நெகேமியா


நெகேமியா
முன்னுரை

‘நெகேமியா’ என்னும் இந்நூல், ‘எஸ்ரா’ நூலைப் போன்று ‘குறிப்பேட்டின்’ தொடர்ச்சியாகும். நெகேமியா, பாரசீகத் தலைநகரான சூசாவில் மன்னர் அர்த்தக்சஸ்தாவுக்குப் பானப் பணிவிடைக்காரராக இருந்தார். சொந்த நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்களின் இழிநிலையைக் கண்டு வருத்தமுற்றார். பாரசீக மன்னரால் யூதா நாட்டின் ஆளுநராக நியமனம் பெற்றார். பாழடைந்து கிடந்த எருசலேம் நகரின் மதிலைப் பல எதிர்ப்புகளுக்கிடையே மனம் தளராது கட்டியெழுப்பினார். சமய, சமூகச் சீர்திருத்தங்களை இஸ்ரயேல் மக்களிடையே செய்தார்.

இவரது காலத்தில் சட்டவல்லுநரான எஸ்ரா திருச்சட்டத்தை மக்கள் முன் வாசிக்க, மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, உடன்படிக்கையின்படி வாழ உறுதி பூண்டனர். இறைவனின் உதவியின்றித் தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை நெகேமியா உணர்ந்திருந்தார். எனவே, அவர் பலமுறை இறைவனிடம் மன்றாடினார். அவர் உள்ளத்தினின்று எழுந்த மன்றாட்டுகள் பல இந்நூலில் இடம்பெற்றுள்ளன.


நூலின் பிரிவுகள்


1. நெகேமியா எருசலேமுக்கு வருதல் 1:1 - 2:20
2. எருசலேம் நகரின் மதில்கள் திரும்பக் கட்டப்படுதல் 3:1 - 7:73
3. திருச்சட்டம் வாசிக்கப்பட்டு உடன்படிக்கை புதுப்பிக்கப்படுதல் 8:1 - 10:39
4. நெகேமியாவின் பிற செயற்பாடுகள் 11:1 - 13:31


அதிகாரம் 1

எருசலேம் குறித்து நெகேமியா கவலைப்படல்


1அக்கல்யா மகனான நெகேமியா கூறியது: இருபதாம் ஆண்டின் கிசிலேவு மாதத்தில், நான் தலைநகரான சூசாவில் இருந்தேன். 2அப்பொழுது, என் சகோதரர்களில் ஒருவரான அனானியும் சில ஆண்களும் யூதாவிலிருந்து வந்தார்கள். அடிமைத்தனத்திற்குத் தப்பித்துக்கொண்டு உயிரோடிருக்கும் யூதர்களைப்பற்றியும் எருசலேமைப் பற்றியும் அவர்களிடம் விசாரித்தேன். 3அதற்கு அவர்கள், “அடிமைத்தனத்திற்குத் தப்பித்துக் கொண்டு அம்மாநிலத்தில் உயிரோடிருப்பவர்கள் பெருந் துயரும் சிறுமையும் அடைகிறார்கள். எருசலேமின் மதில்கள் தகர்த்தெறியப்பட்டுள்ளன; அதன் வாயிற்கதவுகள் தீக்கு இரையாகிவிட்டன” என்று கூறினர். 4இவற்றைப் பற்றிக் கேள்விபட்டதும் நான் உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன்; பல நாள்கள் துக்கம் கொண்டாடினேன்; மேலும் நான் நோன்பிருந்து விண்ணகக் கடவுளின்முன் மன்றாடினேன்:

5“விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரே! பெரியவரும் அஞ்சுதற்கு உரியவரும் ஆனவரே! தமக்கு அன்பு காட்டுபவர்களிடமும் தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களிடமும் உடன்படிக்கையையும் இரக்கத்தையும் காப்பவரே! 6உம் ஊழியர்களாகிய இஸ்ரயேல் மக்களுக்காக இரவும் பகலும் இன்று உம்முன் மன்றாடினேன்; இஸ்ரயேல் மக்களாகிய நாங்கள் உமக்கு எதிராகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிறேன். அடியேனுடைய மன்றாட்டைக் கேட்பதற்கு உம் செவிகள் திறந்திருப்பதாக! உன் கண்கள் விழித்திருப்பதாக! நானும் என் தந்தை வீட்டாரும் பாவம் செய்தோம். 7நாங்கள் உமக்கு எதிராக முறைகேடாக நடந்து கொண்டோம். உமது ஊழியரான மோசேக்குத் தந்த கட்டளைகளையும், சட்டங்களையும், நீதி முறைமைகளையும் கடைப்பிடிக்கவில்லை. 8உம் ஊழியரான மோசேக்கு நீர் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தருளும். ‘நீங்கள் நேர்மையற்றவர்களாக இருப்பீர்களேயாகில் உங்களை மக்களினங்களிடையே சிதறடிப்பேன்;✠ 9இருப்பினும், நீங்கள் என்னிடம் திரும்பிவந்து, என் கட்டளைகளைப் பின்பற்றி நடப்பீர்களாகில், நீங்கள் உலகின் கடை எல்லைக்கு ஒதுக்கித் தள்ளப்பட்டிருப்பினும், அங்கிருந்து உங்களை ஒன்று சேர்த்து எனது பெயர் விளங்கும் பொருட்டு நான் தேர்ந்துகொண்ட இடத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்’.✠

10உமது பேராற்றலாலும் கைவன்மையாலும் நீர் மீட்ட உம் மக்களும் ஊழியர்களும் இவர்களே. 11ஆண்டவரே, உம் ஊழியனான அடியேனின் மன்றாட்டையும், உமது பெயருக்கு அஞ்சி நடக்க விரும்பும் உம் ஊழியர்களின் மன்றாட்டையும் கேட்டருளும். உம் ஊழியனாகிய எனக்கு இன்று வெற்றியை அருளும். இம்மனிதர் எனக்கு இரக்கம் காட்டச் செய்தருளும்”. அப்பொழுது, நான் மன்னருக்குப் பானம் பரிமாறுவோனாக இருந்தேன்.


1:8 லேவி 26:33. 1:9 இச 30:1-5.


அதிகாரம் 2

நெகேமியா எருசலேமுக்கு வருதல்


1மன்னர் அர்த்தக்சஸ்தாவின் இருபதாம் ஆட்சி ஆண்டில், நீசான் மாதத்தில் அவரது முன்னிலையில் திராட்சை இரசம் வைக்கப்பட்டிருந்தது. நான் திராட்சை இரசத்தை எடுத்து மன்னருக்குக் கொடுத்தேன். அப்பொழுது அவர் முன்னிலையில் நான் துயருற்றவனாய் இருந்தேன். 2மன்னர் என்னைப் பார்த்து, “ஏன் உன் முகம் வாடியுள்ளது? நீ நோயுற்றவனாகத் தெரியவில்லையே! இது மனவேதனையே அன்றி வேறொன்றுமில்லை” என்றார். நானோ மிகவும் அஞ்சினேன். 3நான் மன்னரை நோக்கி, “மன்னரே! நீர் நீடூழி வாழ்க! என் மூதாதையரின் கல்லறைகள் இருக்கும் நகர் பாழ்பட்டுக் கிடக்கும்போது, அதன் வாயில்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் போது, என் முகம் எப்படி வாடாமல் இருக்கும்?” என்றேன்.✠

4அதற்கு மன்னர் என்னை நோக்கி, “உனக்கு என்ன வேண்டும்?” என்றார். அப்பொழுது நான் விண்ணகக் கடவுளிடம் வேண்டினேன். 5நான் மன்னரைப் பார்த்து, “நீர் மனம் வைத்தால், உமது பார்வையில் தயவு கிடைத்தால் என் மூதாதையரின் கல்லறைகளைக் கொண்டுள்ள யூதாவின் நகரைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்” என்று கூறினேன். 6அப்பொழுது மன்னரும் அவர் அருகில் அமர்ந்திருந்த அரசியும் என்னைப் பார்த்து, “உன் பயணத்திற்கு எத்தனை நாள்கள் ஆகும்? எப்பொழுது நீ திரும்பி வருவாய்?” என்று கேட்டனர். மன்னர் என்னை அனுப்ப விரும்பியதால் திரும்பிவரும் காலத்தை அவரிடம் குறிப்பிட்டேன்.

7மீண்டும் மன்னரைப் பார்த்து, “உமக்கு மனமிருந்தால், நான் யூதாவை அடையும்வரை யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியிலுள்ள ஆளுநர்கள் எனக்கு வழிவிட வேண்டுமென மடல்கள் கொடுத்தருளும். 8கோவிலின் கொத்தளக் கதவுகளுக்கும் நகர் மதிலின் கதவுகளுக்கும், நான் தங்கவிருக்கும் வீட்டின் கதவுகளுக்கும் குறுக்குச் சட்டங்கள் அமைக்கத் தேவையான மரங்களை எனக்குக் கொடுக்கும்படி மன்னரின் காடுகளுக்குக் காவலரான ஆசாபுக்கு மடல் கொடுத்தருளும்” என்றேன். கடவுளின் அருட்கரம் என்னோடு இருந்ததால், மன்னரும் அவ்வாறே கொடுத்தார்.

9யூப்பிரத்தீசின் அக்கரைப்பகுதியின் ஆளுநர்களிடம் வந்து, மன்னரின் மடல்களை அவர்களிடம் தந்தேன். மன்னரோ என்னோடு படைத்தலைவர்களையும் குதிரை வீரர்களையும் அனுப்பி வைத்திருந்தார். 10ஓரோனியனான சன்பலாற்றும், அரச அலுவலனும் அம்மோனியனுமான தோபியாவும் அதைக் கேள்வியுற்றபோது, இஸ்ரயேல் மக்களுக்கு நன்மை செய்ய ஒருவன் வந்துவிட்டானே என்று எரிச்சலுற்றனர்.

11நான் எருசலேமுக்கு வந்து அங்கே மூன்றுநாள் தங்கி இருந்தேன். 12நான் எருசலேமுக்குச் செய்யுமாறு கடவுள் என் உள்ளத்தில் தூண்டியிருந்த எதையும் நான் ஒருவருக்கும் சொல்லவில்லை. ஓரிரவு நான் எழுந்து சில ஆள்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நான் ஏறிச்சென்ற விலங்கைத் தவிர வேறொரு கால்நடையும் என்னிடமில்லை. 13நான் இரவில் பள்ளத்தாக்கு வாயில் வழியாக வெளியே சென்று ‘நரி’ நீருற்றைக் கடந்து, ‘குப்பைமேட்டு’ வாயிலுக்கு வந்தேன். அங்கிருந்து, இடிந்து கிடந்த எருசலேமின் மதில்களையும், தீக்கிரையாகியிருந்த அதன் கதவுகளையும் பார்வையிட்டேன். 14அங்கிருந்து ‘ஊருணி வாயிலுக்கும்’, ‘அரசனின் குளத்திற்கும்’ சென்றேன். ஆனால் நான் சவாரி செய்த விலங்கு செல்லப் பாதை இல்லை. 15எனவே இரவிலே நான் ஆற்றோரமாக நடந்து சென்று மதில்களைப் பார்வையிட்ட பின், ‘பள்ளத்தாக்கு வாயில்’ வழியாகத் திரும்பி வந்தேன்.

16நான் எங்குச் சென்றேன் என்றும் என்ன செய்தேன் என்றும் அலுவலர் ஒருவருக்கும் தெரியாது. ஏனெனில் யூதர்களுக்கும், குருக்களுக்கும், உயர்குடி மக்களுக்கும், அலுவலர்களுக்கும், வேலையில் ஈடுபடவிருக்கும் ஏனையோருக்கும் அதுவரை ஒன்றையும் நான் சொல்லவில்லை. 17பின்னர் நான் அவர்களைப் பார்த்து, “எவ்வித இழிநிலையில் நாம் இருக்கிறோம் என்பதையும், எருசலேம் பாழடைந்து கிடப்பதையும், அதன் வாயிற் கதவுகள் தீக்கிரையாக்கப்பட்டிருப்பதையும் நீங்களே பாருங்கள்! எனவே, இனியும் நமக்குச் சிறுமை வராதபடி, எருசலேமின் மதில்களைக் கட்டியெழுப்புவோம், வாருங்கள்” என்று சொன்னேன். 18என் கடவுளின் அருட்கரம் என்னோடு இருக்கிறதையும், மன்னர் எனக்கு உரைத்ததையும் அவர்களுக்குச் சொன்னேன். அவர்களும் “வாரும் கட்டுவோம்” என்றனர்; நற்பணி செய்யத் தங்களைத் தயார் செய்து கொண்டனர்.

19ஓரோனியனான சன்பலாற்றும் அரச அலுவலனும் அம்மோனியனுமான தோபியாவும், அரபியனான கெசேமும் கேள்வியுற்று எங்களை எள்ளி நகையாடினர். “நீங்கள் என்ன காரியம் செய்கிறீர்கள்? நீங்கள் மன்னருக்கு எதிராகக் கலகம் செய்யப் போகிறீர்களா?” என்று கேட்டனர். 20நானோ அவர்களுக்கு மறுமொழியாக, “விண்ணகக் கடவுள்தாமே எங்களுக்கு வெற்றி அளிப்பார்! அவருடைய ஊழியர்களாகிய நாங்கள் கட்டட வேலையைத் தொடங்கப் போகிறோம். உங்களுக்கு எருசலேமில் பங்கில்லை, உரிமையில்லை, நினைவுச் சின்னமும் இல்லை” என்றேன்.


2:3 2 அர 25:8-10; 2 குறி 36:19; எரே 52:12-14.


அதிகாரம் 3

எருசலேமின் மதில்கள் புதுப்பிக்கப்படல்


1அப்பொழுது, பெரிய குரு எலியாசிபும், அவருடைய சகோதரக் குருக்களும் முன்வந்து ‘ஆட்டு வாயிலைக்’ கட்டி அர்ப்பணம் செய்தனர்; அதற்குக் கதவுகளைப் பொருத்தினர்; ‘மேயா காவல்மாடம்’ வரையும் ‘அன்னியேல் காவல்மாடம்’ வரையும் அர்ப்பணம் செய்தனர்.

2அவர்களுக்குப்பின் எரிகோ மக்களும், அவர்களுக்குப்பின் இம்ரியின் மகனான சக்கூரும் கட்டினர். 3பின் அசனாவாவின் வழிமரபினர் ‘மீன் வாயிலைக்’ கட்டினர்; நிலைகளை அமைத்து, கதவுகளைப் பொருத்தி, பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தனர்.

4அக்கோசு மகனான உரியாவின் மகன் மெரேமோத்து அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தார். மெசசபேலின் மைந்தரான பெராக்கியாவின் மகன் மெசுல்லாம் அடுத்த பகுதியைப் பழுது பார்த்ததார். பானாவின் மகன் சாதோக்கு அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.

5தெக்கோவாவினர் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர். ஆனால் அவர்களின் உயர்குடி மக்கள் ஆண்டவரின் பணியில் பங்கெடுக்கவில்லை. 6பாசயாகின் மகனான யோயாதாவும், பெசோதியாவின் மகனான மெசல்லாமும் ‘பழைய வாயிலைப்’ பழுது பார்த்தனர்; நிலைகளை அமைத்து, கதவுகளைப் பொருத்தி, பூட்டுக்களையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தனர். 7யூப்பிரத்தீசின் அக்கரைப்பகுதியில் வாழ்ந்த ஆளுநரின் ஆட்சிக்குட்பட்ட கிபயோனியனான மெலற்றியாவும், மெரோனியரான யாதோனும், கிபயோன் - மிஸ்பாவைச் சார்ந்தவர்களும் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர். 8பொற்கொல்லரில் ஒருவரான அர்காயாவின் மகன் உசியேல் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். நறுமண வணிகரில் ஒருவரான அனனியா அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். இவர்கள் எருசலேமின் ‘பெரிய மதில்’ வரை புதுப்பித்தார்கள். 9எருசலேம் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநரும், ஊரின் மகனுமான இரபாயா அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தார். 10இவர்களுக்கு அடுத்து, அருமப்பின் மகனான எதாயா தம் வீட்டிற்கு எதிரே இருந்த பகுதியைப் பழுதுபார்த்தார். அசாபினியாவின் மகனான அற்றூசு அதற்கு அடுத்து பகுதியைப் பழுதுபார்த்தார். 11ஆரிமின் மகனான மல்கியாவும், பகத்மோவாபின் மகனான அசுபும் மற்றொரு பகுதியையும், ‘சூளைக்காவல் மாடத்தையும்’ பழுது பார்த்தனர். 12எருசலேம் மாவட்டத்தின் மறு பாதிக்கு ஆளுநரும், அல்லோகேசின் மகனுமான சல்லூமும் அவருடைய புதல்வியரும் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர். 13ஆனூனும், சானோவாகில் வாழ்ந்தவர்களும், ‘பள்ளத்தாக்கு வாயிலைப்’ பழுதுபார்த்தனர்; அதற்குத் கதவுகளையும், பூட்டுகளையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தனர். ‘குப்பைமேட்டு வாயில்’ வரை ஆயிரம் முழம் மதிலைப் பழுதுபார்த்தார்கள். 14பெத்தக் கரேம் மாவட்டத்தின் ஆளுநரும், இரேக்காபின் மகனுமான மல்கியா, ‘குப்பைமேட்டு வாயிலைப்’ பழுது பார்த்தார்; அதைப் புதுப்பித்துக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தார்.

15மிஸ்பா மாவட்டத்தின் ஆளுநரும், கொல்கோசேயின் மகனுமான சல்லூம், ‘ஊருணிவாயிலைப்’ பழுது பார்த்தார்; அதைப் புதுப்பித்து முகடு கட்டுக் கதவுகளையும், பூட்டுகளையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தார். மேலும் அவர் அரச பூங்காவிலிருந்த ‘சேலா குளத்துச்’ சுவர்களைத் தாவீதின் ஊரிலிருந்து கீழே செல்லும் படிகள் வரை பழுது பார்த்தார். 16அவருக்குப் பிறகு, பெட்சூர் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநராய் இருந்த அசபூக்கின் மகனாகிய நெகேமியா தாவீதின் கல்லறைக்கு எதிரே, வெட்டப்பட்டிருந்த குளமும், படைவீரரின் பாசறையும் இருந்த பகுதிவரை பழுதுபார்த்தார்.


மதில் பழுதுபார்ப்பில் உதவிய லேவியர்


17அவருக்குப் பிறகு, லேவியர் பழுதுபார்த்தனர். பானியின் மகனான இரகூம் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். கெயிலா மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு ஆளுநரான அசபியா அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். 18பிறகு, அவர்களுடைய உறவினர் பழுது பார்த்தனர். கெயிலா மாவட்டத்தின் மறு பாதிக்கு ஆளுநரும் ஏனதாதின் மகனுமான பவ்வாயும் பழுதுபார்த்தார். 19மிஸ்பாவின் ஆளுநரும் ஏசுவாவின் மகனுமான ஏட்சேர் மதிலின் மூலையில் ஆயுதக் கிடங்குக்கு எதிரே இருந்த அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். 20அவருக்கு அடுத்து, சபாயின் மகன் பாரூக்கு அந்த மூலையிலிருந்து பெரிய குரு எலியாசிபின் வீட்டு வாயில்வரை பழுது பார்த்தார். 21அவருக்கு அடுத்து, ஆக்கோனின் மகனான உரியாவின் மகன் மெரேயோத்து எலியாசிபின் வீட்டு வாயிற்படி முதல் அவ்வீட்டின் கடைக்கோடிவரை பழுது பார்த்தார்.


மதில் பழுதுபார்ப்பில் உதவிய குருக்கள்


22அவருக்குப்பின் சமவெளியில் வாழ்ந்த குருக்கள் பழுது பார்த்தார்கள். 23இதன்பின் பென்யமினும், அசுபும் தங்கள் வீட்டுக்கு எதிரேயிருந்த பாகத்தைப் பழுது பார்த்தனர். அவர்களுக்குப்பின், அனனியாவின் மகனான மாசேயாவின் மகன் அசரியா, தம் வீட்டிற்கு அருகேயிருந்த பகுதியைப் பழுதுபார்த்தார். 24அவருக்குப்பின் அசரியாவின் வீட்டின் மூலையிலிருந்து மதிலின் மூலைவரையிலுள்ள மற்றொரு பகுதியை ஏனதாதின் மகன் பழுது பார்த்தார். 25மூலைக்கும் சிறைமுற்றத்தை நோக்கி அரச மாளிகையிலிருந்து உயர்ந்திருக்கும் காவல் மாடத்திற்கும் எதிரே இருந்த பகுதியை ஊசாயின் மகன் பாலால் பழுதுபார்த்தார். அவருக்குப்பின் பாரோசின் மகன் பெதாயாவும் 26ஒபேல் வாழ் கோவில் பணியாளர்களும், கிழக்கிலிருந்த ‘தண்ணீர் வாயிலின்’ எதிர்ப்புறத்தையும் உயர்ந்திருக்கும் கோபுரத்தையும் பழுதுபார்த்தனர்.


மதில் பழுதுபார்ப்பில் உதவிய ஏனையோர்


27அவருக்குபின், உயர்ந்திருந்த பெரிய காவல்மாடத்திலிருந்து ஒபேல் வரையிலுள்ள பகுதியைத் தெக்கோவாவினர் பழுது பார்த்தனர். 28‘குதிரை வாயில்’ முதற்கொண்டு குருக்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டிற்கு எதிரே உள்ள பகுதிகளைப் பழுது பார்த்தனர். 29அவர்களுக்குப்பின், இம்மேரின் மகன் சாதோக்கு தம் வீட்டிற்கு எதிரேயுள்ள பகுதியைப் பழுது பார்த்தார். அவருக்குப்பின் கீழ்வாயில் காவலரும், செக்கனியாவின் மகனுமான செமாயா பழுது பார்த்தார். 30அவர்களுக்குப் பின், செலேமியாவின் மகனான அனனியாவும், சாலபின் ஆறாவது மகனான காலூவும் மற்றொரு பகுதியைப் பழுது பார்த்தனர். அவர்களுக்குபின் பெரேக்கியாவின் மகனான மெசுல்லாம் தம் அறைக்கு எதிரே உள்ள பாகத்தைப் பழுதுபார்த்தார். 31அவருக்குப்பின், பொற்கொல்லர்களில் ஒருவரான மல்கியா கணக்கர் வாயிலுக்கு எதிரேயிருந்த கோவிற்பணியாளர், வணிகர் ஆகியோரின் குடியிருப்பிலிருந்து மூலையிலிருந்த மேல்மாடிவரையும் பழுது பார்த்தார். 32மூலையிலிருந்த மேல் மாடிக்கும் ‘ஆட்டு வாயிலுக்கும்’ இடையிலுள்ள பகுதியைப் பொற்கொல்லரும் வணிகரும் பழுது பார்த்தனர்.


அதிகாரம் 4

எதிர்ப்புகளை நெகேமியா மேற்கொள்ளல்


1நாங்கள் மதிலைக் கட்டுவதுபற்றிக் கேள்வியுற்ற சன்பலாற்று சினமுற்று வெகுண்டெழுந்து, யூதர்களை ஏளனம் செய்தான். 2தன் தோழர்கள் முன்னிலையிலும், சமாரியப் படையின் முன்னிலையிலும், “இந்த அற்ப யூதர்கள் என்ன செய்யமுடியும்? அவர்கள் சும்மா விடப்படுவார்களா? அவர்களால் பலி செலுத்த முடியுமா? ஒரு நாளில் வேலையை முடித்து விடுவார்களா? எரிந்துபோன சாம்பல் குவியலிலிருந்து அவர்களால் கற்கள் உண்டாக்க இயலுமா?” என்று எள்ளி நகையாடினான். 3அவனுக்கு அருகிலிருந்த அம்மோனியனான தோபியா “ஆமாம், அவர்கள் அதைக் கட்டுகிறார்களாம்; ஆனால், ஒரு நரி அதன் மேல் ஏறிச்சென்றால்கூட அந்தக் கல்மதில் இடிந்துவிழும்” என்று ஏளனம் செய்தான். 4“எம் கடவுளே! நாங்கள் ஏளனம் செய்யப்படுவதைப் பாரும்! இந்த இழிவு அவர்களின் தலைமேலேயே சுமத்தப்படட்டும். அந்நியரின் நாட்டில் அவர்கள் அடிமைகளாகிக் கொள்ளையடிக்கப்படட்டும். 5அவர்களின் குற்றத்தை மூடிவிடாதேயும்! அவர்களின் பாவத்தை உம் முகத்திலிருந்து கழுவிவிடாதேயும்! ஏனெனில், கட்டுவோரை இழித்துரைத்தார்கள். 6இவ்வாறு நாங்கள் மதிலைத் தொடர்ந்து கட்டினோம். எல்லா மதில்களும் பாதி உயரத்திற்கு எழும்பிவிட்டன. மக்களும் பணி செய்வதில் முழு உள்ளத்துடன் ஈடுபட்டனர்.

7சன்பலாற்று, தோபியா, அரேபியர், அம்மோனியர், அஸ்தோதியர் ஆகியோர், எருசலேமின் மதில்களைப் பழுதுபார்க்கும் வேலை முன்னேறிச் செல்வதையும், உடைப்புகள் அடைக்கப்பட்டுவருவதையும் கேள்வியுற்று மிகவும் சீற்றம் கொண்டனர். 8அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து எருசலேமின்மீது போர் தொடுக்கவும், அங்கே கலகத்தை உருவாக்கவும் சதி செய்தனர். 9நாங்களோ எங்கள் கடவுளை வேண்டினோம்; அவர்களிடமிருந்து காத்துக்கொள்ள, இரவும் பகலும் காவலர்களை அமர்த்தினோம். 10அப்பொழுது யூதா நாட்டினர், சுமப்போர் தளர்ந்து போயினர்; மண்மேடோ பெரிதாய் உள்ளது; மதில்களை நம்மால் கட்டிமுடிக்க இயலாது” என்றனர். 11எங்கள் எதிரிகளோ, “நாம் அவர்கள் நடுவே சென்று அவர்களைக் கொன்று, வேலையை நிறுத்தும்வரை, அவர்கள் இதை அறியாமலும், தெரியாமலும் இருக்கட்டும்” என்று சொல்லிக்கொண்டனர். 12அவர்களைச் சுற்றி வாழ்ந்து வந்த யூதர்கள் பத்துமுறை வந்து எங்களிடம், “எல்லாத் திசைகளிலிருந்தும் நம்மை எதிர்த்து வருகிறார்கள்” என்று அறிவித்தனர். 13எனவே மதிலுக்குப் பின்புறமாக மிகத் தாழ்வான பகுதியில் திறந்த வெளியில் மக்களைக் குடும்பம் குடும்பமாக அவர்களின் வாள், ஈட்டி வில்களோடு நிறத்தி வைத்தேன். 14தலைவர்களையும், அலுவலர்களையும், ஏனைய மக்களையும் பார்த்தேன். நான் எழுந்து அவர்களை நோக்கி, “பகைவருக்கு அஞ்சாதீர்கள். மேன்மை மிக்கவரும் அஞ்சுதற்கு உரியவருமான ஆண்டவரை மனத்தில் கொண்டு உங்கள் சகோதரர், மகன்கள், மகள்கள், மனைவியர் ஆகியோர்க்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் போராடுங்கள்” என்றேன். 15தங்கள் சதி எங்களுக்குத் தெரிந்துவிட்டது என்பதையும், அதைக் கடவுள் சிதறடித்தார் என்பதையும் எங்கள் எதிரிகள் அறிய வந்தபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம். 16அந்நாள்முதல், என் பணியாளர்களில் பாதிப்பேர் வேலை செய்தனர். மற்றப் பாதிப்பேர் ஈட்டி கேடயம், வில், மார்புக்கவசம் இவைகளை அணிந்துகொண்டு நின்றனர். மக்கள் தலைவர்கள் யூதா வீட்டார் அனைவரையும் மேற்பார்வை செய்தனர்.

17மதில் கட்டுவோரும், சுமை சுமப்பவரும் ஒரு கையால் வேலை செய்தனர்; மறு கையிலோ ஆயுதம் தாங்கியிருந்தனர். 18கட்டுவோர் ஒவ்வொருவரும் தம் வாளை இடையில் கட்டிக்கொண்டு வேலை செய்தனர். எக்காளம் ஊதுபவன் என் அருகிலேயே இருந்தான். 19பிறகு நான் தலைவர்களையும், அலுவலர்களையும் ஏனைய மக்களையும் நோக்கிக் கூறியது: “வேலை மிகுந்துள்ளது; பரந்துள்ளது; நாமோ மதில்நெடுகத் தனித்தனியே சிதறி நிற்கின்றோம். 20எந்த இடத்திலிருந்து எக்காள முழக்கம் கேட்குமோ, அந்த இடத்திற்கு எங்களிடம் ஒன்று கூடி வாருங்கள். நம் கடவுள் நமக்காகப் போர் புரிவார்”. 21இவ்வாறு நாங்கள் வேலை செய்துவந்தோம். எங்களுள் பாதிப்பேர் அதிகாலைமுதல் விண்மீன்கள் தோன்றும்வரை ஆயுதம் தாங்கியிருந்தனர்.

22அப்பொழுது மக்களைப் பார்த்து நான் கூறியது: “ஒவ்வொருவரும் தம் வேலைக்காரரோடு இரவை எருசலேமில் கழிக்கட்டும். இவ்வாறு அவர்கள் நமக்காக இரவில் காவலும் பகலில் வேலையும் செய்வர்”. 23நான், என் சகோதரர், என் ஊழியர், என் மெய்க்காவலர் யாருமே எம் உடைகளைக் களையவேயில்லை. ஒவ்வொருவரும் வலக்கையில்⁕ ஆயுதம் தாங்கியிருந்தோம்.


4:23 ‘தண்ணீர்’ எனவும் பொருள்படும்.


அதிகாரம் 5

ஏழைகள் ஒடுக்கப்படுதல்

1பின்னர் ஆடவரும் பெண்டிரும் தங்கள் இனத்தவரான யூதர்களுக்கு எதிராகப் பெரிதும் முறையிட்டனர். 2அவர்களில் சிலர், “எங்கள் புதல்வர், புதல்வியர் உள்பட நாங்கள் பலர். எனவே நாங்கள் உண்டு, உயிர் வாழும் பொருட்டு எங்களுக்குத் தானியம் கிடைக்கும்படி செய்யும்” என்றனர். 3இன்னும் சிலர் கூறியது: “எங்கள் நிலங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் அடைமானம் வைத்துப் பஞ்சத்தில் பிழைக்கத் தானியம் வாங்கினோம்” என்றனர். 4வேறு சிலர் கூறியது: “எங்கள் நிலங்களுக்காகவும் திராட்சைத் தோட்டத்திற்காகவும் மண்ணுக்குச் செலுத்த வேண்டிய தீர்வைக்காகக் கடன் வாங்கினோம். எங்கள் மக்களும் அவர்களின் மக்களைப் போன்றவர்கள் தாமே! 5எங்கள் சகோதரர்களும் எங்களைப் போன்றவர்கள் தாமே! இருப்பினும் நாங்கள், எங்கள் புதல்வரையும் புதல்வியரையும் அடிமைகளாக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே! எங்கள் புதல்வியர் ஏற்கனவே அடிமைகளாகி விட்டனர். அவர்களை மீட்க எங்களிடம் வசதியில்லை. ஏனெனில் எங்கள் நிலங்களும், திராட்சைத் தோட்டங்களும் மற்றவர் கையில் உள்ளன”.

6அவர்களது முறையீடுகளையும், இவ்வார்த்தைகளையும் கேட்டபொழுது, நான் மிகவும் சினமுற்றேன். 7நான் என்னுள் சிந்தித்தேன். பின் தலைவர்களையும், அதிகாரிகளையும் கண்டித்து அவர்களிடம் கூறியது: “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரர்களிடமிருந்து அநியாய வட்டி வாங்குவதேன்?” பிறகு அவர்களுக்கு எதிராகப் பெரும் சபையைக் கூட்டினேன்.✠ 8அவர்களைப் பார்த்து நான், “வேற்றினத்தாருக்கு விற்கப்பட்டிருந்த யூத சகோதரர்களை, நம்மால் முடிந்த அளவு மீட்டு வந்துள்ளோம். அப்படியிருக்க நீங்கள் உங்கள் சகோதரர்களை விற்கலாமா? அவர்கள் நமக்கே விற்கப்படவேண்டுமா?” என்று கேட்டேன். அவர்களோ மறுமொழி கூற இயலாது மௌனமாக இருந்தனர்.

9மீண்டும் நான் கூறியது: “நீங்கள் செய்வது சரியில்லை. நம் எதிரிகளான வேற்றினத்தார் நம்மை ஏளனம் செய்யாதவாறு நீங்கள் நம் கடவுளுக்கு அஞ்சி நடப்பதே முறை. 10நானும் என் சகோதரரும் என் பணியாளரும் கடனாகப் பணத்தையும், தானியத்தையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அக்கடனைக் கேளாது விட்டு விடுவோம். 11இன்றே நீங்களும் அவர்களது நிலங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவத் தோப்புகளையும், வீடுகளையும் நூற்றுக்கு ஒன்று வட்டியாக வாங்கிய பணம், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவைகளையும் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள்”.

12அதற்கு அவர்கள், “நீர் சொன்னபடியே நாங்கள் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். நாங்கள் அவர்களிடமிருந்து எதையும் கேட்கமாட்டோம்” என்றனர். நான் குருக்களை அழைத்து இவ் வார்த்தையின்படி செய்வோம் என்று அவர்களை ஆணையிட்டுக் கூற வைத்தேன். 13மேலும், நான் என் ஆடையை உதறிவிட்டு, இவ் வார்த்தையின்படி நடக்காத ஒவ்வொருவரையும் கடவுள் இவ்வாறே தம் வீட்டினின்றும், திருப்பணியினின்றும் உதறிவிடுவாராக. அவர்கள் இவ்வாறு உதறிவிடப்பட்டு, வெறுமையாக்கப்படுவர்” என்றேன். இதற்குச் சபையார் அனைவரும் “ஆமென்” என்று சொல்லி ஆண்டவரைப் புகழ்ந்தனர். பின்னர் மக்கள் தாங்கள் வாக்களித்தபடியே செய்தனர்.


நெகேமியாவின் தன்னலமின்மை


14மேலும் யூதா நாட்டில் ஆளுநராய் இருக்குமாறு அர்த்தக்சஸ்தா என்னை நியமித்த நாள்முதல், அதாவது மன்னரது ஆட்சியின் இருபதாம் ஆண்டுமுதல் முப்பத்திரண்டாம் ஆண்டுவரை, ஆக இப்பன்னிரண்டு ஆண்டுகளாய், நானும் என் சகோதரரும், ஆளுநர்களுக்குரிய படியை வாங்கி உண்ணவில்லை. 15எனக்கு முன்னிருந்த ஆளுநர்கள் அதிகத் தீர்வை விதித்து மக்களை வதைத்தனர். உணவு, திராட்சை இரசத்தோடு நாற்பது செக்கேல் வெள்ளியும் அவர்களிடம் வசூலித்தனர். அவர்களுடைய அலுவலர்கள் மக்கள்மீது அதிகாரம் காட்டி வந்தனர். நானோ கடவுளுக்கு அஞ்சி அவ்வாறெல்லாம் செய்யவில்லை. 16மேலும் இம்மதில் வேலைக்கு என்னை முற்றும் ஈடுபடுத்திக் கொண்டேன். என் பணியாளர்கள் அனைவரும் அவ்வேலைக்கே அங்குக் கூடிவந்தார்கள். நாங்கள் நிலம் ஏதும் வாங்கிச் சேர்க்கவில்லை. 17மேலும் யூதர்களும், மக்கள் தலைவர்களுமான நூற்றைம்பது பேரும், எங்களைச் சுற்றி அண்டை நாட்டினின்று வந்திருந்த அனைவரும் எனது பந்தியில் உணவருந்தினார்கள். 18ஒவ்வொரு நாளும் என் பந்திக்குத் தயார் செய்யப்பட்டவை பின்வருமாறு: ஒரு காளை, கொழுத்த ஆறு ஆடுகள், மேலும் கோழி வகைகள் பத்து. நாளுக்கு ஒருமுறை எல்லாவித இரசமும் ஏராளமாகக் கொள்முதல் செய்யப்பட்டது; எனினும் ஆளுநருக்குரிய படிக்கு நான் உரிமை கொண்டாடவில்லை. ஏனெனில் இம்மக்கள் பட்ட பாடு மிகப்பெரிது. 19என் இறைவா! இம் மக்களுக்கு நான் செய்துள்ள எல்லா நன்மைகளுக்கும் ஏற்ப எனக்கு ஆதரவாயிரும்.


5:7 விப 22:25; லேவி 25:35-37; இச 23:19-20.


அதிகாரம் 6

நெகேமியாவுக்கு எதிரான சதித் திட்டங்கள்


1நான் மதிலைக் கட்டி முடித்துவிட்டேன் என்றும், அதில் உடைப்பு ஒன்றுமில்லையென்றும், மேலும் இதுவரை நான் கோட்டை வாயில்களில் கதவுகள் அமைக்கவில்லை என்றும், சன்பலாற்று, தோபியா, கெசேம், அரேபியர், மற்றும் எங்கள் எதிரிகள் அறிய வந்தனர். 2அப்பொழுது, சன்பலாற்று, தோபியா, கெசேம் ஆகியோர் என்னிடம் தூதனுப்பி,” நீர் புறப்பட்டு வாரும்; ஓனோ சமவெளியிலுள்ள ஊர் ஒன்றில் சந்திப்போம்” என்றனர். ஆனால் அவர்கள் எனக்குத் தீங்கிழைக்கவே எண்ணியிருந்தனர். 3அப்பொழுது நான் அவர்களிடம் தூதனுப்பி, “முக்கியமான அலுவலில் நான் ஈடுபட்டுள்ளேன். எனவே நான் அங்குச் செல்ல இயலாத நிலையில் உள்ளேன். நான் இந்த வேலையை விட்டுவிட்டு உங்களிடம் வந்தால், இது முடங்கிவிடும் அன்றோ!” என்றேன். 4இவ்வாறாக அவர்கள் எனக்கு நான்கு முறை தூதனுப்பினார்கள். நானும் இதேமுறையில் பதில் அனுப்பினேன்.

5ஐந்தாம் முறையும் சன்பலாற்று தன் அலுவலன் மூலம் இதே செய்தியை எனக்கு அனுப்பினான். அவனுடைய கையில் திறந்த மடல் ஒன்றிருந்தது. 6அதில் எழுதுப்பட்டிருந்தது பின்வருமாறு: “கெசேமின் கூற்றின்படி வேற்றினத்தாரிடையே ஒரு செய்தி பரவியுள்ளது. அதன்படி, நீரும் யூதர்களும் கலகம் ஏற்படுத்தச் சூழ்ச்சி செய்துள்ளீர்கள். இதற்காகவே நீர் மதிலைக் கட்டி எழுப்புகிறீர். நீர் அவர்களுக்கு அரசர் ஆக விரும்புகிறீர். 7யூதாவில் ஓர் அரசர் உங்களுக்கு இருக்கிறார் என்று எருசலேமில் அறிவிக்க இறைவாக்கினர்களை நீர் ஏற்படுத்தியுள்ளீர். இச்செய்திகள் மன்னருக்கு எட்டிவிடும். எனவே நீர் வாரும். நாம் ஒன்றாக ஆலோசிக்கலாம்.”

8நான் அவனுக்குப் பதில் அனுப்பினேன்: “நீர் சொல்வதுபோல் எவையும் நடக்கவில்லை. இவையெல்லாம் நீர் செய்யும் கற்பனையே.” 9ஏனெனில் அவர்கள் அனைவரும் எங்களை அச்சுறுத்தினர், “அவர்கள் கைகள் வேலை செய்வதில் தளர்ந்துவிடும். வேலை நின்று விடும்” என்று சொல்லி வந்தனர். எனவே, கடவுளே! என் “கைளை வலிமைப்படுத்தும்.” 10நான், மெகேற்றபேலுக்குப் பிறந்த தெலாயாவின் மகன் செமாயாவின் வீட்டுக்குச் சென்றேன். அவன் அங்கு அடைபட்டுக்கிடந்தான். அவன், “நாம் கடவுளின் இல்லமான கோவிலின் உள்ளே சந்திப்போம். கோவிலின் கதவுகளை நாம் மூடிக்கொள்வோம். ஏனெனில் அவர்கள் உம்மைக் கொல்ல வருகிறார்கள். உம்மைக் கொல்ல இரவில் வருகிறார்கள்.” 11நான் மறுமொழியாக: “என்னைப்போன்ற மனிதன் ஓடி ஒளிவது முறையா? நான் பிழைத்துக் கொள்ளக் கோவிலுக்குள் செல்வதா? நான் செல்ல மாட்டேன்” என்றேன்.

12அப்பொழுது, கடவுள் அவனை அனுப்பவில்லை என்றும், தோபியாவும் சன்பலாற்றும் அவனுக்குக் கையூட்டுக் கொடுத்து எனக்கு எதிராக இறைவாக்கு உரைக்கச் செய்தனர் என்றும் நான் அறிந்து கொண்டேன். 13அஞ்சியவாறு நான் இதைச் செய்யவும், இதனால் பாவம் கட்டிக்கொள்ளவும், என் பெயருக்கு இழிவு ஏற்படுத்தி என்னைச் சிறுமைப்படுத்தவும் அவர்கள் அவனுக்குக் கையூட்டுத் தந்திருந்தனர். 14‘என் கடவுளே! தோபியா, சன்பலாற்று இவர்களின் இச்செயல்களையும் இறைவாக்கினனான நொவாதியாவையும் என்னை அச்சுறுத்த முயன்ற ஏனைய இறைவாக்கினர்களையும் மறந்து விடாதேயும்.’


மதில் கட்டும் பணி நிறைவுறுதல்


15மதில் ஐம்பத்திரண்டு நாள்களுள் கட்டப்பட்டு எலூல் மாதம் இருபத்தைந்தாம் நாளில் நிறைவடைந்தது. 16இதை எங்கள் எதிரிகள் அனைவரும் கேள்வியுற்றபோது, எங்களைச் சூழ்ந்திருந்த எல்லா நாட்டினரும் அஞ்சி, மனம் தளர்ந்து போயினர்; ஏனெனில் இவ்வேலை நம் கடவுளின் உதவியால் நிறைவேறியது என்று கண்டனர்.

17அக்காலத்தில் யூதாவின் தலைவர்கள் தோபியாவுக்குப் பல மடல்கள் அனுப்பி வந்தார்கள். தோபியாவின் மடல்களும் அவர்களுக்கு வந்து கொண்டிருந்தன. 18ஏனெனில், யூதாவில் பலர் அவனுக்கு வாக்குறுதி தந்திருந்தார்கள். ஏனென்றால் அவன், ஆரகின் மகனான செக்கனியாவுக்கு மருமகன். அவனுடைய யோகனான், பெரக்கியாவுக்குப் பிறந்த மெசுல்லாவின் மகளை மணந்திருந்தான். 19எனவே அவர்கள் எனக்கு முன்பாக அவனது நற்செயல்களைப்பற்றிச் சொல்வார்கள். நான் சொன்னதை அவனிடம் சொல்வார்கள். என்னை அச்சுறுத்தும்படி தோபியா மடல்கள் அனுப்பிக் கொண்டிருந்தான்.


அதிகாரம் 7

1மதிலைக் கட்டி முடித்தபின், நான் கதவுகளை அமைத்தேன்; வாயிற் காவலர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் அமர்த்தினேன். 2என் சகோதரர் அனானியிடமும், கொத்தளத் தலைவர் அனனியாவிடமும், எருசலேமின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தேன். ஏனெனில் அனானி மற்றவர்களை விட உண்மையானவர்; கடவுளுக்கு அஞ்சியவர். 3நான் அவர்களைப் பார்த்து, “வெயில் ஏறும்வரை எருசலேமின் கதவுகளைத் திறக்க வேண்டாம்; காவலர்கள் போகுமுன் கதவுகளை மூடித் தாழிடுங்கள்; எருசலேமில் வாழ்வோரைக் காவலராய் நியமியுங்கள்; அவர்களுள் சிலர் குறிக்கப்பட்ட இடங்களிலும் மற்றும் சிலர் தங்கள் வீட்டிற்கு எதிரேயும் காவல் புரியட்டும்” என்று சொன்னேன்.


சிறையிருப்பினின்று திரும்பியோர் பட்டியல்

(எஸ்ரா 2:1-70)


4எருசலேம் நகர் பரந்ததும் பெரியதுமாய் இருந்தது. ஆனால் அதனுள் வாழ்ந்து வந்த மக்கள் வெகு சிலரே. வீடுகள் இன்னும் கட்டப்படவில்லை. 5அப்பொழுது கடவுள் என்னைத் தூண்டியபடி, தலைவர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரையும் வழிமரபு வாரியாகப் பதிவு செய்தேன். அப்பொழுது அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்தவரின் தலைமுறைப் பதிவேட்டைக் கண்டுபிடித்தேன். அதில் எழுதியிருக்கக் கண்டது பின்வருமாறு:

6பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரால் சிறைப்படுத்தப்பட்டு, பின்னர் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு, எருசலேமுக்கும் யூதாவில் அவரவர் நகருக்கும் திரும்பி வந்த மாநில மக்கள் இவர்களே: செருபாபேல், ஏசுவா, நெகேமியா, அசரியா, இரகமியா, நகமானி, மோர்தக்காய், பில்சான், மிசுபெரேத்து, பிக்வாய், நெகூம், பானா.

7இவர்களோடு வந்த இஸ்ரயேல் மக்களில் ஆடவரின் எண்ணிக்கை: 8பாரோசின் புதல்வர் இரண்டாயிரத்து நூற்றுமுப்பதிரண்டு பேர்; 9செபாற்றியாவின் புதல்வர் முந்நூற்று எழுபத்திரண்டு பேர்; 10அராகின் புதல்வர் அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்; 11பாகாத் மோவாபின் புதல்வரான ஏசுவா, யோவாபு ஆகியோரின் புதல்வர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப் பேர்; 12ஏலாமின் புதல்வர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்; 13சத்தூவின் புதல்வர் எண்ணூற்று நாற்பத்தைந்து பேர்; 14சக்காயின் புதல்வர் எழுநூற்று அறுபது பேர்; 15பின்னூயின் புதல்வர் அறுநூற்று நாற்பத்தெட்டு பேர்; 16பேபாயின் புதல்வர் அறுநூற்று இருபத்தெட்டு பேர்; 17அசகாதின் புதல்வர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டு பேர்; 18அதோனிக்காமின் புதல்வர் அறுநூற்று அறுபத்தேழு பேர்; 19பிக்வாயின் புதல்வர் இரண்டாயிரத்து அறுபத்தேழு பேர்; 20ஆதினின் புதல்வர் அறுநூற்று ஐம்பத்தைந்து பேர்; 21எசேக்கியாவின் வழிவந்த அற்றேரின் புதல்வர் தொண்ணூற்றெட்டுப் பேர்; 22ஆசுமின் புதல்வர் முந்நூற்று இருபத்தெட்டுப் பேர்; 23பேசாயின் புதல்வர் முந்நூற்று இருபத்து நான்கு பேர்; 24ஆரிப்பின் புதல்வர் நூற்றுப்பன்னிரண்டு பேர்; 25கிபயோனின் புதல்வர் நூற்றுத் தொண்ணூற்றைந்து பேர்; 26பெத்லகேம், நேற்றோபாவின் ஆண்கள் நூற்று எண்பத்தெட்டுப் பேர்; 27அனத்தோத்தின் ஆண்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர்; 28பெத்தசுமாவேத்தின் ஆண்கள் நாற்பத்திரண்டு பேர்; 29கிரியத்து எயாரிம், கெபிரா, பெயரோத்து ஆகியவற்றின் ஆண்கள் எழுநூற்று நாற்பத்திமூன்று பேர்; 30இராமா, மற்றும் கேபாவின் ஆண்கள் அறுநூற்று இருபத்தொரு பேர்; 31மிக்மாசின் ஆண்கள் நூற்று இருபத்திரண்டு பேர்; 32பெத்தேல், மற்றும் ஆயினின் ஆண்கள் நூற்று இருபத்து மூன்று பேர்; 33மற்றொரு நெபோவின் ஆண்கள் ஐம்பத்திரண்டு பேர்; 34மற்றொரு ஏலாமின் புதல்வர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்திநான்கு பேர்; 35ஆரிமின் புதல்வர் முந்நூற்று இருபது பேர்; 36எரிகோவின் புதல்வர் முந்நூற்று நாற்பத்தைந்து பேர்; 37லோது, ஆதிது, ஓனோ ஆகியோரின் புதல்வர் எழுநூற்று இருபத்தொரு பேர்; 38செனாவின் புதல்வர் மூவாயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பது பேர்.

39குருக்கள்; ஏசுவாவின் வீட்டைச் சார்ந்த எதாயாவின் புதல்வர் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்; 40இம்மேரின் புதல்வர் ஆயிரத்து ஐம்பத்திரண்டு பேர்; 41பஸ்கூரின் புதல்வர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழு பேர்; 42ஆரிமின் புதல்வர் ஆயிரத்துப் பதினேழு பேர்.

43லேவியர்: ஓதவாவின் புதல்வரில், கத்மியேலின் வழிவந்த ஏசுவாவின் புதல்வர் எழுபத்து நான்கு பேர்; 44பாடகர்: ஆசாபின் புதல்வர் நூற்று நாற்பத்தெட்டுப் பேர்; 45வாயிற்காவலர்: சல்லூம், ஆற்றேர், தல்மோன், அக்குபு, அத்தித்தா, சோபாய் ஆகியோரின் புதல்வர் நூற்று முப்பத்தெட்டுப் பேர்.

46கோவில் ஊழியர்: சிகாவின் புதல்வர்; அசுப்பாவின் புதல்வர்; தபாயோத்தின் புதல்வர்; 47கேரோசின் புதல்வர்; சீயாவின் புதல்வர்; கிதோனின் புதல்வர்; 48இலபனாவின் புதல்வர்; அகாபாவின் புதல்வர்; சல்மாயின் புதல்வர்; 49அனானின் புதல்வர்; கிதேலின் புதல்வர்; ககாரின் புதல்வர்; 50இரயாயாவின் புதல்வர்; இரசினின் புதல்வர்; நெக்கோதாவின் புதல்வர்; 51கசாமின் புதல்வர்; உசாவின் புதல்வர்; பாசயாகின் புதல்வர்; 52பேசாயின் புதல்வரான மெயோனிமின் புதல்வர்; நெபுசசிமின் புதல்வர்; 53பக்புகின் புதல்வரான அகுப்பாவின் புதல்வர்; அர்குரின் புதல்வர்; 54பட்சிலித்தின் புதல்வர்; மெகிதாவின் புதல்வர்; அர்சாவின் புதல்வர்; 55பர்கோசின் புதல்வர்; சீசாவின் புதல்வர்; தேமாகின் புதல்வர்; 56நெட்சியாகின் புதல்வர்; அற்றிப்பாவின் புதல்வர்;

57சாலமோனுடைய பணியாளர்களின் புதல்வர்; சோற்றாவின் புதல்வர்; சொபரேத்தின் புதல்வர்; பெரிதாவின் புதல்வர்; 58ஏலாவின் புதல்வர்; தர்கோனின் புதல்வர்; கித்தேலின் புதல்வர்; 59செபத்தியாவின் புதல்வர்; அற்றிலின் புதல்வர்; பொக்கரேத்து சபாயிமின் புதல்வர்; அம்மோனின் புதல்வர்; 60கோவில் பணியாளரும் சாலமோனின் பணியாளரின் புதல்வர்களும் மொத்தம் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டு பேர்.

61மேலும் தெல்மெல்லா, தெல்கர்சா, கெருபு, அதோன் இம்மேர் ஆகிய இடங்களிலிருந்து வந்தும், தங்கள் மூதாதையரின் குலத்தையும், வழிமரபையும், தாங்கள் இஸ்ரயேலைச் சார்ந்தவர்கள் என்பதையும் எண்பிக்க இயலாதவர்கள் பின்வருமாறு: 62தெலாயாவின் புதல்வர் தோபியாவின் புதல்வர், நெக்கோதாவின் புதல்வர் ஆகிய அறுநூற்று நாற்பத்திரண்டு பேர். 63குருக்கள்: ஒபய்யாவின் புதல்வர்; அக்கோசின் புதல்வர்; பர்சில்லாயின் புதல்வர். பர்சில்லாய் கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் புதல்வியருள் ஒருத்தியை மணந்ததால் அப்பெயரால் அழைக்கப்பட்டார். 64இவர்கள் அனைவரும் தங்கள் தலைமுறை அட்டவணை எழுதப்பட்ட ஏடுகளைத் தேடியும் கிடைக்காததால் குருத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள். 65ஊரிம், தும்மிம் கொண்ட குரு ஒருவர் வரும் வரை திருத்தூயக உணவில் பங்கு கொள்ளக்கூடாது என்று அவர்களுக்கு ஆளுநர் ஆணையிட்டார்.✠

66மக்கள் சபையாரின் மொத்த எண்ணிக்கை நாற்பத்திரண்டு ஆயிரத்து முந்நூற்று அறுபது. 67அவர்களைத் தவிர அவர்களின் ஆண் ஊழியர்களும் பெண் ஊழியர்களும் ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழு. மற்றும் அவர்களுக்கு இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும், பாடகிகளும் இருந்தார்கள். 68அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு; கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து; 69அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து; கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்றிருபது.

70இறுதியாக குலத்தலைவர்களில் சிலர் வேலைக்காகச் கொடுத்தது பின்வருமாறு: ஆளுநர், கருவூலத்திற்கு ஆயிரம் பொற்காசுகள், ஐம்பது பாத்திரங்கள், ஐந்நூற்று முப்பது குருத்துவ ஆடைகள் ஆகியவற்றைத் தந்தார். 71குலத்தலைவர்களில் வேறுசிலர், வேலைக்காகக் கருவூலத்திற்கு இருபதாயிரம் பொற்காசுகளும் ஆயிரத்து ஐநூறு கிலோகிராம்⁕ வெள்ளியும் கொடுத்தார்கள். 72ஏனைய மக்கள் கொடுத்ததாவது: இருபதாயிரம் பொற்காசுகள், ஆயிரத்து முந்நூற்று எழுபது கிலோகிராம்⁕ வெள்ளி, அறுபத்தேழு குருத்துவ உடைகள். 73குருக்களும், லேவியரும், வாயிற்காவலரும், பாடகரும், மக்களுள் சிலரும், கோவில் பணியாளரும் ஆகிய இஸ்ரயேலர் அனைவரும் தம் நகர்களில் குடியேறினர். ஏழாவது மாதம் வந்தபோது இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தம் நகர்களில் இருந்தார்கள்.✠


7:65 விப 28:30; இச 33:8.


7:71 ‘இரண்டாயிரத்து இருநூறு மினா’ என்பது எபிரேய பாடம். 7:72 ‘இரண்டாயிரம் மினா’ என்பது எபிரேய பாடம். 7:73 1 குறி 9:2; நெகே 11:3.


அதிகாரம் 8

திருச்சட்டத்தை மக்கள்முன் எஸ்ரா வாசித்தல்


1மக்கள் அனைவரும், ஒரே ஆளென, தண்ணீர் வாயிலுக்கு எதிரே இருந்த வளாகத்தில் ஒன்றுகூடினர். ஆண்டவர் இஸ்ரயேலுக்குக் கொடுத்த மோசேயின் திருநூலைக் கொண்டுவருமாறு திருநூல் வல்லுநர் எஸ்ராவை வேண்டினர். 2அவ்வாறே ஏழாம் மாதம் முதல்நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார். 3தண்ணீர் வாயிலுக்குமுன் இருந்த வளாகத்தில் காலைமுதல் நண்பகல்வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவி கொடுத்தனர்.

4திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மர மேடையின்மேல் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு அருகே வலப்பக்கத்தில் மத்தித்தியா, சேமா, அனாயா, உரியா, இல்க்கியா, மாசேயா ஆகியோரும், இடப்பக்கத்தில் பெதாயா, மிசாவேல், மல்கியா, ஆசும், அசுபதீனா, செக்கரியா, மெசுல்லாம் ஆகியோரும் நின்று கொண்டிருந்தார்கள். 5எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். 6அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி “ஆமென்! ஆமென்!” என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள்.

7மேலும் லேவியரான ஏசுவா, பானி, செரேபியா, யாமின், கூபு, சபத்தாய், ஓதியா, மாசேயா, கெலிற்றா, அசரியா, யோசபாத்து, அனான், பெலாயா ஆகியோர் சட்டத்தை மக்களுக்கு விளக்கினார்கள். மக்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். 8மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர்.

9ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: “இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுதுபுலம்ப வேண்டாம்” என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின் சொற்களைக்கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள். 10அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்; எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பிவையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை” என்று கூறினார்.

11எனவே லேவியர் எல்லா மக்களையும் நோக்கி, “அமைதியாயிருங்கள்; ஏனெனில் இன்று புனித நாள், துயரம் கொள்ளாதீர்கள்” எனச் சொல்லி அழுகையை அமர்த்தினார்கள். 12எல்லா மக்களும் அவர்களுக்குக் கூறப்பட்ட வார்த்தைகளைப் புரிந்துகொண்டதால், உண்ணவும், குடிக்கவும், உணவு அனுப்பவும், மகிழ்ச்சி கொண்டாடவும் புறப்பட்டுச் சென்றார்கள்.


கூடாரத் திருவிழா


13இரண்டாம் நாள் அனைத்து மக்களின் குலத்தலைவர்களும், குருக்களும், லேவியர்களும், திருநூல் வல்லுநரான எஸ்ராவிடம் திருச்சட்டத்தின் சொற்களைக் கற்றுக்கொள்ளக் கூடி வந்தார்கள். 14அப்பொழுது அவர்கள், “ஏழாம் மாதத் திருவிழாக் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் கூடாரங்களில் தங்கியிருக்க வேண்டும்” என்று ஆண்டவர் மோசே வழியாகத் தந்த கட்டளை திருச்சட்டத்தில் எழுதியிருக்கக் கண்டார்கள். 15ஆகையால், “திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, கூடாரங்கள் அமைப்பதற்கு மலைகளுக்குச் சென்று ஒலிவக் கிளைகள், காட்டு ஒலிவக் கிளைகள், மிருதுச்செடி கிளைகள், பேரீச்ச ஓலைகள் மற்றும் அடர்ந்த மரக் கிளைகளையும் கொண்டு வாருங்கள்” என்று தங்களுடைய நகரங்கள் எல்லாவற்றிலும் எருசலேமிலும் பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்கள்.

16எனவே மக்கள் புறப்பட்டுச் சென்று, அவற்றைக் கொண்டு வந்தார்கள். ஒவ்வொருவரும், தம் வீட்டின் மேல்மாடியிலும் தங்கள் முற்றங்களிலும், கடவுளின் இல்லமுற்றங்களிலும், தண்ணீர் வாயில் வளாகத்திலும், எப்ராயிம் வாயில் வளாகத்திலும் தமக்குக் கூடாரங்கள் அமைத்துக் கொண்டார்கள். 17அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த சபையார் அனைவரும் கூடாரங்கள் அமைத்து அக்கூடாரங்களில் தங்கினர். நூனின் மகன் யோசுவாவின் காலத்திலிருந்து அன்றுவரை இஸ்ரயேல் மக்கள் இவ்விதம் செய்ததில்லை. அன்று பெருமகிழ்ச்சி நிலவியது. 18எஸ்ரா முதல்நாள் தொடங்கிக் கடைசிநாள்வரை கடவுளின் திருச்சட்டநூலை உரக்க வாசித்தார். அவர்கள் ஏழு நாளளவும் திருவிழாக் கொண்டாடினர். சட்ட ஒழுங்கின்படி, எட்டாம் நாள் பெரும் சபையைக் கூட்டினர்.


8:14-15 லேவி 23:33-36, 39-43; இச 16:13-15.


அதிகாரம் 9

1சாக்கு உடை அணிந்து, புழுதியைத் தங்கள்மேல் பூசிக் கொண்டு நோன்பிருக்குமாறு அம்மாதத்தின் இருபத்து நான்காம் நாளன்று மக்கள் ஒன்று கூட்டப்பட்டனர். 2இஸ்ரயேல் இனத்தார் வேற்றினத்தாரிடமிருந்து பிரிந்து நின்றனர். எழுந்து நின்று தங்கள் பாவங்களையும், தங்கள் முன்னோரின் குற்றங்களையும் அறிக்கையிட்டனர். 3ஒவ்வொரு நாளும் பகலில் கால் பகுதியைத் தங்கள் இடத்திலேயே எழுந்து நின்று கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்டநூலை வாசிப்பதிலும், மற்றொரு கால் பகுதியைத் தங்கள் பாவங்களை அறிக்கையிடுவதிலும், தங்கள் கடவுளாகிய ஆண்டவரைத் தொழுவதிலும் செலவழித்தனர்.

4மீண்டும், லேவியரான ஏசுவா, பானி, கெத்மியேல், செபானியா, பூனி, செரேபியா, பானி, கெனானி ஆகியோர், படியின்மேல் நின்று கொண்டு உரத்த குரலில் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கதறினார்கள். 5பின்பு, லேவியரான ஏசுவா, கத்மியேல், பானி, அசபினியா, செரேபியா, ஓதியா, செபானியா, பெத்தகியா எழுந்து, “என்றுமுள உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுங்கள்” என்றனர். அவர்கள் பதில்மொழியாக உரைத்தது. “எல்லாப் புகழ்ச்சிக்கும், வாழ்த்துக்கும் எட்டாத மாட்சி மிகு உமது பெயர் போற்றி! போற்றி!”


மக்களின் மன்றாட்டு


6நீர் ஒருவரே ஆண்டவர்! நீரே வானத்தையும், விண்வெளி வானங்களையும், வான அணிகளையும், நிலத்தையும், அதிலுள்ள அனைத்தையும், கடலையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்தவர்! அவற்றையெல்லாம் வாழ வைப்பவர்! வானக அணிகள் உமக்கு அடிபணிகின்றன. 7ஆபிராமைத் தேர்ந்தெடுத்து, ஊர் என்ற கல்தேயர்களின் நகரினின்று வெளிக்கொணர்ந்து அவர் பெயரை ஆபிரகாம் என்று மாற்றியமைத்த கடவுளாகிய ஆண்டவர் நீரே!✠ 8உம்மீது பற்றுக் கொண்ட அவருடைய இதயத்தைக் கண்டீர்! கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியர் ஆகியோரின் நாட்டை அவருடைய வழி மரபினருக்குத் தருவதாக அவரோடு உடன்படிக்கை செய்தீர்! நீர் நீதி உள்ளவர்! எனவே உமது வார்த்தையை நிறைவு செய்தீர்!✠

9எகிப்தில் வாழ்ந்த எங்கள் மூதாதையரின் துன்பத்தைக் கண்ணோக்கினீர். செங்கடலில் அவர்களின் கூக்குரலுக்குச் செவிசாய்த்தீர்!✠ 10பார்வோனிடமும், அவன் அலுவலர்கள் எல்லோரிடமும் அவனது நாட்டின் அனைத்து மக்களிடமும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் விளங்கச் செய்தீர்! ஏனெனில் எம் மூதாதையர்களை அவர்கள் செருக்குடன் நடத்தினார்கள் என்பதை நீர் அறிவீர்! இந்நாளில் இருப்பது போல் உமது பெயரை நீர் விளங்கச் செய்தீர்!✠ 11அவர்கள்முன் கடலைப் பிளந்தீர்; எனவே, கடலின் நடவே உலர்ந்த தரையில் அவர்கள் கடந்து போனார்கள். அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையோ கல்லைப் போன்று ஆழ்கடலின் பாதாளத்திற்குள் வீழ்த்தினீர்!✠ 12நீர் அவர்களைப் பகலில் மேகத் தூணினால் வழி நடத்தினீர்! இரவில் நெருப்புத் தூணினால் அவர்களின் வழிக்கு ஒளி கொடுத்து அதில் நடக்கச் செய்தீர்!✠ 13நீர் சீனாய் மலை இறங்கினீர்! விண்ணிலிருந்து அவர்களோடு பேசினீர்! நேர்மையான நீதி நெறிகளையும், உண்மையான சட்டங்களையும், நல்ல நியமங்களையும் விதிமுறைகளையும் தந்தீர்! 14புனிதமான ஓய்வு நாளைப் பற்றி அவர்களுக்குக் கற்பித்தீர்! விதிமுறைகளையும், நியமங்களையும், சட்டங்களையும், உமது அடியாராகிய மோசே வழியாக அவர்களுக்குக் கட்டளையிட்டீர்!

15அவர்கள் பசியாயிருக்கையில், விண்ணிலிருந்து உணவு அளித்தீர்! அவர்கள் தாகமாயிருக்கையில், பாறையிலிருந்து தண்ணீர் புறப்படச் செய்தீர்! நீர் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த நாட்டை அடைந்து அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு பணித்தீர்.✠ 16ஆனால் அவர்களும், எங்கள் முன்னோரும், செருக்குடன் நடந்து வணங்காக் கழுத்தினராகி, உமது விதிமுறைகளுக்குச் செவி கொடுக்கவில்லை. 17அவர்கள் செவி கொடுக்க மறுத்ததுமல்லாமல், நீர் அவர்களிடம் செய்திருந்த உமது அருஞ்செயல்களையும் நினைத்துப் பார்க்கவுமில்லை. மாறாக, வணங்காக் கழுத்தினராய்க் கலகம் செய்து ஒரு தலைவரை ஏற்படுத்தி, அடிமை வாழ்வுக்கு மீண்டும் செல்ல முற்பட்டனர். தயை, சாந்தம், இரக்கம், நீடிய பொறுமை மற்றும் பரிவிரக்கம் கொண்ட கடவுளான நீரோ அவர்களைத் தள்ளிவிடவில்லை.✠

18அவர்கள் ஒரு வார்ப்புக் கன்றுக் குட்டியைச் செய்து, ‘உங்களை எகிப்திலிருந்து மீட்டுவந்த உங்கள் கடவுளைப் பாருங்கள்’ என்று பெரும் இறைநிந்தனைகளைச் செய்த போதும்,✠ 19நீர் உமது பேரிரக்கத்தினால் அவர்களைப் பாலை நிலத்திலே கைவிட்டு விடவில்லை, அவர்களைப் பகலில் வழிநடத்தி வந்த மேகத் தூணையும், அவர்கள் செல்ல வேண்டிய பாதையை இரவில் காட்டி வந்த நெருப்புத்தூணையும் அவர்களை விட்டு விலக்கவுமில்லை. 20அவர்களுக்கு அறிவு புகட்ட உமது நல்ல ஆவியைக் கொடுத்தீர். உமது மன்னாவை அவர்களுக்கு உண்ணக் கொடுக்க நீர் மறுக்கவில்லை. அவர்களின் தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்தீர். 21நாற்பது ஆண்டுகளாய்ப் பாலை நிலத்தில் அவர்களைப் பராமரித்தீர். அவர்களுக்கு எந்தக் குறையுமில்லை. அவர்கள் ஆடைகள் கிழிந்து போகவுமில்லை. அவர்கள் கால்கள் கொப்பளிக்கவுமில்லை.

22அரசுகளையும், மக்களினங்களையும் அவர்களிடம் ஒப்புவித்தீர். அவற்றின் எல்லைவரையும் பங்கிட்டளித்தீர். இவ்வாறு அவர்கள் சீகோன் நாட்டையும், எஸ்போன் அரசனின் நாட்டையும் ஓகு அரசனின் நாடான பாசானையும் உரிமையாக்கிக் கொண்டனர்.✠ 23அவர்களின் மக்களை விண்மீன்களைப் போன்று பெருகச் செய்தீர். அவர்கள் உட்புகுந்து உரிமையாக்கிக் கொள்ளும்படி அவர்களின் மூதாதையர்களுக்கு வாக்களித்திருந்த நாட்டிற்கு அவர்களை அழைத்துவந்தீர்.✠ 24அவர்களின் மக்கள் அங்குவந்து, அந்நாட்டை உரிமையாக்கிக் கொண்டனர். அவர்களின் முன்னிலையில் அந்நாட்டின் மக்களான கானானியரை அடக்கினீர். அவர்களையும் அவர்கள் மன்னர்களையும், நாட்டின் மக்களையும் அவர்கள் கையில் ஒப்புவித்து, அவர்களின் விருப்பத்தின்படி நடத்த விட்டு விட்டீர்.✠ 25எனவே அவர்கள் அரண்சூழ் நகர்களையும் செழிப்பான நிலத்தையும் கைப்பற்றினர். எல்லாவித உடைமைகளையும் கொண்ட வீடுகளையும், வெட்டப்பட்ட கிணறுகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கனிதரும் மிகுதியான மரங்களையும் சொந்தமாக்கிக் கொண்டனர். உண்டு, நிறைவு கொண்டு, கொழுத்துப் போயினர். மிகுதியான உமது நன்மைத்தனத்தை அனுபவித்து மகிழ்ந்தனர்.✠

26இருப்பினும், அவர்கள் கீழ்ப்படியாது, உமக்கு எதிராகச் கிளர்ச்சி செய்தனர்; உமது திருச்சட்டத்தைப் புறக்கணித்தனர். உம்மை நோக்கித் திரும்பும்படி அவர்களை எச்சரித்த உமது இறைவாக்கினர்களைக் கொன்றனர். இவ்வாறு பெரும் இறை நிந்தனைகளைச் செய்தார்கள். 27அப்பொழுது நீர் அவர்களை எதிரிகளிடம் கையளித்தீர். அவர்கள் அவர்களைத் துன்புறுத்தினர். தங்களது துன்ப வேளையில் உம்மை நோக்கிக் கூக்குரலிட்டனர். நீர் விண்ணிலிருந்து கேட்டருளினீர். அளவுகடந்த உமது இரகத்தினால் அவர்களுக்கு விடுதலைத் தலைவர்களைத் தந்து, அவர்களின் எதிரிகளிடமிருந்து விடுவித்தீர். 28அவர்கள் அமைதி கண்டபின்னர், உமது திருமுன் மீளவும் தீயது செய்யத் தலைப்பட்டனர். நீர் அவர்களை அவர்களின் எதிரிகளிடம் கையளித்தீர். எதிரிகள் அவர்களை அடக்கி ஆண்டார்கள். எனவே மீண்டும் உம்மிடம் கூக்குரலிட்டார்கள். நீரோ விண்ணிலிருந்து செவிசாய்த்து உமது பேரிரக்கதின்படி பலமுறை அவர்களுக்கு விடுதலையளித்தீர். 29உமது திருச்சட்டத்துக்கு திரும்பிவர அவர்களை நீர் எச்சரித்தீர். அவர்களோ செருக்குற்றவர்களாய் உமது விதிமுறைகளுக்குச் செவிசாய்க்காமல், உமது நீதிநெறிகளுக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஒருவர் அவற்றைக் கடைப்பிடித்தால் வாழ்வு பெறமுடியும். இருப்பினும், அவர்கள் பிடிவாதமாகப் புறக்கணித்தனர்; வணங்காக் கழுத்தினராக அடிபணிய மறுத்தனர்.✠ 30நீரோ பல்லாண்டுகளாய் அவர்கள்மேல் பொறுமையாய் இருந்தீர். இறைவாக்கினர்மூலம் உமது ஆவியால் அவர்களை எச்சரித்து வந்தீர். இருப்பினும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. எனவே நாடுகளின் மக்களுக்கு அவர்களைக் கையளித்தீர்.✠ 31ஆயினும் உமது பேரிரக்கத்தின் பொருட்டு, நீர் அவர்களை அழித்து, விடவுமில்லை. கைவிட்டு விடவுமில்லை; ஏனெனில், நீரே கனிவும் கருணையும் உள்ள கடவுள்.

32எங்கள் கடவுளே! மேன்மை மிக்க வரும், வல்லவரும், அஞ்சுவதற்குரியவரும், உடன்படிக்கையையும், பேரிரக்கத்தையும் காப்பவருமான கடவுளே! அசீரிய மன்னர்களின் காலமுதல் இன்றுவரை, எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் குருக்களுக்கும், எங்கள் இறைவாக்கினர்களுக்கும், எங்கள் மூதாதையர்களுக்கும், உம் மக்கள் எல்லாருக்கும் நேரிட்டுள்ள துன்பங்கள் அனைத்தையும் அற்பமாய் எண்ணாதேயும்.✠ 33எமக்கு நேரிட்டவை அனைத்திலுமே நீர் நீதியுள்ளவர். ஏனெனில் நீர் உமது சொல்லுறுதியைக் காட்டியுள்ளீர். நாங்களோ தீயவை செய்துள்ளோம். 34எங்கள் அரசர்களும், எங்கள் தலைவர்களும், எங்கள் குருக்களும், எங்கள் மூதாதையர்களும், உமது திருச்சட்டத்தைக் கடைப் பிடிக்கவில்லை. உமது விதிமுறைகளையும், நீர் அவர்களுக்குக் கொடுத்துள்ள எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தவில்லை. 35உமது நல்லுளத்திற்கேற்ப அவர்களுக்குத் தந்துள்ள அவர்களின் நாட்டிலும், அவர்களுக்குத் தந்துள்ள பரந்த, செழிப்பான நிலத்திலும் அவர்கள் உமக்கு ஊழியம் செய்யவுமில்லை, தங்கள் தீச்செயல்களை விட்டு விலகவுமில்லை. 36நாங்கள் இப்பொழுது அடிமைகளாக இருக்கிறோம். அதன் நற்கனிகளையும் நற்பலன்களையும் அனுபவிக்கும்படி நீர் எம் முன்னோருக்குக் கொடுத்த வளமிகு நாட்டிலேயே நாங்கள் அடிமைகளாக இருக்கிறோம். 37எங்கள் பாவங்களால் இந்நாட்டின் மிகுந்த விளைச்சல் நீர் எங்கள் மீது ஏற்படுத்தியுள்ள மன்னர்களுக்கே சேருகிறது. அவர்களோ தங்கள் விருப்பப்படி எங்களையும் எங்கள் கால்நடைகளையும் ஆட்டிப் படைக்கிறார்கள். நாங்களோ மிகுந்த வேதனையில் அமிழ்ந்துள்ளோம்.


ஒப்பந்தத்தில் மக்கள் கையொப்பமிடல்


38இவற்றின்பொருட்டே நாங்கள் நிலையான உடன்படிக்கை செய்து அதை எழுதிவைத்திருக்கிறோம். எங்கள் தலைவர்கள், லேவியர்கள் மற்றும் குருக்கள் அதில் தங்களது முத்திரையை இட்டுள்ளார்கள்.


9:7 தொநூ 11:31; 12:1; 17:5. 9:8 தொநூ 15:18-21. 9:9 விப 3:7; 14:10-12. 9:10 விப 7:8-12:32. 9:11 விப 14:21-29; 15:4-5. 9:12 விப 13:21-22. 9:13-14 விப 19:18-23:33. 9:15 விப 16:4-5; 17:1-7; இச 1:21. 9:16-17 எண் 14:1-4; இச 1:33. 9:17 விப 34:6; எண் 14:18. 9:18 விப 32:1-4. 9:19-21 இச 8:2-4. 9:22 எண் 21:21-35. 9:23 தொநூ 15:5; 22:17; யோசு 3:14-17. 9:24 யோசு 11:23. 9:25 இச 6:10-11. 9:26-28 நீத 2:11-16. 9:29 லேவி 18:5. 9:30 2 அர 17:13-18; 2 குறி 36:15-16. 9:32 2 அர 15:19, 29; 17:3-6; எஸ்ரா 4:2,10.


அதிகாரம் 10

1முத்திரையிட்டவர்கள் பின் வருமாறு: அக்கலியாவின் மகனும், ஆளுநருமான நெகேமியா, செதேக்கியா, 2குருக்கள்: செராயா அசரியா, எரேமியா, 3பஸ்கூர், அமரியா, மல்கியா, 4அத்தூசு, செபானியா, மல்லூக்கு, 5ஆரிம், மெரேமோத்து, ஒபதியா, தானியேல், கின்னத்தோன், பாரூக்கு, 6மெசுல்லாம், அபியா, மியாமின், 7மாசியா, பில்காய், செமாயா. 8லேவியர்: அசனியாவின் மகன் ஏசுவா, ஏனாதாத்தின் புதல்வரில் 9பின்னூய், கத்மியேல், 10இவர்களின் சகோதரர்கள் செபானியா, ஓதியா, கெலிற்றா, பெலாயா, ஆனான், 11மீக்கா, இரகோபு, அசபியா, 12சக்கூர், செரேபியா, செபானியா, 13ஓதியா, பானி, பெனினு. 14மக்கள் தலைவர்: பாரோசு, பாகத்து மோவாபு, ஏலாம், சத்தூ, பானி, 15புன்னி, அஸ்காது, பேபாய், 16அதோனியா, பிக்வாய், ஆதின், 17அத்தேர், எசேக்கியா, அசூர், 18ஓதியா, ஆசும், பெசாய், 19ஆரிபு, அனத்தோத்து, நேபாய், 20மக்பியாசு, மெசுல்லாம், ஏசீர், 21மெசபேல், சாதோக்கு யாதுவா, 22பெலாத்தியா, ஆனான், அனாயா, 23ஓசேயா, அனனியா, அசூபு, 24அல்லோகேசு, பில்கா, சோபேக்கு, 25இரகூம், மாசேயா, 26அகியா, ஆனான், அனான், 27மல்லூக்கு, ஆரிம், பானா.


ஒப்பந்தம்


28ஏனைய மக்களும், குருக்களும், லேவியரும், வாயிற்காப்போரும், பாடகர்களும், கோவிற் பணியாளர்களும், வேற்றின மக்களிடமிருந்து பிரிந்து கடவுளின் திருச்சட்டப்படி வாழ்ந்த அனைவரும், அவர்களின் மனைவியரும், புதல்வரும், புதல்வியரும், அறிவுத் தெளிவு அடைந்த அனைவரும், 29மேன்மக்களாகிய தங்கள் சகோதரர்களோடு சேர்ந்து, கடவுளின் ஊழியனான மோசே வழியாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியும் சாபமும் உள்ளிட்ட கடவுளின் திருசட்டத்தை ஏற்றுக் கடைப்பிடிப்பதாகவும், தம் தலைவராகிய ஆண்டவரின் அனைத்து விதிமுறைகளையும் நீதி நெறிகளையும், நியமங்களையும் காத்து நடப்பதாகவும் வாக்குறுதி தந்தார்கள். 30சிறப்பாக, “நாங்கள் வேற்றின மக்களுக்குப் பெண் கொடுக்கவும் மாட்டோம்; எங்கள் புதல்வருக்கு அவர்கள் பெண்களை எடுக்கவும் மாட்டோம்.✠ 31வேற்றின மக்கள் ஓய்வு நாளில் சரக்குகளையும், தானிய வகைகளையும் விற்கக் கொண்டு வந்தால், நாங்கள் அவர்களிடமிருந்து ஓய்வு நாளிலும், புனித நாளிலும் வாங்கமாட்டோம். ஏழாம் ஆண்டின் விளைச்சலை விட்டுக் கொடுப்போம்; எவ்விதக் கடனையும் திரும்பக் கேட்க மாட்டோம்.✠ 32காணிக்கை அப்பங்கள், அன்றாட உணவுப் படையல்கள், ஓய்வுநாள்கள் மற்றும் அமாவாசைகளில் செலுத்தும் வழக்கமான பலிகள், குறிக்கப்பட்ட திருவிழாக்கள், புனிதப் பொருள்கள், இஸ்ரயேலுக்காகச் செலுத்தவேண்டிய பாவம் போக்கும் பலிகள், எங்கள் கடவுளது கோவிலின் அனைத்து வேலைகள் ஆகியவற்றிற்காக✠ 33ஆண்டுக்கு நான்கு கிராம் வெள்ளியை⁕ நாங்கள் கோவிலுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை விதிமுறையாக ஏற்படுத்திக் கொண்டோம். 34திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, எம் கடவுளாகிய ஆண்டவரின் பலிபீடத்தின்மீது எரிப்பதற்காக, ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், எம் முன்னோரின் குல வரிசைப்படி, விறகுக் காணிக்கை எம் கடவுளின் கோவிலுக்குக் கொண்டுவர குருக்களும், லேவியரும், மக்களும் ஆகிய நாங்கள் சீட்டுப் போட்டுத் தெரிந்தெடுப்போம். 35எங்கள் நிலத்தின் முதற் பலனையும் எல்லா மரங்களின் முதற் கனிகளையும் ஆண்டுதோறும் ஆண்டவரின் இல்லத்திற்குக் கொண்டு வர நேர்ந்து கொண்டோம்.✠ 36திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி எங்கள் மக்களின் தலைப்பிள்ளைகளையும், எங்கள் கால்நடைகளின் தலைப்பேறுகளையும், அதாவது மாட்டு மந்தைகளின் தலைப்பேறுகளையும், ஆட்டுக் கிடைகளின் தலைப்பேறுகளையும், நம் இறைவனின் இல்லத்தில் பணி செய்யும் குருக்களிடம் கொண்டு வர நேர்ந்து கொண்டோம்.✠ 37மேலும், எங்களது முதல் பிசைந்த மாவையும், எங்கள் படையல்களையும், ஒவ்வொரு மரத்தின் கனிகளையும், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றையும் குருக்களுக்காக, நம் கடவுளின் கோவில் அறைகளில் கொடுப்போம் என்றும், எங்கள் நிலப் பலனில் பத்தில் ஒரு பகுதியை லேவியருக்குக் கொடுப்போம் என்றும் நேர்ந்து கொண்டோம். ஆனால், அதை நாங்கள் உழைக்கும் ஒவ்வொரு நகரிலும் லேவியர் வசூல் செய்வர்.✠ 38பத்தில் ஒரு பகுதியை லேவியர் பெறும்போது, ஆரோனின் வழிமரபினரான குரு ஒருவர் லேவியரோடு இருக்கட்டும். லேவியர்கள் தங்கள் வசூலில் பத்தில் ஒரு பகுதியை நம் கடவுளின் கோவிலுக்கு கொண்டு வந்து, கருவூல அறைகளில் சேர்த்து வைக்கட்டும்.✠ 39ஏனெனில், அக்கருவூல அறைகளில்தான் இஸ்ரயேல் மக்களும், லேவியரும் கொடையாகக் கொடுத்த தானியம், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றைச் சேர்த்து வைத்தனர். அங்கேதான் கோவில் திருப்பணிக்குரிய பாத்திரங்களும் இருந்தன. குருக்களும், பாடகர்களும், வாயிற்காவலரும், திருப்பணியாளர்களும் அங்கு இருந்து வந்தனர். ‘எங்கள் கடவுளின் கோவிலைப் புறக்கணிக்க மாட்டோம்’ என்று வாக்குறுதி அளித்தனர்.


10:30 விப 34:6; இச 7:3. 10:31 விப 23:10-11; லேவி 25:1-7; இச 15:1-2. 10:32 விப 30:11-16. 10:35 விப 23:19; 34:26; இச 26:2. 10:36 விப 13:2. 10:37 எண் 18:21. 10:38 எண் 18:26.


10:33 ‘செக்கேலில் மூன்றில் ஒரு பகுதி’ என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 11

எருசலேமில் வாழ்ந்தோர் பட்டியல்


1மக்கள் தலைவர்கள் எருசலேமில் குடியிருந்தனர். ஏனைய மக்களில் பத்தில் ஒருவர் புனித நகரான எருசலேமில் வாழ்வதற்குக் கொண்டு வரப்படச் சீட்டுப் போட்டார்கள். மற்ற ஒன்பது பேர் தங்கள் நகர்களிலேயே வாழ்ந்தார்கள். 2எருசலேமில் மனமுவந்து வாழ முன்வந்த மனிதர்கள் அனைவரையும் மக்கள் வாழ்த்தினர். 3இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர்கள், கோவில் பணியாளர்கள், சாலமோனின் பணியாளரின் வழிமரபினர் ஆகியோர் யூதாவின் நகர்களில், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மனைகளில் சொந்த நகர்களில் வாழ்ந்து வந்தார்கள்.✠

4எருசலேமில் வாழ்ந்து வந்த மாநிலத் தலைவர்கள் பின்வருமாறு; இவர்கள் யூதா புதல்வர் சிலரும், பென்யமின் புதல்வர் சிலரும் ஆவர். யூதாவின் புதல்வர் பின்வருமாறு; உசியா மகன் அத்தாயா — உசியா செக்கரியாவின் மகன்; இவர் அமரியாவின் மகன்; இவர் செபற்றியாவின் மகன்; இவர் மகலலேலின் மகன். பேரேட்சின் வழிமரபினர்: 5மாவேசியா பாரூக்கின் மகன்; இவர் கொல்கோசியின் மகன்; இவர் அசாயாவின் மகன்; இவர் அதாயாவின் மகன்; இவர் யோயாரிபின் மகன்; இவர் செக்கரியாவின் மகன்; இவர் சீலோனியின் மகன். 6எருசலேமில் குடியிருந்த பேரேட்சியின் புதல்வர் நானூற்று அறுபத்து எட்டு மாபெரும் வீரர்கள்.

7பென்யமினின் புதல்வர் இவர்களே; சல்லூ மெசுல்லாமின் மகன்; இவர் யோபேதுவின் மகன்; இவர் பெத்யாவின் மகன்; இவர் கொலயாவின் மகன்; இவர் மாசேயாவின் மகன்; இவர் இத்தியேலின் மகன்; இவர் ஏசாயாவின் மகன். 8அவருக்குப் பின் கபாயும் சல்லாயும். இவர்கள் மொத்தம் தொள்ளாயிரத்து இருபத்தெட்டுப் பேர். 9சிக்ரியின் மகன் யோவேல் அவர்களுக்குத் தலைவராய் இருந்தார். அசனுவாவின் மகன் யூதா மற்றோர் ஊருக்குத் தலைவராக விளங்கினார்.

10குருக்கள்: யோயாரிபு மகன் எதாயா, யாக்கின்; 11செராயா; இவர் இல்க்கியாவின் மகன்; இவர் மெசுல்லாவின் மகன்; இவர் சாதோக்கின் மகன்; இவர் மெரயோத்தின் மகன்; இவர் கோவில் மேற்பார்வையாளரான அகித்தூபின் மகன். 12கோவில் திருப்பணி செய்துவந்த இவர்களுடைய சகோதரர் எண்ணூற்று இருபத்திரண்டு பேர். அதாயா எரோகாமின் மகன்; இவர் பெலலியாவின் மகன்; இவர் அம்சியின் மகன்; இவர் செக்கரியாவின் மகன்; இவர் பஸ்கூரின் மகன்; இவர் மல்கியாவின் மகன். 13குலத்தலைவர்களான இவர் சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டு பேர். அம்சசாய் அசரியேலின் மகன்; இவர் அகிசாயின் மகன்; இவர் மெசில்ல மோத்தின் மகன்; இவர் இம்மேரின் மகன். 14படைவீரர்களான அவர்களுடைய சகோதரர் நூற்று இருபத்து எட்டு. அக்கெதோலியின் மகன் சப்தியேல் அவர்களுக்குத் தலைவராக இருந்தார்.

15லேவியர்: செமாயா; இவர் அசூபாவின் மகன்; இவர் அசபியாவின் மகன்; இவர் பூனியின் மகன். 16கடவுளின் இல்லத்தின் வெளிப்புற வேலைக்குப் பொறுப்பானவர்களாகவும், லேவியருக்குத் தலைவர்களாகவும் இருந்த சபத்தாய்; யோசபாத்து; 17மன்றாட்டில் நன்றிப்பண் ஆரம்பிக்கும் தலைவர் மத்தனியா; இவர் மீக்காவின் மகன்; இவர் சப்தியின் மகன்; இவர் ஆசாபின் மகன்; பக்புக்கியா அவருடைய சகோதரரில் இரண்டாம் இடத்தை வகித்தார். அப்தா சம்முவாவின் மகன்; இவர் காலாயின் மகன்; இவர் எதுத்தூனின் மகன். 18புனித நகரில் வாழ்ந்த லேவியர் மொத்தம் இருநூற்று எண்பத்துநான்கு பேர்.

19வாயிற்காவலர்: வாயில் காக்கும் அக்கூபு, தல்மோன், இவர்களுடைய சகோதரர் மொத்தம் நூற்று எழுபத்திரண்டு பேர். 20ஏனைய இஸ்ரயேல் மக்களும், குருக்களும், லேவியரும், யூதாவின் எல்லா நகர்களிலும் அவரவர் தம் உரிமைச் சொத்தில் குடியிருந்தனர். 21கோவில் பணியாளர் ஒபேலில் குடியிருந்தனர். சிகாவும் கிஸ்பாவும் கோவில் பணியாளருக்குத் தலைவர்களாக இருந்தனர். 22எருசலேமில் வாழ்ந்துவந்த லேவியருக்குத் தலைவராயிருந்த உசி, பானின் மகன்; இவர் அசபியாவின் மகன்; இவர் மத்தனியாவின் மகன்; இவர் மீக்காவின் மகன்; இவர் கடவுளின் கோவில் பணிசெய்கின்ற பாடகர்களாகிய ஆசாபின் மக்களில் ஒருவர். 23பாடகர்களைக் குறித்து அரச கட்டளை ஒன்று இருந்தது. அதன்படி அவர்களின் அன்றாடப் படி வரையறுக்கப்பட்டிருந்தது. 24மேலும் யூதாவின் மகனான செராகின் வழித்தோன்றிய மெசசபேலின் மகன் பெத்தகியா மக்களைக் குறித்த எல்லாக் காரியங்களிலும் அரசருக்கு உதவியாக இருந்தார்.


மற்ற ஊர்களிலும் நகர்களிலும் வாழ்ந்தோர் பட்டியல்


25சிற்றூர்கள், அவைகளைச் சார்ந்த நிலங்களைப்பற்றிய குறிப்பு பின்வருமாறு: யூதா மக்கள் கிரியத்து அர்பாவிலும் அதன் குடியிருப்புகளிலும், தீபோனிலும் அதன் குடியிருப்புகளிலும் எக்கபட்சவேலிலும் அதன் நிலங்களிலும் குடியிருந்தனர்; 26மேலும் ஏசுவாபிலும், மோலதாவிலும், பெத்பலேத்திலும் 27அட்சர்சூவாவிலும் பெயேர்சபாவிலும் அதன் குடியிருப்புகளிலும், 28சிக்லாசிலும், மெக்கோனாவிலும், அதன் குடியிருப்புகளிலும், 29ஏன்ரிம்மோனிலும், சோராவிலும், யார்முத்திலும், 30சானோவாகிலும், அதுல்லாமிலும், அதன் குடியிருப்புகளிலும், இலாக்கிசிலும் அதன் நிலங்களிலும், அசேக்காவிலும் அதன் குடியிருப்புகளிலும், ஆகப் பெயேர்செபா முதல் இன்னோம் பள்ளத்தாக்கு வரை குடியிருந்தனர்.

31பென்யமின் மக்கள் கெபா முதல் மிக்மாசிலும், அயாவிலும், பெத்தேலிலும் அதன் குடியிருப்புகளிலும், 32அனத்தோத்திலும், நோபிலும் அனனியாவிலும் 33ஆட்சோரிலும், இராமாவிலும், கித்தயிமிலும் 34ஆதிது, சேபோயிம் நேபல்லாற்று, 35லோது, ஒனோ என்ற ஊர்களிலும், தொழிலாளர் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தனர். 36லேவியரில் சில பிரிவினர் யூதாவிலும் பென்யமினிலும் குடியிருந்தனர்.


11:3 நெகே 7:73.


அதிகாரம் 12

குருக்கள் மற்றும் லேவியர் பட்டியல்


1செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், ஏசுவாவுடனும், வந்த குருக்களும், லேவியரும் பின்வருமாறு: செராயா, எரேமியா, எஸ்ரா, 2அமரியா, மல்லூக்கு, அத்தூசு, 3செக்கனியா, இரகூம், மெரமோத்து, 4இத்தோ, கின்னத்தோய், அபியா, 5மியாமின், மாதியா, பில்கா, 6செமாயா, யோயாரிபு, எதாயா, 7சல்லூ, அமோக்கு, இல்க்கியா, எதாயா ஆகியோர் ஏசுவாவின் நாள்களில், குருக்களுக்கும் — தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாக விளங்கினர். 8லேவியர்களில் ஏசுவா, பின்னூய், கத்மியேல், செரேபியா, யூதா, மத்தனியா ஆகியோரும், இவர்கள் சகோதரர்களும் நன்றிப் பாடல்களுக்குப் பொறுப்பாளர்களாக இருந்தார்கள். 9பக்புக்கியாவும், உன்னியும் இவர்களின் சகோதரர்களும் அவர்களுக்கு எதிரே நின்று கவனித்துக் கொண்டு வந்தார்கள்.


தலைமைக்குரு ஏசுவாவின் வழிவந்தோர்


10ஏசுவாவுக்கு யோவாக்கிம் பிறந்தார்; யோவாக்கிமுக்கு எலியாசிபு பிறந்தார்; எலியாசிபுக்கு யோயாதா பிறந்தார். 11யோயாதாவுக்கு யோனத்தான் பிறந்தார்; யோனத்தானுக்கு யாதுவா பிறந்தார்.


குருகுலத் தலைவர்கள்


12யோவாக்கிமின் நாள்களில் குலத் தலைவர்களாக இருந்த குருக்கள் பின்வருமாறு; செராயா வழிவந்த மெராயா; எரேமியா வழிவந்த அனனியா; 13எஸ்ரா வழிவந்த மெசுல்லாம்; அமரியா வழிவந்த யோகனான்; 14மல்லூக்கி வழிவந்த யோனத்தான்; செபனியா வழி வந்த யோசேப்பு; 15ஆரிம் வழிவந்த அத்னா; மெரயோத்து வழிவந்த எல்க்காய்; 16இத்தோ வழிவந்த செக்கரியா; கின்னத்தோன் வழிவந்த மெசுல்லாம்; 17அபியா வழிவந்த சிக்ரி; மின்யமீன், மோவதியா, பில்த்தாய்; 18பில்கா வழிவந்த சம்முவா; செமாயா வழிவந்த யோனத்தான்; 19யோயாரிபு வழிவந்த மத்தனாய்; எதாயா வழிவந்த உசீ; 20சல்லாம் வழிவந்த கல்லாய்; அமோக்கு வழிவந்த ஏபேர்; 21இல்க்கியா வழிவந்த அசுபியா; யாதாய் வழிவந்த நத்தானியேல் ஆவர்.


குருக்கள் மற்றும் லேவியரின் பதிவேடு


22லேவியரில், எல்யாசிபு, யோயாதா, யோகானான், யாதுவா ஆகிய தலைமைக் குருக்களின் காலத்திலிருந்து பாரசீகரான தாரியுவின் காலம் வரையுள்ள லேவியர் குலத் தலைவர்களும் குருக்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 23லேவியின் மக்களான குலத்தலைவர்கள், குறிப்பேட்டில் எல்யாசிபின் மகன் யோகனானின் நாள்கள் வரை பதிவு செய்யப்பட்டிருந்தனர்.


கோவில் பணியின் பிரித்தளிப்பு


24லேவியரின் தலைவர்களான அசபியா, சேரேபியா, கத்மியேலின் மகன் ஏசுவா ஆகியோரும் அவர்களுக்கு எதிரில் அவர்களின் சகோதரரும் நின்று கொண்டு, கடவுளின் மனிதர் தாவீது கொடுத்த கட்டளையின்படி, புகழும் நன்றியும் முறைமுறையாகச் செலுத்தி வந்தனர். 25மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூபு ஆகிய வாயிற்காப்போர், வாயிலருகில் இருந்த கருவூல அறைகளைக் காத்து வந்தனர். 26இவர்கள் யோசாதாக்கிற்குப் பிறந்த ஏசுவாவின் மகன் யோவாக்கிமின் காலத்திலும், ஆளுநர் நெகேமியா, குருவும் சட்ட வல்லுநருமான எஸ்ரா ஆகியோரின் காலத்திலும் வாழ்ந்தனர்.


எருசலேம் மதிலின் அர்ப்பணம்


27எருசலேம் மதிலின் அர்ப்பண நாள் வந்தபோது லேவியர்களை எல்லா இடங்களிலிருந்தும் தேடி எருசலேமுக்குக் கொண்டு வந்தார்கள். ஏனெனில், மதில் அர்ப்பணம் மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும், கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவை ஒலிக்கப் பாடல்களுடனும் கொண்டாட வேண்டியிருந்தது. 28பாடகர்கள், எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் நெற்றோபாயரின் சிற்றூர்களிலிருந்தும், 29பெத்கில்காலிலிருந்தும், கேபா, அஸ்மவேத்து ஆகிய பகுதிகளிலிருந்தும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் எருசலேமைச் சுற்றிக் குடியிருப்புகள் அமைத்திருந்தார்கள். 30குருக்களும் லேவியரும் தங்களைத் தூய்மை செய்துகொண்டு மக்களையும் வாயில்களையும் மதில்களையும் தூய்மைப்படுத்தினர்.

31அப்பொழுது நான், யூதாவின் தலைவர்களை மதில்மேல் ஏறச் சொல்லி, புகழ்பாட இரண்டு பாடகர் குழுக்களை நிறுத்தினேன். ஒரு குழுவினர் வலப்பக்கம் இருந்த குப்பைமேட்டு வாயிலை நோக்கி, மதிலின்மேல் பவனியாகச் சென்றார்கள். 32அவர்களுக்குப் பின்னால் ஒசயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப்பேரும், 33அசரியா, எஸ்ரா, மெசுல்லாம், 34யூதா, பென்யமின், செமாயா, எரேமியா ஆகியோரும் சென்றனர். 35மேலும் எக்காளம் ஏந்தி இருந்த குருத்துவப் புதல்வர்கள்; ஆசாபு வழி வந்த சக்கூருக்குப் பிறந்த மீக்காயாவின் மைந்தனான மத்தனியாவின் புதல்வனான செமாயாவின் மைந்தனான யோனத்தானின் மகன் செக்கரியாவும், 36அவர் சகோதரர்களான செமாயா, அசரியேல், மில்லலாய், கில்லேல், மாவாய், நெத்தனேல், யூதா, அனானி என்பவர்களும் கடவுளின் மனிதர் தாவீதின் இசைக்கருவிகளை ஏந்தியிருந்தனர். நீதிச் சட்ட வல்லுநரான எஸ்ரா அவர்களுக்கு முன்பாகச் சென்றார். 37அவர்கள் ஊருணி வாயிலைக் கடந்து தங்களுக்கு எதிரே இருந்த தாவீது நகரின் படிகளின் வழியாக மேலே சென்று தாவீதின் அரண்மணைக்கு மேலே செல்லும் மதிற்சுவரின் படிகளைக் கடந்து கிழக்கே இருந்த தண்ணீர் வாயில்வரை சென்றனர்.

38இரண்டாவது பாடற் குழுவினர் இடப்பக்கமாக நடந்து செல்லுகையில், நானும் மக்களில் பாதிப்பேரும் மதிலின் மேல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றோம். சூளைக் காவல் மாடத்தைக் கடந்து அகன்ற மதில்வரை வந்தோம். 39எப்ராயிம் வாயில்மேலும், பழைய வாயில்மேலும், மீன்வாயில்மேலும், அனனியேல் காவல் மாடம், மேயா காவல் மாடம் ஆகியவை வழியாகவும் ஆட்டு வாயிலை அடைந்தோம். அவர்களோ ‘காவலர்’ வாயிலில் நின்று கொண்டார்கள்.

40பின்பு, இரண்டு பாடகர் குழுவினர்களும் கடவுளின் இல்லத்தில் நின்றுகொண்டார்கள். நானும் என்னோடு அலுவலர்களில் பாதிப்பேரும் அங்கு இருந்தோம். 41குருக்களில் எலியாக்கிம், மாசேயா, மின்யமின், மீக்காயா, எலியோனாய், செக்கரியா, அனனியா ஆகியோர் எக்காளம் தாங்கி இருந்தனர். 42மாசேயா, செமாயா, எலயாசர், உசீ, யோகனான், மல்கியா, ஏலாம், ஆசேர் ஆகியோரும் நின்றனர். பாடகர்களும், அவர்களின் தலைவர் இஸ்ரகியாவும், உரக்கப் பாடினார்கள். 43அன்று அவர்கள் மிகுதியாகப் பலி செலுத்தி மகிழ்ந்தனர். ஏனெனில், கடவுள் அவர்களைப் பெரும் மகிழ்ச்சியால் நிரப்பினார். அவர்களின் மனைவியரும் பிள்ளைகளும் மகிழ்ச்சி கொண்டாடினர். எருசலேமின் ஆரவாரம் வெகுதூரம்வரை கேட்டது.


கோவில் வழிபாட்டிற்கான ஏற்பாடுகள்


44கருவூலம், படையல்கள், முதற்கனி, பத்திலொரு பகுதி ஆகியவைகளுக்கான அறைகளின் பொறுப்பாளர்களையும், திருச்சட்டத்தின்படி, குருக்களுக்கும் லேவியருக்கும் உரிய பகுதிகளை நகர்களின் வயல்களில் தண்டல் செய்யும் ஆள்களையும் அன்று நியமித்தார்கள். ஏனெனில் அங்கே பணிபுரிந்த குருக்களையும் லேவியர்களையும் குறித்து யூதா மகிழ்ச்சி கொண்டது. 45தாவீது, அவருடைய மகன் சாலமோன் ஆகியோரின் கட்டளைப்படி, இவர்கள் தங்கள் கடவுளின் பணியிலும், தூய்மை செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறே பாடகர்களும் வாயிற்காப்போரும் பணி செய்தனர்.✠ 46ஏனெனில், தாவீது, ஆசாபு ஆகியோரின் பழங்காலத்திலிருந்தே பாடகர் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கடவுளுக்குரிய புகழ்ப் பாடல்களும் நன்றிப் பாடல்களும் இருந்தன. 47மேலும் செருபாபேலின் நாள்களிலிருந்தும் நெகேமியாவின் நாள்களிலிருந்தும், இஸ்ரயேல் மக்கள் யாவரும், பாடகர்களுக்கும், வாயிற்காப்போருக்கும் உரிய பகுதிகளை நாள்தோறும் கொடுத்து வந்தனர். அவர்கள் லேவியர்க்கு உரியதைப் பிரித்து வைத்தனர். லேவியர் ஆரோனின் மக்களுக்கு உரியதைப் பிரித்து வைத்தனர்.


12:45 1 குறி 25:1-8; 26:12.


அதிகாரம் 13

வேற்றினத்தார் விலக்கப்படல்


1அந்நாளில் மோசேயின் நூலை மக்கள் கேட்கும்படி உரக்கப் படித்தனர். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருப்பதைக் கண்டனர்: “அம்மோனியரும் மோவாபியரும் என்றுமே கடவுளின் சபைக்குள் நுழையக் கூடாது. 2ஏனெனில் அவர்கள் இஸ்ரயேல் மக்களை அப்பத்தோடும் நீரோடும் சந்திக்காது, அவர்களைச் சபிக்குமாறு பிலயாமுக்குக் கையூட்டுக் கொடுத்தனர். ஆனால் எங்கள் கடவுள் சாபத்தை ஆசியாக மாற்றிவிட்டார்”.✠ 3திருச்சட்டத்தைக் கேட்டவுடன் அவர்கள் எல்லா வேற்றினத்தாரையும் இஸ்ரயேல் மக்களிடமிருந்து பிரித்து விட்டனர்.


நெகேமியாவின் சீர்திருத்தங்கள்


4இதற்குமுன் தோபியாவுக்கு உறவினரான குரு எல்யாசிபிடம் எங்கள் கடவுளின் இல்லக் கருவூல அறைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. 5எனவே இவர் தோபியாவுக்குப் பெரியதோர் அறை ஒன்றைக் கொடுத்திருந்தார். அங்கே தான் முன்பு படையல்களும், சாம்பிராணியும், பாத்திரங்களும், லேவியர், பாடகர், வாயிற்காப்போர் ஆகியோருக்குக் கட்டளைப்படி கொடுக்கப்பட்ட பத்திலொரு பகுதியான தானியம், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவையும் குருக்களைச் சேரவேண்டிய காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்தன. 6இவை எல்லாம் நடந்தபோது நான் எருசலேமில் இல்லை. ஏனெனில் பாபிலோனிய மன்னர் அர்த்தக்சஸ்தாவின் முப்பத்து இரண்டாம் ஆண்டில் நான் மன்னரிடம் சென்றேன். சில காலத்துக்குப் பின் மன்னரிடம் நான் விடைபெற்றுத் திரும்பி வந்தேன். 7எல்யாசிபு தோபியாவுக்குக் கடவுளின் இல்ல முற்றத்தில் ஓர் அறை கொடுத்திருந்ததால் விளைந்த தீமையை நான் எருசலேமுக்கு வந்தபோது கண்டுபிடித்தேன். 8நான் மிகவும் சீற்றமுற்று, தோபியாவின் வீட்டுப் பாத்திரங்களை அறைக்கு வெளியே எறிந்தேன். 9பின்னர் நான் கட்டளையிட்டபடி அவர்கள் அறைகளைத் துப்புரவு செய்தார்கள். பிறகு நான் கடவுளின் இல்லத்துப் பாத்திரங்களையும், காணிக்கையையும், சாம்பிராணியையும் அங்குத் திரும்பக் கொண்டுவரச் செய்தேன்.

10மேலும் லேவியருக்குச் சேர வேண்டிய காணிக்கைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்றும், இதனால் அங்குப் பணிபுரிந்து வந்த லேவியரும் பாடகரும் அவரவர் தம் நிலங்களுக்கு ஓடிப்போய் விட்டனர் என்றும் அறிந்தேன். 11அப்பொழுது அலுவலர்களைக் கடிந்துகொண்டு, அவர்களிடம் “கடவுளின் கோவில் கைவிடப்பட்டுக் கிடப்பதேன்?” என்று கேட்டேன். பின்பு அவர்களை ஒன்றுகூட்டி, ஒவ்வொருவரும் தம் கடமையைச் செய்யுமாறு பணித்தேன். 12அதன்பின் யூதாவின் மக்கள் அனைவரும் தானியத்தையும், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றில் பத்திலொரு பங்கையும் கருவூல அறைக்குக் கொண்டு வந்தனர். 13குரு செலேமியாவையும், மறை நூல் வல்லுநர் சாதோக்கையும், லேவியர் பெதாயாவையும் கருவூலங்களுக்குப் பொருளாளராகவும், மத்தனியாவுக்குப் பிறந்த சக்கூரின் மகனான அனானை அவர்களுக்கு உதவியாளராகவும் நியமித்தேன். ஏனெனில் அவர்கள் நேர்மையானவர்கள் என்று கருதப்பட்டார்கள். தங்கள் சதோதரர்களுக்குப் பங்கிட்டு அளிப்பதே அவர்கள் கடமையாகும்.

14‘என் கடவுளே! இதன் பொருட்டு என்னைக் கண்ணோக்கும். என் கடவுளின் கோவிலுக்கும் அதன் திருப்பணிக்கும் அடியேன் உண்மையாய்ச் செய்துள்ளதை மறவாதேயும்’.

15அக்காலத்தில் யூதா மக்கள் ஓய்வு நாளில் திராட்சை ஆலைகளில் வேலை செய்வதையும், தானியப் பொதிகள் கொண்டு வந்து கழுதைகள் மீது சுமத்துவதையும், திராட்சை இரசம், திராட்சைப் பழங்கள், அத்திப் பழங்கள் இன்னும் பலவித சுமைகளை ஓய்வு நாளில் எருசலேமுக்குக் கொண்டு வருவதையும் கண்டேன். அன்று உணவுப் பொருள் விற்பதை நான் கண்டித்தேன். 16மேலும், அங்கு வாழ்ந்து வந்த தீர் நகர மக்கள், மீன் மற்றும் வணிகப் பொருள்களை யூதா மக்களுக்கும் எருசலேமில் வாழ்வோருக்கும் ஓய்வுநாளில் விற்றார்கள். 17எனவே யூதாவின் தலைவர்களைக் கடிந்து கொண்டு நான் அவர்களிடம் கூறியது: “எத்துணைத் தீமையான செயலை நீங்கள் செய்கிறீர்கள்? நீங்கள் ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தலாமா? 18உங்கள் மூதாதையர் இவ்வாறு செய்ததால் அல்லவோ நம் கடவுள் நம் மீதும், இந்நகர் மீதும் இத்தீமையெல்லாம் வரச் செய்தார். இருப்பினும், ஒய்வு நாளை நீங்கள் மீறுகிறீர்கள். இஸ்ரயேல்மீது கடவுளின் கடுங்கோபத்தை வரவழைக்கிறீர்கள்.

19ஓய்வு நாளுக்குமுன் எருசலேம் வாயில்களில் இருள் படரும்போது, கதவுகள் மூடப்படவேண்டும் என்றும் ஓய்வுநாள் முடியும்வரை அவற்றைக் திறக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டேன். எச்சுமையும் உள்ளே வராதபடி எனது வேலையாள்களை வாயிலருகில் நிறுத்தினேன். 20எனவே வணிகரும், பலசரக்குகளை விற்பவர்களும் ஓரிருமுறை எருசலேமுக்கு வெளியே தங்க வேண்டியிருந்தது. 21நான் அவர்களை எச்சரித்து, “ஏன் மதிலுக்கு எதிரில் நீங்கள் காத்திருக்கிறீர்கள்? மறுபடியும் இப்படிச் செய்வீர்களாகில் உங்களை நான் ஒரு கை பார்ப்பேன்’ என்று கூறினேன். அப்பொழுதிலிருந்து அவர்கள் ஒய்வு நாளில் வராமலிருந்தார்கள். 22ஓய்வு நாளைக் கடைப்பிடிக்கும்படி உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்; வாயிலைக் காக்க வாருங்கள்” என்று லேவியரிடம் கூறினேன். இதன் பொருட்டும் ‘என் கடவுளே, என்னைக் கண்ணோக்கும். உமது பேரிரக்கத்தினால் என்னை மீட்டருளும்’.

23அக்காலத்தில்கூட, அஸ்தோது, அம்மோன், மோவாபு ஆகிய நாடுகளின் பெண்களை மணந்திருந்த யூதர்களைக் கண்டேன். 24அவர்கள் பிள்ளைகளில் பாதிப்பேர் அஸ்தோதிய மொழி பேசினார்கள்; அல்லது வேறு ஏதோ ஒரு மொழியை பேசினார்கள். யூத மொழியை அவர்களால் பேச இயலவில்லை. 25நான் அவர்களைக் கண்டித்துச் சபித்தேன். சில ஆள்களை அடித்து முடியைப் பிடித்து இழுத்தேன். “இனி நாங்கள் அவர்களின் புதல்வருக்குப் பெண் கொடுக்கவோ, அவர்களிடமிருந்து நாங்களும் எங்கள் புதல்வரும் பெண் கொள்ளவோமாட்டோம்” எனக் கடவுள்மேல் அவர்களை ஆணையிட்டுக் கூறச் செய்தேன். 26நான் சொன்னது: “இஸ்ரயேலின் அரசர் சாலமோனின் பாவம் இதுதான் அல்லவோ! அவரைப் போன்ற மன்னர் பல நாடுகளிலும் இருந்ததில்லையே! அவருடைய கடவுள் அவருக்கு அன்பு காட்டினார். கடவுள் அவரை இஸ்ரயேலர் அனைவருக்கும் அரசராக ஏற்படுத்தியிருந்தார். இருப்பினும் வேற்றினப் பெண்கள் அவரையும் பாவம் செய்திடச் செய்தார்கள். 27வேற்றினப் பெண்களை மணந்து கடவுளுக்கு எதிராக இப்பெரும் தீமை அனைத்தையும் நீங்கள் செய்து வருவதைப்போல் நாங்களும் செய்ய வேண்டுமா?”

28பெரிய குரு எல்யாசிபின் மகன் யோயாதாவின் மக்களில் ஒருவன் ஓரானியனான சன்பலாற்றுக்கு மருமகனாய் இருந்தான். அவனை என்னிடமிருந்து துரத்திவிட்டேன்.✠

29“என் கடவுளே, குருத்துவத்தையும், குருத்துவ உடன்படிக்கையையும், லேவியரையும் மாசுபடுத்தியவர்களாகிய அவர்களை மறந்து விடாதேயும்.”

30வேற்றினத்தார் அனைவரிடமிருந்தும் அவர்களைத் தூய்மைப்படுத்தினேன். குருக்களுக்கும் லேவியருக்கும் அவர் அவர்களுக்குரிய வேலையைக் கொடுத்து பணிமுறைமைகளை அமைத்தேன். 31விறகுக் காணிக்கைகளையும் முதற் கனிகளையும் குறிப்பிட்ட காலங்களில் கொடுக்க ஆவன செய்தேன். “என் கடவுளே, என்னை நினைவு கூர்ந்து எனக்கு நன்மை செய்தருளும்.”


13:1-2 இச 23:3-5. 13:2 எண் 22:1-6. 13:23-25 விப 34:11-16; இச 7:1-5. 13:28 நெகே 4:1.