு வந்தார். 31அங்கிருந்த மக்களையும் அவர் கொண்டுவந்து இரம்பம், கடப்பாரை, கோடரி வேலைகளுக்கும் செங்கல் சூளை வேலைகளுக்கும் அவர்களை அமர்த்தினார். இவ்வாறே அனைத்து அம்மோனிய நகர்களுக்கும் செய்தார். பிறகு தாவீதும் மக்கள் அனைவரும் எருசலேம் திரும்பினர்.


12:11-12 2 சாமு 16:22. 12:1 திபா 51 தலைப்பு.


12:25 எபிரேயத்தில், ‘ஆண்டவரின் அன்பன்’ என்பது பொருள்.


அதிகாரம் 13

அம்னோன்-தாமார்


1பின்னர் நிகழ்ந்தது: தாவீதின் மகன் அப்சலோமிற்குத் தாமார் என்ற சகோதரி இருந்தாள். அவள் பேரழகி. தாவீதின் இன்னொரு மகன் அம்னோன் அவள்மீது மோகம் கொண்டிருந்தான். 2அம்னோன் தன் சகோதரி தாமாருக்காக மிகவும் ஏங்கி நோயுற்றான். அவள் கன்னியாக இருந்ததால், அவளிடம் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

3அம்னோனுக்கு யோனதாபு என்ற ஒரு நண்பன் இருந்தான். அவன் தாவீதின் சகோதரனான சிமயியின் மகன். யோனதாபு சூழ்ச்சி மிக்கவன். 4“இளவரசே! நீர் நாளுக்கு நாள் சோர்ந்து போவதேன்? என்னிடம் சொல்லமாட்டீரோ?’ என்று கேட்க, அதற்கு அம்னோன், “என் சகோதரன் அப்சலோமின் சகோதரி மீது நான் மையல் கொண்டுள்ளேன்” என்று அவனிடம் கூறினான்.

5யோனதாபு அவனிடம் “உமது படுக்கையில் படுத்துக்கொண்டு நோயுற்றவர்போல் பாசாங்கு செய்யும். உம் தந்தை உம்மைக் காணவருவார். அவரிடம் ‘என் சகோதரி தாமாரைத் தயைகூர்ந்து அனுப்பி வையுங்கள். அவள் எனக்கு உணவு தரட்டும்; என் கண்முன்னே அவள் உணவு தயாரிக்கட்டும். நான் அதைக் கண்டு அவள் கையிலிருந்து உண்பேன்’ எனச் சொல்லும்" என்று யோனதாபு அவனுக்கு ஆலோசனை கூறினான்.

6அவ்வாறே, அம்னோன் படுத்துக்கொண்டு நோயுற்றவன்போல் பாசாங்கு செய்தான். அரசர் அவனைக் காணவந்த போது, அம்னோன் அவரிடம், “தயைகூர்ந்து என் சகோதரி தாமாரை அனுப்பி வையுங்கள், அவள் என் கண் முன்னே இரண்டொரு பணியாரங்கள் செய்தால், நான் அவள் கையிலிருந்து உண்பேன்” எனக் கூறினான்.

7தாவீது வீட்டுக்கு ஆளனுப்பி தாமாரை வரச்சொல்லி, “உடனே உன் சகோதரன் அம்னோனின் வீட்டுக்குச் சென்று அவனுக்கு உணவு தயார் செய்” என்றார். 8தாமார் தன் சகோதரன் அம்னோனின் வீட்டுக்குச் சென்றாள். அவனோ படுத்திருந்தான். அவள் மாவு எடுத்து பிசைந்து அவன் கண்முன்னே பணியாரங்கள் சுட்டாள். 9பிறகு, அவள் பாத்திரத்தைக்கொண்டு வந்து அவனுக்குப் பரிமாறினாள். அவன் உண்ண மறுத்தான். எல்லாரையும் என்னிடமிருந்து போகச் சொல்” என்று அம்னோன் கேட்க, எல்லாரும் அவனை விட்டுச் சென்றனர். 10“உணவை உள்ளறைக்குக் கொண்டுவா. நான் உன் கையிலிருந்து உண்பேன்” என்று அம்னோன் தாமாரிடம் கூறினான். தாமார் சுட்ட பணியாரங்களை எடுத்துக்கொண்டு தன் சகோதரன் அம்னோனிடம் படுக்கையறைக்குள் சென்றாள்.

11அவன் உண்பதற்காக அவற்றை அவள் எடுத்துக்கொண்டு அவனருகே சென்றபோது அவன் அவளைப் பிடித்து இழுத்து, “என் சகோதரியே! வா, என்னோடு படு” என்றான். 12“வேண்டாம் சகோதரனே! என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம். ஏனெனில், இஸ்ரயேலில் இவ்வாறு நடப்பதில்லை. இந்த மடமையைச் செய்யாதே. 13எனது அவமானத்தை நான் எப்படிப் போக்குவேன்? நீயும் இஸ்ரயேலில் மதிக்கெட்ட ஒருவனாக இருப்பாய். தயைகூர்ந்து அரசரிடமே கேள். அவர் என்னை உனக்குக் கொடுக்க மறுக்கமாட்டார்” என்று அவள் அவனிடம் கெஞ்சினாள். 14அவனோ அவளது குரலுக்கு செவிகொடுக்கவில்லை. அவளை விட வலிமைமிக்கவனாக இருந்ததால், அவன் அவளைக் கற்பழித்தான்.

15அதன்பிறகு, அம்னோன் அவளை மிகவும் அதிகமாக வெறுத்தான். அவன் எந்த அளவுக்கு அவள்மீது மோகம் கொண்டிருந்தானோ அந்த அளவுக்கு மிகுதியாக அவளை வெறுத்து, “எழுந்து சென்று விடு” என்று அவளிடம் கூறினான். 16அவளோ, “வேண்டாம், என்னை அனுப்பிவிடும் கொடுமை, நீ எனக்குச் செய்த முன்னைய கொடுமையை விடவும் மோசமானது” என்று கதறினாள். ஆனால், அவன் அவளுக்குச் செவிகொடுக்க விரும்பவில்லை. 17தனக்குப் பணிவிடை செய்துவந்த இளைஞனை அவன் அழைத்து, “இந்தப் பெண்ணை என்னிடமிருந்து வெளியேற்று; அவள் சென்றதும் கதவைத் தாழிடு” என்று கூறினான். 18பணியாளன் அவளை வெளியேற்றி, அவள் சென்றதும் கதவைத் தாழிட்டான். கன்னியராக இருந்த அரச மகளிரின் வழக்கப்படி அவள் பல்வண்ண, நீண்ட ஆடை அணிந்திருந்தாள்.

19தாமார் தன் தலைமீது சாம்பல் தூவினாள்; தன் மீதிருந்த பல்வண்ண ஆடையைக் கிழித்தாள்; தன் தலைமீது கைவைத்து அழுதுகொண்டே சென்றாள். 20அப்பொழுது, அவள் சகோதரன் அப்சலோம் அவளிடம், “இதை உனக்குச் செய்தது அம்னோனா? என் சகோதரி! இப்போது நீ அமைதியாய் இரு. அவன் உன் சகோதரன்! இதை மனதில் வைக்காதே” என்று கூறினான். தாமார் தன் சகோதரன் அப்சலோமின் வீட்டில் ஆறுதலின்றி வாழ்ந்தாள்.

21நடந்த இவ்வனைத்தையும் தாவீது கேள்வியுற்றுக் கடுஞ்சினம் கொண்டார். 22அப்சலோம் அம்னோனுடன் நல்லதோ தீயதோ ஒன்றுமே பேசவில்லை. ஏனெனில், தன் சகோதரி தாமாரைக் கற்பழித்ததற்காக அப்சலோம் அம்னோனை வெறுத்தான்.


அப்சலோம் பழி தீர்த்தல்


23ஈராண்டுகள் கழிந்தபிறகு அப்சலோம் எப்ராயின் அருகே பாகால் ஆட்சோரில் ஆடுகளுக்கு முடிகத்தரித்தான். அப்போது அப்சலோம் இளவரசர் அனைவரையும் அழைத்திருந்தான். 24அப்சலோம் அரசரிடம் வந்து, “இதோ! அடியேன் ஆடுகளுக்கு முடிகத்தரிக்கிறேன். அரசரும் அவருடைய பணியாளரும் தயைகூர்ந்து அடியேனோடு வாருங்கள்” என்றான். 25அரசர் அப்சலோமிடம், ‘என் மகன் அப்சலோம்! வேண்டாம், நாம் அனைவரும் செல்ல வேண்டாம். உனக்கு நாங்கள் சுமையாக இருக்க வேண்டாம்” என்று கூறினார். அவன் அவரை வலியுறுத்தியும் அவர் செல்ல விரும்பாமல், அவனுக்கு ஆசியளித்தார். 26பின் அப்சலோம், “இல்லாவிடில் என் சகோதரன் அம்னோன் எங்களோடு செல்லட்டும்” என்று கேட்க, அரசர், “அவன் உன்னோடு ஏன் செல்ல வேண்டும்?” என்று அவனிடம் வினவினார். 27அவன் அவரை வற்புறுத்தியதால் அம்னோனையும் இளவரசர் அனைவரையும் அவனோடு அரசர் அனுப்பி வைத்தார். 28அப்சலோம் தம் பணியாளரிடம், “அம்னோனின் மனம் மதுவால் மயங்கும் நேரம் பாருங்கள்; ‘அம்னோனைத் தாக்குங்கள்’ என்று நான் உங்களிடம் கூறும் போது, அவனைக் கொன்றுவிடுங்கள். அஞ்சவேண்டாம். உங்களுக்குக் கட்டளையிடுபவன் நான் அல்லவா? உறுதிபூண்டு வீரர் புதல்வர்களாகச் செயல்படுங்கள்” என்று கூறினான். 29அப்சலோமின் பணியாளர் அவன் கட்டளையிட்டவாறே அம்னோனுக்குச் செய்தார்கள். இளவரசர் அனைவரும் அவரவர் தம் கழுதைகளில் ஏறித் தப்பி ஓடினர்.

30அவர்கள் திரும்பிச் செல்கையில் அப்சலோம் இளவரசர் அனைவரையும் கொன்றதாகவும் அவர்களுள் ஒருவரும் தப்பவில்லை என்றும் தாவீதுக்குச் செய்தி கிடைத்தது. 31அரசர் எழுந்து தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு தரையில் படுத்தார். அங்கே நின்றுகொண்டிருந்த பணியாளர் அனைவரும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டனர். 32தாவீதின் சகோதரன் சிமயாவின் மகன் யோனதாபு, “உம் புதல்வர்களாகிய இளவரசர்கள் அனைவரையும் கொன்றுவிட்டார்கள் என்று என் தலைவர் நினைக்க வேண்டாம். ஏனெனில், அம்னோன் மட்டுமே இறந்துள்ளான். தன் சகோதரி தாமார் கற்பழிக்கப்பட்ட நாளிலிருந்து அப்சலோம் தன் எண்ணத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தான். 33ஆகவே, என் தலைவராம் அரசர், இளவரசர் அனைவரும் இறந்துவிட்டதாக நினைத்துக் கவலைப்படவேண்டாம்; ஏனெனில், அம்னோன் மட்டுமே இறந்துள்ளான்” என்று கூறினான்.

34இதற்கிடையில் அப்சலோம் ஓட்டம் பிடித்தான். அப்போது அரண்மனைக் காவலன் தன் கண்களை உயர்த்திப் பார்த்தபொழுது, இதோ, திரளான மக்கள் மலையோரமாகப் பின்னால் இருந்த சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர். 35அப்போது யோனதாபு அரசரிடம், “பாருங்கள், இளவரசர் வந்துவிட்டனர்; நான் சொன்னது போலவே நிகழ்ந்துவிட்டது” என்றான். 36அவன் பேசி முடிக்கும்போது இளவரசரும் வந்து, ஓலமிட்டு அழுதனர். அரசரும் பணியாளர் அனைவரும் வெகுவாய்ப் புலம்பி அழுதனர்.

37தப்பியோடிய அப்சலோம் கெசூர் அரசன் அம்மிகூதின் மகள் தல்மாயிடம் சென்றடைந்தான். தாவீது தம் மகனுக்காக நாள்தோறும் புலம்பிக் கொண்டிருந்தார்.✠ 38கெசூருக்குத் தப்பி ஓடிய அப்சலோம் அங்கே மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான். 39அம்னோனின் மறைவு பற்றிய கவலை நீங்கியபின், அரசர் தாவீது அப்சலோமைக் காணும் ஏக்கத்தில் இருந்தார்.


13:37 2 சாமு 3:3.


அதிகாரம் 14

அப்சலோம் எருசலேமுக்கு அழைத்து வரப்படல்


1அரசரின் உள்ளம் அப்சலோமின் மீது அன்பு கொண்டிருந்ததை செரூயாவின் மகன் யோவாபு அறிந்திருந்தான். 2தெக்கோவாவுக்கு ஆளனுப்பி அங்கிருந்து கூர்ந்த அறிவுடைய ஒரு பெண்ணை யோவாபு தன்னிடம் கூட்டிவரச்சொல்லி, அவளிடம், “நீ துக்கம் கொண்டாடுபவளைப் போல் நடி; இழவு ஆடைகளை அணிந்து கொள்; நறுநெய் பூசிக்கொள்ளாதே; இறந்தவனுக்காகப் பல நாள்கள் இழவு கொண்டாடுகிறவளைப்போல் நீ இருக்க வேண்டும். 3பின் அரசரிடம் சென்று அவரிடம் நீ இவ்வாறு பேச வேண்டும்” என்று கூறி, அவள் என்ன பேச வேண்டும் என்றும் யோவாபு சொல்லிக்கொடுத்தார்.

4தெக்கோவாவைச் சார்ந்த பெண் அரசரிடம் சென்று முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து வணங்கி, “அரசே காப்பாற்றும்” என்று கதறினாள். 5“உனக்கு என்ன வேண்டும்?” என்று அரசர் அவளிடம் கேட்டார்.

6“நான் ஒரு கைம்பெண். என் கணவர் இறந்துவிட்டார். உம் அடியவளுக்கு இரு பிள்ளைகள் இருந்தனர். இருவரும் திறந்த வெளியில் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்த யாரும் இல்லாததால் ஒருவன் மற்றவனைத் தாக்கிக் கொன்று விட்டான். 7இதோ! உம் அடியவளுக்கு எதிராக என் குடும்பத்தார் அனைவரும் எழும்பி, ‘தன் சகோதரனைக் கொன்றவனைக் கொடுத்து விடு. அவன் சகோதரனின் உயிருக்காக நாங்கள் அவனைக் கொல்ல வேண்டும்’, என்று கூறுகின்றனர். இவ்வாறு, அவர்கள் எனக்கு இருக்கும் ஒரு வாரிசையும் அவர்கள் அழித்து எனக்கு எஞ்சியுள்ள ஒளியையும் அணைத்து, இவ்வுலகில் என் கணவனுக்குப் பெயரும் வழிமரபும் இல்லாமல் செய்து விடுவார்கள்” என்று அவள் சொன்னாள்.

8“நீ உன் வீட்டுக்குச் செல். உனக்காக நான் கட்டளை பிறப்பிப்பேன்” என்று அரசர் அப்பெண்ணிடம் கூறினார். 9பின் தெக்கோவாவைச் சார்ந்த பெண் அரசரிடம், “என் தலைவராம் அரசே! என் குற்றம் என்மீதும் என் தந்தையின் வீட்டின்மீதும் இருக்கட்டும். அரசரும் அவரது அரியணையும் குற்றமற்று இருக்கட்டும்” என்று கூறினாள். 10“உன்னிடம் யார் எதைச் சொன்னாலும் அவனை என்னிடம் கொண்டுவா, அவன் உன்னை இனித்தொடவே மாட்டான்” என்று அரசர் கூறினார். 11“இரத்தப் பழி வாங்க விழைவோர் இனிக் கொல்லாமல் இருக்கவும் என் மகன் சாகாமல் இருக்கவும் அரசராகிய நீர் ஆண்டவராகிய கடவுளிடம் மன்றாடுவீர்” என்று அவள் சொன்னாள். “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உன் மகனின் ஒரு முடி கூடத் தரையில் விழாது” என்று அவர் பதிலளித்தார்.

12பிறகு அப்பெண், “உம் அடியவள் என் தலைவராம் அரசரிடம் ஒரு வார்த்தை சொல்ல அனுமதி தாரும்” என்ற கேட்க, அவரும் “சொல்” என்று பதிலளித்தார். 13அவள் சொன்னது: “கடவுளின் மக்களுக்கு எதிராக இத்தகைய எண்ணத்தை நீர் கொண்டிருப்பது ஏன்? தம்மால் துரத்தப்பட்டவனை அரசர் திரும்ப அழைக்காமல் இருப்பதனால் இந்தத் தீர்ப்பு அவரையே குற்றவாளி ஆக்குகிறது! 14நாம் இறப்பது உறுதி. தரையில் சிந்தப்பட்டு மீண்டும் சேகரிக்க முடியாத நீரைப் போன்றவர்கள் நாம். ஆனால், துரத்தப்பட்டவனைப் பொறுத்த மட்டில், அவன் தம்மிடமிருந்து விலகிவிடாதபடி கடவுள் திட்டமிடுகிறார்; அவன் உயிரை எடுக்க மாட்டார். 15இதை என் தலைவராம் அரசரிடம் நான் கூறவந்தபோது, மக்கள் என்னை அச்சுறுத்தினர்; உமது அடியவளோ, ‘நான் அரசரிடம் போவேன். ஒருவேளை அரசர் தம் அடியவளின் வார்த்தைக்குச் செவிகொடுப்பார். 16அரசர் செவி கொடுத்து, என்னையும் என் மகனையும் கடவுளின் உரிமைச்சொத்தினின்று அழிக்க வருபவனின் கையினின்று தம் அடியவளைக் காப்பாற்றுவார்’ என்று எண்ணினேன். 17ஏனெனில், உம் அடியவள் எண்ணப்படி, என் தலைவராம் அரசரின் வார்த்தை எனக்கு அமைதி தரும்; கடவுளின் தூதரைப் போல் என் தலைவராம் அரசர் நன்மையும் தீமையும் புரிந்துகொள்வார். ஆண்டவராம் கடவுள் உம்மோடு இருப்பார்” என்று கூறினாள்.✠

18அதன்பின் தாவீது அப்பெண்ணிடம் மறுமொழியாக, “நான் உன்னிடம் கேட்பது எதற்கும் மறைக்காமல் பதில் சொல்!” என்றார். அதற்கு அவள், “தயைகூர்ந்து என் தலைவராம் அரசர் கேட்கட்டும்” என்றாள்.

19“இதிலெல்லாம் உன்னோடு யோவாபுக்குப் பங்கு உண்டு அல்லவா?” என்று அரசர் தாவீது கேட்டார். “என் தலைவராம் அரசே! உம் உயிர் மேல் ஆணை! என் தலைவராம் அரசரின் வார்த்தையிலிருந்து யாரும் வலமோ இடமோ திரும்ப முடியாது. உம் அடியான் யோவாபுதான் என்னைப் பணித்தவர். அவரே இச்சொற்கள் அனைத்தையும் உம் அடியவளுக்குச் சொல்லித் தந்தவர். 20உம் அடியான் யோவாபு தற்போதைய நிலை மாற வேண்டுமென இதைச் செய்தார். ஆனால், கடவுளின் தூதருக்கு நிகரான பேரறிவுகொண்ட என் தலைவர் உலகில் நடக்கும் அனைத்தையும் அறிவார்” என்று அப்பெண் கூறினாள்.

21அப்போது அரசர் யோவாபை அழைத்து, “இதைச் செய்தவன் நீயே. போ! இளைஞன் அப்சலோமைக் கூட்டிவா” என்றார். 22யோவாபு முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து, வணங்கி, அரசரை வாழ்த்தி, “என் தலைவராம் அரசே! உம் அடியானின் சொற்படி அரசர் செய்துவிட்டார். இதிலிருந்து நான் உன் கண்முன் கருணை பெற்றுவிட்டேன் என்று உம் அடியான் அறிவான்” என்று கூறினார். 23யோவாபு எழுந்து கெசூருக்குச் சென்று அப்சலோமை எருசலேமுக்குச் கூட்டி வந்தார். 24‘அவன் தன் வீட்டுக்கே திரும்பட்டும். என் முகத்தில் அவன் விழிக்கக்கூடாது” என்று அரசர் கூற, அப்சலோம் தன் வீட்டுக்குத் திரும்பினான். அரசரின் முகத்தில் அவன் விழிக்கவில்லை.


அப்சலோம் தாவீதுடன் ஒப்புரவாதல்


25இஸ்ரயேல் அனைத்திலும் அப்சலோமைப்போல் புகழ்பெற்ற அழகன் வேறு எவனும் இல்லை. உச்சி முதல் உள்ளங்கால் வரை அவனில் எந்தக் குறையும் இல்லை. 26அவன் முடிவெட்டிக்கொள்ளும்போது — ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தலைக்குப் பாரமாயிருந்ததால், அவன் முடி வெட்டிக் கொள்வான் — அது அரச அளவையின் படி இரண்டு கிலோவுக்கு⁕ மேலாக இருக்கும். 27அப்சலோமுக்கு மூன்று ஆண்குழந்தைகள் பிறந்தன. தாமார் என்று பெயர்கொண்ட ஒரு மகளும் இருந்தாள். அவள் பேரழகியாக இருந்தாள்.

28அப்சலோம் எருசலேமில் ஈராண்டுகள் வாழ்ந்தான்; ஆனால், அரசன் முகத்தில் விழிக்கவில்லை. 29அப்சலோம் யோவாபை அரசரிடம் அனுப்புவதற்காக அவனைத் தன்னிடம் வரும்படி அழைத்தான். ஆனால், யோவாபு அவனிடம் செல்ல விரும்பவில்லை, இரண்டாம் முறை ஆளனுப்பியும் யோவாபு செல்ல விரும்பவில்லை, 30அப்போது அவன் தன் பணியாளரிடம், “கவனியுங்கள், யோவாபின் வயல் என் வயலுக்கு அருகே உள்ளது. அங்கே வாற்கோதுமை விளைந்துள்ளது. நீங்கள் சென்று அதற்குத் தீ வையுங்கள” என்றான். அப்சலோமின் பணியாளர் அவ்வயலுக்குத் தீ வைத்தனர்.

31பின் யோவாபு புறப்பட்டு அப்சலோம் வீட்டுக்குச் சென்று அவனிடம், “உன் பணியாளர் என் வயலுக்குத் தீ வைத்தது ஏன்?’ என்று கேட்டார். 32அதற்கு அப்சலோம் யோவாபிடம் கூறியது: ‘நான் கெசூரிலிருந்து இங்கு வந்தது ஏன்? நான் அங்கேயே இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும்’ என்று அரசரிடம் கேட்க விரும்புகிறேன். இதற்காக உம்மை அவரிடம் அனுப்ப, உமக்கு ஆளனுப்பினேன். நான் இப்போது அரசனின் முகத்தில் விழிக்க வழிசெய்யும். ஏனெனில், ஏதாவது குற்றம் இருப்பின் அவர் என்னைக் கொல்லட்டும்”.

33யோவாபு அரசரிடம் சென்று இதைத் தெரிவித்தார்; அவர் அப்சலோமை அழைத்து வரச் செய்தார். அவன் அரசரிடம் சென்று முகம் குப்புற அரசர்முன் தரையில் வீழ்ந்து வணங்கினான். அரசர் அப்சலோமை முத்தமிட்டார்.


14:17 2 சாமு 19:27.


14:26 ‘இருநூறு செக்கேல்’ என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 15

அப்சலோம் கலகம் செய்தல்

1அதற்குப் பின்னர், அப்சலோம் தனக்கென ஒரு தேரையும் குதிரைகளையும் தனக்கு முன்பாக ஓட ஐம்பது ஆள்களையும் அமர்த்திக்கொண்டான். 2அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வாயிலின் பாதை அருகே நிற்பான்; யாரேனும் தனக்கிருந்த வழக்கை முன்னிட்டு அரசரிடம் தீர்ப்புக் கேட்க வந்தால், அவனை அப்சலோம் தன்னிடம் அழைத்து, “நீ எந்நகரிலிருந்து வருகிறாய்?” என்று கேட்பான். அவன், “உம் அடியான் இந்த நகரிலிருந்து இஸ்ரயேலின் இந்தக் குலத்தினின்றும் வருகிறேன்” என்று பதில் சொல்லுவான். 3அப்போது அப்சலோம், “உன் வழக்கு சரியானது, நியாயமானது. ஆனால், அரசரின் சார்பாக உன்னை விசாரிக்க எவரும் இல்லை. 4நான் மட்டும் இந்நாட்டில் நீதிபதியாக இருந்தால், வழக்குள்ளவர்கள் அனைவரும் என்னிடம் வருவார்கள். நானும் அவர்களுக்கு நீதி வழங்குவேன்” என்பான். 5யாரேனும் அவனை வணங்குவதற்காக நெருங்கினால், தன் கையை நீட்டி அவனைத் தழுவி முத்தமிடுவான். 6அரசரிடம் வழக்கை முன்னிட்டு வந்த இஸ்ரயேலர் அனைவரிடமும் அப்சலோம் இவ்வாறு செய்து இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டான்.

7நான்கு⁕ ஆண்டுகள் கழிந்தபின் ஒருநாள் அப்சலோம் அரசரிடம்,” நான் ஆண்டவருக்குச் செய்துள்ள நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும். எபிரோன் செல்ல தயைகூர்ந்து அனுமதிதாரும். 8உமது அடியான், சிரியாவிலுள்ள கெசூரில் வாழ்ந்தபோது, ‘ஆண்டவர் என்னை எருசலேமுக்குத் திரும்பிக் கொண்டு சென்றால், நான் ஆண்டவரைத் தொழுவேன்’ என்று ஒரு நேர்ச்சை செய்தேன்” என்றான். 9“நலமாய்ச் சென்று வா” என்று அரசர் அவனிடம் கூற, அவனும் புறப்பட்டு எபிரோனுக்குச் சென்றான். 10பின் அப்சலோம் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களுக்கும் இரகசியத் தூதர் மூலம் “நீங்கள் எக்காள முழக்கம் கேட்டவுடன் ‘அப்சலோம் எபிரோனில் அரசர் ஆகிவிட்டார்’ என்று முழங்குங்கள்” என்று சொல்லியனுப்பினான். 11எருசலேமிலிருந்து அழைக்கப்பட்ட இருநூறு பேர் சென்றனர்; வஞ்சகமின்றி, இதுபற்றி ஏதும் அறியாதவராய் அப்சலோமுடன் சென்றனர். 12அப்சலோம் பலி செலுத்தியபோது, தாவீதின் ஆலோசகனான கீலோவியன் அகிதோபலை அவனது நகர் கீலோலிருந்து வருமாறு சொல்லியனுப்பினான். சதி வலுவடைந்தது; அப்சலோமின் ஆதரவாளருடைய எண்ணிக்கையும் மிகுதியானது.


தாவீது எருசலேமினின்று தப்பியோடல்


13அப்போது தூதன் ஒருவன் தாவீதிடம் வந்து, “அப்சலோம் இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கவர்ந்து கொண்டார்” என்று கூறினான். 14தாவீது தம்மோடு எருசலேமிலிருந்த அலுவலர் அனைவரிடமும், “வாருங்கள், நாம் தப்பியோடுவோம்; ஏனெனில், அப்சலோமிற்கு முன்பாக நாம் தப்ப முடியாது. விரைவில் வெளியேறுங்கள், இல்லையேல் அவன் விரைவில் நம்மை மேற்கொண்டு, நமக்குத் தீங்கு விளைவிப்பான்; நகரையும் வாள்முனையால் தாக்குவான்” என்றார். 15அதற்கு அரச அலுவலர், “எம் தலைவராம் அரசரின் ஏவல்களுக்காகவே உம் அடியார்கள் காத்திருக்கிறோம்” என்று அரசரிடம் கூறினர். 16அரசரும் அவருடன் அவர் வீட்டார் அனைவரும் வெளியேறினர். ஆனால், வீட்டைக் காக்கும்படி தம் வைப்பாட்டியர் பத்துப் பேரை அரசர் விட்டுச் சென்றார். 17அரசரும் அவர் மக்கள் அனைவரும் வெளியேறி சிறிது தூரம் சென்று ஓரிடத்தில் நின்றார்கள். 18அவர்தம் அனைத்து அலுவலரும் அவர்முன் அணிவகுத்துச் சென்றனர். காத்திலிருந்து அவர்பின் வந்த அறுநூறு பேர் — கெரேத்தியர், பெலேத்தியர், கித்தியர் ஆகியோர் அனைவரும் — அரசருக்கு முன்பாக அணிவகுத்துச் சென்றனர்.

19அப்போது அரசர் கித்தியன் இத்தாயிடம், “நீ ஏன் எங்களோடு வருகிறாய்? திரும்பிச்சென்று அரசனோடு தங்கு. ஏனெனில், நீ ஓர் அந்நியன்; நாடு கடத்தப்பட்டவன். 20நீ நேற்று வந்தவன்; இன்று நான் உன்னை எங்களோடு அலையச் செய்யலாமா? கால் போன போக்கிலே நான் போகின்றேன், திரும்பிச் செல். உன் சகோதரர்களையும் கூட்டிச் செல். உண்மையுள்ளவரின் பேரன்பு உன்னோடு இருப்பதாக” என்று கூறினார்.

21இத்தாய் அதற்கு மறுமொழியாக, “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் தலைவராம் அரசர்மேல் ஆணை! வாழ்வாகட்டும், சாவாகட்டும். என் தலைவராம் அரசர் எங்கிருப்பாரோ, அங்கே உம் அடியானும் இருப்பான்” என்று அரசரிடம் கூறினான்.

22தாவீது இத்தாயிடம், ‘சரி’ முன்னே செல்’ என்று சொல்ல, கித்தியனான இத்தாயும் அவனோடு அவன் ஆள்களும் சிறுவர் சிறுமியர் அனைவரும் முன்சென்றனர். 23மக்கள் யாவரும் கடந்து சென்றதைக் கண்டு, நாடு முழுவதும் புலம்பிற்று. அரசர் கிதரோன் அருவியைக் கடந்தார். மக்கள் அனைவரும் பாலை நிலத்தை நோக்கிச் சென்றனர்.

24இதோ! சாதோக்கும் அவரோடு லேவியர் அனைவரும் கடவுளின் உடன்படிதக்கைப் பேழையைச் சுமந்து கொண்டு வந்தனர். மக்கள் அனைவரும் நகரைக் கடக்கும்வரை கீழே வைத்திருந்தனர். அபியத்தார் அங்கே வந்தார். 25அரசர் சாதோக்கை நோக்கி,“‘கடவுளின் பேழையை நகருக்குத் திருப்பி எடுத்துச் செல். ஆண்டவரின் பார்வையில் எனக்குக் கருணைகிடைத்தால், அவர் என்னைத் திருப்பிக் கொணர்ந்து அதனையும் அதன் உறைவிடத்தையும் நான் காணச் செய்வார். 26‘உன் மீது எனக்கு விருப்பமில்லை’ என்று அவர் கூறினால், இதோ நான் இருக்கிறேன்! அவர் விருப்பப்படியே எனக்குச் செய்யட்டும்” என்று கூறினார். 27மேலும், அரசர் குருவாகிய சாதோக்கை நோக்கி, “நீரும் திருக்காட்சியாளர்தாமே. நீரும் உம்மோடு இருக்கும் இரு புதல்வரும், உம் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானும் நலத்துடன் நகருக்குத் திரும்புங்கள். 28நான் பாலைநிலத்தின் எல்லைப் பகுதிகளில், உன்னிடமிருந்து எனக்குச் செய்தி வரும்வரை காத்திருப்பேன்” என்றார். 29அவ்வாறே, சாதோக்கும் அபியத்தாரும் கடவுளின் பேழையோடு எருசலேம் திரும்பி, அங்கேயே தங்கிவிட்டார்கள்.

30தாவீது அழுதுகொண்டே ஒலிவமலை ஏறிச்சென்றார். தலையை மூடிக்கொண்டு வெறுங்காலோடு அவர் நடந்தார். அவரோடிருந்த மக்கள் அனைவரும் தம் தலையை மூடிக்கொண்டு அழுதுகொண்டே ஏறிச் சென்றனர். 31அப்சலோமுடன் இருக்கும் சதிகாரருள் அகிதோபாலும் ஒருவன் என்று கூறப்பட்டபோது, தாவீது, “ஆண்டவரே! உம்மை வேண்டுகிறேன். அகிதோபல் மூடத்தனமான ஆலோசனையை அளிப்பானாக!” என்றார்.

32மக்கள் கடவுளைத் தொழுத மலையுச்சிக்குத் தாவீது வந்து சேர்ந்தார். அப்போது அர்க்கியனான ஊசாய் கிழிந்த ஆடையோடும் புழுதிபடிந்த தலையோடும் அவரைச் சந்தித்தான். 33தாவீது அவனிடம், “நீ என்னோடு வந்தால் எனக்குச் சுமையாக இருப்பாய். 34ஆனால், நீ நகருக்குத் திரும்பினால், அப்சலோமிடம், “அரசே, உம் அடியான் யான் முன்பு உம் தந்தைக்கு பணியாளாக இருந்ததுபோல இனி உமக்கும் பணியாளனாக இருப்பேன்” எனச் சொல்லி, எனக்காக அகிதோபலின் ஆலோசனையை முறியடிக்க முடியும். 35அங்குக் குரு சாதோக்கும் அபியத்தாரும் உன்னோடு இருக்கின்றனர் அல்லவா? அரச மாளிகையிலிருந்து நீ கேட்கின்ற அனைத்தையும் குரு சாதோக்கிடமும் அபியத்தாரிடமும் எடுத்துச் சொல். 36அவர்களோடு அவர்களின் இரு புதல்வர்களும், அதாவது சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும் இருக்கின்றனர். நீ கேட்ட அனைத்தையும் அவர்கள் வழியாக எனக்குச் சொல்லியனுப்பு” என்று கூறினார். 37தாவீதின் நண்பன் ஊசாய் நகருக்குள் சென்று கொண்டிருந்தபோது, அப்சலோம் எருசலேமுக்குள் நுழைந்தான்.


15:7 ‘நாற்பது’ என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 16

தாவீது-சீபா


1தாவீது மலை உச்சியைக் கடந்து சிறிது தொலை சென்றதும், மெபிபோசேத்தின் பணியாளன் சீபா அவரைச் சந்திக்க வந்தான். அவன் இருநூறு அப்பங்கள், நூறு உலர்ந்த திராட்சை அடைகள், நூறு அத்திப் பழ அடைகள், ஒரு தோற்பை திராட்சை இரசம் ஆகியவற்றைக் கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு வந்தான்.✠ 2“இதெல்லாம் என்ன?” என்று சீபாவை அரசர் கேட்க, “கழுதைகள் அரச வீட்டார் சவாரி செய்யவும், அப்பமும் அத்திப்பழமும் இளைஞர்கள் உண்ணவும், திராட்சை இரசம் பாலைநிலத்தில் களைப்புறுவோர் குடிக்கவும் தான்” என்று சீபா பதிலளித்தான். 3“உன் தலைவர் சவுலின் பேரன் எங்கே?” என்றுமீண்டும் தாவீது வினவ, “அவர் எருசலேமிலேயே தங்கியிருக்கிறார். ஏனெனில், அவர் ‘இன்று இஸ்ரயேல் வீட்டார் என் பாட்டனாரின் அரசை எனக்குத் திருப்பித் தருவார்’ என எண்ணுகிறார்” என்று சீபா, அரசரிடம் கூறினான்.✠ 4“இதோ! மெபிபோசேத்தின் உடைமையெல்லாம் உன்னுடையதே” என்று அரசர் சீபாவிடம் கூற, “நான் பணிவோடு வணங்குகிறேன்; என் தலைவராம் அரசே! உம் கண்முன் நான் கருணை பெறுவேனாக” என்று சீபா அரசருக்கு மறுமொழி கூறினான்.


தாவீது-சிமயி


5தாவீது பகூரிம் வந்தபோது, சவுலின் குடும்பத்தையும் வீட்டையும் சார்ந்த ஒருவன் அவரை எதிர்கொண்டான். அவன் கேராவின் மகனான சிமயி. அவன் பழித்துக் கொண்டே எதிரே வந்தான். 6அவன் தாவீது மீதும், தாவீது அரசரின் எல்லாப் பணியாளர் மீதும், எல்லா மக்கள் மீதும், அவர்தம் வலமும் இடமும் இருந்த வீரர்கள்மீதும் கல்லெறிந்தான். 7சிமயி பழித்துக் கூறியது: “இரத்த வெறியனே! பரத்தை மகனே! போ! போ!. 8நீ சிந்திய சவுல் வீட்டாரின் இரத்தப் பழி அனைத்தையும் ஆண்டவர் உன்மீது வரச்செய்துள்ளார். சவுலுக்குப் பதிலாக நீ ஆட்சி செய்தாய் அன்றோ! ஆண்டவர் உன் மகன் அப்சலோமின் கையில் அரசைத் தருவார்! இரத்த வெறியனான நீ உன் தீமையிலேயே அழிவாய்”.

9அப்போது செரூயாவின் மகன் அபிசாய் அரசரிடம் வந்து, “இச்செத்த நாய் என் தலைவராம் அரசரைப் பழிப்பதா? இதோ நான் சென்று அவனது தலையைக் கொய்து எறிய எனக்கு அனுமதி தாரும்” என்றான்.

10அதற்கு அரசர், “செரூயாவின் மக்களே! இதைப்பற்றி நீங்கள் கவலைக் கொள்ள வேண்டாம். அவன் பழிக்கட்டும்! ஒருவேளை ‘தாவீதைப் பழி!’ என்று ஆண்டவரே அவனுக்குச் சொல்லியிருந்தால், ‘இவ்வாறு நீ ஏன் செய்தாய்?’ என்று யார் சொல்ல முடியும்” என்றார். 11மீண்டும் தாவீது அபிசாயிடமும் தம் பணியாளர் அனைவரிடமும் கூறியது: “இதோ! எனக்குப் பிறந்த என் மகனே என் உயிரைப் பறிக்கத் தேடுகிறான். பென்யமின் குலத்தைச் சார்ந்த இவன் செய்யலாகாதோ? அவனை விட்டுவிடு! அவன் பழிக்கட்டும்! ஏனெனில், ஆண்டவரே அவனைத் தூண்டியுள்ளார். 12ஒருவேளை ஆண்டவர் என் துயரத்தைக் காண்பார். இன்று அவன் பழித்துப் பேசியதற்காக எனக்கு அவர் நன்மை செய்வார்”. 13தாவீது தன் ஆள்களோடு பயணத்தைத் தொடர்ந்தார். சிமயி அவருக்கு எதிராகப் பழித்துரைத்து, கல்லெறிந்து, புழுதியை வாரித் தூற்றிக்கொண்டு மலையோரமாகச் சென்றான். 14அரசரும் அவரோடிருந்த மக்கள் அனைவரும் யோர்தானை வந்தடைந்தனர். அங்கே அவர் இளைப்பாறினார்.


எருசலேமில் அப்சலோம்


15இதற்கிடையில், அப்சலோமும் இஸ்ரயேலர் அனைவரும் எருசலேம் வந்தடைந்தனர். அகிதோபலும் அவனோடு இருந்தான். 16தாவீதின் நண்பனான அர்க்கியன் ஊசாய் அப்சலோமிடம் சென்று, “வாழ்க அரசர்! வாழ்க அரசர்!” என்று வாழ்த்தினான்.

17அப்சலோம் ஊசாயை நோக்கி, “உன் நண்பருக்கு நீ காட்டும் விசுவாசம் இதுதானா? நீ ஏன் உன் நண்பரோடு செல்லவில்லை?” என்று கேட்டான்.

18அதற்கு ஊசாய் அப்சலோமிடம் கூறியது: “இல்லை! ஆண்டவரும் இந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் யாரைத் தேர்ந்தெடுத்துள்ளார்களோ அவருக்காகவே நான் இருப்பேன்; அவரோடுதான் நான் தங்குவேன். 19நான் யாருக்கு பணிபுரிய வேண்டும்? அவருடைய மகனுக்கு அல்லவா? உன் தந்தைக்கு நான் பணிபுரிந்தது போலவே நான் உனக்கும் பணிபுரிவேன்”.

20அப்சலோம் அகிதோபலிடம், “நான் என்ன செய்யலாம் என்பது பற்றி அறிவுரை கூறு” என்று கேட்டான். 21அகிதோபல் அப்சலோமிடம், “உன் தந்தை தன் வீட்டைக் காக்க இங்கு விட்டுச் சென்றுள்ள வைப்பாட்டியரிடம் சென்று அவர்களோடு உறவு கொள். நீ உன் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டாய் என்று இஸ்ரயேலர் அனைவரும் கேள்விப்படுவர். உன்னோடு இருப்பவர் அனைவரின் கை ஓங்கும்” என்றான். 22அப்சலோமுக்காக மாடியில் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டது. இஸ்ரயேலர் அனைவரும் அறிய, அப்சலோம் தன் தந்தையின் வைப்பாட்டியரோடு உறவு கொண்டான்.✠

23அந்நாள்களில் அகிதோபலின் ஆலோசனை கடவுளின் வாக்காகக் கருதப்பட்டது. இவ்வாறுதான், தாவீதும் அப்சலோமும் அகிதோபலின் அனைத்து ஆலோசனைகளையும் கருதினர்.


16:1 2 சாமு 9:9-10. 16:3 2 சாமு 19:26-27. 16:22 2 சாமு 12:11-12.


அதிகாரம் 17

ஊசாயின் தவறான கருத்து


1அப்போது அகிதோபல் அப்சலோமை நோக்கி, “நான் பன்னீராயிரம் ஆள்களைத் தேர்வு செய்து இன்றிரவே புறப்பட்டுத் தாவீதைப் பின்தொடர்வேன். 2அவர் களைத்துச் சோர்ந்த வேளையில் அவர்மேல் பாய்ந்து அவரை அச்சுறுத்துவேன். அவரோடிருக்கும் மக்கள் அனைவரும் தப்பி ஓடுவர்; அரசரை மட்டும் நான் வெட்டி வீழ்த்துவேன். 3மக்கள் அனைவரையும் உன்னிடம் திருப்பிக் கொணர்வேன். நீ தேடும் ஒரு மனிதனைத் தவிர அனைவரையும் அழைத்து வருவேன். மக்கள் அனைவரும் நலமாய் இருப்பர்.” 4அப்சலோமுக்கும் இஸ்ரயேலின் பெரியோருக்கும் இந்தக் கருத்து பிடித்திருந்தது.

5அப்சலோம், “அர்க்கியனான ஊசாயை அழையுங்கள். அவன் சொல்ல வேண்டியதையும் கேட்போம்” என்றான். 6ஊசாய் அப்சலோமிடம் வர, அப்சலோம், “இது அகிதோபலின் அறிவுரை. இவ்வாறு நாம் செய்யலாமா? இல்லையேல் உன் கருத்து என்ன?” என்று அவனிடம் கேட்டான்.

7ஊசாய் அப்சலோமை நோக்கி, “அகிதோபல் கூறியுள்ள கருத்து இப்போதைக்குச் சரியானதல்ல” என்றான். 8மேலும், ஊசாய் அப்சலோமிடம் கூறியது: “உன் தந்தையும் அவர்தம் ஆள்களும் வலிமைமிகு வீரர் என்பதை நீ அறிவாய். காட்டில் தன் குட்டிகளை இழந்த கரடிபோல் அவர்கள் சினமுற்றிருக்கிறார்கள். உன் தந்தை போர்த்திறன் மிக்கவர்; இரவில் மக்களோடு தங்கமாட்டார். 9இப்பொழுது கூட அவர் ஒரு குகையிலோ வேறெந்த இடத்திலோ ஒளிந்து கொண்டிருப்பார். அவர் அவர்களைத் தாக்கியவுடன் அதைக் கேட்பவர்கள், ‘அப்சலோமைப் பின்பற்றும் மக்கள் வீழ்ந்தனர்’ என்று சொல்வர்” என்றான். 10அப்போது சிங்கத்தின் வலிமைகொண்ட அஞ்சா நெஞ்சனும் அச்சத்தால் அறவே நிலைகுலைந்து விடுவான். உன் தந்தை வலியவர் என்றும் அவரோடு இருப்பவர்களும் வலிமைவாய்ந்தவர்கள் என்றும் இஸ்ரயேலர் அனைவரும் அறிவர். 11ஆகவே, எனது கருத்து என்னவென்றால், தாண் முதல் பெயேர் செபா வரை கடற்கரை மணல்திரள்போல் உள்ள இஸ்ரயேலர் அனைவரும் உன்னிடம் ஒன்றுதிரளட்டும். பிறகு நீயே போருக்குச் செல். 12நாம் அவரை எதிர்த்துச் சென்று அவர் தங்கியுள்ள இடத்தைக் கண்டுபிடிப்போம். தரையின்மீது விழும் பனிபோல், அவர்மீது நாமும் விழுவோம். அவரும், அவரோடு உள்ள ஆள்கள் அனைவரிலும் எவரும் தப்பமாட்டார்கள். 13ஒருவேளை அவர் ஒரு நகரினுள் நுழைந்திருந்தால், இஸ்ரயேலர் அனைவரும் கொண்டுவரும் கயிறுகளால் அந்நகரைக் கட்டியிழுத்து அங்கே ஒரு சிறு கல்லும் இராதபடி ஒரு கணவாய்க்குள் தள்ளுவோம்.” 14அப்சலோமும் இஸ்ரயேலர் அனைவரும் அர்க்கியனான ஊசாயின் கருத்து அகிதோபலின் அறிவுரையை விடச் சிறந்தது என்று கூறினர். ஆனால், ஆண்டவர் அப்சலோமிற்குத் தீங்கிழைக்குமாறு அகிதோபலின் சிறந்த அறிவுரை எடுபடாதுபோகச் செய்தார்.


தாவீது தப்பியோடல்


15பின் ஊசாய் குரு சாதோக்கிடமும் அபியத்தாரிடமும் “அப்சலோமுக்கும் இஸ்ரயேலின் பெரியோர்களுக்கும் அகிதோபல் இவ்வாறு அறிவுரை தந்தான், நானோ இவ்வாறு கருத்துச் சொன்னேன். 16இப்போது உடனே ஆளனுப்பி, பாலைநில எல்லைப்பகுதிகளில் இரவு தங்க வேண்டாம் என்றும் அரசரும் அவரோடுள்ள மக்களும் இரையாகாதபடி அவர்கள் கண்டிப்பாக வேறிடத்திற்குச செல்லவேண்டும் என்றும் தாவீதிடம் சொல்லுங்கள்” என்றான்.

17அப்போது யோனத்தானும் அகிமாசும் ஏன்ரோகேலில் காத்திருக்க, ஒரு பணிப்பெண் அவர்களிடம் சென்று செய்தி சொல்ல, அவர்கள் தாவீதிடம் சென்று அதை அறிவித்தார்கள். ஏனெனில், அவர்கள் நகருக்குள் செல்வது, யாரும் காணமல் இருக்க வேண்டியிருந்தது. 18ஆனால், சிறுவன் ஒருவன் அவர்களைப் பார்த்துவிட்டு அப்சலோமுக்குத் தெரியப்படுத்தினான். இருவரும் விரைவாகச் சென்று பகூரிமில் ஒருவரின் வீட்டில் நுழைந்தனர். அவரது முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது. அவர்கள் அதற்குள் இறங்கினார்கள். 19வீட்டுக்காரி கிணற்று முகப்பினை ஒரு போர்வையால் மூடி அதன்மேல் தானியங்களைப் பரப்பினாள். அவர்கள் இறங்கியது யாருக்கும் தெரியவில்லை. 20அப்சலோமின் பணியாளர் வீட்டினுள் நுழைந்து அப்பெண்ணை நோக்கி, “அகிமாசும் யோனத்தானும் எங்கே?” என்று கேட்க, அவள், “அவர்கள் ஆற்றைக் கடந்து சென்றுவிட்டனர்” என்று சொன்னாள். அவர்கள் தேடியும் கண்டுபிடிக்க இயலாததால் எருசலேம் திரும்பினர்.

21அவர்கள் அகன்றதும் யோனத்தானும் அகிமாசும் கிணற்றிலிருந்து ஏறி வந்து அரசர் தாவீதிடம் சென்று, “உடனே புறப்பட்டு ஆற்றைக் கடந்து செல்லுங்கள். ஏனெனில், அகிதோபல் உமக்கு எதிராக இவ்வாறு அறிவுரை கூறியுள்ளான்” என்று தாவீதிடம் உரைத்தனர். 22தாவீதும் அவரோடிருந்த மக்களும் புறப்பட்டு யோர்தானைக் கடந்து சென்றார்கள். பொழுது புலர்ந்தபோது யோர்தானைக் கடக்காதவன் எவனும் இல்லை.

23தன் அறிவுரை ஏற்றுக்கொள்ளபடவில்லை என்று கண்டதும் அகிதோபல் தன் கழுதைக்குச் சேணமிட்டு, தன் நகருக்குப் புறப்பட்டுத் தன் வீட்டை அடைந்தான். தன் வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு அவன் நான்று கொண்டு இறந்தான். அவனை அவனுடைய தந்தையின் கல்லறையில் அடக்கம் செய்தனர்.

24தாவீது மகனயிம் வந்தடைந்தார்; அப்சலோமும் அவனோடு இஸ்ரயேலர் அனைவரும் யோர்தானைக் கடந்தார்கள். 25அப்சலோம் யோவாபுக்குப் பதிலாக அமாசாவைப் படைத் தலைவனாக நியமித்திருந்தான். இவன் இஸ்ரயேலன் இத்ரா என்பவனின் மகன். இந்த இத்ராதான் அபிகாலை மணந்தவன். இவள் யோவாபின் தாயும் செரூயாவின் சகோதரியுமான நாகசின் மகள். 26இஸ்ரயேலரும் அப்சலோமும் கிலயாது நாட்டில் பாளையம் இறங்கினர். 27தாவீது மகனயிம் வந்தடைந்தபோது அம்மோனியரின் இராபாவிலிருந்து நாகசின் மகன் சோபியும் லோதபாரிலிருந்து அம்மியேலின் மகன் மாக்கிரும், ரோகிலிமிலிருந்து கிலயாதியன் பர்சில்லாயும் 28-29தாவீதிடம் வந்து அவருக்கு படுக்கைகள், கிண்ணங்கள், மண்பாண்டங்கள், கோதுமை, வாற்கோதுமை, மாவு, வறுத்த தானியம், மொச்சை, அவரை, பயிறு, தேன், தயிர், ஆடுகள், பசும்பாற்கட்டிகள் ஆகியவற்றைக் கொடுத்தனர். பாலைவெளியில் மக்கள் பசித்தும் களைத்தும் தாகமாகவும் இருக்கிறார்கள் என்று சொல்லி, தாவீதும் அவரோடு இருந்தவர்களும் உண்பதற்காக அவர்கள் இவற்றைத் தந்தனர்.


அதிகாரம் 18

அப்சலோமின் தோல்வியும் சாவும்


1தாவீது தம்மோடிருந்த வீரர்களைக் கணக்கெடுத்து, அவர்கள் மீது, ஆயிரத்தவர், நூற்றுவர், தலைவர்களை நியமித்தார். 2வீரர்களுள் மூன்றில் ஒரு பகுதியினரை யோவாபின் தலைமையிலும், அடுத்த மூன்றில் ஒரு பகுதியினரை யோவாபின் சகோதரன் செரூயாவின் மகன் அபிசாயின் தலைமையிலும், இன்னும் மூன்றில் ஒரு பகுதியினரைக் கித்தியன் இத்தாயின் தலைமையிலும் தாவீது அனுப்பினார். தாமும் அவர்களோடு புறப்படுவதாக அரசர் வீரர்களிடம் கூறினார். 3“நீர் வெளியே வரவேண்டாம். ஏனெனில், நாங்கள் புறமுதுகாட்டி ஓடினால், அவர்கள் எங்களைப்பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். எங்களுள் பாதிப்பேர் மடிந்தாலும் எங்களைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். நீர் ஒருவர் எங்களுள் பத்தாயிரம் பேருக்குச் சமம். தற்போது எங்களுக்கு நகரிலிருந்தே நீர் உதவி செய்வது நல்லது” என்று வீரர்கள் அவரிடம் சொன்னார்கள்.

4“உங்களுக்கு எது நல்லதெனப்படுகிறதோ அதையே நான் செய்வேன்” என்று அரசர் அவர்களிடம் கூறி, வாயிலருகே நின்றார். வீரர்கள் நூறுநூறாகவும் ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டுச் சென்றனர். 5“என் பொருட்டு அந்த இளைஞன் அப்சலோமுக்குத் தீங்கிழைக்க வேண்டாம்” என்று யோவாபு, அபிசாய், இத்தாய் ஆகியோருக்கு அரசர் கட்டளையிட்டார். எல்லாப் படைத்தலைவருக்கும் அரசர் கட்டளையிட்டதை வீரர்கள் அனைவரும் கேட்டார்கள்.

6இஸ்ரயேலரை எதிர்கொள்ள வீரர்கள் புறப்பட்டுத் திறந்த வெளிக்குச் சென்றனர். போர் எப்ராயிம் காட்டில் நடந்தது. 7இஸ்ரயேலர் தாவீதின் பணியாளரால் தோற்கடிக்கப்பட்டனர். அன்று மாபெரும் அழிவு ஏற்பட்டது. இருபதாயிரம்பேர் கொல்லப்பட்டனர். 8நாடெங்கும் போர் பரவியது. அன்று வாளுக்கு இரையானவர்களைவிடக் காட்டுக்கு இரையானவர்களே மிகுதியானவர்.

9அப்சலோம் தாவீதின் பணியாளரை எதிர்கொள்ள நேர்ந்தது. அவன் ஒரு கோவேறு கழுதை மீது ஏறி வந்து கொண்டிருந்தான். அது ஒரு பெரிய கருவாலி மரத்தின் அடர்த்தியான கிளைகளுக்குக் கீழே சென்று கொண்டிருந்தது. அப்போது அவனது தலை கருவாலி மரத்தில் சிக்கிக் கொள்ள, அவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தொங்கினான். அவன் ஏறிவந்த கோவேறு கழுதை முன்னே சென்றுவிட்டது. 10இதைக் கண்ட ஒரு வீரன் யோவாபிடம் சென்று, “இதோ! அப்சலோம் கருவாலி மரத்தில் தொங்குவதைக் கண்டேன்” என்று கூறினான்.

11யோவாபு அதைச் சொன்னவனை நோக்கி, “என்ன? நீ கண்டாயா? அவனை ஏன் நீ அங்கேயே வெட்டித் தரையில் வீழ்த்தவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக் காசுகளையும் ஒரு கச்சையையும் தந்திருப்பேனே!” என்று கூறினார். 12அதற்கு அம்மனிதன் யோவாபிடம் கூறியது: “என் கையில் ஆயிரம் வெள்ளிக் காசுகளை நீர் நிறுத்துக் கொடுத்தாலும் அரசரின் மகனுக்கு எதிராக நான் கையோங்க மாட்டேன். ‘இளைஞன் அப்சலோமுக்குத் தீங்கிழைக்க வேண்டாம்’ என்று உமக்கும், அபிசாய்க்கும், இத்தாய்க்கும் அரசர் கட்டளையிட்டதை நாங்கள் கேட்டோமே! 13மாறாக, நான் என் மனச்சான்றுக்கு எதிராக நடந்திருந்தால் — அது அரசருக்குத் தெரியாமல் போகாது — நீர் என்னைக் கைவிட்டிருப்பீர்.”

14“உன்னோடு இவ்வாறு நான் நேரத்தை வீணாக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, யோவாபு தம் கையில் மூன்று ஈட்டிகளை எடுத்துச்சென்று உயிருடன் கருவாலி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அப்சலோமின் நெஞ்சில் அவற்றைப் பாய்ச்சினார். 15மேலும், யோவாபின் படைக் கலன் தாங்கிய பத்துப்பேர் அப்சலோமைச் சூழ்ந்து வெட்டிக் கொன்றனர்.

16யோவாபு எக்காளம் ஊத, வீரர்களை நிறுத்தி அவர்கள் இஸ்ரயேலைப் பின்தொடர்வதை விட்டனர். 17அவர்கள் அப்சலோமைத் தூக்கிச் சென்று காட்டில் ஒரு பெருங்குழியில் தள்ளி, அவன்மேல் பெரும் கற்குவியலை எழுப்பினர். அச்சமயம் இஸ்ரயேலர் அனைவரும் தம் வீடுகளுக்கு ஓடி விட்டனர்.

18அப்சலோம் தனக்கு ஒரு மகன் இல்லாத காரணத்தால் தன் பெயரை நினைவுகூறுவதற்காக, தன் வாழ்நாளிலேயே தனக்கென்று அரசக் கணவாயில் ஒரு தூண் நிறுவியிருந்தான். அதற்கு அவன் தன் பெயரையே வைத்தான். இந்நாள்வரை அது அப்சலோமின் நினைவுச் சின்னமாக இருக்கிறது.


தாவீது அப்சலோமின் இறப்பை அறிதல்


19சாதோக்கின் மகனாகிய அகிமாசு, “நான் ஓடி அரசரிடம் சென்று, ஆண்டவர் அவரைத் தன் எதிரிகளிடமிருந்து விடுவித்துள்ளார் என்ற செய்தியை அறிவிக்க அனுமதி தாரும்” என்று சொன்னான். 20அதற்கு யோவாபு, “இன்று நீ செய்தியை எடுத்துச் செல்ல வேண்டாம்; இளவரசர் இறந்துவிட்டதால் இன்று வேண்டாம். வேறொரு நாள் செய்தியை எடுத்துச் செல்லலாம்” என்று சொன்னார். 21ஆனால், யோவாபு ஒரு கூசியனிடம் “நீ சென்று கண்டவை அனைத்தையும் அரசரிடம் சொல்” என்று சொல்ல, அவனும் யோவாபை வணங்கிவிட்டு ஓடிச் சென்றான்.

22சாதோக்கின் மகன் அகிமாசு மீண்டும் யோவாபிடம் “என்ன நேரிடினும் நானும் கூசியனின் பின் ஓட எனக்கு அனுமதி தாரும்’ என்று கேட்டான். “மகனே! இச்செய்தியைச் சொல்வதனால், உனக்கு எப்பரிசும் கிடைக்கப்போவதில்லை. பின் ஏன் நீ ஓட வேண்டும்?” என்று யோவாபு பதில் கூறினார். 23“நடப்பது நடக்கட்டும். நான் ஓட விரும்புகிறேன்” என்று அவன் மீண்டும் சொல்ல, “சரி, ஓடு” என்று யோவாபு மறுமொழி கூறினார். அகிமாசு குறுக்குப்பாதையில் ஓடி கூசியனை முந்திச் சென்றான்.

24அப்போது தாவீது இரு வாயில்களுக்குமிடையே அமர்ந்துக்கொண்டிருந்தார். காவலன் மதிலின் வாயிலுக்கு மேல் ஏறிச்சென்று கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். ஓர் ஆள் தனியாக ஓடிவருவதைக் கண்டான். 25காவலன் குரலெழுப்பி அரசரிடம் கூற, அரசர், “தனியாக வந்தால் அவனிடம் நற்செய்தியுள்ளது” என்றார். அந்த ஆள் இன்னும் அருகில் வந்துக்கொண்டிருந்தான்.

26காவலன் இன்னொரு ஆளும் ஓடிவருவதைக் கண்டான். கண்டு, அவன் குரலெழுப்பி வாயில்காப்போனிடம், “இதோ, இன்னொருவன் தனியாக ஓடிவருகிறான்” என்று கூற அரசர், “இவனும் நற்செய்தி கொண்டு வருகிறான்” என்றார். 27“முதலில் வருகிறவனின் ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசின் ஓட்டத்தைப்போல் உள்ளது” என்று காவலன் உரைக்க, அதற்கு அரசர், “இவன் நல்லவன், இவன் நற்செய்தியோடு வருகிறான்” என்றார்.

28அப்போது அகிமாசு குரலெழுப்பி, “நலம் உண்டாகுக!” என்று அரசரிடம் சொன்னான். அவன் முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து அரசரை வணங்கி, “என் தலைவராம் அரசருக்கு எதிராகக் கையோங்கியவர்களை ஒப்படைத்த உம் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!’ என்றான். 29“இளைஞன் அப்சலோம் நலமா?” என்று அரசர் வினவ, அகிமாசு, “அரச பணியாளனும் உம் அடியானுமாகிய என்னை யோவாபு அனுப்பும்போது அங்கு பெரும் குழப்பமாக இருந்தது. ஆனால், அது என்னவென்று எனக்கு தெரியாது” என்றான். 30அரசர் அவனை நோக்கி, “விலகி, அங்கே நில்” என்று கூற, அவனும் விலகி நின்றான்.

31அப்போது கூசியனும் வந்து, “என் தலைவராம் அரசே! நற்செய்தி! இன்று ஆண்டவர் உமக்கு எதிராக எழுபவர்களின் கரத்தினின்று உம்மை விடுவித்துள்ளார்” என்று கூறினான். 32“இளைஞன் அப்சலோம் நலமா?” என்று அரசர் வினவ, கூசியன், “என் தலைவராம் அரசரின் எதிரிகளும் உனக்கு எதிராகத் தீங்கிழைக்க எழுந்துள்ள அனைவரும், அந்த இளைஞனைப்போல் ஆவார்களாக!” என்றான். 33அப்போது அவர் அதிர்ச்சியுற்று, “என் மகன் அப்சலோமே! என் மகனே! என் மகன் அப்சலோமே! உனக்குப் பதில் நான் இறந்திருக்கலாமே! அப்சலோமே! என் மகனே!” என்று கதறிக்கொண்டே அவர் வாயிலின் மாடியறைக்குச் சென்றார்.


அதிகாரம் 19

யோவாபு தாவீதைக் கண்டித்தல்


1அரசர் தம் மகனுக்காக அழுது புலம்புவதாக யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது. 2‘அரசர் தம் மகனுக்காக வருந்துகிறார்’ என்று வீரர்கள் அனைவரும் கேள்விப்பட்டதால், அன்றைய வெற்றி அனைவருக்குமே ஒரு துக்கமாயிற்று. 3போரிலிருந்து புறமுதுகு காட்டி வெட்கத்தோடு ஓடுபவர்களைப்போன்று அன்று வீரர்கள் நகருக்குள் யாருமறியாமல் நுழைந்தார்கள். 4அரசர் தம் முகத்தை மூடிக்கொண்டு, “என் மகன் அப்சலோமே! அப்சலோமே!, என் மகனே! என் மகனே!” என்று குரலெழுப்பி அழுதுகொண்டிருந்தார்.

5அப்போது யோவாபு அரசர் இருந்த வீட்டிற்குள் வந்து அவரை நோக்கி, “உம் உயிரையும், உம் புதல்வர் புதல்வியின் உயிரையும், உம் மனைவியர், வைப்பாட்டியரின் உயிரையும் காத்த உம் பணியாளர் அனைவரையும் இன்று தாழ்வடையச் செய்துவிட்டீர். 6உம்மை வெறுப்பவருக்கு அன்பு செலுத்தி, உமக்கு அன்பு செலுத்துபவர்களை நீர் வெறுப்பதால், படைத் தலைவர்களோ பணியாளர்களோ உமக்கு ஒரு பொருட்டில்லை என்பதை இன்று எடுத்துக்காட்டிவிட்டீர். இன்று அப்சலோம் உயிரோடு இருந்து, நாங்கள் அனைவருமே மடிந்திருந்தால் உமக்கு அது பிடித்திருக்கும் என்பதையும் நான் இன்று புரிந்து கொண்டேன். 7இப்போது எழுந்திரும். வெளியே சென்று உம் பணியாளர் மகிழ்ச்சியுறுமாறு பேசும். ஏனெனில், ஆண்டவர்மேல் ஆணை! நீர் வெளியே வராவிட்டால் ஒரு மனிதனும் இன்றிரவு உம்மோடு தங்கமாட்டான். உம் இளமை முதல் இன்றுவரை உமக்கு ஏற்பட்ட அனைத்துத் தீமைகளைவிடவும் இந்தத் தீமை கடுமையாக இருக்கும்” என்று கூறினார்.


தாவீது எருசலேமுக்குத் திரும்புதல்


8அரசர் எழுந்து வாயிலில் அமர, “இதோ அரசர் வாயிலில் அமர்ந்துள்ளார்” என்று அனைவருக்கும் சொல்லப்பட்டது. வீரர்கள் அனைவரும் அவர்முன் வந்தனர். இதற்கிடையில் இஸ்ரயேலர் தம் வீடுகளுக்குத் தப்பியோடினர். 9அப்போது இஸ்ரயேலின் குலங்களின் மக்கள் அனைவரிடையே இவ்வாறு வாக்கு வாதம் ஏற்பட்டது: “நம் எதிரிகளின் கையினின்று அரசர் நம்மை விடுவித்தார். பெலிஸ்தியரின் கையினின்று நம்மை விடுவித்தவரும் அவரே. அப்சலோமின் பொருட்டு அவர் இப்போது நாட்டினின்று வெளியேறியுள்ளார். 10நம்மை ஆளுமாறு நாம் திருப்பொழிவு செய்த அப்சலோமோ போரில் இறந்து விட்டான். இனி நீங்கள் அரசரைத் திருப்பியழைத்து வராமல் வாளாயிருப்பதேன்?”

11அரசர் தாவீது குரு சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் ஆளனுப்பிக் கூறியது: “யூதாவின் பெரியோர்களிடம் இவ்வாறு கேளுங்கள்: அரசரைத் தம்அரண்மனைக்குத் திருப்பியழைப்பதில் நீங்கள் ஏன் பின்வாங்க வேண்டும்? ஏனெனில், இஸ்ரயேலர் அனைவரின் பேச்சும் அரசரின் வீட்டை எட்டிவிட்டது. 12நீங்கள் என் சகோதரர்கள்; நீங்கள் என் எலும்பும் சதையும் ஆனவர்கள்; அரசரைத் திருப்பி அழைப்பதில் நீங்கள் ஏன் பின்தங்க வேண்டும்? 13அமாசாவிடம் இவ்வாறு கூறுங்கள்: ‘நீ என் எலும்பும் சதையும் அல்லவா? யோவாபுக்குப் பதிலாக என்முன்பாக எந்நாளும் படைத்தலைவனாய் இராவிட்டால், கடவுள் என்னைத் தக்கவாறும், அதற்கு மேலும் தண்டிக்கட்டும்.’ 14யூதா வீரர்கள் அனைவரின் உள்ளங்களையும் அவன் இவ்வாறு இணங்கச் செய்து அவர்களை ஒருமனப்படுத்தினான். அவர்கள் அரசரிடம் ஆளனுப்பி, “நீரும் உம் பணியாளர் அனைவரும் திரும்பி வாருங்கள்” என்று கூறினர்.

15அரசர் திரும்பி யோர்தான்வரை வந்தார். யூதாவினர் கில்கால்வரை சென்று அரசரைச் சந்தித்து அவர் யோர்தானைக் கடக்கச் செய்தனர். 16பகூரிமைச் சார்ந்த பென்யமினியனான கேராவின் மகன் சிமயி யூதாவினரோடு அரசர் தாவீதைச் சந்திக்க விரைந்தான்.✠ 17அவனோடு பென்யமினியர் ஆயிரம்பேர் இருந்தனர். சவுல் வீட்டுப் பணியாள் சீபா தன் பதினைந்து புதல்வரோடும் இருபது பணியாளரோடும் அங்கே இருந்தான். அவர்கள் அரசர் வருமுன் யோர்தானுக்கு விரைந்தனர்.


சிமயிக்குத் தாவீது இரக்கம் காட்டல்


18அரச குடும்பத்தினரைக் கொண்டு வரவும், அரசரின் ஏவல்களைச் செய்யவும் அவர்கள் துறைவழி ஆற்றைக் கடந்தனர். அரசர் யோர்தானைக் கடக்கவிருக்கையில் கேராவின் மகன் சிமயி அவர்முன் விழுந்தான். 19“தலைவரே! என் குற்றத்தைப் பொருட்படுத்தாதீர்! என் தலைவராம் அரசர் எருசலேமை விட்டுச் சென்றபோது உம் பணியாளன் செய்த தீமையை நினைவுகூராதேயும்! அரசர் அதை மனத்தில் கொள்ளாமல் இருப்பாராக! 20தான் பாவம் செய்துள்ளதைத் தங்கள் பணியாளன் அறிவான். இதோ இன்று யோசேப்பின் வீட்டார் அனைவரிலும் முதல் ஆளாக, என் தலைவராம் அரசரைச் சந்திக்க நான் வந்திருக்கிறேன்” என்று அவன் அரசரிடம் கூறினான்.

21அப்போது செரூயாவின் மகன் அபிசாய், “ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை பழித்ததற்காக சிமயி கொல்லப்பட வேண்டாமா?” என்று கேட்டான். 22அதற்கு தாவீது “செரூயாவின் புதல்வர்களே! இது பற்றி உங்களுக்கு என்ன? இன்று நீங்கள் எனக்கு எதிரிகள் போல் நடந்துகொள்வது ஏன்? இன்று இஸ்ரயேலில் யாராவது கொல்லப்பட வேண்டுமோ? இன்று நான் இஸ்ரயேலின் அரசர் என்பது எனக்குத் தெரியாதா?” என்று கூறினார். 23பிறகு அரசர் சிமயியை நோக்கி, “நீ சாக மாட்டாய்” என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்.


மெபிபோசேத்துக்குத் தாவீது இரக்கம் காட்டல்


24சவுலின் பேரன் மெபிபோசேத்து அரசரைச் சந்திக்கச் சென்றான். அரசர் புறப்பட்டுச் சென்ற நாளிலிருந்து அவர் நலத்துடன் திரும்பிய நாள்வரை அவள் தன் பாதங்களைக் கழுவவில்லை; தாடியைத் திருத்தவில்லை; தன் ஆடைகளையும் வெளுக்கவுமில்லை.✠ 25அவன் எருசலோமில் அரசரைச் சந்திக்க வந்தபோது, அரசர் அவனை நோக்கி, “மெபிபோசேத்து! என்னோடு நீ ஏன் வரவில்லை?’ என்று வினவினார். 26அதற்கு அவன், “என் தலைவராம் அரசரே! என் பணியாளன் என்னை ஏமாற்றிவிட்டான். உம் அடியான் கால் ஊனமுற்றிருப்பதால், ‘நானே என் கழுதைக்குச் சேணமிட்டு அதன் மீது சவாரி செய்து அரசரோடு செல்வேன்’ என்று உம் அடியானாகிய நான் கூறினேன். 27அவனோ உம் அடியானைப்பற்றி என் தலைவராம் அரசரிடம் அவதூறு பேசினான். ஆனால், என் தலைவராம் அரசர் கடவுளின் தூதரைப் போன்றவர். உமக்குச் சரியெனப்படுவதையே செய்யும். 28என் தலைவராம் அரசரின் பார்வையில் என் தந்தையின் குடும்பத்தார் அனைவரும் சாவைத்தவிர வேறு எதற்கும் உரியவர் அல்லர்! இருப்பினும், உம் அடியானை உம்மோடு உணவருந்துபவர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டீர்! இனி அரசரிடம் மன்றாட எனக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று சொன்னான். 29அதற்கு அரசர், “உன்னைப்பற்றி இன்னும் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப் பகிர்ந்துகொள்ளுமாறு நான் சொல்லிவிட்டேனே” என்று அவனிடம் சொன்னார். 30மெபிபோசேத்து மறுமொழியாக, “இல்லை, அவனே அனைத்தையும் எடுத்துக்கொள்ளட்டும். என் தலைவராம் அரசர் நலமே தம் வீடு திரும்பியதே எனக்குப் போதும்!” என்று அரசரிடம் கூறினான்.


பர்சில்லாய்க்கு இரக்கம் காட்டல்


31கிலயாதைச் சார்ந்த பர்சில்லாய் அவரைஅங்கிருந்து வழியனுப்புவதற்காக ரோகலிமிலிருந்து அரசரோடு யோர்தானைக் கடந்து வந்தார்.✠ 32பர்சில்லாய் வயது முதிர்ந்தவர்; எண்பது வயதினர்; பெரும் பணக்காரர். அரசர் மகனயிமில் தங்கியிருந்தபோது அவரின் தேவைகளைக் கவனித்துக் கொண்டவர். 33அரசர் பர்சில்லாயிடம் “இப்பொழுது ஆற்றைக் கடந்து என்னோடு எருசலேமுக்கு வந்து தங்கியிரும். நான் உம் தேவைகளைக் கவனித்துக் கொள்வேன்” என்றான்.

34அப்பொழுது பர்சில்லாய் மறுமொழியாகக் கூறியது: “அரசரோடு வந்திருப்பதற்கேற்றவாறு நான் இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருக்கப்போகிறேன்? 35இப்பொழுதே எனக்கு வயது எண்பது ஆகிவிட்டது. நல்லதையும் கெட்டதையும் என்னால் வேறுபடுத்திச் சொல்ல முடியுமா? உம் அடியானால் உண்பதையும் குடிப்பதையும் அனுபவிக்க முடியுமா? பாடகர் பாடகியரின் குரலைக் கேட்டு மகிழ என்னால் இயலுமா? என் தலைவராம் அரசருக்கு உம் அடியான் இன்னும் ஏன் சுமையாக இருக்க வேண்டும்? 36உம் பணியாளன் அரசரோடு சற்றுத் தொலைவே யோர்தான் மீது கடந்து வருவேன். அதற்காக அரசர் எனக்கு இத்தகைய கைம்மாறு செய்வானேன்? 37உம் பணியாளனைப் போகவிடும். நான் என் நகரில் என் தாய் தந்தையரின் கல்லறைக்கு அருகே இறப்பேன். இதோ! உம் பணியாளன் கிம்காம்! என் தலைவராம் அரசரோடு அவன் செல்லட்டும். உம் விருப்பம்போல் அவனுக்குச் செய்யும்.” 38அப்பொழுது அரசர், “கிம்காம் என்னோடு கடந்து வரட்டும். உம் விருப்பம்போல் நான் அவனுக்குச் செய்வேன். நீர் என்னிடமிருந்து எதை விரும்பினாலும் நான் உமக்குச் செய்வேன்” என்று கூறினார். 39பிறகு, மக்கள் அனைவரும் யோர்தானைக் கடந்தனர். அரசரும் யோர்தானைக் கடந்தார். பர்சில்லாயை அரசர் முத்தமிட்டு வாழ்த்தினார். அவரும் தம் இடத்திற்குத் திரும்பினார்.


அரசரைப் பற்றி யூதாவும் இஸ்ரயேலும் வாதிடல்


40அரசர் கில்காலுக்குக் கடந்து சென்றார். கிம்காமும் அவரோடு கடந்து சென்றான். யூதாவினர் அனைவரும் இஸ்ரயேலில் பாதிப்பேரும் அரசரைக் கொண்டுவந்து விட்டனர். 41உடனே இஸ்ரயேலர் அனைவரும் அரசரிடம் வந்து, “எங்கள் சகோதர்களான யூதாவினர் அரசரையும் அவர் வீட்டாரையும் அவர் ஆள்கள் அனைவரையும் திருட்டுத்தனமாய்க் கொண்டுவந்து யோர்தானைக் கடக்கச் செய்தது ஏன்?” என்று கேட்டார்கள். 42யூதாவினர் அனைவரும் இஸ்ரயேலருக்கு மறுமொழியாக, “அரசர் எங்களுக்கு நெருங்கியவர். இக்காரியத்தைப் பற்றி நீங்கள் சினமுறுவது ஏன்? நாங்கள் அரசரிடம் ஏதாவது உண்டோமா? அவரிடமிருந்து நாங்கள் ஏதாவது பெற்றுக்கொண்டோமா” என்றார்கள்.

43இஸ்ரயேலர் யூதாவினரை நோக்கி, “எங்களுக்கு அரசரிடம் பத்துப் பங்குகள் உண்டு. மேலும், தாவீதிடம் உங்களைவிட எங்களுக்கு அதிக உரிமை உண்டு. பின் ஏன் எங்களை அற்பமாக நடத்துகின்றீர்கள்? எங்கள் அரசரைத் திருப்பியழைத்து வர வேண்டுமென்று முதலில் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா!” என்று பதில் சொன்னார்கள். இஸ்ரயேலின் பேச்சைவிட யூதாவினரின் பேச்சு கடுமையாக இருந்தது.


19:16 2 சாமு 16:5-13. 19:24 2 சாமு 9:1-13; 16:1-4. 19:31 2 சாமு 17:27-29.


அதிகாரம் 20

சேபாவின் கலகம்


1அப்போது, பென்யமின் குலத்தைச் சார்ந்த, பிக்ரியின் மகன் சேபா என்ற இழிமகன் அங்கு இருந்தான். அவன் எக்காளம் ஊதி, “எங்களுக்குத் தாவீதிடம் பங்குஇல்லை; ஈசாயின் மகனிடம் மரபுரிமையும் இல்லை; இஸ்ரயேலரே! ஒவ்வொருவரும் உங்கள் கூடாரங்களுக்குச் செல்லுங்கள்” என்றான்.✠ 2இஸ்ரயேலர் அனைவரும் தாவீதைப் பின்பற்றுவதை விட்டுவிட்டுப் பிக்ரியின் மகன் சேபாவின் பின் சென்றனர்.ஆனால், யூதாவினரோ யோர்தான் முதல் எருசலேம் வரை, தங்கள் அரசரைச் சார்ந்திருந்தனர். 3தாவீது எருசலேமிலுள்ள தம் வீட்டுக்கு வந்தார். தம் வீட்டைப் பாதுகாக்க தாம் விட்டுவந்த பத்து வைப்பாட்டியரையும் அழைத்து, பாதுகாப்புள்ள ஒரு வீட்டில் அவர்களை வைத்துத் தேவையானவற்றைக் கொடுத்து வந்தார். ஆனால், அவர்களோடு உறவு கொள்ளவில்லை. அவர்கள் இறக்கும் வரை காவலில் வைக்கப்பட்டுக் கைம்பெண்களைப்போல் வாழ்ந்தனர்.✠

4பிறகு, அரசர் அமாசாவை நோக்கி, “மூன்று நாள்களுக்குள் யூதாவினரை என்னிடம் வரச்சொல்; அப்போது நீயும் இங்கே இரு” என்றார். 5அமாசா யூதா மக்களை அழைக்கச் சென்றான். ஆனால், தனக்குக் குறித்த காலத்தை மீறிக் காலம் தாழ்த்தினான். 6தாவீது அபிசாயை நோக்கி, “பிக்ரியின் மகன் சேபா அப்சலோமைவிட மிகுதியாக நமக்குத் தீங்கிழைப்பான். உன் தலைவரின் பணியாளரை அழைத்துக் கொண்டு, அவனைத் துரத்திச் செல்லுங்கள். இல்லையேல் அரண்சூழ் நகர்களைக் கண்டு நம் கண்ணிலிருந்து தப்பிவிடுவான்” என்று சொன்னார். 7யோவாபின் ஆள்களும், கெரேத்தியர், பெலேத்தியரும், வலிமைமிகு வீரர்கள் அனைவரும் அபிசாயின் தலைமையில் சென்றனர். அவர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டுப் பிக்ரியின் மகன் சேபாவைப் பின்தொடர்ந்தனர். 8அவர்கள் கிபயோனிலுள்ள பெருங்கல் அருகே வந்தனர். அமாசா அவர்கள் முன்பாக வந்தான். யோவாபு தாம் உடுத்தியிருந்த போருடைமீது ஒரு கச்சை கட்டியிருந்தார். அதிலே உறையோடு கூடிய ஒரு குறுவாள் செருகப்பட்டிருந்தது. அவர் முன்னால் சென்றபோது அது கீழே வீழ்ந்தது. 9யோவாபு அமாசாவை நோக்கி, “சகோதரனே, நலமா?’ என்று கேட்டு அவனை முத்தமிடுவதற்காக வலக்கையால் அவனது தாடியைப் பற்றினார். 10யோவாபின் இடக் கையிலிருந்த குறுவாளைப் பற்றி அமாசா எச்சரிக்கையாக இல்லை. யோவாபு அதை அவன் வயிற்றில் குத்த, அவனது குடல் தரையில் சரிந்தது. மீண்டும் குத்துவதற்கு அவசியமில்லாமல் அமாசா இறந்தான். அதன்பின் யோவாபும் அவருடைய சகோதரன் அபிசாயும் பிக்ரியின் மகன் சேபாவைப் பின் தொடர்ந்தனர்.

11யோவாபின் ஆள்களுள் ஒருவன் அவர் அருகே நின்று கொண்டு, “யோவாபை விரும்புகிறவர்களும், தாவீதின் பக்கமுள்ளவர்களும், யோவாபின் பின்செல்லட்டும்” என்றான். 12சாலை நடுவே அமாசா தன் இரத்தத்தில் மூழ்கிக் கிடக்கவே, வீரர்கள் அனைவரும் அங்கேயே நின்றுவிட்டதை அவன் கண்டான். அமாசாவின் அருகே வந்தவர்கள் அனைவரும் நின்றுவிட்டதைக் கண்டு, அவனைச் சாலையிலிருந்து வயலுக்கு இழுத்து ஒரு துணியால் மூடினான். 13அமாசா சாலையிலிருந்து விலக்கப்பட்டதும் அனைவரும் யோவாபின் பின்சென்று, பிக்ரியின் மகன் சேபாவைப் பின்தொடர்ந்தனர்.

14சேபா அனைத்து இஸ்ரயேல் குலங்களின் நிலப்பகுதி வழியாக பெத்மாக்காவின் ஆபேல் வரை சென்றான். பெரியோர் அனைவரும் ஒன்று திரண்டு அவன் பின்சென்றனர். 15யோவாபும் அவர் படையினரும் பெத்மாக்காவின் ஆபேலில் முற்றுகையிட்டு சேபாவை வளைத்தனர். நகருக்கு எதிராக முற்றுகைக் கோட்டை எழுப்பினர். அது மதிலுக்கு அருகில் இருந்தது. அதனின்று யோவாபோடு இருந்த வீரர்கள் அனைவரும் அம்மதிலைத் தகர்த்துக் கொண்டிருந்தனர். 16அப்போது அறிவுக்கூர்மையுள்ள ஒரு பெண் நகரிலிருந்து குரல்கொடுத்து, “கேளுங்கள்; கேளுங்கள். தயைகூர்ந்து யோவாபை இங்கே வரச் சொல்லுங்கள். நான் அவரிடம் பேச வேண்டும்”என்றாள். 17அவரும் அவளருகே வந்தார். அப்பெண் அவரை நோக்கி, “யோவாபு நீர்தாமா?” என்றாள். “நானேதான்” என்றார் யோவாபு. “உம் அடியவளின் வார்த்தைகளைக் கேளும்” என்றாள் அப்பெண். “கேட்கிறேன்” என்றார் யோவாபு. 18அவள் தொடர்ந்து கூறியது: “முற்காலத்தில் அடிக்கடி சொல்வார்கள். ‘ஆபேலுக்குச் சென்று ஆலோசனை கேட்பார்களாக!’. அதன் படியே பிரச்சனைகள் தீர்க்கப்படும். 19இஸ்ரயேலில் நாங்கள் அமைதியும் நாணயமும் உடையவர்கள். இஸ்ரயேலின் தாயென விளங்கும் இந்நகரை நீர் அழிக்கத் தேடுவதேன்? ஆண்டவரின் உரிமைச் சொத்தை நீர் விழுங்குவானேன்?” என்று அப்பெண் கேட்டாள். 20அதற்கு யோவாபு, “இல்லை, விழுங்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அறவே இல்லை. 21காரியம் அதுவல்ல. எப்ராயிம் மலைப்பகுதியைச் சார்ந்த, பிக்ரியின் மகன் சேபா என்பவன் அரசர் தாவீதுக்கு எதிராகக் கையோங்கியுள்ளான். அவனை மட்டும் தாருங்கள். நான் நகரிலிருந்து விலகிச் செல்வேன்” என்று பதில் கூறினார். அப்பொழுது அப்பெண், “இதோ! அவன் தலை மதிலுக்கு அப்பால் உம்மிடம் தூக்கி எறியப்படும்” என்றாள். 22மக்கள் அனைவரையும் அவள் அணுகி அறிவார்ந்த ஆலோசனை கூறினாள். அவர்களும் பிக்ரியின் மகன் சேபாவின் தலையை வெட்டி யோவாபிடம் எறிந்தார்கள். யோவாபு எக்காளம் ஊத. அவர்கள் நகரை விட்டு நீங்கித் தம் வீடுகளுக்குச் சென்றனர். யோவாபு எருசலேமுக்குத் திரும்பி அரசரிடம் சென்றார்.

தாவீதின் அலுவலர்


23யோவாபு அனைத்து இஸ்ரயேலின் படைத்தலைவராகவும், பெனாயாவின் மகன் யோயாதா கெரேத்தியர், பெலேத்தியரின் தலைவனாகவும் இருந்தனர். 24அதோராம் கொத்தடிமைகளுக்குப் பொறுப்பாளனாகவும், அகிலுதின் மகன் யோசபாத்து பதிலாளனாகவும் இருக்க, 25சேவா செயலராகவும், சாதோக்கும் அபியத்தாரும் குருக்களாகவும் பணியாற்றினர். 26யாயிரைச் சார்ந்த ஈராவும் தாவீதின் குருக்களில் ஒருவனாக இருந்தான்.


20:1 1 அர 12:16; 2 குறி 10:16. 20:3 2 சாமு 16:22.


அதிகாரம் 21

சவுலின் வழிமரபினர் கொலை செய்யப்படல்


1தாவீதின் காலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பஞ்சம் ஏற்பட்டது. தாவீது ஆண்டவரின் திருவுளத்தை நாடினார். “கிபயோனியரைச் சவுல் கொலை செய்ததன் காரணத்திற்காக அவன்மீதும் அவன் வீட்டார்மீதும் இரத்தப்பழி உள்ளது” என்றார் ஆண்டவர்.

2அரசர் கிபயோனியரை அழைத்துப் பேசினார். கிபயோனியர் இஸ்ரயேலரைச் சார்ந்தவர் அல்ல; அவர்கள் எமோரியருள் எஞ்சியவர். இஸ்ரயேலர் அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தும், இஸ்ரயேல்மீதும் யூதாவின்மீதும் தாம் கொண்டிருந்த பேரார்வத்தின் காரணமாகச் சவுல் அவர்களை அழிக்க முயன்றார்.

3தாவீது கிபயோனியரிடம், “உங்களுக்காக நான் செய்ய வேண்டியது என்ன? நீங்கள் ஆண்டவரின் உரிமைச்சொத்துக்கு ஆசிவழங்குமாறு நான் என்ன கழுவாய் செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

4கிபயோனியர் தாவீதிடம், “சவுலிடமிருந்தோ அவன் வீட்டாரிடமிருந்தோ நாங்கள் பொன்னையோ வெள்ளியையோ எதிர்பாக்கவில்லை; இஸ்ரயேலருள் ஒருவனைக் கொல்ல வேண்டும் என்றும் நாங்கள் விரும்பவில்லை” என்று கூறினார். தாவீது “நீங்கள் வீரும்புவதை நான் செய்வேன்” என்றார்.

5கிபயோனியர் அரசரிடம், “நாங்கள் இஸ்ரயேல் எல்லையில் எங்குமே இல்லாமல் ஒழிந்துபோகச் சதிசெய்தவன், எங்களை அழித்தவன் ஒருவன் உண்டு. 6அவன் புதல்வருள் ஏழுபேர் எங்களிடம் ஒப்புவிக்கப்படட்டும். ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுலின் நகரான கிபியோனில் அவர்களை ஆண்டவருக்காகக் கழுவிலேற்றுவோம்” என்று கூறினர். அரசரும் “அவர்களை ஒப்புவிக்கிறேன்” என்றார்.

7ஆனால், தாவீதும் சவுலின் மகன் யோனத்தானும் ஆண்டவர் முன்னிலையில் செய்துகொண்ட வாக்குறுதியின் பொருட்டுச் சவுலின் மகன் யோனத்தானுக்குப் பிறந்த மெபிபொசேத்தை அரசர் தப்பவிட்டார்.✠ 8அய்யாவின் மகள் இரிசபா சவுலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்களான அர்மோனி, மெபிபொசேத்து ஆகிய இருவரையும் சவுலின் மகள் மேராபு⁕ மெகொலாத்தியன் பர்சில்லாயின் மகன் அத்ரியேலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்கள் ஐவரையும் பிடித்து,✠ 9கிபயோனியர் கையில் அரசர் ஒப்படைத்தார். இவர்களை ஆண்டவர் முன்னிலையில் மலையில் கழுவேற்றினர். அந்த ஏழுபேரும் ஒன்றாக மடிந்தார்கள். அவர்கள் வாற்கோதுமை அறுவடை தொடங்கிய முதல் நாள்ளிலே கொலையுண்டார்கள்.

10அப்பொழுது அய்யாவின் மகள் இரிசபா சாக்குத் துணியை எடுத்துக்கொண்டுபோய் அதைப் பாறைமீது தனக்காக விரித்துக் கொண்டு, அறுவடை தொடங்கிய நாள்முதல் வானத்தினின்று அவர்கள் மீது மழை பொழியுமட்டும் இருந்தாள்; பகலில் வானத்துப் பறவைகளையோ, இரவில் காட்டு விலங்குகளையோ அவர்களைத் தொட அனுமதிக்கவில்லை.

11சவுலின் வைப்பாட்டியான அய்யாவின் மகள் இரிசபா செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. 12எனவே, தாவீது சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தானின் எலும்புகளையும் யாபேசு கிலயாதின் மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு வந்தார். பெலிஸ்தியர் அவர்களைக் கில்போவாவில் வெட்டி வீழ்த்தி, பெத்சான் நகர முற்றத்தில் கழுவிலேற்றினர். அந்த முற்றத்திலிருந்துதான் யாபேசு கிலயாதின் ஆள்கள் எலும்புகளைத் திருடிச் சென்றிருந்தனர்.✠ 13சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தானின் எலும்புகளையும் அங்கிருந்து கொண்டுவந்து கழுவிலேற்றப்பட்ட இவர்களின் எலும்புகளையும் ஒன்று சேர்த்தனர். 14சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தானின் எலும்புகளையும் பென்யமின் நிலப்பகுதியான செலாவில் அவர்தம் தந்தை கீசின் கல்லறையில் அடக்கம் செய்தனர். அரசர் கட்டளையிட்டவாறே அனைத்தையும் செய்தனர். அதன்பின் நாட்டுக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கடவுள் கேட்டார்.


பெலிஸ்தியரோடு போர்

(1 குறி 20:4-8)


15பெலிஸ்தியர் இஸ்ரயேலரோடு மீண்டும் போரிட வந்தனர். தாவீதும் அவரோடு அவருடைய பணியாளரும் இறங்கிச் சென்று பெலிஸ்தியரோடு போரிட்டனர். தாவீது களைப்புற்றிருந்தார். 16அப்போது மூன்றரை கிலோ கிராம் எடையுள்ள ஈட்டியைக் கையில் ஏந்தி, புதிய வாளை இடையில் கட்டியிருந்த, இஸ்பிபெனோபு என்னும் அரக்கர் இனத்தவன் ஒருவன், தாவீதைத் தாக்கவிருந்தான். 17செரூயாவின் மகன் அபிசாய் அவருடைய உதவிக்கு வந்து அப்பெலிஸ்தியனை வெட்டிக் கொன்றான். எனவே, தாவீதின் ஆள்கள் “இஸ்ரயேலின் விளக்கு அணைந்து போகாதவண்ணம் நீர் இனி எங்களோடு போருக்கு வரக்கூடாது” என்று அவரிடம் ஆணையிட்டுச் சொன்னார்கள்.✠

18இது நடந்தபின் மீண்டும் பெலிஸ்தியரோடு கோபி என்னுமிடத்தில் போர் மூண்டது. அரக்கர் இனத்தவன் ஒருவனான சாபை ஊசாத்தியனான சிபெக்காய் கொன்றான்.

19மீண்டும் ஒருமுறை கோபில் பெலிஸ்தியரோடு போர் நடந்தது. பெத்லகேமைச் சார்ந்த யாகரே ஓர்கிமின் மகன் எல்கானான் கித்தியனான கோலியாத்தைக் கொன்றான். அவனது ஈட்டியின் கோல் நெசவாளரின் படைமரம் போன்றிருந்தது.

20மீண்டும் காத்தில் போர்மூண்டது. கைகளிலும் கால்களிலும் ஆறு விரல்களுடன், இருபத்து நான்கு விரல்களைக்கொண்ட நெட்டையன் ஒருவன் இருந்தான். அவனும் அரக்கர் இனத்தவன். 21அவன் இஸ்ரயேலை பழித்தான். தாவீதின் சகோதரர் சிமயியின் மகன் யோனத்தான் அவனைக் கொன்றான்.

22தாவீதின் கையாலும் அவரது பணியாளரின் கையாலும் வீழ்த்தப்பட்ட இந்த நால்வரும் காத்து நாட்டில் அரக்கர் வழிமரபினரே.


21:7 1 சாமு 20:15-17; 2 சாமு 9:1-7. 21:8 1 சாமு 18:19. 21:12 1 சாமு 31:18-31. 21:17 1 அர 11:36; திபா 132:17.


21:8 * ‘மீக்கால்’ என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 22

தாவீதின் வெற்றிப் பாடல்

(திபா 18)


1ஆண்டவர் தாவீதை அவருடைய எதிரிகள் அனைவரின் கையினின்றும் சவுலின் கையினின்றும் விடுவித்தபோது அவர் ஆண்டவருக்குப் பண்ணிசைத்துப் பாடியது:

2“ஆண்டவர் என் காற்பாறை;

என் கோட்டை; என் மீட்பர்;

3என் கடவுள்; நான் புகலிடம்

தேடும் மலை அவரே; என் கேடயம்;

எனக்கு மீட்பளிக்கும் வல்லமை;

என் அரண்; என் தஞ்சம்;

என் மீட்பர். கொடுமையினின்று

என்னை விடுவிப்பவரும் அவரே.

4போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி

நான் மன்றாடினேன்.

என் எதிரிகளிடமிருந்து நான்

மீட்கப்பட்டேன்.

5ஏனெனில், சாவின் அலைகள்

என்னைச் சூழ்ந்து கொண்டன;

அழிவின் சுழல்கள் என்னை

மூழ்கடித்தன.

6பாதாளக் கயிறுகள் எனனைச்

சுற்றி இறுக்கின;

சாவின் கண்ணிகள் என்னைச்

சிக்க வைத்தன.

7என் நெருக்கடி வேளையில் நான்

ஆண்டவரிடம் மன்றாடினேன்;

என் கடவுளை நோக்கிக் கதறினேன்;

தமது கோவிலினின்று அவர்

என்குரலைக் கேட்டார்; என் கதறல்

அவர் செவிகளுக்கு எட்டியது.

8அப்பொழுது, மண்ணுலகம்

அசைந்து அதிர்ந்தது;

வானத்தின் கீழ்த்தளங்கள் நடுங்கிக்

கிடுகிடுத்தன;

அவர்தம் கடுஞ்சினத்தால்

அவை நடுநடுங்கின.

9அவரது நாசியினின்று புகை

கிளம்பிற்று;

அவரது வாயினின்று எரித்தழிக்கும்

தீ மூண்டது;

அவரிடமிருந்து நெருப்புக் கனல்

வெளிப்பட்டது.

10வானைத் தாழ்த்தி அவர்

கீழிறங்கினார்;

கார் முகில் அவரது காலடியில்

இருந்தது.

11கெருபுமீது அவர் ஏறிப்

பறந்து வந்தார்;

காற்றை இறக்கைகளாகக்

கொண்டு விரைந்து வந்தார்.

12காரிருளை அவர் மூடுதிரை

ஆக்கிக் கொண்டார்;

நீர் கொண்ட முகிலைக்

கூடாரமாக்கிக் கொண்டார்.

13அவர் தம் திருமுன்னின் பேரொளியி

னின்று நெருப்புக் கனல் தெறித்தது.

14ஆண்டவர் வானங்களில் இடியென

முழங்கினார்; உன்னதர் தம் குரலை

அதிரச் செய்தார்.

15தம் அம்புகளை எய்து அவர்

அவர்களைச் சிதறடித்தார்;

மின்னல்களால் அவர்களைக்

கலங்கடித்தார்.

16ஆண்டவரின் கடிந்துரையாலும்

அவரது மூச்சுக் காற்றின்

வலிமையாலும் கடலின் அடிப்பரப்பு

தென்பட்டது; நிலவுலகின்

அடித்தளம் காணப்பட்டது.

17உயரத்தினின்று அவர் என்னை

எட்டிப் பிடித்துக் கொண்டார்;

வெள்ளப் பெருக்கினின்று

என்னைக் காப்பாற்றினார்.

18என் வலிமைமிகு எதிரியிடமிருந்து

அவர் என்னை விடுவித்தார்.

என்னைவிட வலிமைமிகு

பகைவரிடமிருந்து என்னைப்

பாதுகாத்தார்.

19எனக்கு இடுக்கண் வந்த நாளில்

அவர்கள் என்னை எதிர்த்தார்கள்;

ஆண்டவரோ எனக்கு ஊன்று

கோலாய் இருந்தார்.

20நெருக்கடியற்ற இடத்திற்கு அவர்

என்னைக் கொணர்ந்தார்;

நான் அவர் மனத்திற்கு

உகந்தவனாய் இருந்ததால்

அவர் என்னை விடுவித்தார்.

21ஆண்டவர் எனது நேர்மைக்கு

உரிய பயனை எனக்களித்தார்;

என் மாசற்ற செயலுக்கு ஏற்பக்

கைம்மாறு செய்தார்.

22ஏனெனில், நான் ஆண்டவர்

காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்;

பொல்லாங்குசெய்து என் கடவுளை

விட்டு அகலவில்லை.

23அவர்தம் நீதிநெறிகளை எல்லாம்

என் கண்முன் வைத்திருந்தேன்;

அவர்தம் விதிமுறைகளை

நான் ஒதுக்கித் தள்ளவில்லை.

24அவர் முன்னிலையில் நான்

மாசற்றவனாய் இருந்தேன்;

தீங்கு செய்யா வண்ணம் என்னைக்

காத்துக் கொண்டேன்.

25ஆண்டவர் என் நேர்மைக்கு உரிய

பயனை அளித்தார்;

அவர்தம் பார்வையில் நான்

குற்றமற்றவனாய் இருந்தேன்.

26மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும்

மாசற்றோர்க்கு மாசற்றவராகவும்

நீர் விளங்குகின்றீர்!

27தூயோர்க்குத் தூயவராகவும்

வஞ்சகர்க்கு விவேகியாகவும்

உம்மை நீர் காட்டுகின்றீர்.

28எளியோர்க்கு நீர் மீட்பளிக்கின்றீர்;

செருக்குற்றோரை ஏளனத்துடன்

நீர் பார்க்கின்றீர்.

29ஆண்டவரே! நீரே என்

ஒளி விளக்கு!

ஆண்டவர் என் இருளை

ஒளிமயமாக்குகின்றார்.

30உம் துணையுடன் நான்

எப்படையையும் நசுக்குவேன்;

என் கடவுளின் துணையால்

எம்மதிலையும் தாண்டுவேன்.

31இந்த இறைவனின் வழி

நிறைவானது; ஆண்டவரின் வாக்கு

நம்பத்தக்கது; அவரிடம் அடைக்கலம்

புகும் அனைவர்க்கும் அவரே

கேடயமாய் இருக்கின்றார்.

32ஏனெனில், ஆண்டவரைத் தவிர

வேறு இறைவன் யார்?

நம் கடவுளைத் தவிர நமக்கு

வேறு கற்பாறை ஏது?

33இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு கோட்டையாய் உள்ளார்;

என் வழியை பாதுகாப்பானதாய்ச்

செய்தவரும் அவரே.

34அவர் என் கால்களை மான்களின்

கால்களைப்போல் ஆக்குகின்றார்;

உயர்ந்த இடத்தில் என்னை

நிலை நிறுத்துகின்றார்.✠

35போருக்கு என்னை அவர்

பழக்குகின்றார்; எனவே, வெண்கல

வில்லையும் என் புயங்கள் வளைக்கும்!

36பாதுகாக்கும் உம் கேடயத்தை

நீர் எனக்கு வழங்கினீர்;

உமது துணையால் என்னைப்

பெருமைப்படுத்தினீர்.

37நான் நடக்கும் வழியை

அகலமாக்கினீர்;

என் கால்கள் தடுமாறவில்லை.

38என் எதிரிகளைத் துரத்திச் சென்று

அழித்தேன்; அவர்களை

அழித்தொழிக்கும் வரை

நான் திரும்பவில்லை.

39நான் அவர்களைக் கொன்று

அழித்தேன்; அவர்கள்

எழுந்திருக்கவில்லை; அவர்கள் என்

காலடியில் வீழ்ந்து கிடந்தார்கள்.

40போரிடும் ஆற்றலை எனக்கு

அரைக் கச்சையாக அளித்தீர்;

என்னை எதிர்த்தவர்களை எனக்கு

அடிப்பணியச் செய்தீர்.

41என் எதிரிகளைப் புறமுதுகிடச்

செய்தீர்: என்னை வெறுத்தோரை

நான் அழித்துவிட்டேன்.

42உதவி வேண்டி அவர்கள்

கதறினார்கள்;

ஆனால், அவர்களுக்கு உதவுவார்

யாருமில்லை;

அவர்கள் ஆண்டவரை நோக்கி

மன்றாடினார்கள்;

ஆனால், அவர்களுக்கு அவர்

பதிலளிக்கவில்லை.

43எனவே, நான் அவர்களை மண்ணின்

புழுதியென நசுக்கினேன்;

அவர்களைத் தெருச் சேறென

மிதித்துத் தெறிக்கச் செய்தேன்.

44என் மக்களின் கலகத்தினின்று

என்னை விடுவித்தீர்;

பிற இனங்களுக்கு என்னைத்

தலைவனாக்கினீர்;

முன்பின் அறியாத மக்களும் எனக்குப்

பணிவிடை செய்தனர்.

45வேற்று நாட்டவர் என்னிடம்

கூனிக்குறுகி வந்தனர்; அவர்கள்

என்னைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன்

எனக்குக் கீழ்ப்படிந்தனர்.

46வேற்று நாட்டவர் உள்ளம்

தளர்ந்தனர்; தம் அரண்களிலிருந்து

நடுங்கிக் கொண்டு⁕ வெளியே வந்தனர்.

47ஆண்டவர் உண்மையாகவே

வாழ்கின்றார்; என் கற்பாறையாம்

அவர் போற்றப் பெறுவாராக!

என் மீட்பின் கற்பாறையாம்

கடவுள் மாட்சியுறுவாராக!

48எனக்காகப் பழிவாங்கும் இறைவன்

அவர்; மக்களினங்களை எனக்குக்

கீழ்ப்படுத்தியவரும் அவரே!

49என் பகைவரிடமிருந்து என்னை

அழைத்துவந்தவர் அவரே!

என் எதிரிகளுக்கு மேலாக என்னை

உயர்த்தினீர்! என்னைக்

கொடுமைப்படுத்தியவரிடமிருந்து

நீர் என்னைக் காத்தீர்!

50ஆகவே, ஆண்டவரே!

பிற இனத்தாரிடையே உம்மைப்

போற்றுவேன்; உம் பெயருக்குப்

புகழ் மாலை சாற்றுவேன்.✠

51தாம் ஏற்படுத்திய அரசருக்கு

மாபெரும் வெற்றியை அவளிப்பவர்

அவர்! தாம் திருப்பொழிவுசெய்த

தாவீதுக்கும் அவர்தம்

மரபினருக்கும் என்றென்றும்

பேரன்பு காட்டுபவரும் அவரே!”


22:34 அப 3:19. 22:50 உரோ 15:9.


22:46 ‘போர்க்கோலம் பூண்டு’ என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 23

தாவீதின் இறுதி மொழிகள்


1மேன்மை மிக்கவரும் யாக்கோபின் கடவுளிடம் திருப்பொழிவு பெற்றவரும் இஸ்ரயேலின் இனிமைமிகு பாடகரும் ஈசாயின் மைந்தருமான தாவீதின் இறுதி மொழிகளாவன:

2ஆண்டவரின் ஆவி என் மூலம்

பேசினார்; அவரது வார்த்தை

என் நாவில் ஒலித்தது.

3இஸ்ரயேலின் கடவுள் என்னோடு

பேசினார்; ‘இஸ்ரயேலின் பாறை’

எனக்குக் கூறினார். ‘மானிடரை

நீதியோடு ஆள்பவன்,

இறை அச்சத்துடன் ஆள்பவன்.

4விடியற்கால ஒளியெனத்

திகழ்கின்றான்;

முகிலற்ற காலை கதிரவனென

ஒளிர்கின்றான்;

மண்ணின்று புல் முளைக்கச்

செய்யும் மழையென

விளங்குகின்றான்’.

5என் குடும்பம் இறைவனோடு

இணைந்துள்ளது அன்றோ?

அனைத்திலும் திட்டமிடப்பட்டு,

உறுதியாக்கப்பட்டு, என்றும்

நிலைக்கும் உடன்படிக்கையை அவர்

என்னோடு செய்து கொண்டார்.

என் அனைத்து மீட்பும் விருப்பும்’

அவரால் உயர்வு பெறாதோ?

6-7இழிமக்கள் அனைவரும் இரும்புத்

தடியும் ஈட்டிக்கோலும் கொண்டு,

நெருப்பால் முற்றிலும்

சுட்டெரிக்கப்படுவனவும்

கையால் தொடத்தகாதவனவுமான

காட்டு முட்களைப் போன்றவர்.


தாவீதின் புகழ்மிகு வீரர்கள்

(1 குறி 11:10-41)


8தாவீதோடிருந்த வீரர்களின் பெயர்கள்: தக்கமோனியன் யோசப்பாசெபத்து, மூவருள் முதல்வனாக இருந்த அவன், ‘எஸ்னீயன் அதினோ’ என்று அழைக்கப்பட்டான். ஏனெனில், அவன் ஒரே சமயத்தில் எண்ணூறு பேரைத் தாக்கிக் கொன்றான்.

9அவனுக்கு அடுத்தவன் அகோகிக்குப் பிறந்த தோதோவின் மகன் எலியாசர். போரிடுமாறு ஒன்று திரண்டு வந்த பெலிஸ்தியரை எதிர்த்துச் சென்றபோது தாவீதுடன் இருந்த வலிமைமிகு வீரர் மூவருள் ஒருவன் அவன். முதலில் இஸ்ரயேலர் பின்வாங்கினர். 10அப்பொழுது அவன் தனித்து நின்று, கை சோர்வுற்று வாளோடு ஒட்டிக்கொள்ளும் அளவுக்குப் பெலிஸ்தியரைத் தாக்கினான். ஆண்டவர் அன்று பெரும் வெற்றியைத் தந்தார். அவன் வீரர்கள் அவனை கொள்ளையடிப்பதற்காக அவனிடம் திரும்பினர்.

11அடுத்தவன் ஆராரியன் ஆகேயின் மகன் சம்பா. பயறு நிறைந்த வயல் ஒன்றில் பெலிஸ்தியர் கூட்டமாகத் திரள, மக்கள் புறமுதுகு காட்டி அவர்கள்முன் ஓடினார்கள். 12அப்போது அவன் வயல் நடுவே நின்று அதைப் பாதுகாத்தான்; பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தினான். ஆண்டவர் மாபெரும் வெற்றியைத் தந்தார்.

13முப்பது படைத்தலைவருள் மூவர் அறுவடைக் காலத்தில் தாவீது தங்கியிருந்த அதுல்லாம் குகைக்கு வந்தனர். அரக்கர்களின் கணவாயில் பெலிஸ்தியர் கூட்டம் பாளையமிறங்கி இருந்தது. 14அப்போது தாவீது பாதுகாப்பான கோட்டைக்குள் இருந்தார். பெலிஸ்தியர் பெத்லகேமில் இருந்தனர். 15தாவீது ஏக்கத்துடன், “பெத்லகேம் வாயிலருகே உள்ள கிணற்றிலிருந்து எனக்குக் குடிக்கத் தருபவன் யார்?” என்று கேட்டார். 16அம்மூன்று வலிமைமிகு வீரரும் பெலிஸ்தியரின் அணிகளுக்குள் புகுந்து சென்று பெத்லகேம் வாயிலருகே உள்ள கிணற்றிலிருந்து நீர் மொண்டு, அதைத் தாவீதிடம் எடுத்து வந்தனர். தாவீதோ அதைக் குடிக்க விரும்பாமல் ஆண்டவருக்காக வெளியே ஊற்றினார். 17“தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்றவர்களின் இரத்தமன்றோ இது! ஆண்டவரே, இதை நான் எவ்வாறு குடிக்க முடியும்?” என்று சொல்லி, அவர் அதைக் குடிக்க விரும்பவில்லை. இம் மூன்று வீரரும் ஆற்றிய செயல்கள் இவையே!

18யோவாபின் சகோதரன், செரூயாவின் மகன் அபிசாய் முப்பதின்மருக்குத் தலைவனாக இருந்தான். அவன் முந்நூறு பேருக்கு எதிராகத் தன் ஈட்டியைச் சுழற்றி அவர்களைக் கொன்றான். மூவருக்கு⁕ இணையாக அவன் பெயர் பெற்றவன். 19அம்முப்பதின்மரில் அவனல்லவோ அதிகப் புகழ் பெற்றிருந்தான்? அவர்களின் தலைவனும் அவனே, ஆயினும், முன்னைய மூவருக்கும் அவன் சமமாகஇல்லை.

20கப்சவேலைச் சார்ந்த யோயாதாவின் மகன் பெனாயா பல வீரச் செயல்கள் புரிந்தவன். சிங்கம் போன்ற இரு மோவாபிய வீரரைக் கொன்றவன். பனி பெய்து கொண்டிருந்த ஒருநாள் குகைக்குள் அவன் சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான். 21உருவில் பெரிய ஒரு எகிப்தியனை அவன் கொன்று போட்டான். ஈட்டியைக் கையில் கொண்டிருந்த அந்த எகிப்தியனிடம் இவன் ஒரு கோலோடு சென்று, ஈட்டியை அவன் கையிலிருந்து பிடுங்கினான். பின் அவன் ஈட்டியைக் கொண்டே அவனைக் கொன்றான். 22யோயாதாவின் மகன் பெனாயா இவற்றைச் செய்து, முதல் மூவருக்கு இணையாகப் பெயர் பெற்றுத் திகழ்ந்தான். 23முப்பது பேரில் அவனும் புகழ் பெற்றிருந்தான். ஆனால், முதல் மூவருக்கு அவன் சமமாக இல்லை. ஆயினும், அவனைத் தாவீது தன் மெய்க்காப்பாளனாக ஏற்படுத்தினார்.

24யோவாபின் சகோதரன் அசாவேல் முப்பது பேரில் ஒருவன். அவர்கள் யாரெனில், பெத்லகேமைச் சார்ந்த தோதோவின் மகன் எல்கானான். 25அரோதியன் சம்மா, அரோதியன் எலிக்கா, 26பல்தியன் ஏலேசு, தெக்கோவைச்சார்ந்த இக்கேசின் மகன் ஈரா, 27அனத்தோத்தியன் அபியேசர், ஊசாத்தியன் மெபுன்னாய், 28அகோகியன் சல்மோன், நெற்றோபாயன் மகராய், 29நெற்றோபாயன் பானாவின் மகன் ஏலேபு, பென்யமினியரின் கிபயாவைச் சார்ந்த இரிபாயின் மகன் இத்தாய், 30பிரத்தோனியன் பெனாயா, காகசு நீரோடைகளின் இதாய், 31அர்பாத்தியன் அபிஅல்போன், பர்குமியன் அஸ்மவேத்து, 32சால்போனியன் எலியகுபா, யாசேனின் மகன் யோனத்தான், 33அராரியன் சம்மா, அராரியன் சாராரின் மகன் அகீயாம், 34மாகாத்தியன் அகஸ்பாயியின் மகன் எலிபலேற்று, கிலோனியன் அகித்தோபலின் மகன் எலியாம், 35கர்மேலியன் எட்சரோ, அர்பியன் பாராய், 36சோபாவைச் சார்ந்த நாத்தானின் மகன் இகால், காத்தியன்பானி, 37அம்மோனியனின் செலேக்கு, செரூயாவின் மகனும் யோவாபின் படைக்கலன் தாக்குவோனுமான பெயரோத்தியன் நகராய், 38இத்ரியன் ஈரா, இத்ரியன் காரேபு, 39இத்தியன் உரியா, இவர்கள் அனைவருமே அந்த முப்பது பேர்.


23:18 சில எபிரேய ஏடுகளில் ‘முப்பது’ என்பது பாடம். (காண் 1 குறி 11:25).


அதிகாரம் 24

மக்கள் தொகையைத் தாவீது கணக்கிடல்

(1 குறி 21:1-27)


1மீண்டும் இஸ்ரயேல்மீது ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. அவர்களுக்கு எதிராகச் செயல்பட அவர் தாவீதிடம், “புறப்பட்டுப் போய் இஸ்ரயேல், யூதா மக்களை எண்ணுவாய்” என்று தூண்டிவிட்டார். 2அரசர் யோவாபையும் அவரோடிருந்த படைத்தலைவர்களையும் அழைத்து, “மக்கள் தொகை என்னவென்று நான் அறிய வேண்டும். நீங்கள் தாண் முதல் பெயேர்செபா வரை அனைத்து இஸ்ரயேல் குலங்களிடையே சென்று வீரர்கள் தொகையை கணக்கிடுங்கள்” என்றார்.

3யோவாபு அரசரை நோக்கி, “ஆண்டவராம் கடவுள் வீரர்களை இப்போது இருப்பதைப்போல் இன்னும் நூறு மடங்கு மிகுதிப்படுத்துவாராக! என் தரைவராம் அரசர் இதைக் காண்பாராக! ஆனால், என் தலைவராம் ஆண்டவர் இதை செய்ய விரும்புவது ஏன்?’ என்று கேட்டார். 4இருப்பினும் யோவாபுக்கும் படைத்தலைவருக்கும் எதிராக அரசரின் வார்த்தையே நிலைத்தது. இஸ்ரயேல் வீரர்களைக் கணக்கிடுவதற்காக யோவாபும் படைத் தலைவர்களும் அரசர் முன்னிலையினின்று புறப்பட்டுச் சென்றனர்.

5அவர்கள் யோர்தானைக் கடந்து, காத்துப் பள்ளத்தாக்கின் நடுவே இருந்த நகரின் வலப்புறம் ஆரோயரில் கூடாரமிட்டு, பின் யாசேர் நோக்கிச் சென்றனர். 6கிலயாது வந்தடைந்த பிறகு, தத்தீம் கொத்சி எல்லைக்குள் சென்று, தாண்யானுக்கும் சீதோன் சுற்றுப்புறத்திற்கும் சென்றனர். 7பிறகு தீர் கோட்டைக்கும், இவ்வியர் கானானியரின் அனைத்து நகரங்களுக்கும் சென்று, அங்கிருந்து யூதாவின் தென்புறமான பெயேர்செபாவரை சென்றனர். 8இவ்வாறு அவர்கள் நாடெங்கும் சென்று ஒன்பது மாதங்களும் இருபது நாள்களும் கடந்தபின் எருசலேமை வந்தடைந்தனர். 9யோவாபு, வீரர்களின் தொகைக் கணக்கை அரசரிடம் தந்தார். வாளை ஏந்தும் வீரர்கள் எண்ணூறு பேர் இஸ்ரயேலிலும், ஐந்நூறு பேர் யூதாவிலும் இருந்தனர்.

10வீரர்களின் தொகையைக் கணக்கெடுத்தபிறகு தாவீது மனம் வருந்தினார். “நான் மாபெரும் பாவம் செய்தேன்! ஆண்டவரே! உன் அடியானின் குற்றத்தை மன்னித்தருளும்! ஏனெனில், நான் பெரும் மதியீனனாய் நடந்துகொண்டேன்” என்று தாவீது ஆண்டவரிடம் மன்றாடினார்.

11தாவீது காலையில் எழுந்தார். தாவீதின் திருக்காட்சியாளராகிய இறைவாக்கினர் காதிற்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது: 12“நீ சென்று இவ்வாறு ஆண்டவர் கூறுவதாகத் தாவீதிடம் சொல்: ‘நான் உன்மீது மூன்று தண்டனைகளைக் குறிப்பிடுகிறேன். நீ ஒன்றைத் தேர்ந்தெடு. அதன் படி நான் செய்வேன்’”. 13காது தாவீதிடம் வந்து அவரிடம் பேசி வெளிப்படுத்தியது: “உனது நாட்டில் ஏழு ஆண்டுகள் பஞ்சம் வரட்டுமா? உன் எதிரிகள் உன்னைப்பின்தொடர, மூன்று மாதங்கள் நீ தப்பியோட வேண்டுமா? அல்லது உன் நாட்டில் மூன்று நாள்கள் கொள்ளை நோய் ஏற்படலாமா? என்னை அனுப்பியவருக்கு நான் என்ன மறுமொழி சொல்ல வேண்டும் என்று சிந்தித்து முடிவுசெய்”.

14“நான் மிகவும் மனவேதனையுற்றுள்ளேன். ஆண்டவரது கையில் நாம் விழுவோம்; ஏனெனில், அவரது இரக்கம் பெரிது! மனிதரின் கையில் விழவேண்டாம்” என்று தாவீது கூறினார்.

15ஆண்டவர் காலைமுதல் குறித்த நேரம் வரை இஸ்ரயேலின் மீது கொள்ளைநோய் அனுப்பினார். தாண் முதல் பெயேர்செபாவரை எழுபதாயிரம் மக்கள் மாண்டனர். 16வானதூதர் எருசலேமை அழிப்பதற்காக அதன்மீது தம் கையை ஓங்கினார். ஆண்டவர் அத்தீமையைக் குறித்து மனம் வருந்தி மக்களை அழித்துக்கொண்டிருந்த வானதூதரை நோக்கி, “போதும்! உன் கையைக் கீழே போடு” என்றார். அப்போது ஆண்டவரின் தூதர், எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே இருந்தார்.

17மக்களை அழித்துக்கொண்டிருந்த ஆண்டவரின் தூதரைத் தாவீது கண்டபோது, அவர் ஆண்டவரை நோக்கி, “பாவம் செய்தவன் நானல்லவோ? தீச்செயல் புரிந்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது? இப்போது உம் கை என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் வதைப்பதாக!” என்று கூறினார்.

18அன்று காது தாவீதிடம் வந்து அவரை நோக்கி, “நீ சென்று எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்திலே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பும்” என்றார். 19தாவீது காதின் வார்த்தைப்படி எழுந்து சென்று ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றினார்.

20அப்போது அரசரும் அவருடைய பணியாளரும் தன்னை நோக்கி வருவதை அரவுனா கண்டான். அரவுனா புறப்பட்டுச்சென்று முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து அரசரை வணங்கினான். 21“என் தலைவராம் அரசர் உம் அடியானிடம் வருவதேன்?” என்று அரவுனா வினவ, தாவீது “மக்களிடமிருந்து கொள்ளைநோய் விலக ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பவேண்டும். அதற்காக உன்னிடமிருந்து உன் போரடிக்கிற களத்தை விலைக்கு வாங்க வந்தேன்” என்று கூறினார்.

22“என் தலைவராம் அரசர் அதை எடுத்துக்கொண்டு தம் விருப்பம் போல் பலி செலுத்துவாராக! இதோ எரிபலிக்கு வேண்டிய காளைகள்; போரடிக்கும் உருளைகளும் காளைகளின் நுகத்தடிகளும் விறகாகட்டும்! 23அரசரே! இவையனைத்தையும் அரவுனா தங்களுக்குத் தருகிறான்! ஆண்டவராம் கடவுள் உம்மை ஏற்றுக்கொள்வாராக!” என்று அரவுனா தாவீதிடம் கூறினான்.

24“இல்லை! நான் உன்னிடம் விலைக்குத்தான் வாங்குவேன். நான் இலவசமாகப் பெற்று என் கடவுளாம் ஆண்டவருக்கு எரி பலி செலுத்தமாட்டேன்” என்று அரசர் அரவுனாவிடம் கூறி, போரடிக்கும் களத்தையும் காளைகளையும் தாவீது ஐம்பது வெள்ளிக் காசுகளுக்கு வாங்கினார். 25தாவீது அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி, ஆண்டவருக்கு எரி பலிகளும், நல்லுறவுப் பலிகளும் செலுத்தினார். நாட்டுக்காகச் செய்த மன்றாட்டை ஆண்டவர் கேட்டருள, இஸ்ரயேலிலிருந்து கொள்ளை நோய் நீங்கியது.