மீக்கா


மீக்கா
முன்னுரை

மீக்கா இறைவாக்கினர் யூதாவில் உள்ள நாட்டுப்புற நகர் ஒன்றில் தோன்றியவர். ஓசேயா, எசாயா ஆகியோரின் காலத்தவர்.

இஸ்ரயேல் மக்கள் நேர்மையற்று நடந்தனர்; அநீதிக்குத் தலை வணங்கினர்; தீச்செயல்கள் பல புரிந்தனர்; ஏழைகளை ஏமாற்றினர்; அனாதைகளை நசுக்கினர். தென்னாட்டினரான யூதா மக்களும் இதுபோன்றே வாழ்ந்து வந்தனர். எனவே இஸ்ரயேல் மக்களுக்கு ஆமோஸ் இறைவாக்கினர் முன்னறிவித்த தண்டனைத் தீர்ப்பு தம் நாட்டினர் மீதும் வரும் என்று மீக்காவும் முன்னறிவித்தார். அதே நேரத்தில் மீட்புப் பற்றியும் முன்னறிவித்தார்.


நூலின் பிரிவுகள்


1. இஸ்ரயேல்மீது தண்டனைத் தீர்ப்பு 1:1 - 3:12
2. மீட்பும் அமைதியும் 4:1 - 5:15
3. எச்சரிக்கையும் வருங்கால நம்பிக்கையும் 6:1 - 7:20

அதிகாரம் 1

1யூதாவின் அரசர்களான யோத்தாம், ஆகாசு, எசேக்கியா ஆகியவர்களின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்காவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: அவர் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி இதுவே:✠


சமாரியாவையும் எருசலேமையும் பற்றிய ஓலம்


2மக்களினங்களே,
நீங்கள் அனைவரும் கேளுங்கள்;
நிலவுலகே, அதில் உள்ளவையே,
செவிகொடுங்கள்.
தலைவராகிய ஆண்டவர்
தம் திருக்கோவிலிருந்து
உங்களுக்கு எதிராகச்
சான்றுபகரப் போகிறார்.
3இதோ! ஆண்டவர்
தாம் தங்குமிடத்திலிருந்து
புறப்பட்டு வருகின்றார்;
அவர் இறங்கிவந்து
நிலவுலகின் மலையுச்சிகள்
மிதிபட நடப்பார்.
4நெருப்பின்முன் வைக்கப்பட்ட
மெழுகுபோலவும்,
பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும்
வெள்ளம்போலவும்,
அவர் காலடியில்
மலைகள் உருகிப்போகும்;
பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.
5யாக்கோபின் குற்றத்தை முன்னிட்டும்
இஸ்ரயேல் குடும்பத்தாரின்
பாவங்களை முன்னிட்டுமே
இவை எல்லாம் நேரிடும்.
யாக்கோபின் குற்றத்திற்குக்
காரணம் யாது?
சமாரியா அன்றோ!
யூதாவின் தொழுகைமேடுகளுக்குக்
காரணம் யாது?
எருசலேம் அன்றோ!
6ஆதலால், சமாரியாவைப்
பாழடைந்த மண்மேடாகவும்
திராட்சை நடும் தோட்டமாகவும்
செய்திடுவேன்;
அதன் கற்களைப்
பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு,
அதன் அடித்தளங்கள்
வெளியிலே தெரியும்படி செய்வேன்.
7அதன் செதுக்குப் படிமங்கள் எல்லாம்
துகள் துகளாக நொறுக்கப்படும்;
அதன் பணயங்கள் எல்லாம்
நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்;
அதன் சிலைகளை எல்லாம்
உடைத்து கற்குவியல் ஆக்குவேன்;
ஏனெனில், விலைமகளுக்குரிய
பணயமாக அவை சேர்க்கப்பட்டன;
விலைமகளுக்குரிய பணயமாகவே
அவை போய்விடும்.
8இதை முன்னிட்டே
நான் ஓலமிட்டுக் கதறி அழுவேன்;
வெறுங்காலோடு
ஆடையின்றித் திரிவேன்;
குள்ளநரிகளைப்போல்
ஊளையிடுவேன்;
நெருப்புக் கோழிபோல் கதறி அழுவேன்.
9ஏனெனில், சமாரியாவின்
புண் ஆறாது;
யூதாவரையிலும் அது படர்ந்துவிட்டது;
என் மக்களின் வாயிலாம்
எருசலேமையும் வந்து எட்டியுள்ளது.


எதிரி எருசலேமின் அருகில் வந்துள்ளான்


10காத்தில் இதை அறிவிக்கவேண்டாம்;
கதறியழவும் வேண்டாம்;
பெத்லயப்ராவில் புழுதியில்
விழுந்து புரளுங்கள்.
11சாபீரில் குடியிருப்போரே,
ஆடையின்றி மானக்கேடுற்று
அகன்று போங்கள்;
சானானில் குடியிருப்போரும்
வெளியே வருவதில்லை;
பெத்தேத்சலிலும் புலம்பல் எழும்பும்.
அங்கு உங்களுக்கு
அடைக்கலம் கிடைக்காது.
12மாரோத்தில் குடியிருப்போர் நன்மை வரும் என
ஆவலோடு காத்திருக்கின்றனர்;
ஏனெனில், தீமை
ஆண்டவரிடம் இருந்து இறங்கி
எருசலேமின் வாயில்மேல் விழுந்தது.
13இலாக்கீசில் குடியிருப்போரே,
விரைந்தோடும் குதிரைகளைத்
தேரிலே பூட்டுங்கள்;
மகள் சீயோனின் பாவத்திற்கு
ஊற்று நீங்களே;
இஸ்ரயேலின் குற்றங்கள்
முதலில் காணப்பட்டது உங்களிடம்தான்.
14ஆதலால், மோரசேத்துகாத்துக்கு
நீ சீதனம் கொடுப்பாய்;
அக்சீபின் வீடுகள்
இஸ்ரயேல் அரசர்களை ஏமாற்றி விடும்.
15மாரேசாவில் குடியிருப்போரே,
கொள்ளைக்காரன் ஒருவன்
உங்கள்மேல்
திரும்பவும் வரும்படி செய்வேன்;
இஸ்ரயேலின் மேன்மை
அதுல்லாமில் ஒளிந்து கொள்ளும்.
16உங்கள் அருமைப்
பிள்ளைகளுக்காகத்
துக்கங் கொண்டாட
உங்கள் தலையை
மொட்டையடித்துக்கொள்ளுங்கள்;
கழுகைப்போல் முற்றிலும்
மொட்டையடித்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில், அவர்கள்
உங்களிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு
நாடுகடத்தப்படுவார்கள்.


1:1 2 அர 15:32-16:20; 18:1-20:21; 2 குறி 27:1-7; 28:1-32:33.


அதிகாரம் 2

எளியோரை ஒடுக்குவோருக்கு வரும் தண்டனை


1தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து
தீச்செயல் புரியத் திட்டமிட்டுக்
கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு
ஐயோ கேடு!
பொழுது புலர்ந்தவுடன்
தங்கள் கைவலிமையினால்
அவர்கள் அதைச்
செய்து முடிக்கின்றார்கள்.
2வயல் வெளிகள்மீது ஆசை கொண்டு,
அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்;
வீடுகள்மேல் இச்சை கொண்டு
அவற்றைக்
கைப்பற்றிக் கொள்கின்றார்கள்;
ஆண்களை ஒடுக்கி,
அவர்கள் வீட்டையும்
உரிமைச் சொத்தையும்
பறிமுதல் செய்கின்றார்கள்.
3ஆதலால், ஆண்டவர் கூறுவது இதுவே:
“இந்த இனத்தாருக்கு எதிராகத்
தீமை செய்யத் திட்டமிடுகிறேன்;
அதனினின்று
உங்கள் தலையை விடுவிக்க
உங்களால் இயலாது;
நீங்கள் ஆணவம் கொண்டு
நடக்கமாட்டீர்கள்;
ஏனெனில், காலம் தீயதாய் இருக்கும்.
4அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி
இரங்கற்பா இயற்றி,
‘அந்தோ! நாங்கள் அழிந்து ஒழிந்தோமே;
ஆண்டவருடைய மக்களின்
உரிமைச்சொத்து கைமாறிவிட்டதே!
நம்முடைய நிலங்களைப் பிடுங்கிக்
கொள்ளைக்காரர்களுக்குப்
பகிர்ந்தளிக்கின்றாரே!’ என்று
ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.
5ஆதலால், நூல்பிடித்துப்
பாகம் பிரித்து
உங்களுக்குத் தருபவன் எவனும்
ஆண்டவரின் சபையில் இரான்.
6அவர்கள் பிதற்றுவது:
‘சொற்பொழிவுகளை நிறுத்துங்கள்;
அவற்றைக் குறித்துப் பேசவேண்டாம்;
மானக்கேடு நம்மை அணுகாது.
7யாக்கோபின் குடும்பத்தாரே,
ஆண்டவர் பொறுமையிழந்து விட்டாரோ?
இவற்றைச் செய்பவர் அவர்தாமோ?
நேர்மையாய் நடப்போரிடம்
அவர் பரிவுடன் பேசமாட்டாரோ?’
8ஆனால், நீங்கள்தாம் என் மக்களைப்
பகைவரைப்போல் தாக்குகின்றீர்கள்!
போரில் நாட்டம் கொள்ளாமல்,
அமைதியை நாடுவோரின்
மேலாடையைப் பறிக்கின்றீர்கள்;
இதனால், அவர்களின்
மன அமைதியைக் கெடுக்கின்றீர்கள்;
9என் மக்களின் கூட்டத்திலுள்ள
பெண்களை
அவர்களுடைய அழகிய வீடுகளிலிருந்து
விரட்டுகின்றீர்கள்;
அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளிடம்
என் மாட்சி என்றும் விளங்காதவாறு
செய்துவிடுகின்றீர்கள்.
10எழுந்து அகன்றுபோங்கள்;
இது இளைப்பாறும் இடம் அல்ல;
நாட்டில் தீட்டு ஏற்பட்டுவிட்டது;
அது அழிவைக் கொண்டுவரும்.
அது மிகக்கொடிய பேரழிவாய் இருக்கும்.
11‘திராட்சை இரசத்தையும்
மதுவையும்பற்றி
உங்களுக்கு உரையாற்றுவேன்’
என்று கூறி,
வீண் சொற்களையும்
பொய்களையும் பிதற்றுகிறவன்தான்
இம்மக்களுக்கு ஏற்ற உரையாளன்!
12யாக்கோபே!
நான் உங்கள் அனைவரையும்
ஒன்றாகக் கூட்டுவேன்;
இஸ்ரயேலில் எஞ்சியோரை
ஒன்றாகத் திரட்டுவேன்;
இரைச்சலிடும் அந்தக் கூட்டத்தை
ஆடுகளைக் கிடையில்
மடக்குவது போலவும்;
மந்தையை மேய்ச்சல் நிலத்தில்
வளைப்பது போலவும்
ஒன்றாகச் சேர்ப்பேன்.
13அவர்களின் வழிகாட்டிகள்
தடைகளைத் தகர்த்தெறிந்து
வெளியேறுவார்கள்;
அவர்களின் அரசர்
அவர்களுக்கு முன்னால்
கடந்து செல்வார்;
ஆண்டவரே அவர்களை
வழிநடத்திப் போவார்.”


அதிகாரம் 3

இஸ்ரயேல் தலைவர்களுக்கு எதிரான மீக்காவின் கண்டனக் குரல்


1அப்பொழுது நான் கூறியது:
“யாக்கோபின் தலைவர்களே!
இஸ்ரயேலின் குடும்பத்தை
ஆள்பவர்களே,
நீதியை அறிவிப்பது
உங்கள் கடமை அன்றோ!
2நீங்களோ நன்மையை வெறுத்துத்
தீமையை நாடுகின்றீர்கள்;
என் மக்களின் தோலை
உயிரோடே உரித்து,
அவர்கள் எலும்புகளிலிருந்து
சதையைக் கிழித்தெடுக்கின்றீர்கள்;
3என் மக்களின் சதையைத்
தின்கின்றீர்கள்;
அவர்களின் தோலை
உரிக்கின்றீர்கள்;
அவர்களின் எலும்புகளை முறித்து,
சட்டியில் போடப்படும்
இறைச்சி போலவும்,
கொப்பரையில் கொட்டப்படும்
மாமிசம் போலவும்
துண்டு துண்டாக்குகின்றீர்கள்.
4அப்பொழுது நீங்கள்
ஆண்டவரை நோக்கிக்
கூக்குரலிடுவீர்கள்;
ஆனால் உங்களுக்கு அவர்
செவிசாய்க்கமாட்டார்.
அந்த நேரத்தில் அவர் தம் முகத்தை
உங்களிடம் இருந்து
மறைத்துக்கொள்வார்;
ஏனெனில், உங்களின் செயல்கள்
தீயனவாய் இருக்கின்றன.”
5இறைவாக்கினர்களைக் குறித்து
ஆண்டவர் கூறுவது இதுவே:
“அவர்கள் என் மக்களைத்
தவறான வழியில்
நடத்திச் செல்கின்றார்கள்.
வயிறார உண்ணக் கொடுத்தவரிடம்
‘அமைதி உண்டாகுக!’ என
உரக்கச் சொல்கின்றார்கள்;
வாய்க்குத் தீனி போடாதவரிடம்
‘புனிதப் போர் வரும்’ எனக்
கூறுகின்றார்கள்.”
6ஆதலால் “இறைவாக்கினரே,
திருக்காட்சி உங்களுக்குக்
கிடைக்காது;
முன்னுரைத்தல் இராது;
காரிருள் உங்களைக்
கவ்விக் கொள்ளும்;
இனி உங்கள்மேல்
கதிரவன் ஒளி படராது;
பகலும் உங்களுக்கு
இருளாய் இருக்கும்.”
7காட்சி காண்பவர்கள்
மானக்கேடு அடைவார்கள்;
முன்னுரைப்பவர்கள்
நாணிப்போவார்கள்;
அவர்கள் அனைவரும்
தங்கள் வாயைப்
பொத்திக் கொள்வார்கள்;
ஏனெனில் கடவுளிடமிருந்து
மறுமொழி ஏதும் வராது.
8ஆனால், நான் யாக்கோபுக்கு
அவன் குற்றத்தையும்,
இஸ்ரயேலுக்கு அவன் பாவத்தையும்
அறிவிக்க,
வல்லமையாலும்
ஆண்டவரின் ஆவியாலும்,
நீதியாலும் ஆற்றலாலும்
நிரப்பப்பட்டுள்ளேன்.
9யாக்கோபு குடும்பத்தாரின்
தலைவர்களே,
இஸ்ரயேல் குடும்பத்தை ஆள்பவர்களே,
இதைக் கேளுங்கள்;
நீங்கள் நீதியை அருவருக்கிறீர்கள்;
நேர்மையானவற்றைக்
கோணலாக்குகின்றீர்கள்.
10இரத்தப்பழியால் சீயோனையும்,
அநீதியால் எருசலேமையும்
கட்டியெழுப்புகின்றீர்கள்.
11அந்த நகரின் தலைவர்கள்
கையூட்டு வாங்கிக்கொண்டு
தீர்ப்பு வழங்குகிறார்கள்;
அதன் குருக்கள்
கூலிக்காகப் போதிக்கின்றனர்;
இறைவாக்கினர்
பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்;
ஆயினும் ஆண்டவரது துணையை நம்பி,
‘ஆண்டவர் நம் நடுவில்
இருக்கின்றார் அல்லவா?
எனவே தீமை நம்மை அணுகாது’ என்று
சொல்லிக்கொள்கின்றார்கள்.
12ஆதலால், உங்களை முன்னிட்டுச்
சீயோன் வயல்வெளியைப்போல்
உழப்படும்;
எருசலேம் பாழடைந்த
மண் மேடாக மாறும்;
கோவில் உள்ள மலையோ
அடர்ந்த காடாகும்.”✠


3:12 எரே 26:18.


அதிகாரம் 4

ஆண்டவரின் அனைத்துலக அருளாட்சி

(எசா 2:1-4)


1“இறுதி நாள்களில் ஆண்டவரின்
கோவில் அமைந்துள்ள மலை;
மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய்
நிலைநிறுத்தப்படும்;
குன்றுகளுக்கெல்லாம் மேலாய்
உயர்த்தப்படும்;
மக்களினங்கள் அதை நோக்கிச்
சாரைசாரையாய் வருவார்கள்.
2வேற்றினத்தார் பலர்
அங்கு வந்து சேர்ந்து,
‘புறப்படுங்கள்,
ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்;
யாக்கோபின் கடவுளது
கோவிலுக்குப் போவோம்;
அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்;
நாமும் அவர் நெறிகளில் நடப்போம்’
என்பார்கள்;
ஏனெனில் சீயோனிலிருந்து
திருச்சட்டம் வெளிப்படும்;
எருசலேமிலிருந்து
ஆண்டவரின் வாக்கு புறப்படும்.
3அவரே பல மக்களினங்களுக்கு
இடையே உள்ள வழக்குகளைத்
தீர்த்துவைப்பார்;
தொலைநாடுகளிலும்
வலிமைமிக்க வேற்றினத்தார்க்கு
நீதி வழங்குவார்;
அவர்களோ தங்கள் வாள்களைக்
கலப்பைக் கொழுக்களாகவும்
தங்கள் ஈட்டிகளைக்
கருக்கரிவாள்களாகவும்
அடித்துக் கொள்வார்கள்;
ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம்
வாள் எடுக்காது;
அவர்கள் இனி ஒருபோதும்
போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள்.✠
4அவர்களுள் ஒவ்வொருவரும்
தம் திராட்சைத் தோட்டத்தின் நடுவிலும்,
அத்தி மரத்தின் அடியிலும்
அமர்ந்திருப்பர்;
அவர்களை அச்சுறுத்துவார்
எவருமில்லை;
ஏனெனில்,
படைகளின் ஆண்டவரது
திருவாய் இதை மொழிந்தது.✠
5மக்களினங்கள் யாவும்
தம் தெய்வத்தின் பெயரை வழிபடும்.
நாமோ, நம் கடவுளாகிய
ஆண்டவரின் பெயருக்கு
என்றென்றும் பணிந்திருப்போம்.
6அந்நாளில், “நான்
முடமாக்கப்பட்டோரை ஒன்று சேர்ப்பேன்;
விரட்டியடிக்கப்பட்டோரையும்
என்னால் தண்டிக்கப்பட்டோரையும்
ஒன்றுகூட்டுவேன்”
என்கிறார் ஆண்டவர்.
7முடமாக்கப்பட்டோரை
எஞ்சியோராய் ஆக்குவேன்;
விரட்டியடிக்கப்பட்டோரை
வலியதோர் இனமாக உருவாக்குவேன்;
அன்றுமுதல் என்றென்றும்
ஆண்டவராகிய நானே
சீயோன் மலைமேலிருந்து
அவர்கள்மேல் ஆட்சிபுரிவேன்.
8மந்தையின் காவல் மாடமே!
மகள் சீயோனின் குன்றே!
முன்னைய அரசுரிமை
உன்னை வந்துசேரும்;
மகள் எருசலேமின் அரசு
உன்னை வந்தடையும்.
9இப்போது நீ கூக்குரலிட்டுக்
கதறுவானேன்?
பேறுகாலப் பெண்ணைப்போல்
ஏன் வேதனைப்படுகின்றாய்?
அரசன் உன்னிடத்தில்
இல்லாமற் போனானோ?
உனக்கு அறிவு புகட்டுபவன்
அழிந்தொழிந்தானோ?
10மகளே சீயோன்!
பேறுகாலப் பெண்ணைப்போல
நீயும் புழுவாய்த் துடித்து வேதனைப்படு;
ஏனெனில், இப்பொழுதே
நீ நகரைவிட்டு வெளியேறுவாய்;
வயல்வெளிகளில் குடியிருப்பாய்;
பாபிலோனுக்குப் போவாய்;
அங்கிருந்து நீ விடுவிக்கப்படுவாய்;
உன் பகைவர் கையினின்றும்
ஆண்டவர் உன்னை மீட்டருள்வார்.
11இப்பொழுது, வேற்றினத்தார் பலர்
உனக்கு எதிராய்
ஒன்று கூடியிருக்கின்றார்கள்;
‘சீயோன் தீட்டுப்படட்டும்;
அதன் வீழ்ச்சியை
நம் கண்கள் காணட்டும்’
என்று சொல்லுகின்றார்கள்.
12ஆனால் அவர்கள் ஆண்டவரின்
எண்ணங்களை அறியவில்லை.
அவரது திட்டத்தையும்
புரிந்து கொள்ளவில்லை.
ஏனெனில் புணையடிக்கும் களத்தில்
அரிக்கட்டுகளைச் சேர்ப்பதுபோல்
அவர் அவர்களைச்
சேர்த்து வைத்திருக்கின்றார்.
13மகள் சீயோனே, நீ எழுந்து புணையடி;
நான் உன் கொம்பை இரும்பாக மாற்றுவேன்;
உன்னுடைய குளம்புகளை
வெண்கலம் ஆக்குவேன்;
மக்களினங்கள் பலவற்றை
நீ நொறுக்கிப்போடுவாய்;
அவர்களிடம் கொள்ளையடித்தவற்றை
ஆண்டவருக்கு அர்ப்பணிப்பாய்;
அவர்களது செல்வங்களை
அனைத்துலகின் ஆண்டவரிடம்
ஒப்படைப்பாய்.”


4:3 யோவே 3:10. 4:4 செக் 3:10.


அதிகாரம் 5

1அரண்சூழ் நகரில் வாழும் மக்களே!
உங்கள் மதில்களுக்குப் பின்னால்
ஒளிந்து கொள்ளுங்கள்;
உங்களுக்கு எதிராக
முற்றுகையிடப்பட்டுள்ளது;
இஸ்ரயேலின் ஆளுநன்
கோலால் கன்னத்தில் அடி பெறுவான்.


ஆட்சி செலுத்துபவர் பெத்லெகேமிலிருந்து தோன்றுவார்


2நீயோ, எப்ராத்தா எனப்படும்
பெத்லகேமே!
யூதாவின் குடும்பங்களுள்
மிகச் சிறியதாய் இருக்கின்றாய்!
ஆயினும், இஸ்ரயேலை
என் சார்பாக ஆளப் போகின்றவர்
உன்னிடமிருந்தே தோன்றுவார்;
அவர் தோன்றும் வழி மரபோ
ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.✠
3ஆதலால்,
பேறுகால வேதனையில் இருப்பவள்
பிள்ளை பெறும்வரை
அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்;
அதன் பின்னர்
அவருடைய இனத்தாருள்
எஞ்சியிருப்போர்
இஸ்ரயேல் மக்களிடம்
திரும்பி வருவார்கள்.
4அவர் வரும்போது,
ஆண்டவரின் வலிமையோடும்
தம் கடவுளாகிய ஆண்டவரது
பெயரின் மாட்சியோடும் விளங்கித்
தம் மந்தையை மேய்ப்பார்;
அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்;
ஏனெனில், உலகின்
இறுதி எல்லைகள்வரை
அப்போது அவர்
மேன்மை பொருந்தியவராய்
விளங்குவார்;
5அவரே அமைதியை அருள்வார்.


விடுதலையும் தண்டனைத் தீர்ப்பும்


5அசீரியர் நம் நாட்டிற்குள்
படையெடுத்து வரும்போதும்,
நம் அரண்களை
அழித்தொழிக்கும்போதும்
அவர்களுக்கு எதிராக
மேய்ப்பர் எழுவரையும்
மக்கள் தலைவர் எண்மரையும்
நாம் கிளர்ந்தெழச் செய்வோம்.
6அவர்கள் அசீரியா நாடு முழுவதையும்
நிம்ரோது நாட்டை
அதன் நுழைவாயில்கள் வரையிலும்
தங்கள் வாளுக்கு
இரையாக்குவார்கள்;
அசீரியர் நம் நாட்டிற்குள்
படையெடுத்து வரும் போதும்,
நம் எல்லைகளைக் கடந்து வரும்போதும்,
நம்மை அவர்களிடமிருந்து
விடுவிப்பார்கள்.✠
7அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர்
ஆண்டவரிடமிருந்து வரும்
பனியைப் போலவும்
மனிதருக்காகக் காத்திராமலும்
மானிடர்க்காகத் தாமதிக்காமலும்,
புல்மேல் பெய்கின்ற
மழைத்துளிகள் போலவும்,
பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.
8மேலும், யாக்கோபிலே எஞ்சியிருப்போர்
காட்டு விலங்குகளிடையே இருக்கும்
சிங்கம் போலவும்,
ஆட்டு மந்தைக்குள் நுழைந்து
யாரும் விடுவிக்க இயலாத நிலையில்
அவற்றை மிதித்துத்
துண்டு துண்டாய்க் கிழித்துப் போடும்
சிங்கக் குட்டி போலவும்,
பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.
9உனது கை
உன்னுடைய பகைவர்களுக்கு மேலாக
உயர்த்தப்படும்;
உன்னுடைய எதிரிகள் அனைவரும்
அழிந்தொழிவார்கள்.
10அந்நாளில், “நான் உன்னிடமுள்ள
உன் குதிரைகளை வெட்டி வீழ்த்துவேன்;
உன் தேர்ப்படையை அழித்தொழிப்பேன்”
என்கிறார் ஆண்டவர்.
11“உன் நாட்டிலுள்ள நகர்களைத்
தகர்த்தெறிவேன்;
உன் அரண்கள் அனைத்தையும்
தரைமட்டமாக்குவேன்.
12உன்னுடைய மாயவித்தைக்காரர்களை
ஒழித்துக்கட்டுவேன்;
குறிசொல்லுவோர்
உன்னிடம் இல்லாதொழிவர்.
13நீ செய்து வைத்திருக்கும்
சிலைகளையும் படிமங்களையும்
உடைத்தெறிவேன்;
உன் கைவினைப் பொருள்கள்முன்
இனி நீ தலைவணங்கி நிற்கமாட்டாய்.
14நீ நிறுத்தியிருக்கும் கம்பங்களைப்
பிடுங்கி எறிவேன்;
உன் நகரங்களை அழித்தொழிப்பேன்.
15எனக்குச் செவி கொடாத
வேற்றினத்தார்மேல்
சினத்துடனும் கடும் சீற்றத்துடனும்
பழிதீர்த்துக் கொள்வேன்.”


5:2 மத் 2:6; யோவா 7:42. 5:6 தொநூ 10:8-11.


அதிகாரம் 6

இஸ்ரயேல் மீது ஆண்டவரின் வழக்கு


1ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்:
நீ எழுந்து, மலைகளுக்கு முன்னிலையில்
உன் வழக்கைச் சொல்;
குன்றுகள் உன் குரல் ஒலியைக் கேட்கட்டும்.
2மலைகளே, மண்ணுலகின்
நிலையான அடித்தளங்களே,
ஆண்டவரின் வழக்கைக் கேளுங்கள்;
ஆண்டவருக்குத் தம் மக்களோடு
வழக்கு ஒன்று உண்டு;
இஸ்ரயேலோடு அவர்
வாதாடப் போகின்றார்.
3என் மக்களே,
நான் உங்களுக்கு என்ன செய்தேன்?
எதில் நான் உங்களைத்
துயரடையச் செய்தேன்?
எனக்கு மறுமொழி கூறுங்கள்.
4நான் உங்களை எகிப்து நாட்டிலிருந்து
அழைத்து வந்தேன்;
அடிமைத்தன வீட்டிலிருந்து
மீட்டு வந்தேன்;
உங்களுக்கு முன்பாக
மோசேயையும், ஆரோனையும்,
மிரியாமையும் அனுப்பிவைத்தேன்.✠
5என் மக்களே, மோவாபு அரசன்
பாலாக்கு வகுத்த திட்டத்தை
நினைத்துப் பாருங்கள்;
பெயோரின் மகன் பிலயாம்
அவனுக்குக் கூறிய மறுமொழியையும்,
சித்திமுக்கும் கில்காலுக்கும் இடையே
நடந்தவற்றையும் எண்ணிப்பாருங்கள்;
அப்போது ஆண்டவரின்
மீட்புச் செயல்களை
அறிந்து கொள்வீர்கள்.✠


ஆண்டவர் விரும்புவது


6ஆண்டவரின் திருமுன் வரும்போது
உன்னதரான கடவுளாகிய அவருக்கு
எதைக் கொண்டுவந்து
பணிந்து நிற்பேன்?
எரிபலிகளோடும்
ஒரு வயதுக் கன்றுகளோடும்
அவர் முன்னிலையில் வரவேண்டுமா?
7ஆயிரக்கணக்கான
ஆட்டுக்கிடாய்கள் மேலும்
பல்லாயிரக்கணக்கான
ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும்
எண்ணெய் மேலும்
ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ?
என் குற்றத்தை அகற்ற
என் தலைப்பிள்ளையையும்,
என் பாவத்தைப் போக்க
நான் பெற்ற குழந்தையையும்
பலி கொடுக்க வேண்டுமா?
8ஓ மானிடா, நல்லது எது என
அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே!
நேர்மையைக் கடைப்பிடித்தலையும்,
இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும்
உன் கடவுளுக்கு முன்பாக
தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர
வேறு எதை ஆண்டவர்
உன்னிடம் கேட்கின்றார்?
9ஆண்டவரின் குரல்
நகரை நோக்கிக் கூக்குரலிடுகின்றது;
உம் பெயருக்கு அஞ்சி நடப்பதே
உண்மையான ஞானம்.
நகரில் கூடியிருப்போரே!
நான் கூறுவதைக் கேளுங்கள்;
10“கொடியோரின் வீட்டில்
தீய வழியால் சேர்க்கப்பட்ட
களஞ்சியங்களையும்
சபிக்கப்பட்ட மரக்காலையும்
நான் மறப்பேனோ?
11கள்ளத் தராசையும்
கள்ள எடைக் கற்களையும் கொண்ட
பையை வைத்திருப்போரை
நேர்மையாளர் எனக் கொள்வேனோ?
12உங்களிடையே உள்ள செல்வர்கள்
கொடுமை நிறைந்தவர்கள்;
அங்கே குடியிருப்பவர்கள் பொய்யர்கள்;
அவர்கள் வாயிலிருந்து
வஞ்சனையான பேச்சே
வெளிப்படுகின்றது.
13ஆதலால், நான் உங்களை
உங்கள் பாவங்களுக்காகத்
தண்டிக்கத்தொடங்கியுள்ளேன்;
நீங்கள் பாழாய்ப் போவீர்கள்.
14நீங்கள் உணவருந்தினாலும்
நிறைவடைய மாட்டீர்கள்;
பசி உங்கள் வயிற்றைக்
கிள்ளிக்கொண்டிருக்கும்;
நீங்கள் எதையும்
பாதுகாப்பாக வைத்திருக்கமாட்டீர்கள்,
இழப்பீர்கள்;
அப்படியே நீங்கள் எதையாவது
பாதுகாப்பாக வைத்தாலும்
அதை நான் வாளுக்கு இரையாக்குவேன்.
15நீங்கள் விதைப்பீர்கள்;
ஆனால், அறுவடை செய்யமாட்டீர்கள்;
ஒலிவக் கொட்டைகளை
ஆலைக்குள் இட்டு ஆட்டுவீர்கள்,
ஆனால், உங்களுக்கு எண்ணெய்
தடவிக்கொள்ளமாட்டீர்கள்;
திராட்சைப் பழம் பிழிவீர்கள்;
ஆனால், திராட்சை இரசத்தைச்
சுவைக்கமாட்டீர்கள்.
16ஏனெனில், நீங்கள்
ஒம்ரியின் கட்டளைகளைக்
கடைப்பிடித்தீர்கள்;
ஆகாசு குடும்பத்தாரின் செயல்கள்
அனைத்தையும் பின்பற்றினீர்கள்,
அவர்களின் திட்டங்களைப்
பின்பற்றி நடந்தீர்கள்;
ஆதலால், நான் உங்களை
அழிவுக்குக் கையளிப்பேன்;
உங்களிடையே குடியிருப்போர்
இகழ்ச்சிக்கு உள்ளாவர்;
மக்களினங்களின்
நிந்தைக்கு ஆளாவீர்கள்.✠


6:4 விப 4:10-16; 12:50-51; 15:20. 6:5 எண் 22:2-25:25; யோசு 3:1-4:19. 6:16 1 அர 16:23-34; 21:25-26.


அதிகாரம் 7

இஸ்ரயேலின் நெறிகேடு


1ஐயோ! நான் கோடைக்காலக் கனிகளைக்
கொய்வதற்குச் சென்றவனைப்
போலானேன்;
திராட்சை பறித்து முடிந்தபின்
பழம் பறிக்கச்
சென்றவனைப் போலானேன்;
அப்பொழுது தின்பதற்கு
ஒரு திராட்சைக் குலையும் இல்லை;
என் உள்ளம் விரும்பும்
முதலில் பழுத்த
அத்திப் பழம்கூட இல்லை;
2நாட்டில் இறைப்பற்றுள்ளோர்
அற்றுப்போனார்;
மனிதருள் நேர்மையானவர்
எவருமே இல்லை.
அவர்கள் அனைவரும்
இரத்தப் பழிவாங்கப்
பதுங்கிக் காத்திருக்கின்றனர்;
ஒருவர் ஒருவரைப் பிடிக்கக்
கண்ணி வைத்து வேட்டையாடுகின்றனர்.
3தீமை செய்வதில்
அவர்கள் கைதேர்ந்தவர்கள்;
தலைவனும் நீதிபதியும்
கையூட்டுக் கேட்கின்றனர்;
பெரிய மனிதர் தாம் விரும்பியதை
வாய்விட்டுக் கூறுகின்றனர்;
இவ்வாறு, நெறிதவறி நடக்கின்றனர்.
4அவர்களுள் சிறந்தவர்
முட்செடி போன்றவர்!
அவர்களுள் நேர்மையாளர்
வேலிமுள் போன்றவர்!
அவர்களுடைய காவலர்கள் அறிவித்த
தீர்ப்பின் நாள் வந்துவிட்டது;
இப்பொழுதே அவர்களுக்குத் திகில்.
5அடுத்திருப்பவன்மீது
நம்பிக்கை கொள்ளவேண்டாம்;
தோழனிடத்திலும்
நம்பிக்கை வைக்கவேண்டாம்.
உன் மார்பில் சாய்ந்திருக்கிற
மனைவி முன்பும்
உன் வாய்க்குப் பூட்டுப்போடு!
6ஏனெனில், மகன் தன் தந்தையை
அவமதிக்கின்றான்;
மகள் தன் தாய்க்கு எதிராக
எழும்புகின்றாள்,
மருமகள், தன் மாமியாரை
எதிர்க்கின்றாள்;
ஒருவரின் பகைவர்
அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.✠
7நானோ, ஆண்டவரை
விழிப்புடன் நோக்கியிருப்பேன்;
என்னை மீட்கும் என் கடவுளுக்காகக்
காத்திருப்பேன்.
என் கடவுள் எனக்குச்
செவிசாய்த்தருள்வார்.


ஆண்டவர் அளிக்கும் விடுதலை


8என் பகைவனே,
என்னைக் குறித்துக் களிப்படையாதே;
ஏனெனில், நான் வீழ்ச்சியுற்றாலும்
எழுச்சிபெறுவேன்.
நான் இருளில் குடியிருந்தாலும்
ஆண்டவர் எனக்கு ஒளியாய் இருப்பார்.
9நான் ஆண்டவருக்கு எதிராகப்
பாவம் செய்தேன்;
ஆதலால், அவரது கடும் சினத்தை
, அவர் எனக்காக வழக்காடி
எனக்கு நீதி வழங்கும்வரை,
தாங்கிக்கொள்வேன்;
அவர் என்னை ஒளிக்குள்
கொண்டு வருவார்;
அவரது நீதியை நான் காண்பேன்.
10அப்போது, என்னோடு
பகைமைகொண்டவர்கள்
அதைக் காண்பார்கள்;
“உன் கடவுளாகிய ஆண்டவர்
எங்கே?” என்று
என்னிடம் கேட்டவள்
வெட்கம் அடைவாள்;
என் கண்கள் அவளைக் கண்டு
களிகூரும்.
அப்பொழுது, தெருச் சேற்றைப்போல
அவள் மிதிபடுவாள்.
11உன் மதில்களைத்
திரும்பக் கட்டும் நாள் வருகின்றது;
அந்நாளில், நாட்டின் எல்லை
வெகு தொலைவிற்கு விரிந்து பரவும்.
12அந்நாளில், அசீரியாவிலிருந்து
எகிப்திலுள்ள நகர்கள் வரை,
எகிப்திலிருந்து பேராறு வரை,
ஒரு கடல்முதல் மறுகடல் வரை,
ஒரு மலைமுதல் மறு மலைவரை
உள்ள மக்கள் அனைவரும்
உன்னிடம் திரும்புவார்கள்.
13நிலவுலகம்
அங்குக் குடியிருப்போரின்
செயல்களின் விளைவால்
பாழடைந்து போகும்.
14ஆண்டவரே,
உமது உரிமைச் சொத்தாய் இருக்கும்
மந்தையாகிய உம்முடைய மக்களை
உமது கோலினால் மேய்த்தருளும்!
அவர்கள் கர்மேலின் நடுவே
காட்டில் தனித்து
வாழ்கின்றார்களே!
முற்காலத்தில் நடந்ததுபோல
அவர்கள் பாசானிலும்
கிலயாதிலும் மேயட்டும்!
15எகிப்து நாட்டிலிருந்து
நீங்கள் புறப்பட்டுவந்த நாளில்
நடந்ததுபோல
நான் அவர்களுக்கு
வியத்தகு செயல்களைக்
காண்பிப்பேன்.
16வேற்றினத்தார் இதைப் பார்த்துத்
தங்கள் ஆற்றல்
அனைத்தையும் குறித்து
நாணமடைவர்;
அவர்கள் தங்கள் வாயைக்
கையால் மூடிக்கொள்வார்கள்;
அவர்களுடைய காதுகள்
செவிடாய்ப் போகும்.
17அவர்கள் பாம்பைப் போலவும்
நிலத்தில் ஊர்வன போலவும்
மண்ணை நக்குவார்கள்;
தங்கள் எல்லைக் காப்புகளில் இருந்து
நடுநடுங்கி வெளியே வருவார்கள்;
நம் கடவுளாகிய
ஆண்டவர் முன்னிலையில்
அஞ்சி நடுங்குவார்கள்.
உமக்கே அவர்கள் அஞ்சுவார்கள்.
18உமக்கு நிகரான இறைவன் யார்?
எஞ்சியிருப்போரின்
குற்றத்தைப் பொறுத்து
நீர் உமது உரிமைச் சொத்தில்
எஞ்சியிருப்போரின் தீச்செயலை
மன்னிக்கின்றீர்;
உமக்கு நிகரானவர் யார்?
அவர் தம் சினத்தில்
என்றென்றும் நிலைத்திரார்;
ஏனெனில், அவர்
பேரன்புகூர்வதில்
விருப்பமுடையவர்;
19அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்;
நம் தீச்செயல்களை
மிதித்துப்போடுவார்;
நம் பாவங்கள் அனைத்தையும்
ஆழ்கடலில் எறிந்து விடுவார்.
20பண்டைய நாளில்
எங்கள் மூதாதையருக்கு
நீர் ஆணையிட்டுக் கூறியதுபோல
யாக்கோபுக்கு
வாக்குப் பிறழாமையையும்
ஆபிரகாமுக்குப்
பேரன்பையும் காட்டியருள்வீர்.


7:6 மத் 10:35-36; லூக் 12:53.