1சாமூவேலஂ


1சாமூவேலஂ
முன்னுரை

‘1 & 2 சாமுவேல்’ என்னும் நூல்களில் இஸ்ரயேல் அரசுரிமையின் தொடக்க வரலாறு காணப்படுகிறது. நீதித் தலைவர்களின் காலம் அரசுரிமையின் காலமாக மாறியது குறித்த நிகழ்ச்சிகள் ‘1 சாமுவேல்’ என்னும் இந்நூலில் இடம் பெறுகின்றன. மேலும், நீதித் தலைவர்களின் வரிசையில் இறுதியாக வந்தவரான சாமுவேல், இஸ்ரயேலின் முதல் அரசரான சவுல், சிறுபருவத்தே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இஸ்ரயேலின் பேரரசராக உயர்த்தப்பட்ட தாவீது ஆகிய மூவரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட சமுதாய மாற்றமும் இந்நூலில் இடம் பெறுகிறது.


கடவுளுக்கு உண்மை உள்ளவர்களாய் இருந்தபோது வெற்றியும், அவருக்கு உண்மையற்றவர்களாய் நடக்கும்போது அழிவும் ஏற்படும் என்னும் கருத்து இந்நூலில் தெளிவாக்கப்படுகிறது. ஆண்டவரே இஸ்ரயேலின் உண்மையான அரசர் என்று கருதப்பட்டார். ஆனால், மக்களின் விருப்பத்திற்கு இணங்கி அவர் அவர்களுக்கு ஓர் அரசரைத் தேர்ந்தெடுக்கிறார். ஆயினும் அரசரும் இஸ்ரயேல் மக்களும் கடவுளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் என்பதும், செல்வர் வறியோர் ஆகிய எல்லா மக்களின் உரிமைகளும் கடவுளின் திருச்சட்டத்தின் கீழ் சமமாகக் காக்கப்பட வேண்டும் என்பதும் இந்நூலில் வலியுறுத்தப்படுகின்றன.


நூலின் பிரிவுகள்


1. இஸ்ரயேலின் தலைவர் சாமுவேல் 1:1 - 7:17

2. சவுல் அரசராதல் 8:1 - 10:27

3. சவுல் ஆட்சியின் முற்பகுதி 11:1 - 15:35

4. தாவீதும் சவுலும் 16:1 - 30:31

5. சவுல், அவர்தம் புதல்வர்கள் ஆகியோரின் இறப்பு 31:1 - 13


அதிகாரம் 1

சீலோவில் எல்கானா


1எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த இராமாத்தயிம் சோப்பிமில் எல்கானா என்ற ஒருவர் இருந்தார். இவர் எப்ராயிமைச் சார்ந்த சூப்பின் மகனான தோகூவின் மைந்தனான எலிகூபின் புதல்வனான எரொகாமின் மகன். 2அவருக்கு அன்னா, பெனின்னா என்ற இரு மனைவியர் இருந்தனர்; பெனின்னாவுக்குக் குழந்தைகள் இருந்தனர். அன்னாவுக்கோ குழந்தைகள் இல்லை.


3எல்கானா ஆண்டுதோறும் சீலோவில் படைகளின் ஆண்டவரை வழிபடவும் அவருக்குக் பலி செலுத்தவும் தம் நகரிலிருந்து சென்று வருவார். அங்கே ஆண்டவரின் குருவான ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் இருந்தனர். 4எல்கானா, தாம் பலி செலுத்திய நாளில், தம் மனைவி பெனின்னாவுக்கும் அவளுடைய புதல்வர் புதல்வியர் அனைவருக்கும் பங்கு கொடுப்பதுண்டு. 5அன்னாவின் மீது அன்புகொண்டிருந்தும் அவருக்கு ஒரே பங்கைத்தான் அளித்தார். ஏனெனில், ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார்.✠ 6ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்ததால், அவருடைய சக்களத்தி அவரைத் துன்புறுத்தி வதைத்தாள். 7இவ்வாறு, ஆண்டுதோறும் நடந்தது; அவர் ஆண்டவரின் இல்லம் வந்த போதெல்லாம் அவள் அவரைத் துன்புறுத்துவாள். அன்னா உண்ணாமல் அழுவார். 8அப்போது அவர் கணவர் எல்கானா அவரை நோக்கி “அன்னா நீ ஏன் அழுகிறாய்? நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்? நான் உனக்குப் பத்துப் புதல்வரை விட மேலானவன் அன்றோ?” என்பார்.


அன்னாவும் ஏலியும்


9ஒருநாள் அவர்கள் சீலோவில் உண்டு குடித்தபின், அன்னா எழுந்தார். குரு ஏலி,ஆண்டவரின் கோவில் முற்றத்தில் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தார். 10அன்னா மனம் கசந்து அழுது புலம்பி, ஆண்டவரிடம் மன்றாடினார். 11அவர் பொருத்தனை செய்து வேண்டிக்கொண்டது; “படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி. என்னை மறவாமல் நினைவு கூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியேபடாது.”✠


12அவர் இவ்வாறு ஆண்டவர் திருமுன் தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருந்தபோது, ஏலி அவருடைய வாயைக் கவனித்தார். 13அன்னா தம் உள்ளத்தினுள் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் மட்டும் அசைந்தன; குரல் கேட்கவில்லை, ஆகவே, ஏலி அவரை ஒரு குடிகாரி என்று கருதினார். 14ஏலி அவரை நோக்கி, “எவ்வளவு காலம் நீர் குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து” என்றார். 15அதற்கு அன்னா மறுமொழியாக, “இல்லை என் தலைவரே! நான் உள்ளம் நொந்த ஒரு பெண், திராட்சை இரசத்தையோ வேறு எந்த மதுவையோ நான் அருந்தவில்லை. மாறாக, ஆண்டவர் திரு முன் என் உள்ளத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன். 16உம் அடியாளை ஒரு கீழ்த்தரப்பெண்ணாகக் கருதவேண்டாம். ஏனெனில், என் துன்ப துயரங்களின் மிகுதியால் நான் இதுவரை பேசிக்கொண்டிருந்தேன்” என்று கூறினார்.


17பிறகு ஏலி, “மனநிறைவோடு செல், இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வார்” என்று பதிலளித்தார், 18அதற்கு அன்னா, “உம் அடியாள் உம் கண்முன்னே அருள்பெறுவாளாக!” என்று கூறித் தம் வழியே சென்று உணவு அருந்தினார். இதன்பின் அவர் முகம் வாடியிருக்கவில்லை.


சாமுவேலின் பிறப்பு


19அவர்கள் காலையில் எழுந்து ஆண்டவர் திருமுன் வழிபட்டுவிட்டுத் திரும்பிச்சென்று இராமாவில் இருந்த தங்கள் இல்லம் அடைந்தனர். எல்கானா தம் மனைவி அன்னாவோடு கூடி வாழ்ந்தார். ஆண்டவரும் அவரை நினைவு கூர்ந்தார். 20உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். “நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்” என்று சொல்லி, அவர் அவனுக்குச் ‘சாமுவேல்’ என்று பெயரிட்டார். 21எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனையையும் செலுத்தச் சென்றார்கள். 22ஆனால், அன்னா செல்லவில்லை. அவர் தம் கணவரிடம், “பையன் பால் குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்” என்று சொன்னார். 23அவர் கணவர் எல்கானா, “உனக்குச் சிறந்தது எனப்படுவதைச் செய், பையன் பால் குடி மறக்கும் வரை இரு, ஆண்டவர் தம் வார்த்தையை உறுதிப்படுத்துவாராக! என்று அவரிடம் கூறினார், ஆகவே, அவர் தங்கியிருந்து பால்குடி மறக்கும் வரை தம் மகனுக்குப் பாலூட்டி வந்தார்.


24அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக் கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். 25அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள். 26பின் அவர் கூறியது: “என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டிருந்த பெண் நானே. 27இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். 28ஆகவே, நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன். அங்கே அவர்கள்⁕ ஆண்டவரைத் தொழுதார்கள்.


1:11 எண் 6:5. 1:5 எபிரேயத்தில், ‘அன்பு கொண்டிருந்ததால்…இரண்டு பங்கை’ எனவும் பொருள்படும். 1:28 ‘அவர்’ என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 2

அன்னாவின் வேண்டுதல்


1அப்பொழுது அன்னா மன்றாடிக் கூறியது:

“ஆண்டவரை முன்னிட்டு

என் இதயம் மகிழ்கின்றது!

ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது!

என் வாய் என் எதிரிகளைப்

பழிக்கின்றது!

ஏனெனில், நான் நீர் அளிக்கும்

மீட்பில் களிப்படைகிறேன்.

2ஆண்டவரைப் போன்ற தூயவர்

வேறு எவரும் இலர்!

உம்மையன்றி வேறு எவரும் இலர்!

நம் கடவுளைப் போன்ற

வேறு பாறை இல்லை,

3இறுமாப்புடன் இனிப்பேச வேண்டாம்!

உங்கள் வாயில் வீம்பு வெளிப்பட

வேண்டாம்!

ஏனெனில், ஆண்டவர் அறிவின்

இறைவன்!

செயல்களின் அளவை

எடை போடுபவர் அவரே!

4வலியோரின் வில்கள்

உடைபடுகின்றன! தடுமாறினோர்

வலிமை பெறுகின்றனர்!

5நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு

உணவு பெறுகின்றனர்.

பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார்

ஆகியுள்ளனர்!

மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள்,

பல புதல்வரைப் பெற்றவளோ

தனியள் ஆகின்றாள்!

6ஆண்டவர் கொல்கிறார்;

உயிரும் தருகின்றார்;

பாதாளத்தில் தள்ளுகிறார்;

உயர்த்துகின்றார்;

7ஆண்டவர் ஏழையாக்குகிறார்;

செல்வராக்குகின்றார்;

தாழ்த்துகின்றார்;

மேன்மைப்படுத்துகின்றார்;

8புழுதியினின்று அவர்

ஏழைகளை உயர்த்துகின்றார்;

குப்பையினின்று வறியவரைத்

தூக்கிவிடுகின்றார்;

உயர்குடியினரோடு அவர்களை

அமர்த்துகின்றார்!

மாண்புறு அரியணையை அவர்

களுக்கு உரிமையாக்குகின்றார்!

உலகின் அடித்தளங்கள்

ஆண்டவருக்கு உரியவை!

அவற்றின் மேல் அவர்

உலகை நிறுவினார்!

9தம்மில் பற்றுக்கொண்டோர்

காலடிகளை அவர் காப்பார்!

தீயோர், இருளுக்கு இரையாவார்!

ஏனெனில், ஆற்றலால் எவரும்

வலியவர் ஆவதில்லை!

10ஆண்டவரை எதிர்ப்போர்

நொறுக்கப்படுவர்!

அவர் அவர்களுக்கு எதிராக

வானில் இடிமுழங்கச் செய்வார்!

ஆண்டவர் உலகின் எல்லை வரை

தீர்ப்பிடுவார்!

தம் அரசருக்கு வலிமை தருவார்!

தாம் திருப்பொழிவு

செய்தவரின் ஆற்றலை உயர்த்துவார்.


11எல்கானா இராமாவிலுள்ள தம் வீட்டிற்குச் சென்றார். சிறுவனோ குரு ஏலியின் முன்பாக ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான்.


ஏலியின் மக்கள்


12அப்போது ஏலியின் புதல்வர்கள் கீழ்த்தரமானவராக இருந்தனர். அவர்கள் ஆண்டவர்மீது அக்கறை கொள்ளவில்லை. 13அந்தக் குருக்களின் மக்களிடம் பின் வருமாறு நடந்து கொண்டனர். யாராவது பலி செலுத்தினால், இறைச்சி வேகும்போதே கையில் மூன்று பல் கொக்கியுடன் குருவின் பணியாள் வருவான். 14அவன் அதைக் கொப்பறையிலோ, அண்டாவிலோ, சட்டியிலோ, பானையிலோ விடுவான். கொக்கியில் அகப்படுவதை எல்லாம் குருவுக்கென்று எடுத்துக்கொள்வான். சீலோவுக்கு வந்த இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் இவ்வாறு செய்தனர். 15அதோடு கொழுப்பு எரிவதற்கு முன்பே குருவின் பணியாள் பலி செலுத்துபவரிடம் வந்து, “குருவுக்குச் சமைக்க இறைச்சி கொடும். வெந்த இறைச்சியன்று, பச்சையானதே அவர் உம்மிடமிருந்து பெறுவார்” என்பான். 16யாராவது அவனிடம் “தற்போது கொழுப்பு எரியட்டும்; பிறகு நீ விரும்பியதை எடுத்துக்கொள்” என்று சொன்னால் அதற்கு அவன், “இல்லை. நீர் இப்பொழுதே கொடும், இல்லையேல், நான் வலிந்து எடுத்துக் கொள்வேன்” என்று சொல்வான். 17ஆகவே, அந்த இளைஞரின் பாவம் ஆண்டவரின் திருமுன் மிகப் பெரியதாகவே இருந்தது. ஏனெனில், அவர்கள் ஆண்டவருக்குச் செலுத்தப்பட்ட படையல்களைத் துச்சமாகக் கருதினார்கள்.


சீலோவில் சாமுவேல்


18ஆண்டவர்முன் ஊழியம் செய்த சிறுவன் சாமுவேல் நார்ப்பட்டாலான ஏபோது அணிந்திருந்தான், 19சாமுவேலின் தாய் அவனுக்காக ஆண்டுதோறும் ஒரு சிற்றாடை தைத்து தம் கணவரோடு ஆண்டுப்பலி செலுத்தச் சென்றபோது அவனிடம் கொடுப்பார். 20எல்கானாவுக்கும் அவர் மனைவிக்கும் ஏலி ஆசி வழங்கி எல்கானாவை நோக்கி, “ஆண்டவர் இப்பெண் வழியாக, இவள் அவருக்கு நேர்ந்தளித்தவனுக்குப் பதிலாக, உனக்கு வழிமரபை அருள்வாராக” என்று கூறுவார். பிறகு அவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்வர். 21ஆண்டவர் அன்னாவைக் கடைக்கண் நோக்கினார். அவர் கருவுற்று மூன்று ஆண்களையும் இரண்டு பெண்களையும் பெற்றெடுத்தார். சிறுவன் சாமுவேலோ ஆண்டவர் திருமுன் வளரலானான்.


ஏலியும் அவர்தம் புதல்வர்களும்


22ஏலி முதிர்ந்த வயதடைந்தார். தம் பிள்ளைகள் இஸ்ரயேலருக்கு எதிராகச் செய்த அனைத்தையும், சந்திப்புக் கூடார வாயிலில் ஊழியம் செய்து வந்த பெண்களோடு தகாத உறவு கொண்டிருந்ததையும் கேட்டறிந்தார், 23அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? இவ்வனைத்து மக்களிடமிருந்தும் உங்கள் தீய நடவடிக்கைகளைப்பற்றிக் கேள்விப்படுகிறேனே! 24வேண்டாம் பிள்ளைகளே! ஆண்டவரின் மக்களிடையே பரவி இருப்பதாக நான் கேள்விப்படும் இச்செய்தி நல்லதல்ல. 25ஒருவர் மனிதருக்கு எதிராகப் பாவம் செய்தால் வேறெவராவது கடவுளிடம் அவருக்காகப் பரிந்து பேசலாம். ஆனால் ஒருவர் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தால் அவருக்காகப் பரிந்து பேசுவோர் யார்?” இருப்பினும் அவர்கள் தங்கள் தந்தையின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை. ஏனெனில், அவர்கள் கொல்லப்பட வேண்டுமென்பது ஆண்டவரின் திருவுளமாக இருந்தது. 26சிறுவன் சாமுவேல் வளர்ந்து ஆண்டவருக்கும் மனிதருக்கும் உகந்தவனாய் இருந்து வந்தான்.✠


ஏலியின் குடும்பத்திற்கு எதிரான இறைவாக்கு


27அப்போது இறையடியார் ஒருவர் ஏலியிடம் வந்து கூறியது: “ஆண்டவர், இவ்வாறு கூறுகிறார்: ‘எகிப்து நாட்டில் பார்வோன் வீட்டாருக்கு உன் மூதாதை வீட்டார் அடிமைகளாக இருந்தபோது அவர்களுக்கு நான் என்னையே வெளிப்படுத்தினேன். 28என் பீடத்தில் திருப்பணி புரியவும், தூபம் காட்டவும், என்முன் ஏபோது அணியவும், அவர்களை நான் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களினின்றும் தேர்ந்தெடுத்தேன். இஸ்ரயேல் மக்கள் எனக்குச் செலுத்திய நெருப்புப் பலிகள் அனைத்தையும் நான் உன் மூதாதை வீட்டாருக்கே கொடுத்தேன்.✠ 29பின் நானே கட்டளையிட்ட பலிகளையும், படையல்களையும் துச்சமாய் மதிப்பது ஏன்? உன் புதல்வர்களை எனக்கு மேலாக உயர்த்தி, என் மக்கள் இஸ்ரயேல் செலுத்தும் ஒவ்வொரு படையலிலும் சிறந்தவற்றை எடுத்துக்கொண்டு உங்களையே கொழுக்க வைப்பதேன்?’


30இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது: ‘உன் வீடும் உன் மூதாதை வீடும் என்முன்பாக என்றென்றும் ஊழியம் புரிவீர்’ என வாக்களித்திருந்தேன். ஆனால்,தற்போது ஆண்டவர் கூறுவது: ‘இவ்வாக்கு என்னைவிட்டு அகல்வதாக! ஏனெனில், என்னை மதிப்போரை நான் மதிப்பேன்; என்னை இகழ்வோர் இகழ்ச்சி அடைவர். 31இதோ! நாள்கள் நெருங்குகின்றன. அப்பொழுது, உன் ஆற்றலையும் உன் மூதாதை வீட்டாரின் ஆற்றலையும் நான் அழிப்பேன். உன் வீட்டில் ஒரு முதியவர்கூட இருக்கமாட்டார். 32அப்போது ஏனைய இஸ்ரயேலருக்கு அருளப்படும் அனைத்து நலனையும் நீ பொறாமையோடு மனம் வெதும்பிப் பார்ப்பாய். உனது வீட்டிலோ என்றென்றும் ஒரு முதியவர் கூட இருக்கமாட்டார். 33என் பீடப்பணியினின்று விலக்கி விடாமல் நான் வைத்துக் கொள்ளவிருக்கும் உங்களுள் ஒருவன் கண்கள் மங்கி, மனம் தளர்வடையுமட்டும் இருப்பான். ஆனால், உன் வீட்டில் வளரும் தலைமுறையினர் இளம் வயதில் சாவர். 34உன் இரு புதல்வரான ஒப்னிக்கும் பினகாசுக்கும் ஏற்பட விருப்பது உனக்கு ஓர் அடையாளமாக இருக்கட்டும். ஒரே நாளில் அவர்கள் இருவரும் மடிவர்.✠ 35என் திட்டத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்பச் செயல்படும் நம்பிக்கைக்குரிய ஒரு குருவை நான் எழுப்புவேன். அவனுக்கு ஒரு நிலையான வீட்டைக் கட்டி எழுப்புவேன். அவன் எந்நாளும் என்னிடம் திருப்பொழிவு பெறுபவனுக்குப் பணி செய்வான். 36எஞ்சியுள்ள உன் வீட்டார் அனைவரும் ஒரு வெள்ளிக் காசுக்கோ ஓர் அப்பத்துக்கோ அவனிடம் வந்து கையேந்தி நின்று ‘தயைகூர்ந்து எனக்கு ஓர் அப்பம் கிடைக்குமாறு குருத்துவ ஊழியத்தில் என்னைச் சேர்த்தருளும்’ என்பார்கள்.”


2:1-10 லூக் 1:46-55. 2:26 லூக் 2:52. 2:28 விப 28:1-4; லேவி 7:35-36. 2:34 1 சாமு 4:11.


அதிகாரம் 3

கடவுள் சாமுவேலுக்குத் தோன்றுதல்


1சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை. 2அப்போது ஒரு நாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண் பார்வை மங்கிவிட்டதால் அவரால் பார்க்க முடியவில்லை. 3>கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தார். 4அப்போது ஆண்டவர், “சாமுவேல்” என்று அழைத்தார். அதற்கு அவன், “இதோ! அடியேன்” என்று சொல்லி, 5ஏலியிடம் ஓடி, “இதோ! அடியேன் என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அதற்கு அவர், “நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்” என்றார். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான். 6ஆண்டவர் மீண்டும் “சாமுவேல்” என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, “இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அவரோ, “நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்கொள்” என்றார். 7சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. 8மூன்றாம் முறையாக ஆண்டவர் “சாமுவேல்” என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று “இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டார். 9பின்பு, ஏலி சாமுவேலை நோக்கி “சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ, ‘ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று பதில் சொல்” என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான்.


10அப்போது ஆண்டவர் வந்து நின்று, “சாமுவேல், சாமுவேல்” என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல், “பேசும், உம் அடியான் கேட்கிறேன்” என்று மறு மொழி கூறினான்.


11ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: “இதோ கேட்போர் அனைவரின் இரு காதுகளும் அதிர்ச்சியடையக்கூடிய ஒரு செயலை நான் இஸ்ரயேலில் செய்யப்போகிறேன். 12அந்நாளில் ஏலியிடம் நான் அவன் வீட்டுக்கு எதிராக பேசியது அனைத்தையும் தொடக்கத்திலிருந்து முடிவுவரை நிறைவேற்றுவேன். 13ஏனெனில், அவன் தன் புதல்வர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்டதை அறிந்திருந்தும் தடுக்காத குற்றத்திற்காக அவனது வீட்டிற்கு நீங்காத தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன் என்று அறிவித்தேன். 14ஆகவே, ஏலி வீட்டின் குற்றத்துக்கு பலியினாலோ படையல்களினாலோ என்றென்றும் கழுவாய் செய்யப்பட முடியாது என்று நான் ஏலி வீட்டுக்கு ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.” 15சாமுவேல் காலை வரை படுத்திருந்தான். பிறகு ஆண்டவரது இல்லத்தின் கதவுகளைத் திறந்து வைத்தான். தான் கண்ட காட்சியை ஏலியிடம் சொல்ல அஞ்சினான்.


16பிறகு ஏலி “சாமுவேல், என் மகனே!”, என்று கூப்பிட, சாமுவேல். “இதோ அடியேன்” என்று பதில் சொன்னான். 17அவர் அவனை நோக்கி உனக்கு அவர் சொன்ன வார்த்தை என்ன? தயவு செய்து என்னிடம் மறைக்காதே. அவர் உன்னிடம் பேசியதிலிருந்து நீ என்னிடம் எதையாவது மறைத்தால், கடவுள் உனக்கு தகுந்தவாறும் அதற்கு மேலும் செய்வார்” என்றார். 18சாமுவேல் அவருக்கு எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னான். அவரிடமிருந்து எதையும் மறைக்கவில்லை. அதற்கு அவர், “அவர் ஆண்டவர் தான்! அவரது பார்வையில் எது நல்லதோ அதை அவர் செய்யட்டும்” என்றார்.


19சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர் அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை. 20சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டு விட்டார் என்று தாண் முதல் பெயேர்செபா வரையிலும் அனைத்து இஸ்ரயேலரும் அறிந்து கொண்டனர். 21ஆண்டவர் மீண்டும் சீலோவில் தோன்றினார். அங்கேதான் சாமுவேலுக்கு ஆண்டவர் தம் வார்த்தையை வெளிப்படுத்தினார்.


அதிகாரம் 4
abcd
அதிகாரம் 5

பெலிஸ்தியரிடம் உடன்படிக்கைப் பேழை


1பெலிஸ்தியர் கடவுளின் பேழையைக் கைப்பற்றி, அதை எபனேசரிலிருந்து அஸ்தோதிற்குக் கொண்டு சென்றனர். 2பெலிஸ்தியர் கடவுளின் பேழையைத் தாகோன் கோவிலுக்குத் தூக்கிக் கொண்டு வந்து, தாகோன் சிலை அருகில் வைத்தனர். 3அஸ்தோதின் மக்கள் மறுநாள் அதிகாலையில் விழித்தெழுந்தபோது, தாகோன் சிலை ஆண்டவரின் பேழைக்கு முன் முகம் குப்புறத் தரையில் விழுந்து கிடந்ததைக் கண்டனர். அவர்கள் அதை எடுத்து அதன் இடத்தில் மீண்டும் நிறுத்தினார்கள். 4அவர்கள் மறுநாள் அதிகாலையில் விழித்தெழுந்த போது, தாகோன் சிலை ஆண்டவரின் பேழைக்கு முன் முகம் குப்புறத் தரையில் விழுந்து கிடந்ததைக் கண்டனர். ஆனால், அதன் தலையும், இருகைகளும் துண்டிக்கப்பட்டு, வாயிற்படியில் கிடந்தன. அதன் உடல் பகுதி மட்டும் எஞ்சியிருந்தது. 5ஆகவேதான், தாகோனின் அர்ச்சகர்களும் தாகோனின் கோவிலுக்குள் செல்லும் அனைவரும் அஸ்தோதிலிருக்கும் தாகோனின் வாயிற்படியை இந்நாள்வரை மிதிப்பதில்லை.


6அஸ்தோதின் மக்களை அழிக்கும் படியாக ஆண்டவரின் கை அவர்களை வன்மையாகத் தாக்கியது. அஸ்தோது வாழ் மக்களையும் அதன் எல்லைக்கு உட்பட்டவர்களையும் அவர் மூலக் கட்டிகளல் வாட்டி வைத்தனர். 7அஸ்தோதின் மக்கள் இவ்வாறு நிகழ்ந்ததைக் கண்டபோது, “இஸ்ரயேலின் கடவுளது பேழை நம்மிடையே இருக்கலாகாது. ஏனெனில், அவரது கை நம்மையும் நம் தெய்வம் தாகோனையும் வன்மையாகத் தாக்கியுள்ளது” என்று பேசிக் கொண்டனர். 8ஆகவே, அவர்கள் ஆளனுப்பி பெலிஸ்தியத் தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம் “இஸ்ரயேலரின் கடவுளது பேழையை நாம் என்ன செய்வோம்?” என்று கேட்டனர். அவர்கள், “இஸ்ரயேலரின் கடவுளது பேழையைக் காத்து நகருக்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்று பதிலுரைத்தனர். அவ்வாறே, இஸ்ரயேலரின் கடவுளது பேழையை எடுத்துச் சென்றனர்.


9அதை அங்கு எடுத்துச் சென்ற பின், ஆண்டவரின் கை அந்நகரை வன்மையாகத் தாக்கி, மாபெரும் அழிவை ஏற்படுத்தியது. அவர் அந்நகர் மக்களை, சிறியோர் முதல் பெரியோர் வரை மூலக் கட்டிகளால் வதைத்தார். 10அவர்கள் கடவுளின் பேழையை எக்ரோனுக்கு அனுப்பினார்கள். கடவுளின் பேழை எக்ரோனுக்கு வரவே, எக்ரோனியர், “எங்களையும் எங்கள் மக்களையும் அழிக்கவே இஸ்ரயேலரின் கடவுளது பேழையைக் கொண்டு வந்து விட்டார்கள்” என்று கத்தினார்கள். 11எனவே, அவர்கள் ஆளனுப்பி பெலிஸ்திய தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம், “இஸ்ரயேலின் கடவுளது பேழையைத் திருப்பி அதன் இடத்திற்கே அனுப்பி விடுங்கள். எங்களையும் எங்கள் மக்களையும் அவர் கொல்லாதிருக்கட்டும்” என்று கேட்டுக் கொண்டனர். கடவுளின் கை அவர்களை வன்மையாகத் தாக்கியதால், அந்நகர் எங்கும் மக்கள் இறந்தார்கள். 12இறவாமல் இருந்த மக்கள் மூலக் கட்டிகளால் வதைக்கப்பட்டார்கள். அந்நகரின் கூக்குரல்கள் வான் மட்டும் எழும்பியது.


அதிகாரம் 6

உடன்படிக்கைப் பேழையைத் திருப்பி அனுப்புதல்


1ஆண்டவரின் பேழை பெலிஸ்தியரின் நாட்டில் ஏழு மாதம் இருந்தது. 2பெலிஸ்தியர் அர்ச்சகர்களையும் குறி சொல்கிறவர்களையும் அழைத்து, “ஆண்டவரின் பேழையை நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதை எவ்வாறு அதன் இடத்திற்கு நாங்கள் அனுப்ப வேண்டுமென்று தெரிவியுங்கள்” எனக் கேட்டனர். 3அவர்கள் கூறியது: “நீங்கள் இஸ்ரயேலரின் கடவுளது பேழையை அனுப்பினால் அதை வெறுமையாக அனுப்பலாகாது; குற்றநீக்கப்பலி கட்டாயமாக அவருக்குச் செலுத்தவேண்டும். அப்போது நீங்கள் குணமாக்கப்படுவீர்கள். அவரது கை உங்களைவிட்டு விலகாதிருந்ததன் காரணத்தையும் அறிந்து கொள்வீர்கள்.” 4அதற்கு அவர்கள், “நாங்கள் அவருக்குச் செலுத்த வேண்டிய குற்ற நீக்க பலி யாது?” என்று கேட்க, அவர்கள் கூறியது: “பெலிஸ்தியத் தலைவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஐந்து பொன் மூலக் கட்டிகளின் உருவங்களும் ஐந்து பொன் சுண்டெலிகளும் மட்டுமே. ஏனெனில், உங்கள் அனைவர் மீதும் உங்கள் தலைவர்கள் மீதும் ஒரே வாதைதான் ஏற்பட்டது. 5ஆகவே, உங்கள் மூலக் கட்டிகளின் உருவங்களையும் நிலத்தைப் பாழ்படுத்தும் சுண்டெலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ரயேலரின் கடவுளைப் புகழுங்கள். அப்போது ஒருவேளை உங்களிடமிருந்தும் உங்கள் தெய்வங்களிடமிருந்தும் உங்கள் நாட்டினின்றும் அவரது கை விலகும். 6எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இதயங்களைக் கடினப்படுத்தியது போல நீங்கள் ஏன் உங்கள் இதயங்களைக் கடினப்படுத்த வேண்டும்? அவர் அவர்களைத் துன்புறுத்த அவர்களும் இஸ்ரயேலரைச் செல்லுமாறு விட்டுவிட்டனரே! 7இப்போது நீங்கள் ஒரு புதிய வண்டியைச் செய்யுங்கள். இதுவரை நுகம் பூட்டாத இரு கறவைப் பசுக்களைப் பிடித்து அவற்றை வண்டியில் பூட்டுங்கள். அவற்றின் கன்றுக்குட்டிகளை விலக்கி வீட்டுக்கு இட்டுச் செல்லுங்கள். 8ஆண்டவரின் பேழையை எடுத்து அதை வண்டியின் மீது வைத்து குற்ற நீக்க பலியாக நீங்கள் செலுத்தும் பொன் உருவங்களை அருகே ஒரு பெட்டியில் வையுங்கள். பிறகு வண்டியை அனுப்பிவிடுங்கள்; அது தானே செல்லட்டும். 9பின் கவனியுங்கள்; அது தன் நாட்டு எல்லைக்குச் செல்லும் வழியாக பெத்சமேசுக்குச் சென்றால், இப்பெரிய தீங்கை நமக்கு இழைத்தவர் அவரே என்று அறியலாம். இல்லையேல், அவரது கை நம்மைத் தொடவில்லை. மாறாக, அது நமக்குச் தற்செயலாக நடந்தது என்று நாம் அறியலாம்.”


10அவர்களும் அவ்வாறே செய்தனர். இரு கறவைப் பசுக்களைக் கொண்டு வந்து பூட்டினர். அவற்றின் கன்றுகளைத் தொழுவத்தில் அடைத்து வைத்தனர். 11ஆண்டவரின் பேழையையும் பொன் சுண்டெலிகளும், மூலக்கட்டிகளின் உருவங்களும் வைத்திருந்த பெட்டியையும் அவ்வண்டியில் வைத்தனர். 12பசுக்கள் பெத்சமேசுக்குச் செல்லும் பெருஞ்சாலையில் இடமோ வலமோ விலகாமல் நேரே கத்திக் கொண்டே சென்றன. பெலிஸ்தியத் தலைவர்கள் அவற்றின் பின் பெத்சமேசு எல்லை வரை சென்றனர்.


13அப்போது பெத்சமேசு வாழ் மக்கள் பள்ளத்தாக்கில் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் கண்களை உயர்த்திய போது பேழையைக் கண்டு மகிழ்ச்சியுற்றனர். 14பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலுக்குள் வண்டி வந்து நின்றது. அங்கே ஒரு பாறை இருந்தது. அவர்கள் வண்டியின் மரத்தை பிளந்து பசுக்களை ஆண்டவருக்கு எரி பலி செலுத்தினர். 15லேவியர் ஆண்டவரின் பேழையையும் அதன் அருகில் இருந்த பொன் உருவங்களைக் கொண்டிருந்த பெட்டியையும் இறக்கி, பாறையின் மீது வைத்தனர். பெத்சமேசின் மக்கள் அன்றையதினம் எரி பலிகளையும் வேறு பலிகளையும் ஆண்டவருக்குச் செலுத்தினர். 16பெலிஸ்தியரின் ஐந்து தலைவர்களும் இதைக் கண்டபின் அன்றே எக்ரோனுக்குத் திரும்பினர்.


17பெலிஸ்தியர் குற்ற நீக்க பலியாக ஆண்டவருக்குச் செலுத்திய மூலக் கட்டிகளின் பொன் உருவங்கள் இவையே; அஸ்தோதுக்கு ஒன்று, காசாவுக்கு ஒன்று, அஸ்கலோனுக்கு ஒன்று, மாத்திற்கு ஒன்று, எக்ரோனுக்கு ஒன்று. 18பொன் சுண்டெலிகள், அரண் சூழ் நகர்கள் தொடங்கி, நாட்டுப்புறச் சிற்றூர்கள் வரை ஐந்து தலைவர்களுக்குச் சொந்தமான அனைத்து பெலிஸ்திய நகர்களின் எண்ணிக்கைக்குச் சரியாக இருந்தன. ஆண்டவரின் பேழையை வைக்கப்பட்ட அந்தப் பாறை இந்நாள் வரை பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலில் உள்ளது.


19பெத்சமேசு வாழ் மக்களை ஆண்டவர் சாகடித்தார். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் பேழைக்குள் உற்று நோக்கினர். மக்களுள் எழுபது பேரை⁕ அவர்வீழ்த்தினர். மக்களிடையே இப்பெரும் அழிவை ஏற்படுத்தியதற்காக மக்கள் புலம்பினார்கள்.


கிரியத்து எயாரிமில் உடன்படிக்கைப் பேழை


20பெத்சமேசு வாழ் மக்கள், “இந்தத் தூய கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நிற்கத் தகுந்தவன் யார்? நம்மிடமிருந்து அவர் யாரிடம் செல்லப் போகிறார்?” என்றுக் கேட்டுக் கொண்டனர். 21ஆகவே, கிரியத்து எயாரிம் வாழ் மக்களுக்கு ஆள்களை அனுப்பி, “ஆண்டவரின் பேழையைப் பெலிஸ்தியர் திருப்பி அனுப்பிவிட்டார்கள். நீங்கள் வந்து அதை உங்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள்.


6:19 ‘மக்களுள் எழுபது பேரையும் ஐம்பதினாயிரம் பேரையும்’ என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 7

சாமுவேல் இஸ்ரயேலரை ஆளுதல்


1கிரியத்து எயாரிமின் ஆள்கள் வந்து ஆண்டவரின் பேழையைத் தூக்கிச் சென்று, குன்றின் மீதிருந்த அபினதாபின் வீட்டில் வைத்தனர். ஆண்டவரின் பேழையை காக்கும் படி அவன் மகன் எல்யாசரைத் திரு நிலைப்படுத்தினர். 2பேழை கிரியத்து எயாரில் பலநாள்கள் தங்கியது; இருபது ஆண்டுகள் ஆயின. இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆண்டவரை நினைத்துப் புலம்பிக்கொண்டிருந்தனர்.


3இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் சாமுவேல் கூறியது: “நீங்கள் முழுஉள்ளத்தோடு ஆண்டவரிடம் திரும்பினால் வேற்றுத் தெய்வங்களையும் அஸ்தரோதையும் உங்களிடமிருந்து அகற்றி விடுங்கள். உங்கள் உள்ளங்களை ஆண்டவருக்காகத் தயார் செய்யுங்கள். அவருக்கு மட்டுமே ஊழியம் செய்யுங்கள். பெலிஸ்தியர் கையிலினின்று அவர் உங்களை விடுவிப்பார். 4இஸ்ரயேல் மக்கள் பாகால்களையும் அஸ்தரோதையும் விலக்கிவிட்டு ஆண்டவருக்கு மட்டுமே ஊழியம் செய்தார்கள்.


5மேலும் சாமுவேல், “இஸ்ரயேலர் அனைவரையும் மிஸ்பாவில் ஒன்று கூட்டுங்கள். உங்களுக்காக நான் ஆண்டவரிடம் மன்றாடுவேன்” என்றார். 6ஆகவே, அவர்கள் மிஸ்பாவில் ஒன்றுகூடி தண்ணீர் மொண்டு ஆண்டவர் திருமுன் ஊற்றி, அன்று நோன்பிருந்து ‘ஆண்டவருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம்’ என்று அறிக்கையிட்டார். சாமுவேல் மிஸ்பாவில் தங்கி இஸ்ரயேல் மக்களுக்கு தலைவராய் இருந்தார்.


7இஸ்ரயேல் மக்கள் மிஸ்பாவில் ஒன்று கூடியதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டனர். அப்போது பெலிஸ்திய தலைவர்கள் இஸ்ரயேலுக்கு எதிராகப் புறப்பட்டார்கள். இதைக் கேட்ட இஸ்ரயேல் மக்கள் பெலிஸ்தியரை முன்னிட்டு அச்சமுற்றார்கள். 8இஸ்ரயேல் மக்கள் சாமுவேலிடம் கூறியது: “நம் கடவுளாகிய ஆண்டவர் பெலிஸ்தியர் கையினின்று நம்மை காக்கும் படி அவரிடம் விடாமல் மன்றாடும்”. 9ஆகவே, பால் குடிக்கும் ஓர் ஆட்டுக் குட்டியை சாமுவேல் பிடித்து அதை ஆண்டவருக்கு ஒரு முழு எரி பலியாக செலுத்தி, இஸ்ரயேலுக்காக அவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் அவர்தம் மன்றாட்டை கேட்டார். 10சாமுவேல் இவ்வாறு எரி பலி செலுத்திக் கொண்டிருந்த போது, பெலிஸ்தியர் இஸ்ரயேலுடன் போரிட நெருங்கினர். அன்று ஆண்டவர் பெலிஸ்தியர் மீது பேரிடி முழங்கச் செய்து அவர்களைக் கலங்கடிக்க, அவர்கள் இஸ்ரயேலர் முன்பாகத் தோல்லியுற்றனர். 11இஸ்ரயேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டுப் பெத்கார் பள்ளத்தாக்கு வரை பெலிஸ்தியரைத் துரத்திச் சென்று, அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.


12சாமுவேல் ஒரு கல்லை எடுத்து அதை மிஸ்பாவுக்கு சொனாவுக்கும் நடுவில் நிறுத்தி, “ஆண்டவர் இதுவரை நமக்கு உதவி செய்தார்” என்று கூறி அதற்கு ‘எபனேசர்’⁕ என்று பெயரிட்டார்.✠ 13பெலிஸ்தியர் சிறுமையுற்று அதன்பின் மீண்டும் இஸ்ரயேல் எல்லைக்குள் வரவில்லை. சாமுவேலின் வாழ் நாள் முழுவதும் ஆண்டவரின் கரம் பெலிஸ்தியருக்கு எதிராக இருந்தது. 14எக்ரோன் முதல் காத்துவரை இஸ்ரயேலிடமிருந்து பெலிஸ்தியர் கைப்பற்றியிருந்த நகர்கள் இஸ்ரயேலுக்கு திரும்பக் கிடைத்தன. பெலிஸ்தியர் கையினின்று இஸ்ரயேல் தங்கள் எல்லைப் பகுதியை மீட்டுக் கொண்டனர். மேலும், இஸ்ரயேருக்கும் எமோரியருக்குமிடையே அமைதி நிலவிற்று.


15சாமுவேல் தம் வாழ்நாள் முழுவதும் இஸ்ரயேலுக்குத் தலைவராய் இருந்தார். 16அவர் ஆண்டு தோறும் சுற்றுப் பயணம் செய்து, பெத்தேல், கில்கால், மிஸ்பா ஆகிய இடங்களில் எல்லாம் இஸ்ரயேலுக்கு நீதி வழங்கினார். 17பின்பு, அவர் தம் வீடு இருந்த இராமாவுக்குத் திரும்பி அங்கேயும் இஸ்ரயேலருக்கு நீதி வழங்கினார்; அங்கே ஆண்டவருக்கு ஒரு பலி பீடம் எழுப்பினார்.


7:12 சாமு 6:2-4; 1 குறி 13:5-7. 7:12 எபிரேயத்தில், ‘உதவியின் கல்’ என்பது பொருள்.


அதிகாரம் 8

இஸ்ரயேலர் தங்களுக்கு ஓர் அரசனை வேண்டல்


1சாமுவேலுக்கு வயது முதிர்ந்த போது அவர் தம் புதல்வர்களை இஸ்ரயேலின் மீது நீதித் தலைவராக அமர்த்தினார். 2அவருடைய தலைமகனின் பெயர் யோவேல்; இளையவனின் பெயர் அபியா; இவர்கள் பெயேர்செபாவில் நீதித்தலைவர்களாய் இருந்தனர். 3ஆனால், அவருடைய புதல்வர்கள் அவர் தம் வழிமுறைகளில் நடவாமல், பொருளாசைக்கு உட்பட்டு கையூட்டு வாங்கி, நீதியை வழங்கவில்லை.


4எனவே, இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் ஒன்று கூடி சாமுவேலிடம் இராமாவுக்கு வந்தனர். 5அவர்கள் அவரிடம், “இதோ உமக்கு வயது முதிர்ந்துவிட்டது. உம் புதல்வர்கள் உம் வழிமுறையில் நடப்பதில்லை. ஆகவே, அனைத்து வேற்றினங்களிடையே இருப்பது போன்று ஓர் அரசனை நியமித்தருளும்” என்று கேட்டுக் கொண்டனர்.✠


6‘எங்களுக்கு நீதி வழங்க ஓர் அரசனைத் தாரும்’ என்று அவர்கள் கேட்டது சாமுவேலுக்குத் தீயதெனப்பட்டது. சாமுவேல் ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டார். 7ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: “மக்கள் குரலையும், அவர்கள் உன்னிடம் கூறுவது அனைத்தையும் கேள். ஏனெனில், அவர்கள் உன்னை புறக்கணிக்கவில்லை. அவர்களை நான் ஆளாதபடி என்னைத் தான் புறக்கணித்துவிட்டனர். 8நான் அவர்களை எகிப்தினின்று கொண்டுவந்த நாள் முதல் இந்நாள் வரை அவர்கள் என்னைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்து அனைத்திலும் அவ்வாறே செய்தது போல் உனக்கும் செய்கிறார்கள். 9இப்போது அவர்கள் குரலுக்குச் செவிகொடு. ஆனால், அவர்களைக் கண்டித்து எச்சரி. அவர்களை ஆளப் போகும் அரசனின் உரிமைகளைத் தெரியப்படுத்து”.


10ஓர் அரசன் வேண்டுமென்று தம்மிடம் கேட்ட மக்களுக்கு சாமுவேல் ஆண்டவர் கூறிய அனைத்தையும் கூறினார். 11“உங்கள் மீது ஆட்சி செய்யும் அரசனின் உரிமைகளாவன: அவன் உங்கள் புதல்வர்களை தன் தோரோட்டிகளாகவும் தன் குதிரை வீரர்களாகவும் வைத்துக் கொள்வான். அவர்களைத் தன் தேர்களுக்கு முன் ஓடச் செய்வான். 12அவன் அவர்களை ஆயிரத்தினர் தலைவராகவும், ஐம்பதிமர் தலைவராகவும், தன் நிலத்தை உழுபவராகவும், தன் விளைச்சலை அறுவடை செய்பவராகவும், தன் போர்க்கருவிகளையும் தேர்க் கருவிகளையும் செய்பவராகவும் நியமித்துக் கொள்வான். 13மேலும், அவன் உங்கள் புதல்வியரைப் பரிமளப் தைலம் செய்கிறவர்களாகவும், சமைப்பவர்களாகவும், அப்பம் சுடுபவர்களாகவும், வைத்துக்கொள்வான். 14அவன், உங்கள் வயல்களிலும், திராட்சைத் தோட்டங்களிலும், ஒலிவத் தோப்புகளிலும் சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு தன் அலுவலருக்குக் கொடுப்பான். 15உங்கள் தானியத்திலும் திராட்சைப் பலனிலும், பத்தில் ஒரு பங்கை எடுத்துக் கொண்டு தன் காரியத் தலைவருக்கும் அலுவலருக்கும் கொடுப்பான். 16உங்கள் வேலைகாரரையும் வேலைக்காரிகளையும், உங்கள் கால்நடைகளில்⁕ சிறந்தவற்றையும் உங்கள் கழுதைகளையும் தன் சொந்த அலுவலுக்காகப் பயன்படுத்துவான். 17உங்கள் மந்தைகளில் பத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்வான். நீங்கள் அவனுக்கு பணியாளர்களாய் இருப்பீர்கள்.18அந்நாளில் நீங்களே உங்களுக்காகத் தேர்ந்து கொண்ட அரசனை முன்னிட்டு முறையிடுவீர்கள். அந்நாளில் ஆண்டவர் உங்களுக்கு செவி கொடுக்கமாட்டார்.”


19மக்களோ சாமுவேலின் குரலுக்கு செவி கொடுக்க மறுத்து, “இல்லை, எங்களுக்குக் கட்டாயமாய் ஒர் அரசன் வேண்டும். 20அனைத்து வேற்றின மக்கள் போலவே நாங்களும் இருப்போம். எங்கள் அரசன் எங்களுக்கு நீதி வழங்குவார். எங்கள் போர்களை முன்னிட்டு நடத்துவார்” என்றனர். 21மக்கள் கூறியவை அனைத்தையும் சாமுவேல் கேட்டு, அவற்றை ஆண்டவர் காதில் போட்டு வைத்தார். 22ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: “அவர்கள் குரலுக்குச் செவி கொடுத்து அவர்கள் மீது ஓர் அரசனை ஆளச் செய். பின்பு, சாமுவேல் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, “ஒவ்வொருவரும் தம் நகருக்குச் செல்லட்டும்” என்றார்.


8:5 இச 17:14. 8:16 ‘இளைஞர்கள்’ என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 9

சவுல் சாமுவேலைச் சந்தித்தல்


1பென்மியன் குலத்தில் கீசு என்ற ஆற்றல்மிகு வீரர் ஒருவர் இருந்தார். அவர் பென்மியனின் அபியாவுக்குப் பிறந்த பெக்கோரத்தின் மகனான செரோரின் மகன் அபியேலுக்குக் பிறந்தவர். 2அவருக்குச் சவுல் என்ற ஓர் இளமையும் அழகும் கொண்ட மகன் இருந்தார். இஸ்ரயேலின் புதல்வருள் அவரைவிட அழகு வாய்ந்தவர் எவரும் இலர். மற்ற அனைவரையும் விட அவர் உயரமானவர். மற்ற அனைவரும் அவர் தோள் உயரமே இருந்தனர்.


3சவுலின் தந்தை கீசின் கழுதைகள் காணாமற் போயின. கீசு தம் மகன் சவுலை அழைத்து, “பணியாளன் ஒருவனை உன்னோடு கூட்டிக் கொண்டு கழுதைகளைத் தேடிப்போ” என்றார். 4அவர் எப்ராயிம் மலைநாட்டையும் சாலிசா பகுதியையும் கடந்து சென்றார். அவற்றைக் காணவில்லை; சாலிம் நாட்டு வழியே சென்றார். அங்கும் அவை இல்லை; பென்யமின் நாட்டைக் கடந்து சென்றார். அங்கும் அவை தென்படவில்லை. 5பிறகு, அவர்கள் சூபு நாட்டுக்கு வந்தபோது, சவுல் தம் பணியாளிடம், “வா, நாம் திரும்பிச் செல்வோம். ஏனெனில், என் தந்தை கழுதைகளை மறந்துவிட்டு நம்மைப்பற்றிக் கவலைக் கொள்வார்.”


6அதற்குப் பணியாள் “இதோ, இந்நகரிலே கடவுளின் அடியவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெருமதிப்புக்கு உரியவர். அவர் சொல்வதெல்லாம் அப்படியே நிகழ்கிறது. ஆகவே, நாம் அங்கே செல்வோம். ஒரு வேளை நாம் செல்ல வேண்டிய வழி எதுவென்று அவர் நமக்கு எடுத்துரைப்பார்” என்றான். 7சவுல் தம் பணியாளிடம், “சரி செல்வோம். ஆனால், அவருக்கு நாம் என்ன கொடுப்போம்? ஏனெனில், நம் பைகளிலிருந்த அப்பம் தீர்ந்து விட்டது. கடவுளின் அடியவருக்கு அன்பளிப்புத் தர எதுவும் இல்லையே! என்ன செய்வோம்?” என்றார். 8பணியாள் சவுலை நோக்கி, “இதோ! என்கையில் இன்னும் மூன்று கிராம் அளவுள்ள வெள்ளி இருக்கிறது. அதைக் கடவுளின் அடியாருக்குத் தருவேன். அவர் நம் வழியை நமக்கு எடுத்துரைப்பார்” என்றான்.


9அக்காலத்தில் இஸ்ரயேலில், கடவுளின் திருவுளத்தை நாடிச் செல்வோர் “வாருங்கள், திருக்காட்சியாளரிடம் செல்வோம்” என்பர். ஏனெனில், இன்றைய இறைவாக்கினர் அன்று “திருக்காட்சியாளர்” என்று அழைக்கப்பட்டார். 10சவுல் தம் பணியாளரிடம், “நீ சொன்னது சரியே, வா செல்வோம்” என்றார். அவர்கள் கடவுளின் அடியாள் இருந்த நகருக்குள் சென்றனர்.


11அவர்கள் நகரில் மேட்டில் ஏறிக் கொண்டிருந்தபோது இளம் பெண்கள் தண்ணீர் எடுத்து வருவதைக் கண்டு அவர்களிடம் “திருக்காட்சியாளர் இங்கே இருக்கிறாரா?”என்று கேட்டனர். 12அதற்கு அவர்கள் ஆம், “உங்களுக்கு முன்பே வந்துவிட்டார். விரைந்து செல்லுங்கள். இன்று அவர் நகருக்குள் வந்துள்ளார். இன்று தொழுகை மேட்டில் மக்களுக்காகப் பலி செலுத்தப்படுகிறது. 13நீங்கள் நகருக்குள் நுழையும் போது, உண்பதற்காக அவர் தொழுகைமேட்டிற்கு ஏறிச் செல்வதற்கு முன்பே அவரை நீங்கள் காண்பீர்கள். ஏனெனில், அவர் சென்று பலிக்கு ஆசி வழங்கும் வரை மக்கள் உண்ண மாட்டார்கள்; பிறகு தான் அழைக்கப்பட்டோர் உண்பர். உடனே சென்றால் இப்போதே நீங்கள் அவரைக் காணலாம்” என்றனர். 14அவ்வாறே, அவர்கள் நகருக்குள் சென்றார்கள். அவர்கள் நகரின் மையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, தொழுகை மேட்டுக்கு வந்துகொண்டிருந்த சாமுவேல் அவர்களுக்கு எதிரே வந்தார்.


15சவுல் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பே சாமுவேல் செவியில் விழும் படிஆண்டவர் வெளிபடுத்தியிருந்தது: 16“நாளை இந்நேரம் பென்யமின் நாட்டினன் ஒருவனை உன்னிடம் அனுப்புவேன். என் மக்களான இஸ்ரயேலின் தலைவனாக அவனை நீ திருப்பொழிவு செய். பெலிஸ்தியரின் கையின்று அவன் என் மக்களை விடுவிப்பான். என் மக்களை நான் கண்ணோக்கினேன். அவர்களின் கூக்குரல் என்னிடம் வந்துள்ளது.” 17சாமுவேல் சவுலைக் கண்டதும் ஆண்டவர் அவரிடம் “இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன்! இவனே என் மக்கள் மீது ஆட்சிபுரிவான்” என்றார்.


18சவுல் வாயிலின் நடுவே சாமுவேலை நெருங்கி,“ திருக்காட்சியாளரின் வீடு எங்கே? தயைகூர்ந்து சொல்லும்” என்று கேட்டார். 19சாமுவேல் சவுலுக்கு கூறியது: “நானே திருக்காட்சியாளன். எனக்கு முன்பாக தொழுகை மேட்டுக்குச் செல். இன்று நீ என்னோடு உண்ண வேண்டும். உன் உள்ளத்தில் இருப்பது அனைத்தையும் நாளைக் காலையில் நான் உனக்கு எடுத்துரைத்து உன்னை அனுப்பிவிடுகிறேன். 20மூன்று நாளுக்குமுன் காணாமற் போன கழுதைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனெனில், அவை அகப்பட்டுவிட்டன. இஸ்ரயேலின் முழு விருப்பமும் யார் மீது? உன் மீதும் உன் தந்தையின் வீட்டார் அனைவர் மீதும் அன்றோ? 21சவுல் மறுமொழியாக கூறியது: “இஸ்ரயேலில் மிகச் சிறிதான பென்யமின் குலத்தைச் சார்ந்தவனன்றோ நான்? பென்யமின் குலத்தில் அனைத்துக் குடும்பங்களிலும் என்னுடையது மிகச் சிறிதன்றோ! பின்பு, நீர் ஏன் என்னிடம் இவ்வாறு பேசுகிறீர்?”


22பின்னர், சாமுவேல் சவுலையும் அவருடைய பணியாளையும் உணவறைக்குக் கூட்டிவந்து, அழைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ முப்பது ஆள்களுள் அவர்களுக்கு முதலிடம் கொடுத்தார். 23மேலும், சாமுவேல் சமையல் காரனை நோக்கி, “நான் உன்னிடம் ஒரு பங்கைக் கொடுத்து, பத்திரப் படுத்தச் சொல்லியிருந்தேனே அதைக் கொண்டு வந்து வை” என்றார். 24சமையல்காரன் ஒரு தொடையை அதன் மேற்பாதியோடு எடுத்து வந்து சவுலுக்குமுன் வைத்தான். அப்போது சாமுவேல், “இதோ! உனக்கு முன்பாக வைத்திருப்பதைச் சாப்பிடு. நான் மக்களை விருந்துக்கு அழைத்தது முதல், இது உனக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்தது” என்றார். அன்று சவுல் சாமுவேலுடன் உண்டார். 25பிறகு, அவர்கள் தொழுகை மேட்டிலிருந்து இறங்கி நகருக்கு வந்தனர். சாமுவேல் சவுலுடன் மாடியில் பேசிக் கொண்டிருந்தார்.


சாமுவேல் சவுலை அரசராய் திருநிலைப்படுத்தல்


26அவர்கள் வைகறையில் துயில் எழுந்தனர். சாமுவேல் மாடியில் இருந்த சவுலை அழைத்து, “எழுந்திரு நான் உன்னை அனுப்பிவிடுகிறேன்” என்றார். சவுல் எழுந்தார். பின் அவரும் சாமுவேலும் இருவருமாக வெளியே சென்றனர். 27அவர்கள் நகரின் எல்லை வரை வந்த போது, சாமுவேல் சவுலை நோக்கி, “பணியாளை நமக்கு முன் நடந்து போகச் சொல்” என்றார். அவ்வாறே அவனும் முன்னே நடந்து சென்றான். அப்பொழுது சாமுவேல் சவுலிடம், “நீ சற்று நில். கடவுளின் வார்த்தையை நான் உனக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.


அதிகாரம் 10
abcd
அதிகாரம் 11

சவுல் அம்மோனியரைத் தோற்கடித்தல்


1அக்காலத்தில் நாகாசு என்னும் அம்மோனியன் வந்து, கிலயாதில் உள்ள யாபோசை முற்றுகையிட்டான். யாபோசிலிருந்து மக்கள் அனைவரும் நாகாசிடம் சென்று, “எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்” என்றனர். 2அம்மோனியன் நாகாசு அவர்களை நோக்கி, “நான் உங்களோடு செய்யும் உடன்படிக்கை; உங்களுள் ஒவ்வொருவனின் வலக் கண்ணும் பிடுங்கப்படும். இஸ்ரயேலர் அனைவரையும் அவமானத்திற்கு உள்ளாக்குவேன்” என்றான்.


3யாபேசின் பெரியோர்அவனிடம் கூறியது: “ஏழு நாள்கள் எங்களுக்குத் தவணை தாரும். நாங்கள் இஸ்ரயேல் எல்லை முழுவதும் தூதர்களை அனுப்புவோம். எங்களை மீட்பார் எவரும் இல்லையெனில் நாங்கள் உங்களிடம் சரணடைவோம்.” 4தூதர்கள் சவுலின் ஊராகிய கிபயாவுக்கு வந்து மக்கள் செவிபடச் செய்தியை சொல்ல, மக்கள் அனைவரும் குரலெழுப்பி அழுதனர். 5அப்போது சவுல் வயலினின்று மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தார். “மக்களுக்கு என்ன நேரிட்டது? அவர்கள் ஏன் அழுகிறார்கள்?” என்று சவுல் கேட்டார். யாபேசின் ஆள்கள் சொன்னதை அவரிடம் சொன்னார்கள்.


6இச்செய்தியை அவர் கேட்டுக் கொண்டிருந்தபோது, கடவுளின் ஆவி அவரை வலிமையுடன் ஆட்கொள்ள, அவரது சினம் கனன்றது. 7அவர் ஒரு சோடி மாடுகளை பிடித்து, துண்டுகளாக வெட்டி, அவற்றை தூதர்கள் வழியாக இஸ்ரயேல் எல்லை முழுவதும் அனுப்பி, சவுலின் பின்னும் சாமுவேலின் பின்னும் வராதவனின் மாடுகளுக்கு இவ்வாறு நேரிடும் என்று சொல்லியனுப்பினார். அப்போது ஆண்டவர் பற்றிய அச்சம் மக்களை ஆட் கொண்டது. அவர்கள் ஒன்றுதிரண்டு வந்தார்கள்.


8அவர் அவர்களைப் பெசேக்கில் கணக்கெடுத்தபோது இஸ்ரயேலின் மக்கள் மூன்று இலட்சம் பேரும் யூதாவினர் முப்பதாயிரம் பேரும் இருந்தனர். 9வந்திருந்த தூதர்களிடம், “நாளை வெயில் ஏறும்முன் உங்களுக்கு மீட்பு கிடைக்கும் என்று கிலயாதிலுள்ள யாபேசின் மக்களுக்குத் தெரிவியுங்கள்” என்று அறிவிக்கப்பட்டது. தூதரும் அவ்வாறே யாபேசின் மக்களிடம் சொல்ல, அவர்கள் மகிழ்ச்சியுற்றனர். 10ஆகவே, யாபோசின் ஆட்கள் “நாளை நாங்கள் உம்மிடம் சரணடைவோம். உம் விருப்பப்படியே எங்களுக்குச் செய்யும்” என்றனர்.


11மறுநாள் சவுல் மக்களை மூன்று படைகளாகப் பிரித்தார். கீழ்வானம் வெளுத்தபோதே அவர்கள் பாளையத்தினுள் வந்து, வெயில் ஏறுவதற்குள் அம்மோனியரை வெட்டி வீழ்த்தினர். இருவர் கூட இணையாதபடி எஞ்சி இருந்தவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள்.


12பிறகு, மக்கள் சாமுவேலை நோக்கி, “சவுலா எங்களை ஆள்வது? என்று கேட்டவர்களை கொண்டு வாருங்கள். அவர்களைக் கொன்று போடுவோம்” என்றனர். 13ஆனால், சவுல், “இன்று யாரையும் கொல்லக் கூடாது. ஏனெனில், ஆண்டவர் இஸ்ரயேலுக்கு மீட்பு அளித்துள்ளார்” என்றார். 14சாமுவேல் மக்களை நோக்கி, “வாருங்கள் கில்காலுக்குச் சென்று, அங்கே அரசாட்சியை உறுதிப்படுத்துவோம்.” என்றார். 15மக்கள் அனைவரும் கில்காலுக்குச் சென்று, அங்கே ஆண்டவர் திருமுன் சவுலை அரசராக்கி, நல்லுறவுப் பலிகளைச் செலுத்தினார்கள். சவுலும் இஸ்ரயேலும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.


அதிகாரம் 12
abcd
அதிகாரம் 13

பெலிஸ்தியருக்கு எதிராய்ப் போர்


1சவுல் அரசராகி ஓராண்டு ஆனபின், இஸ்ரயேல் மீது இரண்டாம் ஆண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தார். 2அப்பொழுது சவுல் தமக்காக இஸ்ரயேலிருந்து மூவாயிரம் பேரைத் தேர்ந்து கொண்டார். மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும் சவுலுடன் இரண்டாயிரம் பேர் இருந்தனர். பென்யமினைச் சார்ந்த கிபயாவில் யோனாத்துடன் ஆயிரம் பேர் இருந்தனர். எஞ்சிய மக்களை அவர் அவரவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.


3யோனத்தான் கெபாவில் எல்லைக் காவலில் இருந்த பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தினார். பெலிஸ்திய மக்கள் அதைக் கேள்வியுற்றனர். ‘எபிரேயரும் இதைக் கேட்கட்டும்’ என்று நாடெங்கும் சவுல் எக்காளம் ஊதுவித்தார். 4சவுல் பெலிஸ்தியரின் எல்லைக் காவலரை வெட்டி வீழ்த்தியதையும் அதனால் பெலிஸ்தியருக்கு இஸ்ரயேல்மீது கடும்பகை ஏற்பட்டதையும் அறிந்து இஸ்ரயேலர் அனைவரும் சவுலோடு சேர்ந்து கொண்டு கில்காலுக்குச் சென்றனர்.


5பெலிஸ்தியர் இஸ்ரயேலோடு போரிட முப்பதாயிரம் தேர்களோடும் ஆறாயிரம் குதிரை வீரர்களோடும் கடற்கரை மணலளவு வீரர்களோடும் திரண்டு வந்து பெத்தேலுக்குக் கிழக்கே மிக்மாசில் பாளையம் இறங்கினார்கள். 6இஸ்ரயேலர் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியினால் இன்னலுற்று குகைகளிலும், புதர்களிலும், பாறைகளிலும், கல்லறைகளிலும், பள்ளங்களிலும் ஒளிந்து கொண்டனர். 7எபிரேயர் சிலர் யோர்தனைக் கடந்து காத்து, கிலயாது நாடுகளுக்குச் சென்றனர். சவுல் இன்னும் கில்காலில் இருந்தார். மக்கள் அனைவரும் நடுங்கிக் கொண்டே அவரைப் பின்சென்றனர்.


8அவர் சாமுவேல் குறிப்பிட்ட படி ஏழு நாள்கள் காத்திருந்தார். ஆனால்,சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. ஆகவே, மக்கள் அவரைவிட்டுச் சிதறத் தொடங்கினர்.✠ 9அப்போது சவுல் “எரிபலியையும் நல்லுறவுப் பலியையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று சொல்லி அவ்வாறே எரிபலி செலுத்தினார். 10அவர் எரிபலி செலுத்தி முடிந்தவேளை சாமுவேல் அங்கு வந்தார். சவுல் அவரை சந்திக்கச் சென்று வரவேற்றார்.


11சாமுவேல், “நீர் என்ன செய்தீர்? என்று கேட்க அதற்கு சவுல் கூறியது: “மக்கள் என்னிடமிருந்து சிதறிப் போவதைக் கண்டேன். நீரும் குறித்த காலத்தில் வரவில்லை. பெலிஸ்தியரும் மிக்ஸ்பாவில் ஒன்று திரண்டு கொண்டிருந்தார்கள். 12அப்பொழுது ‘பெலிஸ்தியர் எனக்கு எதிராகக் கில்காலுக்கு இறங்கி வருவர்; நானோ இன்னும் ஆண்டவரின் தயவை நாடவில்லை’ என்று உணர்ந்ததால், நான் எரிபலி செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானேன்.”


13சாமுவேல் சவுலை நோக்கி, “நீர் அறிவீனமாய்ச் செயல்பட்டீர். உம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படி நீர் நடக்கவில்லை. இல்லையேல் ஆண்டவர் இஸ்ரயேல் மீது உமது அரசை என்றென்றும் நிறுவியிருந்திருப்பார். 14ஆனால், உமது அரசு நிலைக்காது. ஆண்டவர் தம் மனதிற்கு ஏற்ப ஒருவரைத் தமக்கெனத்தேடி அவரையே தம் மக்களின் தலைவராய் நியமித்துள்ளார். ஏனெனில், ஆண்டவர் கட்டளையின் படி நீர் நடக்கவில்லை” என்றார்.✠


15சாமுவேல் எழுந்து கில்காலிலிருந்து பென்யமினைச் சார்ந்த கிபயாவுக்கு சென்றார். சவுல் தம்மோடு இருந்த வீரர்களைக் கணக்கெடுத்தார். அவர்கள் ஏறத்தாழ அறுநூறு பேர். 16சவுலும் அவர் மகன் யோனத்தானும், அவரோடு இருந்த வீரர்களும் பென்யமினைச் சார்ந்த கெபாவில் தங்கினர். பெலிஸ்தியரோ மிக்மாசில் பாளையம் இறங்கியிருந்தார்கள். 17பெலிஸ்தியரின் பாளையத்திலிருந்து மூன்று படைகளாகக் கொள்ளைக்காரர் புறப்பட்டு வந்தனர். ஒரு படையினர் ஒபிரா வழியாகச் சூவால் நாட்டிற்குப் பிரிந்து சென்றனர். 18இன்னொரு படையினர் பெத்கோரோன் வழியாகச் சென்றனர். வேறொரு படையினர் பாலைநில கெபோயிமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லை வழியில் சென்றனர்.


19“எபிரேயர் தங்களுக்காக வாள்களையும் ஈட்டிகளையும் செய்து கொள்ளக்கூடாது” என்று பெலிஸ்தியர் திட்டமிட்டிருந்ததால் இஸ்ரயேல் நாடெங்கும் கொல்லன் எவனும் காணப்படவில்லை. 20இஸ்ரயேலர் அனைவரும் தங்கள் கலப்பைக் கொழுக்களையும் மண்வெட்டிகளையும், கடப்பாரைகளையும், கோடாரிகளையும், அரிவாள்களையும் தீட்டுவதற்காகப் பெலிஸ்தியரிடமே சென்றனர். 21தீட்டுவதற்கான கூலி கலப்பைக் கொழு, மண்வெட்டி, முக்கூர்க்கருவி, கோடாரி, தாற்றுக்கோல் ஆகிய ஒவ்வொன்றும் எட்டுகிராம் அளவுள்ள நாணயம்⁕ ஆகும்.


22ஆகவே, போரிடும் நாள் வந்த போது சவுலோடும் யோனத்தானோடும் இருந்த வீரர் கையில் வாளோ ஈட்டியோ கிடையாது. சவுலும் யோனத்தானும் மட்டும் அவற்றை வைத்திருந்தார்கள். 23பெலிஸ்தியரின் எல்லைக் காவல் மிக்மாசு கணவாய் வரை நீடித்திருந்தது.


13:8 1 சாமு 10:8. 13:14 திப 13:22. 13:21 ‘பீம்’ என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 14

யோனத்தானின் தீரச் செயல்


1ஒருநாள் சவுலின் மகன் யோனத்தான் தம் படைக்கலன்களை வைத்திருந்த ஊழியனை நோக்கி “வா, நமக்கு எதிரே அந்தப்பக்கம் இருக்கின்ற பெலிஸ்தியரின் எல்லைக் காவலுக்குச் செல்வோம்” என்றார். ஆனால் இதைத் தம் தந்தையிடம் சொல்லவில்லை. 2சவுல் கிபயாவின் எல்லையில் மிக்ரோனிலிருந்து ஒரு மாதுளை மரத்தின் கீழ் காத்திருந்தார். அவரோடு இருந்த மக்கள் ஏறக்குறைய அறுநூறு பேர். 3அப்போது சீலோவில் ஆண்டவரின் குரு ஏலியின் மகன் பினகாசுக்குப் பிறந்த இக்காபோதின் சகோதரனான அகிப்தூபின் மகன் அகியா ஏபோதை அணிந்திருந்தான். யோனத்தான் சென்றிருந்தது மக்களுக்குத் தெரியாது.


4யோனத்தான் பெலிஸ்தியரின் எல்லைக் காவலுக்குச் செல்ல முயன்ற கணவாயில் இப்பக்கமும் அப்பக்கமும் செங்குத்தான பாறைகள் இருந்தன. ஒன்று ‘போட்சேசு’ என்றும் மற்றொன்று ‘செனே’ என்றும் அழைக்கப்பட்டன. 5ஒரு தூண் பாறை வடக்கே மிக்மாசுக்கு எதிரிலும், மற்றொன்று தெற்கே கிபாவுக்கு எதிரிலும் இருந்தன.


6யோனத்தான் தம் படைக்கலன்களை வைத்திருந்த ஊழியனை நோக்கி “வா, இந்த விருத்தசேதனம் அற்றோரின் எல்லைக்காவலுக்குக் கடந்து செல்வோம். ஒரு வேளை ஆண்டவர் நம் சார்பாகச் செயல்படுவார். ஏனெனில், சிலரைக் கொண்டோ பலரைக் கொண்டோ மீட்பு அளிப்பதில் ஆண்டவருக்குத் தடையில்லை” என்றார். 7அதற்கு, அவர் தம் படைக்கலன்களைத் தாங்குவோன், “உம் மனம் போல் செய்யும். நீர் முதலில் செல்லும். உம் மனத்திற்கேற்ப செய்யுமாறு நான் உம்மோடு இருக்கிறேன்” என்று சொன்னான். 8பிறகு, யோனத்தான், “இதோ! நாம் கடந்து அம்மனிதரிடம் சென்று, நம்மையே அவர்களுக்கு வெளிப்படுத்துவோம். 9அவர்கள் நம்மிடம் ‘நாங்கள் உங்களிடம் வரும்வரை அங்கேயே நில்லுங்கள்’ என்று கூறினால், நாம் அவர்களிடம் செல்லாமல் நம் இடத்திலேயே நிற்போம். 10மாறாக, ‘எங்களிடம் வாருங்கள்’ என்று சொன்னால் நாம் அவர்களிடம் செல்வோம். ஆண்டவர் அவர்களை நம்மிடம் ஓப்படைத்துள்ளார் என்பதற்கு இதுவே அடையாளமாய் இருக்கும்.


11ஆகவே, இருவரும் பெலிஸ்தியரின் எல்லைக் காவலுக்குச் சென்று தங்களையே வெளிப்படுத்த, பெலிஸ்தியர், “இதோ! தாங்கள் ஒளிந்திருந்த குழிகளைவிட்டு எபிரேயர் வெளியே வருகின்றனர்” என்று கூறினர். 12எல்லைக் காவலர் யோனத்தானுக்கும் அவர் தம் படைக்கலன்களைத் தாங்குவோனுக்கும் மறுமொழி கூறி, “எம்மிடம் வாருங்கள், உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம்” என்றனர்.அப்போது யோனத்தான் தம் படைகளைத் தாங்குவோனிடம், “என் பின்னால் வா, ஏனெனில், ஆண்டவர் அவர்களை இஸ்ரயேலின் கையில் ஒப்புவித்துள்ளார்” என்றார். 13யோனத்தான் தன் கைகளாலும் கால்களாலும் ஊர்ந்து மேலே செல்ல, அவர் தம் படைக்கலன்களைத் தாங்குவோன் பின்னால் சென்றான். யோனத்தான் அவர்களைத் தாக்க, அவர்தம் படைக்கலன்களைத் தாங்குவோன் அவருக்குப் பின் வந்து அவர்களைக் கொன்றான். 14யோனத்தானும் அவர்தம் படைக்கலன்களைத் தாங்குவோனும் நடத்திய முதல் தாக்குதலில் ஏறக்குறைய இருபது பேர், அரை ஏர் நிலப்பரப்பில் வீழ்ந்தார்கள். 15அப்பொழுது பாளையத்திலும் நிலவொளியிலும் மக்கள் அனைவரிடத்திலும் நடுக்கம் ஏற்பட்டது. எல்லைக் காவலர்களும் கொள்ளையிடுவோரும் கூட நடுநடுங்கினர். நிலமும் நடுங்கிற்று. அது ஆண்டவரால் ஏற்பட்ட நடுக்கமாக இருந்தது.


பெலிஸ்தியரின் தோல்வி


16பென்யமின் பகுதியிலுள்ள கிபயாவில் இருந்த சவுலின் சாமக் காவலர் பெலிஸ்தியர் கூட்டம் இங்கும் அங்கும் சிதறிக் கரைந்து விட்டதைக் கண்டார்கள். 17சவுல் தம் ஆள்களை நோக்கி, “கணக்கெடுத்து நம்மைவிட்டுச் சென்றவர் யார் என்று பாருங்கள்” என்றார். அவர்கள் கணக்கெடுத்துப் பார்க்க, யோனத்தானும் அவர்தம் படைக்கலன்களைத் தாங்குவோனும் இல்லை என்று கண்டனர். 18பிறகு, சவுல் அகியாவை நோக்கி, “கடவுளின் பேழையைக் கொண்டு வா” என்றார். ஏனெனில், அக்காலத்தில் பேழை இஸ்ரயேல் மக்களோடு இருந்தது. 19குருவிடம் சவுல் பேசிக்கொண்டிருந்த போது பெலிஸ்தியரின் பாளையத்தில் ஏற்பட்ட குழப்பம் தொடர்ந்து மிகுதியாயிற்று. சவுல் குருவிடம், “உன் கையை விலக்கிக் கொள்” என்றார். 20அதன்பின் சவுலும் அவரோடிருந்த ஆள்கள் அனைவரும் ஒன்று திரண்டு போருக்குச் சென்றனர். இதோ, பெலிஸ்தியர் ஒருவன் ஒருவனுக்கு எதிராக வாளெடுக்க அவர்களிடையே மாபெரும் அச்சம் ஏற்பட்டது. 21ஏற்கெனவே பெலிஸ்தியரோடு சேர்ந்து கொண்டு அவர்களோடு பாளையத்தில் திரிந்துவந்த எபிரேயரும், சவுலோடும் யோனாத்தானோடும் இருந்த இஸ்ரயேலுடன் இணைந்து கொண்டனர். 22எப்ராயிம் மலைநாட்டில் ஒளிந்து கொண்டிருந்த இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்தியர் தப்பியோடுவதைக் கேள்வியுற்று, அவர்களும் அவர்களைத் துரத்தித் தாக்கினார்கள். 23அன்று ஆண்டவர் இஸ்ரயேலை விடுவித்தார். போர் பெத்தாவேனையும் தாண்டி நடந்தது.


போருக்குப்பின் நிகழ்ந்தவை


24இஸ்ரயேல் மக்கள் அன்று சோர்வுற்றனர். ஏனெனில், சவுல் அவர்களை நோக்கி, “நான் என் எதிரிகளை பழிவாங்க வேண்டும். ஆகவே, மாலைக்குள் யாராவது உணவு கொண்டால் அவன் சபிக்கப்படுவான்” என்று ஆணையிட்டுக் கூறினார். மக்களில் எவரும் அன்று ஏதும் உண்ணவில்லை. 25பின்பு, நாட்டின் மக்கள் அனைவரும் ஒரு காட்டினுள் வந்தனர். அங்கே தரையில் தேன் காணப்பட்டது. 26மக்கள் காட்டினுள் நுழைந்த போது தேன் ஒழுகிக் கொண்டிருந்தது. ஆனால், எவனும் தன் தன் கையை வாயில் வைக்கவில்லை. ஏனெனில், மக்கள் சாபத்திற்கு அஞ்சினார்கள். 27ஆனால், தன் தந்தை மக்களுக்கு ஆணையிட்டுச் சொன்னதை யோனத்தான் கேள்விப் படவில்லை. ஆகவே, அவர் தம் கையிலிருந்த கோலை நீட்டி, அதன் நுனியால் தேன் கூட்டைக் குத்தி, கையில் எடுத்ததைத் தன் வாயில் வைத்தார். அவர் கண்கள் தெளிவடைந்தன. 28அதற்கு வீரர்களுள் ஒருவர் கூறியது: “இன்றைக்கு உணவு கொள்பவன் சபிக்கப்பட்டவன் என்று உம் தந்தை உறுதியாக ஆணையிட்டுள்ளார். மக்களும் சோர்ந்துள்ளார்கள்.”


29அப்போது யோனத்தான், “என் தந்தை நாட்டைக் குழப்புகிறார். பாருங்கள்; நான் சிறிதளவு தேனைச் சுவைத்தேன். இப்போது என் கண்கள் தெளிவடைந்துள்ளன. 30இன்று மக்கள் தங்களுக்குக் கிடைத்த எதிரியின் கொள்ளைப் பொருள்களை நன்றாக உண்டிருந்தால், பெலிஸ்தியருக்கு பெரிய அழிவு ஏற்பட்டிருக்கும்” என்றார்.


31அன்று வீரர்கள் பெலிஸ்தியரை மிக்மாசு முதல் அய்யலோன்வரை முறியடித்தனர். எனவே, அவர்கள் மிகவும் சோற்வுற்றிருந்தனர். 32அப்போது வீரர்கள் கொள்ளைப் பொருட்கள் மேல் பாய்ந்து ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையில் போட்டு, அடித்து, அவற்றை இரத்தத்தோடே உண்டார்கள்.


33வீரர்கள் இரத்தத்தோடு உண்டு ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்கிறார்கள் என்று சவுலிடம் அறிவிக்கப்பட்டது. அதற்குச் சவுல்,“ நீங்கள் வஞ்சித்து விட்டீர்கள். இப்போதே ஒரு பெரும் கல்லை என்னிடம் உருட்டிக் கொண்டு வாருங்கள்" என்றார்.✠ 34மேலும், சவுல் கூறியது: “நீங்கள் வீரர்களிடையே சென்று, ‘ஒவ்வொருவனும் தன் மாட்டையோ ஆட்டையோ என்னிடம் கொண்டு வந்து இங்கே அடித்துச் சாப்பிடட்டும். இரத்தத்தோடு உண்டு ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்ய வேண்டாம்’ எனச் சொல்லுங்கள், ஆகவே, ஒவ்வொருவனும் அன்று இரவே தன் மாட்டைக் கொண்டு வந்து அங்கே அடித்தான். 35சவுல் ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார். அதுவே அவர் ஆண்டவருக்கு எழுப்பிய முதல் பலிபீடம்.


36அதன்பிறகு சவுல், “இரவில் பெலிஸ்தியரைப் பின் தொடர்ந்து சென்று விடியற்காலை வரை அவர்களைக் கொள்ளையடிப்போம். அவர்களுள் ஒருவரையும் விட மாட்டோம்” என்றார். அதற்கு வீரர்கள், “உமக்கு நல்லதெனப் பட்டத்தைச் செய்யும்” என்றார்கள். குருக்களோ, “நாம் இங்கே கடவுளை அணுகுவோம்” என்றார்கள்.


37சவுல் கடவுளை நோக்கி, “நான் பெலிஸ்தியரைப் பின் தொடரலாமா? அவர்களை இஸ்ரயேலிடம் ஒப்படைப்பீரோ?” என்று கேட்டார். 38ஆனால், அன்று அவர் மறுமொழி கூறவில்லை.எனவே சவுல், “வீரர்களின் தலைவர்களே, நீங்கள் அனைவரும் இங்கேவாருங்கள்; இன்று இப்பாவம் எவ்வாறு ஏற்பட்டது என்று கண்டறியுங்கள். 39இஸ்ரயேலை விடுவிக்கும் ஆண்டவர் மீது ஆணையாகச் சொல்கிறேன். இதற்குக் காரணமாக என் மகன் யோனத்தானே இருந்தாலும் அவன் கட்டாயம் சாவான்” என்றார். எனினும், எவனும் மறுமொழி கூறவில்லை. 40மேலும், அவர் இஸ்ரயேலர் அனைவரையும் நோக்கி, “நீங்கள் ஒருபக்கம் இருங்கள். என் மகன் யோனத்தானும் நானும் ஒரு பக்கம் இருக்கிறோம்" என்று கூற வீரர்களும், “உமக்கு நலமெனத் தோன்றியதைச் செய்யும்” என்று சவுலிடம் சொன்னார்கள்.


41ஆகவே, சவுல், ‘இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! முழு உண்மையை வெளிப்படுத்தும்’ என்று மன்றாட, யோனத்தான் மீதும் சவுல் மீதும் சீட்டு விழுந்தது; வீரர்களோ தப்பினர்.✠ 42பிறகு சவுல், “எனக்கும் என் மகன் யோனத்தானுக்கும் இடையே சீட்டு போடுங்கள்” எனச் சொல்ல, யோனத்தான்மீது சீட்டு விழுந்தது. 43சவுல் யோனத்தானை நோக்கி, “நீ என்ன செய்தாய்? சொல்” என வினவ, அதற்கு யோனத்தான், “என் கையில் இருந்த கோலின் நுனியால் கொஞ்சம் தேன் எடுத்து சுவைத்தேன். இதோ நான் சாகத் தயார்” என்று கூறினார். 44அதற்குச் சவுல், “யோனத்தான், நீ சாகத்தான் வேண்டும். இல்லையேல் கடவுள் எனக்கு அப்படியே செய்யட்டும்; அதற்கு மேலும் செய்யட்டும்” என்றார்.


45ஆனால், மக்கள் சவுலை நோக்கி, “இஸ்ரயேலுக்காக இவ்வளவு பெரிய விடுதலையைக் கொணர்ந்த யோனத்தான் சாகலாமா? அது கூடவே கூடாது! ஆண்டவர் மேல் ஆணை! அவர் தலையிலிருந்து ஒரு முடி தரையில் விழக்கூடாது. ஏனெனில், கடவுளின் துணையோடுதான் இன்று அவர் செயல்பட்டார்” என்றார்கள். இவ்வாறு, வீரர்கள் அவரை சாவினின்று தப்புவித்தார்கள்.46 சவுல் பெலிஸ்தியரை பின் தொடராமல் திரும்பிச் செல்ல, பெலிஸ்தியரும் தாங்கள் இடங்களுக்குச் சென்றனர்.


சவுலின் அரசாட்சி


47இவ்வாறு, சவுல் இஸ்ரயேல் மீது ஆட்சி செலுத்தி மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர், சோபா மன்னர்கள் பெலிஸ்தியர் ஆகிய சுற்றிலுமிருந்த எதிரிகள் அனைவருக்கும் எதிராகப் போர்தொடுத்தார். அவர் திரும்பிய இடமெல்லாம் அழிவை விளைவித்தார். 48அவர் வீறுகொண்டெழுந்து அமலேக்கியரை முறியடித்து, கொள்ளையிடுவோரின் கையினின்று இஸ்ரயேலை விடுவித்தார்.


49சவுலுக்குப் பிறந்த புதல்வர் யோனத்தான், இஸ்வி, மல்கிசுவா. அவருடைய இரு புதல்வியரின் பெயர்களாவன; மூத்தவள் மேராபு; இளையவள் மீக்கால். 50சவுலின் மனைவி பெயர் அகினோவாம். அவர் அகிமாசின் மகள். சவுலின் சிற்றப்பா நேரின் மகன் அப்பேனர் படைத்தலைவனாக இருந்தான். 51சவுலின் தந்தை கீசும், அப்னேரின் தந்தையான நேரும் அபியேலின் புதல்வர். 52சவுலின் வாழ் நாள் முழுவதும் பெலிஸ்தியரோடு கடும் போர் நடந்து வந்தது. வீரனையும் வலியவனையும் கண்டபோது சவுல் அவர்கள் எல்லாரையும் தம்மோடு சேர்த்துக் கொள்வதுண்டு.


14:33 தொநூ 9:4; லேவி 7:26-27; 17:10-14; 19:26; இச 12:16,23; 15:23. 14:41 எண் 27:21; 1 சாமு 28:6.


அதிகாரம் 15

அமலேக்கியருக்கு எதிராய்ப் போர்


1சாமுவேல் சவுலை நோக்கிக் கூறியது: “ஆண்டவர் தம் மக்களாகிய இஸ்ரயேலின் அரசராக உம்மைத் திருப்பொழிவு செய்ய என்னை அனுப்பினார். ஆகவே, இப்போது ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளும்.✠ 2படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார். இஸ்ரயேலர் எகிப்தினின்று வெளிவந்தபோது அமலேக்கியர் அவர்களை வழி மறித்ததற்காக அவர்களை நான் தண்டிக்கப் போகிறேன்.✠ 3ஆகவே, சென்று அமலேக்கியரைத் தாக்கி, அவர்கள் உடைமைகள் அனைத்தையும் அழித்தொழியும். அவர்கள் மீது இரக்கம் காட்டாமல் ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், பாலகர்களையும், மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்று விடும்”. 4சவுல் வீரர்களைத் திரட்டி அவர்களைத் தெலாயிமில் கணக்கெடுத்தார். இரண்டு இலட்சம் காலாள் படையினரும், பத்தாயிரம் யூதாவினரும் இருந்தனர். 5சவுல் அமலேக்கியரின் நகரை வந்தடைந்து ஒரு பள்ளத்தாக்கில் பதுங்கியிருந்தார். 6சவுல் கேனியரை நோக்கி, “இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் எகிப்தினின்று வெளிவந்த போது நீங்கள் இரக்கம் காட்டினீர்கள். ஆகவே, நீங்கள் அமலேக்கியரிடமிருந்து விலகிச் சென்று விடுங்கள். ஏனெனில், அவர்களோடு உங்களையும் நான் அழிக்க வேண்டியிருக்கும்” என்றார். எனவே, கேனியர் அமலேக்கியரிடமிருந்து விலகிச்சென்றனர்.


7பின்னர், சவுல் அவிலா தொடங்கி எகிப்துக்குக் கிழக்கே இருக்கும் சூருக்குச் செல்லும் எல்லைவரை இருந்த அமலேக்கியரைத் தாக்கினார். 8அமலேக்கியரின் மன்னன் ஆகாகை அவர் உயிரோடு பிடித்தார். ஆனால், மக்களனைவரையும் வாளுக்கு இரையாக்கினார். 9சவுலும் வீரர்களும் ஆகாகைக் கொல்லாமல் விட்டனர். மேலும், ஆடு மாடுகளில் முதல் தரமானவைகளையும் இரண்டாம்தரமானவைகளையும் ஆட்டுக் குட்டிகளையும் நல்லவை அனைத்தையும் அழிக்கவில்லை. அற்பமானவைகளையும் பயனற்றவைகளையும் முற்றிலும் அழித்துப் போட்டனர்.


அரசர் சவுல் புறக்கணிக்கப்படல்


10அப்போது ஆண்டவரின் வார்த்தை சாமுவேலுக்கு அருளப்பட்டது. அவர் கூறியது: 11“சவுலை அரசனாக்கியதற்காக நான் வருந்துகிறேன். ஏனெனில், அவன் என்னை பின்பற்றாமல் விலகிவிட்டான். என் வார்த்தைகளின்படி நடக்கிவில்லை.” சாமுவேல் மனம்வருந்தி இரவெல்லாம் ஆண்டவரிடம் மன்றாடினார்.


12சவுலைச் சந்திப்பதற்காக சாமுவேல் வைகறையில் துயிலெழுந்தார். அப்போது சவுல் கர்மேலுக்கு வந்ததாகவும் தமக்கென ஒரு நினைவுச் சின்னம் அமைத்ததாகவும், கில்கானுக்கு கடந்து சென்றுவிட்டதாகவும் சாமுவேலுக்கு தெரிவிக்கப்பட்டது. 13சாமுவேல் சவுலிடம் வந்தார். சவுல் அவரை நோக்கி, “நீர் ஆண்டவரால் ஆசி பெற்றவர்! ஆண்டவரின் வார்த்தையை நான் நிறைவேற்றிவிட்டேன்” என்றார். 14அதற்கு சாமுவேல், “அப்படியானல் நான் கேட்கும் ஆடுகளின் ஒலியும் மாடுகளின் இரைச்சலும் என்ன?” என்று கேட்டார். 15சவுல் மறுமொழியாக, “அவை அமலேக்கியரிடமிருந்து கொண்டுவரப்பட்டவை. வீரர்கள் முதல் தரமான ஆடுகளையும் மாடுகளையும் கடவுளாகிய உம் ஆண்டவருக்குப் பலி செலுத்துவதற்காக விட்டுவைத்துள்ளார். எஞ்சியவற்றை நாங்கள் முற்றிலும் அழித்து விட்டோம்” என்றார். 16அப்போது சாமுவேல் சவுலை நோக்கி, “நிறுத்தும், இன்றிரவு ஆண்டவர் எனக்கு கூறியவற்றை உமக்குச் சொல்கிறேன்” என, சவுல், “சொல்லுங்கள்” என்றார்.


17சாமுவேல் கூறியது: “நீர் உமது பார்வைக்கே சிறியவராய் இருந்தபோதல்லவா இஸ்ரயேல் குலங்களுக்குத் தலைவர் ஆனீர்? ஆண்டவரும் உம்மை இஸ்ரயேலுக்கு அரசராகத் திருப்பொழிவு செய்தார். 18ஆண்டவர் உமக்கு வழிகாட்டி, நீ சென்று அந்தப் பாவிகளான அமலேக்கியரை அழித்து விட்டு வா. இறுதிவரை போரிட்டு அவரை ஒழித்துவிடு” என்று சொன்னார். 19அப்படியிருக்க, நீர் ஏன் ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவில்லை? கொள்ளைப் பொருள் மீது பாய்ந்து ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்ததேன்? 20அதற்குச் சவுல், சாமுவேலை நோக்கி, “ஆண்டவரின் குரலுக்கு நான் செவி கொடுத்தேன். அவர் காட்டிய வழியிலும் சென்றேன். அமலேக்கியரின் மன்னன் ஆகாகைக் கொண்டு வந்தேன். ஆனால், அமலேக்கியரை அழித்துவிட்டேன். 21ஆனால், வீரர்கள் உம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கில்காலில் பலி செலுத்த, தடை செய்யப்பட்ட கொள்ளைப் பொருளினின்று சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு வந்தனர்” என்றார்.


22அப்போது சாமுவேல் கூறியது:

“ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது

எரி பலிகள், பிற பலிகள் செலுத்துவதா?

அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா?

கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது.

கீழ்ப்படிதல் ஆட்டுக் கிடாய்களின்

கொழுப்பை விட மேலானது!

23கலகம் சூனியத்திற்கு நிகரான பாவம்!

முரட்டுத்தனம் சிலை வழிபாட்டுக்கு

ஒப்பான குற்றம்.

நீர் ஆண்டவரின் வார்த்தையைப்

புறக்கணித்தீர்!

அவரும் உம்மை அரச பதவியினின்று

நீக்கிவிட்டார்.


24அப்போது சவுல் சாமுவேலை நோக்கி, “நான் பாவம் செய்து விட்டேன். வீரர்களுக்கு அஞ்சி அவர்களின் குரலுக்குச் செவி கொடுத்து, ஆண்டவரின் வாய்மொழியையும் உம் வார்த்தையையும் மீறிவிட்டேன். 25தயைகூர்ந்து இப்போது என் பாவத்தை மன்னியும். என்னோடு திரும்பி வாரும். நான் ஆண்டவரைப் பணிந்து தொழுவேன்” என்றார். 26அப்போது சாமுவேல் சவுலிடம் “நீர் ஆண்டவரின் வார்த்தையைப் புறங்கணித்துவிட்டதாலும், ஆண்டவர் இஸ்ரயேல் மீது அரசு செலுத்துவதினின்று உம்மை விலக்கிவிட்டதாலும், நான் உம்மோடு திரும்ப வர மாட்டேன்” என்றார். 27சாமுவேல் செல்லத் திரும்பியபோது, சவுல் அவரது ஆடையின் விளிம்பைப் பிடிக்க, அது கிழிந்தது. 28அப்போது சாமுவேல் “ஆண்டவர் இன்று இஸ்ரயேல் அரசை உம்மிடமிருந்து கிழித்து உம்மைவிடச் சிறந்த, உமக்கு நெருங்கியவன் ஒருவனுக்கு அதைத் தந்துவிட்டார். 29மேலும், ‘இஸ்ரயேலின் மாட்சி’ ஏமாற்ற மாட்டார். மனம் மாறவும் மாட்டார். மனம் மாறுவதற்கு அவர் என்ன மனிதரா?” என்று அவரிடம் கூறினார்.


30மீண்டும் சவுல், “நான் தவறிவிட்டேன். என் மக்களின் பெரியோருக்கு முன்பாகவும், இஸ்ரயேலுக்கு முன்பாகவும் தயைகூர்ந்து என்னைப் பெருமைப்படுத்தும். உம் கடவுளாகிய ஆண்டவரைப் பணிந்து தொழுதிட என்னோடு திரும்பி வாரும்” என்றார். 31சாமுவேல் திரும்ப சவுலின் பின்னே செல்ல, சவுலும் ஆண்டவரைப் பணிந்து தொழுதார். 32பிறகு சாமுவேல், “அமலேக்கியரின் மன்னன் ஆகாகை என்னிடம் கொண்டு வாரும்” என்றார். ஆகாகு அவரிடம் வந்து மகிழ்ச்சியுடன் “உறுதியாகச் சாவின் கொடுமை அகன்றுவிட்டது” என்றான். 33அதற்குச் சாமுவேல் “பெண்கள் உனது வாளால் பிள்ளையற்றோர் ஆகியது போல, உன் தாயும் பெண்களுக்குள் பிள்ளையற்றவள் ஆகட்டும்” என்று கூறி, கில்காலில் ஆண்டவர் திருமுன் ஆகாகைத் துண்டு துண்டாக வெட்டினார்.


34அதன் பின், சாமுவேல் இராமாவுக்குச் செல்ல, சவுலும் அவரது சொந்த ஊரான கிபியாவிலிருந்த தம் வீட்டுக்குச் சென்றார். 35சாமுவேல் தாம் இறக்கும் நாள் வரை சவுலை மீண்டும் பார்க்கவில்லை. ஆனால், அவர் சவுலுக்காகத் துக்கம் கொண்டாடினார். ஆண்டவரும் சவுலை இஸ்ரயேல்மீது அரசராக்கியதற்காக மனம் வருந்தினார்.


15:1 1 சாமு 10:1. 15:2 விப 17:8-14; இச 25:17-19. 15:27-28 1 சாமு 28:17; 1 அர 11:30-31.


அதிகாரம் 16

தாவீது அரசராய்த் திருப்பொழிவு செய்யப்படுதல்


1ஆண்டவர் சாமுவேலை நோக்கி, “இஸ்ரயேலின் அரசராகச் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறக்கணித்ததை நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கம் கொண்டுடாடுவாய்? உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில், அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்” என்றார். 2அதற்குச் சாமுவேல், “எப்படிப்போவேன்? சவுல் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுவிடுவானே?” என்றார். மீண்டும் ஆண்டவர், “நீ ஒரு கன்றுக்குட்டியை எடுத்துச் செல்! ‘ஆண்டவருக்கு பலியிட வந்துள்ளேன்’ என்று சொல்; 3ஈசாயைப் பலிக்கு அழைத்திடு. அப்போது நீ செய்யவேண்டியது என்னவென்று உனக்கு நான் தெரிவிப்பேன்; நான் உனக்குக் காட்டுகிறவனை நீ எனக்காகத் திருப்பொழிவு செய்” என்றார்.


4ஆண்டவர் கட்டளையிட்டவாறு சாமுவேல் செய்த பின் பெத்லகேமுக்குச் சென்றார். அப்பொழுது அவ்வூரின் பெரியோர்கள் அஞ்சி நடுங்கி அவரை எதிர் கொண்டு வந்து, “உங்கள் வருகையின் நோக்கம் சமாதானம் தானே” என்று கேட்டனர். 5அதற்கு அவர், “ஆம் சமாதானம்தான்; ஆண்டவருக்குப் பலி செலுத்த வந்துள்ளேன்; உங்களையே தூய்மையாக்கிக் கொண்டு என்னுடன் பலியிட வாருங்கள்” என்றார். மேலும், ஈசாயையும் அவர் புதல்வரையும் தூய்மைப்படுத்திப் பலியிட வருமாறு அழைத்தார். 6அவர்கள் வந்தபோது அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும் என்று எண்ணினார். 7ஆனால், ஆண்டவர் சாமுவேலிடம், “அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில், நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார். 8அடுத்து, ஈசாய் அபினதாபை அழைத்து சாமுவேல் முன்பாக கடந்துபோகச் செய்தார். அவர் “இவனையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை” என்று கூறினார். 9பிறகு, ஈசாய் சம்மாகுவைக் கடந்து போகச் செய்தார். “ஆண்டவர் இவனையும் தேர்ந்து கொள்ளவில்லை” என்று கூறினார். 10இவ்வாறு, ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்துபோகச்செய்தார். “இவர்களையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை” என்றார் சாமுவேல். 11தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, “உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” என்று கேட்க, “இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருகிறான்” என்று பதிலளித்தார் ஈசாய். அதற்கு சாமுவேல் அவரிடம், “ஆளனுப்பி அவனை அழைத்து வா; ஏனெனில், அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்” என்றார். 12ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம், “தேர்ந்துகொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!” என்றார். 13உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.


சவுலின் அரசவையில் தாவீது


14ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது. 15அப்பபொழுது சவுலின் பணியாளர்கள் அவரிடம், “ஐயா, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம்மைக் கலக்கமுறச் செய்கிறதே! 16உம் முன் நிற்கும் உம் பணியாளர்களாகிய நாங்கள் யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை அழைத்து வர எங்களுக்குக் கட்டளையிடும்! ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம் மீது இறங்கும் பொழுது அவன் யாழ் மீட்டுவான்! நீரும் நலமடைவீர்!” என்றனர். 17எனவே, சவுல் தம் பணியாளரிடம், “யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை கண்டுபிடித்து என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார். 18பணியாளர்களில் ஒருவன், “இதோ பெத்லகேமைச் சார்ந்த ஈசாயின் மகனைப் பார்த்தேன்; அவன் யாழ் மீட்டுவதில் வல்லவன்; வீரமுள்ளவன்; போர்த்திறன் பெற்றவன்; பேச்சுத் திறன் உடையவன்; அழகானவன்; மேலும், ஆண்டவர் அவனோடு இருக்கிறார்” என்றான்.


19அதைக் கேட்ட சவுல் ஈசாயிடம் தம் தூதர்களை அனுப்பி “ஆட்டு மந்தையை மேய்க்கும் உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்பும்” என்று தெரிவித்தார். 20அதைக் கேட்ட ஈசாய் கொஞ்சம் அப்பத்தையும் ஒரு தோற்பை நிறைய திராட்சை இரசத்தையும் ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கழுதை ஒன்றின் மேல் ஏற்றி தம் மகன் தாவீது மூலம் சவுலுக்கு அனுப்பினார். 21தாவீது சவுலிடம் வந்தவுடன் அரசவைப் பணியில் சேர்ந்து விட்டார். சவுல் அவர் மீது மிகவும் அன்பு கொண்டு அவரை தம் படைக்கலன் தாங்குவோனாக நியமித்தார். 22"தாவீது என் அவையிலேயே இருக்கட்டும்; ஏனெனில், என் கண்களில் அவனுக்கு தயவு கிடைத்துள்ளது” எனறு சவுல் ஈசாயிடம் சொல்லியனுப்பினார். 23அதன் பின் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மீது இறங்கிய போதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார். தீய ஆவியும் அவரை விட்டு அகலும்; சவுலும் ஆறுதலடைந்து நலமடைவார்.


அதிகாரம் 17

கோலியாத்து இஸ்ரயேலரை அச்சுறுத்தல்



1பெலிஸ்தியர் போருக்குப் படைகளை யூதாவிலுள்ள சோக்கோவிலில் ஒன்று திரட்டினார். சோக்காவுக்கும் அசேக்காவுக்கும் இடையேயுள்ள எபெசுதம்மில் அவர்கள் பாசறை அமைத்தனர். 2சவுலும் இஸ்ரயேல் மக்களும் ஒன்றுதிரண்டு ஏலா என்ற பள்ளத்தாக்கில் பாசறை அமைத்து, பெலிஸ்தியருக்கு எதிராக போரிட அணிவகுத்தனர். 3பெலிஸ்தியர் அப்பக்கம் ஒரு மலையின் மீதும், இஸ்ரயேலர் இப்பக்கம் ஒரு மலையின் மீதும் நின்றிருக்க, அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.


4அப்பொழுது காத்து நகரைச் சார்ந்த கோலியாத்து என்ற வீரன் பெலிஸ்தியர் பாசறையிலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் உயரம் ஆறரை முழம். 5அவன் வெண்கலத் தலைக்கவசமும் ஐம்பத்தேழு கிலோ வெண்கலத்தாலான மீன் செதிலைப் போன்ற மார்புக் கவசமும் அணிந்திருந்தான். 6கால்களில் வெண்கலக் கவசமும் தோள்களுக்கிடையில் வெண்கல எறிவேலும் அவன் அணிந்திருந்தான். 7அவனது ஈட்டிக்கோல் தறிக்கட்டை போல் பெரிதாயிருந்தது. அவனது ஈட்டியின் முனை ஏழுகிலோ இரும்பால் ஆனது. அவனுடைய கேடயம் தாங்குவோன் அவனுக்கு முன்பாக நடப்பான். 8அவன் இஸ்ரயேல் படைகளுக்கு எதிராக நின்று உரத்த குரலில், “நீங்கள் போருக்கா அணிவகுத்து வந்தீர்கள்? நான் ஒரு பெலிஸ்தியன்! நீங்கள் சவுலின் அடிமைகள் அல்லவா! உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். அவன் என்னிடம் வரட்டும். 9அவன் என்னுடன் போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு அடிமைகளாவோம்; நான் அவனை வென்று அவனைக் கொன்று விட்டால் நீங்கள் அடிமைகளாகி எங்களுக்கு பணி செய்ய வேண்டும்” என்றான். 10மேலும், அந்தப் பெலிஸ்தியன், “இதோ, இஸ்ரயேல் படைகளுக்கு சவால் விடுகிறேன். என்னோடு போரிட இப்பொழுதே ஒருவனை அனுப்புங்கள்” என்றான். 11சவுலும் இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்தியனின் இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கலங்கிப் பெரிதும் அச்சமுற்றனர்.


சவுலின் பாளையத்தில் தாவீது


12தாவீது யூதாவின் பெத்லகேமைச் சார்ந்த எப்ராத்தியரான ஈசாய் என்பவரின் மகன். ஈசாய்க்கு எட்டுப் புதல்வர்கள் இருந்தனர்; சவுலின் காலத்திலேயே 13இவருடைய மூத்த புதல்வர் மூவர் போருக்குச் சென்றிருந்தனர். அம் மூவரில் மூத்தவர் பெயர் எலியாபு, அடுத்தவன் பெயர் அபினதாபு, மூன்றாமவன் பெயர் சம்மாகு. 14தாவீது எல்லாருக்கும் இளையவன். மூத்தவர்களாகிய அம்மூவர்களே சவுலோடு சென்றிருந்தனர். 15ஆனால், தாவீது சவுலை விட்டுத் திரும்பிச் சென்று பெத்லகேமில் தன் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். 16அந்தப் பெலிஸ்தியன் காலையிலும், மாலையிலும் நாற்பது நாள்கள் இவ்வாறு சவால் விட்டான். 17ஈசாய் தம் மகன் தாவீதிடம் “உன் சகோதரர்களுக்காக இந்த இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவையும், பத்து அப்பத்துண்டுகளையும் எடுத்துக் கொண்டு பாளையத்தில் இருக்கும் உன் சகோதரர்களிடம் உடனே விரைந்து செல். 18இந்தப் பத்து பால் கட்டிகளை ஆயிரத்தவர் தலைவனிடம் அளித்து விட்டு உன் சகோதரர் நலமுடன் இருக்கிறார்களா என்று கேட்டு அவர்களிடம் ஒரு அடையாளமொன்று பெற்றுவா” என்று கூறினார். 19அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரயேலர் எல்லோரும் ஏலா பள்ளத்தாக்கில் பெலிஸ்தியருடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.


20தாவீது விடியற் காலையில் எழுந்து ஆடுகளைக் காவலன் ஒருவனிடம் ஒப்படைத்துவிட்டு, உணவுப் பொருள்களை எடுத்துக் கொண்டு, ஈசாய் தமக்குக் கட்டளையிட்டவாறு புறப்பட்டுச் சென்று பாசறையை அடைந்தார்; அப்பொழுது இஸ்ராயேலரின் படைகள் அணிவகுப்பு நடத்திப் போர்க்குரல் எழுப்பினர். 21இஸ்ரயேலரும் பெலிஸ்தியரும் எதிர் எதிராக அணிவகுத்து நின்றனர். 22தாவீது தாம் கொண்டுவந்தவற்றைப் பொருள்களைப் பாதுகாக்கும் காவலன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு போர்களத்திற்குள் ஓடினார். அங்கே தம் சகோதரர்களைக் கண்டு நலம் விசாரித்தார். 23அவர் அவரோடு பேசிக்கொண்டிருக்கையில், இதோ! காத்து நகரைச் சார்ந்த பெலிஸ்திய வீரனான கோலியாத்து என்பவன் பெலிஸ்தியர் அணிகளினின்று தோன்றி தான் முன்பு சொன்ன வார்த்தைகளையே மீண்டும் சொன்னான்; தாவீது அதைக் கேட்டார். 24அவனைக் கண்ட இஸ்ரயேல் அனைவரும் மிகவும் அச்சமுற்று அவன் முன்னின்று ஓடினர். 25“இதோ நிற்கிற இம்மனிதனைப் பார்த்தீர்களா? இஸ்ரயேலை உண்மையாகவே இழிவுப்படுத்த இவன் வந்துள்ளான்! இவனைக் கொல்பவனுக்கு அரசர் மிகுந்த செல்வம் அளித்துத் தம் மகளையும் மணம் முடித்துக் கொடுப்பார். அத்துடன் இஸ்ரயேலரிடையே அவன் தந்தை வீட்டாருக்கு மட்டும் வரிவிலக்குச் செய்வார்” என்று இஸ்ரயேலர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். 26அப்பொழுது தாவீது தம்மருகிலிருந்தவர்களை நோக்கி, “இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரயேலின் இழிவை நீக்குகிறவனுக்கு என்ன கிடைக்கும்? வாழும் கடவுளின் படைகளைப் பழிப்பதற்கு விருத்த சேதனம் இல்லாத பெலிஸ்தியனாகிய இவன் யார்?” என்று கேட்டார். 27அதற்கு மக்கள், “அவனைக் கொல்பவனுக்கு இவை அனைத்தும் அளிக்கப்படும்” என்று முன்பு சொன்னவாறே பதிலளித்தனர்.


28மக்களோடு அவர் பேசிக் கொண்டிருந்ததை அவர் மூத்த சகோதரன் எலியாபு கேட்டு, தாவீதின் மேல் வெஞ்சினமுற்று “நீ இங்கு ஏன் வந்தாய்? அந்தச் சில ஆடுகளையும் பாலைநில‌த்தில் நீ யாரிடம் ஒப்படைத்தாய்? உன் செருக்கையும் ஆணவத்தையும் நான் அறிவேன்; ஏனெனில், போரை வேடிக்கைப் பார்க்கத்தான் நீ வந்துள்ளாய்” என்றான். 29அதற்குத் தாவீது, “இப்பொழுது நான் என்ன செய்து விட்டேன்? ஒரு கேள்வித்தானே கேட்டேன்?” என்று கூறி. 30அவனைவிட்டு வேறொருவனிடம் சென்று அவ்வாறே கேட்டார். மக்களும் முன்போலவே அவருக்குப் பதிலளித்தனர்.


31தாவீது கூறிய வார்த்தைகளைக் கேட்டவர்கள் அவற்றைச் சவுலிடம் தெரிவித்தனர். அப்பொழுது சவுல் அவரை வரவழைத்தார். 32தாவீது சவுலை நோக்கி, “இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வெண்டியதில்லை; உம் அடியானாகிய நானே சென்று அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன்” என்றார். 33அதற்குச் சவுல் தாவீதிடம், “இந்தப் பெலிஸ்தியனை எதிர்த்துப் போரிட உன்னால் இயலாது. நீயோ இளைஞன். ஆனால், அவனோ தன் இளவயது முதல் போரில் பயிற்சியுள்ளவன்” என்றார்.


34தாவீது சவுலை நோக்கி, “உம் அடியானாகிய நான் என் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, சிங்கமோ அல்லது கரடியோ மந்தையில் புகுந்து ஆட்டைக் கவ்விக் கொண்டு ஓடினால், 35நான் பின் தொடர்ந்து ஓடி அதை அடித்து அதன் வாயினின்று ஆட்டை விடுவிப்பேன்; அது என் மீது பாய்ந்தால் அதன் தாடியைப் பிடித்து நன்றாக அடித்துக் கொல்வேன். 36உம் அடியானாகிய நான் சிங்கங்களையும் கரடிகளையும் இவ்வாறு கொன்று இருக்கிறேன். விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தியனும் அவற்றில் ஒன்றைப் போல்தான்; ஏனெனில், அவன் வாழும் கடவுளின் படைகளை இழிவுபடுத்தியுள்ளான்” என்றார். 37மேலும், தாவீது, “என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்” என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், “சென்று வா! ஆண்டவர் உன்னோடு இருப்பார்” என்றார்.


38பின்பு, சவுல் தாவீதுக்குத் தம் உடைகளை அணிவித்து, வெண்கலத் தலைக்கவசத்தை அவர் தலைமேல் வைத்து, மார்புக் கவசத்தையும் அவருக்கு அணிவித்தார். 39தாவீது சவுலின் வாளைத் தம் உடை மீது கட்டிக் கொண்டு தமக்குப் பழக்கமில்லாததால் நடந்து பார்த்தார். தாவீது சவுலை நோக்கி, “இவற்றுடன் என்னால் நடக்கவியலாது, ஏனெனில், இதில் எனக்குப் பழக்கம் இல்லை” என்று கூறி அவற்றை களைந்து விட்டார். 40தாவீது தம் கோலைக் கையில் எடுத்துக் கொண்டார். நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் பையில் போட்டுக் கொண்டார். தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார்.


தாவீது கோலியாத்தைத் தோற்கடித்தல்


41தன் கேடயமேந்துபவன் முன் செல்ல, அந்தப் பெலிஸ்தியனும் தாவீதை நோக்கி நடந்து அவரை நெருங்கினான். 42பெலிஸ்தியன் தாவீதை கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான்; ஏனெனில், அவன் சிவந்த மேனியும் அழகிய தோற்றம் உடைய இளைஞனாய் இருந்தான். 43அப்பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து, “நீ கோலுடன் என்னிடம் வர நான் என்ன நாயா?” என்று சொல்லி தன் தெய்வங்களின் பெயரால் தாவீதை சபிக்கத் தொடங்கினான். 44மீண்டும் பெலிஸ்தியன் தாவீதை நோக்கி, “அருகே வா, வானத்துப் பறவைகளுக்கும் வனத்து விலங்குகளுக்கும் உன் உடலை இரையாக்குவேன்” என்றான்.


45 அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம், “நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ, நீ இகழ்ந்த இஸ்ராயேலின் படைத்திரளின் கடவுளாகிய, படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன். 46இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார். நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன்; பெலஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்; இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர். 47மேலும், ஆண்டவர் வாளினாலும் ஈட்டியினாலும் மீட்கின்றவர் அல்லர் என்று இந்த மக்கள்கூட்டம் அறிந்துகொள்ளட்டும்; ஏனெனில், இது ஆண்டவரின் போர்! அவரே உங்களை எங்கள் கையில் ஒப்புவிப்பார்” என்றார். 48பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கி புறப்படுகையில் தாவீதும் அவனுடன் போரிட, பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார். 49தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார்; அதைக் கவணில் வைத்து சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியை குறி பார்த்து எறிந்தார். அந்த கல்லும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே, அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான். 50இவ்வாறு, தாவீது கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு பெலிஸ்தியன் மீது வெற்றி கொண்டு, அவனை வீழ்த்திக் கொன்றார்.✠ 51உடனே தாவீது ஓடி, அந்தப் பெலிஸ்த்தியனின் மேல் ஏறிநின்றார்; அவனது வாளை அதன் உறையிலிருந்து உருவி அவனைக் கொன்று அவன் தலையைக் கொய்தார்.✠ 52யூதா மக்களும் இஸ்ரயேல் மக்களும் எழுந்து ஆர்ப்பரித்து எக்ரோன் வாயில் மட்டுமுள்ள காத்து பள்ளத்தாக்கு வரை துரத்திச்சென்றனர். சாராயிமின் சாலையில் காத்து, எக்ரோன் எல்லை வரையிலும் பெலிஸ்தியர் வெட்டுண்டு கிடந்தனர். 53இஸ்ரயேலர் பெலிஸ்தியரைப் பின்தொடர்வதை நிறுத்தி விட்டு அவர்களது பாசறையைக் கொள்ளையடித்தனர். 54தாவீது அப்பெலிஸ்தியனின் தலையை எடுத்து எருசலேமுக்குக் கொண்டு சென்றார். ஆனால், தம் படைக்கலன்களைத் தம் கூடாரத்தில் வைத்தார்.


தாவீது சவுலின் முன் நிறுத்தப்படல்


55பெலிஸ்தியனுக்கு எதிராகத் தாவீது சென்றதை சவுல் கண்டபோது அவர் படைத்தலைவன் அப்னேரிடம், “அப்னேர் இந்த இளைஞன் யாருடைய மகன்?” என்று கேட்டார்.அப்னேர் அதற்கு, “அரசே உம் உயிர் மேல் ஆணை! அதை நான் அறியேன்” என்றார். 56மீண்டும் அரசர், “இவ்விளைஞன் யாருடைய மகன் என்று விசாரித்து வா” என்றார். 57தாவீது பெலிஸ்தியனைக் கொன்றுவிட்டு திரும்பிய போது அப்னேர் அவரை சவுலிடம் அழைத்துச் சென்றார்; அப்பொழுது அவர் கையில் பெலிஸ்தியனின் தலை இருந்தது. 58சவுல் அவரிடம் “இளைஞனே நீ யாருடைய மகன்?” என்று கேட்டார். அதற்குத் தாவீது, “பெத்லகேம் ஊரைச் சார்ந்த உம் அடியான் ஈசாயின் மகன் நான்” என்று பதிலளித்தார்.


17:50 2 சாமு 21:19. 17:51 1 சாமு 21:29.


அதிகாரம் 18
abcd
அதிகாரம் 19

சவுல் தாவீதைத் துன்புறுத்துதல்


1தாவீதைக் கொல்ல வேண்டுமென்று தன் மகன் யோனத்தானிடமும் தம் அலுவலர் எல்லோரிடமும் சவுல் தெரிவித்தார். ஆனால், சவுலின் மகன் யோனத்தான் தாவீதின் மீது மிகுதியாக அன்பு கொண்டிருந்தார். 2ஆதலால், தாவீதைப் பார்த்து யோனத்தான், “என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார். ஆதலால், எச்சரிக்கையாய் இரு. காலையிலேயே புறப்பட்டு மறைவாக ஓர் இடத்திற்குச் சென்று ஒளிந்து கொள். 3நீ வெளியில் இருக்கும் சமயத்தில் நான் என் தந்தையின் அருகில் இருந்து கொண்டு, உன்னைப் பற்றி அவரிடம் பேச்சுக் கொடுப்பேன்; அப்படி நான் அறிகிறதையெல்லாம் உனக்குத் தெரிவிப்பேன்” என்றார்.


4யோனத்தான் தாவீதைப் பற்றித் தம் தந்தை சவுலிடம் நல்லவிதமாகப் பேசி, “அரசர் தம் அடியான் தாவீதின் பொருட்டு பாவம் செய்ய வேண்டாம்; ஏனெனில், அவன் உமக்குத் தீங்கு ஏதும் செய்ததில்லை; மேலும். அவனுடைய செயல்கள் உம் அரசில் மிகவும் பயனுடையவாய் இருந்தன. 5அவன் தன் உயிரைப் ஒரு பொருட்டாய் எண்ணாது அப் பெலிஸ்தியனைக் கொன்றான்; ஆதலால், ஆண்டவர் இஸ்ரயேலர் எல்லோருக்கும் பெரும் வெற்றியை அளித்தார். நீர் அதைக் கண்டு மகிழ்ச்சியுற்றீர். அப்படியிருக்க எக்காரணமும் இல்லாமல் தாவீதைக் கொல்வதன் மூலம் குற்றமற்ற இரத்தத்திற்கு எதிராக நீ ஏன் பாவம் செய்ய வேண்டும்?” என்று கூறினார்.


6சவுல் யோனத்தானின் வார்த்தைகளைக் கேட்டார். அதனால் சவுல் “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அவன் கொலை செய்யப்படமாட்டான்” என்றார். 7பின்பு, யோனத்தான் தாவீதை அழைத்து இவ்வார்த்தைகளை எல்லாம் அவருக்குக் கூறினார். மேலும், யோனத்தான் தாவீதை சவுலிடம் அழைத்துச் செல்ல, முன்பு போலவே தாவீது அவரது பணியில்ஈடுபட்டார்.


8மீண்டும் போர் மூண்டது; தாவீது புறப்பட்டு பெலிஸ்தியருடன் போரிட்டு அவர்களில் மிகுதியானோரை வெட்டி வீழ்த்தினார். அதனால் அவர்கள் சிதறி ஓடினார்கள். 9பின்னர், ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மேல் இறங்கியது. அப்பொழுது அவர் தம் வீட்டில் ஈட்டியுடன் வீற்றிருக்க, தாவீது யாழ் எடுத்து மீட்டிக் கொண்டிருந்தார்.10அப்பொழுது சவுல் தாவீதை ஈட்டியால் சுவரோடு சேர்த்துக் குத்த முயன்றார். ஆனால், சவுலின் குறியிலிருந்து விலகினதால் சவுலின் ஈட்டி சுவரில் பாய்ந்தது. அன்றிரவே தாவீது அங்கிருந்து தப்பியோடினார்.


11உடனே சவுல் தாவீதை அவர் வீட்டில் கண்காணித்து மறுநாள் காலையில் கொன்றுவிடுமாறு காவலர்களை அனுப்பினர். ஆனால், தாவீதின் மனைவி மீக்கால் அவரிடம், “நீர் இன்றிரவே உம் உயிரைக் காப்பற்றிக் கொள்ளவிட்டால் நாளை நீர் கொல்லப்படுவீர்!” என்றாள்.✠ 12ஆதலால், மீக்கால் தாவீதை பலகலணி வழியே இறக்கிவிடவே அவரும் அங்கிருந்து ஓடித் தப்பித்துக்கொண்டார். 13மீக்கால் குடும்பச் சிலையை எடுத்து அதைப் படுக்கையில் கிடத்தினாள். அதன் தலைப்பாகத்தில் ஒரு வெள்ளாட்டுத்தோலை வைத்து ஒரு போர்வையால் மூடினாள். 14தாவீதைப் பிடித்து வரச் சவுல் தூதர்களை அனுப்பிய போது, அவள் “அவர் நோயுற்றிருக்கிறார்” என்றாள். 15மறுபடியும் சவுல் தாவீதைப் பார்க்கும் படி தூதர்களை அனுப்பி, “நான் கொல்லுமாறு அவனைப் படுக்கையோடு என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றார். 16அவர்கள் வந்தபோது, இதோ, படுக்கையின் மேல் குடும்பச் சிலையும் அதன் தலைமாட்டில் வெள்ளாட்டுத் தோலும் இருக்கக் கண்டனர். 17என்னை வஞ்சித்தாய்?” என்று கேட்டார். அதற்கு மீக்கால் சவுலிடம், “‘என்னைப் போகவிடு; இல்லையெனில் உன்னைக் கொன்று விடுவேன்;’ என்று அவர் மிரட்டினார்” என்று மறுமொழி கூறினாள்.


18அப்பொழுது தாவீது அங்கிருந்து தப்பியோடி இராமாவில் இருந்த சாமுவேலிடம் வந்து, சவுல் தமக்கு செய்த யாவற்றையும் கூறினார். பின்னர், அவரும் சாமுவேலும் நாவோத்துக்குச் சென்று தங்கினர். 19“இதோ இராமாவில் உள்ள நாவோத்தில் தாவீது இருக்கிறார்” என்று சவுலுக்குத் தெரிவிக்கப்பட்டது. 20உடனே சவுல், தாவீதை பிடித்து வர ஆள்களை அனுப்பினார். அவர்கள் சென்ற போது இறைவாக்கினர் இறைவாக்குரைப்பதையும், சாமுவேல் அவர்களுக்குத் தலைமை தாங்கி நிற்பதையும் கண்டனர். அத்துடன் சவுலின் ஆள்கள் மேலும் கடவுளின் ஆவி இறங்கி வரவே அவர்களும் இறைவாக்குரைத்தனர். 21சவுலுக்கு இது தெரிவிக்கப்பட்டபோது அவர் வேறு ஆள்களை அனுப்ப, அவர்களும் இறைவாக்குரைத்தார். பின்பு, அவர் மூன்றாம் முறையாக ஆள்களை அனுப்ப அவர்களும் இறைவாக்குரைத்தார். 22அடுத்து அவரே இராமாவுக்குச் சென்று, சேக்குவிலிருக்கம் பெரிய கிணற்றருகே வந்து, “சாமுவேலும் தாவீதும் எங்கே?” என்று கேட்டார். அதற்கு ஒருவன் “இதோ இராமாவிலுள்ள நாவோத்தில் அவர்களைக் காணலாம்” என்றான். 23ஆதலால், அவர் அங்கிருந்து இராமாவிலிருந்த நாவோத்துக்குப் புறப்பட்டார். கடவுளின் ஆவி அவர் மேலும் இறங்கி வரவே, ராமாவின் நாவோத்துக்குச் சென்றடையும் வரை அவரும் இறைவாக்குரைத்தார். 24அவரும் தம் மேலுடையைக் களைந்துவிட்டு சாமுவேலின் முன் அவரும் இறைவாக்குரைத்தார். அன்று பகல் இரவு முழுவதும் ஆடையணியாமல் விழுந்து கிடந்தார். அதனால் தான், ‘சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ?’ என்ற சொல் வழங்கலாயிற்று!✠


19:24 1 சாமு 10:11-12. 19:11 திபா 59 தலைப்பு.


அதிகாரம் 20

தாவீதுக்கு யோனத்தானின் உதவி


1பின்பு, தாவீது இராமாவிலிருந்த நாவோத்திலிருந்து புறப்பட்டுச் சென்று யோனத்தானிடம் வந்து, “நான் செய்தது என்ன? நான் செய்த குற்றம் என்ன? உன் தந்தைக்கு எதிராக நான் செய்த பாவம் என்ன? பின்பு, ஏன் என்னைக் கொல்லத் தேடுகிறார்?” என்று கேட்டார். 2அதற்கு அவர், “ஒருகாலும் இல்லை. நீ சாக மாட்டாய். இதோ என்னொடு கலந்தாலோசிக்காமல் என் தந்தை பெரிதோ சிறிதோ எதுவும் செய்யமாட்டார். இச்செயலை மட்டும் என் தந்தை மறைப்பானேன்? அப்படி நடக்காது” என்றார். 3அதற்குத் தாவீது, “உன் கண்களில் எனக்கு இரக்கம் கிடைத்துள்ளது என்று உன் தந்தைக்கு நன்கு தெரியும். ஆகையால், ‘யோனத்தான் இதை அறிய நேர்ந்தால் அவன் வேதனையடைவான்’ என்று அவர் நினைக்கிறார். ஆனால், இது உண்மை; எனக்கும் சாவுக்கும் ஓர் அடி தூரந்தான் உள்ளது. வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உன் மேலும் ஆணை!” என்றார். 4அப்பொழுது யோனத்தான் தாவீதிடம், “உன் விருப்பப்படி நான் உனக்கு எதுவும் செய்யத் தயார்” என்றார்.


5தாவீது யோனத்தானை நோக்கி, “இதோ! நாளை அமாவாசை; அரசரோடு நான் பந்தியிலிருக்கும் நாள். ஆனால், மூன்றாம் நாள் மாலைவரை வெளியில் சென்று ஒளிந்திருக்க எனக்கு விடை கொடு.✠ 6உன் தந்தை என்னைக் காணாது பற்றி விசாரித்தால் ‘தாவீது தன் சொந்த நகரான பெத்லகேமுக்குச் சென்றுள்ளான்; அவன் குடும்பத்தார் அனைவருக்கும் அங்கே ஆண்டுப் பலி இருக்கிறதாம்! அங்கே விரைந்து செல்ல என்னிடம் அனுமதி கேட்டான்’ என்று சொல். 7அவர் ‘நல்லது’ என்று சொன்னால் உன் அடியான் அமைதியடைவான்; அவர் சினமுற்றால் எனக்குத் தீங்கு செய்ய முடிவு செய்துள்ளார் என அறிந்துகொள்வாய். 8ஆண்டவர் திருமுன் நீ உன் அடியானுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்பொருட்டு என் மேல் இரக்கம் வை. நான் குற்றவாளியாயின் நீயே என்னைக் கொன்று விடு. நீ ஏன் என்னை உன் தந்தையிடம் கொண்டுபோக வேண்டும்?” என்றார்.


9அதற்கு யோனத்தான், “அப்படி உனக்கு நேராது உனக்குத் தீங்கு செய்ய என் தந்தை முடிவுசெய்துள்ளார் என நான் அறிந்தால் அதை உனக்கு சொல்லாமல் இருப்பேனா?” என்றார். 10பின்பு, தாவீது யோனத்தானை நோக்கி, “உன் தந்தை உன்னிடம் கடுமையான பதிலளித்தால் அதை யார் எனக்குத் தெரிவிப்பார்” என்று கேட்டார். 11அதற்கு யோனத்தான் தாவீதிடம், “வெளியில் செல்வோம் வா!” என்றார். இருவரும் வயல்வெளிக்குச் சென்றனர்.


12யோனாத்தான் தாவீதை நோக்கி, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் சான்று பகர்வாராக! நாளை இதே நேரத்தில் அல்லது மூன்றாம் நாளில் என் தந்தையின் கருத்தை அறிவேன்; அது தாவீதுக்கு சாதகமாய் இருந்ததால் உனக்கு அதைத் தெரிவிக்க ஆளனுப்பமாட்டேனா? 13ஆனால், என் தந்தை உனக்கு தீங்கு செய்ய விரும்பியுள்ளதை அறிந்து, அதை நான் உனக்கு வெளிப்படுத்தி உன்னைப் பாதுகாப்புடன் அனுப்பிவைக்காவிடில் ஆண்டவர் என்னைத் தண்டிப்பாராக! ஆண்டவர் என் தந்தையுடன் இருந்தது போல் உன்னோடும் இருப்பாராக! 14நான் தொடர்ந்து உயிருடன் இருந்தால், நான் சாகாதவாறு ஆண்டவரின் பொருட்டு என்மேல் இரக்கம் வை. 15ஆண்டவர் தாவீதின் எல்லா எதிரிகளையும் இம்மண்ணிலிருந்து அழித்தொழிக்கும் போது என் வீட்டாரை அழிக்காதிருக்கும்படி இரக்கம் வை.✠ 16ஆண்டவர் தாவீதின் எதிரிகளுக்குத் தகுந்த பதிலளிப்பாராக” என்று கூறி யோனத்தான் தாவீதின் வீட்டாருடன் உடன்படிக்கை செய்தார்.


17தாவீதின் மீது கொண்டுள்ள அன்பின் பெயரால் யோனத்தான் மீண்டும் அவருக்கு ஆணையிட்டுக் கூறினார். ஏனெனில், அவர் தாவீதின மீது தம் உயிரென அன்புக் கொண்டிருந்தார். 18பின்பு, யோனத்தான், “நாளை அமாவாசை; உனது இருக்கை காலியாக இருப்பதைக் கண்டு உன்னைப்பற்றி விசாரிப்பர். 19மூன்றாம் நாள் உன்னைக் கண்டிப்பாக தேடுவர். ஆதலால், நீ முன்பு ஒளிந்திருக்கும் இடத்திற்கே போ; அங்கே ஏசேல் கல் அருகே ஒளிந்துக் கொண்டிரு. 20நான் குறி வைத்து அம்பு எய்வது போல் அப்பக்கம் நோக்கி மூன்று அம்புகளை எய்வேன். 21பின்பு, ‘போய் அம்புகளைத் தேடிவா’ என்று ஒரு பையனை அனுப்புவேன். நான் அவனிடம் ‘இதோ அம்புகள் உனக்கு இப்பக்கம் கிடக்கின்றன. அவற்றைக் கொண்டு வா’, என்பேனாகில் நீ என்னிடம் வா. ஏனெனில், வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உனக்குப் பாதுகாப்பு உண்டு. ஆபத்து நேராது. 22மாறாக, ‘இதோ அம்புகள் உனக்கு அப்பக்கம் கிடக்கின்றன’ என்று அந்தப் பையனிடம் சொல்வேனாகில் நீ ஓடி விடு; ஏனெனில், ஆண்டவரே உன்னை அனுப்பி வைக்கிறார். 23நீயும் நானும் பேசியவற்றிற்கும் உனக்கும் எனக்கும் ஆண்டவரே என்றென்றும் சாட்சியாக இருப்பார்” என்றார்.


24ஆதலால், அவ்வாறே தாவீது வயல் வெளியில் ஒளிந்து கொண்டார். அமாவாசை நாள் வந்தபோது உணவருந்த அரசர் அமர்ந்தார். 25அரசர் சுவரோரம் இருக்கும் தமது இருக்கையில் வழக்கம் போல் அமர்ந்தார். சவுலுக்கு எதிரில் யோனத்தானும் பக்கவாட்டில் அப்னேரும் அமர்ந்தனர். ஆனால், தாவீதின் இருக்கை காலியாயிருந்தது. 26இருப்பினும், ‘அவனுக்கு ஏதோ நேர்ந்துள்ளது, அவன் தூய்மையின்றி இருக்கலாம், கண்டிப்பாக அவன் தீட்டாயிருக்க வேண்டும்’ என்று நினைத்து சவுல் அன்று ஏதும் சொல்லவில்லை. 27ஆனால், அமாவாசைக்கு அடுத்த நாளும் தாவீதின் இருக்கை காலியாக இருந்தது. அப்பொழுது சவுல் யோனத்தனை நோக்கி, “ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் உணவருந்த வராதது ஏன்?” என்று கேட்டார்.


28யோனத்தான் சவுலிடம், “தான் பெத்தலேகம் செல்ல வேண்டுமென்று அவன் வருந்திக் கேட்டுக் கொண்டான். 29‘நான் செல்ல விடைக்கொடு; ஊரில் என் குடும்பத்தார் பலி செலுத்துகிறார்கள். மேலும், நான் அங்கிருக்க வேண்டுமென்று என் சகோதரரும் எனக்கு கட்டளையிட்டுள்ளார். ஆதலால், உன் கண்களில் எனக்கு இரக்கம் கிடைத்தால் என் சகோதரர்களைக் காண என்னைப் போகவிடு’ என்றான். இக்காரணத்தினால் தான் அவன் அரசபந்திக்கு வரவில்லை” என்று பதிலளித்தார்.


30அப்பொழுது யோனத்தான் மீது சவுல் கடும் சினமுற்று அவரைப் பார்த்து, “பொய்யும் புரட்டும் நிறைந்த பெண்ணின் மகன் நீ. உனக்கும் உன் மானங்கெட்ட தாய்க்கும் அவமானமாய் இருக்கும்படி நீ ஈசாயின் மகன் மீது அன்பு கொண்டுள்ளாய் என்பதை நான் அறியேனோ? 31ஈசாயின் மகன் உயிரோடு வாழும் நாள்வரை நீயும் நிலைத்திருக்கமாட்டாய்; உன் ஆட்சியும் நிலைபெறாது; ஆதலால், ஆளனுப்பி அவனை என்னிடம் கொண்டுவா; அவன் சாகவே வேண்டும்” என்றார். 32அப்பொழுது யோனத்தான் தம் தந்தை சவுலிடம், “அவன் ஏன் சாகவேண்டும்? அவன் என்ன செய்தான்” என்று கேட்டார். 33ஆனால், சவுல் அவரைக் குத்தி வீழ்த்த எண்ணி அவரை நோக்கி தம் ஈட்டியை எறிந்தார்; ஆதலால், தாவீதைக் கொன்றுவிட தம் தந்தை முடிவு செய்துவிட்டார் என்பதை யோனத்தான் அறிந்துகொண்டார். 34உடனே யோனத்தான் வெஞ்சினமுற்று பந்தியைவிட்டு எழுந்துவிட்டார். அமாவாசையின் மறுநாளாகிய அன்று அவர் உணவு அருந்தவில்லை. ஏனெனில், தாவீதைத் தம் தந்தை இழிவுப்படுத்தியது குறித்து அவர் மிகவும் மனம் வருந்தினார்.


35அடுத்த நாள் காலை யோனத்தான் தாவீதைச் சந்திக்குமாறு ஒரு பையனைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வயல்வெளிக்குச் சென்றார். 36அவர் அப்பையனிடம், “நீ ஓடி நான் எய்கிற அம்புகளை எடுத்து வா” என்றார். அப்பபையன் ஓடும் போது அவனுக்கு அப்பால் ஓர் அம்பை எய்தார். 37யோனத்தான் எய்த அம்பு கிடந்த இடத்திற்கு அப்பையன் சென்ற போது, யோனத்தான் அவனைக் கூப்பிட்டு “உனக்கு அப்பால் அல்லவா அம்பு கிடக்கிறது?” என்றார். 38மீண்டும் பையனை உரத்த குரலில் கூப்பிட்டு, “நிற்காதே, விரைந்து செல்” என்றார். அப்போது யோனத்தானின் பையன் அம்புகளை பொறுக்கிக் கொண்டு தன் தலைவனிடம் திரும்பினான். 39யோனத்தானுக்கும் தாவீதுக்கும் மட்டுமே அதன் பொருள் தெரியும்; ஆனால், அப்பையனுக்கோ ஒன்றும் தெரியாது. 40பின்பு, யோனத்தான் தம் படைக் கலன்களைப் பையனிடம் கொடுத்து, “இதை நகருக்கு எடுத்துச் செல்” என்று பணித்தார்.


41பையன் அங்கிருந்து சென்றவுடன், தாவீது தென்புறம் தாம் ஒளிந்திருந்த இடத்தினின்று வெளியே வந்து முகங்குப்புற விழுந்து மூன்று முறை வணங்கினார். அதன் பின் அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தம் செய்து அழுதார்கள். தாவீது மிகவும் அழுதார். 42பின்பு, யோனத்தான் தாவீதிடம், நீ சமாதானமாய்ச் செல், ஆண்டவர் பெயரால் நாமிருவரும் செய்து கொண்ட உடன்படிக்கையின் பொருட்டு ஆண்டவர் உனக்கும் எனக்கும், உன் வழிமரபிற்கும் என் வழிமரபிற்கும் நடுவே என்றென்றும் சாட்சியாய் இருப்பாராக!” என்றார். பின்னர், தாவீது தன் வழியே சென்றார். யோனத்தான் நகருக்குத் திரும்பினார்.


20:5 எண் 28:11. 20:15 2 சாமு 9:1.


அதிகாரம் 21

சவுலிடமிருந்து தாவீது தப்பித்தல்


1பின்பு, தாவீது நோபில் இருந்த குரு அகிமெலக்கிடம் சென்றார். அகிமெலக்கு தாவீதை நோக்கி நடுக்கத்துடன் வந்து அவரிடம், “நீ ஏன் தனியே இருக்கிறாய்? உன்னுடன் யாரும் வரவில்லையா?” என்றார். 2அதற்கு தாவீது குரு அமெலக்கிடம், “அரசர் எனக்கு ஒரு பணியைக் கட்டளையிட்டுள்ளார். ‘நான் உன்னை அனுப்பிய நோக்கத்தையும் உனக்கு அளித்த கட்டளையையும் ஒருவரும் அறியக்கூடாது’ என்று அரசர் கூறியுள்ளார். எனவே, ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்னைச் சந்திக்குமாறு என் தோழர்களுக்குச் சொல்லியுள்ளேன். 3உண்பதற்கு இப்பொழுது உம்மிடம் என்ன இருக்கிறது? இரண்டு, மூன்று அப்பங்களோ வேறு என்ன உம்மிடம் உள்ளதோ எனக்குத் தாரும்” என்றார். 4குரு தாவீதை நோக்கி, “தூய அப்பமே என்னிடம் உள்ளது; சாதரண அப்பங்கள் இல்லை. இளைஞர்களான நீங்கள் பெண்களோடு உறவு கொள்ளாமல் இருந்தால் நீங்கள் அதை உண்ணலாம்” என்றார். 5தாவீது குருவை நோக்கி, “சாதாரணப் பயணத்தின் போதே இவ்விளைஞர்கள் பெண்களுடன் உறவுகொள்வதில்லை; இன்றோ சிறப்புப் பணியை மேற்கொண்டுள்ளதால் நேற்றும் முந்தின நாளும் தூய்மை காத்துள்ளனர்” என்றார். 6ஆதலால், குரு தூய அப்பத்தை அவருக்கு அளித்தார்; ஏனெனில், ஆண்டவரின் திரு முன்னிலை அப்பத்தைத் தவிர வேறு அப்பம் அங்கு இல்லை.அது எடுக்கப்படும் நாளில் அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் அங்கு வைக்கப்படும்.✠


7சவுல் பணியாளர்களில் ஒருவனும் ஆண்டவரால் தடைசெய்யப்பட்டவனுமான தோயேகு என்ற ஏதோமியன் அந்நாளில் அங்கே இருக்க நேர்ந்தது. அவன் சவுலின் இடையர்களுக்குத் தலைவன்.


8அப்பொழுது தாவீது அகிமெலக்கிடம், “இங்கு ஈட்டியோ வாளோ உம்மிடம் உள்ளதா? அரசரின் கட்டளை அவசரமானதாய் இருந்ததால் என் வாளையோ என் படைக்கலன்களையோ கையோடு கொண்டுவரவில்லை,” என்றார். 9குரு அவரிடம், “ஏலா பள்ளத்தாக்கில் நீ கொன்ற பெலிஸ்தியன் கோலியாத்தின் வாள், அதோ, ஏபாத்துக்குப் பின்னால் துணிகளில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. நீ விரும்பினால் அதை எடுத்துக் கொள்ளலாம். அதைத் தவிர வேறு வாள் இங்கு இல்லை” என்று கூறினார். அதற்கு தாவீது, “அதற்கு நிகரானது வேறில்லை, அதை எனக்குத் தாரும்” என்றார்.✠


10பிறகு, தாவீது எழுந்து அந்நாளில் தப்பியோடி காத்தின் மன்னன் ஆக்கிசிடம் சென்றார். 11ஆக்கிசின் அலுவலர்கள் அவரிடம், “இவன் இஸ்ரயேல் நாட்டு அரசன் தாவீது அன்றோ? ‘சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றான்’ என்று பெண்கள் நடனமாடித் தங்களுக்குள் பாடிக் கொள்ளவில்லையா?” என்றனர்.✠ 12தாவீது இவ்வார்த்தைகளைத் தம் மனதில் வைத்துக் கொண்டு, காத்தின் அரசன் ஆக்கிசை முன்னிட்டு மிகவும் அஞ்சினார்.✠ 13அதனால் தம் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வாயிற் கதவுகளில் கிறுக்கிக் கொண்டு, தாடி வழியே வாயிலிருந்து நுரை ஒழுகச் செய்து அவர்கள் முன்னிலையில் ஒரு பைத்தியக்காரன் போல் நடித்தார்.✠ 14அப்பொழுது ஆக்கிசு தன் அலுவலர்களிடம், “இதோ இம்மனிதனைப் பாருங்கள்; இவன் ஒரு பைத்தியக்காரன்! இவனை ஏன் என்னிடம் அழைத்து வந்தீர்கள்? 15என் முன்னிலையில் பைத்தியக் காரத்தனத்தைக் காட்ட நம்மிடம் பைத்தியங்கள் குறைவா? இவன் என் வீட்டினுள் நுழையலாமா?” என்று சினமுற்றான்.


21:1-6 மத் 12:3-4; மாற் 2:25-26; லூக் 6:3. 21:6 லேவி 24:5-9. 21:9 1 சாமு 17:51. 21:11 1 சாமு 18:7; 29:5. 21:12 திபா 56 தலைப்பு. 21:13 திபா 34 தலைப்பு.


அதிகாரம் 22

குருக்களைச் சவுல் கொலை செய்தல்


1தாவீது அங்கிருந்து புறப்பட்டு அதுல்லாம் என்ற குகைக்குத் தப்பியோடினார்; அவருடைய சகோதரரும், அவர் தந்தை வீட்டாரும் இதைக் கேள்வியுற்று அங்கு அவரிடம் சென்றனர்.✠ 2ஒடுக்கப்பட்டோர், கடன்பட்டோர், சோர்வுற்றோர், யாவரும் அவரிடம் ஒன்று திரண்டனர்; அவர்களுக்கு அவர் தலைவரானார். இவ்வாறு, அவரோடு சுமார் நானூறு பேர் இருந்தனர்.


3தாவீது அங்கிருந்து மோவாபிலுள்ள மிஸ்பேக்குச் சென்று, அங்கே மோவாபு மன்னனைப் பார்த்து, “கடவுள் எனக்கு என்ன செய்யவிருக்கிறார் என்பதை நான் அறியுமட்டும் என் தந்தையும் தாயும் உம்மிடம் தங்கியிருக்க எனக்கு அனுமதி தாரும்,” என்று வேண்டினார். 4பின்பு, அவர் அவர்களை மோவாபு மன்னன் பொறுப்பில் விட்டுச் சென்றார். தாவீது குகையில்⁕ இருந்த நாளெல்லாம் அவர்கள் மன்னனிடம் தங்கியிருந்தனர். 5பின்பு, இறைவாக்கினர் காது தாவீதைக் கண்டு, “நீ குகையில் தங்காதே! யூதா நாட்டுக்குப் புறப்பட்டுப்போ!” என்றார். எனவே, தாவீது புறப்பட்டு எரேத்து என்ற காட்டிற்குச் சென்றார்.


6தாவீதும் அவருடன் இருந்த வீரர்களும் கண்டுபிடிக்கப்பட்டதைச் சவுல் கேள்விப்பட்டார். கிபயாவிலிருந்த மலைமீது தமாரிஸ்கு மரத்தின் கீழ் சவுல் கையில் தன் ஈட்டியை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவருடைய எல்லா அலுவலர்களும் அவரைச் சூழ்ந்து நின்றனர். 7சவுல் தன்னைச் சூழ்ந்து நின்ற பணியாளர்களை நோக்கி, “பென்யமின் புதல்வர்களே! கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்கள் ஒவாவொருவருக்கும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் கொடுப்பானோ? அவனால் உங்கள் அனைவரையும் ஆயிரவர் தலைவர்களாகவும் நூற்றுவர் தலைவர்களாகவும் ஏற்படுத்த முடியுமா? 8பின், எப்படி எனக்கெதிராக நீங்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்தீர்கள்? ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்தபோது அதை உங்களில் எவனும் எனக்கு வெளிப்படுத்தவில்லை; என்மேல் மனமிரங்கி அதை எனக்குத் தெரிவிக்க உங்களில் ஒருவனும் முன்வரவில்லையே! இந்நாளில் உள்ளதுபோல் எனக்கெதிராகச் சதிசெய்ய என் பணியாளனையே என் மகன் எனக்கெதிராகத் தூண்டிவிட்டான்” என்றார்.


9அப்பொழுது சவுலின் பணியாளருடன் நின்ற ஏதோமியனாகிய தோயோகு, “நோபில் உள்ள அகித்தூபின் மகன் அகிமெலக்கிடம் ஈசாயின் மகன் தாவீது வருவதை நான் கண்டேன்; 10அகிமெலக்கு அவனுக்காக ஆண்டவரிடம் திருவுளத்தைக் கேட்டறிந்தார். மேலும், அவர் அவனுக்கு வழியுணவும், பெலிஸ்தியன் கோலியாத்தின் வாளும் கொடுத்தார்”, என்றான். 11அதைக்கேட்ட அரசர், அகித்தூபின் மகனாகிய குரு அகிமெலக்கையும், நோபிலிருக்கிற அவர் தந்தையின் குடும்பத்துக் குருக்கள் அனைவரையும் வரவழைத்தார். எல்லாரும் அரசரிடம் வந்தனர். 12அப்பொழுது சவுல், “அகித்தூபின் மகனே கேள்”, என அவரும், “இதோ உள்ளேன் என் தலைவரே!” என்றார். 13சவுல் அவரிடம், “நீயும் ஈசாயின் மகனும் எனக்கு எதிராக ஏன் சூழ்ச்சி செய்தீர்கள்? இந்நாள் வரை அவன் எனக்கெதிராக கிளர்ச்சி செய்யும்படி ஏன் அவனுக்கு நீ அப்பமும் வாளும் தந்து அவனுக்காக கடவுளின் திருவுளத்தைக் கேட்டறிந்தாய்?” என்று கேட்டார். 14அதற்கு அகிமெலக்கு அரசரிடம், “உம் பணியாளர் அனைவரிலும் தாவீதைப் போல் உண்மையுள்ளவன் யார்? அரசராகிய உமக்கு மருமகனும் மெய்காப்பாளர் தலைவனுமாகிய அவன் உம் வீட்டாரிடையே மேன்மை பெற்றவன் அன்றோ? 15அவனுக்காக நான் கடவுளின் திருவுளத்தைக் கேட்பது இன்று தான் முதல்தடவையா? இல்லை. அரசர் தம் பணியாளர் மேலும் என் தந்தை வீட்டார் எவர் மேலும் குற்றம் சுமத்த வேண்டாம்; ஏனெனில், உம் பணியாளனாகிய எனக்கு இக்காரியம் குறித்து எதுவும் தெரியாது” என்று பதிலளித்தார்.


16அரசர் அவரிடம் “அகிமெலக்கு, நீயும் உம் தந்தை வீட்டாரும் கண்டிப்பாகச் சாக வேண்டும்” என்றார். 17அரசர் தம்மைச் சூழ்ந்து நின்ற காவலர்களிடம், “நீங்கள் சென்று ஆண்டவரின் குருக்களை கொன்று விடுங்கள்; ஏனெனில், அவர்கள் தாவீது ஓடிப்போனதை அறிந்தும் எனக்குத் தெரிவிக்கவில்லை” என்றார். ஆனால், அரசனின் பணியாளர் ஆண்டவரின் குருக்களை கொல்ல முன்வரவில்லை. 18அப்பொழுது அரசர் தோயேகிடம், “நீ சென்று தாவீதுக்கு உடன்பட்ட குருக்களை வீழ்த்து”, என்று கட்டளையிட்டார். உடனே ஏதோமியன் தோயேகு சென்று குருக்களை வெட்டி வீழ்த்தினான். அன்றுமட்டும் அவன் நார்பட்டு ஏபோது அணிந்திருந்த எண்பத்தைந்து பேரைக் கொன்றான். 19மேலும், அவன் குருக்கள் நகராகிய நோபில் ஆண், பெண், சிறுவர், பாலகர், ஆடுமாடுகள், கழுதைகள் ஆகியவற்றையும் வாளுக்கு இரையாக்கினான்.


20ஆனால், அகித்தூபின் மகனான அகிமெலக்கின் புதல்வர்களில் ஒருவரான அபியத்தார் தப்பியோடித் தாவீதை அடைந்தார். 21ஆண்டவரின் குருக்களைச் சவுல் கொன்றுவிட்டார் என்று அபியத்தார் தாவீதிடம் கூறினார். 22தாவீது அபியத்தாரிடம், “ஏதோமியன் தோயேகு அங்கு இருந்ததால், அவன் கண்டிப்பாகச் சவுலிடம் அறிவிப்பான் என்பதை அன்றே அறிந்திருந்தேன்; உன் தந்தை வீட்டார் அனைவரும் இறப்பதற்கு நானே காரணம்!23என்னோடு தங்கு! அஞ்சாதே! என் உயிரைப் பறிக்கத் தேடுகிறவன்தான் உன் உயிரையும் பறிக்கத் தேடுவான்; ஆனால், என்னோடு நீ இருந்தால் பாதுகாப்புடன் நீ இருப்பாய்” என்றார்.


22:1 திபா 57 தலைப்பு; திபா 42 தலைப்பு. 22:4 ‘அரண்’ என்பது எபிரேய பாடம். 22:9-10 1 சாமு 21:7-9; திபா 52 தலைப்பு.


அதிகாரம் 23

கெயிலா நகரைத் தாவீது பாதுகாத்தல்


1பின்னர், “பெலிஸ்தியர் கெயிலாவுக்கு எதிராகப் போர் தொடுத்துக் களஞ்சியங்களைக் கொள்ளையடிக்கின்றனர்” என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. 2ஆதலால், தாவீது, “நான் சென்று இப்பெலிஸ்தியரை முறியடிக்கலாமா?” என்று ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டதற்கு, ஆண்டவர் தாவீதிடம், “நீ போய் பெலிஸ்தியரை முறியடித்துக் கெயிலாவைக் காப்பாற்று!” என்று பதிலளித்தார். 3ஆனால், தாவீதின் வீரர்கள் அவரை நோக்கி, “நாம் யூதாவில் இருக்கும் போதே இப்படி அஞ்சுகிறோம். பெலிஸ்தியர் படைகளுக்கு எதிராக நாம் கெயிலாவுக்கு சென்றால் இன்னும் எவ்வளவு அஞ்வோம்?” என்றனர். 4தாவீது மீண்டும் ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டார்; ஆண்டவர் மீண்டும் மறுமொழியாக, “கெயிலாவுக்குப் புறப்பட்டுப் போ! ஏனெனில், பெலிஸ்தியரை உன்னிடம் ஒப்புவிப்பேன்” என்றார். 5பின்பு, தாவீதும் அவர்தம் வீரர்களும் கெயிலாவுக்குச் சென்று, பெலிஸ்தியரோடு போரிட்டனர். அவர் அவர்களுக்குப் பேரிழப்பை உண்டாக்கி அவர்களின் கால்நடைகளை ஓட்டிச்சென்றார். இவ்வாறு, தாவீது கெயிலாவாழ் மக்களை விடுவித்தார்.


6அகிமெலக்கின் மகன் அபியத்தார் தாவீதிடம் ஓடிவந்த போது ஓர் ஏபோதை தம்முடன் எடுத்து வந்திருந்தார்.7பின்னர், தாவீது கெயிலாவுக்கு வந்திருப்பது பற்றிச் சவுலுக்கு தெரிவிக்கப்பட்டபோது, சவுல் “கடவுள் அவனை என்னிடம் ஒப்புவித்துள்ளார். ஏனெனில், கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள நகரில் நுழைந்து அவன்மாட்டிக் கொண்டான்” என்றார். 8அடுத்து, கெயிலாமீது படையெடுத்துத் தாவீதையும் அவர் வீரர்களையும் முற்றுக்கையிடுமாறு சவுல் தம் வீரர்கள் எல்லாரையும் போருக்கு அழைத்தார்.


9சவுல் தமக்குத் தீங்கு செய்யத்திட்டமிடுகிறார் என்று தாவீது அறிந்து, குரு அபியத்தாரிடம், “ஏபோதை இங்குக் கொண்டுவா” என்றார். 10பிறகு தாவீது, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, என் பொருட்டு சவுல் கெயிலாவுக்கு வந்து அந்நகரை அழிக்க திட்டமிட்டுள்ளதை உம் அடியான் நான் பன்முறை கேள்விப்பட்டேன். 11கெயிலாவின் குடிமக்கள் என்னை அவரிடம் ஒப்புவிப்பார்களா? உம் அடியான் கேள்விப்பட்டது போல் சவுல் வருவாரா? என்று கேட்டார். அதற்கு ஆண்டவர்,“அவன் வருவான்” என்று பதிலளித்தார்.


12மீண்டும் தாவீது, “கெயிலா மக்கள் என்னையும் என் வீரர்களையும் சவுலிடம் ஒப்புவிப்பார்களா?” என்று கேட்டார். அதற்கு ஆண்டவர், “அவர்கள் உங்களை ஒப்புவிப்பார்கள்” என்றார். 13பின்பு, தாவீதும் அவருடன் இருந்த சுமார் அறுநூறு பேரும் கெயிலாவைவிட்டுப் புறப்பட்டு இடமாறிச் சென்று கொண்டிருந்தார்கள். தாவீது தப்பிவிட்டதைக் கேள்விப்பட்ட சவுல், மேலும் தொடர்வதைக் கைவிட்டார்.


மலைநாட்டில் தாவீது


14தாவீது பாலைநிலத்தில் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருந்தார். மலை நாடான சீபு பாலை நிலப் பகுதிகளில் தங்கியிருந்தவரைச் சவுல் ஒவ்வொரு நாளும் தேடியும் கடவுள் அவரை அவரிடம் ஒப்புவிக்கவில்லை. 15சவுல் தம்மைக் கொலைச் செய்யத் தேடுகிறார் என்று அறிந்த தாவீது மிகுந்த அச்சம் கொண்டார்; ஆதலால், ஓர்சாவில் உள்ள சீபு பாலைநிலத்தில் தங்கியிருந்தார்.


16சவுலின் மகன் யோனத்தான் புறப்பட்டு ஓர்சாவில் இருந்த தாவீதிடம் வந்து கடவுள் அவரைப் பாதுகாப்பார் என்று திடப்படுத்தினார். 17அவர் தாவீதிடம், “அஞ்சாதே! என் தந்தை சவுல் உன்னைக் கண்டு பிடிக்கமாட்டார். நீ இஸ்ரயேலுக்கு அரசனாவாய்; அப்பொழுது நான் உனக்கு அடுத்த இடத்தை வகிப்பேன்; என் தந்தை சவுல் கூட இதை அறிவார்” என்றார். 18ஆண்டவர் திருமுன் இருவரும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். தாவீது ஓர்சாவிலேயே இருக்க, யோனத்தான் வீடுதிரும்பினான்.✠


19பின்பு, சீபியர் கிபாயாவிலிருந்த சவுலிடம் சென்று, “தாவீது எங்கள் பகுதியில் எசிமோனுக்குத் தெற்கே உள்ள அக்கிலா என்ற மலைநாட்டில் ஓர்சாவின் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துக் கொண்டிருக்கிறான் அல்லவா?✠20அரசே, உம் விருப்பத்தின் படி இப்பொழுதே வாரும்; அவனை நாங்களே அரசரிடம் ஒப்புவிக்கிறோம்” என்று கூறினர்.


21சவுல் அவர்களைப் பார்த்து, “நீங்கள் என் மீது இரக்கம் காட்டியதால் ஆண்டவரின் ஆசியைப் பெறுவீர்களாக! 22நீங்கள் போய் அவன் நடமாடுகிற இடம் எதுவென்றும், யார் அவனை அங்கு பார்த்தவன் என்றும் இன்னும் நன்றாக ஆய்ந்து அறியுங்கள்; ஏனெனில், அவன் மிகவும் சூழ்ச்சிமிக்கவன் என்று எனக்குத் தெரிய வந்தது. 23ஆதலால் அவன் ஒளிந்துக் கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் குறித்துக் கொண்டு, உறுதியான தகவல்களுடன் என்னிடம் திரும்பி வாருங்கள். அப்பொழுது நான் உங்களோடு செல்வேன். அவன் நாட்டில் இருந்தால் பல்லாயிர யூதா மக்கள் வாழும் பகுதியிலும் அவனைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவேன்” என்றார்.


24அவர்கள் சவுலுக்கு முன்னரே சீபுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பின்பு, தாவீதும் அவர்தம் ஆள்களும் எசிமோனுக்குத் தெற்கே, அராபாவிலுள்ள மாவோன் பாலைநிலத்தில் இருந்தனர். 25சவுலும் அவர் ஆள்களும் அவரைத் தேடிச் சென்றனர். தாவீது இதை அறிந்து மாவோன் பாலைநிலத்தில் உள்ள பாறைக்குச் சென்றார். சவுல் இதை கேள்வியுற்று, அவரும் மாவோன் பாலைநிலத்தில் தாவீதைத் தேடினார். 26சவுல் மலையின் ஒரு பக்கத்தில் செல்ல, தாவீதும் அவர் ஆள்களும் அதே மலையின் மறுப்பக்கத்தில் நடந்தனர். சவுலிடமிருந்து தப்பித்துக்கொள்ள தாவீது விரைந்து சென்ற போது, சவுலும் அவர்தம் ஆள்களும் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் பிடிப்பதற்கு வளைத்துக் கொண்டனர். 27அவ்வேளையில் ஒரு தூதன் சவுலிடம் வந்து, “விரைந்து வாரும்! பெலிஸ்தியர் நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள்” என்றான். 28அதனால், சவுல் தாவீதைக் தொடர்வதைக் கைவிட்டு, பெலிஸ்தியரை எதிர்க்கச் திரும்பிச் சென்றார். ஆதலின், அவ்விடம் “பிரிக்கும் பாறை” என்று அழைக்கப்பட்டது. 29தாவீது அங்கிருந்து புறப்பட்டு ஏன்கேதிலுள்ள பாதுகாப்பான இடத்தில் தங்கினார்.


23:18 1 சாமு 18:3. 23:19 திபா 54 தலைப்பு.


அதிகாரம் 24

தாவீது சவுலைக் கொல்லாது விடல்


1சவுல் பெலிஸ்திரைத் தொடர்வதைக் கைவிட்டுத் திரும்பிய போது; “இதோ ஏன்கேதிப் பாலைநிலத்தில் தாவீது இருக்கிறான்” என்று தெரிவிக்கப்பட்டது. 2சவுல் இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் தேடி வரையாடுகளின் பாறைகளுக்கு எதிர்ப்புறம் சென்றார். 3அவர் சென்ற போது வழியோரத்தில் ஆட்டுப் பட்டிகளைக் கண்டார்; அதனருகில் ஒரு குகை இருந்தது. இயற்கைக்கடன் கழிப்பதற்கு சவுல் அதனுள் சென்றார். அப்பொழுது தாவீதும் அவர்தம் ஆள்களும் அக்குகையின் உட்பகுதியில் இருந்தனர்.✠ 4தாவீதின் ஆள்கள் அவரிடம், “‘இதோ! உன் எதிரியை உன்னிடம் ஒப்புவிப்பேன். உன் விருப்பத்திற்கு ஏற்ப அவனுக்குச் செய்,’ என்று ஆண்டவர் சொன்ன நாள் இதுவே!” என்றனர். உடனே தாவீது தவழ்ந்து சென்று சவுலின் மேலங்கியின் தொங்கலை அவருக்குத் தெரியாமல் அறுத்தார். 5தாவீது சவுலின் தொங்கலை அறுத்தபின் அதற்காக மனம் வருந்தினார். 6அவர் தம் ஆள்களைப் பார்த்து, “ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானதால் நான் அவர் மேல் கைவைக்கக்கூடாது” என்றார்.✠ 7ஆதலின், தம் ஆள்கள் சவுலைத் தாக்காதவாறு தாவீது இவ்வார்த்தைகளால் அவர்களைத் தடைசெய்தார். பின்பு, சவுல் எழுந்து குகையை விட்டு தம் வழியே சென்றார்.


8அதன்பின், தாவீதும் எழுந்து குகையிலிருந்து வெளியேறிச் சவுலைப் பின் தொடர்ந்து, “அரசே, என் தலைவரே!” என்று அழைத்தார். சவுல் பின்புறம் திரும்பிய போது தாவீது தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கினார். 9பின்பு, தாவீது சவுலை நோக்கி, “‘தாவீது உமக்குத் தீங்கு செய்யத் தேடுகிறான்’ என்று சொல்லும் மனிதனின் வார்த்தைகளை நீர் கேட்கலாமா? 10இதோ! குகையில் ஆண்டவர் என்னிடம் ஒப்புவித்தார் என்பதை இன்று உம் கண்களே கண்டன; உம்மைக் கொல்ல வேண்டுமெனச் சிலர் என்னை வற்புறுத்தினார்கள்; ஆனால், ‘அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பெற்றவர்; என் தலைவருக்கு எதிராக நான் கை ஓங்கக் கூடாது’ என்று சொல்லி நான்தான் உம்மைக் காப்பாற்றினேன். 11என் தந்தையே, பாரும்! என் கையிலிருக்கும் உம் மேலங்கியின் தொங்கலைப் பாரும். உம்மைக் கொல்லாமல் உம் மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்து எடுத்துள்ள என் செயலைப் பார்த்தாலே என்னிடம் யாதொரு குற்றமோ துரோகமோ இல்லையென்பதை நீர் அறிவீர்! நீர் என் உயிரைப் பறிக்கத் தேடினாலும், உமக்கெதிராக நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. 12உமக்கும் எனக்கும் ஆண்டவர் நடுவராய் இருப்பாராக! என்பொருட்டு ஆண்டவரே உமக்கு நீதி வழங்கட்டும்; ஆனால், உமக்கு எதிராக என் கை எழாது. 13முன்னோரின் வாய்மொழிக்கேற்ப, ‘தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும்’. ஆதலால்’ உம் மேல் நான் கைவைக்க மாட்டேன். 14இஸ்ரயேலின் அரசர் யாரைத் தேடிப் புறப்பட்டார்? யாரைப் பின் தொடர்கிறீர்? ஒரு செத்த நாயை அன்றோ? ஒரு தெள்ளுப் பூச்சியை அன்றோ?✠ 15ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எனக்கும் நீதி வழங்குவாராக! அவரே எனக்காக வழக்காடி உம் கையினின்று என்னை விடுவிப்பாராக!” என்றார்.


16தாவீது இவ்வாறு சவுலிடம் பேசி முடித்தபின் சவுல், “என் மகன் தாவீதே! இது உன் குரல்தானா!” என்று சொல்லி உரத்த குரலில் அழுதார். 17அவர் தாவீதிடம், “நீ என்னிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; ஆனால், நானோ உனக்குத் தீங்கு செய்தேன். 18ஆண்டவர் என்னை உன்னிடம் ஒப்புவித்திருந்தும் நீ என்னைக் கொல்லவில்லை. இதனால் நீ எனக்கு நன்மையே செய்து வந்திருப்பதை இன்று நீ வெளிப்படுத்தியிருக்கிறாய். 19ஏனெனில், ஒருவன் தன் எதிரியைக் கண்டபின் அவன் நலமுடன் செல்ல அனுமதிப்பானா? இன்று நீ எனக்கு செய்த நன்மைக்கு ஈடாக ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக! 20இதோ, நீ திண்ணமாய் அரசனாவாய் என்றும் இஸ்ரயேலின் அரசை நீ உறுதிப்படுத்துவாய் என்றும் இப்பொழுது நான் அறிகிறேன். 21ஆதலால், எனக்குப் பின்வரும் என் வழிமரபை நீ வேரறுப்பதில்லை என்றும் என் தந்தை வீட்டாரிலிருந்து என் பெயரை அழிக்கமாட்டாய் என்றும் ஆண்டவர் மேல் எனக்கு ஆணையிட்டுக் கூறு” என்றார்.


22அவ்வாறே, தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக் கூறினார். பின்னர், சவுல் வீடு திரும்ப, தாவீதும் அவர் தம் ஆள்களும் பாதுகாப்பான இடம் நோக்கிச் சென்றனர்.


24:6 1 சாமு 26:11. 24:14 1 சாமு 26:20. 24:3 திபா 57 தலைப்பு; திபா 142 தலைப்பு.


அதிகாரம் 25

சாமுவேலின் இறப்பு


1சாமுவேல் இறந்தார்; இஸ்ரயேலர் எல்லாரும் ஒன்றுகூடி அவருக்காத் துக்கம் கொண்டாடினர். பின்பு, அவர்கள் அவரை இராமாவிலுள்ள அவரது இல்லத்தில் அடக்கம் செய்தனர். தாவீது புறப்பட்டுப் பாரான் பாலைநிலத்திற்குச் சென்றார்.

>

தாவீதும் அபிகாயிலும்


2கர்மேலில் சொத்துக்களை உடைய ஒருவன் மாவோனில் இருந்தான். அம்மனிதன் செல்வம் மிக்கவன்; அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும் ஆயிரம் வெள்ளாடுகளும் இருந்தன. அவன் கர்மேலில் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்தரித்துக் கொண்டிருந்தான். 3அம் மனிதனின் பெயர் நாபால், அவன் மனைவியின் பெயர் அபிகாயில். அப்பெண் மிகுந்த அறிவும் அழகும் வாய்ந்தவள்; அவள் கணவனோ முரடனும் இழிந்தவனுமாய் இருந்தான். அவன் ஒரு காலேபியன்.


4நாபால் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிப்பதாகத் தாவீது பாலைநிலத்தில் கேள்வியுற்றார். 5தாவீது அங்கே பத்து இளைஞர்களை அனுப்ப எண்ணி, அப் பத்துப் பேரை அழைத்து, “நீங்கள் கர்மேலுக்குச் சென்று அங்கே நாபாலைக் கண்டு என் பெயரால் அவனுக்கு சமாதான வாழ்த்துக் கூறுங்கள். 6அவனை நோக்கி, ‘உமக்கும், உம் குடும்பத்துக்கும், உமக்கு உள்ள அனைத்துக்கும் நலம் உண்டவதாக! 7ஆடுகள் உரோமம் கத்தரிப்பவர்கள் உம்மிடம் இருக்கிறார்கள் எனக் கேள்வியுற்றேன்! உம் இடையர்கள் எம்மோடு இருந்தார்கள்; நாங்கள் அவர்களை துன்புறுத்தியதில்லை; கர்மேலில் அவர்கள் இருந்த காலமெல்லாம் எதையும் இழக்கவுமில்லை. 8உம் பணியாளர்களைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்வார்கள். ஆதலால், இந்த இளைஞர்களுக்கு உம் கண்களில் தயவு கிடைக்கட்டும். ஏனெனில், நாங்கள் ஒரு திருவிழா நாளில் வந்துள்ளோம். உம்மால் கொடுக்க முடிந்ததை உம் அடியார்களுக்கும் உம் புதல்வன் தாவீதுக்கும் தந்தருள்க!’ எனக் கூறுங்கள்” என்று சொல்லியனுப்பினார்.


9தாவீதின் இளைஞர்கள் சென்று நாபாலிடம் தாவீதின் பெயரால் அவை யாவற்றையும் கூறிக் காத்திருந்தனர். 10நாபால் தாவீதின் இளைஞர்களிடம், “தாவீது என்பவன் யார்? ஈசாயின் மகன் யார்? தங்கள் தலைவர்களைவிட்டுப் பிரிந்து செல்லும் பணியாளர் இந்நாளில் பலர் உள்ளனர். 11என் அப்பங்களையும் தண்ணீரையும் உரோமம் கத்திரிப்பவர்களுக்காக நான் அடித்துச் சமையல் செய்த இறைச்சியையும் எடுத்து எங்கிருந்தோ வந்த மனிதர்களுக்கு நான் கொடுப்பதா?” என்று பதிலளித்தான்.


12ஆதலால், தாவீதின் இளைஞர்கள் திரும்பிவந்து அவரிடம் எல்லாவற்றையும் அப்படியே கூறினர். 13தாவீது தம் ஆள்களை நோக்கி, “நீங்கள் அவரவர் வாளை எடுத்துக் கட்டிக்கொள்ளுங்கள்” என்றார். அதன்படி அவர்கள் ஒவ்வொருவனும் தன் வாளைக் கட்டிக்கொண்டான்; தாவீதும் தம் வாளைக் கட்டிகொண்டார். அவருடன் நானூறு பேர் செல்ல, இருநூறு பேர் பயணமூட்டைகளின் அருகில் இருந்துகொண்டனர்.


14நாபாலுடைய பணியாள்களில் ஒருவன் அவன் மனைவி அபிகாயிலிடம், “இதோ நம் தலைவருக்கு வாழ்த்துச் சொல்ல பாலைநிலத்திலிருந்து தாவீது தூதர்களை அனுப்பினார். அவர்களை இவர் அவமானப்படுத்திவிட்டார். 15இருப்பினும், இந்த ஆள்கள் எங்களுக்கு நன்மையே செய்தனர்; எங்களைத் துன்புறுத்தியதில்லை, நாங்கள் வயல் வெளிகளில் அவர்களோடு நடமாடிய காலமெல்லாம் எதையும் இழக்கவில்லை. 16நாங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு அவர்களோடு வாழ்ந்த நாள் முழுவதும் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றி சுவராக இருந்தனர். 17எனவே, இதையறிந்து நீ யோசித்து என்ன செய்ய முடியுமென்று பாரும்; ஏனெனில், நம் தலைவர் மேலும் அவர் வீட்டார் மேலும் கண்டிப்பாக தீமை வரவிருக்கிறது. இவரோ யாருமே அவரோடு பேசத்துணியாத அளவுக்குத் தீய குணமுடையவராய் இருக்கிறார்” என்றனர்.


18இதைக் கேட்ட அபிகாயில் இருநூறு அப்பங்கள், இரண்டு துருத்தி திராட்சைப்பழ இரசம், தோலுரித்த ஐந்து ஆடுகள், ஐந்து படி வறுத்த பயறு, திராட்சைப் பழ அடைகள் நூறு, அத்திப்பழ அடைகள் இருநூறு ஆகியவற்றை விரைந்தே எடுத்து ஒரு கழுதை மேல் ஏற்றினார். 19அவர் தம் பணியாளர்களை நோக்கி, “நீங்கள் எனக்கு முன்னே செல்லுங்கள், நான் உங்களுக்குப் பின் வருகிறேன்,” என்றார். ஆனால், இதைப்பற்றி தம் கணவர் நாபாலிடம் தெரிவிக்கவில்லை.


20அவர் கழுதை மேல் ஏறிப் பயணமாகி, மலைச் சரிவுப் பாதையில் இறங்கி வருகையில் தாவீதும் அவருடைய ஆள்களும் அவரை நோக்கி இறங்கி வந்தனர். அவர் அவர்களைச் சந்தித்தார். 21அப்பொழுது தாவீது, “இந்த மனிதனுக்குப் பாலைநிலத்தில் இருந்ததையெல்லாம் நான் காப்பாற்றியது வீண்தான்! அவனுடைய பொருள் எதையும் அவன் இழக்கவில்லை. இருப்பினும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமையே செய்தான். 22அவனுக்குச் சொந்தமானவர்களில் ஒர் ஆண்மகன் கூடப் பொழுது விடியுமட்டும் உயிரோடு விட்டு வைத்தால், கடவுள் அதற்கும் அதற்கு மேலும் அவரைத் தண்டிப்பாராக” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.


23அபிகாயில் தாவீதைப் பார்த்தபோது கழுதையினின்று வேகமாக இறங்கி அவர் முன் தரையில் முகம் குப்புற விழுந்து வணங்கினார். 24அவர் தாவீதின் காலில் விழுந்து, “என் தலைவரே, பழி என் மேல் மட்டும் இருக்கட்டும்! உம் அடியவள் சொல்லப் போவதை நீர் செவி கொடுத்துக் கேட்க வேண்டுகிறேன். 25என் தலைவரே, அந்தத் தீய குணமுடைய மனிதராகிய நாபாலைப் பொருட்படுத்த வேண்டாம் ஏனெனில், அவர் தம் பெயருக்கேற்ப ஒரு மூடர். நாபால் என்பது அவருடைய பெயர்; அதன் படி மூடத்தனமும் அவருக்குண்டு. என் தலைவராகிய நீர் அனுப்பிய இளைஞர்களை உம் அடியவள் பார்க்கவில்லை. 26இப்பொழுது, என் தலைவரே, நீர் இரத்தத்தைச் சிந்தாதவாறும், நீர் உம் கைகளினால் பழிக்குப் பழி வாங்காதவாறும் உம்மைத் தடுத்தவர் ஆண்டவரே! வாழும் ஆண்டவர் மேலும் உம் இருக்கையின் மேலும் ஆணை! உம் பகைவர்களும் என் தலைவராகிய உமக்குத் தீங்கு செய்ய முயல்பவர்களும் நாபாலைப்போல் ஆவார்களாக! 27>இப்பொழுது உம் அடியவள் என் தலைவருக்கு கொண்டு வந்துள்ள காணிக்கைகளை ஏற்றுக் கொண்டு என் தலைவரின் அடிச்சுவட்டைப் பின் தொடரும் இவ்விளைஞர்களிடம் அளிப்பாராக! 28உம் அடியவளின் குற்றத்தை மன்னிக்க வேண்டுகிறேன்; என் தலைவரே, நீர் ஆண்டவரின் போர்களை நடத்துவதால், என் தலைவராகிய உமக்கு ஆண்டவர் ஒரு நிலையான வீட்டை உறுதியாக கட்டியெழுப்புவார். உம் வாழ்நாள் முழுவதும் எத்தீங்கும் உம்மை அணுகாது! 29உம்மைத் தாக்கவும் உம்மைக் கொல்லவும் யாராவது எப்பொழுதாவது எழுந்தால், என் தலைவரின் உயிர், உம் கடவுளாகிய ஆண்டவரின் பாதுகாப்பில் வாழ்வோரின் கட்டுகளில் இருக்கட்டும். உம் எதிரிகளின் உயிர்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல் எறியப்படும். 30ஆண்டவர் தலைவராகிய உம்மைக் குறித்துத் தாம் வாக்களித்த நன்மைகளை எல்லாம் செய்து இஸ்ரயேலின் அரசராக ஏற்படுத்துவார். 31அப்பொழுது காரணமின்றி இரத்தம் சிந்தினது குறித்தோ, என் தலைவர் பழிக்குப் பழி வாங்கியது குறித்தோ, என் தலைவருக்கு துயரோ மனவருத்தமோ உண்டாகாது. எம் தலைவராகிய ஆண்டவர் உமக்கு வெற்றியளிக்கின்றபோது உம் அடியவளை நினைவு கூர்ந்தருளும்!“ என்றார். 32தாவீது அபிகாயிலை நோக்கி, “இன்று உன்னை என்னிடம் அனுப்பிய இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக! 33இரத்தப் பழிக்குற்றத்திலிருந்தும் பழித்தீர்ப்பதிலிருந்தும் என்னை இன்று தடை செய்த நீ ஆசி பெறுவாய்! உன் நுண்ணறிவும் ஆசி பெறுவதாக! 34நீ என்னை விரைவாக சந்திக்க வராதிருந்தால் பொழுது விடிவதற்குள் நாபாலுக்குச் சொந்தமான வயல்களில் ஓர் ஆண்மகனைக் கூட உயிரோடு விட்டு வைத்திருக்க மாட்டேன். இதை உனக்குத் தீங்கு செய்வதிலிருந்து என்னைத் தடுத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் உறுதியாகச் சொல்கிறேன்!” என்றார். 35பின்பு, அபிகாயில் தமக்குக் கொண்டு வந்ததை தாவீது அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டு, அவரை நோக்கி, “சமாதானத்துடன் நீ உன் வீட்டுக்குப் போ! உனக்குச் செவி கொடுத்து உன் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளேன்” என்றார்.


36அபிகாயில் நாபாலிடம் வந்த பொழுது அவன் அரசவிருந்துக்கு ஒப்பான விருந்தொன்றைத் தன் வீட்டில் அனுபவித்துக் கொண்டிருந்தான்; அவன் உள்ளம் களிப்புற்றிருந்தது. அவன் மிகுந்த குடிபோதையில் இருந்ததால் பொழுது விடியும் வரை அவர் எதுவும் பேசாதிருந்தார். 37காலையில் நாபால் திராட்சை மதுவின் போதை தெளிந்தபின் அவன் மனைவி இவையனைத்தையும் அவனிடம் கூறினார். அப்பொழுது அவன் பெரிய‌ அதிர்ச்சிக்குள்ளாகிக் கல்லைப்போல் செயலற்றவன் ஆனான். 38ஆண்டவர் நாபாலை வதைத்ததால் சுமார் பத்துநாள்களுக்குப்பின் அவன் இறந்தான்.


39நாபால் இறந்து விட்டதைத் தாவீது கேள்வியுற்றபோது, “நாபால் கையினால் எனக்கு வந்த இழிவுக்கு நிகராக நீதி வழங்கி தம் அடியானைத் தீமை செய்யாதவாறு காப்பாற்றிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! நாபாலின் தீமைகள் அவன் தலைமேல் விழுமாறு ஆண்டவர் அவற்றைத் திருப்பிவிட்டார்" என்றார். பின்பு, அபிகாயிலை மணந்துக்கொள்வதற்காகத் தாவீது அவரிடம் தூதனுப்பினார். 40தாவீது பணியாளர்கள் கர்மேலில் இருக்கிற அபிகாயிலிடம் வந்து அவரை நோக்கி, தாவீது உம்மை மணந்து கொள்ள விரும்புகிறார். அதற்காக எங்களை உங்களிடம் அனுப்பினார்” என்றனர்.


41அவர் எழுந்து தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கி, “இதோ! உம் அடிமையாகிய நான் என் தலைவரின் பணியாளர்களுடைய கால்களைக் கழுவும் பணிப்பெண்ணாக இருப்பேனாக!” என்றாள். 42உடனே அபிகாயில் ஒரு கழுதை மேல் ஏறி விரைந்து சென்றார். பணிப்பெண்கள் ஐவர் அவருடன் சென்றார்கள்; அவர் தாவீதின் தூதர்களைப் பின் தொடர்ந்து சென்று அவருக்கு மனைவியானார். 43இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமையும் தாவீது மணந்து கொண்டார்; அவர்கள் இருவரும் அவருக்கு மனைவியானார்கள். 44சவுல் தம் புதல்வியும் தாவீதின் மனைவியான மீக்காலைக் கல்லிம் ஊரானாகிய இலாயிசின் மகன் பல்திக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்.✠


25:44 2 சாமு 3:14-16.


அதிகாரம் 26

தாவீது சவுலை மீண்டும் கொல்லாது விடல்


1பின்னர், சீபியர் கிபாயாவிலிருந்த சவுலிடம் சென்று, ‘தாவீது எசிமோனுக்கு எதிரே உள்ள அக்கிலா குன்றில் ஒளிந்திருக்கிறான்’ என்று கூறினார்.✠ 2ஆதலால், சவுல் சீபு பாலைநிலத்தில் தாவீதைத் தேடுவதற்காக இஸ்ரயேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் அதை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். 3சவுல், எசிமோனுக்கு எதிரே சாலையோரம் அக்கிலா குன்றின் மேல் பாசறை அமைத்தார். ஆனால், தாவீது பாலைநிலத்திலேயே இருந்தார். சவுல் பாலை நிலத்தில் தன்னை பின் தொடர்வதை அறிந்து, 4தாவீது ஒற்றர்களை அனுப்பி சவுல் வந்தது உண்மைதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டார். 5உடனே தாவீது எழுந்து சவுல் பாளையம் இறங்கியிருந்த இடத்திற்கே சென்றார்; சவுலும் அவர் படைத்தலைவனும் நேரின் மகனுமான அப்னேரும் படுத்திருந்த இடத்தைப் பார்த்தார்; சவுல் பாசறையினுள் படுத்திருக்க, அவர்தம் வீரர்கள் அவரைச் சுற்றிலும் படுத்திருந்தனர்.


6அப்பொழுது தாவீது இத்தியன் அகிமெலக்கையும் செரூயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் நோக்கி, “சவுல் இருக்கும் பாளையத்திற்கு என்னோடு வருவது யார்?” என்று கேட்க “உம்முடன் நான் வருகிறேன்” என்று அபிசாய் பதிலளித்தான்.


7ஆதலால், தாவீதும் அபிசாயும் இரவில் அப்பாளையத்திற்குச் சென்றனர்; சவுல் கூடாரத்தினுள் தூங்குவதையும் அவர் தலைமாட்டில் அவருடைய ஈட்டி தலையில் குத்தியிருப்பதையும் கண்டனர்; அப்னேரும் படைவீரர்களும் அவரைச் சுற்றிலும் படுத்து உறங்கினர். 8அபிசாய் தாவீதிடம், “இந்நாளில் கடவுள் உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார்; ஆதலால், இப்பொழுது நான் அவரை ஈட்டியால் இரண்டு முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பதிய குத்தப்போகிறேன்” என்றான்.


9ஆனால், தாவீது அபிசாயியை நோக்கி, “அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கை வைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?” என்று சொல்லித் தடுத்தார்.


10மேலும், தாவீது, “வாழும் ஆண்டவர்மேல் ஆணை! ஆண்டவரே அவரைக் கொல்லட்டும்; அவர் காலம் நிறைவுற்றுத் தாமாக இறக்கட்டும் அல்லது போரில் சென்று அவர் மடியட்டும்! 11ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கை வைக்காதபடி ஆண்டவர் என்னைக் காப்பாராக! எனவே, அவர் தலைமாட்டில் இருக்கும் ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக்கொண்டு நாம் புறப்படுவோம்” என்றார்.✠ 12அவ்வாறே, தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக்கொண்டபின் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் ஒருவரும் விழிக்கவில்லை; அதைக் காணவுமில்லை; அறியவுமில்லை; ஆண்டவர் அவருக்கு ஆழ்ந்த உறக்கத்தை அளித்திருந்தபடியால் அவர்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தனர். 13பின்பு, தாவீது கடந்து சென்று தொலைவிலிருந்த ஒரு குன்றின் மீது நின்றார். அவர்களிடையே மிகுந்த இடைவெளி இருந்தது. 14அங்கிருந்து படைவீரர்களையும் நேரின் மகன் அப்னேரையும் தாவீது கூப்பிட்டு, “அப்னேர், நீ மறுமொழி சொல்ல மாட்டாயா?” என்று கேட்டார். அப்னேர் அதற்கு, “அரசரை நேராக அழைக்க நீ யார்?” என்று கேட்டான்.

15அப்போது தாவீது அப்னேரிடம், “நீ வீரன் அல்லவா? இஸ்ரயேலில் உனக்கு நிகரானவன் யார்? பின் ஏன் உன் தலைவராகிய அரசரை விழித்திருந்து காக்கவில்லை? மக்களில் ஒருவன் உன் தலைவராகிய அரசரைக் கொல்ல அங்கு வந்தானே! 16நீ செய்த இச்செயல் சரியல்ல; ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்ட உங்கள் தலைவரை நீங்கள் விழித்திருந்து காக்கத் தவறியதால், நீ சாவுக்கு உள்ளாவாய் என்று வாழும் ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன். அரசரின் ஈட்டியும் அவர் தலைமாட்டிலிருந்த தண்ணீர் குவளையும் இப்போது எங்கே உள்ளன என்று பார்” என்றார்.

17சவுல் தாவீதின் குரலை அறிந்து கொண்டு, “என் மகன் தாவீதே, இது உன் குரல்தானா?” என்று கேட்க, அதற்குத் தாவீது,“என் தலைவராகிய அரசே! இது என் குரல் தான்” என்றார். 18மீண்டும் அவர், “என் தலைவராகிய நீர் உம் அடியானைப் இப்படிப் பின் தொடர்ந்து வருவது ஏன்? நான் என்ன செய்தேன்? என்னிடமுள்ள குற்றம்தான் என்ன? 19ஆதலால், இப்பொழுது அரசராகிய என் தலைவர் தம் அடியானின் வார்த்தைகளைக் கேட்பாராக! ஆண்டவர் உம்மை எதிராக ஏவி விட்டிருப்பின், அவர் என் பலியை ஏற்றுக் கொள்ளட்டும்; மனிதர்கள் அப்படிச் செய்திருந்தால் அவர்கள் ஆண்டவர் திருமுன் சபிக்கப்படுக! ஏனெனில், ‘நீ சென்று வேற்றுத் தெய்வங்களை வழிபடு’ என்று அவர்கள் கூறி நான் ஆண்டவருடைய உரிமையில் பங்கு பெறுவதிலிருந்து என்னை இந்நாளில் துரத்திவிட்டனர். 20ஆதலால், ஆண்டவர் திருமுன்னிலைக்கு வெகு தொலைவில் உள்ள நிலத்தில் என் இரத்தம் சிந்தப்படாதிருக்கட்டும்! ஏனெனில், மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோல், இஸ்ரயேலின் அரசர் ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடி வந்துள்ளார்” என்றார்.

21அப்பொழுது சவுல், “நான் பாவம் செய்துள்ளேன். என் மகன் தாவீதே! திரும்பி வா, என் உயிரை இன்று நீ இவ்வளவு மதித்தபடியால் இனி உனக்கு நான் எத்தீங்கும் செய்யமாட்டேன். இதோ, நான் மூடத்தனமாய் நடந்து பெரும் தவறு இழைக்கிறேன்” என்றார்.

22தாவீது மறுமொழியாக, “அரசே உம் ஈட்டி இதோ உள்ளது. இளைஞரில் ஒருவன் இப்புறம் வந்து அதைக் கொண்டு போகட்டும். 23அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தும் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கை வைக்கவில்லை. 24இன்று உம் உயிர் என் கண்களில் மிகவும் மதிப்பு மிகுந்ததாக இருந்தது போல் என் உயிரும் ஆண்டவர் கண்களுக்கு அருமையாய் இருப்பதாக! அவரே என்னை எல்லா இக்கட்டிலிருந்து விடுவிப்பாராக!” என்றார்.

25அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி, “என் மகன் தாவீதே! நீ ஆசி பெறுவாயாக! நீ பல காரியங்களைச் செய்வாய்; அவையனைத்திலும் வெற்றி பெறுவாய்!” என்று வாழ்த்தினார். பின்னர், தாவீது தம் வழியே செல்ல, சவுல் தம் இருப்பிடம் திரும்பினார்.


26:11 1 சாமு 24:6.


26:1 திப 54 தலைப்பு.


அதிகாரம் 27

பெலிஸ்தியரிடையே தாவீது


1பின்னர், தாவீது, “ நான் இங்கே சவுலின் கையில் ஒருநாள் மடிவது திண்ணம்; ஆதலால் பெலிஸ்தியர் நாட்டுக்குச் சென்று தப்பித்துக் கொள்வதைவிட எனக்கு வேறு வழியில்லை; அப்பொழுது தான் இஸ்ரயேலின் எல்லைக்குள் என்னைக் கண்டு பிடிக்கலாமென்ற நம்பிக்கை சவுலுக்கு அற்றுப் போகும்; நானும் அவர் கையிலிருந்து தப்பி விடுவேன்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். 2பின் தாவீதும் அவருடன் இருந்த அறுநூறு ஆள்களும் புறப்பட்டுச் சென்று மாவோகின் மகனும் காத்து மன்னருமான ஆக்கிசு என்பவரிடம் சேர்ந்தனர். 3அங்கே தாவீதும் அவர் தம் ஆள்களும் அவரவர் குடும்பத்தாரும் தாவீதோடு அவருடைய இருமனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், நாபாலின் மனைவியும் கர்மேலைச் சார்ந்தவருமான அபிகாயிலும் காத்து நகரில் ஆக்கிசுடன் தங்கினார். 4தாவீது காத்து நகருக்கு ஓடிவிட்டார் என்று சவுலுக்கு அறிவித்தனர். அதன் பின் அவர் அவரைத் தேடிச்செல்லவில்லை. 5தாவீது ஆக்கிசை நோக்கி, “என் மேல் உமக்கு இரக்கம் இருந்தால் நான் குடியிருக்க நாட்டுப் புற ஊர்கள் ஒன்றில் எனக்கு இடம் தாரும்; உம் அடியான் உம்மோடு தலைநகரில் ஏன் வாழ வேண்டும்?” என்றார். 6ஆதலால், அன்று ஆக்கிசு அவருக்குச் சிக்லாகைக் கொடுத்தார்; அதனால் இந்நாள் வரை சிக்லாகு யூதா அரசருக்கு உரியதாய் இருக்கிறது. 7தாவீது பெலிஸ்திய எல்லைக்குள் ஓர் ஆண்டும் நான்கு மாதங்களும் குடியிருந்தார். 8பின்னர், தாவீதும் அவர் தம் ஆள்களும் புறப்பட்டுக் கெசூரியர், கிர்சியர், அமலேக்கியர் ஆகியோரைக் கொள்ளையடித்துச் சென்றனர். ஏனெனில், சூர் தொடங்கி எகிப்து நாடுவரை உள்ள நிலப்பகுதியில் பண்டைக்காலந்தொட்டு இவர்கள் குடியிருந்தனர். 9தாவீது அந்நாட்டைத் தாக்கியபோது ஆண் பெண் எவரையும் உயிரோடு விட்டுவைக்கவில்லை; ஆனால், ஆடு மாடுகள், கழுதைகள், எருதுகள், ஒட்டகங்கள், ஆடைகள் ஆகியவற்றைக் கைப்பற்றிக கொண்டு ஆக்கிசிடம் திரும்பிவந்தார். 10ஆக்கிசு அவரிடம், “இன்று யாரை நீர் கொள்ளையடித்தீர்?” என்று கேட்க, தாவீது மறுமொழியாக, “யூதாவின் தென் பகுதியில்”, அல்லது “எரகுமவேலரின் தென்பகுதியில்,” அல்லது “கேனியரின் தென்பகுதியியல் கொள்ளையடித்தேன்” என்பார். 11தாவீது ஆண் பெண் எவரையும் உயிரோடு விட்டுவைப்பதில்லை; ஏனெனில், “அவர்கள் யாராவது காத்துக்குச் செய்தி கொண்டுவந்தால், ‘இவ்வாறெல்லாம் தாவீது எங்களுக்குச் செய்தான்’ என்று மன்னரிடம் தம்மைப் பற்றித் தெரிவித்துவிடுவார்கள்”என்று தாவீது நினைத்தார். அவர் பெலிஸ்தியர் நாட்டில் குடியிருந்த காலமெல்லாம் இதுவே அவரது வழக்கமாய் இருந்தது. 12ஆக்கிசு தாவீதின் மேல் நம்பிக்கை வைத்தார்; ஏனெனில், அவர் ‘இஸ்ரயேலராகிய தம் மக்களின் முழு வெறுப்புக்கு ஆளாகியுள்ளதால், அவர் என்றும் என் பணியாளராய் இருப்பார்’ என்று நினைத்தார்.


அதிகாரம் 28

1அக்காலத்தில் பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போர் தொடுக்க தங்கள் படைகளை ஒன்று திரட்டினர். அப்பொழுது ஆக்கிசு தாவீதிடம், “நீரும் உம் ஆள்களும் என்னோடு போர்க்களம் வரவேண்டும் என்பதை அறிந்து கொள்ளும்” என்றார். 2அதற்குத் தாவீது ஆக்கிசை நோக்கி, “மிக நல்லது, உம் பணியாளன் செய்யப்போவதை நீர் அறிந்து கொள்வீர்” என்றார். ஆக்கிசு தாவீதிடம், “எனக்கு என்றும் மெய்க்காப்பாளராய் இருக்கும்படி உம்மை நான் நியமிக்கிறேன்” என்று சொன்னார்.


சவுல் குறிகேட்டல்


3சாமுவேல் இறந்தார். இஸ்ரயேலர் அனைவரும் அவருக்காகத் துக்கம் கொண்டாடியபின் அவரது நகரான இராமாவில் அவரை அடக்கம் செய்தனர். சவுல் சூனியக்காரரையும் குறிசொல்பவர்களையும் நாட்டிலிருந்து துரத்தியிருந்தார்.✠


4பெலிஸ்தியர் ஒன்று திரண்டு வந்து சூனேமில் பாளையம் இறங்கினர். சவுல் இஸ்ரயேலர் அனைவரையும் ஒன்று திரட்ட, அவர்கள் கில்போவாவில் பாளைமிறங்கினர். 5பெலிஸ்தியரின் படையைக் கண்ட போது சவுல் அச்சம் கொண்டார்; அவருடைய உள்ளம் பெரிதும் திகிலுற்றது. 6சவுல் ஆண்டவரிடம் ஆலோசனைக் கேட்க, ஆண்டவர் கனவு மூலமோ, ஊரிம் மூலமோ அவருக்கு பதிலளிக்கவில்லை.✠ 7பின்பு, சவுல் தம் பணியாளரிடம், “குறி சொல்லும் ஒரு பெண்ணைத் தேடி என்னிடம் அழைத்து வாருங்கள்; நான் அவளிடம் ஆலோசனைக் கேட்க வேண்டும்” என்றார். அதற்கு அவர்தம் பணியாளர்கள் அவரை நோக்கி, “இதோ ஏன்தோரில் குறி சொல்பவள் ஒருத்தி இருக்கிறாள்” என்றனர்.


8சவுல் மாறுவேடமிட்டு, வேற்றுடைஅணிந்து கொண்டார். அவரும் அவருடன் இரு ஆள்களும் இரவில் புறப்பட்டு அப்பெண்ணிடம் சென்றனர். அவர் அவளை நோக்கி, ஏதாவதொரு ஆவியின் துணைகொண்டு குறிகேட்டுச் சொல். நான் பெயரிட்டுச் சொல்பவனை எனக்காக எழுப்பு, என்றார். 9அப்பெண் அவரை நோக்கி, “சவுல் சூனியக்காரர்களையும் குறிசொல்பவர்களையும் நாட்டிலிருந்து துரத்தி விட்ட செய்தியை நீர் அறிவீர்; என்னைக் கொல்லத்தானே இப்பொழுது என் உயிருக்குக் கண்ணிவைக்கிறீர்?” என்றாள். 10அதற்குச் சவுல், “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! இது குறித்து எத்தண்டனையும் உனக்கு வராது!” என்று ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறினார்.


11பின்பு, அப்பெண், “நான் உமக்காக யாரை எழுப்ப வேண்டும்?” என்று கேட்க, அவர், ‘சாமுவேலை எழுப்பு’என்று பதிலளித்தார். 12அப்பெண்ணின் பார்வையில் சாமுவேல் பட்டவுடன் உரத்த குரலில் கதறி, “நீர் தாமே சவுல், ஏன் என்னை ஏமாற்றினீர்?” என்று சவுலை நோக்கிக் கூறினாள். 13அதற்கு அரசர் அவளை நோக்கி, “அஞ்சாதே; நீர் பார்ப்பது என்ன?’ என்று கேட்க, அதற்கு அவள் சவுலிடம், “நிலத்திலிருந்து ஒரு தெய்வ உருவம் வெளிவருவதைக் காண்கிறேன்” என்றாள். 14அவர் அவளிடம், “அதன் தோற்றம் என்ன?” என்று கேட்க, அவள் “முதியவர் ஒருவர் எழுந்து வருகிறார். அவர் ஒர் போர்வை அணிந்திருக்கிறார்”, என்றாள். அவர் சாமுவேல்தான் என்று சவுல் அறிந்து முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து வணங்கினார். 15அப்பொழுது சாமுவேல் சவுல் நோக்கி, “என்னை எழுப்பி நீ ஏன் தொந்தரவு செய்கிறாய்?” என்று கேட்க, அதற்குச் சவுல் “நான் பெரும் இக்கட்டில் இருக்கிறேன்? ஏனெனில், பெலிஸ்தியர் எனக்கெதிராக போர் தொடுத்து வந்துள்ளனர். கடவுள் என்னை விட்டு அகன்று சென்று விட்டார்; இறைவாக்கினர் மூலமாகவோ அவர் எனக்குப் பதில் சொல்வதில்லை; ஆதலால், நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு அறிவிக்கும்படி உம்மை நான் அழைத்தேன்” என்றார்.


16அதற்குச் சாமுவேல், “ஆண்டவர் உன்னை விட்டு விலகி உன் பகைவராய் மாறியபின் என்னிடம் ஏன் ஆலோசனைக் கேட்கிறாய்? 17ஆண்டவர் உன் மூலம் உரைத்தது போல் உனக்குச் செய்தார்; அரசை உன் கையினின்று பறித்து உனக்கு அடுத்திருப்பவனாகிய தாவீதிடம் கொடுப்பார்.✠ 18நீ ஆண்டவர் வார்த்தையைக் கேளாமலும், அமலேக்கின் மேல் அவருக்கு இருந்த வெஞ்சினத்திற்கு ஏற்ப நீ நடந்துகொள்ளாமலும் இருந்ததால், ஆண்டவர் இன்று இதைச் செய்துள்ளார்.✠ 19மேலும், ஆண்டவர் உன்னையும் உன்னோடு இருக்கும் இஸ்ரயேல் மக்களையும் பெலிஸ்தியரிடம் ஒப்புவிப்பார். நாளை நீயும் உன் புதல்வர்களும் என்னுடன் இருப்பீர்கள்; ஆண்டவர் இஸ்ரயேல் படையையும் பெலிஸ்தியர் கையில் ஒப்புவிப்பார்.


20சாமுவேலின் வார்த்தைகளினால் அச்சமுற்ற சவுல், உடனே தரையில் நெடுங்கிடையாய் விழுந்தார். மேலும், அவர் இரவு பகலாய் ஒன்றும் உண்ணாது இருந்தமையால் வலிமையற்றிருந்தார். 21அப்பெண் சவுலிடம் நெருங்கி வந்து, அவர் மிகவும் கலக்கமுற்றிருப்பதைக் கண்டு அவரை நோக்கி, “இதோ உம் அடியாள் உம் சொல்லைக் கேட்டு, என் உயிரைப் பொருட்படுத்தாது நீர் சொன்ன உம் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன். 22ஆதலால், இப்பொழுது நீரும் உம் அடியாளின் வார்த்தைகளும் கேளும். நான் உமக்கு முன் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன்; வழிப் பயணத்திற்கான வலிமையை நீர் பெறுவதற்கு அதை நீர் உண்ணும்” என்றாள். 23அதற்கு அவர், “நான் உண்ண மாட்டேன்” என்று மறுத்தார். ஆனால், அப்பெண்ணுடன் சேர்ந்து அவருடைய பணியாளர்கள் வற்புறுத்தவே, அவர் அவர்களது சொல்லுக்கு இசைந்தார்; அதனால் அவர் தரையிலிருந்து எழுந்து படுக்கையின் மேல் உட்கார்ந்தார். 24அப்பெண் வீட்டில் ஒரு கொழுத்த கன்றுக்குட்டி வைத்திருந்தாள்; அதை விரைவில் அடித்து, மாவை எடுத்துப் பிசைந்து, புளிப்பற்ற அப்பங்கள் சுட்டாள். 25அவள் அவற்றைச் சவுலுக்கும் அவர்தம் பணியாளர்களுக்கும் முன்னே வைத்தாள். அவர்களும் உண்டனர்; பின்னர், அவர்கள் எழுந்து அன்றிரவே புறப்பட்டுச் சென்றனர்.


28:3 லேவி 20:27; இச 18:10-11; 1 சாமு 25:1. 28:6 எண் 27:21. 28:17 1 சாமு 15:28. 28:18 1 சாமு 15:3-9.


அதிகாரம் 29

பெலிஸ்தியர் தாவீதைப் புறக்கணித்தல்


1பெலிஸ்தியர் தங்கள் படைகளை எல்லாம் அபேக்கில் ஒன்றுதிரட்டினர்; இஸ்ரயேலர் இஸ்ரயேலில் உள்ள நீருற்றின் அருகே பாளையம் இறங்கினர். 2பெலிஸ்தியரின் தலைவர்கள் நூற்றுவர் படைகளுடனும் ஆயிரத்தவர் படைகளுடனும் அணிவகுத்துச் சென்றனர். தாவீதும் அவருடைய ஆள்களும் ஆக்கிசோடு கடைக்கோடியில் சென்றனர்.


3அப்பொழுது பெலிஸ்தியப் படைத்தலைவர்கள், “இந்த எபிரேயர் இங்கு என்ன செய்கின்றனர்?” என்று கேட்க, அதற்கு ஆக்கிசு அவர்களை நோக்கி, “இஸ்ரயேலின் அரசர் சவுலின் பணியாளராய் இருந்த இந்தத் தாவீது பல நாள்களாக, ஆண்டுகளாக என்னோடு இருக்கவில்லையா? அவர் என்னிடம் வந்ததுமுதல் இந்நாள் வரை அவரிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை” என்றார்.


4ஆனால், பெலிஸ்தியப் படைத்தலைவர்கள் அவர்மீது சினமுற்று அவரை நோக்கி, “நீர் குறித்துக் கொடுத்துள்ள இடத்திற்கே இந்தத் தாவீதைத் திருப்பி அனுப்பும்; நம்மோடு அவன் போருக்கு வரலாகாது. போரில் அவன் நமக்கு எதிராக எழலாம் அன்றோ? இவன் எதனால் தன் தலைவனோடு நல்லுறவு கொள்வான்? இங்கிருக்கும் ஆள்களின் தலைகளை வெட்டுவதால் அல்லவா? 5சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான்; ஆனால், தாவீது பதினாயிரம் பேரைக் கொன்றான்’ என்று சொல்லிப் பெண்கள் தங்களுக்குள் பாடி ஆடியது இந்த தாவீதைக் குறித்து அன்றோ?" என்றனர்.✠


6அப்பொழுது ஆக்கிசு தாவீதை அழைத்து அவரிடம், “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நீர் நேர்மை மிக்கவர்; நீர் போருக்கு என்னோடு செல்வது சரியாகவே தோன்றுகிறது; ஏனெனில் ,நீர் என்னிடம் வந்தநாள் முதல் இன்று வரை உம்மிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை. இருப்பினும் நீர் வருவதை தலைவர்கள் விரும்பவில்லை. 7ஆதலால், இப்பொழுது திரும்பிச் செல்லும்; பெலிஸ்தியரின் தலைவர்கள் மனம் வருந்துமாறு எதையும் செய்யாதீர்.சமாதானமாய்ச் செல்லும்” என்றார்.


8ஆனால், தாவீது அவரிடம், “நான் செய்தது என்ன? நான் மன்னராகிய என் தலைவரின் எதிரிகளுடன் போரிடச் செல்லாதவாறு நான் உம்மிடம் வந்தநாள் முதல் இன்று வரை, அடியேனிடம் நீர் கண்டது என்ன?” என்று கேட்டார். 9அதற்கு ஆக்கிசு தாவீதை நோக்கி, “கடவுளின் தூதரைப் போல் நீர் என் பார்வையில் குற்றமற்றவர் என்பது எனக்குத் தெரியும்; இருப்பினும், ‘இவன் எங்களோடு போருக்கு வரலாகாது’ என்று பெலிஸ்தியப் படைத்தலைவர்கள் சொல்கிறார்கள். 10ஆதலால், உம்முடன் பிரிந்துவந்த உம் தலைவர் சவுலின் பணியாளர்களுடன் நீர் அதிகாலையில் எழுந்து விடிவதற்குள் புறப்பட்டுச் செல்லும்” என்றார். 11ஆதலால், தாவீது தம் ஆள்களுடன் அதிகாலையில் புறப்பட்டு பெலிஸ்திய நாட்டிற்குத் திரும்பினார்; ஆனால், பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்குச் சென்றனர்.


29:5 1 சாமு 18:7; 21:11.


அதிகாரம் 30

அமலேக்கியரோடு போர்


1மூன்றாம் நாள் தாவீது அவர் தம் ஆள்களும் சிக்லாகை அடைவதற்குள் அமலேக்கியர் நெகேபு; சிக்லாகு ஆகிய பகுதிகளைக் கொள்ளையடித்தனர். சிக்லாகைத் தாக்கித் தீக்கிரையாக்கினர். 2அங்கிருந்த பெண்கள் மற்றும் சிறியோர் பெரியோர் அனைவரையும் சிறைப்பிடித்து, ஒருவரையும் கொன்றுவிடாமல், அவர்களை கூட்டிக் கொண்டு தங்கள் வழியே சென்றனர். 3தாவீதும் அவர்தம் ஆள்களும் நகருக்கு வந்த போது ,அது நெருப்பினால் அழிக்கப்பட்டிருப்பதையும், தங்கள் மனைவியர், புதல்வர் மற்றும் புதல்வியர் சிறைப்பட்டிருப்பதையும் கண்டார்கள். 4அப்பொழுது தாவீதும் அவருடன் வந்த மக்களும் வலிமை உள்ள மட்டும் ஓலமிட்டு அழுதனர். 5தாவீதின் இருமனைவியராகிய இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலும்கூடச் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர்.✠


6தாவீது மிகவும் மன வருத்தமடைந்தார்; வீரர் அனைவரும் தங்கள் புதல்வர் புதல்வியர் பொருட்டு மிகவும் துயருற்றதால் அவரைக் கல்லால் எறிய வேண்டும் எனப் பேசிக் கொண்டனர். ஆனால், தாவீது கடவுளாகிய ஆண்டவரின் வலிமை பெற்றிருந்தார்.


7பின்பு, தாவீது, அகிமலக்கின் மகன் குரு அபயத்தாரிடம், “ஏபோதை என்னிடம் கொண்டுவாரும்!” என்று கூறவே அபியத்தார் ஏபோதைக் தாவீதிடம் கொண்டு வந்தார்.✠ 8அப்பொழுது தாவீது, “நான் கொள்ளைக் கூட்டத்தாரைப் பின் தொடரட்டுமா? நான் வெற்றி கொள்வேனா?” என்று ஆண்டவரிடம் வினவினார். அதற்கு அவர், ‘பின்தொடர்! நீ வெற்றியடைவது உறுதி! சிறைப்பட்டோரை மீட்பதும் உறுதி” என்று பதிலளித்தார். 9ஆதலால், தாவீதும் அவருடன் இருந்த அறுநூறு பேரும் புறப்பட்டு, பெசோர் என்ற ஓடைக்கு வந்தனர். களைப்படைந்தோர் அங்கேயே தங்கிவிட்டனர். 10எனவே, தாவீது நானூறு பேரோடு அவர்களைப் பின்தொடர்ந்தார்; களைப்படைந்த இருநூறு பேர், பெசோர் ஓடையை கடக்க இயலாமல் அங்கேயே தங்கிவிட்டனர்.


11வயல் வெளியில் ஓர் எகிப்தியனைக் கண்டு, அவனைத் தாவீதிடம் அழைத்து வந்தனர்; உண்பதற்கு அப்பமும் குடிப்பதற்குத் தண்ணீரும் கொடுத்தனர். 12மேலும், அவர்கள் அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான திராட்சைப்பழ அடைகள் இரண்டையும் அவனுக்குக் கொடுத்தனர். அவன் இவற்றைச் சாப்பிட்டபின் புத்துயிர் பெற்றான். ஏனெனில், அவன் இரவு பகல் மூன்று நாளாய் அப்பம் உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தான். 13தாவீது அவனை நோக்கி, “நீ யாரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “நான் ஒர் எகிப்திய இளைஞன்; ஓர் அமலேக்கிய மனிதரின் பணியாள்; நான் நோயுற்றதால் மூன்று நாள்களுக்கு முன் என் தலைவர் என்னை விட்டுச் சென்றார். 14நாங்கள் கிரேத்தியரின் தென்பகுதியையும், யூதாவின் தென்பகுதியையும் காலேபின் தென்பகுதியையும் கொள்ளையடித்துச், சிக்லாகைத் தீக்கிரையாக்கியிருக்கிறோம்” என்று பதிலளித்தான். 15தாவீது அவனிடம், “அக்கொள்ளைக் கூட்டத்தாரிடம் என்னை அழைத்துச் செல்வாயா?” என்று கேட்க, அவன், “என்னைக் கொல்லவோ அல்லது என்னை என் தலைவனிடம் ஒப்புவிக்கவோமாட்டீர் என்று ஆண்டவர் பெயரால் என்னிடம் ஆணையிட்டுக் கூறுங்கள்; அப்பொழுது அக்கூட்டத்தாரிடம் உங்களை அழைத்துச் செல்வேன்” என்றான்.


16அவ்வாறே, அவன் தாவீதை அழைத்துச் சென்ற போது, இதோ, தாங்கள் பெலிஸ்தியர் நாட்டினின்றும் யூதா நாட்டினின்றும் கொண்டு வந்த மாபெரும் கொள்ளைப் பொருள்களை முன்னிட்டு அவர்கள் வெளியில் கும்பல் கும்பலாய் உண்டு குடித்து, நடனமாடிக் கொண்டிருந்தனர். 17தாவீது அன்று மாலை தொடங்கி மறுநாள் மாலை வரை அவர்களோடு போரிட்டார்; ஒட்டகங்கள் மீது ஏறி ஓடிய நானூறு வீரர்களைத்தவிர அவர்களுள் ஒருவனும் தப்பவில்லை. 18அமலேக்கியர் கொண்டு சென்ற எல்லாவற்றையும், தாவீது மீட்டதுடன், தம் மனைவியர் இருவரையும் விடுவித்தார். 19>அவர்கள் சிறைப்பிடித்த ஒருவருள் சிறுவரோ முதியவரோ புதல்வரோ புதல்வியரோ எவரும் விடுபடாமல் அவர் மீட்டார். கொள்ளைப் பொருள்களில் அனைத்தையும் தாவீது மீட்டுக் கொண்டு வந்தார். 20ஆடு மாடுகள் எல்லாவற்றையும் தாவீது கைப்பற்றினார். அந்தக் கால்நடைகளைத் தாவீதுக்கு முன் ஓட்டிவந்த மக்கள், “இது தாவீதின் கொள்ளைப் பொருள்” என்றனர்.


21பின்பு, களைப்பு மிகுதியினால் தாவீதைப் பின்தொடராமல் பெசோர் ஓடை அருகே தங்கிவிட்ட இருநூறு பேரிடம் தாவீது வந்தார்; அப்போது அவர்கள் தாவீதையும் அவரோடு இருந்த மக்களையும் சந்திக்க எதிர் கொண்டு வந்தனர். தாவீது மக்களை நெருங்கிபோது அவர்களுக்கு நல்வாழ்த்துக் கூறினார். 22ஆனால், தாவீதோடு சென்றவர்களில் இருந்த தீயவர் மற்றும் கயவர் எல்லாரும், “அவர்கள் நம்முடன் வராததால் நாம் மீட்டுக் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களில் ஒன்றும் அளிக்க மாட்டோம்; அவர்களுள் ஒவ்வொருவரும் தம் மனைவியையும் பிள்ளைகளையும் மட்டும் அழைத்துச் செல்லட்டும்” என்றனர்.


23>அதற்குத்தாவீது, “என் சகோதரர்களே, ஆண்டவர் நமக்கு அளித்துள்ளவற்றிலிருந்து இப்படியெல்லாம் நீங்கள் செய்யக்கூடாது; அவரே நம்மைக் காப்பாற்றி, நமக்கெதிராக வந்த கொள்ளைக் கூட்டத்தினரை நம் கையில் ஒப்படைத்தார். 24>இதன் பொருட்டு நீங்கள் சொல்வதை யார் கேட்பார்கள்? ஏனெனில், போரிடச் செல்வோரின் பங்கு எவ்வளவோ அதே அளவுதான் நான் போர்ப் பொருள்களைக் காத்தவரின் பங்கும் இருக்கும்; இருவரின் பங்கும் சமமாகவே இருக்கும்” என்றார். 25இந்த முறையை இன்று வரை உள்ளதுபோல், இஸ்ரயேலர் பின்பற்றும்படி தாவீது நியமமும் கட்டளையுமாக ஏற்படுத்தினார்.


26தாவீது சிக்லாகுக்கு வந்த போது கொள்ளைப் பொருள்களின் ஒரு பகுதியை யூதாவின் பெரியோர்களான தம் நண்பர்களுக்கு அனுப்பிவைத்துக் கூறியது: “இதோஆண்டவரின் எதிரிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுள் ஒரு பகுதியை உங்களுக்கு என் அன்பளிப்பாய் அனுப்புகிறேன்” என்றார். 27பின்வரும் தம் நண்பர்களுக்கு அவர் அனுப்பினார்; பெத்தேல், இராமோத்தின் தென்பகுதி, யாத்திர் ஆகியவற்றில் இருந்தோர். 28அரோயேர், சிப்மேத்து, எசுத்தமோகு ஆகியவற்றில் இருந்தோர். 29இராக்கால், எரகுமவேலரின் நகர்கள், கேனியரின் நகர்கள் ஆகியவற்றில் இருந்தோர்; 30ஓர்மா, பொராசான், அத்தாகு ஆகியவற்றில் இருந்தோர்; 31எபிரோனில் தாவீதும் அவர் தம் ஆள்களும் நடமாடிய எல்லா இடங்களிலும் இருந்தோர்.


30:5 1 சாமு 25:42-43. 30:7 1 சாமு 22:22-25.


அதிகாரம் 31

சவுலின் இறப்பு

(1குறி 10:1-12)


1பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டனர்; பெலிஸ்தியருக்கு முன் இஸ்ரயேலர் புறமுதுகிட்டு ஓடினர்; பலர் கில்போவா மலையில் வெட்டுண்டு வீழ்ந்தனர். 2பெலிஸ்தியர் சவுலையும் அவர் புதல்வர்களையும் பின் தொடர்ந்து, அவர் தம் புதல்வர்களான யோனத்தான், அபினதாபு, மல்கிசுவா ஆகியோரை வெட்டிக் கொன்றனர்.

3சவுல் இருந்த இடத்தில் போர் மிகவும் வலுத்தது; வில்வீரர் அவர் மீது குறி வைத்துத் தாக்க, அவரும் அந்த வில்வீரர்களால் பெரிதும் காயமுற்றார். 4அப்பொழுது சவுல் தம் படைக்கலன் தாங்குவோனை நோக்கி, “இந்த விருத்தசேதனமற்றோர் என்னைக் குத்திக் கொன்று எனக்கு அவமானத்தை வருவிக்காவண்ணம் நீ உன் வாளை உருவி என்னைக் குத்திக் கொன்று விடு,” என்றார். ஆனால், அவருடைய படைக்கலன் தாங்குவோன் மிகவும் அஞ்சியதால் அதற்கு அவன் இசையவில்லை. ஆதலால், சவுல் தம் வாளை எடுத்து, தாமே அதன்மீது வீழ்ந்து மடிந்தார். 5சவுல் இறந்துவிட்டதைக் கண்ட அவருடைய படைக்கலன் தாங்குவோனும் தன் வாள்மீது விழுந்து அவரோடு மடிந்தான். 6இவ்வாறு, சவுலும் அவரின் மூன்று புதல்வரும், அவருடைய படைக்கலன் தாங்குவோனும் மற்றும் அவர் ஆள்கள் எல்லாரும் அதே நாளில் ஒன்றாக இறந்தனர். 7இஸ்ரயேலர் புறமுதுகிட்டு ஓடிவிட்டனர் என்றும் சவுலும் அவர்தம் புதல்வர்களும் மடிந்தனர் என்றும் பள்ளத்தாக்குக்கு அப்பாலும் யோனத்தானுக்குக் கிழக்கேயும் இருந்த இஸ்ரயேலர் கண்டபோது, அவர்கள் தங்கள் நகர்களை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அதனால், பெலிஸ்தியர் வந்து அங்கே குடியேறினர்.

8வெட்டுண்டவர்களைக் கொள்ளையிடப் பெலிஸ்தியர் மறுநாள் சென்ற போது, சவுலும் அவரின் மூன்று புதல்வர்களும் கில்போவா மலைமேல் இறந்துகிடப்பதை அவர்கள் கண்டார்கள். 9அவர்கள் சவுலின் தலையைக் கொய்து, அவர் படைக்கலன்களை எடுத்துக் கொண்டபின், தங்கள் சிலைகளின் கோவில்களிலும் மக்களிடையிலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் பொருட்டுப் பெலிஸ்தியர் நாடெங்கும் தூதர்களை அனுப்பினர். 10அவர்கள் அவர்தம் படைகலன்களை அஸ்தரோத்துக் கோவிலில் வைத்தனர். அவரது சடலத்தை பெத்சான் சுவரில் தொங்கவிட்டனர். 11பெலிஸ்தியர் சவுலக்குச் செய்ததைக் கிலயாது நாட்டு யாபேசு நகர மக்கள் கேள்விப்பட்டபோது, 12அவர்களுள் வலிமை மிகு வீரர்கள் அனைவரும் இரவில் புறப்பட்டுச் சென்று, சவுலின் சடலத்தையும், அவர்தம் புதல்வர்களின் சடலங்களையும் பெத்சான் சுவரிலிருந்து இறக்கி யாபேசுக்குக் கொண்டுவந்து, அங்கே அவற்றை எரித்தனர். 13பின்பு, அவர்களுடைய எலும்புகளை எடுத்து யாபேசில் தமரிஸ்கு மரத்தின் அடியில் புதைத்துவிட்டு, ஏழு நாள்கள் நோன்பு இருந்தனர்.