நீதிமொழிகளஂ


நீதிமொழிகளஂ
முன்னுரை

நீதிமொழிகள்’ என்னும் இந்நூல் ஒழுக்கத்தையும் சமயத்தையும் சார்ந்த போதனைகளின் தொகுப்பாகும். இவை சொற்கோவை, பழமொழி ஆகிய வடிவங்களில் காணப்படுகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை அன்றாட வாழ்வையும் நடைமுறை வழக்கையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன.

இந்நூல் ‘ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்’ எனத் தொடங்கி, சமய ஒழுக்கம் பற்றியும் நல்லறிவு, நன்னடத்தை ஆகியவை பற்றியும் விளக்கிக் கூறுகின்றது. இங்குக் காணப்படும் சொற்கோவைகள் பண்டைய இஸ்ரயேலின் ஞானிகளுடைய அனுபவமிக்க அறிவுரைகளாக அமைந்துள்ளன. மேலும் குடும்ப உறவுகள், பொருளீட்டு முயற்சிகள், சமூக உறவுகள், நன்னடத்தை, தற்கட்டுப்பாடு ஆகிய முறைமைகள் பற்றியும், மனத்தாழ்வு, பொறுமை, ஏழையர்பால் அன்பு, மாறாத நட்பு ஆகிய பண்புகளை பற்றியும் இந்நூல் விரித்துரைக்கின்றது.

நூலின் பகுதிகள்


1 ஞானம் பற்றிய புகழுரை 1:1 - 9:18

2. சாலமோனின் நீதிமொழிகள் 10:1 - 29:27

3. ஆகூரின் மொழிகள் 30:1 - 33

4. பல்வேறு சொற்கோவைகள் 31:1 - 31


அதிகாரம் 1

இந்நூலின் நோக்கம்


1தாவீதின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமாகிய சாலமோனின் நீதிமொழிகள்.✠ 2இவற்றைப் படிப்பவர் ஞானமும் நற்பயிற்சியும் பெறுவர்; ஆழ்ந்த கருத்தடங்கிய நன்மொழி களை உணர்ந்து கொள்வர்;


3நீதி, நியாயம், நேர்மை நிறைந்த விவேக வாழ்க்கையில் பயிற்சி பெறுவர்;


4அறிவற்றோர் கூரறிவு பெறுவர்; இளைஞர் அறிவும் விவேகமும் அடைவர்.


5ஞானமுள்ளோர் இவற்றைக் கேட்டு அறிவில் இன்னும் தேர்ச்சியடைவர்; விவேகிகள் அறிவுரை கூறும் திறமை பெறுவர்;


6நீதிமொழிகளையும் உவமைகளையும் ஞானிகளின் நன்மொழிகளையும் புதிர் மொழிகளையும் அவர்கள் உய்த்துணர்வர்.


இளைஞருக்கு நல்லுரை


7ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; ஞானத்தையும் நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர்.✠

8பிள்ளாய்! உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி; உன் தாய் கற்பிப்பதைத் தள்ளி விடாதே. 9அவை உன் தலைக்கு அணிமுடி; உன் கழுத்துக்கு மணிமாலை.


10பிள்ளாய்! தீயவர்கள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்; நீ அவர்களுடன் போக இணங்காதே. 11அவர்கள் உன்னைப் பார்த்து, “எங்களோடு வா; பதுங்கியிருந்து எவரையாவது கொல்வோம்; யாராவது ஓர் அப்பாவியை ஒளிந்திருந்து தாக்குவோம்; 12பாதாளத்தைப்போல நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; படுகுழிக்குச் செல்வோரை அது விழுங்குவதுபோல, நாமும் அவர்களை முழுமையாக விழுங்குவோம். 13எல்லா வகையான அரும் பொருள்களும் நமக்குக் கிடைக்கும்; கொள்ளையடித்த செல்வத்தால் நம் வீடுகளை நிரப்புவோம். 14நீ எங்களோடு சேர்ந்துகொள்; எல்லாவற்றிலும் உனக்குச் சம பங்கு கிடைக்கும்” என்றெல்லாம் சொல்வார்கள். 15பிள்ளாய்! அவர்களோடு சேர்ந்து அவர்கள் வழியில் செல்லாதே; அவர்கள் செல்லும் பாதையில் அடிவைக்காதே. 16அவர்கள் கால்கள் தீங்கிழைக்கத் துடிக்கின்றன; இரத்தம் சிந்த விரைகின்றன. 17பறவையைப் பிடிக்க, அதன் கண்முன்னே அன்று, மறைவாகவே கண்ணி வைப்பார்கள். 18அவர்கள் பதுங்கியிருப்பது அவர்களுக்கே ஊறுவிளைவிக்கும் கண்ணியாகி விடும்; அவர்கள் ஒளிந்து காத்திருப்பது அவர்களையே அழிக்கும் பொறியாகி விடும். 19தீய முறையில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே; அந்தப் பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்.

ஞானம் விடுக்கும் அழைப்பு


20ஞானம் வீதிகளிலிருந்து உரத்துக் கூறுகின்றது; பொதுவிடங்களிலிருந்து குரலெழுப்புகின்றது; 21பரபரப்பு மிகுந்த தெருக்களிலிருந்து அழைக்கின்றது; நகர வாயிலிருந்து முழங்குகின்றது; 22“பேதையரே, நீங்கள் இன்னும் எவ்வளவு காலம் உங்கள் பேதைமையில் உழல்வீர்கள்? இகழ்வார் இன்னும் எவ்வளவு காலம் இகழ்ச்சி செய்வதில் மகிழ்ச்சி காண்பர்? முட்டாள்கள் இன்னும் எவ்வளவு காலம் அறிவை வெறுப்புடன் நோக்குவார்கள்? 23என் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்வீர்களானால், நான் என் உள்ளத்திலிருப்பதை உங்களுக்குச் சொல்வேன்; என் செய்தியை உங்களுக்குத் தெரிவிப்பேன். 24நான் கூப்பிட்டேன், நீங்களோ செவிசாய்க்க மறுத்தீர்கள்; உங்களை அரவணைக்கக் கையை நீட்டினேன்; எவரும் கவனிக்கவில்லை. 25என் அறிவுரைகளுள் ஒன்றையும் பொருட்படுத்தவில்லை; என் எச்சரிக்கை அனைத்தையும் புறக்கணித்தீர்கள். 26ஆகையால், உங்களுக்கு இடுக்கண் வரும்போது, நான் நகைப்பேன்; உங்களுக்குப் பெருங்கேடு விளையும்போது ஏளனம் செய்வேன். 27பேரிடர் உங்களைப் புயல் போலத் தாக்கும்போது, இடுக்கண் உங்களைச் சுழற்காற்றென அலைக்கழிக்கும்போது, துன்பமும் துயரமும் உங்களைச் சூழ்ந்து கொள்ளும்போது, நான் எள்ளி நகையாடுவேன். 28அப்பொழுது, நீங்கள் என்னை நோக்கி மன்றாடுவீர்கள்; நான் பதிலளிக்க மாட்டேன்; ஆவலோடு என்னை நாடுவீர்கள்; ஆனால் என்னைக் காணமாட்டீர்கள். 29ஏனெனில், நீங்கள் அறிவை வெறுத்தீர்கள்; ஆண்டவரிடம் அச்சம் கொள்வதில் உங்களுக்கு விருப்பமில்லை. 30நீங்கள் என் அறிவுரையை ஏற்கவில்லை; என் எச்சரிக்கை அனைத்தையும் அவமதித்தீர்கள். 31நீங்கள் உங்கள் நடத்தையின் பயனைத் துய்ப்பீர்கள்; சூழ்ச்சி செய்து நீங்களே சலித்துப் போவீர்கள். 32பேதையரின் தவறுகள் அவர்களையே கொன்றுவிடும்; சிறுமதியோரின் தற்பெருமை அவர்களை அழித்துவிடும். 33எவர் எனக்குச் செவி கொடுக்கின்றாரோ அவர் தீங்கின்றி வாழ்வார்; தீமை வருகையிலும் அச்சமின்றி அவர் மன அமைதியுடன் இருப்பார்.”


1:1 1 அர 4:32. 1:7 யோபு 28:28; திபா 111:10; நீமொ 9:10. 1:20-21 நீமொ 8:1-3.


அதிகாரம் 2

ஞானம் அளிக்கும் பயன்


1பிள்ளாய்! நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து, மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி, 2என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள். 3ஆம், நீ உணர்வுக்காக வேண்டுதல் செய்து, மெய்யறிவுக்காக உரக்க மன்றாடு. 4செல்வத்தை நாடுவதுபோல் ஞானத்தை நாடி, புதையலுக்காகத் தோண்டும் ஆர்வத்தோடு அதைத் தேடு. 5அப்பொழுது, ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் இன்னதென்பதை உணர்ந்து கொள்வாய். கடவுளை அறியும் அறிவைப் பெறுவாய். 6ஏனெனில் ஞானத்தை அளிப்பவர் ஆண்டவரே, அறிவிற்கும் விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே. 7நேர்மையாளருக்கு அவர் துணை செய்யக் காத்திருக்கின்றார்; மாசற்றோருக்குக் கேடயமாய் இருக்கின்றார். 8நேர்மையாளரின் பாதைகளை அவர் பாதுகாக்கின்றார்; தம் அடியாரின் வழிகளைக் காவல் செய்கின்றார். 9எனவே, நீ நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் நலமார்ந்த நெறிகள் அனைத்தையும் தெரிந்துகொள்வாய். 10ஞானம் உன் உள்ளத்தில் குடிபுகும்; அறிவு உன் இதயத்திற்கு இன்பம் தரும். 11அப்பொழுது, நுண்ணறிவு உனக்குக் காவலாய் இருக்கும்; மெய்யறிவு உன்னைக் காத்துக்கொள்ளும். 12நீ தீய வழியில் செல்லாமலும், வஞ்சகம் பேசும் மனிதரிடம் அகப்படாமலும் இருக்கும்படி, அது உன்னைப் பாதுகாக்கும். 13நேர்மையான வழியை விட்டு விலகி, இருளான பாதையில் நடப்போரின் கைக்கு உன்னைத் தப்புவிக்கும். 14அவர்கள் தீமை செய்து களிக்கின்றவர்கள். 15அவர்களுடைய வழிகள் கோணலானவை. அவர்களுடைய பாதைகள் நேர்மையற்றவை. 16ஞானம் உன்னைக் கற்புநெறி தவறியவளிடமிருந்தும், தேனொழுகப் பேசும் விலைமகளிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும். 17அவள் இளமைப் பருவத்தில் தான் மணந்த கணவனைக் கைவிட்டவள்; தான் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மறந்தவள். 18அவளது வீடு சாவுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றது; அவளின் வழிகள் இறந்தோரிடத்திற்குச் செல்கின்றன. 19அவளிடம் செல்லும் எவனும் திரும்பி வருவதேயில்லை; வாழ்வெனும் பாதையை அவன் மீண்டும் அடைவதில்லை. 20எனவே, நீ நல்லாரின் நெறியில் நடப்பாயாக! நேர்மையாளரின் வழியைப் பின்பற்றுவாயாக! 21நேர்மையாளரே உலகில் வாழ்வர்; மாசற்றாரே அதில் நிலைத்திருப்பர். 22பொல்லாரோ உலகினின்று பூண்டோடு அழிவர்; நயவஞ்சகர் அதனின்று வேரோடு களைந்தெறியப்படுவர்.


அதிகாரம் 3

ஆண்டவருக்கு உகந்த வாழ்க்கை


1பிள்ளாய்! என் அறிவுரையை மறவாதே; என் கட்டளைகளை உன் இதயத்தில் இருத்திக்கொள்: 2அவை உனக்கு நீண்ட ஆயுளையும் பல்லாண்டு வாழ்வையும் நிலையான நலன்களையும் அளிக்கும். 3அன்பும் வாய்மையும் உன்னிடம் குன்றாதிருப்பதாக! அவற்றைக் கழுத்தில் அணிகலனாய்ப் பூண்டுகொள். 4அப்பொழுது, நீ கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவனாவாய்; அவர்களது நல்லெண்ணத்தையும் பெறுவாய்.✠ 5முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு; உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே. 6நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார். 7உன்னை நீ ஒரு ஞானி என்று எண்ணிக்கொள்ளாதே; ஆண்டவருக்கு அஞ்சித் தீமையை அறவே விலக்கு.✠ 8அப்பொழுது உன் உடல், நலம் பெறும்; உன் எலும்புகள் உரம் பெறும். 9உன் செல்வத்தைக்கொண்டு அவரைப் போற்று; உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு. 10அப்பொழுது உன் களஞ்சியங்கள் நிறைந்திருக்கும்; குடங்களில் திராட்சை இரசம் வழிந்தோடும். 11பிள்ளாய்! ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாமென்று தள்ளி விடாதே; அவர் கண்டிக்கும்போது அதைத் தொல்லையாக நினையாதே.✠ 12தந்தை தன் அருமை மகனை கண்டிப்பதுபோல், ஆண்டவர் தாம் யாரிடம் அன்புகொண்டிருக்கின்றாரோ அவர்களைக் கண்டிக்கின்றார்.✠


ஞானத்தின் மேன்மை


13ஞானத்தைத் தேடி அடைந்தோர் நற்பேறு பெற்றோர்; மெய்யறிவை அடைந்தோர் நற்பேறு பெற்றோர்; 14வெள்ளியைவிட ஞானமே மிகுநலன் தருவது; பொன்னைவிட ஞானத்தால் வரும் செல்வம் மேலானது. 15ஞானம் பவளத்தைவிட விலைமதிப்புள்ளது; உன் அரும்பொருள் எதுவும் அதற்கு நிகராகாது. 16அதன் வலக்கை நீடித்த ஆயுளை அருள்கின்றது; அதன் இடக்கை செல்வமும் மேன்மையும் கிடைக்கச் செய்கின்றது. 17அதன் வழிகள் இன்பம் தரும் வழிகள்; அதன் பாதைகள் யாவும் நலம் தருபவை. 18தன்னை அடைந்தோர்க்கு அது வாழ்வெனும் கனிதரும் மரமாகும்; அதனைப் பற்றிக்கொள்வோர் நற்பேறு பெற்றோர். 19ஆண்டவர் ஞானத்தால் பூவுலகிற்கு அடித்தளமிட்டார்; விவேகத்தால் வானங்களை நிலைபெறச் செய்தார். 20அவரது அறிவாற்றலால் நிலத்தின் அடியிலிருந்து நீர் பொங்கி எழுகின்றது; வானங்கள் மழையைப் பொழிகின்றன. 21பிள்ளாய்! விவேகத்தையும் முன்மதியையும் பற்றிக்கொள்; இவற்றை எப்போதும் உன் கண்முன் நிறுத்தி வை. 22இவை உனக்கு உயிராகவும், உன் கழுத்துக்கு அணிகலனாகவும் இருக்கும். 23நீ அச்சமின்றி உன் வழியில் நடப்பாய்; உன் கால் ஒருபோதும் இடறாது. 24நீ படுக்கப்போகும் போது உன் மனத்தில் அச்சமிராது; உன் படுக்கையில் நீ அயர்ந்து தூங்குவாய். 25பொல்லார் திகிலடைவதையும் அவர்களுக்கு அழிவு வருவதையும் காணும்போது நீ அஞ்சாதே. 26ஆண்டவர் உனக்குப் பக்கத்துணையாய் இருப்பார்; உன் கால் கண்ணியில் சிக்காதபடி உன்னைக் காப்பார். 27உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே. 28அடுத்திருப்பார் உன்னிடம் கேட்கும் பொருளை நீ வைத்துக் கொண்டே, ‘போய் வா, நாளைக்குத் தருகிறேன்’ என்று சொல்லாதே. 29அடுத்திருப்பார்க்கு தீங்கிழைக்கத் திட்டம் தீட்டாதே; அவர்கள் உன் அருகில் உன்னை நம்பி வாழ்கின்றவர்கள் அல்லவா? 30ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்போது, அவரை வீண் வாதத்திற்கு இழுக்காதே. 31வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே. 32ஏனெனில், நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்; நேர்மையாளரோடு அவர் உறவுகொள்கின்றார். 33பொல்லாரது வீட்டின்மேல் ஆண்டவரது சாபம் விழும்; அவருக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில் அவரது ஆசி தங்கும். 34செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்;✠ 35ஞானமுள்ளவர்கள் தங்களுக்குரிய நன்மதிப்பைப் பெறுவார்கள்; அறிவிலிகளோ இகழப்படுவார்கள்.


3:4 லூக் 2:52. 3:7 உரோ 12:16. 3:11 யோபு 5:17; எபி 12:5-6. 3:12 திவெ 3:19. 3:34 யாக் 4:6; 1 பேது 5:5.


அதிகாரம் 4

ஞானத்தினால் வரும் நன்மைகள்


1பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள்; மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள். 2நான் உங்களுக்கு நற்போதனை அளிக்கின்றேன்; நான் கற்பிப்பதைப் புறக்கணியாதீர்கள்; 3நான் என் தந்தையின் அருமை மைந்தனாய், தாய்க்குச் செல்லப் பிள்ளையாய் வளர்ந்து வந்தேன். 4அப்பொழுது என் தந்தை எனக்குக் கற்பித்தது இதுவே: “நான் சொல்வதை உன் நினைவில் வை; என் கட்டளைகளை மறவாதே; நீ வாழ்வடைவாய். 5ஞானத்தையும் மெய்யுணர்வையும் தேடிப் பெறு; நான் சொல்வதை மறந்துவிடாதே; அதற்கு மாறாக நடவாதே. 6ஞானத்தைப் புறக்கணியாதே; அது உன்னைப் பாதுகாக்கும்; அதை அடைவதில் நாட்டங்கொள்; அது உன்னைக் காவல் செய்யும். 7ஞானத்தைத் தேடிப் பெறுவதே ஞானமுள்ள செயல்; உன் சொத்து எல்லாம் கொடுத்தாயினும் மெய்யுணர்வைத் தேடிப் பெறு. 8அதை உயர்வாய்க் கொள்; அது உன்னை உயர்த்தும்; அதை நீ தழுவிக்கொள்; அது உன்னை மாண்புறச் செய்யும். 9அது உன் தலையில் மலர் முடியைச் சூட்டும்; மணிமுடி ஒன்றை உனக்கு அளிக்கும்.” 10பிள்ளாய்! கவனி; நான் சொல்வதை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுட்காலம் நீடிக்கும். 11ஞானத்தின் வழிகளை உனக்குக் கற்பித்திருக்கின்றேன்; நேரிய பாதைகளில் உன்னை நடத்தி வந்தேன். 12நீ நடக்கும்போது உன் கால் சறுக்காது ; நீ ஓடினாலும் இடறி விழமாட்டாய். 13பெற்ற நற்பயிற்சியில் உறுதியாக நிலைத்துநில்; அதை விட்டுவிடாதே; அதைக் கவனமாய்க் காத்துக்கொள்; அதுவே உனக்கு உயிர். 14பொல்லார் செல்லும் பாதையில் செல்லாதே; தீயோர் நடக்கும் வழியில் நடவாதே. 15அதன் அருகில் செல்லாதே; அதில் கால்வைக்காதே; அதை விட்டு விலகி உன் வழியே செல். 16தீமை செய்தாலன்றி அவர்களுக்குத் தூக்கம் வராது; யாரையாவது கீழே வீழ்த்தினாலன்றி அவர்களுக்கு உறக்கம் வராது. 17தீவினையே அவர்கள் உண்ணும் உணவு; கொடுஞ் செயலே அவர்கள் பருகும் பானம். 18நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி போன்றது; அது மேன்மேலும் பெருகி நண்பகலாகின்றது. 19பொல்லாரின் பாதையோ காரிருள் போன்றது; தாங்கள் எதில் இடறி விழுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. 20பிள்ளாய்! என் வார்த்தைகளுக்குச் செவிகொடு; நான் சொல்வதைக் கவனி. 21உன் கவனத்தினின்று அவை விலகாதிருக்கட்டும்; உன் உள்ளத்தில் அவற்றைப் பதித்துவை. 22அவற்றைத் தேடிப் பெறுவோருக்கு அவை உயிரளிக்கும்; அவர்களுக்கு உடல் நலமும் தரும். 23விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்; ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும். 24நாணயமற்ற பேச்சு உன் வாயில் வரக்கூடாது; வஞ்சகச் சொல் உன் வாயில் எழக்கூடாது. 25உன் கண்கள் நேரே பார்க்கட்டும்; எதிரே இருப்பதில் உன் பார்வையைச் செலுத்து. 26நேர்மையான பாதையில் நட; அப்பொழுது, உன் போக்கு இடரற்றதாயிருக்கும்.✠ 27வலப்புறமோ இடப்புறமோ திரும்பாதே; தீமையின் பக்கமே காலெடுத்து வைக்காதே.


4:26 எபி 12:13.


அதிகாரம் 5

கற்புநெறி தவறாமை


1பிள்ளாய்! என் ஞானத்தில் உன் கவனத்தைச் செலுத்து; என் அறிவுரைக்குச் செவிகொடு. 2அப்பொழுது விவேகத்துடன் நடந்துகொள்வாய்; அறிவு உன் நாவைக் காவல்செய்யும். 3விலைமகளின் பேச்சில் தேன் ஒழுகும்; அவள் உதடுகள் வெண்ணெயினும் மிருதுவானவை. 4ஆனால் அவள் உறவின் விளைவோ எட்டியினும் கசக்கும்; இருபுறமும் கூரான வாள் வெட்டுதலை ஒக்கும் 5அவள் கால் சாவை நோக்கிச் செல்லும்; அவள் காலடி பாதாளத்திற்கு இறங்கிச் செல்லும். 6வாழ்வுக்குச் செல்லும் பாதையை அவள் கவனத்தில் கொள்வதில்லை; அவளுடைய வழிகள் மாறிகொண்டே இருக்கும்; அதைப்பற்றி அவளுக்குக் கவலையே இல்லை. 7ஆகையால், பிள்ளாய்!⁕ எனக்குச் செவிகொடு; நான் சொல்வதற்கேற்ப நடக்க மறவாதே. 8அவளிடமிருந்து நெடுந்தொலையில் இருந்துகொள்; அவள் வீட்டு வாயிற்படியை மிதியாதே. 9இல்லையேல், பிறர் முன்னிலையில் உன் மானம் பறிபோகும்; கொடியவர் கையில் உன் உயிரை இழப்பாய். 10அன்னியர் உன் சொத்தைத் தின்று கொழுப்பார்கள்; நீ பாடுபட்டுச் சம்பாதித்தது வேறொரு குடும்பத்திற்குப் போய்ச் சேரும். 11நீ எலும்பும் தோலுமாய் உருக்குலைந்து போவாய்; உன் வாழ்க்கையின் இறுதியில் கலங்கிப் புலம்புவாய். 12“ஐயோ, அறிவுரையை நான் வெறுத்தேனே! கண்டிக்கப்படுவதைப் புறக்கணித்தேனே! 13கற்பித்தவர்களின் சொல்லைக் கேளாமற் போனேனே! போதித்தவர்களுக்குச் செவிகொடாமல் இருந்தேனே! 14இப்பொழுது நான் மீளாத் துயரத்தில் மூழ்கியவனாய், மக்கள் மன்றத்தில் மானமிழந்து நிற்கிறேனே” என்று அலறுவாய்.


பிறன்மனைவி நயவாமை


15உன் சொந்த நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி; உன் வீட்டுக் கிணற்றிலுள்ள நல்ல தண்ணீரையே பருகு 16உன் ஊற்றுநீர் வெளியே பாயவேண்டுமா? உன் வாய்க்காலின் நீர் வீதியில் வழிந்தோடவேண்டுமா? 17அவை உனக்கே உரியவையாயிருக்கட்டும்; அன்னியரோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ளாதே. 18உன் நீருற்று ஆசி பெறுவதாக! இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு. 19அவளே உனக்குரிய அழகிய பெண் மான், எழில்மிகு புள்ளிமான்; அவளது மார்பகம் எப்போதும் உனக்கு மகிழ்வூட்டுவதாக! அவளது அன்பு உன்னை எந்நாளும் ஆட்கொண்டிருப்பதாக! 20மகனே, விலைமகளைப் பார்த்து நீ மயங்குவதேன்? பரத்தையை நீ அணைத்துக்கொள்வதேன்? 21மனிதரின் வழிகளுள் ஒன்றும் ஆண்டவர் கண்களுக்குத் தப்புவதில்லை; அவர்களுடைய பாதைகளையெல்லாம் அவர் சீர்தூக்கிப் பார்க்கின்றார். 22பொல்லார் தம் குற்றச் செயல்களில் தாமே சிக்கிக்கொள்வர்; தம் பாவ வலையில் தாமே அகப்பட்டுக்கொள்வர். 23கட்டுப்பாடு இல்லாததால் அவர்கள் மடிந்து போவர்; தம் மதிகேட்டின் மிகுதியால் கெட்டழிவர்.


5:7 “பிள்ளாய்!” என்பது “பிள்ளைகளே!” என்று எபிரேய பாடத்தில் உள்ளது.


அதிகாரம் 6

சில நல்லுரைகள்


1பிள்ளாய்! உன் அடுத்திருப்பவரின் கடனுக்காக நீ பொறுப்பேற்றிருந்தால், அல்லது அன்னியர் ஒருவருக்காகப் பிணையாய் நின்றால், 2அல்லது உன் வார்த்தைகளை முன்னிட்டு ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டால், அல்லது உன் வாய்ச் சொல்லிலேயே நீ பிடிபட நேரிட்டால், 3பிள்ளாய்! உன்னை விடுவித்துக் கொள்ள இப்படிச் செய்; நீ அடுத்திருப்பவரின் கையில் அகப்பட்டுக் கொண்டதால், விரைந்தோடிச் சென்று அவரை வருந்தி வேண்டிக்கொள். 4அதைச் செய்யும் வரையில் கண்ணயராதே; கண் இமைகளை மூடவிடாதே. 5நீ *வேடன் கையில்* அகப்பட்ட மான் போலிருப்பாய்; கண்ணியில் சிக்கிய குருவிக்கு ஒப்பாவாய்; உன்னைத் தப்புவித்துக் கொள்ளப்பார்.✠


சோம்பேறியாயிராதே


6சோம்பேறிகளே, எறும்பைப் பாருங்கள்; அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்; 7அதற்குத் தலைவனுமில்லை, கண்காணியுமில்லை, அதிகாரியுமில்லை. 8எனினும், அது கோடையில் உணவைச் சேர்த்துவைக்கும்; அறுவடைக் காலத்தில் தானியத்தைச் சேகரிக்கும். 9சோம்பேறிகளே, எவ்வளவு நேரம் படுத்திருப்பீர்கள்? தூக்கதிலிருந்து எப்போது எழுந்திருப்பீர்கள்? 10இன்னும் சிறிது நேரம் தூங்குங்கள், இன்னும் சிறிது நேரம் உறங்குங்கள்; கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திருங்கள். 11வறுமை உங்கள் மீது வழிப்பறிக் கள்வரைப்போல் பாயும்; ஏழ்மைநிலை உங்களைப் போர்வீரரைப்போல் தாக்கும்.


கயவனின் போக்கு


12போக்கிரி அல்லது கயவன் தாறுமாறாகப் பேசிக்கொண்டு அலைவான். 13அவன் கண் சிமிட்டுவான்; காலால் செய்தி தெரிவிப்பான்; விரலால் சைகை காட்டுவான். 14அவன் தன் வஞ்சக உள்ளத்தில் சதித்திட்டம் வகுப்பான்; எங்கும் சண்டை மூட்டிவிடுவான். 15ஆகையால் அவனுக்கு எதிர்பாராத நேரத்தில் கேடு வரும்; திடீரென்று அழிந்துபோவான்; மீளமாட்டான்.


கடவுளுக்கு வெறுப்பானவை


16ஆண்டவர் வெறுப்பவை ஆறு, ஏழாவது ஒன்றும் அவரது வெறுப்புக்கு உரியது. 17அவை இறுமாப்புள்ள பார்வை, பொய்யுரைக்கும் நாவு, குற்றமில்லாரைக் கொல்லும் கை, 18சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம், தீங்கிழைக்க விரைந்தோடும் கால், 19பொய்யுரைக்கும் போலிச்சான்று, நண்பரிடையே சண்டை மூட்டிவிடும் செயல் என்பவையே.


கற்புநெறி வழுவாமை


20பிள்ளாய்! உன் தந்தையின் கட்டளையைக் கடைப்பிடி; தாயின் அறிவுரையைப் புறக்கணியாதே. 21அவற்றை எப்போதும் உன் இதயத்தில் இருத்திவை; உன் கழுத்துக்கு மாலையென அணிந்து கொள். 22நீ நடந்து செல்லும்போது அவை உனக்கு வழிகாட்டும்; நீ படுத்திருக்கும்போது அவை உன்னைக் காவல் காக்கும்; விழித்திருக்கும்போது உன்னுடன் உரையாடும். 23கட்டளை என்பது ஒரு விளக்கு; அறிவுரை என்பது ஒளி; கண்டித்தலும் தண்டித்தலும் நல்வாழ்வுக்கு வழி. 24அவை உன்னை விலைமகளிடமிருந்து, தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து விலகியிருக்கச் செய்யும். 25உன் உள்ளத்தால் அவளது அழகை இச்சியாதே; அவள் கண்ணடித்தால் மயங்கிவிடாதே. 26விலைமகளின் விலை ஒரு வேளைச் சோறுதான்; ஆனால், பிறன் மனையாளோ உயிரையே வேட்டையாடி விடுவாள். 27ஒருவன் தன் மடியில் நெருப்பை வைத்திருந்தால், அவனது ஆடை எரிந்துபோகாமலிருக்குமா? 28ஒருவன் தழல்மீது நடந்து சென்றால், அவன் கால் வெந்துபோகாமலிருக்குமா? 29பிறன்மனை நயப்பவன் செயலும் இத்தகையதே; அவளைத் தொடும் எவனும் தண்டனைக்குத் தப்பமாட்டான். 30திருடன் தன் பசியைத் தீர்க்கத் திருடினால், அவனை மக்கள் பெருங்குற்றவாளியெனக் கருதாதிருக்கலாம். 31ஆனால், அவன் பிடிபடும்போது ஏழு மடங்காகத் திருப்பிக்கொடுக்க வேண்டும்; தன் குடும்பச் சொத்து முழுவதையுமே கொடுத்துவிட நேரிடும். 32கற்புநெறி தவறுகிறவன் மதிகேடன். அவ்வாறு செய்வோன் தன்னையே அழித்துக்கொள்கின்றான். 33அவன் நைய நொறுக்கப்படுவான், பழிக்கப்படுவான்; அவனது இழிவு ஒருபோதும் மறையாது. 34ஏனெனில், தன் மனைவி தனக்கே உரியவள் என்னும் உணர்ச்சி ஒரு கணவனிடம் சினவெறியை உண்டாக்கும்; பழி தீர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் நாளில், அவன் இரக்கம் காட்டமாட்டான்; 35சரியீடு எதுவும் ஏற்றுக் கொள்ளமாட்டான்; எவ்வளவு பொருள் கொடுத்தாலும் அவன் சினம் தணியாது.


6:10-11 நீமொ 24:33-34. 6:5 ‘கையில்’ என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 7

1என் பிள்ளையே, என் வார்த்தைகளை மனத்தில் இருத்து; என் கட்டளைகளைச் செல்வமெனப் போற்று. 2என் கட்டளைகளைக் கடைப்பிடி, நீ வாழ்வடைவாய்; என் அறிவுரையை உன் கண்மணிபோல் காத்துக்கொள்வாய். 3அவற்றை உன் விரல்களில் அணியாகப் பூண்டு கொள்; உன் இதயப் பலகையில் பொறித்துவை. 4ஞானத்தை உன் சகோதரி என்று சொல்; உணர்வை உன் தோழியாகக் கொள். 5அப்பொழுது நீ விலைமகளிடமிருந்து தப்புவாய்; தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து காப்பாற்றப்படுவாய். 6ஒரு நாள் நான் என் வீட்டின் பலகணியருகில் நின்றுகொண்டு, பின்னல் தட்டி வழியாகப் பார்த்தபோது, 7பேதைகளிடையே ஓர் இளைஞனைக் கண்டேன்; மதிகேடனான அவனை இளைஞரிடையே பார்த்தேன். 8அவன் தெரு வழியாக நடந்துபோய், அதன் கோடியில் அவள் வீட்டை நோக்கிச் சென்றான். 9அது மாலை நேரம், பொழுது மயங்கும் வேளை; அந்த இரவிலே, இருட்டும் நேரத்திலே, 10அங்கே ஒரு பெண் அவனைக் காண வந்தாள். அவள் விலைமகளைப் போல உடுத்தி, வஞ்சக நெஞ்சினளாய் வந்தாள். 11அவள் வெளிப் பகட்டு மிகுந்தவள்; வெட்கத்தை ஒழித்தவள்; வீட்டில் அவளது கால் தங்காது. 12அவள் நடுத்தெருவிலும் நிற்பாள்; முச்சந்தியிலும் நிற்பாள்; மூலைமுடுக்குகளிலும் பதுங்கியிருப்பாள். 13அவள் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு, நாணமிலாத் துணிவுடன் அவனைப் பார்த்து, 14“நான் பலிகளைப் படைக்க வேண்டியிருந்தது; இன்று நான் என் பொருத்தனைகளை நிறைவேற்றிவிட்டேன்; 15அதனாலேதான் உன்னைக் காணவந்தேன்; உன்னை ஆவலோடு தேடினேன்; கண்டுகொண்டேன். 16என் மஞ்சத்தை மெத்தையிட்டு அழகுசெய்திருக்கின்றேன்; எகிப்து நாட்டு வண்ணக் கம்பளம் விரித்திருக்கின்றேன். 17வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கக் கலவையிட்டு, என் படுக்கையை மணம் கமழச் செய்திருக்கின்றேன். 18நீ வா; விடியற்காலம் வரையில் இன்பத்தில் மூழ்கியிருப்போம்; இரவு முழுவதும் காதலாட்டத்தில் களித்திருப்போம். 19என் கணவன் வீட்டில் இல்லை. நெடுந்தொலைப் பயணம் செய்யப் புறப்பட்டுப் போய் விட்டான். 20அவன் பை நிறையப் பணம் கொண்டுபோயிருக்கின்றான்; முழுநிலா நாள்வரையில் திரும்பிவர மாட்டான்” என்று சொன்னாள். 21இவ்வாறு பல இனிய சொற்களால் அவனை அவள் இணங்கச் செய்தாள்; நயமாகப் பேசி அவனை மயக்கிவிட்டாள். 22உடனே அவனும் உணர்வு மழுங்கினவனாய் அவள் பின்னே சென்றான்; வெட்டுவதற்காக இழுத்துச் செல்லப்படும் காளைமாட்டைப் போலவும், வலையில் சிக்கிக் கொள்ளப் போகும் கலைமானைப் போலவும், 23கண்ணியில் விழப்போகும் பறவையைப் போலவும் சென்றான். ஓர் அம்பு அவன் நெஞ்சில் ஊடுருவிப் பாயும் வரையில், தன் உயிர் அழிக்கப்படும் என்பதை அறியாமலே சென்றான்.


24ஆகையால் பிள்ளைகளே! எனக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைக் கவனியுங்கள். 25உங்கள் மனத்தை அவள் வழிகளில் செல்லவிடாதீர்கள்; மயக்கங்கொண்டு அவள் பாதைகளில் நடவாதீர்கள். 26அவள் பலரை குத்தி வீழ்த்தியிருக்கின்றாள்; வலிமை வாய்ந்தோரையும் அவள் கொன்றிருக்கின்றாள். 27அவள் வீடு பாதாளத்திற்குச் செல்லும் வழி; சாவுக்கு இட்டுச் செல்லும் பாதை.


அதிகாரம் 8

ஞானத்திற்குப் புகழுரை


1ஞானம் அழைக்கிறதன்றோ? மெய்யறிவு குரல் எழுப்புகிறதன்றோ?

2வழியருகிலுள்ள உயரமான இடத்திலும், தெருக்கள் கூடும் இடத்திலும் அது நிற்கின்றது.

3நகருக்குள் நுழையும் வாயிலருகே, நகர வாயிலை நெருங்கும் இடத்திலே, அது நின்று கொண்டு இவ்வாறு உரத்துச் சொல்லுகிறது:

4மானிடரே! உங்களுக்கே நான் இதை உரைக்கின்றேன்; ஒவ்வொரு மனிதருக்கும் சொல்லுகின்றேன்.

5முன்மதியற்றோரே! விவேகமாயிருக்க கற்றுக்கொள்ளுங்கள்; மதிகேடரே! உணர்வைப் பெறுங்கள்.

6நான் சொல்வதைக் கவனியுங்கள்; மிகத் தெளிவாகச் சொல்கின்றேன்; நான் ஒளிவு மறைவின்றிக் கூறுகின்றேன்.

7ஏனெனில், என் வாய் உண்மையே பேசும்; பொல்லாங்கான பேச்சு என் நாவுக்கு அருவருப்பு.

8என் வார்த்தைகளெல்லாம் நேர்மையானவை; உருட்டும் புரட்டும் அவற்றில் இல்லை.

9உணர்வாற்றல் உள்ளோர்க்கு அவையாவும் மிகத் தெளிவு; அறிவை அடைந்தோர்க்கு அவை நேர்மையானவை.

10வெள்ளியைவிட மேலாக என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்; பசும் பொன்னைவிட மேலாக அறிவை விரும்புங்கள்.

11பவளத்திலும் ஞானமே சிறந்தது; நீங்கள் விரும்புவது எதுவும் அதற்கு நிகராகாது.

12நானே ஞானம்; நான் விவேகத்தோடு வாழ்கின்றேன்; அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளேன்.

13ஆண்டவருக்கு அஞ்சுவது தீமையைப் பகைக்கச் செய்யும்; ஆணவத்தையும் இறுமாப்பையும் தீமையையும் உருட்டையும் புரட்டையும் நான் வெறுக்கின்றேன்.

14திட்டம் இடுவதும் நானே; இட்டதைச் செய்வதும் நானே. உணர்வும் நானே; வலிமையும் எனதே.

15அரசர் ஆட்சி செலுத்துவதும் என்னால்; ஆட்சியாளர் சட்டம் இயற்றுவதும் என்னால்.

16அதிகாரிகள் ஆளுவதும் என்னாலே; உலக நீதிபதிகள் அனைவரும் உண்மைத் தீர்ப்பு வழங்குவதும் என்னாலே,

17எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்; என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.

18என்னிடம் செல்வமும் மேன்மையும், அழியாப் பொருளும் அனைத்து நலமும் உண்டு.

19என்னை அடைந்தவர்கள் பெறும் பயன் பசும்பொன்னைவிடச் சிறந்தது; என்னை அடைந்தவர்களுக்குக் கிடைக்கும் விளைச்சல் தூய வெள்ளியை விட மேலானது.

20நான் நேர்மையான வழியைப் பின்பற்றுகின்றேன்; என் பாதை முறையான பாதை.

21என்மீது அன்புகூர்வோருக்குச் செல்வம் வழங்குகின்றேன்; அவர்களுடைய களஞ்சியங்களை நிரப்புகின்றேன்.

22ஆண்டவர் தம் *படைப்பின் தொடக்கத்திலேயே,* தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப்படைத்தார்.✠✠

23தொடக்கத்தில், பூவுலகு உண்டாகு முன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன்.

24கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை.

25மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன்.

26அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல்மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன்.

27வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்த போது, நான் அங்கே இருந்தேன்.

28உயரத்தில் மேகங்களை அவர் அமைத்த போது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன்.

29அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி, அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது,

30நான் அவர் அருகில் அவருடைய சிற்பியாய்⁕ இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன்.

31அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.

32எனவே, பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைப் பின்பற்றுகின்றோர் நற்பேறு பெற்றோர்!

33நற்பயிற்சி பெற்று ஞானத்தை அடையுங்கள்; அதைப் புறக்கணியாதீர்கள்.

34என் வாயிற்படியில் நாள்தோறும் விழிப்புள்ளோராய் நின்று, என் கதவு நிலையருகில் காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கின்றோர் நற்பேறு பெற்றோர்!

35என்னைத் தேடி அடைவோர் வாழ்வடைவர்; ஆண்டவரின் கருணை அவர்களுக்குக் கிடைக்கும்.

36என்னைத் தேடி அடையாதோர் தமக்குக் கேடு வருவித்துக் கொள்வர்; என்னை வெறுக்கும் அனைவரும் சாவை விரும்புவோர் ஆவர்!


8:1-3 நீமொ 1:20-21. 8:22 திவெ 3:14. 8:22 ‘வழியின் தொடக்கம்’ என்பது எபிரேய பாடம். 8:30 ‘செல்லப்பிள்ளையாய்’ என்றும் பொருள்படும்.


அதிகாரம் 9

ஞானமும் மதிகேடும்


1ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கின்றது. 2அது தன் பலிவிலங்குகளைக் கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது; 3தன தோழிகளை அனுப்பிவைத்தது; நகரின் உயரமான இடங்களில் நின்று, 4“அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்” என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது; 5“வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்துவைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள்; 6பேதைமையை விட்டுவிடுங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்; உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்” என்றது. 7இகழ்வாரைத் திருத்த முயல்வோர் அடைவது ஏளனமே; பொல்லாரைக் கண்டிப்போர் பெறுவது வசைமொழியே. 8இகழ்வாரைக் கடிந்து கொள்ளாதே; அவர்கள் உன்னைப் பகைப்பார்கள். ஞானிகளை நீ கடிந்து கொண்டால், அவர்கள் உன்னிடம் அன்புகொள்வர். 9ஞானிகளுக்கு அறிவுரை கூறு; அவர்களது ஞானம் வளரும்; நேர்மையாளருக்குக் கற்றுக் கொடு; அவர்களது அறிவு பெருகும். 10ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; தூயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு.✠ 11என்னால் உன் வாழ்நாள்கள் மிகும்; உன் ஆயுட்காலம் நீடிக்கும். 12நீங்கள் ஞானிகளாய் இருந்தால், அதனால் வரும் பயன் உங்களுக்கே உரியதாகும்; நீங்கள் ஏளனம் செய்வோராய் இருந்தால், அதனால் வரும் விளைவை நீங்களே துய்ப்பீர்கள். 13மதிகேடு என்பதை வாயாடியான, அறிவில்லாத, எதற்கும் கவலைப்படாத ஒரு பெண்ணுக்கு ஒப்பிடலாம். 14அவள் தன் வீட்டு வாயிற்படியிலோ, நகரின் மேடான இடத்திலோ உட்கார்ந்துகொண்டு, 15தம் காரியமாக வீதியில் செல்லும் வழிப்போக்கரைப் பார்த்து, 16“அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்” என்பாள்; மதிகேடரைப் பார்த்து, 17“திருடின தண்ணீரே இனிமை மிகுந்தது; வஞ்சித்துப் பெற்ற உணவே இன்சுவை தருவது” என்பாள். 18அந்த ஆள்களோ, அங்கே செல்வோர் உயிரை இழப்பர் என்பதை அறியார்; அவளுடைய விருந்தினர் பாதாளத்தில் கிடக்கின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியாது.


9:10 யோபு 28:28; திபா 111:10; நீமொ 1:7.


அதிகாரம் 10

சாலமோனின் நீதிமொழிகள்


1சாலமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை மகிழ்விக்கின்றனர்; அறிவற்ற மக்களோ தம் தாய்க்குத் துயரமளிப்பர்.

2தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன் தராது; நேர்மையான நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும்..

3நல்லாரை ஆண்டவர் பசியால் வருந்த விடார். ஆனால் பொல்லார் விரும்புவதை அவர்களுக்குக் கொடுக்க மாட்டார்..

4வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும்; விடாமுயற்சியுடையோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்..

5கோடைக் காலத்தில் விளைச்சலைச் சேர்த்துவைப்போர் மதியுள்ளோர்; அறுவடைக் காலத்தில் தூங்குவோர் இகழ்ச்சிக்குரியர்..

6நேர்மையாளர்மீது ஆசி பொழியும்; பொல்லார் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்..

7நேர்மையாளரைப்பற்றிய நினைவு ஆசி விளைவிக்கும்; பொல்லாரின் பெயரோ அழிவுறும்.

8ஞானமுள்ளோர் அறிவுரைகளை மனமார ஏற்பர்; பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.

9நாணயமாக நடந்து கொள்வோர் இடையூறின்றி நடப்பர்; கோணலான வழியைப் பின்பற்றுவோரோ வீழ்த்தப்படுவர்.

10தீய நோக்குடன் கண்ணடிப்போர் தீங்கு விளைவிப்பர்; பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.

11நல்லாரின் சொற்கள் வாழ்வளிக்கும் ஊற்றாகும்; பொல்லாரின் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.

12பகைமை சண்டைகளை எழுப்பிவிடும்; தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்.✠

13விவேகமுள்ளவர்களின் சொற்களில் ஞானம் காணப்படும்; மதிகெட்டவர்களின் முதுகிற்குப் பிரம்பே ஏற்றது.

14ஞானமுள்ளோர் அறிவைத் தம்மகத்தே வைத்திருப்பர்; மூடர் வாய் திறந்தால் அழிவு அடுத்து வரும்.

15செல்வரின் சொத்து அவருக்கு அரணாயிருக்கும்; ஏழையரின் வறுமை நிலை அவர்களை இன்னும் வறியோராக்கும்.

16நேர்மையாளர் தம் வருமானத்தை வாழ்வதற்குப் பயன்படுத்துகின்றனர்; பொல்லாதவரோ தம் ஊதியத்தைத் தீய வழியில் செலவழிக்கின்றனர்.

17நல்லுரையை ஏற்போர் மெய் வாழ்வுக்கான பாதையில் நடப்பர்; கண்டிப்புரையைப் புறக்கணிப்போரோ தவறான வழியில் செல்வர்.

18உள்ளத்தின் வெறுப்பை மறைப்போர் பொய்யர்; வசைமொழி கூறுவோர் மடையர்.

19மட்டுக்கு மிஞ்சின பேச்சு அளவற்ற தீமைகளை விளைவிக்கும்; தம் நாவை அடக்குவோர் விவேகமுள்ளோர்.

20நல்லாரின் சொற்கள் தூய வெள்ளிக்குச் சமம்; பொல்லாரின் எண்ணங்களோ பதருக்குச் சமம்.

21நல்லாரின் சொற்கள் பிறருக்கு உணவாகும்; செருக்கு நிறைந்தோரின் மதிகேடு அவர்களை அழித்துவிடும்.

22ஆண்டவரின் ஆசி செல்வம் அளிக்கும்; அச்செல்வம் துன்பம் கலவாது அளிக்கப்படும் செல்வம்.

23தீங்கிழைப்பது மதிகெட்டோர்க்கு மகிழ்ச்சிதரும் விளையாட்டு; ஞானமே மெய்யறிவு உள்ளோர்க்கு மகிழ்ச்சி தரும்.

24பொல்லார் எதற்கு அஞ்சுவரோ, அதுவே அவர்களுக்கு வரும்; கடவுளுக்கு அஞ்சி நடப்போர் எதை விரும்புகின்றனரோ, அது அவர்களுக்குக் கிடைக்கும்.

25சுழல் காற்றக்குப்பின் பொல்லார் இராமற்போவர்; கடவுளுக்கு அஞ்சி நடப்ப வர்களோ என்றுமுள்ள அடித்தளம் போல நிற்பார்கள்.

26பல்லுக்குக் காடியும் கண்ணுக்குப் புகையும் எப்படி இருக்குமோ, அப்படியே சோம்பேறிகள் தங்களைத் தூது அனுப்பினோர்க்கு இருப்பர்.

27ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஆயுளை நீடிக்கச் செய்யும்; பொல்லாரின் ஆயுட்காலம் குறுகிவிடும்.

28நல்லார் தாம் எதிர்ப்பார்ப்பதைப் பெற்று மகிழ்வர்; பொல்லார் எதிர்பார்ப்பதோ அவர்களுக்குக் கிட்டாமற் போகும்.

29ஆண்டவரின் வழி நல்லார்க்கு அரணாகும்; தீமை செய்வோர்க்கோ அது அழிவைத் தரும்.

30கடவுளுக்கு அஞ்சி நடப்போரை ஒருபோதும் அசைக்க இயலாது; பொல்லாரோ நாட்டில் குடியிருக்கமாட்டார்.

31கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் வாயினின்று ஞானம் பொங்கி வழியும்; வஞ்சகம் பேசும் நா துண்டிக்கப்படும்.

32கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் சொல்லில் இனிமை சொட்டும்; பொல்லாரின் சொற்களிலோ வஞ்சகம் பொங்கி வழியும்.


10:12 யாக் 5:20; 1 பேது 4:8.


அதிகாரம் 11

1கள்ளத் துலாக்கோல் ஆண்டவருக்கு அருவருப்பானது; முத்திரையிட்ட படிக்கல்லே அவர் விரும்புவது.

2இறுமாப்பு வரும் முன்னே, இகழ்ச்சி வரும் பின்னே; தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும் இருக்கும்.

3நேர்மையானவர்களின் நல்லொழுக்கம் அவர்களை வழிநடத்தும்; நம்பிக்கைத் துரோகி களின் வஞ்சகம் அவர்களைப் பாழ்படுத்தும்.

4கடவுளின் சினம் வெளிப்படும் நாளில் செல்வம் பயன்படாது; நேர்மையான நடத் தையோ சாவுக்குத் தப்புவிக்கும்.

5குற்றமில்லாதவர்களின் நேர்மை அவர்களின் வழியை நேராக்கும்; பொல்லார் தம் பொல்லாங்கினால் வீழ்ச்சியுறுவர்.

6நேர்மையானவர்களின் நீதி அவர்களைப் பாதுகாக்கும்; நம்பிக்கைத் துரோகிகள் தங்கள் சதித்திட்டத்தில் தாங்களே பிடிபடுவார்கள்.

7பொல்லார் எதிர்நோக்கியிருந்தது அவர்கள் சாகும்போதும் கிட்டாமலே மறைந்துபோகும்; அவர்கள் எதிர் நோக்கியிருந்த செல்வம் கிடைக்காமற்போகும்.

8கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துயரினின்று விடுவிக்கப்படுவர்; பொல்லார் அதில் அகப்பட்டு உழல்வர்.

9இறைப்பற்று இல்லாதோர் தம் பேச்சினால் தமக்கு அடுத்திருப்பாரைக் கெடுப்பர்; நேர்மையாளர் தம் அறிவாற்றலால் விடுவிக்கப் பெறுவர்.

10நல்லாரின் வாழ்க்கை வளமடைந்தால், ஊரார் மகிழ்ந்து கொண்டாடுவர்; பொல்லார் அழிந்தால் அவர்களிடையே ஆர்ப்பரிப்பு உண்டாகும்.

11நேர்மையாளரின் ஆசியாலே, நகர் வளர்ந்தோங்கும்; பொல்லாரின் கபடப் பேச்சாலே அது இடிந்தழியும்.

12அடுத்திருப்போரை இகழ்தல் மதிகெட் டோரின் செயல்; நாவடக்கம் விவேகமுள்ளோரின் பண்பு;

13வம்பளப்போர் மறைசெய்திகளை வெளிப் படுத்திவிடுவர்; நம்பிக்கைக்குரியோரோ அவற்றை மறைவாக வைத்திருப்பர்.

14திறமையுள்ள தலைமை இல்லையேல், நாடு வீழ்ச்சியுறும்; அறிவுரை கூறுவார் பலர் இருப்பின், அதற்குப் பாதுகாப்பு உண்டு.

15அன்னியருக்காகப் பிணை நிற்போர் அல்லற்படுவர்; பிணை நிற்க மறுப்போர்க்கு இன்னல் வராது.

16கனிவுள்ள பெண்ணுக்குப் புகழ் வந்து சேரும்; முயற்சியுள்ள ஆணுக்குச் செல்வம் வந்து குவியும்.

17இரக்கமுள்ளோர் தம் செயலால் தாமே நன்மை அடைவர்; இரக்கமற்றோரோ தமக்கே ஊறு விளைவித்துக் கொள்வர்.

18பொல்லார் பெறும் ஊதியம் ஊதியமல்ல; நீதியை விதைப்போரோ உண்மையான ஊதியம் பெறுவர்.

19நீதியில் கருத்தூன்றியோர் நீடு வாழ்வர்; தீமையை நாடுவோர் சாவை நாடிச் செல்வர்.

20வஞ்சக நெஞ்சினர் ஆண்டவரின் இகழ்ச்சிகுரியவர்; மாசற்றோர் அவரது மகிழ்ச்சிக்கு உரியவர்.

21தீயோர் தண்டனைக்குத் தப்பமாட்டார்; இது உறுதி; கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் மரபினருக்கோ தீங்கு வராது.

22மதிகெட்டு நடக்கும் பெண்ணின் அழகு பன்றிக்குப் போட்ட வைர மூக்குத்தி.

23கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் விருப்பங்கள் எப்போதும் நன்மையே பயக்கும்; எதிர்காலம் பற்றிப் பொல்லார் கொள்ளும் நம்பிக்கை தெய்வ சினத்தையே வருவிக்கும்.

24அளவின்றிச் செலவழிப்போர் செல்வ ராவதும் உண்டு; கஞ்சராய் வாழ்ந்து வறியவ ராவதும் உண்டு.

25ஈகைக் குணமுள்ளோர் வளம்பட வாழ்வர்; குடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர்.

26தானியத்தைப் பதுக்கி வைப்போரை மக்கள் சபிப்பர்; தானியத்தை மக்களுக்கு விற்போரோ ஆசி பெறுவர்.

27நன்மையானதை நாடுவோர், கடவுளின் தயவை நாடுவோர் ஆவர்; தீமையை நாடுவோரிடம் தீமைதான் வந்தடையும்.

28தம் செல்வத்தை நம்பி வாழ்வோர் சருகென உதிர்வர்; கடவுளை நம்பி வாழ்வோரோ தளிரெனத் தழைப்பர்.

29குடும்பச் சொத்தைக் கட்டிக் காக்காத வர்களுக்கு எஞ்சுவது வெறுங்காற்றே; அத் தகைய மூடர்கள் ஞானமுள்ளோர்க்கு அடிமை யாவர்.

30நேர்மையான நடத்தை வாழ்வளிக்கும் மரத்திற்கு இட்டுச் செல்லும்; ஆனால், வன்செயல்⁕ உயிராற்றலை இழக்கச் செய்யும்.

31நேர்மையாளர் இவ்வுலகிலேயே கைம்மாறு பெறுவர் எனில், பொல்லாரும் பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ!✠


11:31 1 பேது 4:18. 11:30 “வன்செயல்” என்பது “ஞானி” என்று எபிரேய பாடத்தில் உள்ளது.


அதிகாரம் 12

1அறிவை விரும்புவோர் கண்டித்துத் திருத்தப்படுவதை விரும்புவர்; கண்டிக்கப்படுவதை வெறுப்போர் அறிவற்ற விலங்குகள் ஆவர்.

2நல்லார் ஆண்டவரது கருணை பெறுவர். தீய சூழ்ச்சி செய்வோரை அவர் கண்டிப்பார்.

3பொல்லாங்கு செய்து எவரும் நிலைத்த தில்லை; நேர்மையாளரின் வேரை அசைக்க முடியாது.

4பண்புள்ள மனைவி தன் கணவனுக்கு மணிமுடியாவாள்; இழிவு வருவிப்பவள் அவனுக்கு எலும்புருக்கிபோலிருப்பாள்.

5நேர்மையானவர்களின் கருத்துகள் நியாயமானவை; பொல்லாரின் திட்டங்கள் வஞ்சகமானவை.

6பொல்லாரின் சொற்கள் சாவுக்கான கண்ணிகளாகும்; நேர்மையாளரின் பேச்சு உயிரைக் காப்பாற்றும்.

7பொல்லார் வீழ்த்தப்பட்டு வழித் தோன்ற லின்றி அழிவர்; நல்லாரின் குடும்பமோ நிலைத்திருக்கும்.

8மனிதர் தம் விவேகத்திற்கேற்ற புகழைப் பெறுவர்; சீர்கெட்ட இதயமுடையவரோ இகழ்ச்சியடைவர்.

9வீட்டில் உணவில்லாதிருந்தும் வெளியில் பகட்டாய்த் திரிவோரைவிட, தம் கையால் உழைத்து எளிய வாழ்க்கை நடத்துவோரே மேல்.

10நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர். பொல்லாரின் உள்ளமோ கொடுமை வாய்ந்தது.

11உழுது பயிரிடுவோர் மிகுந்த உணவு பெறுவர்; வீணானவற்றைத் தேடியலைவோர் அறிவு அற்றவர்.

12தீயோரின் கோட்டை களிமண்ணெனத் தூளாகும். நேர்மையாளரின் வேரோ உறுதியாக ஊன்றி நிற்கும்.

13தீயோர் தம் பொய்யுரையில் தாமே சிக்கிக் கொள்வர்; நேர்மையாளர் நெருக்கடியான நிலையிலிருந்தும் தப்புவர்.

14ஒருவர் தம் பேச்சினால் நற்பயன் அடைகிறார்; வேறோருவர் தம் கைகளினால் செய்த வேலைக்குரிய பயனைப் பெறுகிறார்.

15மூடர் செய்வது அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்; ஞானிகள் பிறருடைய அறிவுரைக்குச் செவி கொடுப்பர்.

16மூடர் தம் எரிச்சலை உடனடியாக வெளியிடுவர்; விவேகிகளோ பிறரது இகழ்ச் சியைப் பொருட்படுத்தார்.

17உண்மை பேசுவோர் நீதியை நிலை நாட்டுவோர்; பொய்யுரைப்போரோ வஞ்சகம் நிறைந்தோர்.

18சிந்தனையற்ற பேச்சு வாள் போலப் புண்படுத்தும்; ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும்.

19ஒருவர் உரைக்கும் உண்மை என்றும் நிலைக்கும்; பொய்யுரையின் வாழ்வோ இமைப்பொழுதே.

20சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்.

21நல்லாருக்கு ஒரு கேடும் வராது; பொல்லாரின் வாழ்க்கையோ துன்பம் நிறைந்த தாய் இருக்கும்.

22பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார்; உண்மையாய் நடக்கின்ற வர்களை அவர் அரவணைக்கிறார்.

23விவேகமுள்ளோர் தம் அறிவை மறைத்துக் கொள்வர்; மதிகேடரோ தம் மூட எண்ணத்தை விளம்பரப்படுத்துவர்.

24ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்; சோம்பேறிகளோ அடிமை வேலை செய்வர்.

25மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்; இன்சொல் அவர்களை மகிழ்விக்கும்.

26சான்றோரின் அறிவுரை நண்பர்களுக்கு நன்மை பயக்கும்; பொல்லாரின் பாதை அவர்களைத் தவறிழைக்கச் செய்யும்.

27சோம்பேறிகள் தாம் வேட்டையாடியதையும் சமைத்துண்ணார்; விடாமுயற்சியுடையவரோ அரும் பொருளையும் ஈட்டுவர்.

28நேர்மையாளரின் வழி வாழ்வு தரும்; முரணானவரின் வழி சாவில் தள்ளும்.


அதிகாரம் 13

1ஞானமுள்ள மகன் தந்தையின் நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வான்; இறுமாப்புள்ளவனோ கண்டிக்கப்படுதலைப் பொருட்படுத்த மாட்டான்.

2நல்லோர் தம் சொற்களின் பலனான நல்லுணவை உண்கிறார்; வஞ்சகச் செயல்களே வஞ்சகர் உண்ணும் உணவு.

3நாவைக் காப்பவர் தம் உயிரையே காத்துக் கொள்கிறார்; நாவைக் காவாதவன் கெட்டழிவான்.

4சோம்பேறிகள் உண்ண விரும்புகிறார்கள், உணவோ இல்லை; ஊக்கமுள்ளவரோ உண்டு கொழுக்கிறார்.

5நல்லார் பொய்யுரையை வெறுப்பர்; பொல்லாரோ வெட்கக்கேடாகவும் இழிவாகவும் நடந்துகொள்வர்.

6நேர்மையாக நடப்போரை நீதி பாதுகாக்கும்; பொல்லாரை அவர்களின் பாவம் கீழே வீழ்த்தும்.

7ஒன்றுமில்லாதிருந்தும் செல்வர் போல நடிப்போருமுண்டு; மிகுந்த செல்வமிருந்தும் ஏழைகள் போல நடிப்போருமுண்டு.

8அச்சுறுத்தப்படும்போது செல்வர் தம் பொருளைத் தந்து தம் உயிரை மீட்டுக்கொள்வர். ஏழையோ அச்சுறுத்துதலுக்கு அஞ்சான்.

9சான்றோரின் ஒளி சுடர்வீசிப் பெருகும்; பொல்லாரின் விளக்கோ அணைக்கப்படும்.

10மூடன் தன் இறுமாப்பினாலே சண்டை மூட்டுவான்; பிறருடைய அறிவுரைகளை ஏற்போரிடம் ஞானம் காணப்படும்.

11விரைவில் வரும் செல்வம் விரைவில் கரையும்; சிறிது சிறிதாய்ச் சேர்ப்பவனின் செல்வமே பெருகும்.

12நெடுநாள் எதிர்நோக்கியிருப்பது மனச் சோர்வை உண்டாக்கும்; விரும்பியது கிடைப்பது சாகாவரத்தைப் பெறுவது போலாகும்.

13அறிவுரையைப் புறக்கணிக்கிறவர் அழிவுறுவார்; போதிக்கிறவரின் சொல்லை மதிக்கிறவர் பயனடைவார்.

14ஞானமுள்ளவரது அறிவுரை வாழ் வளிக்கும் ஊற்றாகும்; அது ஒருவரைச் சாவை விளைவிக்கும் கண்ணிகளிலிருந்து தப்புவிக்கும்.

15நல்லறிவு மக்களின் நல்லெண்ணத்தை வருவிக்கும்; நம்பிக்கைத் துரோகமோ கேடு அடையச் செய்யும்.

16கூர்மதிவாய்ந்த எவரும் நல்லறிவோடு நடந்துகொள்வார்; மூடர் தன் மடமையை விளம்பரப்படுத்துவார்.

17தீய தூதர் தொல்லையில் ஆழ்த்துவார்; நல்ல தூதரோ அமைதி நிலவச் செய்வார்.

18நல்லுரையைப் புறக்கணிப்பவர் வறுமையும் இகழ்ச்சியும் அடைவார்; கண்டிப்புரையை ஏற்பவரோ புகழடைவார்.

19நினைத்தது கிடைப்பின் மனத்திற்கு இன்பம்; மூடர் தம் தீமையை வெறுக்காதிருப்பதும் இதனாலேயே.

20ஞானமுள்ளவர்களோடு உறவாடுகிறவர் ஞானமுள்ளவராவர்; மூடரோடு நட்புக் கொள்கிறவர் துன்புறுவார்.

21பாவிகளைத் தீங்கு பின்தொடரும்; கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு நற்பேறு கிட்டும்.

22நல்லவரது சொத்து அவருடைய மரபினரைச் சேரும்; பாவி சேர்த்த செல்வமோ கடவுளுக்கு அஞ்சி நடப்போரை வந்தடையும்.

23தரிசு நிலம் ஏழைக்கு ஓரளவு உணவு தரும்; ஆனால் நியாயம் கிடைக்காத இடத்தில் அதுவும் பறிபோகும்.

24பிரம்பைக் கையாளதவர் தம் மகனை நேசிக்காதவர்; மகனை நேசிப்பவரோ அவனைத் தண்டிக்கத் தயங்கமாட்டார்.

25கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு வயிறார உணவு கிடைக்கும்; பொல்லாரின் வயிறோ பசியால் வாடும்.


அதிகாரம் 14

1ஞானமுள்ள பெண்கள் தம் இல் லத்தைக் கட்டியெழுப்புகின்றனர்; அறிவற்றவரோ தம் கைகளைக் கொண்டே அதை அழித்துவிடுகின்றனர் .

2நேர்மையாக நடப்பவஆண்டவரிடம் அச்சம் கொள்வார்; நெறிதவறி நடப்பவன் அவரைப் பழிப்பான்.

3மூடனது இறுமாப்பு அவனை மிகுதியாகப் பேசச் செய்யும்; ஞானமுள்ளவருடைய சொற் களோ அவரைப் பாதுகாக்கும்.

4உழவு மாடுகள் இல்லையேல் விளைச்சலும் இல்லை; வலிமைவாய்ந்த காளைகள் மிகுந்த விளைச்சலை உண்டாக்கும்.

5வாக்குப் பிறழாத சாட்சி பொய்யுரையான்; பொய்ச்சாட்சியோ மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.

6ஒழுங்கீனன் ஞானத்தைப் பெற முயலுவான்; ஆனால் அதை அடையான்; விவேகமுள்ளவரோ அறிவை எளிதில் பெறுவார்.

7மூடனைவிட்டு விலகிச் செல்; அறிவுடைய பேச்சு அவனிடம் ஏது?

8விவேகமுள்ளவரது ஞானம் அவரை நேர்வழியில் நடத்தும்; மதிகேடர் மடமை அவனை ஏமாறச் செய்யும்.

9பாவக்கழுவாய் தேடுவதை மூடர் ஏளனம் செய்வர்; மூடரின் இல்லத்தில் குற்றப்பழி தங்கும்; நேர்மையாளரின் இல்லத்தில் மகிழ்ச்சி தவழும்.

10ஒருவரது இன்பமோ துன்பமோ, அது அவருடையதே; வேறெவரும் அதைத் துய்க்க இயலாது.

11பொல்லாரின் குடி வேரோடழியும்; நேர்மையாளரின் குடும்பம் தழைத்தோங்கும்.

12ஒரு பாதை ஒருவருக்கு நல்வழி போலத் தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.✠

13நகைப்பிலும் துயரமுண்டு; மகிழ்ச்சியை அடுத்து வருத்தமும் உண்டு.

14உண்மையற்றவர் தம் நடத்தையின் விளைவைத் துய்ப்பார்; நல்லவர் தம் செயல் களின் பயனை அடைவார்.

15பேதை தன் காதில் விழும் எதையும் நம்புவார்; விவேகமுள்ளவரோ நேர்வழி கண்டு அவ்வழி செல்வார்.

16ஞானமுள்ளவர் விழிப்புடைவர்; தீமையை விட்டு விலகுவர். மதிகேடரோ மடத்துணிச்சலுள்ளவர்; எதிலும் பாய்வார்.

17எளிதில் சினங்கொள்பவர் மதிகேடா னதைச் செய்வார்; விவேகமுள்ளவரோ பொறுமை யோடிருப்பார்.

18பேதையர் அறியாமையுடையோர்; விவேகமுள்ளவர்கள் சூடும் மணிமுடி அறிவாகும்.

19தீயவர் நல்லார்முன் பணிவர்; பொல்லார் சான்றோரின் வாயிற்படியில் காத்து நிற்பர்.

20ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் எனக் கருதுவர்; செல்வ ருக்கோ நண்பர் பலர் இருப்பர்.

21அடுத்திருப்பாரை இகழ்தல் பாவமாகும்; ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பார்.

22தீய சூழ்ச்சி செய்பவர் தவறிழைப்பர் அன்றோ? நலம் தரும் திட்டம் வகுப்போர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்.

23கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்; வெறும் பேச்சினால் வருவது வறுமையே.

24ஞானிகளுக்கு அவர்களது விவேகமே மணிமுடி; மதிகேடருக்கு அவர்களது மடமை தான் பூமாலை.

25உண்மைச் சான்று உயிரைக் காப்பாற்றும்; பொய்ச் சான்று ஏமாற்றத்தையே தரும்.

26ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவருக்குத் திடநம்பிக்கை அளிக்கும்; அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு அடைக்கலமா யிருப்பார்.

27ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் வாழ் வளிக்கும் ஊற்றாகும்; சாவை விளைவிக்கும் கண்ணிகளுக்கு அது மனிதரைத் தப்புவிக்கும்.

28மக்கள் தொகை உயர, மன்னரின் மாண்பும் உயரும்; குடி மக்கள் குறைய, கோமகனும் வீழ்வான்.

29பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்; எளிதில், சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்.

30மன அமைதி உடல் நலம் தரும்; சின வெறியோ எலும்புருக்கியாகும்.

31ஏழையை ஒடுக்குகிறவர் அவரை உண்டாக்கினவரை இகழ்கிறார்; வறியவருக்கு இரங்குகிறவர் அவரைப் போற்றுகிறார்.

32பொல்லார் தம் தீவினையால் வீழ்ச்சி யுறுவார்; கடவுளுக்கு அஞ்சி நடப்பவர் சாகும் போதும் தம் நேர்மையைப் புகலிடமாகக் கொள்வார்.

33விவேகமுள்ளவர் மனத்தில் ஞானம் குடிகொள்ளும்; மதிகேடரிடம் அதற்கு இடமே யில்லை.

34நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்; பாவம் நிறைந்த எந்த நாடும் இழிவடையும்.

35கூர்மதியுள்ள பணியாளனுக்கு அரசர் ஆதரவு காட்டுவார்; தமக்கு இழிவு வருவிப்பவன்மீது சீற்றங்கொள்வார்.


14:12 நீமொ 16:25.


அதிகாரம் 15

1கனிவான மறுமொழி கடுஞ்சினத் தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்..

2ஞானமுள்ளவர்களின் நா அறிவை வழங்கும்; மதிகேடரின் வாயோ மடமையை வெளியிடும்.

3ஆண்டவருடைய கண்கள் எங்கும் நோக்கும்; நல்லாரையும் பார்க்கும், பொல்லா ரையும் பார்க்கும்.

4சாந்தப்படுத்தும் சொல், வாழ்வளிக்கும் மரம் போன்றது; வஞ்சகப் பேச்சாலோ மனமுடைந்துபோகும்.

5தன் தந்தையின் நல்லுரையைப் புறக்கணிப்பவர் மூடர்; கண்டிப்புரையை ஏற்பவர் விவேகமுள்ளவர்.

6நல்லாரின் வீட்டில் நிறைசெல்வம் நிலைத்திருக்கும்; பொல்லாரின் வருவாயால் விளைவது தொல்லையே.

7ஞானிகளின் பேச்சு அறிவை வளர்க்கும் தன்மையது; மதிகேடரின் உள்ளம் அத் தகையதல்ல.

8பொல்லார் செலுத்தும் பலி ஆண்டவருக்கு அருவருப்பைத் தரும்; நேர்மையானவர்களின் மன்றாட்டு அவருக்கு உகந்ததாயிருக்கும்.

9பொல்லாரின் செயல்கள் ஆண்டவருக்கு அருவருப்பு; நீதியைப் பின்பற்றுவோரிடம் அவர் அன்புகொள்கிறார்.

10நெறி தவறிச் செல்பவருக்குத் தண்டனை கடுமையாயிருக்கும்; கண்டிப்பை வெறுப்பவர் மரணம் அடைவார்.

11பாதாளமும் படுகுழியுமே ஆண்டவர் பார்வையில் இருக்க, மனிதரின் உள்ளம் அவர் பார்வைக்கு மறைவாயிருக்குமா?

12ஏளனம் செய்வோர் தம்மைக் கடிந்து கொள்பவரை விரும்பார்; ஞானமுள்ளவரிடம் செல்லவும் மாட்டார்;

13அகமகிழ்ச்சியால் முகம் மலரும்; மனத் துயரால் உள்ளம் உடையும்.

14விவேகமுள்ளவர் மனம் அறிவை நாடும்; மதிகேடர் வாய்க்கு மடமையே உணவு.

15ஒடுக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு நாளும் தொல்லை நாளே; மனமகிழ்ச்சி உள்ளவருக்கோ எல்லா நாள்களும் விருந்து நாள்களே.

16பெருஞ்செல்வமும் அதனோடு கவ லையும் இருப்பதைவிட, சிறுதொகையும் அதனோடு ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமும் இருப்பதே மேல்.

17பகை நெஞ்சம் கொண்டோர் படைக்கும் நல்ல இறைச்சி உணவைவிட, அன்புள்ளம் உடையவர் அளிக்கும் மரக்கறி உணவே மேல்.

18எளிதில் சினங்கொள்பவர் சண்டையை மூட்டுவார்; பொறுமை உடையவர் சண்டையைத் தீர்த்து வைப்பார்.

19சோம்பேறிக்கு எவ்வழியும் முள் நிறைந்த வழியே; சுறுசுறுப்பானவர்கள் செல்லும் பாதையோ நெடுஞ்சாலையாகும்.

20ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விப்பான்; அறிவற்ற மகனோ தன் தாயை இகழ்வான்.

21மூடன் தன் மடமை குறித்து மகிழ்ச்சி யடைகின்றான்; மெய்யறிவுள்ளவன் நேர்மை யானதைச் செய்வான்.

22எண்ணிப் பாராமல் செய்யும் செயல் தோல்வியடையும்; பலர் திட்டமிட்டுச் செய்யும் செயல் வெற்றியடையும்.

23தக்க மறுமொழி அளிப்பவன் மிக்க மகிழ்ச்சி அடைவான்; காலமும் வேளையும் அறிந்து சொல்லும் சொல்லால் வரும் மகிழ்ச்சி இன்னும் பெரிது.

24விவேகமுள்ளவன் செல்லும் பாதை பாதாளத்திற்குச் செல்லும் பாதை அல்ல; அது வாழ்விற்குச் செல்லும் பாதையாகும்.

25இறுமாப்புள்ளவர் வீட்டை ஆண்டவர் இடித்துத் தள்ளுவார்; கைம்பெண்ணினது நிலத்தின் எல்லைகளைப் பாதுகாப்பார்.

26தீயோரின் எண்ணங்களை ஆண்டவர் அருவருக்கிறார்; மாசற்றோரின் சொற்களே உவப்பளிப்பவை.

27வன்முறையில் செல்வம் சேர்ப்பவர் தம் குடும்பத்திற்குத் தொல்லை வருவிப்பார்; கைக்கூலி வாங்க மறுப்பவர் நீடித்து வாழ்வார்.

28சான்றோர் எண்ணிப் பார்த்து மறுமொழி கூறுவர்; பொல்லாரின் வாய் தீய சொற்களைப் பொழியும்.

29ஆண்டவர் பொல்லாருக்கு நெடுந் தொலையில் இருக்கிறார்; தமக்கு அஞ்சி நடப்போரின் மன்றாட்டுக்குச் செவிசாய்க்கிறார்.

30இன்முகம் மனத்திற்கு மகிழ்ச்சி தரும்; நல்ல செய்தி உடம்புக்கு உரமளிக்கும்.

31நலம் தரும் அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர், ஞானிகளோடு உறவு கொண்டி ருப்பதை விரும்புவார்.

32கண்டிக்கப்படுவதைப் புறக்கணிக்கிறவர் தமக்கே கேடு வருவித்துக் கொள்கிறார்; அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர் உணர்வை அடைவார்.

33ஆண்டவரிடம் அச்சம்கொள்ளுதல் ஞானத்தைத் தரும் பயிற்சி; மேன்மை அடையத் தாழ்மையே வழி.


அதிகாரம் 16

1எண்ணங்களை மனிதர் எண்ணலாம்; ஆனால், எதற்கும் முடிவு கூறுபவர் ஆண்டவர்.

2மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் களங்கமற்றதாய்த் தோன்றலாம்; ஆனால், ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.

3உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை; அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய்.

4ஆண்டவர் படைத்த ஒவ்வொன்றிற்கும் குறிக்கப்பட்ட ஒரு முடிவு உண்டு; பொல்லாத மனிதரை அழிவு நாளுக்கென்று குறித்து வைத்திருக்கிறார்.

5இறுமாப்புள்ளவர் யாராயிருந்தாலும் அவரை ஆண்டவர் அருவருக்கிறார்; அவர் தண்டனைக்குத் தப்பவேமாட்டார்; இது உறுதி.

6அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவரைத் தீமையினின்று விலகச் செய்யும்.

7ஒருவருடைய செயல்கள் ஆண்டவருக்கு உகந்தவையாயிருக்குமானால், அவர் அவருடைய எதிரிகளையும் அவருக்கு நண்பராக்குவார்.

8தீய வழியில் சம்பாதிக்கும் பெரும் பொருளைவிட, நேர்மையோடு ஈட்டும் சிறு தொகையே மேல்.

9மனிதர் தம் வழியை வகுத்தமைக்கின்றார்; ஆனால் அதில் அவரை வழிநடத்துபவரோ ஆண்டவர்.

10அரசன் வாயினின்று பிறக்கும் வாக்குப் பொய்க்காது; தீர்ப்பு வழங்கும் போது அவன் தவறு செய்யமாட்டான்.

11நிறைகோலும் துலாக்கோலும் ஆண்ட வருக்கே உரியன; பையிலுள்ள எடைக்கற்க ளெல்லாம் அவரால் உண்டானவை.

12தீச்செலை அரசர்கள் அருவருப்பார்கள்; ஏனெனில், நீதியே அரியணையின் உறுதியான அடிப்படையாகும்.

13நேர்மையான பேச்சே அரசர் வரவேற்பார்; நேரியவற்றைச் சொல்லுகிறவரிடம் அவர் அன்புசெலுத்துவார்.

14அரசரின் சீற்றம் மரண தூதன் போன்றது; ஆனால் ஞானமுள்ளவர் அதைத் தணித்துவிடுவார்.

15அரசரின் முகமலர்ச்சி வாழ்வளிக்கும்; அவரது கருணை பருவமழை பொழியும் மேகம் போன்றது.

16பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்; வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல்.

17நேர்மையானவர்கள் செல்லும் பாதை தீமையை விட்டு விலகிச் செல்லும்; தன் நடையைக் குறித்து அவ்வாறு விழிப்புட னிருப்பவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.

18அழிவுக்கு முந்தியது அகந்தை; வீழ்ச்சிக்கு முந்தியது வீண்பெருமை.

19மேட்டிமையானவர்களோடு கொள்ளை யடித்த பொருளைத் பகிர்ந்து மகிழ்வதைவிட, மனத்தாழ்மையுடன் சிறுமைப்படுகிறவர்களோடு கூடியிருப்பது நலம்.

20போதனைக்குச் செவிகொடுப்பவன் வாழ்வடைவான்; ஆண்டவரை நம்புகிறவன் நற்பேறு பெற்றவன்.

21ஞானமுள்ளவர் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவர் என்று கொள்ளப்படுவார்; இனிமை யாகப் பேசினால் சொல்வதை எவரும் ஏற்பர்.

22விவேகமுள்ளவர்களுக்கு அவர்களது விவேகமே வாழ்வளிக்கும் ஊற்றாகும்; மூடருக்கு அவரது மடமையே போதிய தண்டனையாகும்.

23ஞானமுள்ளவரின் மனம் அவரது பேச்சை விவேகமுள்ளதாக்கும்; அவருடைய சொற்களை எவரும் ஏற்பர்.

24இன்சொற்கள் தேன்கூடு போன்றவை; மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கு நலம் தருபவை.

25ஒரு பாதை ஒருவருக்கு நல்ல வழிபோலத் தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.✠

26உழைப்பவர் பசி அவரை மேலும் உழைக்கச் செய்கிறது; உண்ண விரும்பும் அவரது வயிற்றுப்பசி அவரை அதற்குத் தூண்டுகிறது.

27பிறர் குற்றங்களைக் கிண்டிக் கிளறித் தூற்றுபவர் கயவர்; எரிக்கும் நெருப்புப் போன்றது அவரது நாக்கு.

28கோணல் புத்திக்காரர் சண்டையை மூட்டிவிடுவர்; புறங்கூறுவோர் நண்பரைப் பிரித்துவிடுவர்.

29வன்முறையாளர் அடுத்தவரை ஏமாற்றி, கெட்ட வழியில் அவரை நடக்கச் செய்வார்.

30கண்ணை மூடிக்கொண்டிருப்போர் முறைகேடானதைச் சிந்திப்பர்; வாயை மூடிக் கொண்ருப்போர் தீமை செய்யத் திட்டமிடுவர்.

31நரைமுடி மதிப்பிற்குரிய மணிமுடி; அது நேர்மையான நடத்தையால் வரும் பயன்.

32வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்; நகரை அடக்குகிற வரைவிடத் தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்.

33மடியிலுள்ள திருவுளச் சீட்டை ஒருவர் குலுக்கிப் போடலாம்; ஆனால், திருவுளத் தீர்ப்பை வெளிப்படுத்துபவர் ஆண்டவரே.


16:25 நீமொ 14:12.


அதிகாரம் 17

1சண்டை நடக்கும் வீட்டில் விருந் துண்பதைவிட மன அமைதியோடு பழஞ்சோறு சாப்பிடுவதே மேல்..

2முதலாளியின் மகன் ஒழுக்கங்கெட்ட வனாயிருந்தால், அறிவுள்ள வேலைக்காரன் அவனை அடக்கி ஆள்வான்; ஏனைய சகோதரர் களோடு உரிமைச் சொத்தில் பங்கு பெறுவான்.

3வெள்ளியை உலைக்கலமும் பொன்னைப் புடக்குகையும் சோதித்துப் பார்க்கும்; உள்ளத் தைச் சோதித்துப் பார்ப்பவர் ஆண்டவர்.

4தீங்கு விளைவிக்கும் பேச்சைத் தீயவன் விருப்பத்தோடு கேட்பான்; அவதூறான கூற்றினைப் பொய்யன் ஆவலோடு கேட்பான்.

5ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரை உண்டாக்கினவரையே இகழுகிறார்; பிறருடைய இக்கட்டைப் பார்த்து மகிழ்கிறவர் தண்ட னைக்குத் தப்பமாட்டார்.

6முதியோருக்கு அவர்களுடைய பேரப்பிள் ளைகள் மணிமுடி போன்றவர்கள்; பிள்ளைகளின் பெருமை அவர்கள் தந்தையரே.

7பயனுள்ள பேச்சுக்கும் மதிகேடனுக்கும் தொடர்பேயில்லை; பொய்யான பேச்சும் அரசனுக்குப் பொருந்தவே பொருந்தாது.

8கைகூலி கொடுப்பவர் அதை ஒரு மந்திரத் தாயத்தைப் போலப் பயன்படுத்துகிறார்; அதைக் கொண்டு அவர் எடுத்த காரியமனைத் தையும் நிறைவேற்றுவார்.

9குற்றத்தை மன்னிப்பவர் நட்பை நாடு கிறவர்; குற்றத்தைத் திரும்பத் திரும்ப நினைப்பூட்டுகிறவன் நட்பை முறிப்பான்.

10சொரணை கெட்டவனுக்கு நூறு அடி கொடுப்பதைவிட உணர்வுள்ளவருக்கு ஒரு சொல் சொல்வது மிகுந்த பயனைத் தரும்.

11தீயவர் கலகம் செய்வதையே நாடுவர்; அவர்களை அழிக்கக் கொடிய தூதர் அனுப் பப்படுவார்.

12மடமையில் மூழ்கிக் கிடக்கும் மதிகேட னுக்கு எதிர்ப்படுவது, குட்டியைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவதைவிடக் கேடானது.

13நன்மை செய்தவருக்கு எவர் தீமை செய்கிறாரோ, அவர் வீட்டை விட்டுத் தீமை அகலாது.

14வாக்குவாதத்தைத் தொடங்குவது மதகைத் திறந்துவிடுவது போலாகும்; வாக்குவாதம் மேலும் வளருமுன் அதை நிறுத்திவிடு.

15குற்றம் செய்தவரை நேர்மையானவ ரென்றும் நேர்மையானவரைக் குற்றம் செய்தவ ரென்றும் தீர்ப்புக் கூறுகிறவர்களை ஆண்டவர் அருவருக்கிறார்.

16மதிகேடர் கையில் பணம் இருப்பதால் பயனென்ன? ஞானத்தைப் பெற்றுக்கொள்ளச் செலவிடுவாரா? அவருக்குத் தான் மனமில் லையே!

17நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான்.

18அடுத்தவர் கடனுக்காகப் பொறுப்பேற்று, அவருக்காகப் பிணையாய் நிற்பவன் அறி வில்லாதவனே.

19வாதத்தை நாடுகிறவன் குற்றப் பழியை நாடுகிறான்; இறுமாப்பான பேச்சு இக்கட்டை வருவிக்கும்.

20கோணல் மதியுள்ளவர் நன்மையைக் காணார்; வஞ்சக நாவுள்ளவர் தீமையில் சிக்குவார்.

21மதிகேடனைப் பெற்றவர் கவலைக்குள் ளாவார்; மூடருடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியே இராது.

22மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து; வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்.

23கயவர் மறைவாகக் கைக்கூலி வாங்கிக் கொண்டு, நியாயத்தின் போக்கையே மாற்றிவிடுவார்.

24உணர்வுள்ளவர் ஞானத்திலேயே கண்ணாயிருப்பார்; மதிகேடரின் கவனமோ நாற்புறமும் அலையும்.

25மதிகெட்ட மகனால் தந்தைக்குக் கவலை; பெற்ற தாய்க்குத் துயரம்.

26நேர்மையானவருக்கு அபராதம் விதிப்பதும் நன்றல்ல; மேன்மக்களுக்குக் கசையடி கொடுப்பதும் முறையல்ல.

27தம் நாவைக் காத்துக்கொள்பவரே அறிவாளி; தம் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்பவரே மெய்யறிவாளர்.

28பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவன் என்று கருதப்படுவான்; தன் வாயை மூடிக்கொள்பவன் அறிவுள்ளவன் எனப்படுவான்.


அதிகாரம் 18

1பிறரோடு ஒத்துவாழாதவர் தன்ன லத்தை நாடுகின்றார்; பிறர் கூறும் தக்க அறிவுரையும் அவருக்கு எரிச்சலை உண்டாக்கும்..

2மதிகேடர் எதையும் அறிந்து கொள்ள விரும்பமாட்டார்; தம் மனத்திலுள்ளதை வெளியிடவே விரும்புவார்.

3கயமையும் இழிவும் சேர்ந்தே வரும்; மதிப்பை இழப்பவர் இழிசொல்லுக்கு ஆளாவார்.

4மனிதரின் சொற்கள் ஆழ்கடல் போன் றவை, அவை பாய்ந்தோடும் ஒரு நீரோட்டம், ஞானம் சுரக்கும் ஊற்று.

5பொல்லாருக்குக் கருணை காட்டுவது முறையல்ல; நேர்மையானவருக்கு நீதி கிடைக் காமல் தடுப்பது நேரியதல்ல.

6மதிகேடர் பேசத் தொடங்கினால் வாக்கு வாதம் பிறக்கும்; அவரது பேச்சு அவருக்கு அடிவாங்கித் தரும்.

7மதிகேடர் தம் வாயால் அழிவார்; அவர் பேச்சு அவர் உயிருக்கே கண்ணியாகிவிடும்.

8புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உண்டி உண்பதுபோலாம்; அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள்.

9தன் வேலையில் சோம்பலடைகிறவன் அழிவை உண்டாக்குகிறவருக்கு உடன் பிறந்தவன்.

10ஆண்டவரது திருப்பெயர் உறுதியான கோட்டை; அவருக்கு அஞ்சி நடப்பவர் அதனுட் சென்று அடைக்கலம் பெறுவார்.

11செல்வர் தம் செல்வத்தை அரண் என்றும் உரமான மதில் என்றும் எண்ணிக்கொள்கிறார்.

12முதலில் வருவது இறுமாப்பு; அதனை அடுத்து வருவது அழிவு; மேன்மை அடையத் தாழ்மையே வழி.

13வினாவைச் செவ்வனே கேட்பதற்குமுன் விடையளிப்பவர்களுக்கு அச்செயலே அவர் களுக்கு மடமையும் இகழ்ச்சியும் ஆகும்.

14மன வலிமை நோயைத் தாங்கிக் கொள்ளும்; மனம் புண்பட்டால் அதைக் குணப்படுத்த யாரால் இயலும்?

15உணர்வுள்ளவர் மனம் அறிவைப் பெருக்கிக்கொள்ளும்; ஞானமுள்ளவர் செவி அறிவுபெறுவதில் நாட்டங்கொள்ளும்.

16ஒருவர் கொடுக்கும் அன்பளிப்பு அவருக்கு நல்வழி பிறக்கச் செய்யும், அவரைப் பெரியோர் முன் கொண்டு போய்ச் சேர்க்கும்.

17வழக்கில் எதிரி வந்து குறுக்குக் கேள்வி கேட்கும் வரையில் வாதி கூறுவது நியாயமாகத் தோன்றும்.

18திருவுளச் சீட்டு விவாதத்தை முடிவுறச் செய்யும்; வாதிடும் வலியோரின் வழக்கைத் தீர்க்கும்.

19உன் இனத்தானுக்கு உதவி செய், அவன் உனக்கு அரணாயிருப்பான்; அவனோடு நீ சண்டையிட்டால் அவன் கதவைத் தாழிட்டுக் கொள்வான்.*✠

20ஒருவர் நாவினால் எதை விதைக்கிறாரோ அதையே உண்பார்; தம் பேச்சின் விளைவையே அவர் துய்த்தாக வேண்டும்.

21வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே; வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர்.

22மனைவியை அடைகிறவன் நலமடைவான்; அவன் ஆண்டவரது நல்லாசியையும் பெறுவான்.

23ஏழை கெஞ்சிக் கேட்பார்; செல்வரோ கடுகடுப்புடன் மறுமொழி கொடுப்பார்.

24கேடு வருவிக்கும் நண்பர்களுமுண்டு; உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு.


18:19 ‘அரண்சூழ் நகரைக் கைவசப்படுத்துவதைவிட, சினங்கொண்ட சகோதரனை தன் வசப்படுத்துவது கடினம்; அவனது பகைமை கோட்டைத் தாழ்ப்பாள்களைப் போன்றதாகும்’ என்பது வேறு பாடம்.


அதிகாரம் 19

1முறைகேடாய் நடக்கும் செல்வரை விட மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.

2எண்ணிப் பாராமல் செயலில் இறங்கு வதால் பயனில்லை; பொறுமையின்றி நடப்பவர் இடறிவிழுவார்.

3மனிதர் தம் மடமையாலேயே வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வர்; ஆனால் அவர்கள் ஆண்டவர்மீது சினங்கொண்டு குமுறுவர்.

4பணம் உடையவருக்கு நண்பர் பலர் இருப்பர்; ஏழைக்கு இருக்கும் ஒரே நண்பரும் அவரை விட்டுப் பிரிவார்.

5பொய்ச் சான்று சொல்பவர் தண்ட னைக்குத் தப்பமாட்டார்; பொய்யுரையே கூறுபவர் தப்பித்துக் கொள்ளமாட்டார்.

6வள்ளலின் தயவை நாடி வருவோர் பலர்; நன்கொடையாளருக்கு எல்லாருமே நண்பர்.

7வறியவரை அவருடைய உடன்பிறந்தாரே வெறுப்பர்; அவருடைய நண்பர் அவரைவிட்டு அகலாதிருப்பரோ? அவர் கெஞ்சி வேண்டினாலும் அவர்கள் ஓடிவிடுவார்கள்.

8ஞானத்தைப் பெறுதலே உண்மையான தன்னலமாகும்; மெய்யறிவைப் பேணிக்காப்பவர் நன்மை அடைவார்.

9பொய்ச் சான்று சொல்பவர் தண்ட னைக்குத் தப்பமாட்டார்; பொய்யுரை கூறுபவர் அழிந்து போவார்.

10அரண்மனை வாழ்வு அறிவிலிக்கு அடுத்ததல்ல; மேலானோரை ஆளும் பதவி அடிமைக்குச் சற்றும் ஏற்றதல்ல.

11விவேகமுடையோர் எளிதில் சினமடையார்; குற்றம் பாராதிருத்தல் நன்மதிப்பைத் தரும்.

12அரசரின் சீற்றம் சிங்கத்தின் முழக்கம் போன்றது; அவர் காட்டும் கருணை பயிர்மீது பெய்யும் பருவ மழைக்கு ஒப்பாகும்.

13மதிகெட்ட மகனால் அவன் தந்தைக்குக் கேடு வரும்; மனைவியின் நச்சரிப்பு ஓட்டைக் கூரையினின்று ஓயாது ஒழுகும் நீர் போன்றது.

14வீடும் சொத்தும் ஒருவனுக்கு வழிவழிச் சொத்தாய் வரலாம்; ஆனால், விவேகமுள்ள மனைவியோ ஆண்டவர் அளிக்கும் கொடை.

15சோம்பல் ஒருவரை தூங்கிக் கொண்டே இருக்கச் செய்யும்; சோம்பேறி பசியால் வருந்துவார்.

16திருக்கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்கிறார்; ஆண்ட வருடைய வழிகளைக் கவனியாது நடப்பவர் அழிந்து போவார்.

17ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்து விடுவார்.

18மகன் திருந்துவான் என்கிற நம்பிக்கை இருக்கும்போதே அவனைக் கண்டித்துத் திருத்து; இல்லாவிடில், அவன் கெட்டழிந்து போவதற்கு நீ காரணமாயிருப்பாய்.

19கடுஞ்சினங்கொள்பவர் அதற்குரிய தண்டனையைப் பெறவேண்டும். இக்கட்டினின்று அவரை விடுவிப்பாயானால், மீண்டும் அவ்வாறே செய்ய வேண்டியிருக்கும்.

20அறிவுரைக்குச் செவிகொடு, கண்டிப்பை ஏற்றுக்கொள்; பின்வரும் காலமெல்லாம் ஞானமுள்ளவனாய் வாழ்வாய்.

21மனிதர் மனத்தில் எழும் எண்ணங்கள் ஏராளம்; ஆனால் ஆண்டவரது திட்டமே நிலைத்துநிற்கும்.

22நற்பண்பாளர் வாக்குப் பிறழாமையை நாடுவர். பொய்யராயிருப்பதைவிட ஏழையா யிருப்பதே மேல்.

23ஆண்டவருக்கு அஞ்சி நடந்தால் ஆயுள் நீடிக்கும்; அவ்வாறு நடப்பவருக்கு மனநிறைவு கிட்டும்; தீங்கும் அவரை அணுகாது.

24சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்; ஆனால் அதை வாய்க்குக் கொண்டு போகச் சோம்பலடைவார்.

25ஏளனம் செய்வோரை அடி; அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவரைக் கடிந்துகொள், அவர் மேலும் அறிவுடையவராவார்.

26தந்தையைக் கொடுமைப்படுத்தித் தாயைத் துரத்திவிடும் மகன், வெட்கக்கேட்டையும் இழிவையும் வருவித்துக்கொள்வான்.

27பிள்ளாய், நல்லுரை கேட்பதை நிறுத்தாதே; நிறுத்தினால் அறிவுதரும் நன்மொழிகளைப் புறக்கணிக்கிறவன் ஆவாய்.

28தீக்குணமுள்ள சாட்சி நியாயத்தை மதிக்காதவர். பொல்லாரின் சான்று குற்றத்தைப் பெருகச் செய்யும்.

29இகழ்வாருக்குத் தண்டனை காத்திருக் கிறது; முட்டாளின் முதுகுக்குப் பிரம்பு காத் திருக்கிறது.


அதிகாரம் 20

1திராட்சை இரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும்; போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்; அவற்றில் நாட்டங் கொள்பவர் மடையரே.

2அரசரின் சினம் சிங்கத்தின் முழக்கத் திற்கு நிகர்; அரசருக்குச் சினமூட்டுகிறவர் தம் உயிரை இழப்பார்.

3விவாதத்தில் ஈடுபடாதிருத்தல் மனித ருக்கு அழகு; ஏனெனில் மூடராயிருக்கும் எவரும் விவாதத்தை விரும்புகின்றனர்.

4சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டார்; அவர் அறுவடைக் காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார்.

5மனிதர் மனத்தில் மறைந்திருக்கும் எண்ணம் ஆழமான நீர்நிலை போன்றது; மெய்யறிவுள்ளவரே அதை வெளிவரச் செய்வார்.

6பலர் தம்மை வாக்குப் பிறழாதவரெனக் கூறிக்கொள்வர்; ஆனால், நம்பிக்கைக்குரிய வரைக் கண்டுபிடிக்க யாரால் இயலும்?

7எவர் களங்கமற்ற நேர்மையான வாழ்க்கை நடத்துகிறாரோ, அவருடைய பிள்ளைகள் அவரின் காலத்திற்குப்பின் நற்பேறு பெறுவார்கள்.

8மன்னன் நீதிவழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும்போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்து விடுவான்.

9“என் இதயத்தைத் தூயதாக்கி விட்டேன்; நான் பாவம் நீக்கப்பெற்றுத் தூய்மையா யிருப்பவன்” என்று யாரால் சொல்லக்கூடும்?

10பொய்யான எடைக் கற்களையும் பொய் யான அளவைகளையும் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கின்றார்.

11சிறுவரையும் அவருடைய செயல்களைக் கொண்டே அறியலாம்; அவர் உண்மையும் நேர்மையானவரா என்று சொல்லிவிடலாம்.

12கேட்கும் காது, காணும் கண்; இவ் விரண்டையும் ஆண்டவரே படைத்தார்.

13தூங்கிக்கொண்டேயிருப்பதை நாடாதே; நாடினால் ஏழையாவாய். கண் விழித்திரு; உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.

14ஒரு பொருளை வாங்கும் போது, தரம் குறைவு, விலை மிகுதி என்று ஒருவர் சொல்வார்; வாங்கிச் சென்றபின், தாம் திறம்படச் செய்ததாக நினைத்துத் தம்மையே மெச்சிக் கொள்வார்.

15பொன்னையும் முத்துகளையும் விட, அறிவுள்ள பேச்சே விலையுயர்ந்த அணிகலன்.

16அன்னியருடைய கடனுக்காகப் பிணை நிற்கிறவருடைய ஆடையை எடுத்துக்கொள்; அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.

17வஞ்சித்துப் பெறும் உணவு சுவையா யிருக்கும்; ஆனால் பின்னர் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும்.

18நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால் வெற்றி பெறுவாய்; சூழ்ச்சி முறையை வகுக்குமுன் போரைத் தொடங்காதே.

19வம்பளப்போன் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவான்; வாயாடியோடு உறவாடாதே.

20தாயையும் தந்தையையும் சபிக்கிறவனின் விளக்கு, காரிருள் வேளையில் அணைந்து போகும்.

21தொடக்கத்திலே விரைவில் கிடைத்த உரிமைச் சொத்து, இறுதியிலே ஆசி பெற்றதாய் இராது.

22“தீமைக்குத் தீமை செய்வேன்” என்று சொல்லாதே; ஆண்டவரையே நம்பியிரு; அவர் உன்னைக் காப்பார்.

23பொய்யான எடைக் கற்களைப் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கிறார்; போலித் துலாக்கோலைப் பயன்படுத்துவது முறையற்றது.

24மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கின்றார்; அப்படியிருக்க, தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும்?

25எண்ணாமல் ஒன்றைக் கடவுளுக்குப் படையல் என நேர்ந்து விட்டு, அப்பொருத் தனையைப்பற்றிப் பிறகு எண்ணுவது கண்ணி யில் கால் வைப்பதாகும்.

26ஞானமுள்ள அரசன் பொல்லாரைப் பிரித்தெடுப்பான்; அவர்கள் மீது சக்கரத்தை ஏற்றி நசுக்குவான்.

27ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு; அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும்.

28அன்பும் உண்மையும் மன்னவனை ஆட்சியில் நீடித்திருக்கச் செய்யும்; அன்பாகிய அடிப்படையிலேதான் அவனது அரியணை நிலைத்து நிற்கும்.

29இளைஞருக்கு உயர்வளிப்பது அவர்களது வலிமை; முதியோருக்குப் பெருமை தருவது அவர்களது நரைமுடி.

30நையப் புடைத்தலே மனத்தின் மாசகற்றும்; கசையடி கொடுத்தலே உள்ளத்தைத் தூய்மைப் படுத்தும்.


அதிகாரம் 21

1மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது; வாய்க்கால் நீரைப்போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார்.

2மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் குற்றமற்றதாய்த் தோன்றலாம். ஆனால், ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.

3பலிசெலுத்துவதைவிட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப் பளிக்கும்.

4மேட்டிமையான பார்வை, இறுமாப்புக் கொண்ட உள்ளம் — இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும் பாவங்கள்.

5திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற் றத்துடன் வேலைசெய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.

6ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்துவிடும்; அவரது உயிரையும் அது வாங்கி விடும்.

7பொல்லார் நேர்மையானதைச் செய்ய மறுப்பதால், அவர்களது கொடுமை அவர்களையே வாரிக் கொண்டுபோகும்.

8குற்றம் செய்பவர் வழி கோணலானது; குற்றமற்றவர் செய்கை நேர்மையானது.

9மாடி வீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதைவிட, குடிசை வாழ்க்கையே மேல்.

10பொல்லார் மனம் தீமை செய்வதில் நாட்டங்கொள்ளும்; தமக்கு அடுத்திருப்பாரை அவர்கள் கனிவுடன் பார்ப்பதும் இல்லை.

11ஏளனம் செய்வோரை அடிக்கும்போது அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவருக்கு அறிவு புகட்டும் போது அவர் மேலும் அறிவுடையவராவார்.

12நீதிமிகு இறைவன் பொல்லாருடைய வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்; அவர்களைத் தீச்செயல் காரணமாகத் தூக்கி எறிந்து அழித்துவிடுகிறார்.

13ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக்கொள்கிறானோ, அவன் தானே உதவிக் காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவி கொடுக்கமாட்டார்.

14மறைவாக நன்கொடை கொடுத்து சினத்தைத் தணிப்பார்கள்; மடியில் கைக்கூலி திணித்துச் சீற்றத்தை ஆற்றுவார்கள்.

15நீதி நிலைநாட்டுவது நேர்மையானவருக்கு மகிழ்ச்சியளிக்கும்; தீமை செய்வோருக்கோ அது திகிலுண்டாக்கும்.

16விவேகம் காட்டும் வழியை விட்டு விலகிச் செல்பவர், செத்தாரிடையே தங்க விரைபவர்.

17ஒய்யாரமான வாழ்க்கையை நாடுகிறவர் ஏழையாவார்; மதுவையும் நறுமணப் பொருள் களையும் விரும்புகிறவர் செல்வராகமாட்டார்.

18நல்லவருக்குப் பொல்லாங்கு செய்யப் பார்ப்பவர் தாமே அவருக்குப் பதிலாள் ஆகிவிடு வார்; நேர்மையானவரை வஞ்சிக்கப் பார்ப்பவர் அவருக்குப் பதிலாகத் தாமே வஞ்சனைக்கு ஆளாவார்.

19நச்சரிப்பவளும் சிடுசிடுப்பவளுமான மனைவியுடன் வாழ்வதைவிட, பாலை நிலத்தில் தனியே வாழ்வதே மேல்.

20ஞானமுள்ளவர் வீட்டில் செல்வமும் அரும்பொருள்களும் இருக்கும்; மதிகேடர் தம் செல்வத்தைக் கரைத்துவிடுவார்.

21நேர்மையையும் இரக்கத்தையும் கடைப் பிடித்து நடப்பவர், நீடித்து வாழ்வார், மேன்மையும் அடைவார்.

22வீரர் நிறைந்த பட்டணத்தையும் நல்வாழ் வையும் ஞானமுள்ளவர் கைப்பற்றுவார்; அவர்கள் நம்பியிருந்த அரணையும் இடித்துத் தள்ளுவார்.

23தம் வாயையும் நாவையும் காப்பவர், இடுக்கண் வராமல் தம்மைக் காத்துக்கொள்வார்.

24ஏளனம் செய்யும் செருக்குடையோரின் பெயர் இறுமாப்பு; அளவு கடந்த பெருமையுடன் நடப்பதே அவர் போக்கு.

25சோம்பேறியின் அவா அவரைக் கொல் லும்; ஏனெனில், அவர் கைகள் வேலை செய்ய மறுக்கின்றன.

26அவர் நாள் முழுதும் பிறர் பொருளுக்காக ஏக்கங்கொண்டிருப்பார்; ஆனால் சான்றோர் தம் பொருளை இல்லையென்னாது வழங்குவர்.

27பொல்லார் செலுத்தும் பலி அருவருக்கத் தக்கது; தீய நோக்கத்தோடு அவர்கள் செலுத்தும் பலி இன்னும் அருவருக்கத்தக்கதன்றோ?

28பொய்ச்சான்று கூறுபவன் கெட்டழிவான்; உன்னிப்பாய்க் கேட்பவன் பேச்சோ என்றைக் கும் ஏற்புடையதாகும்.

29பொல்லார் முகத்தில் போலி வீரம் காணப் படும்; நேர்மையானவர் தம் நடத்தை சீரானது என்னும் உறுதியுடனிருப்பார்.

30ஆண்டவரின் எதிரில் நிற்கக் கூடிய ஞானமுமில்லை, விவேகமுமில்லை, அறிவுரையு மில்லை.

31போர் நாளுக்கென்று குதிரையை ஆயத்தமாக வைத்திருக்கலாம்; ஆனால் வெற்றி கிடைப்பது ஆண்டவராலேயே.


அதிகாரம் 22

1திரண்ட செல்வத்தைவிட நற் பெயரைத் தெரிந்துகொள்வது மேல்; வெள்ளியையும் பொன்னையும்விடப் புகழைப் பெறுவதே மேல்.

2செல்வருக்கும் வறியவருக்கும் பொதுவான ஒன்று உண்டு; ஏனெனில், அனைவரையும் உண்டாக்கியவர் ஆண்டவரே.

3எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேக முள்ளவர் மறைந்து கொள்வார்; அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.

4தாழ்மையுள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சம் உடையவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும்.

5நேர்மையற்றவர் வழியில் முள்ளும் கண்ணியும் இருக்கும்; விழிப்புடன் இருப்பவர் அவற்றினருகில் செல்லமாட்டார்.

6நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு; முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார்.

7செல்வர் ஏழையை அடக்கி ஆளுவார்; கடன்பட்டவர் கடன் கொடுத்தவருக்கு அடிமை.

8அநீதியை விதைப்பவன் கேட்டை அறுப்பான்; அவனது சீற்றம் அவனையே எரித்துவிடும்.

9கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்; அவரே ஆசி பெற்றவர்.

10ஏளனம் செய்வோனை வெளியே துரத்து, சண்டை நின்றுவிடும்; சச்சரவும் பழிச்சொல்லும் ஒழியும்.

11ஆண்டவர் தூய உள்ளத்தினரை விரும்புகிறார்; இன்சொல் கூறுவோர் அரசனது நட்பைப் பெறலாம்.

12அறிவுடையோரைக் காப்பதில் ஆண்டவர் கண்ணாயிருக்கிறார்; கயவனின் வழக்கைத் தள்ளுபடி செய்கிறார்.

13“வெளியே சிங்கம் நிற்கிறது; வீதியில் கால் வைத்தால் கொல்லப்படுவேன்” என்கிறான் சோம்பேறி.

14பரத்தையின் வாய் ஓர் ஆழமான படுகுழி; ஆண்டவரின் சினத்திற்காளானவர் அதில் போய் விழுவார்.

15பிள்ளையின் இதயத்தில் மடமை ஒட்டிக்கொண்டிருக்கும்; கண்டித்துத் திருத்தும் பிரம்பால் அதை அகற்றி விடலாம்.

16செல்வராகும் பொருட்டு ஏழைகளை ஒடுக்குகிறவனும், செல்வருக்குப் பொருள் கொடுக்கிறவரும் ஏழையாவார்கள்.


முப்பது முதுமொழிகள்


17ஞானிகள் போதித்ததை நான் உனக்குக்கூறுகின்றேன், செவி கொடுத்துக் கேள்; நான் புகட்டும் அறிவை மனத்தில் ஏற்றுக்கொள். 18அவற்றை நீ உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது எடுத்துரைக்கக்கூடுமானால் உனக்கு மகிழ்ச்சியுண்டாகும். 19நீ ஆண்டவரை நம்ப வேண்டுமென்று அவற்றை நான் உனக்கு இன்று தெரியப்படுத்துகிறேன். 20அறிவும் நல்லுரையும் தரக்கூடிய முப்பது முதுமொழிகளை நான் உனக்கென்றே எழுதி வைத்திருக்கிறேன் அல்லவா? 21அவற்றைக் கொண்டு மெய்ம்மையை உன்னால் விளக்கக் கூடும்.


1


22ஒருவர் ஏழையாய் இருக்கிறார் என்று அவரை வஞ்சிக்காதே; ஒருவர் ஆதரவின்றி இருக்கிறார் என்று அவரை நீதிமன்றத்தில் சிறுமைப்படுத்தாதே. 23ஏனெனில், ஆண்டவர் அவர்களுக்காக வாதாடுவார்; அவர்களது உயிரை வாங்கப் பார்க்கிறவர்களின் உயிரை அவர் பறித்துக்கொள்வார்.


2


24கடுஞ்சினங்கொள்பவனோடு நட்புக்கொள்ளாதே; எரிச்சல்கொள்பவனோடு தோழமை கொள்ளாதே.

25அப்படிச் செய்தால் அவர்களின் போக்கை நீயும் கற்றுக்கொள்வாய்; உன் உயிர் கண்ணியில் சிக்கிக் கொள்ளும்.


3


26பிறருக்காக ஒருபோதும் பிணையாய் நில்லாதே; பிறர் கடனுக்காக ஒருநாளும் பிணையாய் நிற்காதே. 27அந்த கடனை திருப்பிக்கொடுக்க உனக்கு ஒரு வழியும் இல்லாதிருந்தால், நீ படுத்திருக்கையில் உன் படுக்கையும் பறிபோய்விடுமன்றோ?


4


28வழிவழிச் சொத்துக்கு உன் மூதாதையர் குறித்து வைத்த எல்லையை நீ மாற்றி அமைக்காதே.


5


29தம் அலுவலில் திறமை காட்டுகின்ற ஒருவரைப் பார்; அவர் பாமர மனிதரிடையே இரார்; அரசு அவையில் இருப்பார்.


அதிகாரம் 23

6


1ஆளுநர் வீட்டில் நீ உணவு கொள்ள உட்காரும்போது, உனக்குமுன் இருப்பதை நன்றாய்க் கவனித்துப் பார். 2உனக்கு அப்போது அடங்காப் பசி இருந்தாலும், உன் தொண்டையில் கத்தி இருப்பதாக நினைத்துக்கொள். 3அவர் தரும் சுவையான உண்டியை உண்ண ஆவல் கொள்ளாதே; அது உன்னை வஞ்சிக்க விழையும் உணவாயிருக்கலாம்.


7


4செல்வராக வேண்டுமென்று பாடுபட்டு உருக்குலைந்து போகாதே; அதனால் உனது அறிவை இழந்து விடாதே. 5இல்லாமற்போகும் பொருள் மேல் நீ கண்ணும் கருத்துமாய் இருப்பானேன்? கழுகுபோல அது தனக்குச் சிறகுகளை வளர்த்துக்கொண்டு வானத்தில் பறந்து போகுமன்றோ?


8


6கஞ்சர் தரும் உணவை உண்ணாதே; அவரது அறுசுவை உண்டியை உண்ண ஆவல் கொள்ளாதே. 7அவர் தமக்குள் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார்; “உண்டு பருகு” என்று அவர் சொன்னாலும், அவருக்கு உன்மீது அக்கறை இல்லாதிருக்கலாம். 8நீ உண்ட உணவை வாந்தியெடுக்க நேரிடும்; நீ உரைத்த புகழுரை பயனற்றதாகும்.


9


9மதிகேடர் காதில் விழும்படி எதையும் பேசாதே; உன் அறிவுரைகளை அவர் மதிக்கமாட்டார்.


10


10வழிவழிச் சொத்தின் எல்லையை மாற்றி அமைக்காதே; உன் நிலத்தின் எல்லையைத் தள்ளித் தள்ளி, திக்கற்றவர்களின் நிலத்தை எடுத்துக்கொள்ள முயலாதே. 11ஏனெனில் அவர்களின் மீட்பர் வல்லவர். அவர் அவர்கள் சார்பில் உனக்கு எதிராக வழக்காடுவார்.


11


12நல்லுரை கேட்பதில் சிந்தனையைச் செலுத்து; அறிவூட்டும் மொழிகளுக்குச் செவிகொடு.


12


13பிள்ளைகளைத் தண்டித்துத் திருத்தத் தயங்காதே; பிரம்பினால் அடித்தால் சாகமாட்டார்கள். 14நீ பிரம்பினால் அவர்களை அடித்தால், அவர்களைப் பாதாளத்துக்குத் தப்புவிக்கிறவனாவாய்.


13


15பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாயிருந்தால், நான் மனமகிழ்ச்சி அடைவேன். 16உன் நாவு நேர்மையானவற்றைப் பேசினால், என் உள்ளம் களிகூரும்.


14


17வளமுடன் இருக்கும் பாவிகளைப்போல் நீயும் இருக்கவேண்டுமென்று ஏங்காதே; ஆண்டவரிடம் எப்போதும் அச்சம் உள்ளவனாயிரு. 18அப்பொழுது உன் வருங்காலம் வளமானதாயிருக்கும்; உன் நம்பிக்கையும் வீண்போகாது.


15


19பிள்ளாய், இதைக் கவனி; ஞானமுள்ளவனாயிரு; உன் மனத்தை நன்னெறியில் செலுத்து. 20குடிகாரரோடு சேராதே; பெருந்தீனியரோடு சேர்ந்து கொண்டு அவர்களைப் போலப் புலால் உண்ணாதே. 21குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்; உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்.


16


22பெற்ற தந்தைக்குச் செவிகொடு; உன் தாய் முதுமை அடையும்போது அவளை இழிவாக எண்ணாதே. 23மெய்ம்மையை விலைகொடுத்தாயினும் வாங்கு; ஆனால் அதை விற்பனை செய்யாதே; அவ்வாறே ஞானத்தையும் நல்லுரையையும் உணர்வையும் விலை கொடுத்துப்பெறு. 24நேர்மையான பிள்ளையின் தந்தை மிகவும் களிகூர்வார்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்ற தகப்பன் அவர் பொருட்டு மகிழ்ச்சி அடைவார். 25நீ உன் தந்தையையும் உன் தாயையும் மகிழ்விப்பாயாக; உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய்வாயாக.


17


26மகனே, நான் சொல்வதைக் கவனி; என் வழிகளில் உன் கவனத்தைச் செலுத்து. 27விலைமகள் ஒரு படுகுழி; பரத்தை ஓர் ஆழ்கிணறு. 28அவள் கள்வனைப்போலப் பதுங்கி இருப்பாள்; அவள் ஏராளமான பேரை வஞ்சிப்பவள்.


18


29துன்பக் கதறல், துயரக் கண்ணீர், ஓயாத சண்டை, ஒழியாத புலம்பல், காரணம் தெரியாமல் கிடைத்த புண்கள், கலங்கிச் சிவந்திருக்கும் கண்கள் — இவை அனைத்தையும் அனுபவிப்பவர் யார்? 30திராட்சை இரச மதுவில் நீந்திக் கொண்டிருப்பவர்களே, புதுப்புது மதுக் கலவையைச் சுவைத்துக் களிப்பவர்களே, 31மதுவைப் பார்த்து, “இந்த இரசத்தின் சிவப்பென்ன! பாத்திரத்தில் அதன் பளபளப்பென்ன!” எனச் சொல்லி மகிழாதீர். அது தொண்டைக்குள் செல்லும்போது இனிமையாயிருக்கும்; 32பிறகோ அது பாம்புபோலக் கடிக்கும்; விரியனைப் போலத் தீண்டும். 33உன் கண் என்னென்னவோ வகையான காட்சிகளைக் காணும்; உன் உள்ளத்திலிருந்து ஏறுமாறான சொற்கள் வெளிப்படும். 34கடல் அலைமீது மிதந்து செல்வது போலவும், பாய்மர நுனியில் படுத்துறங்குவது போலவும் உனக்குத் தோன்றும். 35“என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், நான் அதை உணரவில்லை; நான் எப்போது விழித்தெழுவேன்?


அதிகாரம் 24

19


1தீயோர் வளமுடன் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பாதே; அவர்களுடன் உறவு பாராட்டவும் விரும்பாதே. அவர்களுடைய தோழனாயிருக்க விரும்பாதே. 2அவர்கள் மனம் கொடுமை செய்வதையே நினைத்துக்கொண்டிருக்கும்; அவர்கள் பேச்சு, தீமை விளைவிக்கும் பேச்சு.


20


3ஞானம் வீட்டைக் கட்டும்; மெய்யறிவு அதை உறுதியாக அமைக்கும். 4அருமையும் நேர்த்தியுமான பல பொருள்களால் அறிவு தன் அறைகளை நிரப்பும்.


21


5வீரரைவிட ஞானமுள்ளவரே வலிமை மிக்கவர்; வலிமை வாய்ந்த வரைவிட அறிவுள்ளவரே மேம்பட்டவர்.

6ஏனெனில், போரில் வெற்றி பெற ஆழ்ந்த சிந்தனை தேவை; கவனத்துடன் வகுக்கும் திட்டமே வெற்றிக்கு அடிப்படை.


22


7ஞானம் மூடருடைய அறிவெல்லைக்கு அப்பாற்பட்டது; எனவே, அவர் வழக்குமன்றத்தில் வாய் திறக்கமாட்டார்.


23


8தீமை செய்யத் திட்டமிடுபவன் வஞ்சனையாளன் என்னும் பெயர் பெறுவான். 9மூடர்கள் பாவத்தைத் தவிர வேறெதற்காகவும் திட்டமிடுவதில்லை; ஒழுங்கீனரை மக்கள் அருவருப்பார்கள்.


24


10நிறைவுள்ள காலத்தில் உன் மனம் சோர்வடையுமானால், குறைவுள்ள காலத்தில் உன் ஆற்றல் இன்னும் குன்றிப்போகுமன்றோ?


25


11கொல்லப்படுவதற்கு இழுத்துச் செல்லப்படுவோரைத் தப்புவிக்கப்பார்; கொலைக்களத்திற்குக் கொண்டு செல்லப்படுவோரைக் காப்பாற்றப்பார். 12“அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்று சொல்வாயானால், இதயத்தில் இருப்பதை அறிபவர் உன் எண்ணத்தையும் அறிவார் அல்லவா? உன் உள்ளத்தைப் பார்க்கிறவர் அதை அறிவார் அல்லவா? ஒவ்வொருடைய செய்கைக்கும் ஏற்றபடி அவர் பயனளிப்பார் அல்லவா?


26


13பிள்ளாய்! தேன் சாப்பிடு, அது நல்லது; கூட்டினின்று ஒழுகும் தேன் உன் வாய்க்குத் தித்திப்பாய் இருக்கும். 14ஞானமும் அறிவும் உனக்கு அவ்வாறே இனிமையாயிருக்கும். அவற்றை நீ அடைந்தால் முடிவில் உனக்குப் பயன் கிடைக்கும்; உன் நம்பிக்கை வீண்போகாது.


27


15கயவர் போல் பதுங்கியிருந்து நல்லவர் வீட்டைக் கெடுக்கப் பார்க்காதே; அவர் குடியிருப்பைப் பாழாக்கி விடாதே. 16நல்லவர் ஏழுமுறை விழுந்தாலும் எழுந்து நிற்பார்; பொல்லார் துன்பம் வந்தவுடன் விழுந்துவிடுவர்.


28


17உன் எதிரி வீழ்ச்சியுறும்போது நீ மகிழாதே; அவர் கால் இடறும் போது களிகூராதே. 18நீ அப்படிச் செய்வாயானால், ஆண்டவர் அதைக் கண்டு உன் மீது சினம்கொள்வார்; அவருக்கு அவர் மீது இருக்கக்கூடிய சினம் தணிந்து போகும்.


29


19தீயோரை முன்னிட்டு எரிச்சல் அடையாதே; வளமுடனிருக்கும் பொல்லாரைக் கண்டு மனம் வெதும்பாதே.

20தீயவருக்கு வருங்காலத்தில் நல்வாழ்வு இராது; ஏனெனில் பொல்லாருடைய விளக்கு அணைந்து போகும்.


30


21பிள்ளாய்! ஆண்டவருக்கும் அரசனுக்கும் அஞ்சி நட; கிளர்ச்சி செய்வாரோடு உறவுகொள்ளாதே. 22ஏனெனில், திடீரென்று அவர்களுக்குக் கேடு வரும்; அந்த இருவரும் எத்தகைய கேட்டை வருவிப்பார்களென்பது யாருக்குத் தெரியும்?


பல்வகைப்பட்ட முதுமொழிகள்


23ஞானிகளின் வேறு சில முதுமொழிகள்: நீதித்தீர்ப்பு வழங்கும்போது ஓர வஞ்சனை காட்டுவது நேரியதல்ல. 24குற்றம் செய்தவரை நேர்மையானவர் எனத் தீர்ப்பளிக்கும் நீதிபதியை மனிதர் சபிப்பர்; உலகனைத்தும் வெறுக்கும். 25ஆனால், குற்றம் செய்தவரைத் தண்டிக்கும் நீதிபதிக்கு நலமுண்டாகும்; நற்பேறும் கிடைக்கும்.


26நேர்மையான மறுமொழி கூறுபவரே அன்போடு அரவணைக்கும் நண்பராவார்.


27வாழ்க்கைத் தொழிலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்; வயலை உழுது பண்படுத்து; பிறகு உன் வீட்டைக் கட்டியெழுப்பத் தொடங்கு. 28தக்க காரணமில்லாதபோது அடுத்திருப்பாருக்கு எதிராகச் சான்று சொல்லாதே; உன் வாக்குமூலத்தில் அவருக்கு எதிராக உண்மையைத் திரித்துக் கூறாதே. 29“அவர் எனக்குச் செய்தவாறே நானும் அவருக்குச் செய்வேன்; அவர் செய்ததற்கு நான் பதிலுக்குப் பதில் செய்வேன்” என்று சொல்லாதே.


30சோம்பேறியின் விளைநிலம் வழியாக நான் நடந்துசென்றேன்; அந்த மதிகேடருடைய திராட்சைத் தோட்டத்தினூடே சென்றேன். 31அதில் எங்கும் முட்செடி காணப்பட்டது; நிலம் முழுவதையும் காஞ்சொறிச் செடி மூடியிருந்தது; அதன் கற்சுவர் இடிந்து கிடந்தது. 32அதை நான் பார்த்ததும் சிந்தனை செய்தேன்; அந்தக் காட்சி எனக்குக் கற்பித்த பாடம் இதுவே; 33இன்னும் சிறிது நேரம் தூங்கு; இன்னும் சிறிது நேரம் உறங்கு; கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திரு. 34அப்பொழுது வறுமை உன்மீது வழிப்பறிக் கள்வனைப்போலப் பாயும்; ஏழ்மை நிலை உன்னைப் போர் வீரனைப் போலத் தாக்கும்.


24:33-34 நீமொ 6:10-11.


அதிகாரம் 25

சாலமோனின் வேறு சில நீதிமொழிகள்


1இவையும் சாலமோனின் நீதி மொழிகளே. இவை யூதாவின் அரசராகிய எசேக்கியாவின் அவையினர் தொகுத்து எழுதியவை.

2மறைபொருள் கடவுளுக்கு மாட்சியாம்; ஆய்ந்தறிதல் அரசருக்குப் பெருமையாம்.

3அரசரின் உள்ளக் கிடக்கையை ஆராய்ந் தறிய மனிதரால் இயலாது; அது வானத்தின் உயரத்தையும் கடலின் ஆழத்தையும் போன்றது.

4வெள்ளியினின்று மாசை நீக்கி விடு; அப்பொழுது தட்டார் அதிலிருந்து அழகிய பொருளென்றை உருவாக்குவார்.

5அரசரின் அவையினின்று கெடுமதி உரைக்கும் பொல்லாரை அகற்றி விடு; அப் பொழுது அவரது ஆட்சி நீதிவழுவா நெறியில் நிலைக்கும்.

6அரசர் முன்னிலையில் உன்னைப் பெரியவரென்று காட்டிக் கொள்ளாதே; பெரியோ ருக்குரிய இடத்தில் நில்லாதே.

7பெரியவர் ஒருவருக்கு இடமுண்டாகும்படி நீ கீழிடத்திற்கு அனுப்பப்படுவதைவிட, “நீ மேலிடத்திற்கு வா” என்று அழைக்கப்படுவதே உனக்கு மேன்மை.

8ஏதோ ஒன்றைப் பார்த்தவுடன் உடனே வழக்கு மன்றத்திற்குப் போகாதே; நீ கூறுவது தவறென்று வேறொருவர் காட்டிவிட்டால் அப்பொழுது நீ என்ன செய்வாய்?

9அடுத்திருப்பாரோடு உனக்குள்ள வழக்கை அவருடனேயே பேசித் தீர்த்துக்கொள்; வேறொருவரைப் பற்றிய மறைசெய்தியை வெளிப்படுத்தாதே.

10வெளிப்படுத்தினால் அதைக் கேட்பவர் உன்னை இகழுவார்; உனக்கு வரும் மானக்கேடு நீங்காது.

11தக்க வேளையில் சொன்ன சொல் வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனிக்குச் சமம்.

12தங்கச் சங்கிலியும் பொற்கடுக்கனும் ஓர் இணையாக அமைவது போல, எச்சரிக்கை கூறும் ஞானியும் அதை விருப்புடன் கேட்பவரும் ஓர் இணையாக அமைவர்.

13குளிர்ந்த பானம் கோடைக் காலத்தில் எப்படி இருக்குமோ அப்படியே உண்மையான தூதர் தம்மை அனுப்பினவருக்கு இருப்பார்; அவர் தம் தலைவருக்குப் புத்துயிரளிப்பார்.

14கருமுகிலும் காற்றும் உண்டு; ஆனால் மழை இல்லை; கொடாமலே தன்னைக் கொடைவள்ளல் என்பவனும் இவ்வாறே.

15பொறுமை ஆட்சியாளரையும் இணங்கச் செய்யும்; இனிய நா எலும்பையும் நொறுக்கும்.

16தேன் கிடைத்தால் அளவோடு சாப்பிடு; அளவை மீறினால் தெவிட்டிப்போகும்; நீ வாந்தியெடுப்பாய்.

17அடுத்திருப்பார் வீட்டுக்கு அடிக்கடி போகாதே; போனால் சலிப்பு ஏற்பட்டு, அவர் உன்னை வெறுப்பார்.

18அடுத்திருப்பாருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்பவர், குறுந்தடியையும் வாளையும் கூரிய அம்பையும் ஒத்தவர்.

19இக்கட்டுக் காலத்தில் ஒரு துரோகியை நம்புவது, சொத்தைப் பல்லையும் நொண்டிக் காலையும் நம்புவதற்குச் சமம்.

20மனத்துயரமுள்ளவரைப் பாட்டுப் பாடச் செய்தல், குளிரில் உடைகளைக் களைவது போலவும், புண்ணில் காடியை வார்ப்பது போலவும் இருக்கும்.

21உன் எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடிருந்தால் குடிக்கத் தண்ணீர் கொடு.

22இவ்வாறு செய்வதால் அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்; ஆண்டவரும் உனக்குக் கைம்மாறு அளிப்பார்.

23வட காற்று மழையைத் தோற்றுவிக்கும்; புறங்கூறுதல் சீற்றப் பார்வையைத் தோற்று விக்கும்.

24மாடி வீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதைவிட குடிசை வாழ்க்கையே மேல்.

25தொலைவிடத்திலிருந்து வரும் நற்செய்தி, வறண்ட தொண்டைக்குக் கிடைக்கும் குளிர்ந்த நீரை ஒக்கும்.

26பொல்லாருக்கு இணங்கிவிடும் நேர்மையானவர் கலங்கிய ஊற்றை அல்லது பாழடைந்த கிணற்றை ஒத்திருக்கிறார்.

27தேனை மிகுதியாகச் சாப்பிடுவது நன்றன்று; புகழ்ச்சியை மிகுதியாக விரும்பவதும் நன்றன்று.

28தன்னடக்கமில்லா மனிதர் அரண் அழிந்த காவல் இல்லாப் பட்டணம்.


25:6-7 லூக் 14:8-10. 25:21-22 உரோ 12:20.


அதிகாரம் 26

1வேனிற் காலத்தில் பனி இருக்குமா? அறுவடைக் காலத்திற்கு மழை பொருத்துமா? அவ்வாறே மதிகேடருக்குப் புகழ் ஒவ்வாது.


2சிட்டுக் குருவியும் அடைக்கலான் குருவியும் பறந்து திரிவது போல, காரணமின்றி இட்ட சாபமும் காற்றாய்ப் பறந்துபோகும்.


3குதிரைக்குச் சவுக்கடி, கழுதைக்குக் கடிவாளம்; முட்டாளின் முதுகுக்குப் பிரம்பு.


4மடையரின் கேள்விக்கு முட்டாள் தனமாகப் பதிலுரைக்காதே; உரைத்தால் நீயும் அவரை போல ஒரு மடையனே.


5மடையரின் கேள்விக்கு அவரது மடமையை உணர்த்தும் வகையில் பதிலுரை; இல்லாவிடில், அவர் தம்மை ஞானி என்று எண்ணிக் கொள்வார்;


6மூடரைத் தூதாக அனுப்புதல், தன் காலையே வெட்டிக் கேடு உண்டாக்கிக் கொள்வதற்குச் சமம்.


7ஊனக் கால்கள் தடுமாறி நடக்கும்; அவ்வாறே மூடர் வாயில் முதுமொழியும் வரும்.


8மூடருக்கு உயர் மதிப்புக்கொடுப்பவர் கவணில் கல்லை இறுகக் கட்டி வைத்தவருக்குச் சமம்.


9மூடன் வாயில் முதுமொழி, குடிகாரன் கையிலுள்ள முட்செடிக்குச் சமம்.


10மூடனையோ குடிகாரனையோ வேலைக்கு அமர்த்துபவர் வழிப்போக்கர் எவராயிருப்பினும் அவர் மீது அம்பு எய்கிறவரை ஒத்திருக்கிறார்.


11நாய் தான் கக்கினதைத் தின்னத் திரும்பிவரும்; அதுபோல மூடர் தாம் செய்த மடச் செயலையே மீண்டும் செய்வார்.


12தம்மை ஞானமுள்ளவரென்று சொல்லிக் கொள்ளும் யாரையாவது நீ பார்த்திருக்கிறாயா? மூடராவது ஒருவேளை திருந்துவார்; ஆனால் இவர் திருந்தவேமாட்டார்.


13“வீதியில் சிங்கம் இருக்கிறது; வெளியே சிங்கம் அலைகிறது” என்று சொல்லிக் கொண்டிருப்பவர் சோம்பேறி.


14கீல்பட்டையில் கதவு ஆடிக்கொண் டிருப்பதுபோல, சோம்பேறி தம் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார்.


15சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்; ஆனால் அதை வாய்க்குக் கொண்டு போகச் சோம்பலடைவார்.


16விவேகமான விடையளிக்கும் ஏழு அறிவாளிகளைவிட, தாம் மிகுந்த ஞான முள்ளவர் என்று நினைக்கிறார் சோம்பேறி.


17பிறருடைய சச்சரவுகளில் தலையிடு கிறவர், தெருவில் செல்லும் வெறிநாயின் வாலைப் பிடித்து இழுப்பவருக்கு ஒப்பாவார்.


18கொல்லும் தீக்கொள்ளியையும் அம்பையும் எறியும் பைத்தியக்காரனுக்கு ஒப்பானவர் யாரெனில்,


19பிறனை வஞ்சித்துவிட்டு “நான் விளையாட்டுக்குச் செய்தேன்” என்று சொல் பவரே.


20விறகு இல்லாவிடில் நெருப்பு அணையும்; புறங்கூறுபவர் இல்லாவிடில் சண்டை அடங்கும்.


21கரியால் தழல் உண்டாகும், விறகால் நெருப்பு எரியும்; சண்டை பிடிக்கிறவரால் கலகம் மூளும்.


22புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உண்டி உண்பது போலாம். அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள்.

23தீய நெஞ்சத்தை மறைக்க நயமாகப் பேசுவது, மட்பாண்டத்திற்கு மெருகூட்டிப் பளபளக்கச் செய்வது போலாகும்.


24பகையுணர்ச்சி உள்ளவர் நாவினால் கபடத்தை நயம்படப் பேசுவார்; உள்ளத்திலோ கபடம் மறைந்திருக்கும்.


25அவர் நயமாகப் பேசினாலும் அவரை நம்பாதே; அவர் உள்ளத்தில் அருவருக்கத் தக்கவை ஏழு இருக்கும்.


26அவர் தம் பகையை வஞ்சகமாக மறைத்து வைத்திருப்பினும், அவரது தீயகுணம் மக்களிடையே அம்பலமாகிவிடும்.


27தான் வெட்டின குழியில் தானே விழுவார்; தான் புரட்டின கல் தன் மேலேயே விழும்.


28பொய் பேசும் நா உண்மையை வெறுக்கும்; இச்சகம் பேசும் வாய் அழிவை உண்டாக்கும்.


அதிகாரம் 27

1இன்று நடக்கப்போவதே தெரியாது; நாளை நடக்கப் போவதை அறிந்தவன் போலப் பெருமையாகப் பேசாதே.✠


2உன்னை உன்னுடைய வாயல்ல; மற்றவர் களுடைய வாய் புகழட்டும்; உன் நாவல்ல, வேறொருவர் நா போற்றட்டும்.


3கல்லும் மணலும் பளுவானவை; மூடர் தரும் தொல்லையோ இவ்விரண்டையும்விடப் பளுவானது.


4சினம் கொடியது; சீற்றம் பெருவெள்ளம் போன்றது; ஆனால் பொறாமையின் கொடு மையை எதிர்த்து நிற்க யாரால் இயலும்?


5வெளிப்படுத்தப்படாத அன்பை விட, குற்றத்தை வெளிப்படையாகக் கண்டிக்கும் கடிந்துரையே மேல்.


6நண்பர் கொடுக்கும் அடிகள் நல்நோக்கம் கொண்டவை; பகைவர் தரும் முத்தங்களோ வெறும் முத்தப்பொழிவே.


7வயிறார உண்டவர் தேனையும் உதறித் தள்ளுவார்; பசியுள்ளவருக்கோ கசப்பும் இனிக்கும்.


8தம் வீட்டை விட்டு வெளியேறி அலைந்து திரிபவர், தன் கூட்டை விட்டு வெளியேறி அலைந்து திரியும் குருவிக்கு ஒப்பானவர்.


9நறுமணத் தைலம் உள்ளத்தை மகிழ் விக்கும்; கனிவான அறிவுரை மனத்திற்குத் திடமளிக்கும்.


10உன் நண்பரையும் உன் தந்தையின் நண்பரையும் கைவிடாதே; உனக்கு இடுக்கண் வரும்காலத்தில் உடன்பிறந்தான் வீட்டிற்குச் செல்லாதே; தொலையிலிருக்கும் உடன்பிறந் தாரைவிட அண்மையிலிருக்கும் நன்பரே மேல்.


11பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாகி என் மனத்தை மகிழச்செய்; அப்பொழுது நான் என்னைப் பழிக்கிறவருக்குத் தக்க பதிலளிப்பேன்.


12எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேகமுள்ளவர் மறைந்து கொள்வார்; அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.


13அன்னியருடைய கடனுக்காகப் பிணை யாக நிற்கிறவனுடைய ஆடையை எடுத்துக் கொள்; அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.


14ஒரு நண்பரிடம் விடியுமுன் போய் உரக்கக் கத்தி அவரை வாழ்த்துவது, அவரைச் சபிப் பதற்குச் சமமெனக் கருதப்படும்.


15ஓயாது சண்டைபிடிக்கும் மனைவி, அடைமழை நாளில் இடைவிடாத் தூறல் போன்றவள்.


16அவளை அடக்குவதைவிடக் காற்றை அடக்குவதே எளிது எனலாம்; கையால் எண்ணெயை இறுகப் பிடிப்பதே எளிது எனலாம்.


17இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல, ஒருவர்தம் அறிவால் மற்றவரைக் கூர் மதியாளராக்கலாம்.


18அத்திமரத்தைக் காத்துப் பேணுகிற வருக்கு அதன் கனி கிடைக்கும்; தம் தலைவரைக் காத்துப் பேணுகிறவருக்கு மேன்மை கிடைக்கும்.


19நீரில் ஒருவர் தம் முகத்தைக் காண்பார்; அதுபோல, தம் உள்ளத்தில் ஒருவர் தம்மைக் காண்பார்.


20பாதாளமும் படுகுழியும் நிறைவு பெறுவ தேயில்லை; ஒருவர் கண்களின் விருப்பமும் நிறைவு பெறுவதில்லை.


21வெள்ளியை உலைக்களமும் பொன்னைப் புடைக்குகையும் சோதித்துப் பார்க்கும்; ஒருவரை அவர் பெறுகின்ற புகழைக்கொண்டு சோதித்துப் பார்க்கலாம்.


22மூடனை உரலில் போட்டு உலக்கையால் நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும், அவனது மடமை அவனை விட்டு நீங்காது.


23உன் ஆடுகளை நன்றாகப் பார்த்துக் கொள்; உன் மந்தையின்மேல் கண்ணும் கருத்து மாயிரு.


24ஏனெனில், செல்வம் எப்போதும் நிலைத் திராது; சொத்து தலைமுறை தலைமுறையாக நீடித்திருப்பதில்லை.


25புல்லை அறுத்தபின் இளம்புல் முளைக்கும்; மலையில் முளைத்துள்ள புல்லைச் சேர்த்துவை.


26ஆடுகள் உனக்கு ஆடை தரும்; வெள்ளாட்டுக் கிடாயை விற்று விளைநிலம் வாங்க இயலும்.


27எஞ்சிய ஆடுகள் உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் தேவைப்படும் பாலைக் கொடுக்கும்; உன் வேலைக்காரருக்கும் பால் கிடைக்கும்.


27:1 யாக் 4:13-16.


அதிகாரம் 28

1பொல்லாங்கு செய்தோரை எவரும் பின்தொடர்ந்து செல்லாதிருந்தும், அவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள்; நேர்மையானவர்களோ அச்சமின்றிச் சிங்கம் போல் இருப்பார்கள்.


2ஒரு நாட்டில் அறிவும் விவேகமுமுள்ள தலைவர்கள் இருந்தால், அதன் ஆட்சி வலிமை வாய்ந்ததாய் நிலைத்திருக்கும்; ஆனால் ஒரு நாட்டினர் தீவினை புரிவார்களாயின், ஆளுகை அடுத்தடுத்துக் கைமாறிக் கொண்டே இருக்கும்.


3ஏழைகளை ஒடுக்கும் கொடிய அதிகாரி, விளைச்சலை அழிக்கும் பெருமழைக்கு ஒப்பானவன்.


4நீதிபோதனையைப் புறக்கணிப்போரே, பொல்லாரைப் புகழ்வர்; அதைக் கடைப்பிடித்து நடப்போர் அவர்களை எதிர்ப்பர்.


5தீயோருக்கு நியாயம் என்றால் என்ன என்பதே தெரியாது; ஆண்டவரை வழிபடுபவரோ எல்லாவற்றையும் நன்குணர்பவர்.


6முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட, மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.


7அறிவுக்கூர்மையுள்ள மகன் நீதிச் சட்டத்தைக் கடைபிடித்து நடப்பான்; ஊதாரி களோடு சேர்ந்துகொண்டு திரிபவன் தன் தந்தைக்கு இழிவு வரச் செய்வான்.


8அநியாய வட்டி வாங்கிச் செல்வத்தைப் பெருக்குகிறவரது சொத்து, ஏழைகளுக்கு இரங்குகிறவரைச் சென்றடையும்.


9ஒருவர் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியா திருப்பாரானால், கடவுளும் அவர் வேண்டுதலை அருவருத்துத் தள்ளுவார்.


10நேர்மையானவர்களைத் தீயவழியில் செல்லத் தூண்டுபவர், தாம் வெட்டின குழியில் தாமே விழுவார்; தீது செய்யாதவர்கள் வளம்பட வாழ்வார்கள்.


11செல்வர் தம்மை ஞானமுள்ளவர் என்று எண்ணிக்கொள்வார்; உணர்வுள்ள ஏழையோ அவரது உண்மையான தன்மையை நன்கறிவார்.


12நேர்மையானவர்கள் ஆட்சியுரிமை பெற்றால் மக்கள் பெருமிதம் கொள்வர்; பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்.


13தம் குற்றப் பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது; அவற்றை ஒப்புக் கொண்டு விட்டுவிடுகிறவர் கடவுளின் இரக்கம் பெறுவார்.


14எப்போதும் கடவுளுக்கு அஞ்சி வாழ்பவர் நற்பேறுபெறுவார்; பிடிவாதமுள்ளவரோ தீங் கிற்கு உள்ளாவார்.


15கொடுங்கோல் மன்னன் ஏழைக்குடிமக் களுக்கு முழக்கமிடும் சிங்கமும் இரைதேடி அலையும் கரடியும் போலாவான்.


16அறிவில்லாத ஆட்சியாளர் குடி மக்களை வதைத்துக் கொடுமைப்படுத்துவார்; நேர்மையற்ற முறையில் கிடைக்கும் வருவாயை வெறுப்பவர் நீண்டகாலம் வாழ்வார்.


17கொலை செய்தவன் தப்பியோடுவதாக எண்ணிப் படுகுழியை நோக்கி விரைகிறான்; அவனை எவரும் தடுக்க வேண்டாம்.


18நேர்மையாக நடப்பவருக்குத் தீங்கு வராது; தவறான வழியில் நடப்பவர் தீங்கிற்கு உள்ளாவார்.


19உழுது பயிரிடுகிறவர் நிரம்ப உணவு பெறுவார்; வீணானவற்றில் காலத்தைக் கழிப்பவர் எப்போதும் வறுமை நிறைந்தவராய் இருப்பார்.


20உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவார்; விரைவிலேயே செல்வராகப் பார்க் கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்.


21ஓரவஞ்சனை காட்டுவது நன்றல்ல; ஆனால் ஒரு வாய்ச் சோற்றுக்காகச் சட்டத்தை மீறுவோருமுண்டு.


22பிறரைப் பொறாமைக் கண்ணோடு பார்ப்பவர் தாமும் செல்வராக வேண்டுமென்று துடிக்கிறார்; ஆனால் தாம் வறியவராகப் போவதை அவர் அறியார்.


23முகப்புகழ்ச்சி செய்கிறவரைப் பார்க்கிலும் கடிந்துகொள்ளுகிறவரே முடிவில் பெரிதும் பாராட்டப்படுவார்.


24பெற்றோரின் பொருளைத் திருடிவிட்டு, “அது குற்றமில்லை” என்று சொல்கிறவன், கொள்ளைக்காரரை விடக் கேடுகெட்டவன்.


25பேராசைக்கொண்டவன் சண்டை மூளச் செய்வான்; ஆண்டவரையே நம்பியிருப்பவர் நலமுடன் வாழ்வார்.


26தன் சொந்தக் கருத்தையே நம்பி வாழ்பவன் முட்டாள்; ஞானிகளின் நெறியில் நடப்பவரோ தீங்கினின்று விடுவிக்கப்படுவர்.


27ஏழைகளுக்குக் கொடுப்பவருக்குக் குறைவு எதுவும் ஏற்படாது; அவர்களைக் கண்டும் காணாததுபோல் இருப்பவர் பல சாபங்களுக்கு ஆளாவார்.


28பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்; அவர்கள் வீழ்ச்சியுற்றபின் நேர்மையானவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள்.


அதிகாரம் 29

1பன்முறை கண்டிக்கப்பட்டும் ஒருவர் பிடிவாதமுள்ளவராகவே இருந்தால், அவர் ஒருநாள் திடீரென அழிவார்; மீண்டும் தலைதூக்கமாட்டார்.


2நேர்மையானவர்கள் ஆட்சி செலுத்தினால், குடிமக்கள் மகிழ்ச்சியுடனிருப்பார்கள்; பொல்லார் ஆட்சி செலுத்தினால் அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.


3ஞானத்தை விரும்புவோர் தம் தந்தையை மகிழ்விப்பார்; விலைமகளின் உறவை விரும்பு கிறவர் சொத்தை அழித்துவிடுவார்.


4நியாயம் வழங்குவதில் அரசர் அக்கறை காட்டினால் நாடு செழிக்கும்; அவர் வரி சுமத்துவதில் அக்கறை காட்டினால் நாடு பாழாய்ப் போகும்.


5தமக்கு அடுத்திருப்போரை அவர்கள் எதிரிலேயே அளவுமீறிப் புகழ்கிறவர் அவரைக் கண்ணியில் சிக்கவைக்கிறார்.


6தீயவர் தம் தீவினையில் சிக்கிக் கொள்வர்; நேர்மையாளரோ மகிழ்ந்து களிகூர்வர்.


7ஏழைகளின் உரிமைகளைக் காப்பதில் நேர்மையாளர் அக்கறை கொள்வர்; இவ்வாறு அக்கறைகொள்வது பொல்லருக்குப் புரியாது.


8வன்முறையாளர் ஊரையே கொளுத்தி விடுவர்; ஞானமுள்ளவர்களோ மக்களின் சினத்தைத் தணிப்பார்கள்.


9போக்கிரியின்மீது ஞானமுள்ளவர் வழக்குத் தொடுப்பாராயின், அவர் சீறுவார், இகழ்ச்சியோடு சிரிப்பார், எதற்கும் ஒத்துவரமாட்டார்.


10தீங்கறியாதவனைக் கொலைகாரர் பகைப்பர்; நேர்மையானவர்களோ அவருடைய உயிரைக் காக்க முயல்வார்கள்.


11அறிவில்லாதவர் தம் சினத்தை அடக்க மாட்டார்; ஞானமுள்ளவரோ பொறுமையோ டிருப்பதால், அவர் சினம் ஆறும்.


12ஆட்சி செலுத்துகிறவர் பொய்யான செய்திகளுக்குச் செவி கொடுப்பாராயின், அவருடைய ஊழியரெல்லாரும் தீயவராவர்.


13ஏழைக்கும் அவரை ஒடுக்குவோருக்கும் பொதுவானது ஒன்று உண்டு; இருவருக்கும் உயிரளிப்பவர் ஆண்டவரே.


14திக்கற்றவர்களின் வழக்கில் அரசர் நியாயமான தீர்ப்பு வழங்குவாராயின், அவரது ஆட்சி பல்லாண்டு நீடித்திருக்கும்.


15பிரம்பும் கண்டித்துத் திருத்துதலும் ஞானத்தைப் புகட்டும்; தம் விருப்பம் போல் நடக்கவிடப்பட்ட பிள்ளைகள் தாய்க்கு வெட்கக் கேட்டை வருவிப்பர்.


16பொல்லாரின் ஆட்சி தீவினையைப் பெருக்கும்; அவர்களது வீழ்ச்சியை நல்லார் காண்பர்.


17உன் பிள்ளையைத் தண்டித்துத் திருத்து; அவர் உனக்கு ஆறுதலளிப்பார், மனத்தை மகிழ்விப்பார்.


18எங்கே இறைவெளிப்பாடு இல்லையோ, அங்கே குடிமக்கள் கட்டுங்கடங்காமல் திரி வார்கள்; நீதி போதனையின்படி நடப்பவர் நற்பேறு பெற்று மகிழ்வார்.


19வெறும் வார்த்தைகளினால் வேலைக் காரர் திருந்தமாட்டார்; அவை அவருக்கு விளங்கினாலும் அவற்றைப் பொருட்படுத்த மாட்டார்.


20பேசத் துடிதுடித்துக்கொண்டிருப்பவரை நீ பார்த்திருக்கிறாயா? மூடராவது ஒருவேளை திருந்துவார்; ஆனால் இவர் திருந்தவேமாட்டார்.


21அடிமையை இளமைப் பருவமுதல் இளக்காரம் காட்டி வளர்த்தால், அவர் பிற்காலத்தில் நன்றிகெட்டவராவார்.


22எளிதில் சினம் கொள்பவரால் சண்டை உண்டாகும்; அவர் பல தீங்குகளுக்குக் காரணமாவார்.


23இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்; தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்.


24திருடனுக்குக் கூட்டாளியாயிருப்பவர் தம்மையே அழித்துக் கொள்கிறார்; அவர் உண்மையைச் சொன்னால் தண்டிக்கப்படுவார்; சொல்லாவிடில், கடவுளின் சாபம் அவர்மீது விழும்.


25பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சிக்கொண்டு நடப்பவர் கண்ணியில் சிக்கிக்கொள்வார்; ஆண்டவரை நம்புகிற வருக்கோ அடைக்கலம் கிடைக்கும்.


26பலர் ஆட்சியாளரின் தயவை நாடுவதுண்டு; ஆனால் எந்த மனிதருக்கும் நியாயம் வழங்குபவர் ஆண்டவர் அன்றோ?


27நேர்மையற்றவரை நல்லார் அருவருப்பர்; நேரிய வழி நடப்போரை பொல்லார் அருவருப்பர்.


அதிகாரம் 30

ஆகூரின் மொழிகள்


1மாசாவைச் சார்ந்த யாக்கோபின் மகன் ஆகூரின் மொழிகள்; அவர் ஈத்தியேல் ஊக்கால் என்பவர்களுக்குக் கூறிய வாக்கு;⁕


2மாந்தருள் மதிகேடன் நான்; மனிதருக் குரிய அறிவாற்றல் எனக்கில்லை.


3ஞானத்தை நான் கற்றுணரவில்லை; கடவுளைப்பற்றிய அறிவு எனக்கில்லை.


4வானத்திற்கு ஏறிச்சென்று மீண்டவர் யார்? தம் கைப்பிடிக்குள் காற்றை ஒருங்கே கொணர்ந்தவர் யார்? கடல்களை மேலாடையில் அடக்கிவைத்தவர் யார்? மண்ணுலகின் எல்லை களைக் குறித்தவர் யார்? அவர் பெயரென்ன? அவருடைய மகன் பெயரென்ன? நீதான் எல்லா வற்றையும் அறிந்தவனாயிற்றே!


5கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக் கப்பட்டு நம்பத்தக்கதாய் விளங்குகிறது; தம்மை அடைக்கலமாகக் கொண்டவர்களுக்கு அவர் கேடயமாயிருக்கிறார்.


6அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் கூட்டாதே; கூட்டினால் நீ பொய்யனாவாய்; அவர் உன்னைக் கடிந்துகொள்வார்.


7வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன், மறுக்காதீர்; நான் சாவதற்குள் அவற்றை எனக்கு அளித்தருளும்.


8வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச்செய்யும்; எனக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்.


9எனக்கு எல்லாம் இருந்தால், நான், “உம்மை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்து, “ஆண்டவரைக் கண்டது யார்?” என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால், திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்.


10வேலைக்காரரைப் பற்றி அவர் தலைவரிடம் போய்க் கோள் சொல்லாதே; சொன்னால், அவர் உன்மீது பழிசுமத்துவார்; நீயே குற்றவாளியாவாய்.


11தந்தையைச் சபிக்கிற, தாயை வாழ்த்தாத மக்களும் உண்டு.


12மாசு நிறைந்தவராயிருந்தும் தம்மைத் தூயோர் எனக் கருதும் மக்களும் உண்டு.


13கண்களில் இறுமாப்பு, பார்வையில் ஆணவம் — இத்தகைய மக்களும் உண்டு.


14பற்கள் கூரிய வாள், கீழ்வாய்ப் பற்கள் தீட்டிய கத்தி — இவற்றை உடைய மக்களும் உண்டு; அவர்கள் நாட்டிலுள்ள ஏழைகளை விழுங்கிவிடுவார்கள்; உலகிலுள்ள எளி யோரைத் தின்று விடுவார்கள்.


15அட்டைப்பூச்சிக்கு, “தா, தா” எனக் கத்தும் இரு புதல்வியர் உண்டு; ஆவல் தணியாத மூன்று உண்டு; “போதும்” என்று சொல்லாத நான்காவது ஒன்றும் உண்டு.


16அவை; பாதாளம், மலடியின் கருப்பை, நீரை அவாவும் வறண்ட நிலம், “போதும்” என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே.


17தகப்பனை ஏளனம் செய்யும் கண் களையும் வயது முதிர்ந்த தாயை இகழும் விழிகளையும் இடுகாட்டுக் காக்கைகள் பிடுங்கட்டும், கழுகுக் குஞ்சுகள் தின்னட்டும்.


18எனக்கு வியப்பைத் தருவன மூன்று உண்டு; என் அறிவுக்கு எட்டாத நான்காவது ஒன்றும் உண்டு.


19அவை: வானத்தில் கழுகு மிதத்தல், கற்பாறைமேல் பாம்பு ஏறுதல், நடுக்கடலில் கப்பல் மிதந்து செல்லுதல், ஆண்மகனுக்குப் பெண்மீதுள்ள நாட்டம் ஆகியவையே.


20விலைமகள் நடந்துகொள்ளும் முறை இதுவே: தவறு செய்தபின்* அவள் குளித்து விட்டு,* “நான் தவறு எதுவும் செய்யவில்லை” என்பாள்.✠


21உலகத்தை நிலைகுலைப்பவை மூன்று; அது பொறுக்க இயலாத நான்காவது ஒன்றும் உண்டு:


22அரசனாகிவிடும் அடிமை, உண்டு திரியும் கயவன்,


23யாரும் விரும்பாதிருந்தும் இறுதியில் மணம் முடிக்கும் பெண், உரிமை மனைவியின் இடத்தைப் பறித்துக் கொள்ளும் அடிமைப் பெண்.


24சிறியவையாயினும் ஞானமுள்ள சிற்று யிர்கள் நான்கு உலகில் உண்டு:


25எறும்புகள்: இவை வலிமையற்ற இனம்; எனினும், கோடைக்காலத்தில் உணவைச் சேமித்து வைத்துக் கொள்கின்றன.


26குறுமுயல்கள்: இவையும் வலிமையற்ற இனமே; எனினும், இவை கற்பாறைகளுக் கிடையே தம் வளைகளை அமைத்துக் கொள்கின்றன.


27வெட்டுக்கிளிகள்: இவற்றிற்கு அரசன் இல்லை; எனினும், இவை அணி அணியாகப் புறப்பட்டுச் செல்லும்.


28பல்லி: இதைக் கைக்குள் அடக்கி விடலாம்; எனினும், இது அரச மாளிகையிலும் காணப்படும்.


29பீடுநடை போடுபவை மூன்று உண்டு; ஏறுபோல நடக்கின்ற நான்காவது ஒன்றும் உண்டு;


30விலங்குகளுள் வலிமை வாய்ந்ததும் எதைக் கண்டும் பின்வாங்காததுமான சிங்கம்;


31பெருமிதத்துடன் நடக்கும் சேவல்; மந்தைக்குமுன் செல்லும் வெள்ளாட்டுக்கடா; படையோடு செல்லும் அரசன்.


32நீ வீண் பெருமைகொண்டு மூடத் தனமாக நடந்திருந்தாலும், தீமை செய்யத் திட்டம் வகுத்திருந்தாலும், உன் வாயை பொத்திக் கொண்டிரு.


33ஏனெனில், மோரைக் கடைந்தால் வெண்ணெய் திரண்டுவரும்; மூக்கை நெரித்தால் இரத்தம் வரும்; எரிச்சலூட்டினால் சண்டை வரும்.


30:1 * ‘ஈத்தியேல்’ என்பதை ‘கடவுளே, நான் சோர்ந்துபோனேன்’ எனவும், ‘ஊக்கால்’ என்பதை ‘நான் நொந்துபோனேன்’ எனவும் மொழிபெயர்க்கலாம்..


30:20 *…* ‘அவள் சாப்பிட்டபின் வாயைத் துடைத்துவிட்டு’ எனவும் மொழிபெயர்க்கலாம்.


அதிகாரம் 31

அரசனுக்கு அறிவுரை


1மாசாவின் அரசனான இலமுவேலின் மொழிகள்: இவை அவனுடைய தாய் தந்த அறிவுரைகள்:


2பிள்ளாய், என் வயிற்றில் பிறந்தவனே, என் வேண்டுதலின் பயனாய்க் கிடைத்த என் பிள்ளாய், நான் சொல்வதைக் கவனி.


3உன் வீரியத்தையெல்லாம் பெண்களிடம் செலவழித்துவிடாதே; அரசரை அழிப்பவர்களை அணுகாதே.


4இலமுவேலே, கேள், அரசருக்குக் குடிப்பழக்கம் இருத்தலாகாது; அது அரசருக்கு அடுத்ததன்று; வெறியூட்டும் மதுவை ஆட்சி யாளர் அருந்தலாகாது.


5அருந்தினால், சட்டத்தை மறந்து விடு வார்கள்; துன்புறுத்தப்படுவோருக்கு நீதி வழங்கத் தவறுவார்கள்.


6ஆனால் சாகும் தறுவாயில் இருப்பவருக்கு மதுவைக் கொடு; மனமுடைந்த நிலையில் இருப்பவருக்கும் திராட்சை இரசத்தைக் கொடு.


7அவர்கள் குடித்துக் தங்கள் வறுமையை மறக்கட்டும்; தங்கள் துன்பத்தை நினையா திருக்கட்டும்.


8பேசத் தெரியாதவர் சார்பாகப் பேசு; திக்கற்றவர்கள் எல்லாருடைய உரிமைகளுக் காகவும் போராடு.


9அவர்கள் சார்பாகப் பேசி நியாயமான தீர்ப்பை வழங்கு; எளியோருக்கும் வறியோருக்கும் நீதி வழங்கு.


நல்ல மனையாள்


10திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள்.


11அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும்.


12அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒரு நாளும் தீங்கு நினையாள்.


13கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலையனைத் தையும் விருப்புடன் தானே செய்வாள்.


14அவளை ஒரு வணிகக் கப்பலுக்கு ஒப்பிட லாம்; அவள் உணவுப் பொருள்களைத் தொலையி லிருந்து வாங்கி வருவாள்.


15வைகறையில் துயிலெழுவாள்; வீட்டாருக்கு உணவு சமைப்பாள்; வேலைக்காரிகளுக்குரிய வேலைகளைக் குறிப்பாள்.


16ஒரு நிலத்தை வாங்கும்போது தீர எண்ணிப்பார்த்தே வாங்குவாள்; தன் ஊதி யத்தைகொண்டு அதில் கொடிமுந்திரித் தோட்டம் அமைப்பாள்.


17சுறுசுறுப்புடன் அவள் வேலை செய்வாள்; அயர்வின்றி நாள் முழுதும் ஊக்கம் குன்றாது உழைப்பாள்.


18தன் உழைப்பு நற்பலன் தருமென்பது அவளுக்குத் தெரியும்; அவள் தன் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒருபோதும் அணையாது.


19இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள்.


20எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.


21குளிர்காலத்தில் அவள் வீட்டாரைப்பற்றிய கவலை அவளுக்கு இராது; ஏனெனில், எல்லார்க்கும் திண்மையான கம்பளிப் போர்வை உண்டு.


22தனக்கு வேண்டிய போர்வையைத் தானே நெய்வாள்; அவள் உடுத்துவது பட்டாடையும் பல வண்ண உடைகளுமே.


23அவளை மணந்த கணவன் ஊர்ப் பெரியோருள் ஒருவனாய் இருப்பான்; மக்கள் மன்றத்தில் புகழ் பெற்றவனாயுமிருப்பான்.


24அவள் பட்டாடைகளை நெய்து விற்பாள்; வணிகரிடம் இடுப்புக் கச்சைகளை விற்பனை செய்வாள்.


25அவள் ஆற்றலையும் பெருமையையும் அணிகலனாகப் பூண்டவள்; வருங்காலத்தைக் கவலை இன்றி எதிர்நோக்கியிருப்பாள்.


26அவள் பேசும்போது ஞானத்தோடு பேசுவாள்; அன்போடு அறிவுரை கூறுவாள்.


27தன் இல்லத்தின் அலுவல்களில் கண்ணும் கருத்துமாய் இருப்பாள்; உணவுக் காகப் பிறர் கையை எதிர்பார்த்துச் சோம்பி யிருக்கமாட்டாள்.


28அவளுடைய பிள்ளைகள் அவளை நற்பேறு பெற்றவள் என வாழ்த்துவார்கள்; அவளுடைய கணவன் அவளை மனமாரப் புகழ்வான்.


29“திறமை வாய்ந்த பெண்கள் பலர் உண்டு; அவர்கள் அனைவரிலும் சிறந்தவள் நீயே” என்று அவன் சொல்வான்.


30எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள்.


31அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.