யூதித்து


யூதித்து
முன்னுரை

செலூக்கியர் ஆட்சியின்போது யூதர்கள் அனுபவித்த துயரத்தின் வரலாற்றையும், மக்கபேயர் வழியாகக் கடவுள் அவர்களுக்கு அளித்த முழுவிடுதலையையும் பின்னணியாகக் கொண்ட இந்நூல் ஒரு புதினம். இது கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது முதல் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம்.

இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவர், பாலஸ்தீனாவில் பரிசேயரின் வழிமரபில் தோன்றிய ஒரு யூதர் என்பதில் ஐயமில்லை. இது எபிரேய மொழியில் எழுதப்பட்டிருக்கவேண்டும்; மூல நூல் கிடைக்காமையால், அதன் கிரேக்க மொழிபெயர்ப்பே இன்று நமக்கு மூலபாடமாக இருந்து வருகிறது.

ஒருவர் கடவுள் மீது பற்றுறுதி கொண்டு செயல்பட்டால், எத்துணை வலிமைபடைத்த உலக ஆற்றல்களையும் வென்றுவிடலாம் என்பது இந்நூலின் மையக் கருத்தாகும். இக்கருத்தை யூதர்கள், என்றும் தங்கள் நினைவில் நிறுத்தும் பொருட்டு, கோவில் அர்ப்பணிப்பின் ஆண்டு விழாவின்போது இந்நூல் பொதுவில் படிக்கப்பட்டது.

நூலின் பிரிவுகள்


1. யூதர்களுக்கு நேரிட்ட பேரிடர் 1:1 - 7:32
2. யூதித்து வழியாகக் கிடைத்த வெற்றி 8:1 - 16:25


அதிகாரம் 1

1. யூதர்களுக்கு நேரிட்ட பேரிடர்


நெபுகத்னேசரும் அர்ப்பகசாதும்

1ஒரு காலத்தில் நெபுகத்னேசர் மன்னன் நினிவே மாநகரில் அசீரியர்களை ஆண்டுவந்தான். அப்பொழுது எக்பத்தானாவில் அர்ப்பகசாது அரசன் மேதியர் மீது ஆட்சி செலுத்திவந்தான். 2அர்ப்பகசாது எக்பத்தானாவைச் சுற்றிலும் மூன்று முழப் பருமனும் ஆறு முழ நீளமுமான செதுக்கிய கற்களைக் கொண்டு, எழுபது முழ உயரமும் ஐம்பது முழ அகலமும் உடைய மதில்களை எழுப்பினான். 3அதன் வாயில்கள்மேல் நூறு முழ உயரம் கொண்ட காவல் மாடங்களைக் கட்டினான்; அவற்றின் அடித்தளங்களை அறுபது முழ அகலத்தில் அமைத்தான். 4தன்னுடைய வலிமைமிகு படைகள் புறப்பட்டுச் செல்வதற்கும், காலாட்படை அணிவகுத்துச் செல்வதற்கும் வசதியாக, எழுபது முழ உயரமும் நாற்பது முழ அகலமும் கொண்ட வாயில்களைக் கட்டினான்.

5நேபுகத்னேசர் மன்னன் தனது ஆட்சியின் பன்னிரெண்டாம் ஆண்டில் இராகாவு நகர எல்லையில் இருந்த பரந்த சமவெளியில் அர்ப்பகசாது அரசனுக்கு எதிராகப் போர்தொடுத்தான். 6மலைவாழ் மக்கள், யூப்பிரத்தீசு, திக்ரீசு, உதஸ்பு ஆகிய ஆறுகள் அருகே வாழ்ந்தோர், சமவெளியில் வாழ்ந்த ஏலாமியரின் அரசன் அரியோக்கு ஆகிய அனைவரும் நெபுகத்னேசருடன் சேர்ந்து கொண்டார்கள். இவ்வாறு, பல மக்களினங்கள் கெலயூது⁕ மக்களின் படைகளோடு சேர்ந்து கொண்டன.

7பின்னர் அசீரிய மன்னன் நெபுகத்னேசர் பாரசீகத்தில் வாழ்ந்தோர் அனைவருக்கும், சிலிசியா, தமஸ்கு, லெபனோன், எதிர் லெபனோன் ஆகிய மேற்கு நாடுகளில் வாழ்ந்தோர் யாவருக்கும், கடற்கரைவாழ் மக்கள் எல்லாருக்கும், 8கர்மேல், கிலயாது, வட கலிலேயா, எஸ்திரலோன் பெரும் சமவெளியெங்கும் வாழ்ந்த மக்களினத்தார் எல்லாருக்கும், 9சமாரியாவிலும் அதன் நகர்களிலும் வாழ்ந்தோர் அனைவருக்கும், யோர்தானுக்கு மேற்கே எருசலேம், பாத்தேன், கெலூசு, காதேசு, எகிப்தின் எல்லையில் இருந்த ஓடைவரை** வாழ்ந்தோருக்கும், தபினா, இராம்சேசு, கோசேன் பகுதிகளின் மக்கள் எல்லாருக்கும்,✠ 10தானி, மெம்பிசுக்கு அப்பால் எத்தியோப்பியாவின் எல்லைவரை எகிப்தில் வாழ்ந்த எல்லாருக்கும் தூது அனுப்பினான். 11ஆனால், இந்த நாடுகளில் வாழ்ந்தோர் யாருமே அசீரிய மன்னன் நெபுகத்னேசரின் சொல்லைப் பொருட்படுத்தவில்லை; அவனோடு சேர்ந்து போரிட முன்வரவில்லை; அவனுக்கு அவர்கள் அஞ்சவுமில்லை. ஆனால் அவனை யாரோ ஒரு மனிதனாகவே கருதினார்கள்; அவனுடைய தூதர்களையும் இழிவுபடுத்தி வெறுங்கையராய்த் திருப்பியனுப்பினார்கள்.

12ஆகவே, இந்நாடுகள் அனைத்தின் மீதும் நெபுகத்னேசர் கடுஞ் சினங் கொண்டான். சிலிசியா, தமஸ்கு, சிரியா ஆகிய நாடுகள் அனைத்தையும் பழிவாங்கி, மோவாபியர், அம்மோனியர், யூதேயர், எகிப்தியர் ஆகிய அனைவரையும் வாளுக்கு இரையாக்கப்போவதாகத் தன் அரியணைமீதும் அரசுமீதும் ஆணையிட்டான்; இவ்வாறு, மத்திய தரைக்கடல்முதல் பாரசீக வளைகுடா வரையிலும் வாழ்ந்த எல்லாரையும் அழிக்கக் கட்டளையிட்டான்.

13நேபுகத்னேசர் தனது ஆட்சியின் பதினேழாம் ஆண்டில் தன் படைகளை அர்ப்பகசாது அரசனுக்கு எதிராக ஒன்று திரட்டினான்; அவனோடு போரிட்டு, வெற்றி பெற்று அவனுடைய காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை அனைத்தையும் முறியடித்தான்; 14அவனுடைய நகர்களைக் கைப்பற்றியபின் எக்பத்தானாவை வந்தடைந்தான்; அதன் காவல்மாடங்களைக் கைப்பற்றி, கடை வீதிகளில் புகுந்து கொள்ளையடித்து, அதன் எழிலைச் சீர்குலைத்தான். 15மேலும், அவன் இராகாவு மலைப்பகுதியில் அர்ப்பகசாதைப் பிடித்துத் தன் ஈட்டியால் குத்திக்கொன்று அவனை முற்றிலும் அழித்தொழித்தான். 16பின்னர், தன்னோடு சேர்ந்து போரிட்ட மாபெரும் திரளான படைவீரர்களோடு நினிவேக்குத் திரும்பி வந்தான். அங்கு அவனும் அவனுடைய படைவீரர்களும் நூற்றுஇருபது நாள் விருந்து கொண்டாடி மகிழ்ந்தார்கள்.


1:6 கல்தேயரைக் குறிக்கலாம். 1:9 எகிப்துக்கும் பாலஸ்தீனுக்கும் எல்லையாய் அமைந்த ‘எல் அரிஸ்’ ஓடை.


அதிகாரம் 2

மேற்கு நாடுகளோடு போரிடத் திட்டம்


1அசீரிய மன்னன் நெபுகத்னேசர் சூளுரைத்திருந்தவாறு எல்லா நாடுகளையும் பழிவாங்குவான் என்று அவனது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டு, முதல் மாதம் இருபத்திரண்டாம் நாளன்று அரண்மனையில் பேசப்பட்டது. 2அவனும் தன் பணியாளர்கள், உயர்குடி மக்கள் யாவரையும் அழைத்துத் தனது இரகசியத் திட்டம் பற்றி அவர்களோடு கலந்தாலோசித்தான்; அந்த நாடுகளின் சூழ்ச்சிபற்றித் தன் வாய்ப்பட முழுமையாக எடுத்துரைத்தான். 3மன்னன் இட்ட கட்டளையை ஏற்காத அனைவரும் அழிக்கப்படவேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

4ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், அசீரிய மன்னன் நெபுகத்னேசர் தன் படைத் தலைவனும் தனக்கு அடுத்த நிலையில் இருந்தவனுமான ஒலோபெரினை அழைத்து அவனை நோக்கிப் பின்வருமாறு கூறினான்: 5“அனைத்துலகின் தலைவராகிய மாமன்னர் இவ்வாறு கூறுகிறார்: இங்கிருந்து உடனே புறப்பட்டுச் செல்லும்; போரிடத் தயங்காத ஓர் இலட்சத்து இருபதாயிரம் காலாட் படையினரையும் பன்னிரண்டாயிரம் குதிரைப் படையினரையும் உம்மோடு கூட்டிக்கொள்ளும். 6நான் கொடுத்த ஆணைக்கு மேற்கு நாட்டவருள் எவருமே பணியாததால், அவர்களுக்கு எதிராகப் படையெடுத்துச் செல்லும். 7அவர்கள் நிலத்தின் விளைச்சலையும் தண்ணீர் வசதியையும்⁕ எனக்கு அளிப்பதற்கு அவர்களை ஆயத்தமாய் இருக்கச் சொல்லும். ஏனெனில், நான் சினமுற்று அவர்களை எதிர்த்துச் செல்லவிருக்கிறேன். அவர்களது நாடு முழுவதையும் என்படைவீரர்களின் காலடிகள் மூடும். அதனை அவர்கள் சூறையாடும்படி கையளிப்பேன். 8அவர்களுள் காயமடைந்தோர் பள்ளத்தாக்குகளை நிரப்புவர்; ஓடைகளும் ஆறுகளும் அவர்களின் பிணங்களால் நிரம்பி வழியும். 9நிலத்தின் கடை எல்லைக்கே அவர்களை நாடுகடத்துவேன். 10நீர் எனக்கு முன்னதாகப் புறப்பட்டுச் சென்று, அவர்களின் நாடுகளையெல்லாம் என் பெயரால் கைப்பற்றும். அவர்கள் உம்மிடம் சரணடைந்தால், அவர்களை நான் தண்டிக்கும் நாள்வரை காவலில் வைத்திரும். 11பணிய மறுப்பவர்களுக்கோ இரக்கம் காட்டாதீர். நீர் கைப்பற்றும் நாடெங்கும் அவர்களைக் கொலைக்கும் கொள்ளைக்கும் கையளித்துவிடும். 12என் உயிர்மேல் ஆணை! என் அரசின் ஆற்றல்மேல் ஆணை! நான் சொன்னதையெல்லாம் என் கையாலேயே செய்து முடிப்பேன். 13உம் தலைவரின் ஆணைகளில் எதனையும் மீறாதீர். நான் உமக்குக் கட்டளையிட்டவாறே அவற்றைத் திண்ணமாய்ச் செய்து முடியும்; காலம் தாழ்த்தாமல் செயல்புரியும்.”


ஒலோபெரினின் படையெடுப்பு


14ஒலோபெரின் தன் தலைவனிடமிருந்து சென்று அசீரியப் படையின் தலைவர்கள், தளபதிகள், அலுவலர்கள் ஆகிய அனைவரையும் தன்னிடம் அழைத்தான். 15தலைவன் தனக்கு ஆணையிட்டபடி ஓர் இலட்சத்து இருபதாயிரம் தேர்ந்தெடுத்த வீரர்களையும் வில் வீரர்களான குதிரைப்படையினர் பன்னிரண்டாயிரம் பேரையும் திரட்டினான். 16பெரும் படை ஒன்று போர் தொடுக்கச் செல்லும் முறைப்படி, அவர்களை அணிவகுக்கச் செய்தான்; 17-18மேலும் தங்கள் பொருள்களைச் சுமந்து செல்லப் பெருந்திரளான ஒட்டகங்களையும் கழுதைகளையும் கோவேறுகழுதைகளையும், உணவுக்குத் தேவைப்பட்ட எண்ணற்ற செம்மறியாடுகளையும் மாடுகளையும் வெள்ளாடுகளையும், அனைவருக்கும் போதுமான உணவுப் பொருள்களையும், அரண்மனையிலிருந்து மிகுதியான பொன்னையும் வெள்ளியையும் திரட்டிக்கொண்டான்.

19இவ்வாறு தேர்ப்படையினர், குதிரைப் படையினர், தேர்ந்தெடுத்த காலாட் படையினர் ஆகியோர் அடங்கிய தன் முழுப் படையுடன், நெபுகத்னேசர் மன்னனுக்கு முன்னதாகச் சென்று, மேற்குப் பகுதி முழுவதையும் நிரப்புமாறு ஒலோபெரின் புறப்பட்டான். 20அப்பொழுது பல இனங்களைச் சேர்ந்த, எண்ணிலடங்காத பெருங் கூட்டம் ஒன்று வெட்டுக்கிளிகளின் திரள்போலும் நிலத்தின் புழுதிபோலும் அவர்களோடு புறப்பட்டுச் சென்றது.

21அவர்கள் நினிவேயிலிருந்து புறப்பட்டுப் பெக்திலேது சமவெளியை நோக்கி மூன்று நாள் பயணம் சென்றார்கள்; அதைத் தாண்டி மேல் சிலிசியாவுக்கு வடக்கே மலை அருகில் பாசறை அமைத்தார்கள். 22ஒலோபெரின் தன் காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை அடங்கிய முழுப்படையையும் அங்கிருந்து நடத்திக்கொண்டு, மலைநாட்டிற்குள் முன்னேறிச் சென்றான்; 23வழியில் பூது, லூது என்னும் நகர்களைப் பாழ்படுத்தியபின், கெலயோன் நாட்டிற்குத் தெற்கே பாலை நிலத்தின் ஓரத்தில் வாழ்ந்துவந்த இராசியர், இஸ்மவேலர் ஆகிய அனைவரையும் கொள்ளையடித்தான்; 24யூப்பிரத்தீசு கரை வழியாகச் சென்று, மெசப்பொத்தாமியாவைக் கடந்து அப்ரோன் ஓடைமுதல் கடல்வரை இருந்த அரண்சூழ் நகர்கள் அனைத்தையும் தரைமட்டமாக்கினான். 25மேலும் சிலிசியா நாட்டை அவன் கைப்பற்றித் தன்னை எதிர்த்த யாவரையும் கொன்றான்; பிறகு அரேபியாவிற்கு எதிரே இருந்த எப்பெத்தின் தென் எல்லையை அடைந்தான்; 26மிதியானியர் யாவரையும் சுற்றி வளைத்து, அவர்களின் கூடாரங்களைத் தீக்கிரையாக்கி, ஆட்டுக் கொட்டில்களைக் கொள்ளையடித்தான். 27கோதுமை அறுவடைக் காலத்தில் அவன் தமஸ்குச் சமவெளிக்கு இறங்கிச் சென்றான்; அவர்களுடைய வயல்களுக்குத் தீவைத்தான்; ஆடு மாடுகளை அழித்தான்; நகர்களைச் சூறையாடினான்; வயல்வெளிகளைப் பாழாக்கினான்; இளைஞர்கள் அனைவரையும் வாளுக்கிரையாக்கினான். 28சீதோன், தீர், சூர், ஒக்கினா, யாம்னியா ஆகிய கடலோர நகர்களில் வாழ்ந்தோர் யாவரும் அவனுக்கு அஞ்சி நடுங்கினர்; அசோத்து, அஸ்கலோனில் வாழ்ந்தோரும் அவனுக்குப் பெரிதும் அஞ்சினர்.


2:7 ‘படைக்குத் தேவையான அனைத்தும்’ என்பது பொருள். நிபந்தனையின்றிச் சரணடைவதன் அடையாளம் இது.


அதிகாரம் 3

ஒலோபெரினின் வெற்றி


1ஆகையால் அந்த நாடுகளின் மக்கள் அமைதி வேண்டி ஒலோபெரினிடம் தூதர்களை அனுப்பிப் பின்வருமாறு கூறினார்கள்: 2“இதோ, நெபுகத்னேசர் மாமன்னரின் பணியாளர்களாகிய நாங்கள் உமக்கு அடிபணிகிறோம். எங்களை உமது விருப்பப்படியே நடத்தும். 3மேலும் எங்களுடைய வீடுகள், நாடுகள், கோதுமை வயல்கள், ஆடுமாடுகள், எங்களுடைய குடியிருப்புகளிலுள்ள ஆட்டுக்கொட்டில்கள் அனைத்தும் உமக்கே சொந்தம். ஊமது விருப்பப்படியே அவற்றைப் பயன்படுத்தும். 4எங்கள் நகர்களும் உம்முடையவை; அவற்றின் குடிகள் உமக்கே அடிமைகள். எனவே நீர் வந்து, உம் விருப்பப்படியே நடத்தும்.”

5ஆத்தூதர்கள் ஒலோபெரினிடம் வந்து, மேற்கண்ட செய்தியை அறிவித்தார்கள். 6இதை அறிந்ததும் அவன் தன் படையுடன் கடற்கரைப் பகுதிக்கு இறங்கிச் சென்று, அரண்சூழ் நகர்கள் அனைத்திலும் காவற்படைகளை அமர்த்தினான்; அவற்றினின்று தேர்ந்தெடுத்த வீரர்களைத் தன் துணைப்படையாக வைத்துக்கொண்டான். 7அந்நகர்களின் மக்களும் அவற்றின் சுற்றுப் புறங்களில் வாழ்ந்தோர் அனைவரும் அவனுக்கு மாலை அணிவித்து, முரசறைந்து, நடனமாடி வரவேற்பு அளித்தனர். 8ஆயினும், அவர்களுடைய திருவிடங்களை⁕யெல்லாம் அவன் தகர்த்தெறிந்தான்; தூய தோப்புகளை வெட்டி அழித்தான்; ஏனெனில், எல்லா இனத்தாரும் நெபுகத்னேசரை மட்டுமே வழிபடவேண்டும்; எல்லா மொழியினரும் குலத்தினரும் அவனை மட்டுமே தெய்வமாகப் போற்றவேண்டும் என்னும் நோக்கத்தோடு அந்நாடுகளின் தெய்வங்கள் அனைத்தையும் அழித்தொழிக்குமாறு அவனுக்கு ஆணையிடப்பட்டிருந்தது. 9பின்பு, ஒலோபெரின் யூதேயாவின் மலைத்தொடருக்கு எதிரிலும் தோத்தானுக்கு அருகிலும் அமைந்திருந்த எஸ்திரலோனை நோக்கிச் சென்றான். 10கேபாய், சித்தோப்பொலி நகர்களுக்கு இடையே பாசறை அமைத்து, தன் படைக்குத் தேவையானவற்றையெல்லாம் திரட்ட ஒரு மாதம் முழுவதும் அங்குத் தங்கியிருந்தான்.


3:8 * ‘எல்லைகள்’ என்பது கிரேக்க பாடம்.


அதிகாரம் 4

இஸ்ரயேலின் எதிர்ப்பு


1அசீரிய மன்னன் நெபுகத்னேசருடைய படைத்தலைவன் ஒலோபெரின் வேற்றினத்தாருக்குச் செய்திருந்த அனைத்தையும், அவன் எவ்வாறு அவர்களின் கோவில்கள் எல்லாவற்றையும் சூறையாடித் தகர்த்தெறிந்தான் என்பதையும் யூதேயாவில் வாழ்ந்து வந்த இஸ்ரயேலர் கேள்விப்பட்டனர். 2எனவே, அவன் வருவதை அறிந்து பெரிதும் அஞ்சினார்கள்; எருசலேமைக் குறித்தும் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கோவிலைக் குறித்தும் கலங்கினார்கள். 3ஏனெனில், சற்று முன்னரே அவர்கள் தங்கள் அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெற்றிருந்தார்கள்; யூதேயா நாட்டு மக்கள் யாவரும் அண்மையில்தான் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தார்கள்; தீட்டுப்பட்டிருந்த தூய கலன்களும் பலிபீடமும் கோவிலும் மீண்டும் தூய்மைப்படுத்தப்பட்டிருந்தன. 4அவர்கள் சமாரியா நாடு முழுவதற்கும், கோனா, பெத்கோரோன், பெல் மாயிம், எரிகோ, கோபா, ஐசொரா, சாலேம் பள்ளத்தாக்கு ஆகிய நகர்களுக்கும் செய்தி அனுப்பினார்கள். 5உடனே அவர்கள் உயர்ந்த மலையுச்சிகளைக் கைப்பற்றி, அங்கு இருந்த ஊர்களைக் காவலரண் செய்து வலுப்படுத்தினார்கள்; அவர்களின் வயல்கள் அண்மையிலேயே அறுவடையாகியிருந்ததால் போருக்கு முன்னேற்பாடாக உணவுப்பொருள்களைச் சேகரித்தார்கள்.

6அக்காலத்தில் எருசலேமில் இருந்த தலைமைக்குரு யோவாக்கிம் என்பவர் எஸ்திரலோனுக்கு எதிரிலும் தோத்தான் சமவெளிக்கு அருகிலும் அமைந்திருந்த பெத்தூலியா, பெத்தமஸ்தாயிம் ஆகிய நகரங்களின் மக்களுக்கு மடல் எழுதி அனுப்பினார்; 7யூதேயாவுக்குள் நுழைவதற்குரிய மலைப்பாதைகளைக் கைப்பற்றுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஓரே நேரத்தில் இருவர் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு அவை குறுகியனவாய் இருந்ததால், தாக்குவதற்காக மேலே ஏறிவரும் எவரையும் தடுப்பதற்கு எளிதாய் இருந்தது. 8தலைமைக் குரு யோவாக்கிமும் எருசலேமில் குழுமியிருந்த இஸ்ரயேல் மக்களின் ஆட்சி மன்ற உறுப்பினர்களும் ஆணையிட்டபடி இஸ்ரயேலர் செய்து முடித்தனர்.


பொது மன்றாட்டும் நோன்பும்


9இஸ்ரயேலின் ஆண்கள் யாவரும் கடவுளை நோக்கி மிகுந்த ஆர்வத்துடன் கூக்குரலிட்டார்கள்; நோன்பிருந்து தங்களையே தாழ்த்திக்கொண்டார்கள்.⁕ 10அவர்களும் அவர்களுடைய மனைவியர், மக்கள், கால்நடைகள், உடன்வாழ் அன்னியர்கள், கூலியாள்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் இடுப்பில் சாக்கு உடை அணிந்து கொண்டனர். 11எருசலேமில் வாழ்ந்துவந்த இஸ்ரயேலிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரும் தலையில் சாம்பலைத் தூவிக் கொண்டனர்; சாக்கை விரித்துக் கோவிலின் முகப்பில் ஆண்டவர் திருமுன் குப்புற விழுந்தனர். 12பிறகு அவர்கள் பலிபீடத்தையும் சாக்கினால் மூடினார்கள்; இஸ்ரயேலின் கடவுளை நோக்கி, தங்கள் குழந்தைகள் அடிமைவாழ்வுக்குக் கையளிக்கப்படாதவாறும், மனைவியர் கவர்ந்து செல்லப்படாதவாறும், உரிமைச் சொத்தாகிய நகர்கள் அழிவுறாதவாறும், வேற்றினத்தார் ஏளனம் செய்யும் அளவுக்குத் திருவிடம் தீட்டுப்பட்டு இழிவுறாதவாறும் காத்திடும்படி ஒரே குரலில் மனமுருகி மன்றாடினார்கள்.

13ஆண்டவர் அவர்களது குரலுக்குச் செவிசாய்த்தார்; அவர்களது கடுந்துன்பத்தைக் கண்ணுற்றார்; ஏனெனில், யூதேயா முழுவதிலும் எருசலேமில் எல்லாம் வல்ல ஆண்டவரது கோவில் முன்னிலையிலும் மக்கள் பல நாள் நோன்பிருந்தார்கள். 14தலைமைக்குரு யோவாக்கிமும் ஆண்டவர் திருமுன் பணிபுரிந்த குருக்கள் அனைவரும் திருவழிபாட்டுப் பணியாளர்களும் இடுப்பில் சாக்கு உடை அணிந்து கொண்டு அன்றாட எரிபலிகளையும் மக்களின் நேர்ச்சைகளையும் தன்னார்வக் காணிக்கைகளையும் செலுத்தினார்கள்; 15தங்கள் தலைப்பாகைமேல் சாம்பலைத் தூவிக் கொண்டு, இஸ்ரயேல் இனம் அனைத்தின்மீதும் ஆண்டவர் இன்முகம் காட்டுமாறு, முழுவலிமையோடும் அவரை நோக்கிக் கூக்குரலிட்டார்கள்.


4:10-12 யோனா 3:7-8; எஸ் (கி) 4:1-3.


4:9 ‘மிகுந்த ஆர்வத்துடன் தங்களையே தாழ்த்திக்கொண்டார்கள்.’ என்பது கிரேக்க பாடம்.


அதிகாரம் 5

இஸ்ரயேலோடு போரிடத் திட்டம்


1“இஸ்ரயேல் மக்கள் போருக்கு ஆயத்தமாகிவிட்டார்கள்; மலைப்பாதைகளை மூடிவிட்டார்கள்; உயர்ந்த மலையுச்சிகளைக் காவலரண் செய்து வலிமைப்படுத்தியுள்ளார்கள்; சமவெளிகளில் வழித்தடைகளை அமைத்துள்ளார்கள்” என்று அசீரியரின் படைத்தலைவன் ஒலோபெரினுக்குத் தெரிவிக்கப்பட்டது. 2அப்பொழுது அவன் கடுஞ் சினமுற்றான்; மோவாபு நாட்டுத் தலைவர்கள், அம்மோன் நாட்டுப் படைத் தலைவர்கள், கடலோராப் பகுதிகளின் ஆளுநர்கள் ஆகிய அனைவரையும் அழைத்தான். 3“கானான் நாட்டு மக்களே, எனக்கு மறுமொழி கூறுங்கள்; மலைநாட்டில் வாழும் இந்த மக்கள் யார்? இவர்கள் குடியிருக்கும் நகர்கள் யாவை? இவர்களுடைய படைவீரர்களின் எண்ணிக்கை என்ன? இவர்களுடைய ஆற்றலும் வலிமையும் எதில் அடங்கும்? இவர்களின் மன்னர் யார்? இவர்களுடைய படைத் தலைவன் யார்? 4மேற்கு நாடுகளில் குடியிருக்கும் எல்லா மக்கள் நடுவிலும் இவர்கள் மட்டும் வந்து என்னைச் சந்திக்க மறுத்தது ஏன்?” என்று அவர்களை வினவினான்.


அக்கியோரின் உரை


5அம்மோனியர் யாவருக்கும் தலைவரான அக்கியோர் ஒலோபெரினிடம் பின்வருமாறு கூறினார்: “என் தலைவரே, உம் பணியாளனின் வாயினின்று வரும் சொல்லைக் கேளும். மலைநாட்டில் உமக்கு அருகே வாழ்பவர்களான இந்த மக்களைப்பற்றிய உண்மையை உமக்கு எடுத்துரைப்பேன். உம் பணியாளனின் வாயினின்று பொய் எதுவும் வராது. 6இந்த மக்கள் கல்தேயரின் வழிமரபினர். 7கல்தேயா நாட்டில் வாழ்ந்த தங்கள் மூதாதையரின் தெய்வங்களை இவர்கள் வழிபட விரும்பாததால், ஒரு காலத்தில் மெசப்பொத்தாமியாவில் குடியேறினார்கள்.✠ 8அதாவது, தங்கள் மூதாதையரின் வழியை விட்டு விட்டு, தாங்கள் அறியவந்த கடவுளான விண்ணக இறைவனைத் தொழுதார்கள். இதனால், கல்தேயர் தங்கள் தெய்வங்களின் முன்னிலையினின்று இவர்களை விரட்டியடித்தபொழுது இவர்கள் மெசப்பொத்தாமியாவுக்குத் தப்பியோடி அங்கு நீண்டநாள் தங்கியிருந்தார்கள்.

9“பின்னர் தாங்கள் தங்கியிருந்த இடத்தை விட்டுக் கானான் நாட்டுக்குச் செல்லுமாறு, அவர்களுடைய கடவுள் அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவ்வாறே அவர்கள் அங்குக் குடியேறி, பொன், வெள்ளி, பெருந்திரளான கால்நடைகள் ஆகியவற்றால் வளமையுற்றார்கள்.✠ 10கானான் நாடெங்கும் பஞ்சம் நிலவியபொழுது அவர்கள் எகிப்து நாட்டுக்குச் சென்றார்கள்; அங்கு உணவு வளம் நீடித்தவரை தங்கியிருந்தார்கள். அப்பொழுது அவர்களது இனம் எண்ண முடியாத அளவுக்குப் பல்கிப் பெருகியது.✠ 11ஆகையால், எகிப்து மன்னன் அவர்கள்மீது பகைமை கொண்டு, செங்கல் செய்யும் கடின வேலையை அவர்கள் மீது வஞ்சகமாய்ச் சுமத்தினான்; அவர்களைக் கொடுமைப்படுத்தி அடிமைகளாக்கினான்.✠ 12எனவே, அவர்கள் தங்கள் கடவுளை நோக்கிக் கூக்குரலிட்டார்கள். அவரும் எகிப்து நாடு முழுவதையும் தீராக் கொள்ளைநோய்களால் தாக்கினார். ஆகையால், எகிப்தியர் அவர்களைத் தங்களிடமிருந்து விரட்டியடித்தனர்.✠ 13அப்பொழுது கடவுள் அவர்கள் கண்முன் செங்கடலை வறண்டுபோகச் செய்தார்.✠ 14அவர் சீனாய், காதேசு-பர்னேயா வழியாக அவர்களை நடத்திச் செல்ல, அவர்கள் பாலைநிலத்தில் வாழ்ந்த யாவரையும் விரட்டியடித்தார்கள்; 15பின்னர் எமோரியரின் நாட்டில் குடியேறினார்கள்; தங்களின் வலிமையால் கெஸ்போனியர் யாவரையும் அழித்தொழித்தார்கள்; யோர்தான் ஆற்றைக் கடந்து, மலைநாடு முழுவதையும் தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள்.✠ 16கானானியர், பெரிசியர், எபூசியர், செக்கேமியர் ஆகியோரையும் கிர்காசியர் அனைவரையும் அங்கிருந்து துரத்திவிட்டு, அங்கே நீண்டநாள் வாழ்ந்து வந்தார்கள்.✠

17“அவர்கள் தங்கள் கடவுள் முன்னிலையில் பாவம் செய்யாதவரையில் வளமுடன் வாழ்ந்தார்கள்; ஏனெனில், அநீதியை வெறுக்கும் கடவுள் அவர்கள் நடுவே இருக்கிறார்.✠ 18ஆனால், அவர்களுக்கென்று அவர் வகுத்துக் கொடுத்திருந்த வழியைவிட்டு விலகிச் சென்றபோது அவர்கள் பல போர்களால் பெரிதும் அழிந்தார்கள்; அயல்நாட்டுக்குக் கைதிகளாய்க் கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்களுடைய கடவுளின் கோவில் தரைமட்டமானது. அவர்களின் நகர்களைப் பகைவர்கள் கைப்பற்றினார்கள்.✠ 19ஆனால், இப்பொழுது அவர்கள் தங்கள் கடவுளிடம் மனந்திரும்பி வந்துள்ளார்கள்; தாங்கள் சிதறடிக்கப்பட்ட இடங்களிலிருந்து திரும்பி வந்துள்ளார்கள்; தங்களது திருவிடம் அமைந்துள்ள எருசலேமை மீண்டும் உரிமையாக்கிக் கொண்டுள்ளார்கள்; பாழடைந்து கிடந்த மலைநாட்டில் மீண்டும் குடியேறியுள்ளார்கள்.”

20“எனவே, தலைவர் பெருமானே, இப்போது இந்த மக்களிடம் தவறு ஏதேனும் காணப்பட்டால், இவர்கள் தங்களின் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால், இவர்கள் செய்த பாவத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியுமானால், நாம் புறப்பட்டுச் சென்று இவர்களைப் போரில் முறியடிக்கலாம். 21ஆனால், இந்த இனத்தாரிடம் குற்றம் ஒன்றும் இல்லையானால், என் தலைவரே, இவர்களைத் தாக்காது விட்டுவிடும்; இல்லையெனில் இவர்களின் கடவுளாகிய ஆண்டவர் இவர்கள் சார்பாக இருந்து, இவர்களைப் பாதுகாக்க, நாம் அனைத்துலகின் பழிப்புக்கும் உள்ளாவோம்.”


ஒலோபெரினின் மறுமொழி


22அக்கியோர் பேசி முடித்தவுடன் கூடாரத்தைச் சூழ்ந்து நின்று மக்கள் எல்லாரும் முறுமுறுத்தார்கள். ஒலோபெரினின் அலுவலர்களும் கடலோரத்திலும் மோவாபிலும் வாழ்ந்தோர் யாவரும், “அக்கியோரைக் கொன்று போடுங்கள். 23இஸ்ரயேலருக்கு நாம் அஞ்சத் தேவையில்லை; ஏனெனில், அம்மக்கள் கடுமையாய்ப் போரிடும் வலிமையோ ஆற்றலோ அற்றவர்கள். 24ஆகவே, ஒலோபெரின், எம் தலைவரே, நாம் மேலே முன்னேறிச் செல்வோம். உமது பெரும் படைக்கு அவர்கள் இரையாவார்கள்” என்று கூறினர்.


5:7 தொநூ 11:31; யோசு 24:2. 5:9 தொநூ 11:31-12:5. 5:10 தொநூ 42:1-5; 46:1-7; விப 1:7. 5:11 விப 1:8-14; திப 7:19. 5:12 விப 7:1-12, 51. 5:13 விப 14:21-22, 29. 5:15 எண் 21:21-32. 5:16 இச 7:1. 5:17 இச 28:1-68. 5:18 2 அர 25:1-30. 5:20-21 யூதி 8:18-23; 11:10.


அதிகாரம் 6

1ஆட்சிமன்றத்துக்கு வெளியே நின்ற கூட்டம் எழுப்பிய கூச்சல் ஓய்ந்தபின் அசீரியப் படைத் தலைவன் ஒலோபெரின் அயல் நாட்டினர் அனைவரின் முன்னிலையிலும் அக்கியோரிடமும் மோவாபியர் அனைவரிடமும் பின்வருமாறு கூறினான்;

2“இஸ்ரயேல் இனத்தாரோடு போரிட வேண்டாம்; ஏனெனில், அவர்களின் கடவுள் அவர்களைப் பாதுகாப்பார் என எங்களுக்கு இன்று இறைவாக்குரைக்க, அக்கியோரே, நீ யார்? எப்ராயிமின் கூலிப் படைகளே, நீங்கள் யார்? நெபுகத்னேசரைத் தவிர வேறு தெய்வம் உளரோ? அவர் தம் படையை அனுப்பி இஸ்ரயேலரை உலகிலிருந்தே அழித்தொழிப்பார். அவர்களின் கடவுள் அவர்களைக் காப்பாற்றமாட்டார். 3ஆனால், மன்னரின் பணியாளர்களாகிய நாங்கள் அவர்கள் எல்லாரையும் ஓர் ஆளை வீழ்த்துவதைப்போல் எளிதாகக் கொன்றழிப்போம். எங்கள் குதிரைப்படையை அவர்களால் எதிர்த்து நிற்க முடியாது. 4இப்படைகளைக் கொண்டு அவர்களைத் தீக்கிரையாக்குவோம். அவர்களின் மலைகளெங்கும் அவர்களது குருதி வழிந்தோடும்; அவர்களின் சமவெளிகள் அவர்களுடைய சடலங்களால் நிரம்பும். அவர்களால் எங்களை எதிர்த்து நிற்க முடியாது. அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள், என்கிறார் உலகிற்கெல்லாம் தலைவரான நெபுகத்னேசர் மன்னர். அவர் உரைத்துவிட்டார். அவர் உரைத்த சொல் எதுவும் பொய்க்காது. 5இன்று இச்சொற்களைப் பிதற்றிய அக்கியோரே, நீ அம்னோனியரின் கைக்கூலி, நயவஞ்சகன்! இன்றுமுதல், எகிப்தினின்று வெளிவந்த இந்த இனத்தை நான் பழிவாங்கும்வரை நீ என் முகத்தில் விழிக்காதே. 6நான் திரும்பிவரும்பொழுது, என் படையின் வாளும் என் பணியாளர்களின் வேலும்⁕ உன் விலாவைக் குத்தி ஊடுருவும். இஸ்ரயேலரோடு நீயும் வெட்டி வீழ்த்தப்படுவாய்.

7இப்போது என் பணியாளர்கள் உன்னை மலைநாட்டுக்குக் கொண்டு செல்வார்கள்; மலைப்பாதை அருகே உள்ள நகர் ஒன்றில் உன்னை விட்டுவிடுவார்கள். 8இஸ்ரயேலரோடு அழிக்கப்படும்வரை நீ சாகமாட்டாய். 9அவர்கள் பிடிபடமாட்டார்கள் என நீ மனமார நம்பினால், பிறகு ஏன் உன் முகம் வாட்டமுறவேண்டும்? நான் கூறிவிட்டேன். என் சொற்களில் எதுவும் பொய்க்காது.”

அக்கியோர் இஸ்ரயேலரிடம் கையளிக்கப்படல்


10அக்கியோரைப் பிடித்துப் பெத்தூலியாவுக்குக் கொண்டு போய், இஸ்ரயேல் மக்களிடம் ஒப்படைக்கும்படி ஒலோபெரின் தன் கூடாரத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்குக் கட்டளையிட்டான். 11எனவே பணியாளர்கள் அவனைப் பிடித்துப் பாசறைக்கு வெளியே சமவெளிக்குக் கொண்டு சென்றார்கள்; அங்கிருந்து மலைநாட்டுக்குப் போய், பெத்தூலியாவின் அடிவாரத்தில் இருந்த நீரூற்றுகளை அடைந்தார்கள்.

12அந்நகரின் ஆண்கள் இவர்களை மலையுச்சியில் கண்டபொழுது தங்கள் படைக்கலங்களை எடுத்துக்கொண்டு நகரிலிருந்து வெளியேறி மலையுச்சிக்கு ஏறிச்சென்றார்கள்; கவண் வீசுவோர் அனைவரும் ஒலோபெரினின் பணியாளர் மீது கற்களை எறிந்து இவர்கள் மேலே ஏறிவராதவாறு தடுத்தார்கள். 13எனவே இவர்கள் மலையிடுக்கில் பதுங்கிக்கொண்டு, அக்கியோரைக் கட்டி, மலையடிவாரத்தில் கிடத்தி விட்டுத் தங்கள் தலைவனிடம் திரும்பினார்கள்.

14அப்பொழுது இஸ்ரயேலர் தங்கள் நகரிலிருந்து கீழே இறங்கி வந்து, அக்கியோரைக் கட்டவிழ்த்துப் பெத்தூலியாவுக்கு அழைத்துச் சென்று தங்கள் நகரப் பெரியோர்முன்அவரை நிறுத்தினர். 15அக்காலத்தில் சிமியோன் குலத்தைச் சேர்ந்த மீக்காவின் மகன் ஊசியா, கொதொனியேலின் மகன் காபிரி, மெல்கியேலின் மகன் கார்மி ஆகியோர் நகரப் பெரியோராய் விளங்கினர். 16அவர்கள் நகரின் மூப்பர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள். மக்கள் நடுவில் அக்கியோரை நிற்க வைத்தார்கள். உடனே இளைஞர்கள், பெண்கள் ஆகிய அனைவரும் கூட்டம் நடந்த இடத்திற்கு ஓடிவந்தார்கள். அப்பொழுது ஊசியா நிகழ்ந்தது என்ன என்று அக்கியோரை வினவினார். 17அவர் மறுமொழியாக, ஒலோபெரினின் ஆட்சி மன்றத்தில் நடந்தது, அசீரியரின் தலைவர்கள் முன்னிலையில் தான் எடுத்துச்சொன்னது, இஸ்ரயேல் இனத்தாருக்கு எதிராகத் தான் செய்யவிருந்ததை ஒலோபெரின் இறுமாப்புடன் உரைத்தது ஆகிய அனைத்தையும் அவர்களுக்குத் தெரிவித்தார். 18இதனால், மக்கள் குப்புற விழுந்து, கடவுளைத் தொழுதார்கள். 19“விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரே, எங்கள் பகைவர்களின் இறுமாப்பைப் பாரும்; எங்களுடைய இனத்தாரின் தாழ்நிலையைக் கண்டு மனமிரங்கும். இன்று தங்களையே உமக்கென்று அர்ப்பணித்துக் கொண்ட மக்களைக் கண்ணோக்கும்” என்று மன்றாடினார்கள்.

20பிறகு அவர்கள் அக்கியோருக்கு ஆறுதல்கூறி, அவரைப் பெரிதும் பாராட்டினார்கள். 21ஊசியா அவரைக் கூட்டத்திலிருந்து தம் வீட்டுக்கு அழைத்துச்சென்று மூப்பர்களோடு விருந்தளித்தார். அவர்கள் இஸ்ரயேலின் கடவுளது துணையை வேண்டி அன்று இரவு முழுவதும் மன்றாடினார்கள்.


6:6 கிரேக்க பாடம் ‘மக்கள்’.


அதிகாரம் 7

பெத்தூலியாமீது முற்றுகை


1மறுநாள் ஒலோபெரின் தன் படை முழுவதற்கும், தன்னுடன் சேர்ந்து போரிட வந்திருந்த எல்லா வீரர்களுக்கும் கட்டளையிட்டு, பெத்தூலியாவை எதிர்த்துப் படையெடுத்துச் சென்று, மலைப்பாதைகளைக் கைப்பற்றவும், இஸ்ரயேலருக்கு எதிராய்ப் போர்தொடுக்கவும் கூறினான். 2அன்றே படைவீரர் யாவரும் அணிவகுத்துச் சென்றனர்; அவர்களின் எண்ணிக்கை வருமாறு; காலாட் படையினர் ஓர் இலட்சத்து எழுபதாயிரம்; குதிரைப் படையினர் பன்னிரண்டாயிரம்; மற்றும் தேவையான பொருள்களைக் கால்நடையாய் எடுத்துச் சென்றோர் மாபெரும் தொகையினர். 3அவர்கள் பெத்தூலியாவுக்கு அருகே பள்ளத்தாக்கில் நீருற்றையொட்டிப் பாசறை அமைத்தார்கள்; அகல அளவில் தோத்தானிலிருந்து பெல்பாயிம்வரையும், நீள அளவில் பெத்தூலியாவிலிருந்து எஸ்திரலோனுக்கு எதிரே இருந்த கியமோன்வரையும் பரவியிருந்தார்கள்.

4இஸ்ரயேலர், பெருந்திரளாய் வந்த பகைவர்களைக் கண்டு மிகவும் நடுங்கினர். “இவர்கள், நாடு முழுவதையும் இப்போது விழுங்கப்போகிறார்கள். உயர்ந்த மலைகளோ பள்ளத்தாக்குகளோ குன்றுகளோ அவர்களின் பளுவைத் தாங்கா” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். 5எனினும் அவர்கள் ஒவ்வொருவரும் படைக்கலம் தாங்கியவராய், தங்கள் காவல்மாடங்களில் தீமூட்டி அன்று இரவு முழுவதும் காவல் புரிந்தார்கள்.

6இரண்டாம் நாள் ஒலோபெரின் தன் குதிரைப்படை முழுவதையும் பெத்தூலியாவில் இருந்த இஸ்ரயேலர் காணும்படி அணிவகுத்துச் செல்லுமாறு செய்தான்; 7இஸ்ரயேலருடைய நகருக்குச் செல்லும் வழிகளை மேற்பார்வையிட்டான்; நீரூற்றுகளைத் தேடிப்பார்த்துக் கைப்பற்றி, படைவீரர்களை அவற்றுக்குக் காவலாக நிறுத்தினான்; பிறகு தன் படையிடம் திரும்பினான்.

8ஏதோமிய மக்களுடைய ஆளுநர்கள் அனைவரும், மோவாபிய மக்களின் தலைவர்கள் அனைவரும், கடலோரப் பகுதிகளின் படைத்தலைவர்களும் அவனிடம் வந்து பின்வருமாறு கூறினார்கள்; 9“எங்கள் தலைவரே, உமது படைக்குத் தோல்வி ஏற்படாமலிருக்க நாங்கள் சொல்வதைக் கேளும். 10இந்த இஸ்ரயேல் மக்கள் தங்கள் ஈட்டிகளையல்ல தாங்கள் வாழும் உயர்ந்த மலைகளையே நம்பியிருக்கிறார்கள்; ஏனென்றால், அவர்களுடைய மலையுச்சிகளுக்கு ஏறிச் செல்வது எளிதன்று. 11ஆகவே, தலைவரே, வழக்கமான அணிவகுப்பு முறையை மாற்றியமைத்துப் போர் புரிந்தால், உம் ஆள்களுள் ஒருவர்கூட அழியமாட்டார். 12உமது கூடாரத்திலேயே நீர் தங்கியிரும்; உம்முடைய படைவீரர்கள் எல்லாரும் தங்களது இடத்திலேயே இருக்கட்டும். ஆனால், உம் பணியாளர்கள் மலையடிவாரத்திலிருந்து சுரக்கும் நீரூற்றைக் கைப்பற்றிக்கொள்ளட்டும். 13ஏனெனில், பெத்தூலியாவில் வாழ்பவர்கள் யாவரும் இதிலிருந்துதான் தண்ணீர் எடுக்கின்றனர். இதனால் தாகமே அவர்களைக் கொன்றுவிடும். அவர்கள் தங்களது நகரைக் கையளித்து விடுவார்கள். இதற்கிடையில் நாங்களும் எங்கள் ஆள்களும் அருகில் உள்ள மலையுச்சிகளுக்கு ஏறிச்சென்று, அங்குப் பாசறை அமைத்து, ஒருவரும் நகரைவிட்டு வெளியேறாதவாறு பார்த்துக்கொள்வோம். 14அவர்களும் அவர்களின் மனைவியரும் மக்களும் பசியால் நலிவுறுவார்கள்; வாளுக்கு இரையாகுமுன்பே தாங்கள் வாழும் நகரின் தெருக்களில் அவர்கள் மடிந்துகிடப்பார்கள். 15அவர்கள் உம்மை அமைதியாய் ஏற்றுக்கொள்ளாமல் கிளர்ச்சி செய்ததற்குத் தண்டனையாக அவர்களுக்கு இவ்வாறு தீங்கிழைப்பீர்.”

16அவர்களுடைய கூற்று ஒலோபெரினுக்கும் அவனுடைய பணியாளர்கள் யாவருக்கும் ஏற்றதாய் இருந்தது. ஆகையால், அவர்கள் சொன்னபடியே செய்ய அவன் கட்டளையிட்டான். 17எனவே, அம்மோனியப் படைவீரர்கள் அசீரியப் படைவீரர்கள் ஐயாயிரம் பேருடன் சேர்ந்து முன்னேறிச் சென்று, பள்ளத்தாக்கில் பாசறை அமைத்து, இஸ்ரயேலருக்குத் தண்ணீர் கிடைக்காதவாறு அவர்களின் நீரூற்றுகளைக் கைப்பற்றினார்கள். 18ஏசாவின் மக்களும் அம்மோனியரும் ஏறிச்சென்று மலை நாட்டில் தோத்தானுக்கு எதிரே பாசறை அமைத்தார்கள்; தங்களுள் சிலரைத் தென் கிழக்கில் எக்ரபேலுக்கு எதிரில் அனுப்பினார்கள். இது மொக்மூர் என்ற ஓடை ஓரத்தில் அமைந்திருந்த கூசு என்ற இடத்துக்கு அருகே இருந்தது. அசீரியரின் எஞ்சிய வீரர்கள் சமவெளியில் பாசறை அமைத்து நாடு முழுவதையும் நிரப்பினார்கள். அவர்களுடைய கூடாரங்களும் பொருள்களும் பெரியதொரு பாசறையாக அமைந்து நெடுந்தொலை பரவியிருந்தன.

19உள்ளம் தளர்ந்துபோன இஸ்ரயேலர் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கதறினர்; ஏனெனில், அவர்களைச் சூழ்ந்துகொண்ட பகைவர்களிடமிருந்து தப்பிக்க வழியே இல்லை. 20காலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை அடங்கிய அசீரியரின் படைத்திரள் முழுவதும் முப்பத்துநான்கு நாள் இஸ்ரயேலரைச் சூழ்ந்து கொள்ள, பெத்தூலியாவில் வாழ்ந்தவர்கள் அனைவருடைய தண்ணீர்க் கலன்களும் வெறுமையாயின. 2நீர்த்தொட்டிகள் வறண்டுகொண்டிருந்தன. ஒரு நாளாவது தாகம் தீரக் குடிக்கப் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை; அவர்களுக்குக் குடிநீர் அளவோடு தான் கொடுக்கப்பட்டது. 22அவர்களின் குழந்தைகள் சோர்வுற்றார்கள்; பெண்களும் இளைஞர்களும் தாகத்தால் மயக்கமடைந்து நகரின் தெருக்களிலும் வாயில்களிலும் விழுந்து கிடந்தார்கள்; ஏனெனில், அவர்களிடம் வலுவே இல்லை.

23இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் எல்லாரும் ஊசியாவிடமும் நகரின் பெரியோர்களிடமும் கூட்டமாய்ச் சென்று உரத்த குரல் எழுப்பினார்கள்; மூப்பர்கள் அனைவர் முன்னும் பின்வருமாறு கூறினார்கள்:24“நமக்கிடையே கடவுள் தீர்ப்பு வழங்கட்டும். அசீரியருடன் நீங்கள் சமாதானம் செய்து கொள்ளாததால், நமக்குப் பெரும் அநீதி இழைத்திருக்கிறீர்கள். 25இப்போது நமக்கு உதவி செய்வார் யாரும் இல்லை. நாம் தாகத்தாலும் பேரழிவாலும் அவர்கள்முன் தலைகுனியும்படி கடவுள் நம்மை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். 26உடனே அவர்களை அழையுங்கள்; நகர் முழுவதையும் சூறையாடும்படி ஒலோபெரினின் வீரர்களிடமும் அவனுடைய படைகளிடமும் கையளியுங்கள். 27ஏனெனில், அவர்களால் சிறைப்பிடிக்கப்படுவது நமக்கு மேலானது. அதனால் நாம் அவர்களுக்கு அடிமைகளாவோம்; ஆனால் நமது உயிர் காப்பாற்றப்படும். மேலும் நம் கண்முன்னேயே நம் குழந்தைகள் சாவதையும், நம் மனைவி மக்கள் உயிர்விடுவதையும் காணமாட்டோம். 28விண்ணையும் மண்ணையும், நம் கடவுளையும் நம் மூதாதையரின் ஆண்டவரையும் உங்களுக்கு எதிர்ச் சாட்சிகளாக அழைக்கிறோம்; அவர் நம் பாவங்களுக்கு ஏற்பவும், நம் மூதாதையரின் பாவங்களுக்கு ஏற்பவும் நம்மைத் தண்டிப்பவர். நாங்கள் சொன்னவாறு கடவுள் இன்று நிகழாமல் பார்த்துக்கொள்வாராக.”

29அப்பொழுது மக்கள் கூட்டத்திலிருந்து ஒருமித்த பெரும் புலம்பல் எழுந்தது. அவர்கள் எல்லாரும் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி உரத்த குரலில் மன்றாடினார்கள். 30ஊசியா அவர்களை நோக்கி, “சகோதரர்களே, துணிவு கொள்ளுங்கள்; மேலும் ஐந்து நாளுக்குப் பொறுத்துக் கொள்வோம். அதற்குள் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்கு இரக்கங் காட்டுவார்; அவர் நம்மை முற்றிலும் புறக்கணித்துவிடமாட்டார். 31ஐந்து நாள் கடந்த பின்னும் நமக்கு உதவி ஏதும் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் சொன்னவாறே செய்கிறேன்” என்று கூறினார்.

32பிறகு மக்கள் கலைந்து தாங்கள் காவல்புரிய வேண்டிய இடங்களுக்கு அவர் போகச் செய்தார். அவர்கள் நகரின் மதில்களுக்கும் கோட்டைகளுக்கும் சென்றார்கள்; பெண்களும் பிள்ளைகளும் அவரவர் தம் வீடுகளுக்குத் திரும்பினார்கள்; நகரெங்கும் மக்கள் பெரிதும் சோர்வுற்றிருந்தார்கள்.


அதிகாரம் 8

2. யூதித்து வழியாகக் கிடைத்த வெற்றி


கைம்பெண் யூதித்து

1அக்காலத்தில் யூதித்து இதைப்பற்றிக் கேள்விப்பட்டார். யூதித்து மெராரியின் மகள்; மெராரி ஓசின் மகன்; ஓசு யோசேப்பின் மகன்; யோசேப்பு ஓசியேலின் மகன்; ஓசியேல் எல்க்கியாவின் மகன்; எல்க்கியா அனனியாவின் மகன்; அனனியா கிதியோனின் மகன்; கிதியோன் ரெபாயிம் மகன்; ரெபாயிம் அகித்தூபின் மகன்; அகித்தூபு எலியாவின் மகன்; எலியா இல்க்கியாவின் மகன்; இல்க்கியா எலியாபின் மகன்; எலியாபு நத்தனியேலின் மகன்; நத்தனியேல் சலாமியேலின் மகன்; சலாமியேல் சரசதாயின் மகன்; சரசதாய் இஸ்ரயேலின் மகன். 2யூதித்தின் கணவர் மனாசே. அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வாற்கோதுமை அறுவடைக் காலத்தில் மனாசே இறந்துபோனார். 3அவர் தம் வயலில் கதிர்களைச் சேர்த்துக் கட்டிக் கொண்டிருந்தவர்களை மேற்பார்வையிட்டபொழுது, கடும் வெயில் அவரது தலையைத் தாக்கவே, அவர் படுத்த படுக்கையானார்; பின் தம் நகரான பெத்தூலியாவில் உயிர் துறந்தார்; தோத்தானுக்கும் பால்மோனுக்கும் இடையில் இருந்த வயலில் தம் மூதாதையரின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

4யூதித்து கைம்பெண் ஆனார்; மூன்று ஆண்டு நான்கு மாதமாய்த் தம் இல்லத்திலேயே இருந்தார். 5தம் வீட்டின் மேல்தளத்தில் தமக்காகக் கூடாரம் ஒன்று அமைத்துக்கொண்டார்; இடுப்பில் சாக்கு உடை உடுத்தியிருந்தார்; கைம்பெண்ணுக்குரிய ஆடைகளை அணிந்திருந்தார்; 6தம் கைம்மைக் காலத்தில் ஓய்வுநாளுக்கு முந்தினநாளும் ஓய்வுநாள் அன்றும், அமாவாசைக்கு முந்தின நாளும் அமாவாசை அன்றும், இஸ்ரயேல் இனத்தாருக்குரிய திருநாள்கள், மகிழ்ச்சியின் நாள்கள்தவிர மற்ற நாள்களில் நோன்பிருந்துவந்தார். 7அவர் பார்வைக்கு அழகானவர்; தோற்றத்தில் எழில் மிக்கவர். ஆண் பெண் பணியாளர்களோடு பொன், வெள்ளி, கால்நடைகள், வயல்கள் ஆகியவற்றை அவர் கணவர் மனாசே அவருக்கு விட்டுச்சென்றிருந்தார். இவையெல்லாம் யூதித்தின் உடைமையாயின. 8யூதித்து கடவுளுக்கு மிகவும் அஞ்சி நடந்தார். அவரைப்பற்றி யாரும் தவறாகப் பேசியதில்லை.


யூதித்தும் நகரின் மூப்பர்களும்


9தண்ணீர்ப் பஞ்சத்தால் மக்கள் மிகவும் சோர்வுற்று, ஆளுநருக்கு எதிராகக் கூறியிருந்த கடுஞ் சொற்களையும், ஐந்து நாள்களுக்குப்பின் நகரை அசீரியரிடம் கையளிக்கப் போவதாக ஊசியா ஆணையிட்டுக் கூறியிருந்த அனைத்தையும் யூதித்து கேள்வியுற்றார். 10உடனே தம் நகரின் மூப்பர்களை ஊசியா, காபிரி, கார்மி ஆகியோரை அழைத்து வருமாறு, தன் உடைமைகளையெல்லாம் கண்காணித்துவந்த தம் பணிப்பெண்ணை அனுப்பிவைத்தார்.

11மூப்பர்கள் வந்தபோது யூதித்து “பெத்தூலியாவில் வாழும் மக்களின் ஆளுநர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்; இன்று மக்களிடம் நீங்கள் கூறிய சொற்கள் முறையற்றவை. ஆண்டவர் தம் மனத்தை மாற்றி, குறித்த நாளுக்குள் நமக்கு உதவி அளிக்காவிடில் இந்த நகரை நம் எதிரிகளிடம் ஒப்புவிக்கப்போவதாக நீங்கள் உறுதி அளித்துக் கடவுள்மேல் ஆணையிட்டிருக்கிறீர்கள். 12இன்று கடவுளைச் சோதிக்க நீங்கள் யார்? மனிதர் நடுவே கடவுளுக்கு மேலாக உங்களையே உயர்த்திக் கொள்ள நீங்கள் யார்? 13இப்போது, எல்லாம்வல்ல ஆண்டவரைச் சோதிக்கின்றீர்கள்; ஆனால் நீங்கள் எதையும் என்றுமே அறிந்து கொள்ளப்போவதில்லை. 14மனித உள்ளத்தின் ஆழத்தையே நீங்கள் காண முடியாது; மனித மனம் நினைப்பதையே நீங்கள் உணர முடியாது. அவ்வாறிருக்க, இவற்றையெல்லாம் படைத்த கடவுளை எவ்வாறு உங்களால் தேடி அறிய முடியும்? அவருடைய எண்ணத்தை எவ்வாறு புரிந்த கொள்ள முடியும்? அவருடைய திட்டத்தை எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும்? சகோதரர்களே, நம் கடவுளாகிய ஆண்டவரின் சினத்தைத் தூண்டி விடாதீர்கள். 15இந்த ஐந்து நாள்களில் நமக்கு உதவிபுரிய அவருக்கு விருப்ப மில்லை என்றாலும், அவருக்கு விருப்பமான எந்த நேரத்திலும் நம்மைப் பாதுகாக்கவோ நம் பகைவர்கள் காண நம்மை அழித்து விடவோ அவருக்கு ஆற்றல் உண்டு. 16நம் கடவுளாகிய ஆண்டவரின் திட்டங்களுக்கு நிபந்தனை விதிக்காதீர்கள்; ஏனெனில், மனிதரை அச்சுறுத்துவதுபோலக் கடவுளை அச்சுறுத்த முடியாது; மானிடரை மன்றாட்டினால் மாற்றுவதுபோல் ஆண்டவரையும் மாற்ற முடியாது. 17எனவே, அவரிடமிருந்து மீட்பை எதிர்பார்ப்பவர்களாய், நமக்கு உதவி செய்ய அவரை மன்றாடுவோம். அவருக்கு விருப்பமானால் அவர் நமது மன்றாட்டுக்குச் செவிசாய்ப்பார். 18“முற்காலத்தில் நடந்ததுபோல, நம் தலைமுறையில் நாம் வாழும் இக்காலத்தில், நம்மில் எந்தக் குலமோ குடும்பமோ நாடோ நகரமோ கையால் உருவாக்கப்பட்ட சிலைகளைத் தெய்வங்களாக வணங்கியதில்லை. 19அவ்வாறு வணங்கியதால்தான் நம் மூதாதையர்கள் வாளுக்கிரையாகி, சூறையாடப்பட்டு, நம் எதிரிகளின் முன்னிலையில் அறவே அழிந்தார்கள். 20நாம் ஆண்டவரைத் தவிர வேறு கடவுளை அறிந்ததில்லை. அதனால் அவர் நம்மையோ நம் இனத்தாருள் எவரையுமோ வெறுத்து ஒதுக்கமாட்டார் என நம்புகிறோம். 21நாம் பிடிபட்டால் யூதேயா முழுவதுமே பிடிபடும்; நம் திருவிடம் கொள்ளையடிக்கப்படும். அதன் தூய்மைக்கேட்டுக்குக் கழுவாயாக நாம் குருதி சிந்த வேண்டியிருக்கும். 22நம் சகோதரர்களின் படுகொலை, நாட்டின் சிறைப்பட்ட நிலை, நமது உரிமைச் சொத்தின் பாழ்நிலை ஆகியவற்றுக்கெல்லாம், நாம் அடிமைகளாய் இருக்கும் இடமெங்கும் வேற்றினத்தார் நடுவே நாம் பொறுப்பு ஏற்கச்செய்வார். நம்மை அடிமைப்படுத்தியோர் முன்னிலையில் ஏளனப் பேச்சுக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாவோம். 23நம்முடைய அடிமை நிலை நமக்குச் சாதகமாய் அமையாது; நம் கடவுளாகிய ஆண்டவர் அதை நமக்கு இகழ்ச்சியாக மாற்றுவார்.

24உடன்பிறப்புகளே, இவ்வேளையில் நம் சகோதரர்களுக்கு நாம் எடுத்துக்காட்டாக விளங்குவோம். ஏனென்றால், அவர்கள் உயிர் நம் கையில் உள்ளது. அவ்வாறே திருவிடமும் கோவிலும் பலிபீடமும் நம் பொறுப்பில் உள்ளன. 25எனினும் நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்; ஏனெனில், நம் மூதாதையரை அவர் சோதித்ததுபோல நம்மையும் சோதிக்கிறார். 26அவர் ஆபிரகாமுக்கு என்ன செய்தார் என்பதையும், ஈசாக்கை எவ்வாறு சோதித்தார் என்பதையும், யாக்கோபு தம் தாய்மாமன் லாபானின் ஆடுகளை வட மெசப்பொத்தாமியாவில்⁕ மேய்ந்துக்கொண்டிருந்த போது அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பதையும் எண்ணிப்பாருங்கள்.✠ 27ஆண்டவர் இவ்வாறு அவர்களின் உள்ளங்களைச் சோதித்தறியும் பொருட்டு அவர்களை நெருப்பில் புடமிட்டதுபோல நம்மைப் புடமிடவில்லை; நம்மைப் பழிவாங்கவுமில்லை. ஆனால், தமக்கு நெருக்கமாய் உள்ளோரை எச்சரிக்கும்படி தண்டிக்கிறார்.”

28பின் ஊசியா யூதித்திடம் மறுமொழியாக, “நீ சொன்னதெல்லாம் உண்மையே. உன் சொற்களை மறுத்துப் பேசுவார் யாருமில்லை. 29உனது ஞானம் முதன் முறையாக இன்று வெளிப்படவில்லை; உன் இளமைமுதலே உன் அறிவுக்கூர்மையை மக்கள் யாவரும் அறிவர். நீ நல்ல உள்ளம் கொண்டவள். 30ஆனால், மக்கள் கடுந்தாகங் கொள்ளவே, நாங்கள் முன்பு உறுதி கூறியவாறு செயலாற்றவும் அதை மீறாதவாறு ஆணையிடவும் எங்களைக் கட்டாயப்படுத்தினார்கள். 31நீ இறைப்பற்றுள்ள பெண். ஆகையால், இப்போது நமக்காக இறைவனிடம் மன்றாடினால் ஆண்டவர் மழை பொழியச் செய்து, நம் நீர்த்தொட்டிகளை நிரப்புவார். நாம் இனியும் தாகத்தால் சோர்வு அடைய மாட்டோம்” என்றார்.

32அதற்கு யூதித்து அவர்களிடம், “நான் சொல்வதைக் கேளுங்கள். நான் செய்யப்போகும் செயல் நம் வழிமுறையினர் நடுவே தலைமுறை தலைமுறையாய் நினைவுகூரப்படும். 33நீங்கள் இன்று இரவு நகர வாயில் அருகே வந்து நில்லுங்கள். அப்போது நான் என் பணிப்பெண்ணுடன் வெளியே செல்வேன். நீங்கள் நகரை நம் பகைவர்களிடம் கையளிக்கப்போவதாக உறுதியளித்த அந்த நாளுக்குள் ஆண்டவர் என் வழியாக இஸ்ரயேலை விடுவிப்பார். 34நான் செய்யப்போவதுபற்றி நீங்கள் ஒன்றும் என்னிடம் கேட்காதீர்கள். நான் அதைச் செய்து முடிக்கும்வரை எதுவும் சொல்லமாட்டேன்” என்றார்.

35அதற்கு ஊசியாவும் ஆளுநர்களும் அவரிடம், “நலமே சென்றுவா; கடவுளாகிய ஆண்டவர் நம் பகைவர்களைப் பழிவாங்க உன்னை வழி நடத்தட்டும்” என்றார்கள். 36பிறகு அவர்கள் அவரது கூடாரத்தை விட்டுத் தாங்கள் காவல்புரியவேண்டிய இடங்களுக்குத் திரும்பினார்கள்.


8:26 தொநூ 22:1-18; 25:21; 29:13-31:6.


8:26 ‘சிரியா நாட்டைச் சார்ந்த மெசப்பொத்தாமியாவில்’ என்பது கிரேக்க பாடம்.


அதிகாரம் 9

யூதித்தின் மன்றாட்டு


1யூதித்து குப்புற விழுந்தார்; தலையில் சாம்பலைத் தூவிக்கொண்டார்; தாம் அணிந்திருந்த சாக்கு உடையைக் களைந்தார். எருசலேமில் கடவுளின் இல்லத்தில் அன்றைய மாலைத் தூப வழிபாடு நடந்துகொண்டிருந்த நேரத்தில், ஆண்டவரை நோக்கி உரத்த குரலில் பின்வருமாறு மன்றாடினார்;✠ 2“என் மூதாதையான சிமியோனின் கடவுளாகிய ஆண்டவரே, அயல்நாட்டாரைப் பழிவாங்குமாறு அவரது கையில் ஒரு வாளைக் கொடுத்தீர். அவர்கள் ஒரு கன்னிப் பெண்ணைக் கறைப்படுத்துவதற்காக அவளது இடைக் கச்சையைத் தளர்த்தினார்கள்; அவளை இழிவுபடுத்துவதற்காக அவளது ஆடையைக் கிழித்தார்கள்; அவளைப் பழிக்குள்ளாக்குவதற்காக அவளது கருப்பையைத் தீட்டுப்படுத்தினார்கள். ‘இவ்வாறு செய்யலாகாது’ என்று நீர் உரைத்திருந்தும் அதற்கு மாறாக அவர்கள் செயல்பட்டார்கள்.✠ 3எனவே, அவர்களின் ஆளுநர்கள் கொல்லப்பட ஒப்புவித்தீர். வஞ்சனையால் கறைபட்ட அவர்களது படுக்கை, குருதி தோய்ந்திருக்கச் செய்தீர்; அடிமைகளை அவர்களுடைய தலைவர்களோடும், தலைவர்களை அவர்களுடைய அரியணைகளோடும் அடித்து நொறுக்கினீர். 4மேலும், அவர்களுடைய மனைவியர் கவர்ந்து செல்லப்படவும், புதல்வியர் சிறைப்படுத்தப்படவும், கொள்ளைப் பொருள்கள் அனைத்தும் உம் அன்பான மக்களால் பகிர்ந்துகொள்ளப்படவும் நீர் ஒப்புவித்தீர். உம் மக்கள் உம்மீது பற்றார்வம் கொண்டு, தங்கள் குருதியால் ஏற்பட்ட தீட்டை அருவருத்து, நீர் உதவி அளிக்கும்படி உம்மை மன்றாடினார்கள். கடவுளே, என் கடவுளே, கைம்பெண்ணாகிய எனக்கும் செவிசாய்த்தருளும்.

5“அப்போது நடந்தவை, அதற்கு முன்னும் பின்னும் நடந்தவை ஆகிய அனைத்தையும் செய்தவர் நீரே; இப்போது நிகழ்வனவற்றையும் இனி நிகழ விருப்பனவற்றையும் நீரே திட்டமிட்டுள்ளீர். நீர் திட்டமிட்டவையெல்லாம் நிறைவேறின. 6நீர் திட்டமிட்டவை அனைத்தும் உம்முன் நின்று, ‘இதோ உள்ளோம்’ என்றன; உம் வழிகளெல்லாம் ஆயத்தமாய் உள்ளன; உம் தீர்ப்பு முன்னறிவு மிக்கது.✠ 7இப்போது அசீரியர்கள் பெருந்திரளான படையோடு வந்திருக்கிறார்கள்; தங்கள் குதிரைகளின் பொருட்டும் குதிரை வீரர்களின் பொருட்டும் இறுமாப்புக் கொண்டுள்ளார்கள்; தங்கள் காலாட்களின் வலிமையால் செருக்குக் கொண்டுள்ளார்கள்; கேடயம், ஈட்டி, வில், கவண் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஆனால், போர்களை முறியடிக்கும் ஆண்டவர் நீர் என்பதை அவர்கள் அறியார்கள். 8ஆண்டவர் என்பது உமது பெயர். உமது ஆற்றலால் அவர்களது வலிமையை அடக்கிவிடும்; உமது சினத்தால் அவர்களின் திறத்தை அழித்துவிடும்; ஏனெனில், உமது திருவிடத்தைக் கறைப்படுத்தவும், உமது மாட்சிமிகு பெயர் விளங்கும் பேழையைத் தீட்டுப்படுத்தவும் உமது பலிபீடத்தின் கொம்புகளை வாளால் நொறுக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். 9அவர்களுடைய இறுமாப்பை உற்றுநோக்கும்; அவர்கள் தலைமேல் உமது சினத்தைக் கொட்டும்; எனது திட்டத்தைச் செயல்படுத்தக் கைம்பெண்ணாகிய எனக்கு வலிமை தாரும். 10என் உதடுகளின் வஞ்சனையால் அடிமையை அவனுடைய ஆளுநனோடும், ஆளுநனை அவனுடைய பணியாளனோடும் தாக்கி வீழ்த்தும்; அவர்களது செருக்கை ஒரு பெண்ணின் கைவன்மையால் நொறுக்கிவிடும்.

11“உமது வலிமை ஆள் எண்ணக்கையைப் பொறுத்ததன்று; உமது ஆற்றல் வலிமைவாய்ந்தோரைப் பொருத்ததன்று. நீர் தாழ்ந்தோரின் கடவுள்; ஒடுக்கப்பட்டோரின் துணைவர்; நலிவுற்றோரின் ஆதரவாளர்; கைவிடப்பட்டோரின் காவலர்; நம்பிக்கையற்றோரின் மீட்பர். 12என் மூதாதையின் கடவுளே, என் வேண்டுதலைக் கனிவோடு கேளும்; இஸ்ரயேலின் உரிமைச்சொத்தாகிய இறைவா, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, நீரூற்றுகளைப் படைத்தவரே, படைப்புகளுக்கெல்லாம் மன்னரே, என் மன்றாட்டுக்குப் பரிவோடு செவிசாயும். 13உமது உடன்படிக்கைக்கும் உமது தூய இல்லத்துக்கும் சீயோன் மலைக்கும் உம் மக்கள் உரிமையாக்கிக் கொண்ட இல்லங்களுக்கும் எதிராகக் கொடியவற்றைத் திட்டமிட்டுள்ளோரை என் வஞ்சகச் சொற்கள் காயப்படுத்திக் கொல்லச் செய்யும். 14நீரே கடவுள் என்றும், எல்லா ஆற்றலும் வலிமையும் கொண்ட கடவுள் என்றும், இஸ்ரயேல் இனத்தைப் பாதுகாப்பவர் உம்மைத் தவிர வேறு எவரும் இல்லை என்றும் உம் மக்களினம் முழுவதும், அதன் எல்லாக் குலங்களும் அறியச் செய்யும்.”


9:1 விப 30:7-8; திபா 141:2. 9:2 தொநூ 34:1-29. 9:6 யோபு 38:35; பாரூ 3:35.


அதிகாரம் 10

யூதித்து ஒலோபெரினிடம் செல்லுதல்


1இஸ்ரயேலின் கடவுளை நோக்கி யூதித்து கூக்குரலிடுவதை நிறுத்தி, தம் மன்றாட்டை முடித்துக்கொண்டார்.2தாம் விழுந்துகிடந்த இடத்திலிருந்து எழுந்தார்; தம் பணிப்பெண்ணை அழைத்தார்; தாம் ஓய்வுநாள்களிலும் திருநாள்களிலும் தங்கிவந்த வீட்டுக்கு இறங்கிச் சென்றார். 3தாம் அணிந்திருந்த சாக்கு உடையை அகற்றினார்; கைம் பெண்ணுக்குரிய ஆடைகளை களைந்தார்; நீராடி, விலையுயர்ந்த நறுமண எண்ணெய் பூசி, வாரி முடித்துத் தலைமீது மணிமுடியை வைத்துக் கொண்டார்; தம் கனவர் மனாசே இருந்தபோது தாம் உடுத்தியிருந்த பகட்டான ஆடைகளை அணிந்துகொண்டார். 4தம்மைக் காணும் ஆண்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் காலில் மிதியடி அணிந்தார்; சிலம்பு, கைவளை, மோதிரம், காதணி போன்ற தம் அணிகலன்கள் அனைத்தையும் அணிந்து தம்மைப் பெரிதும் அழகுபடுத்திக் கொண்டார். 5தம் பணிப்பெண்ணிடம் திராட்சை இரசம் நிறைந்த தோல்பையையும் எண்ணெய் அடங்கிய குப்பியையும் கொடுத்தார்; வறுத்த தானியம், உலர்ந்த பழங்கள், நல்ல அப்பங்கள் ஆகியவற்றை ஒரு பையிலிட்டு நிறைத்தார். அவை அனைத்தையும் சேர்த்துக் கட்டி, தூக்கிக் கொண்டு வருமாறு அவளிடம் கொடுத்தார்.

6அவர்கள் இருவரும் பெத்தூலியா நகர வாயிலை நோக்கிச் சென்றார்கள்; அங்கு ஊசியாவும் நகர மூப்பர்களான காபிரியும் கார்மியும் நின்று கொண்டிருக்கக் கண்டார்கள். 7இவர்கள் யூதித்தின் முகத் தோற்றம் வேறுபட்டியிருப்பதையும், வழக்கத்திற்கு மாறாக ஆடை அணிந்திருப்பதையும் கண்டார்கள். அவரது அழகைக் கண்டு மிகவும் வியந்து, 8“எங்கள் மூதாதையரின் கடவுள் உன்மீது அருள் பொழிவாராக; இஸ்ரயேல் மக்களின் மாட்சியும் எருசலேமின் மேன்மையும் விளங்க, உன் திட்டங்களை நிறைவேற்றுவாராக” என்று வாழ்த்தினார்கள்.

9யூதித்து கடவுளைத் தொழுதபின் அவர்களிடம், “நகர வாயிலை எனக்குத் திறந்துவிடுமாறு கட்டளையிடுங்கள். நீங்கள் என்னிடம் கூறியவற்றை நிறைவேற்ற நான் வெளியே செல்வேன்” என்று வேண்டினார். அவர் கேட்டுக் கொண்டபடி அவருக்கு வாயிலைத் திறந்துவிடுமாறு மூப்பர்கள் இளைஞர்களுக்குக் கட்டளையிட்டார்கள். 10இளைஞர்களும் அவ்வாறே செய்தார்கள். யூதித்து வெளியே செல்ல, அவருடைய பணிப்பெண்ணும் அவரோடு சென்றாள். மலையிலிருந்து கீழே இறங்கிப் பள்ளத்தாக்கைக் கடக்கும் வரை நகர மாந்தர் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். அதன்பின் அவரை அவர்களால் காண முடியவில்லை.

11பெண்கள் இருவரும் பள்ளத்தாக்கில் நேரே சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது அசீரியர்களின் சுற்றுக்காவல் படை யூதித்தை எதிர் கொண்டது. 12அவர்கள் யூதித்தைப் பிடித்து, “நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள்? எங்கிருந்து வருகிறாய்? எங்குச் செல்கிறாய்?” என வினவினார்கள். அதற்கு அவர், “நான் ஓர் எபிரேயப் பெண், ஆனால் எபிரேயர்களிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறேன்; எனெனில், அவர்கள் உங்களுக்கு இரையாகப் போகிறார்கள். 13நானோ உங்கள் படைத் தலைவர் ஒலோபெரினைப் பார்த்து அவரிடம் உண்மை நிலையை எடுத்துரைக்கச் சென்று கொண்டிருக்கிறேன். அவர் மலைப்பகுதி முழுவதையும் கைப்பற்றக்கூடிய வழியை அவருக்குக் காட்டுவேன். அவருடைய வீரர்களுள் யாரும் உயிரிழக்கமாட்டார்கள். அவர்களின் உடலுக்கோ உயிருக்கோ எவ்வகைத் தீங்கும் நேராது” என்றார். 14வீரர்கள் அவருடைய சொற்களைக் கேட்டு, அவரை உற்றுநோக்க, அவருடைய முகம் எழில்மிக்கதாய் அவர்களுக்குத் தோன்றியது. அப்பொழுது அவர்கள், 15“எங்கள் தலைவரைக் காண விரைவாகக் கீழே இறங்கி வந்ததால் நீ உயிர் பிழைத்தாய். நீ இப்போது அவரது கூடாரத்துக்குச் செல். எங்களுள் சிலர் உன்னை அழைத்துச் சென்று அவரிடம் ஒப்படைப்பர். 16நீ அவர்முன் நிற்கும்போது அஞ்சாதே. நீ எங்களிடம் சொன்னதையே அவரிடம் தெரிவி. அவர் உன்னை நல்ல முறையில் நடத்துவார்” என்றார்கள்.

17யூதித்தையும் அவருடைய பணிப்பெண்ணையும் ஒலோபெரினிடம் அழைத்துச்செல்லத் தங்களுள் நூறு வீரர்களைத் தெரிந்தெடுத்தார்கள். இவர்கள் பெண்கள் இருவரையும் ஒலோபெரினுடைய கூடாரத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

18யூதித்தின் வருகைப்பற்றிய செய்தி பாளையம் முழுவதும் பரவியதால், எங்கும் ஒரே பரபரப்பாய் இருந்தது. வீரர்கள் வந்து அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர் ஒலோபெரினின் கூடாரத்துக்கு வெளியே காத்திருந்தார். அவரைப் பற்றி அவனிடம் தெரிவித்தார்கள். 19அவர்கள் அவரது அழகைக் கண்டு வியந்தார்கள். அவரை முன்னிட்டு இஸ்ரயேல் மக்களைப்பற்றியும் வியந்தார்கள். “இத்தகைய பெண்களைத் தங்களிடையே கொண்டிருக்கும் இந்த மக்களை யாரே இழிவாகக் கருதுவர்! இவர்களுள் ஓர் ஆணைக்கூட உயிரோடு விட்டுவைப்பது நல்லதன்று. அவர்களை விட்டுவைத்தால், உலகம் முழுவதையும் வஞ்சித்துவிட இவர்களால் முடியும்” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.


யூதித்து-ஒலோபெரின் சந்திப்பு


20பிறகு ஒலோபெரினின் காவலர்களும் பணியாளர்கள் அனைவரும் வெளியே வந்து யூதித்தைக் கூடாரத்துக்குள் அழைத்துச் சென்றார்கள். 21அப்போது, பொன், மரகதம், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட கருஞ்சிவப்புத் துணியாலான மேற்கவிகையின்கீழ்த் தன் படுக்கையில் ஒலோபெரின் ஓய்வு கொண்டிருந்தான். 22அவன் யூதித்தைப்பற்றி அறிந்ததும், வெள்ளி விளக்குகள் முன்செல்லத் தன் கூடாரத்துக்குமுன் வந்து நின்றான். 23அவன் முன்னும் அவனுடைய பணியாளர்கள் முன்னும் யூதித்து வந்தபோது, அவரது முக அழகைக் கண்டு அனைவரும் வியந்தார்கள். அவரோ ஒலோபெரின் முன்னிலையில் குப்புற விழந்து வணங்கினார். அவனுடைய பணியாளர்கள் அவரைத் தூக்கிவிட்டார்கள்.


அதிகாரம் 11

1ஒலோபெரின் யூதித்தை நோக்கி, “பெண்ணே, துணிவுகொள்; அஞ்சாதே, அனைத்துலகுக்கும் மன்னராகிய நெபுகத்னேசருக்குப் பணிபுரிய முன்வரும் எவருக்கும் நான் ஒருபோதும் தீங்கிழைத்ததில்லை. 2இப்பொழுதும், மலைப்பகுதியில் வாழும் உன் இனத்தார் என்னைப் புறக்கணியாதிருந்தால் நான் அவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்க முனைந்திருக்கமாட்டேன். ஆனால், இதற்கெல்லாம் அவர்களே காரணம். 3இப்பொழுது சொல்; நீ ஏன் அவர்களிடமிருந்து தப்பியோடி எங்களிடம் வந்திருக்கிறாய்? பாதுகாப்புத் தேடித்தானே வந்துள்ளாய்? துணிவு கொள். இன்று இரவும் இனியும் உனக்கு ஆபத்து எதுவும் நேராது. 4எவரும் உனக்குத் தீங்கிழைக்கமாட்டார்கள். மாறாக, என் தலைவர் நெபுகத்னேசர் மன்னரின் பணியாளரை நடத்துவது போல, யாவரும் உன்னையும் நல்ல முறையில் நடத்துவார்கள்” என்றான்.

5இதற்கு யூதித்து அவனிடம் பின்வருமாறு கூறினார்: “உம் அடியவளின் சொற்களைத் தயை கூர்ந்து கேளும். உம் பணிப்பெண்ணாகிய என்னைப் பேசவிடும். இன்று இரவு என் தலைவரிடம் நான் பொய் சொல்லமாட்டேன்.6உம் பணிப்பெண்ணான என் சொற்படி நீர் நடந்தால், கடவுள் உமக்கு முழு வெற்றி அளிப்பார்; என் தலைவராகிய நீர் மேற்கொள்ளும் முயற்சிகளில் தோல்வியே காணமாட்டீர். 7அனைத்துலகின் மன்னரான நெபுகத்னேசரின் உயிர்மேல் ஆணை! எல்லா உயிர்களையும் நெறிப்படுத்த உம்மை அனுப்பியுள்ள அவருடைய ஆற்றல் மேல் ஆணை! மனிதர்கள் மட்டும் உம் வழியாக நெபுகத்னேசருக்குப் பணிவிடை செய்வதில்லை; காட்டு விலங்குகள், கால்நடைகள், வானத்துப் பறவைகள் ஆகியவையும் அவருக்கும் அவருடைய வீட்டார் அனைவருக்கும் பணிந்து உமது ஆற்றலால் உயிர் வாழ்கின்றன. 8உம்முடைய ஞானம் பற்றியும் திறமைகள் பற்றியும் நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். நாடு முழுவதிலும் நீரே தலைசிறந்தவர் என்றும், அறிவாற்றலில் வல்லவர் என்றும், போர்த் திறனில் வியப்புக்குரியவர் என்றும் உலகம் முழுவதும் அறியும்.

9“அக்கியோர் உமது ஆட்சிமன்றத்தில் அறிவித்தவற்றை நாங்களும் கேள்வியுற்றோம்; ஏனெனில், பெத்தூலியாவின் ஆள்கள் அவரை உயிரோடு விட்டுவைத்ததால், அவர் உம்மிடம் சொல்லியிருந்த அனைத்தையும் அவர்களுக்கும் அறிவித்தார். 10ஆதலால், தலைவர் பெருமானே, அவருடைய சொற்களைப் புறக்கணியாமல் உமது உள்ளத்தில் இருத்தும். எம் இனத்தார் தங்கள் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தாலொழிய அவர்களை யாரும் தண்டிக்க முடியாது; வாள்கூட அவர்களுக்கு தீங்கிழைக்க முடியாது. இது உண்மை.

11“இப்போது என் தலைவருக்குத் தோல்வியும் ஏமாற்றமும் ஏற்படாதவாறு சாவு அவர்களுக்கு நேரிடும். ஏனெனில் அவர்களுடைய பாவம் அவர்களை ஆட்கொண்டுவிட்டதால் அவர்கள் தீமை செய்யும்போதெல்லாம் தங்கள் கடவுளுக்குச் சினமூட்டுகிறார்கள். 12தங்கள் உணவுப்பொருள்கள் தீர்ந்துபோனதாலும் தண்ணீரெல்லாம் வற்றிப்போனதாலும் அவர்கள் தங்கள் கால்நடைகளைக் கொல்ல முடிவு செய்தார்கள்; மேலும், உண்ணக் கூடாது என்று கடவுள் தம் சட்டத்தால் விலக்கிவைத்திருந்தவற்றை உண்ணவும் உறுதிபூண்டார்கள். 13எருசலேமில் உள்ள எங்களின் கடவுள் திருமுன் பணியாற்றும் குருக்களுக்கென்று தூய்மைப்படுத்தி ஒதுக்கி வைக்கப்பட்ட தானியங்களின் முதற் பலன், திராட்சை இரசம், எண்ணெய் இவற்றில் பத்திலொரு பங்கு ஆகியவற்றைப் பொது மக்களுள் யாரும் தங்கள் கையால் தொடவும் கூடாது என்று திருச்சட்டம் விலக்கியிருந்தும், அவர்கள் அவற்றைத் தங்களுக்கே பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார்கள்.14எருசலேமில் வாழ்ந்த மக்களும் இவ்வாறு செய்து வந்தபடியால், ஆட்சி மன்றத்தின் இசைவு பெற்று வர எருசலேமுக்கு ஆளனுப்பியிருக்கிறார்கள். 15இசைவு பெற்று, அதைச் செயல்படுத்த அவர்கள் முற்படும் பொழுது, அழிவுறுமாறு அவர்கள் அன்றே உம்மிடம் கையளிக்கப்படுவார்கள். 16ஆகவே, உம் அடியவளாகிய நான் இவற்றையெல்லாம் அறிந்து, அவர்களிடமிருந்து தப்பியோடி வந்துள்ளேன். உம்மிடம் சேர்ந்து அரும்பெரும் செயலாற்றக் கடவுள் என்னை அனுப்பியுள்ளார். இவைபற்றிக் கேள்வியுறும் மாந்தர் எல்லாரும், ஏன் உலகம் முழுவதுமே மலைப்புறுவர்! 17உம் அடியாளாகிய நான் இறைப்பற்று உள்ளவள். இரவும் பகலும் விண்ணகக் கடவுளுக்கு ஊழியம் புரிந்து வருகிறேன். என் தலைவரே, இப்பொழுது உம்மிடம் தங்குவேன். ஆனால், இரவுதோறும் பள்ளத்தாக்குக்குச் சென்று கடவுளை மன்றாடுவேன். இஸ்ரயேலர் பாவம் செய்யும்போது அவர் எனக்கு அறிவிப்பார். 18நான் வந்து அதை உமக்கு அறிவிப்பேன். பின் உம் படை அனைத்தோடும் நீர் புறப்பட்டுச் செல்லலாம். உம்மை எதிர்ப்பதற்கு அவர்களுள் ஒருவராலும் முடியாது. 19நான் யூதேயா நாடு வழியாக எருசலேம் சேரும்வரை உம்மை வழி நடத்திச் செல்வேன். அங்கு உமக்கு ஓர் அரியணை அமைப்பேன். ஆயன் இல்லா ஆடுகள்போல் இருக்கும் அவர்களை நீர் துரத்தியடிப்பீர். ஒரு நாய்கூட உமக்கு எதிராக உறுமாது. முன்கூட்டியே எனக்கு அறிவிக்கப்பட்ட இவற்றை உமக்குத் தெரிவிக்கவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்.”

20யூதித்து சொன்னதைக் கேட்ட ஒலோபெரினும் அவனுடைய பணியாளர்களும் மகிழ்ச்சியுற்றார்கள். அவரது ஞானத்தைக் கண்டு வியந்து, 21“உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை உன்னைப் போல அழகும் ஞானம் நிறைந்த பேச்சும் கொண்ட ஒரு பெண் இல்லவே இல்லை” என்றார்கள்.

22பின் ஒலோபெரின் அவரிடம், “எங்கள் கைகளை வலிமைப்படுத்தவும், என் தலைவரை ஏளனம் செய்த மக்களை அழித்தொழிக்கவும் கடவுள் உன்னை அவர்களுக்கு முன்னதாக அனுப்பி வைத்தும் நல்லதே! 23நீ தோற்றத்தில் அழகுவாய்ந்தவள் மட்டுமல்ல, பேச்சில் ஞானம் மிக்கவளும் ஆவாய். நீ சொன்னபடி செய்வாயானால் உன் கடவுள் எனக்கும் கடவுளாவார். நேபுகத்னேசர் மன்னரின் அரண்மனையில் நீ வாழ்வாய். உலகமெங்கும் உனது புகழ் விளங்கும்” என்றான்.


11:9-10 யூதி 5:5-21.


அதிகாரம் 12

யூதித்தின் விழுமிய ஒழுக்கம்


1ஒலோபெரின் தன் வெள்ளிக் கலன்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு யூதித்தை அழைத்துவரக் கட்டளையிட்டான். தான் உண்டுவந்த அறுசுவை உணவையே அவள் உண்ணவும், தன் திராட்சை மதுவையே அவள் பருகவும் ஏற்பாடு செய்ய ஆணையிட்டான். 2அதற்கு யூதித்து, “இவற்றை நான் உண்ணமாட்டேன். அது குற்றமாகும். நான் கொண்டுவந்துள்ள உணவுப் பொருளே எனக்குப் போதும்” என்றார்.✠ 3ஒலோபெரின் அவரிடம், “நீ கொண்டு வந்துள்ள உணவுப்பொருள்கள் தீர்ந்து போகுமானால் அவை போன்ற உணவை உனக்குக் கொடு

4“என் தலைவரே, உம் உயிர்மேல் ஆணை! உம் அடியவள் என்னிடம் உள்ள உணவுப் பொருள்கள் தீர்ந்து போவதற்கு முன்னரே ஆண்டவர் தாம் திட்டமிட்டுள்ளதை என் வழியாய்ச் செயல்படுத்துவார்” என்றார் யூதித்து.

5பிறகு ஒலோபெரினின் பணியாளர்கள் யூதித்தைக் கூடாரத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். அவர் நள்ளிரவுவரை உறங்கினார்; வைகறை வேளையில் துயிலெழுந்தார். 6“உம் அடியவள் வெளியே சென்று இறைவனிடம் மன்றாடும்படி என் தலைவர் கட்டளையிடட்டும்” என்று யூதித்து ஒலோபெரினுக்குச் சொல்லியனுப்பினார். 7அவரைத் தடைசெய்யாமலிருக்க ஒலோபெரின் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான். யூதித்து மூன்று நாள் பாளையத்தில் தங்கியிருந்தார்; இரவுதோறும் பெத்தூலியாவின் பள்ளத்தாக்குக்குச் சென்று, பாளையத்தின் அருகில் இருந்த நீரூற்றில் குளிப்பார். 8குளித்து முடித்தபின் தம் இனத்து மக்களுக்கு வெற்றி அளிக்கும் வழியைத் தமக்குக் காட்டுமாறு இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை மன்றாடுவார். 9அவர் தூய்மை அடைந்தவராய்த் திரும்பிவந்து, மாலையில் உணவு அருந்தும்வரை கூடாரத்துக்குள்ளேயே தங்கியிருப்பார்.

ஒலோபெரின் அளித்த விருந்து


10நான்காம் நாள் ஒலோபெரின் தனக்கு நெருக்கமான பணியாளர்களுக்கு மட்டும் விருந்து அளித்தான்; படைத் தலைவர்களுள் ஒருவரையும் அழைக்கவில்லை. 11தன் உடைமைகள் அனைத்துக்கும் பொறுப்பாய் இருந்த பகோவா என்ற உயர் அலுவலரிடம்,⁕ “நீர் உடனே சென்று, உம் பொறுப்பில் உள்ள அந்த எபிரேயப் பெண் வந்து நம்மோடு உண்டு பருக இணங்கச் செய்யும். 12இத்தகைய பெண்ணுடன் நாம் உறவுகொள்ளாமல் விட்டுவிடுவது நமக்கு இழிவாகும். அவளை நாம் கவர்ந்திழுக்கத் தவறினால் அவள் நம்மை எள்ளி நகையாடுவாள்” என்றான்.

13ஒலோபெரினிடமிருந்து பகோவா வெளியேறி யூதித்திடம் சென்று, “என் தலைவர் முன்னிலையில் பெருமை அடையவும், எங்களோடு திராட்சை மது அருந்தி மகிழ்ந்திருக்கவும், நெபுகத்னேசரின் அரண்மனையில் பணியாற்றும் அசீரியப் பெண்களுள் ஒருத்தி போல மாறவும் இத்துணை அழகு வாய்ந்த பெண்மணியாகிய தாங்கள் தயங்காமல் வரவேண்டும்” என்றான்.

14யூதித்து அவனிடம், “என் தலைவர் சொன்னதைச் செய்ய மறுக்க நான் யார்? அவருக்கு விருப்பமானதை நான் உடனே செய்வேன். நான் இறக்கும் வரை அது எனக்கு மகிழ்ச்சி தரும்” என்றார்.

15ஆகவே யூதித்து எழுந்து சிறப்பாடை அணிந்து, பெண்களுக்குரிய எல்லா அணிகலன்களாலும் தம்மை அழகுபடுத்திக்கொண்டார். அவருடைய பணிப்பெண் அவருக்குமுன்னே சென்றாள்; யூதித்து நாள்தோறும் உணவு அருந்துகையில் விரித்து அமர்வதற்காகப் பகோவா கொடுத்திருந்த கம்பளத்தை ஒலேபெரினுக்கு முன்னிலையில் பணிப்பெண் தரையில் விரித்தாள். 16பின் யூதித்து உள்ளே சென்று அதன்மேல் அமர்ந்தார். ஒலேபெரினுடைய உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது; அவனது மனம் கிளர்ந்தெழுந்தது; அவரைக் கண்ட நாள்முதலே அவரோடு உறவு கொள்ள வாய்ப்புத் தேடியிருந்ததால் இப்பொழுது அவரை அடைய அவன் ஏக்கம் கொண்டான். 17எனவே ஒலோபெரின் அவரிடம், “மது அருந்தி எங்களுடன் களிப்புற்றிரு” என்றான்.

18அதற்கு யூதித்து, “என் தலைவரே! நான் மகிழ்ச்சியோடு மது அருந்துவேன்; ஏனெனில் இந்நாள் என் வாழ்வின் பொன்னாளாகும்” என்றார். 19தம் பணிப்பெண் சமைத்திருந்ததை எடுத்து அவன் முன்னிலையில் உண்டு பருகினார். 20ஒலோபெரின் அவரிடம் தன் மனத்தைப் பறிகொடுத்து, மட்டுமீறிக் குடித்தான். பிறந்தநாள் முதல் அன்றுபோல அவன் என்றுமே குடித்ததில்லை.


12:2 தோபி 1:11; தானி 1:8; யூதி 10:5.


12:11 ‘அலி’ என்றும் மொழிபெயர்க்கலாம்.


அதிகாரம் 13

ஒலோபெரினின் தலையை யூதித்து கொய்தல்


1பொழுது சாய்ந்தபோது ஒலோபெரினின் பணியாளர்கள் விரைவாக வெளியேறினார்கள். பகோவா அலுவலர்களைத் தன் தலைவன் முன்னிலையிலிருந்து வெளியே அனுப்பிவிட்டு, கூடாரத்துக்கு வெளியிலிருந்து தாழிட்டான். நீண்ட நேரம் நீடித்த விருந்தினால் களைப்புற்றிருந்ததால் அவர்களும் படுக்கச் சென்றார்கள். 2யூதித்து கூடாரத்திற்குள் தனிமையாய் விடப்பட்டார். மது மயக்கத்தில் இருந்த ஒலோபெரின் தன் படுக்கைமேல் விழுந்து கிடந்தான்.

3யூதித்து தம் பணிப்பெண்ணிடம் படுக்கையறைக்கு வெளியே நிற்கும்படியும், நாள்தோறும் செய்துவந்தது போலத் தாம் வெளியே வரும்வரை காத்திருக்கும்படியும் கூறினார்; வேண்டுதல் செய்யத் தாம் புறப்பட விருப்பதாக அவளிடம் சொன்னார்; இதையே பகோவாவிடமும் தெரிவித்திருந்தார்.4அனைவரும் அங்கிருந்து அகன்றனர்; சிறியோர்முதல் பெரியோர்வரை யாருமே படுக்கையறையில் விடப்படவில்லை. ஒலோபெரினின் படுக்கை அருகே யூதித்து நின்றுகொண்டு, “ஆண்டவரே, எல்லாம் வல்ல கடவுளே, எருசலேமின் மேன்மைக்காக இவ்வேளையில் நான் செய்யவிருப்பதைக் கண்ணோக்கும். 5உமது உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேலுக்குத் துணை புரியவும், எங்களுக்கு எதிராக எழுந்துள்ள பகைவர்களை அழிக்கும்படி நான் செய்த சூழ்ச்சியைச் செயல்படுத்தவும் இதுவே தக்க நேரம்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

6பிறகு, ஒலோபெரினின் தலைப்பக்கம் இருந்த தூணுக்குச் சென்று, அதில் மாட்டியிருந்த அவனது வாளை யூதித்து எடுத்தார்; 7அவனது படுக்கையை அணுகி, அவனுடைய தலைமுடியைப் பிடித்துக்கொண்டு, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வலிமை அளித்தருளும்” என்று வேண்டினார்; 8பிறகு தம் வலிமையெல்லாம் கொண்டு அவனது கழுத்தை இரு முறை வெட்டித் தலையைத் துண்டித்தார்; 9அவனது உடலைப் படுக்கையிலிருந்து கீழே தள்ளினார்; மேற்கவிகையைத் தூண்களிலிருந்து இறக்கினார்; சிறிது காலம்தாழ்த்தி வெளியே சென்று, ஒலோபெரினின் தலையைத் தம் பணிப்பெண்ணிடம் கொடுத்தார்.


யூதித்து பெத்தூலியாவுக்குத் திரும்புதல்


10பணிப்பெண் ஒலோபெரினின் தலையைத் தன் உணவுப் பைக்குள் வைத்துக்கொண்டாள். பிறகு அவர்கள் இருவரும் தங்கள் வழக்கம்போல வேண்டுதல் செய்ய ஒன்றாய் வெளியேறினார்கள்; பாளையத்தின் வழியாய்ச் சென்று, பள்ளத்தாக்கைச் சுற்றி, மலைமீது ஏறிப் பெத்தூலியாவுக்குப் போய், அதன் வாயிலை அடைந்தார்கள். 11வாயிலில் காவல் புரிந்து கொண்டிருந்தவர்களை நோக்கி யூதித்து தொலையிலிருந்தே, “திறங்கள், வாயிலைத் திறங்கள். கடவுள், நம் கடவுள் நம்மோடு இருக்கிறார்; அவர் இஸ்ரயேலருக்குத் தம் வலிமைமையும் நம் பகைவர்களுக்கு எதிராய்த் தம் ஆற்றலையும் இன்று வெளிப்படுத்தியுள்ளார்” என்று கத்தினார்.

12நகர மக்கள் யூதித்துடைய குரலைக் கேட்டபோது, வாயிலுக்கு விரைவாக இறங்கிவந்து மூப்பர்களை அழைத்தார்கள். 13சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும் சேர்ந்து ஓடிவந்தார்கள். யூதித்து வந்தசேர்ந்ததை அவர்களால் நம்ப முடியவில்லை. அவர்கள் வாயிலைத் திறந்து, அப்பெண்களை வரவேற்றார்கள்; தீ மூட்டி ஒளி உண்டாக்கி அவர்களைச் சூழ்ந்து நின்றார்கள். 14யூதித்து அவர்களிடம் உரத்தகுரலில், “கடவுளை வாழ்த்துங்கள்; போற்றுங்கள், கடவுளைப் போற்றுங்கள். இஸ்ரயேல் இனத்தார் மீது அவர் தம் இரக்கத்தைப் பொழிந்துள்ளார். நம் பகைவர்களை என் கையால் இன்று இரவே அழித்துவிட்டார்” என்று அறிவித்தார்.

15பிறகு பையிலிருந்து ஒலோபெரினின் தலையை வெளியே எடுத்து அவர்களிடம் காட்டி, “இதோ, அசீரியப் படைத் தலைவன் ஒலோபெரினின் தலை! இதோ, மேற்கவிகை! இதன்கீழ்தான் அவன் குடிமயக்கத்தில் விழுந்து கிடந்தான். ஆண்டவர் ஒரு பெண்ணின் கையால் அவனை வெட்டி வீழ்த்தினார். 16ஆண்டவர்மேல் ஆணை! நான் சென்ற பாதையில் என்னைக் காப்பாற்றியவர் அவரே. என் முகத்தோற்றமே அவனை வஞ்சித்து அழித்தது. நான் கறைபடவோ இழிவுறவோ அவன் என்னுடன் பாவம் செய்யவில்லை” என்றார்.

17மக்கள் யாவரும் பெரிதும் மலைத்துப்போயினர்; தலை குனிந்து கடவுளைத் தொழுது, “எங்கள் கடவுளே, நீர் போற்றி! நீரே இன்று உம் மக்களின் பகைவர்களை அழித்தொழித்தீர்” என்று ஒருவாய்ப்படப் போற்றினர்.

18பின்னர் ஊசியா யூதித்திடம் “மகளே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும்விட நீ உன்னத கடவுளின் ஆசி பெற்றவள். விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் போற்றி! அவரே நம் பகைவர்களின் தலைவனது தலையை வெட்டி வீழ்த்த உன்னை வழிநடத்தியிருக்கிறார். 19கடவுளின் ஆற்றலை நினைவுகூரும் மாந்தரின் உள்ளத்திலிருந்து உனது நம்பிக்கை ஒருபோதும் நீங்காது. 20இதனால் இறவாப் புகழ் பெறக் கடவுள் உனக்கு அருள்வாராக; நலன்களால் உன்னை நிரப்புவாராக; ஏனெனில், நம் மக்களினத்தார் ஒடுக்கப்பட்டபோது நீ உன் உயிரைப் பணயம் வைத்தாய்; நம் கடவுள் திருமுன் நேர்மையாக நடந்து, நமக்கு வரவிருந்த பேரழிவைத் தடுத்துவிட்டாய்” என்றார். அதற்கு மக்கள் அனைவரும், “அவ்வாறே ஆகட்டும், அவ்வாறே ஆகட்டும்” என்று உரைத்தனர்.


அதிகாரம் 14

அசீரியர்மீது இஸ்ரயேலரின் தாக்குதல்


1பிறகு யூதித்து மக்களிடம் பின்வருமாறு கூறினார்: “சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். இத்தலையை எடுத்துக்கொண்டு போய் உங்களது நகர மதில்மேல் தொங்கவிடுங்கள். 2பொழுது விடிந்து கதிரவன் எழுந்தவுடன், நீங்கள் அனைவரும் படைக்கலன்களை எடுத்துக்கொள்ளுங்கள்; உங்களுள் வலிமை படைத்த அனைவரும் புறப்பட்டு, தங்களுக்கு ஒரு படைத்தலைவனை அமர்த்திக் கொண்டு, சமவெளியில் உள்ள அசீரியரின் முன்னணிக் காவலரைத் தாக்க இறங்குவதுபோல நகரைவிட்டு வெளியேறுங்கள்; ஆனால் கீழே இறங்கிச் செல்ல வேண்டாம். 3உடனே அசீரியக் காவலர்கள் தங்களுடைய படைக்கலங்களை எடுத்துக்கொண்டு தங்கள் பாளையத்துக்குள் நுழைவார்கள்; தங்கள் படைத் தலைவர்களை எழுப்புவார்கள். இவர்கள் ஒலோபெரினின் கூடாரத்துக்கு ஓடுவார்கள்; ஆனால், அவனைக் காணமாட்டார்கள். ஆகவே அவர்கள் பேரச்சத்தால் பீடிக்கப்பட்டு உங்களிடமிருந்து தப்பியோடுவார்கள். 4அப்பொழுது நீங்களும் இஸ்ரயேல் நாட்டு எல்லைகளில் வாழும் அனைவரும் அவர்களைத் துரத்திச் சென்று வழியிலேயே அவர்களை வெட்டி வீழ்த்துங்கள். 5இதைச் செய்யுமுன் அம்மோனியராகிய அக்கியோரை என்னிடம் அழைத்து வாருங்கள். இஸ்ரயேல் இனத்தாரைப் புறக்கணித்து, அக்கியோர் சாகும்படி நம்மிடம் அனுப்பிவைத்தவனை அவர் பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும்.”

6ஆகவே மக்கள் ஊசியா வீட்டிலிருந்து அக்கியோரை அழைத்து வந்தார்கள். அவரும் வந்து மக்கள் கூட்டதிலிருந்த ஓர் ஆள் கையில் ஒலோபெரினின் தலையைக் கண்டவுடன் மயங்கிக் குப்புற விழுந்தார். 7மக்கள் அவரைத் தூக்கிவிட, அவர் யூதித்தின் காலடியில் விழுந்து வணங்கி அவரிடம், “யூதாவின் கூடாரங்களிலெல்லாம் நீர் புகழப் பெறுவீராக! எல்லா நாடுகளிலும் உமது பெயரைக் கேள்விப்படுவோர் அனைவரும் அச்சம் கொள்வர். 8இந்நாள்களில் நீர் செய்த அனைத்தையும் இப்போது எனக்கு எடுத்துச்சொல்லும்” என்று வேண்டினார். எனவே யூதித்து தாம் வெளியேறிச் சென்ற நாள்முதல் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த அந்நேரம்வரை ஆற்றியிருந்த செயல்கள் அனைத்தையும் மக்கள் முன்னிலையில் அக்கியோரிடம் விரித்துரைத்தார்.

9யூதித்து பேசி முடித்ததும் மக்கள் பேரொலி எழுப்பினார்கள். அவர்களது நகரெங்கும் மகிழ்ச்சிக் குரல் ஒலித்தது. 10இஸ்ரயேலரின் கடவுள் செய்திருந்த அனைத்தையும் அக்கியோர் கண்டு அவர்மீது ஆழ்ந்த நம்பிக்கைகொண்டார்; விருத்தசேதனம் செய்துகொண்டு இஸ்ரயேல் இனத்தோடு தம்மை இணைத்துக்கொண்டார்.

11பொழுது புலர்ந்தவுடன் இஸ்ரயேலர் ஒலோபெரினின் தலையை மதில்மேல் தொங்கவிட்டார்கள்; பிறகு எல்லாரும் தங்கள் படைக்கலங்களை எடுத்துக் கொண்டு, அணி அணியாக மலைப்பாதைகளில் இறங்கிச் சென்றார்கள். 12அசீரியர்கள் இவர்களைக் கண்ணுற்றபோது தங்கள் தலைவர்களுக்கு ஆளனுப்பினார்கள்; இவர்கள் படைத்தலைவர்களிடமும் ஆயிரத்தவர் தலைவர்களிடமும் தங்கள் ஆளுநர்கள் அனைவரிடமும் சென்றார்கள்; 13ஒலோபெரினின் கூடாரத்துக்குச் சென்று அவனுடைய உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாய் இருந்தவனிடம், “நம் தலைவரை எழுப்பி விடும். அந்த அடிமைகள் முழுதும் அழிந்துபோகும்படி நம்மேல் போர்தொடுக்கத் துணிந்து கீழே இறங்கி வருகிறார்கள்” என்று கூறினார்கள்.

14ஆகவே பகோவா உள்ளே சென்று, கூடாரத்தின் கதவைத் தட்டினான்; ஏனெனில், ஒலோபெரின் யூதித்துடன் உறங்குவதாக நினைத்துக்கொண்டிருந்தான். 15ஒரு மறுமொழியும் வராததால், அவன் கதவைத் திறந்து படுக்கையறைக்குள் சென்றான். கட்டில் அருகே ஒலோபெரின் தரையில் இறந்து கிடந்ததையும் அவன் தலை துண்டிக்கப் பட்டிருந்ததையும் கண்டான்; 16உடனே பெருங் கூச்சலிட்டான்; அழுது, புலம்பி, உரக்க அலறித் தன் ஆடையைக் கிழித்துக் கொண்டான். 17பிறகு யூதித்து தங்கியிருந்த கூடாரத்துக்குள் நுழைந்தான்; அங்கு அவரைக் காணாததால் வெளியே மக்களிடம் ஓடிவந்து உரத்த குரலில், 18“அந்த அடிமைகள் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். ஓர் எபிரேயப் பெண் நெபுகத்னேசர் மன்னரின் குடும்பத்துக்கே இழிவு இழைத்துவிட்டாள். இதோ, ஒலோபெரின் தரையில் கிடக்கிறார். அவரது தலையைக் காணோம்!” என்று கத்தினான்.

19அசீரியப் படைத்தலைவர்கள் இதைப் பற்றிக் கேள்விப்பட்டபோது தங்கள் மேலாடையைக் கிழித்துக்கொண்டார்கள்; பெரிதும் கலக்கமுற்றார்கள். அவர்களுடைய அழுகைக் குரலும் பெரும் கூச்சலும் பாசறையெங்கும் ஒலித்தன.


அதிகாரம் 15

இஸ்ரயேலரின் வெற்றி


1கூடாரங்களில் இருந்தவர்கள் நிகழ்ந்தது பற்றிக் கேள்விப்பட்டுத் திகைத்துப்போனார்கள். 2அச்சமும் நடுக்கமும் அவர்களை ஆட்கொள்ள, அவர்கள் எல்லாரும் ஒருவர் மற்றவருக்காகக் காத்திராமல் சிதறி ஓடினார்கள்; சமவெளியிலும் மலையிலும் இருந்த பாதைகளிலெல்லாம் தப்பியோடினார்கள். 3பெத்தூலியாவைச் சுற்றி இருந்த மலைப்பகுதியில் பாசறை அமைத்திருந்தவர்களும் வெருண்டோடினார்கள். இஸ்ரயேல் மக்களுள் படைவீரராய் இருந்த அனைவரும் அவர்கள் மேல் பாய்ந்து தாக்கினர். 4பெத்துமஸ்தாயிம், பேபாய், கோபா, கோலா ஆகிய நகரங்களுக்கும், இஸ்ரயேலின் எல்லா எல்லைகளுக்கும் ஊசியா ஆளனுப்பி, நிகழ்ந்தவற்றைத் தெரியப்படுத்தினார்; மேலும் அவர்கள் அனைவரும் தங்களுடைய பகைவர்கள்மேல் பாய்ந்து அழித்தொழிக்கத் தூண்டினார். 5இஸ்ரயேல் மக்கள் அனைவரும் இதைக் கேள்வியுற்று ஒன்றுசேர்ந்து எதிரிகள்மீது பாய்ந்து, கோபாவரையிலும் துரத்தித் தாக்கினார்கள். அவ்வாறே எருசலேம் மக்களும் மலைநாட்டு மக்கள் அனைவரும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள்; ஏனெனில், பகைவர்களது பாசறையில் நிகழ்ந்தவற்றை அவர்கள் அறிந்திருந்தார்கள். கிலயாத்தினரும் கலிலேயரும் பகைவர்களது படையைப் பக்கவாட்டில் தாக்கித் தமஸ்குவையும் அதன் எல்லைகளையும் தாண்டி அவர்களைப் படுகொலை செய்தார்கள்.

6பெத்தூலியாவில் எஞ்சியிருந்தோர் அசீரியரின் பாளையத்தைத் தாக்கினர்; அதைச் சூறையாடிப் பெருஞ்செல்வங்களைச் சேர்த்துக் கொண்டனர். 7படுகொலைக்குப்பின் இஸ்ரயேலர் திரும்பியபோது எஞ்சியிருந்தவற்றைக் கைப்பற்றினர். மலையிலும் சமவெளியிலும் இருந்த ஊர்களிலும் நகர்களிலும் வாழ்ந்த மக்கள் அங்கு இருந்த மிகுதியான பொருள்களைக் கைப்பற்றினார்கள்.

வெற்றி விழா


8இஸ்ரயேலுக்கு ஆண்டவர் செய்திருந்த நன்மைகளை நேரில் காணவும், யூதித்தைச் சந்தித்துப் பாராட்டவும், தலைமைக் குரு யோவாக்கிமும் எருசலேமில் வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்களின் ஆட்சி மன்ற உறுப்பினர்களும் வந்தார்கள். 9அவர்கள் அனைவரும் யூதித்திடம் வந்து ஒருமித்து அவரை வாழ்த்தினார்கள். “நீரே எருசலேமின் மேன்மை; நீரே இஸ்ரயேலின் பெரும் மாட்சி; நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே! 10இவற்றையெல்லாம் உம் கையாலேயே ஆற்றியிருக்கிறீர்; இஸ்ரயேலுக்கு நன்மைகள் செய்திருக்கிறீர். இவைகுறித்துக் கடவுள் மகிழ்ச்சி அடைந்துள்ளார். எல்லாம் வல்ல ஆண்டவர் எக்காலத்துக்கும் உமக்கு ஆசி வழங்குவாராக” என்று வாழ்த்தினார்கள். மக்கள் அனைவரும், “அவ்வாறு ஆகட்டும்” என்றார்கள்.

11மக்கள் அனைவரும் முப்பது நாளாக எதிரிகளின் பாளையத்தைச் சூறையாடினார்கள். ஒலோபெரினின் கூடாரம், வெள்ளித் தட்டுகள், படுக்கைகள், கிண்ணங்கள், மற்றப் பொருள்கள் அனைத்தையும் யூதித்துக்குக் கொடுத்தார்கள். அவர் இவற்றை வாங்கித் தம் கோவேறு கழுதைமேல் ஏற்றினார்; தம் வண்டிகளைப் பூட்டி அவற்றிலும் பொருள்களைக் குவித்துவைத்தார். 12யூதித்தைக் காண இஸ்ரயேல் பெண்கள் அனைவரும் கூடிவந்து அவரை வாழ்த்தினார்; அவர்களுள் சிலர் அவரைப் போற்றி நடனம் ஆடினர். யூதித்து பூச்செண்டுகளை எடுத்துத் தம்முடன் இருந்த பெண்களுக்கு வழங்கினார். 13அவரும் அவருடன் இருந்தவர்களும் ஒலிவக் கிளைகளால் முடி செய்து அணிந்து கொண்டார்கள். எல்லா மக்களுக்கும் முன்பாக யூதித்து சென்று, எல்லாப் பெண்களையும் நடனத்தில் வழிநடத்தினார். இஸ்ரயேலின் ஆண்கள் அனைவரும் படைக்கலங்கள் தாங்கியவர்களாய் மாலைகள் சூடிக்கொண்டு, புகழ்ப்பாக்களைப் பாடியவண்ணம் பின்சென்றார்கள்.

யூதித்து பாடிய புகழ்ப்பா


14இஸ்ரயேலர் அனைவர் முன்னும் யூதித்து பின்வரும் நன்றிப் பாடலைப் பாடத் தொடங்கினார். மக்கள் அனைவரும் அவரோடு சேர்ந்து உரத்த குரலில் பாடினார்கள்.


அதிகாரம் 16

1யூதித்து பாடிய பாடல்: “என்
கடவுளுக்கு முரசு கொட்டுங்கள்;*
ஆண்டவருக்கு மேள தாளங்களோடு
பண் இசையுங்கள்.
அவருக்குத் திருப்பாடலும்
புகழ்ப் பாவும்** இசையுங்கள்;
அவரது பெயரைப் புகழ்ந்தேத்துங்கள்.✠✠✠

2ஆண்டவர்
போர்களை முறியடிக்கும் கடவுள்;
மக்கள் நடுவே
தம் கூடாரத்தை அமைத்துள்ளார்;⁕
துரத்துவோரிடமிருந்து
என்னை அவர் விடுவித்தார்.

3அசீரியன்
வடக்கு மலைகளிலிருந்து வந்தான்;
எண்ணற்ற படைவீரர்களுடன் வந்தான்.
அவர்களது பெருந்திரள்
ஓடைகளைத் தடுத்து நிறுத்தியது.
அவர்களுடைய குதிரைப்படை
மலைகளெங்கும் பரவியிருந்தது.

4“உன் எல்லைகளைத்
தீக்கிரையாக்குவேன்;
உன் இளைஞர்களை
வாளுக்கிரையாக்குவேன்;
உன் குழந்தைகளைத்
தரையில் அடித்துக் கொல்வேன்;
உன் சிறுவர்களைக்
கவர்ந்து செல்வேன்;
உன் கன்னிப் பெண்களைக்
கொள்ளைப் பொருளாகக்
கொண்டுபோவேன்” என்று
அசீரியன் அச்சுறுத்தினான்.

5எல்லாம் வல்ல ஆண்டவரோ
ஒரு பெண்ணின் கையால்
அவர்களை முறியடித்தார்

6வலிமைவாய்ந்த அவனை
இளைஞர் வெட்டி வீழ்த்தவில்லை;
அரக்கர்கள்⁕
அடித்து நொறுக்கவில்லை;
உயரமான இராட்சதர்கள்
தாக்கவில்லை;
ஆனால் மெராரியின் மகள் யூதித்து
தம் முக அழகால்
அவனை ஆற்றல் இழக்கச் செய்தார்.

7இஸ்ரயேலில் துயருற்றோரைத்
தூக்கிவிட அவர்
கைம்பெண்ணுக்குரிய தம்
ஆடையைக் களைந்தார்;

8தம் முகத்தில்
நறுமண எண்ணெய் பூசிக்கொண்டார்;
தலையை வாரி முடித்து
மணி முடியைச் சூடிக்கொண்டார்.
அவனை மயக்க
மெல்லிய உடையை
அணிந்து கொண்டார்.

9அவரது காலணி
அவனது கண்ணைக் கவர்ந்தது;
அவரது அழகு
அவனது உள்ளத்தைக்
கொள்ளை கொண்டது.
அவரது வாள்
அவனது கழுத்தைத் துண்டித்தது.

10பாரசீகர் அவரது
துணிவைக் கண்டு நடுங்கினர்;
மேதியர் அவரது
மனவுறுதியைப் பார்த்துக் கலங்கினர்.

11தாழ்வுற்ற என் மக்கள்
முழக்கமிட்டபோது
பகைவர்கள் அஞ்சினார்கள்;
வலிமை இழந்த
என் மக்கள் கதறியபோது
அவர்கள் நடுங்கினார்கள்;
என் மக்கள் கூச்சலிட்டபோது
அவர்கள் புறங்காட்டி ஓடினார்கள்.

12பணிப்பெண்களின் மைந்தர்கள்
அவர்களை ஊடுருவக் குத்தினார்கள்;
தப்பியோடுவோரின் பிள்ளைகளுக்கு
இழைப்பதுபோல்
அவர்களைக் காயப்படுத்தினார்கள்;
என் ஆண்டவரின் படையால்
அவர்கள் அழிந்தார்கள்.

13என் கடவுளுக்குப்
புதியதொரு பாடல் பாடுவேன்;
ஆண்டவரே, நீர் பெரியவர்,
மாட்சிமிக்கவர்;
வியத்தகு வலிமை கொண்டவர்;
எவராலும் வெல்ல முடியாதவர்.✠

14உம் படைப்புகள் அனைத்தும்
உமக்கே பணிபுரியட்டும்;
நீர் ஆணையிட்டீர்;
அவை உண்டாயின.
உம் ஆவியை அனுப்பினீர்;
அவை உருவாயின.
உமது குரலை எதிர்த்து நிற்பவர்
எவருமில்லை.✠

15மலைகளின் அடித்தளங்களும்
நீர்த்திரளும் நடுங்குகின்றன;
பாறைகள் உம் திருமுன்
மெழுகுபோல் உருகுகின்றன.
உமக்கு அஞ்சுவோருக்கோ
நீர் இரக்கம் காட்டுகின்றீர்.

16நறுமணம் வீசும் பலியெல்லாம்
உமக்குப் பெரிதல்ல;
எரிபலியின் கொழுப்பெல்லாம்
உமக்குச் சிறிதே.
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே
எக்காலமும் பெரியோர்.

17என் இனத்தாரை
எதிர்த்தெழுகின்ற நாட்டினருக்கு
ஐயோ கேடுவரும்.
எல்லாம் வல்ல ஆண்டவர்
தீர்ப்பு நாளில்
அவர்களைப் பழிவாங்குவார்;
அவர்களது சதைக்குள்
நெருப்பையும் புழுக்களையும்
அனுப்புவார்;
அவர்கள் துயருற்று
என்றும் அழுவார்கள்.”


18மக்கள் எருசலேமுக்குப்போய்ச் சேர்ந்தவுடன் கடவுளை வழிபட்டார்கள். தங்களைத் தூய்மைப்படுத்தியபின் எரிபலிகளையும் தன்னார்வப் படையல்களையும் காணிக்கைகளையும் செலுத்தினார்கள். 19மக்கள் தமக்குக் கொடுத்திருந்த ஒலோபெரினின் கலன்கள் அனைத்தையும் யூதித்து கடவுளுக்கு உரித்தாக்கினார்; அவனுடைய படுக்கை அறையிலிருந்து தமக்கென்று எடுத்து வைத்திருந்த மேற்கவிகையையும் கடவுளுக்கு நேர்ச்சையாக்கினார். 20மக்கள் எருசலேமில் திருவிடத்துக்குமுன் மூன்று மாதமாக விழா கொண்டாடினார்கள். யூதித்தும் அவர்களுடன் தங்கியிருந்தார்.


யூதித்தின் புகழ்


21பிறகு ஒவ்வொருவரும் அவரவர் தம் இல்லத்துக்குத் திரும்பினர். யூதித்து பெத்தூலியாவுக்குச் சென்று தம் உடைமையை வைத்து வாழ்க்கை நடத்தினார்; தம் வாழ்நாள் முழுவதும் நாடெங்கும் புகழ்பெற்றிருந்தார். 22பலர் அவரை மணந்துகொள்ள விரும்பினர்; ஆனால் அவருடைய கணவர் மனாசே இறந்து தம் மூதாதையரோடு துயில் கொண்டபின் தம் வாழ்நாள் முழுதும் வேறு யாரையும் அவர் மணமுடிக்கவில்லை. 23அவருடைய புகழ் ஓங்கி வளர்ந்தது. அவர் தம் கணவரின் இல்லத்தில் நூற்றைந்து வயதுவரை உயிர் வாழ்ந்தார்; தம் பணிப்பெண்ணுக்கு உரிமை கொடுத்து அனுப்பிவைத்தார். பெத்தூலியாவில் உயிர் துறந்தார். அவர் கணவர் மனாசேயின் குகையில் அவரை அடக்கம் செய்தனர். 24இஸ்ரயேல் இனத்தார் அவருக்காக ஏழுநாள் துயரம் கொண்டாடினர். அவர் தாம் இறப்பதற்கு முன்பே தம் கணவர் மனாசேயின் நெருங்கிய உறவினர், தம் நெருங்கிய உறவினர் ஆகிய அனைவருக்கும் தம் உடைமைகளைப் பகிர்ந்து கொடுத்திருந்தார்


. 25யூதித்தின் எஞ்சிய வாழ்நாளின் போதும் அவர் இறந்து நெடுங்காலத்திற்குப்பின்னரும் எவரும் இஸ்ரயேல் மக்களை மீண்டும் அச்சுறுத்தவில்லை.


16:1 திபா 150:4-5. 16:13 திபா 96:1; 144:9. 16:14 திபா 33:9; 104:30; 148:5.


16:1 * ‘முரசு கொட்டத் தொடங்குங்கள்’ என்பது மூலப் பாடம்.. 16:1 ** ‘அவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்’ என்று சில சுவடிகளில் காணப்படுகிறது. காண் 16:13. 16:2 ‘தம் கூடாரத்துக்குள் என்னை அழைத்து வந்தார்’ என்றும் மொழிபெயர்க்கலாம். 16:6 கிரேக்க பாடம்: ‘தீத்தானின் புதல்வர்கள்