2கொரிந்தியர்


2கொரிந்தியர்
முன்னுரை

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் தன்னிலை விளக்க மடலாக அமைந்துள்ளது. இது பவுலின் உள்ளத்தையும் உணர்வுகளையும் மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது; தம் திருத்தூதுப் பணி முறையானது என நிலைநாட்டுவதையும், தம் பணியை இகழ்ந்து பேசியவர்கள்மேல் சினங்கொண்டு அவர்களைத் தாக்குவதையும், தாம் இகழ்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட போது உள்ளம் வேதனையடைந்து கண்ணீர் விடுவதையும், கொரிந்தியர் மனம் மாறியபோது ஆறுதலால் நிறைந்து மனம் மகிழ்ச்சியடைவதையும் நாம் கண்டு அவரோடு ஒத்துணர முடிகிறது.


சூழலும் நோக்கமும்


பவுல் கொரிந்தியருக்கு முதலாம் திருமுகத்தை எழுதிய பின் கொரிந்திலிருந்து போலிப் போதகர்கள் அவருக்கு எதிராகக் கலகமூட்டினர். அவர் கொரிந்துக்கு வரும் திட்டத்தை மாற்றியதால் அவர் உறுதியற்ற மனமுடையவர் என்றனர்; நன்கொடை திரட்டி வந்ததால் நேர்மையற்றவர் என்றனர்; அவர் தற்பெருமைமிக்கவர், நல்ல தோற்றமோ பேச்சுவன்மையோ இல்லாதவர், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலராய் இருக்கத் தகுதியற்றவர் என்றனர்.


பவுல் தீத்துவைக் கொரிந்துக்கு அனுப்பி இச்சிக்கல்களுக்குத் தீர்வு காணப் பணித்தார்; தீத்து திரும்பி வந்தபின் கொரிந்தியர் மனம்மாற்றம் பெற்றதை அவரிடமிருந்து அறிந்து மகிழ்ந்தார்; குறிப்பாக 1 கொரி 5இல் சொல்லப்பட்ட ஒழுக்கக்கேடான ஒருவன் மனம்மாறி மீண்டும் திருச்சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது குறித்து மகிழ்ந்தார். எனவே மனம் மாறிய கொரிந்தியருக்கு நன்றி கூறும் நோக்குடனும் தம் திருத்தூதுப் பணியின் அதிகாரத்தை ஏற்காதோரை அதை ஏற்கச் செய்யும் நோக்குடனும் அவர் இம்மடலை எழுதினார். கி.பி. 55-56ஆம் ஆண்டுகளில் இதனை எழுதியதாகத் தெரிகிறது.


ஒரே கடிதமா, கடிதங்களின் தொகுப்பா?


இத்திருமுகம் ஒரே மடலா அல்லது பல மடல்களின் தொகுப்பா என்பது பற்றி அறிஞரிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சிலர் இதனை இன்றும் ஒரே மடலாகவே பார்க்கின்றனர். மற்றும் சிலர் 1-9 அதிகாரங்களை ஒரு மடலாகவும், 10-13 அதிகாரங்களை இன்னொரு மடலாகவும் பார்க்கின்றனர். ஆனால் வேறு சில அறிஞர்கள் இத்திருமுகம் ஐந்து மடல்களின் தொகுப்பு என்கின்றனர்:


1. தம் பணிபற்றிய விளக்க மடல் (2:14-7:4); 2. கண்ணீர்மடல் (10-13); 3. ஒப்புரவுமடல் (1:1-2:13; 7:5-16); 4. நன்கொடை பற்றிக் கொரிந்தியருக்கு மடல் (8:1-24); 5. நன்கொடை பற்றி அக்காயாவினருக்கு மடல் (9:1-15); இவ்வாறு பகுத்து இந்த வரிசையில் வாசிக்கும்போது மிகுந்த கருத்துத் தொடர்பும் பொருள் தெளிவும் கிடைக்கிறது.


உள்ளடக்கம்


இத்திருமுகத்தின் முதற்பகுதியில் பவுல் கொரிந்து திருச்சபையுடன் தமக்கிருந்த உறவை விவரிக்கிறார்; புதிய உடன்படிக்கையே தம் பணிக்கும் கிறிஸ்துவின் பணிக்கும் அடிப்படை என்கிறார். பணியில் வரும் துன்பங்கள் குறித்தும் அப்பணிக்கான நோக்கம் குறித்தும் பேசுகிறார்; அந்நோக்கம் கிறிஸ்துவுடன் ஒப்புரவு ஆதல் என்கிறார்; தாம் வரும்போது நன்கொடைகளைத் தயாராக வைத்திருக்க வேண்டுமென அறிவுரை கூறுகிறார்.


இறுதியில், தாம் நிச்சயமாகக் கொரிந்துக்கு வரப்போவதாக வலியுறுத்தித் தாம் உண்மையான திருத்தூதர் என்றும் ஒரு திருத்தூதருக்குரிய தன்மையுடன் கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கப் போவதாகவும் கூறுகிறார்.


அமைப்பு


1. முன்னுரை (வாழ்த்தும் நற்செய்தியும்) 1:1 - 11 2. பவுலின் பயணத் திட்டத்தை மாற்றியது குறித்து விளக்கம் 1:12 - 2:13 3. தம் பணிபற்றிய விளக்கம் 2:14 - 6:13 4. தூய வாழ்விற்கான அழைப்பு 6:14 - 7:2 5. பவுலின் ஆறுதலும் மகிழ்ச்சியும் 7:3 - 16 6. யூதேயாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு நன்கொடை திரட்டுதல் 8:1 - 9:15 7. பணிபற்றிய குற்றச்சாட்டுக்கு மறுமொழி 10:1 - 13:10 8. முடிவுரை 13:11 - 14
அதிகாரம் 1

1. முன்னுரை


வாழ்த்து

1கொரிந்து நகரில் உள்ள கடவுளின் திருச்சபைக்கும் அக்காயா மாநிலம் முழுவதிலும் வாழும் இறைமக்கள் அனைவருக்கும் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாயிருக்கும் பவுலும் சகோதரராகிய திமொத்தேயுவும் எழுதுவது;✠ 2நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!


கடவுளுக்கு நன்றிகூறுதல்


3நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று; அவரைப் போற்றுவோம். 4கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது. 5கிறிஸ்து நமக்காக மிகுதியாகத் துன்புற்றார்; அது போல அவர் வழியாக நாம் மிகுதியான ஆறுதலும் பெறுகிறோம்.✠ 6ஆகவே, நாங்கள் துன்புறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவும் மீட்புக்காகவும்தான்; நாங்கள் ஆறுதல் பெறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவே. நாங்கள் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதைப் போல நீங்களும் உங்கள் துன்பங்களைத் தளராமனத்துடன் பொறுத்துக் கொள்வதற்கு இந்த ஆறுதல் ஆற்றல் அளிக்கிறது. 7நீங்கள் எங்கள் துன்பத்தில் பங்கெடுத்ததைப்போல் எங்களுடைய ஆறுதலிலும் பங்குபெறுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் இவ்வாறு செய்வீர்கள் என உறுதியாக எதிர்நோக்கி இருக்கிறோம்.


8சகோதர சகோதரிகளே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட இன்னல்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அவை எங்களை அளவுக்கு மிஞ்சி வாட்டின; எங்களால் தாங்க முடியாத சுமையாக மாறின. இனிப் பிழைப்போம் என்னும் நம்பிக்கையே இல்லாமல் போயிற்று. 9எங்களுக்கு மரணதண்டனையே விதிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. நாங்கள் எங்களை அல்ல, இறந்தோரை உயிர்த்தெழச்செய்யும் கடவுளையே நம்பி இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நிகழ்ந்தது. 10-11அவரேதான் இத்துணைக் கொடிய சாவிலிருந்து எங்களை விடுவித்தார்; இன்னும் எங்களை விடுவிப்பார். நீங்களும் உங்கள் மன்றாட்டு மூலமாக எங்களுக்கு உதவினால் இனிமேலும் எங்களை விடுவிப்பார் என்று எதிர் பார்க்கிறோம். இவ்வாறு, பலர் எங்களுக்காக மன்றாடி இந்த அருளுக்காக எங்கள் சார்பில் கடவுளுக்கு நன்றி செலுத்துவர்.


2. பவுலின் பயணத்திட்டத்தை மாற்றியது குறித்து விளக்கம்


12மக்களிடையே, குறிப்பாக உங்களிடையே மனித ஞானத்தின்படி நடவாமல், கடவுளின் அருளைச் சார்ந்து அவர் தரும் நேர்மையோடும் நாணயத்தோடும் நடந்து வந்தோம் என எங்கள் மனச்சான்று உறுதியாகச் சொல்லுகிறது. இதுவே எங்களுக்குப் பெருமை. 13-14நாங்கள் உங்களுக்கு எழுதும் திருமுகங்களில் நீங்கள் வாசித்துப் புரிந்து கொள்ள முடியாதது எதுவுமில்லை. இப்போது நீங்கள் எங்களை ஓரளவுக்குத்தான் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். ஆனால், நம் ஆண்டவர் இயேசு வரும் நாளில் நீங்கள் எங்களை முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன். அப்போது நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமைகொள்வது போன்று, நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமை கொள்வீர்கள்.


15இந்த உறுதியான நம்பிக்கை இருந்ததால்தான் நான் முதலில் உங்களிடம் வரத் திட்டமிட்டேன். அப்போது நீங்களும் என்னை இருமுறை சந்திக்கும் பேற்றைப் பெற்றிருப்பீர்கள். 16மாசிதோனியாவுக்குப் போகும் வழியிலும் அங்கிருந்து திரும்பி வரும் வழியிலும் நான் உங்களைச் சந்தித்திருப்பேன். நீங்களும் என்னை யூதேயாவுக்கு வழியனுப்பி வைத்திருப்பீர்கள். 17இப்படித் திட்டமிட்ட பிறகு நான் பொறுப்பற்ற முறையில் அதை மாற்றிவிட்டேன் என நினைக்கிறீர்களா? அல்லது உள்நோக்கத்தோடு திட்டமிடுகிறேன் என்று நினைக்கிறீர்களா? ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் சொல்பவன் நான் என்று நினைக்கிறீர்களா? 18நான் ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராயிருப்பது போல் நான் சொல்வதும் உண்மையே. 19நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் ‘ஆம்’ என உண்மையையே பேசுபவர்.✠ 20அவர் சொல்லும் ‘ஆம்’ வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப்புகழும்போது அவர் வழியாக ‘ஆமென்’⁕ எனச் சொல்லுகிறோம். 21கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; இவ்வாறு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார். 22அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்.


23என் உயிரின் மேல் ஆணையாகச் சொல்கிறேன்; உங்களை வருத்தத்துக்கு உள்ளாக்காமல் இருக்கவே இதுவரை நான் கொரிந்துக்கு வரவில்லை. கடவுளே இதற்குச் சாட்சி. 24நீங்கள் எதையெதை நம்ப வேண்டும் என நாங்கள் உங்களைக் கட்டாயப்படுத்துவதில்லை. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையில் நிலையாய்த்தான் இருக்கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சிக்காக உங்களோடு ஒத்துழைக்கிறோம்.


1:1 திப 8:1. 1:5 கொலோ 1:24; திப 20:19; 1 கொரி 15:32. 1:11 உரோ 15:30-31. 1:14 1 தெச 2:19-20. 1:19 திப 18:5.


அதிகாரம் 2

1நான் மீண்டும் உங்களிடம் வந்து உங்களுக்கு மனவருத்தத்தைக் கொடுக்க விரும்பவில்லை. 2நான் உங்களுக்கு மனவருத்தத்தைக் கொடுத்தால் எனக்கு மகிழ்ச்சியூட்ட யார் இருக்கிறார்? என்னால் மனவருத்தத்துக்குட்பட்ட நீங்கள்தானே எனக்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும்! 3நான் வரும்போது எனக்கு மகிழ்ச்சி தர வேண்டிய உங்களாலே எனக்கு மனவருத்தம் வரக்கூடாது என்பதற்காகவே அத்திருமுகத்தை உங்களுக்கு எழுதினேன். நான் மகிழ்ச்சியடைந்தால் நீங்கள் எல்லாரும் மகிழ்ச்சியடைவீர்கள். இதுவே உங்கள் அனைவரையும் பற்றிய என் உறுதியான நம்பிக்கை. 4நான் மிகுந்த வேதனையோடும் மனக்கவலையோடும் கலங்கிய கண்களோடும் அதை உங்களுக்கு எழுதினேன். உங்களுக்கு மனவருத்தம் தரவேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக நான் உங்கள் மேல் கொண்டுள்ள மிகுந்த அன்பை நீங்கள் உணரவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு எழுதினேன்.


மனவருத்தம் உண்டாக்கினவனுக்கு மன்னிப்பு


5ஒருவன் எனக்கு மனவருத்தம் தந்தால் அது எனக்கு மட்டும் அல்ல, ஓரளவுக்கு உங்கள் அனைவருக்குமேதான் என்றே சொல்லவேண்டும். அவன் செய்ததை மிகைப்படுத்த நான் விரும்பவில்லை. 6அந்த ஆளுக்கு உங்களுள் பெரும்பான்மையோர் கொடுத்த தண்டனையே போதும். 7எனவே, இப்பொழுது நீங்கள் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வதுதான் நல்லது. அவன் மனவருத்தத்தில் மூழ்கிவிடாமல் இருக்கும் வண்ணம் அவனுக்கு ஆறுதல் அளியுங்கள்.✠ 8நீங்கள் அவன்மீது அன்புகொண்டிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். 9நீங்கள் எப்போதும் எனக்குக் கீழ்ப்படிகிறீர்களா எனச் சோதித்து அறியவே அத்திருமுகத்தை நான் எழுதினேன். 10நீங்கள் ஒருவனை மன்னித்தால் நானும் அவனை மன்னிக்கிறேன். நான் மன்னிக்க வேண்டியது ஏதாவது இருந்தால் அதை உங்கள் பொருட்டுக் கிறிஸ்துவின் முன்னிலையில் மன்னித்து விட்டேன். 11இவ்வாறு, சாத்தான் நம்மை வஞ்சிக்க இடம் கொடுக்க மாட்டோம். அவனது சதித்திட்டம் நமக்குத் தெரியாதது அல்ல.✠


துரோவாவில் பவுல் அமைதியின்றித் தவித்தல்


12துரோவா என்னும் நகருக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க வந்த பொழுது அங்கே ஆண்டவர் எனக்குப் பணியாற்ற நல்ல வாய்ப்பைத் தந்தார். 13ஆனால், அங்கே என் தம்பி தீத்துவைக் காணாததால் என் மனம் அமைதியின்றித் தவித்தது. எனவே, அம்மக்களிடம் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து மாசிதோனியாவுக்குப் புறப்பட்டேன்.


3. தம் பணிபற்றிய விளக்கம்


கிறிஸ்துவால் கிடைக்கும் வெற்றி நிறைந்த வாழ்வு

14கிறிஸ்துவோடு இணைந்து வாழும் எங்களைக் கடவுள் கிறிஸ்துவின் வெற்றிப் பவனியில் பங்கு கொள்ளச் செய்து எங்கள் வழியாய்த் தம்மைப்பற்றி யாவரும் அறியச் செய்கிறார்; இவ்வறிவு நறுமணம் போல் எங்கும் பரவுகிறது. இவ்வாறு செய்யும் கடவுளுக்கே நன்றி உரித்தாகுக!15மீட்புப் பெறுவோரிடையேயும் அழிவுறுவோரிடையேயும் நாங்கள் கடவுள்பால் எழும் கிறிஸ்துவின் நறுமணமாயிருக்கிறோம். 16அழிவுறுவோருக்கு அது சாவை விளைவிக்கும் நச்சுப் புகையாகும். மீட்புப் பெறுவோருக்கு அது வாழ்வளிக்கும் நறுமணமாகும். அப்படியெனில் இத்தகைய பணியை யார்தான் செய்ய இயலும்? 17நாங்கள் கடவுளின் வார்த்தையை மலிவுச் சரக்காகக் கருதும் பலரைப் போன்றவர்கள் அல்ல. மாறாக, கிறிஸ்துவோடு இணைந்துள்ள நாங்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்னும் முறையில் அவர் முன்னிலையில் நேர்மையோடு பேசுபவர்கள்.


2:7 கொலோ 3:13. 2:11 எபே 4:27. 2:12-13 திப 20:1.


அதிகாரம் 3

புதிய உடன்படிக்கையின் பணியாளர்


1மீண்டும் நாங்கள் எங்களைப்பற்றி நற்சான்று அளிக்கத் தொடங்குகிறோமா? சிலரைப் போல நற்சான்றுக் கடிதங்களை உங்களுக்குக் காட்டவோ அல்லது உங்களிடமிருந்து பெறவோ எங்களுக்குத் தேவை உண்டா? 2யாவரும் வாசித்து அறிந்து கொள்ளும் முறையில் எங்கள் இதயத்தில் எழுதப்பட்ட நற்சான்றுக் கடிதம் நீங்களே.✠ 3எங்கள் பணியின் வாயிலாகக் கிறிஸ்து எழுதிய கடிதம் நீங்களே என்பது வெளிப்படை. அது மையினால் எழுதப்பட்டது அல்ல; மாறாக வாழும் கடவுளின் ஆவியால் எழுதப்பட்டது. கற்பலகையில் அல்ல, மாறாக மனித இதயமாகிய பலகையில் எழுதப்பட்டது.✠


4கிறிஸ்துவின் வழியாய் நாங்கள் கடவுள்மேல் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால்தான் இவ்வாறு சொல்லுகிறோம். 5நாங்களே செய்ததாக எதன் மேலும் உரிமைபாராட்டிக் கொள்ள எங்களுக்குத் தகுதி இல்லை. எங்கள் தகுதி கடவுளிடமிருந்தே வருகிறது. 6அவரே புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியை எங்களுக்குத் தந்தார். அவ்வுடன்படிக்கை, எழுதப்பட்ட சட்டத்தைச் சார்ந்ததல்ல; தூய ஆவியையே சார்ந்தது. ஏனெனில், எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு; தூய ஆவியால் விளைவது வாழ்வு.✠


7கற்களில் பொறிக்கப்பட்ட அச்சட்டம் சார்ந்த திருப்பணி சாவை விளைவிப்பதாயிருந்தும் அது மாட்சியுடன் அருளப்பட்டது. விரைவில் மறையவேண்டியதாயிருந்த அம்மாட்சி மோசேயின் முகத்தில் இஸ்ரயேல் மக்கள் பார்க்க முடியாத அளவுக்கு ஒளிவீசியது.✠ 8அதுவே அப்படியிருந்தது என்றால் தூய ஆவிசார்ந்த திருப்பணி எத்துணை மாட்சி பொருந்தியதாயிருக்கும்! 9தண்டனைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணியே இத்துணை மாட்சி பொருந்தியதாயிருந்தது என்றால் விடுதலைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணி எத்துணை மாட்சி நிறைந்ததாயிருக்கும்! 10அன்றைய மாட்சியை ஒப்புயர்வற்ற இன்றைய மாட்சியோடு ஒப்பிட்டால் அது மாட்சியே அல்ல. 11மறையப்போவது மாட்சி உடையதாயிருந்தால் நிலையாக இருப்பது எத்துணை மாட்சி மிகுந்ததாயிருக்கும்!


12இவ்வாறு, நாங்கள் எதிர்நோக்கி இருப்பதால்தான் மிகுந்த துணிச்சலோடு செயல்படுகிறோம். 13மறைந்துபோகும் மாட்சியை இஸ்ரயேல் மக்கள் காணாதவாறு தம் முகத்தை முக்காடிட்டு மறைத்துக் கொண்ட மோசேயைப்போல் நாங்கள் செய்வது இல்லை.✠ 14அவர்களின் உள்ளம் மழுங்கிப் போயிற்று. இன்றுவரை அந்தப் பழைய உடன்படிக்கை நூல்களை அவர்கள் வாசிக்கும்போது அதே முக்காடு இன்னும் அகற்றப்படாமல் இருக்கிறது. கிறிஸ்துவின் வழியாய்த்தான் அது அகற்றப்படும். 15இன்றுவரை மோசேயின் திருச்சட்டம் வாசிக்கப்படும்போதெல்லாம் அவர்களின் உள்ளத்தை ஒரு திரை மூடி இருக்கிறது. 16ஆனால், ஆண்டவர்பால் திரும்பினால் அந்தத் திரை அகற்றப்படும். 17இங்கே ஆண்டவர் என்பது தூய ஆவியாரைக் குறிக்கிறது. ஆண்டவரின் ஆவியார் இருக்குமிடத்தில் விடுதலை உண்டு. 18இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சிபெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம். இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே.


3:2 1 கொரி 9:2. 3:3 விப 24:12; எரே 31:33; எசே 11:19; 36:26. 3:6 எபே 3:7. 3:7 விப 34:29. 3:13 விப 34:33.


அதிகாரம் 4

மண்பாண்டத்தில் செல்வம்


1கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றிருக்கிறோம். ஆகையால் மனந்தளராமல் இருக்கிறோம். 2மக்கள் மறைவாகச் செய்யும் வெட்கக் கேடான செயல்களை நாங்கள் தவிர்த்து விட்டோம். எங்கள் நடத்தையில் சூழ்ச்சி என்பதே இல்லை. கடவுளுடைய வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறுவதில்லை; மாறாக, உண்மையை வெளிப்படையாக எடுத்துரைக்கிறோம். இவ்வாறு, கடவுளின் முன்னிலையில் நல்ல மனச்சான்று கொண்ட அனைவருக்கும் நாங்கள் எங்களைப் பற்றி நற்சான்று அளிக்கிறோம்.✠ 3நாங்கள் அறிவிக்கும் நற்செய்தி அழிவுறுவோருக்கே அன்றி வேறு எவருக்கும் மறைக்கப்பட்டிருக்கவில்லை. 4இவ்வுலகின் தெய்வம் நம்பிக்கை கொண்டிராதோரின் அறிவுக் கண்களைக் குருடாக்கிவிட்டது. எனவே, அவர்கள் கடவுளின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மாட்சி பொருந்திய நற்செய்தி ஒளியைக் காணமுடிவதில்லை.✠ 5நாங்கள் எங்களைப் பற்றி அல்ல, இயேசு கிறிஸ்துவைப் பற்றியே அறிவிக்கிறோம்; அவரே ஆண்டவர் எனப்பறைசாற்றி வருகிறோம். நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே. 6“இருளிலிருந்து ஒளி தோன்றுக!” என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.✠


7இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்குகே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது.8நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; 9துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. 10இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். 11இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம். 12சாவின் ஆற்றல் எங்களிலும் வாழ்வின் ஆற்றல் உங்களிலும் வெளிப்படுகிறது.


13“நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்”✠ என்று மறைநூலில் எழுதியுள்ளது. அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்; ஆகவே பேசுகிறோம். 14ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்; உங்களையும் அவ்வாறே நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும். 15இவையனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப்பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும். இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார்.


நம்பிக்கையோடு வாழ்தல்


16எங்கள் உடல் அழிந்து கொண்டிருந்தாலும் எங்கள் உள்ளார்ந்த இயல்பு நாளுக்கு நாள் புதுப்பிக்கப் பெற்று வருகிறது. எனவே நாங்கள் மனந்தளருவதில்லை. 17நாம் அடையும் இன்னல்கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை. அவை சிறிது காலம்தான் நீடிக்கும். ஆனால், அவை ஈடு இணையற்ற மாட்சியை விளைவிக்கின்றன. அம்மாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும்.✠ 18நாங்கள் காண்பவற்றையல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை; காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை.


4:2 1 தெச 2:4,5. 4:4 எபே 2:2. 4:6 தொநூ 1:3; யோவா 8:12. 4:13 திபா 116:10. 4:17 மத் 5:11,12.


அதிகாரம் 5

1நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனிதக் கையால் கட்டப்படாதது, நிலையானது என்பது நமக்குத் தெரியும் அல்லவா! 2இக்கூடாரத்தில் குடியிருக்கும் நாம் விண்ணுலகு சார்ந்த நம் வீட்டைப் பெற்றுக் கொள்ள ஏங்கிப் பெருமூச்சு விடுகிறோம்.✠ 3அதைப் பெற்றுக்கொண்டால் நாம் உறைவிடமற்றவர்களாய் இருக்கமாட்டோம்; 4இவ்வுலகக் கூடாரத்தில் குடியிருக்கும் நாம் இந்நிலையைத் தாங்க இயலாமல் பெருமூச்சு விடுகிறோம். இக்கூடாரத்தை விட்டு விலக வேண்டும் என்பதல்ல; மாறாக விண்ணக வீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நம் விருப்பம். வாழ்வுக்குரியது சாவுக்குரியதைத் தனக்குட்படுத்தும். 5இந்நிலையடைவதற்கென்றே கடவுள் நம்மைத் தயாரித்து மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாக அவருடைய தூய ஆவியை நமக்கு வழங்கினார்.


6ஆகவே, நாங்கள் எப்போதும் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலில் குடியிருக்கும் வரையில் நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். 7நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம். 8நாம் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலை விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம். 9எனவே, நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராயிருப்பதே நம் நோக்கம். 10ஏனெனில், நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்.✠


ஒப்புரவுத் திருப்பணி


11ஆண்டவருக்கு அஞ்சி உழைக்கும் நாங்கள் மக்களை ஈர்க்கப் பார்க்கிறோம். எங்கள் செயல்கள் கடவுளுக்கு வெளிப்படை. அவை உங்கள் மனச்சான்றுக்கும் வெளிப்படையாயிருக்கும் என எதிர்பார்க்கிறேன். 12மீண்டும் நாங்கள் எங்களைப் பற்றி நற்சான்று கூறவில்லை; மாறாக எங்களைக் குறித்து நீங்கள் பெருமைப்பட உங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறோம். அப்போது உள்ளத்தைப் பாராமல் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்துப் பெருமை பாராட்டுவோருக்கு நீங்கள் மறுப்புக் கூற இயலும். 13நாங்கள் மதிமயங்கியவர்கள்போல் இருக்கிறோம் என்றால் அது கடவுளுக்காகவே; அறிவுத் தெளிவோடு இருக்கிறோம் என்றால் அது உங்களுக்காகவே. 14கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில், ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும். 15வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்.


16ஆகவே, இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால், இப்போது அவ்வாறு செய்வதில்லை. 17எனவே, ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! 18இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். 19உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.


20எனவே, நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே, கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். 21நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.✠


5:2 பிலி 3:20. 5:10 மத் 16:27; யோவா 5:27; உரோ 14:10. 5:21 எசா 53:5-8; உரோ 8:3; கலா 3:13; 1 பேது 2:24.


அதிகாரம் 6

1நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.


2‘தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்’ ✠ எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்! 3எவரும் குறைகூறா வண்ணம் எங்கள் திருப்பணியை ஆற்ற விரும்புகிறோம். எனவே, நாங்கள் எவருக்கும் இடையூறாக இருப்பதில்லை. 4மாறாக அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்; வேதனை, இடர், நெருக்கடி ஆகியவற்றை மிகுந்த மன உறுதியோடு தாங்கி வருகிறோம். 5நாங்கள் அடிக்கப்பட்டோம்; சிறையில் அடைக்கப்பட்டோம்; குழப்பங்களில் சிக்கினோம்; பாடுபட்டு உழைத்தோம்; கண்விழித்திருந்தோம்; பட்டினி கிடந்தோம்;✠ 6தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேட மற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம்;✠ 7உண்மையையே பேசி வருகிறோம்; கடவுளின் வல்லமையைப் பெற்றிருக்கிறோம். நேர்மையே எங்கள் படைக்கலம். அதை வலக்கையிலும் இடக்கையிலும் நாங்கள் தாங்கியுள்ளோம்.✠ 8போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை. ஏமாற்றுவோர் என அவர்களுக்குத் தோன்றினாலும் நாங்கள் உண்மையான பணியாளர்கள். 9அறிமுகமில்லாதோர் எனத் தோன்றினாலும் எல்லாரும் எங்களை அறிவர். செத்துக் கொண்டிருப்பவர்கள் எனத் தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். கொடுமையாகத் தண்டிக்கப்பட்டோர் எனத் தோன்றினாலும் நாங்கள் கொல்லப்படவில்லை. 10துயருற்றோர் எனத் தோன்றினாலும் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏழையர் எனத் தோன்றினாலும் நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம். எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம்.✠


11கொரிந்தயரே, நாங்கள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுகிறோம். எங்கள் இதயத்தில் ஒளிவு மறைவு என்பதே இல்லை. 12நீங்கள் உங்கள் இதயக் கதவை அடைத்து வைத்திருக்கிறீர்கள்; எங்கள் இதயக்கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது.13பிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல் சொல்லுகிறேன்; எங்களைப் போலவே நீங்களும் உங்கள் இதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள்.


4. தூய வாழ்விற்கான அழைப்பு


14நம்பிக்கை கொண்டிராதவரோடு உங்களைப் பிணைத்துக் கொள்ள வேண்டாம். இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு, நெறிகேட்டோடு என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு?✠ 15கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும்⁕ என்ன உடன்பாடு? நம்பிக்கை கொண்டோர்க்கு நம்பிக்கை கொண்டிராதவரோடு என்ன தொடர்பு? 16கடவுளின் கோவிலுக்கும் சிலைவழிபாட்டுக் கோவிலுக்கும் என்ன இணக்கம்? வாழும் கடவுளின் கோவில் நாமே. “என் உறைவிடத்தை அவர்கள் நடுவில் நிறுவுவேன். அவர்கள் நடுவே நான் உலவுவேன். நானே அவர்கள் கடவுள்! அவர்கள் என் மக்கள்!” என்று கடவுளே சொல்லியிருக்கிறார் அன்றோ! 17எனவே, “அவர்கள் நடுவிலிருந்து வெளியேறுங்கள்; அவர்களை விட்டுப் பிரிந்து செல்லுங்கள்” என்கிறார் ஆண்டவர். “தீட்டானதைத் தொடாதீர்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன். 18மேலும், நான் உங்களுக்குத் தந்தையாயிருப்பேன்; நீங்கள் எனக்குப் புதல்வரும் புதல்வியருமாயிருப்பீர்கள்” என்கிறார் எல்லாம் வல்ல ஆண்டவர்.


6:2 எசா 49:8. 6:5 திப 16:23. 6:6 கலா 5:22. 6:7 எபே 6:11. 6:10 2 கொரி 4:11. 6:14 இச 22:10.


6:15 மூலபாடத்தில் ‘போலியார்’ என்றுள்ளது.போலியார் என்பது யூதமக்கள் சாத்தானுக்கு கொடுத்த பெயர்களுள் ஒன்று.


அதிகாரம் 7

1அன்பார்ந்தவர்களே, இத்தகைய வாக்குறுதிகளைப் பெற்றுள்ள நாம் உடலிலும் உள்ளத்திலும் மாசு எதுவுமின்றி நம்மையே தூய்மைப்படுத்துவோம். கடவுளுக்கு அஞ்சித் தூயவாழ்வில் நிறைவடைவோம்.


5. பவுலின் ஆறுதலும் மகிழ்ச்சியும்


2உங்கள் இதயத்தில் எங்களுக்கோர் இடம் வேண்டும். நாங்கள் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை; யாரையும் வஞ்சிக்கவில்லை. 3நீங்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிப்பதற்காக நான் இவ்வாறு கூறவில்லை; நான் ஏற்கெனவே கூறியவாறு நீங்கள் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கிறீர்கள். நாம் செத்தால் ஒன்றாய்ச் சாவோம்; வாழ்ந்தால் ஒன்றாய் வாழ்வோம். 4உங்கள் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. உங்களைக் குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன். எல்லா இன்னல்களுக்கு இடையேயும் என் உள்ளத்தில் ஆறுதல் நிறைந்திருக்கிறது. மகிழ்ச்சி பொங்கிவழிகிறது.


5மாசிதோனியாவிற்கு வந்து சேர்ந்தபோது எங்களிடம் மன அமைதியே இல்லை. வெளியே போராட்டம், உள்ளே அச்சம்; இவ்வாறு எல்லா வகையிலும் துன்புற்றோம்.✠ 6தாழ்ந்தோருக்கு ஆறுதல் அளிக்கும் கடவுள் தீத்துவின் வரவால் எங்களுக்கும் ஆறுதல் அளித்தார். 7அவரது வருகையால் மட்டும் அல்ல; நீங்கள் தீத்துவுக்கு அளித்த ஆறுதலாலும் நாங்கள் ஆறுதல் அடைந்தோம். எங்களைக் காண நீங்கள் கொண்டிருந்த ஏக்கத்தையும் நீங்கள் அடைந்த துயரத்தையும் நீங்கள் என்னிடம் காட்டிய ஆர்வத்தையும் பற்றி அவர் எங்களிடம் சொன்னபோது நாங்கள் மிகுதியான மகிழ்ச்சி அடைந்தோம்.


8நான் எழுதிய திருமுகம் உங்களை மனவருத்தப்படுத்தியது என்பதை அறிந்தபோது அதுபற்றி நான் வருந்தவில்லை. அத்திருமுகம் உங்களைச் சிறிது காலத்துக்கு மனவருத்தப்படுத்தியது என்பது உண்மைதான். முதலில் அதுபற்றி நான் வருத்தப்பட்டாலும், 9இப்போது எனக்கு மகிழ்ச்சிதான். நீங்கள் மனவருத்தம் அடைந்தீர்கள் என்பதற்காக அல்ல, மாறாக உங்கள் மனவருத்தம் மனம்மாறச் செய்தது என்பதற்காகவே மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் கடவுளுக்கு ஏற்புடைய முறையில் அந்த மனவருத்தத்தைத் தாங்கிக் கொண்டீர்கள். ஆகவே, நாங்கள் உங்களுக்கு எந்த இழப்பையும் வருவிக்கவில்லை. 10கடவுளுக்கு ஏற்புடைய முறையில் தாங்கிக் கொள்ளப்படும் மனவருத்தம் மீட்பு தரும் மனம்மாற்றத்தை விளைவிக்கிறது. இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், உலகப் போக்கிலான மனவருத்தம் சாவை விளைவிக்கும். 11கடவுளுக்கு ஏற்புடையமுறையில் நீங்கள் தாங்கிக் கொண்ட மனவருத்தம் உங்களுக்கு எத்துணை ஊக்கத்தை அளித்தது பார்த்தீர்களா? அதுமட்டுமா? நேர்மையைக் காட்ட உங்களுக்கு எத்துணை ஆவல்! எத்துணை உள்ளக் கொதிப்பு! என் மீது எத்துணை அச்சம்! என்னைக் காண எத்துணை ஏக்கம்! எத்துணை ஆர்வம்! எனக்கு மனவருத்தம் அளித்தவனிடம் எத்துணைக் கண்டிப்பு! இவ்வாறு உங்கள் செயல்கள் அனைத்திலும் நீங்கள் நேர்மையாளர்கள் எனக்காட்டிக் கொண்டீர்கள்.


12ஆக, தீங்கிழைத்தவரை முன்னிட்டோ, தீங்குக்கு உள்ளானவரை முன்னிட்டோ நான் அத்திருமுகத்தை எழுதவில்லை; மாறாகக் கடவுள் திருமுன் நீங்கள் எங்கள் மேல் கொண்டுள்ள ஆர்வம் வெளிப்படுமாறே அதை உங்களுக்கு எழுதினேன். 13aஅதனால் நாங்கள் ஆறுதல் அடைந்தோம்.


13bநாங்கள் ஆறுதல் அடைந்தது மட்டுமல்ல, தீத்துவின் மகிழ்ச்சியைக் கண்டபோது மேலும் மிகுதியாக மகிழ்ச்சி அடைந்தோம். ஏனெனில், நீங்கள் அவருக்குப் புத்தெழுச்சி ஊட்டினீர்கள். 14நான் உங்களைக் குறித்துத் தீத்துவிடம் பெருமையாய்ப் பேசியது பற்றி வெட்கமடையவில்லை. நாங்கள் உங்களிடம் பேசியதெல்லாம் உண்மையாய் இருப்பதுபோல நாங்கள் தீத்துவிடம் உங்களைக் குறித்துப் பெருமையாய்ப் பேசியதும் உண்மையெனத் தெளிவாயிற்று. 15நீங்கள் அனைவரும் அவருக்குக் கீழ்படிந்து அவரை அச்சத்தோடும் நடுக்கத்தோடும் ஏற்றுக் கொண்ட முறையை அவர் நினைவு கூரும்போது அவரது உள்ளம் உங்களுக்காக மிகுதியாய் உருகுகிறது. 16உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு. அதனால் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


7:5 2 கொரி 2:13. 7:8-9 எபி 12:11.


அதிகாரம் 8

6. யூதேயாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு நன்கொடை திரட்டுதல்


1சகோதர சகோதரிகளே, மாசிதோனியத் திருச்சபைகளுக்குக் கடவுள் கொடுத்த அருளைப்பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம். 2அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களால் கடுமையாகச் சோதிக்கப்பட்ட போதும் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாய் இருந்தார்கள். அவர்கள் வறுமையில் மூழ்கி இருந்தாலும் வள்ளன்மையோடு வாரி வழங்கினார்கள். 3அவர்கள் தங்களால் இயன்ற அளவுக்குத் தாங்களாகவே கொடுத்தார்கள். ஏன், அளவுக்கு மீறியே கொடுத்தார்கள். இதற்கு நானே சாட்சி. 4இறைமக்களுக்குச் செய்யும் அறப்பணியில் பங்குபெறும் பேறு தங்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். 5நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக அவர்கள் தங்களை முதன்மையாக ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்கள்; நாங்கள் கடவுளின் திருவுளப்படி செயல்படுவதால், எங்களுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள். 6எனவே, இந்த அறப்பணியைத் தொடங்கிய தீத்துவே அப்பணியை முடிக்க வேண்டும் என நாங்கள் அவரை வேண்டிக் கொண்டோம். 7நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபட வேண்டும்.


8நான் இதை உங்களுக்கு ஒரு கட்டளையாகச் சொல்லவில்லை. மாறாக, பிறருடைய ஆர்வத்தை எடுத்துக் காட்டி உங்கள் அன்பு உண்மையானதா எனச் சோதிக்கவே இவ்வாறு செய்கிறேன். 9நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். 10இவ்வறப்பணியைப் பொறுத்தவரை என் கருத்து இதுவே; இது உங்களுக்குப் பயனளிக்கும். கடந்த ஆண்டிலிருந்தே நீங்கள் இப்பணியைச் செய்து வருகிறீர்கள்; அது மட்டுமல்ல; இதனை விருப்பத்தோடு தொடங்கியவர்களும் நீங்களே. 11அப்பணியை இப்போதே செய்து முடியுங்கள். ஆர்வத்தோடு தொடங்கியது போலவே உங்கள் நிலைக்கு ஏற்றவாறு கொடுத்து, ஆர்வத்தோடு அதனைச் செய்து முடியுங்கள். 12ஆர்வத்தோடு கொடுத்தால், தம் நிலைக்கேற்றவாறு எவ்வளவு கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். தம்மிடம் இருப்பதற்குக் கூடுதலாக யாரும் கொடுக்க வேண்டியதில்லை.


13மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, எல்லாரும் சமநிலையில் இருக்க வேண்டும் என்றே சொல்கிறோம். 14இப்பொழுது உங்களிடம் மிகுதியாயிருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும் போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும்.


15“மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை; குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை”✠ என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!


தீத்துவும் அவருடைய உடன் உழைப்பாளர்களும்


16எங்களுக்கு உங்கள் பேரில் உள்ள அதே ஆர்வத்தைத் தீத்துவின் உள்ளத்திலும் தூண்டியெழுப்பிய கடவுளுக்கு நன்றி உரித்தாகுக! 17நாங்கள் விடுத்த வேண்டுகோளை முன்னிட்டு மட்டும் அல்ல, அவரே மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதால் அவராக உங்களிடம் புறப்பட்டு வருகிறார். 18அவரோடு மற்றொரு சகோதரரையும் அனுப்புகிறோம். அவர் நற்செய்தி அறிவித்து எல்லாத் திருச்சபைகளிலும் புகழ்பெற்று விளங்குபவர். 19அது மட்டும் அல்ல, நாங்கள் செய்யும் அறப்பணிப் பயணத்தில் வழித்துணைவராகத் திருச்சபையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் அவரே. ஆண்டவரின் மாட்சி இலங்கவும் எங்கள் ஆர்வம் விளங்கவுமே நாங்கள் இவ்வறப் பணியை மேற்கொண்டுள்ளோம்.


20இந்தப் பெருந்தொகையைக் கையாளும் முறைபற்றி எங்கள் மீது எவரும் குறை கூறாவண்ணம் கவனமாயிருக்கிறோம்.21ஆண்டவர் முன்னிலையில் மட்டுமல்ல, மனிதர் முன்னிலையிலும் கண்ணியத்தைக் கடைப்பிடிப்பதே எங்கள் நோக்கம்.✠ 22அவர்களோடு வேறொரு சகோதரதையும் அனுப்பி வைக்கிறோம். இவரது ஆர்வத்தைப் பலவற்றில் பலவேளைகளில் நாங்கள் சோதித்து அறிந்திருக்கிறோம். அவர் உங்களிடம் உறுதியான நம்பிக்கை மிகக் கொண்டிருப்பதால் இன்னும் மிகுதியாக ஆர்வம் காட்டுகிறார். 23தீத்துவைப் பற்றிக் கூற வேண்டுமென்றால் அவர் என் பணியில் பங்காளியும் உடன் உழைப்பாளரும் ஆவார். மற்ற சகோதரர்கள் திருச்சபைகளால் அனுப்பப்பட்ட தூதர்கள். கிறிஸ்துவைப் போற்றிப் புகழும் முறையில் வாழ்பவர்கள். 24ஆகவே, அவர்களுக்கு உங்கள் அன்பைக் காட்டி, நாங்கள் உங்களைக் குறித்து அவர்களிடம் பெருமையாய்ப் பேசியது சரியே என்று எல்லாத் திருச்சபைகளுக்கும் எடுத்துக் காட்டுங்கள்.


8:1-4 உரோ 15:26. 8:15 விப 16:18. 8:21 உரோ 12:17.


அதிகாரம் 9

இறைமக்களுக்குச் செய்யும் அறப்பணி


1இறைமக்களுக்குச் செய்யும் அறப்பணியைக் குறித்து உங்களுக்கு நான் தொடர்ந்து எழுதத் தேவையில்லை. 2உங்களுக்கு உள்ள ஆர்வம் எனக்குத் தெரிந்ததே. அதைக் குறித்து மாசிதோனிய மக்களிடம் பெருமையோடு பேசியிருக்கிறேன். அக்காயா மாநில மக்கள் கடந்த ஆண்டிலிருந்தே அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள் எனவும் சொல்லியிருக்கிறேன். இந்த உங்கள் ஆர்வம் பலரைத் தூண்டிவிட்டிருக்கிறது. 3எனவே, இந்த அறப்பணியைப் பொறுத்த வரையில் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசியது பொருளற்ற பேச்சல்ல என்பதைத் தெளிவுபடுத்தவும் நான் சொன்னதற்கேற்ப நீங்கள் பொருளுதவி செய்யத் தக்க ஏற்பாட்டுடன் இருக்கவுமே இந்த மூன்று சகோதரர்களையும் அனுப்புகிறேன். 4என்னோடு வரும் மாசிதோனியர் நீங்கள் பொருளுதவிக்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று கண்டால் நாங்கள் வெட்கமுற வேண்டியிருக்கும்; நீங்களும் வெட்கமுற வேண்டியிருக்கும் எனச் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் மீது நான் அத்துணைத் திடநம்பிக்கை கொண்டிருக்கிறேன் அல்லவா! 5இந்தச் சகோதரர்கள் எனக்கு முன்னால் உங்களிடம் வந்து நீங்கள் வாக்களித்த நன்கொடையைத் திரட்டி வைக்க முன்னேற்பாடு செய்தால் நான் அங்கு வரும்போது அது தயார் நிலையில் இருக்கும். அது கட்டாயப்படுத்தித் திரட்டப்பட்டதாக அன்றி, நீங்களாகக் கொடுத்த நன்கொடையாகவும் இருக்கும்.


6குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள்.✠ 7ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்கவேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். 8கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானதெல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார்.


9“ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்”✠ என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! 10விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச் செய்து அறச் செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார்.✠ 11நீங்கள் எல்லா வகையிலும் செல்வர்களாகி வள்ளன்மை மிகுந்தவர்களாய் விளங்குவீர்கள். இவ்வாறு எங்கள் பணிவழியாய்ப் பலர் கடவுளுக்கு நன்றி செலுத்துவர். 12நீங்கள் திருத்தொண்டாக ஏற்றுக்கொண்ட இப்பணி இறைமக்களின் தேவையை நிறைவு செய்வது மட்டுமன்றிப் பலர் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியின் நிறைவாக அமையும். 13இவ்வாறு, நீங்கள் ஏற்று அறிக்கையிடும் கிறிஸ்துவின் நற்செய்திக்கு நீங்கள் காட்டும் கீழ்ப்படிதல் புலப்படும்; அவர்களுக்கும் மற்றெல்லாருக்கும் நீங்கள் செய்த உங்கள் பொருளுதவியால் உங்கள் வள்ளன்மை வெளிப்படும். இவ்வாறு, அவர்கள் இந்த அறப்பணியின் விளைவாகக் கடவுளைப் போற்றிப் புகழ்வார்கள். 14கடவுள் உங்கள் மீது அளவற்ற அருள் பொழிந்துள்ளதால் அவர்கள் உங்களோடு நெருங்கிய ஈடுபாடு கொண்டு உங்களுக்காக இறைவனிடம் வேண்டுவர். 15கடவுளின் சொல்லொண்ணாக் கொடைக்காக அவருக்கே நன்றி உரித்தாகுக!


9:6 நீமொ 11:24,25. 9:9 திபா 112:9. 9:10 எசா 55:10.


அதிகாரம் 10

7. பணிபற்றிய குற்றச்சாட்டுக்கு மறுமொழி


1உங்களை நேரில் காணும்போது தாழ்ந்து போகிறேன்; ஆனால், தொலையில் இருக்கும் போது துணிவுடன் செயல்படுகிறேன் என்றா நினைக்கிறீர்கள்? கிறிஸ்துவின் பணிவோடும் கனிவோடும் பவுலாகிய நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது: 2நான் உங்களோடு இருக்கும்போது என் துணிச்சலைக் காட்டத் தேவையில்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்; என் துணிச்சலைக் காட்டமுடியும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. நாங்கள் உலகப் போக்கில் நடப்பதாகக் கருதும் சிலரிடம் அந்தத் துணிச்சலைக் காட்ட உறுதி கொண்டுள்ளேன். 3நாங்கள் உலகில் தான் வாழ்கிறோம்; எனினும் எங்கள் போராட்டம் உலகைச் சார்ந்தது அல்ல. 4எங்கள் போராட்டத்தில் நாங்கள் பயன்படுத்தும் கருவிகள் உலகு சார்ந்தவை அல்ல; மாறாக அவை கடவுளின் வல்லமையால் அரண்களைத் தகர்த்தெறியக் கூடியவை. அவற்றைக் கொண்டு குதர்க்க வாதங்களையும், 5கடவுளைப்பற்றிய அறிவுக்கு எதிராகத் தலைதூக்கும் அனைத்து மேட்டிமையையும் தகர்த்தெறிகிறோம். மனித எண்ணங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் வருமாறு கட்டாயப்படுத்துகிறோம். 6நீங்கள் முழுமையாகக் கீழ்ப்படிந்த பிறகு கீழ்ப்படியாதவர்கள் யாவருக்கும் தக்க தண்டனை கொடுக்க நாங்கள் தயாராயிருக்கிறோம்.


7கண்திறந்து பாருங்கள். தாம் கிறிஸ்துவுக்குச் சொந்தம் என உரிமை கொண்டாடும் எவரும் சற்று சிந்தித்துப் பார்க்கட்டும். அவர் கிறிஸ்துவுக்குச் சொந்தமாயிருப்பது போன்று நாங்களும் கிறிஸ்துவுக்குச் சொந்தமே. 8எங்களுடைய அதிகாரத்தை உங்கள் அழிவுக்காக அல்ல, உங்கள் வளர்ச்சிக்காகவே ஆண்டவர் தந்திருக்கிறார். அவ்வதிகாரத்தைப் பற்றி நான் சற்று அதிகமாகவே பெருமை பாராட்டினாலும் அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. 9திருமுகத்தின் வாயிலாக மட்டும் உங்களை அச்சுறுத்துகிறேன் என நான் நினைக்கவில்லை. 10“அவருடைய திருமுகங்கள் கடுமையானவை, ஆற்றல்மிக்கவை. ஆனால், அவர் நேரில் வந்தால் பார்க்கச் சகிக்காது; பேச்சும் எடுபடாது” என்கிறார்கள். 11அப்படிச் சொல்பவர்கள், எங்கள் திருமுகங்களில் நாங்கள் வெளிப்படுவது போலவே நேரில் வரும்போதும் செயல்படுவோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


12சிலர் தங்களுக்குத் தாங்களே நற்சான்று கொடுக்கின்றனர். அவர்களோடு எங்களைச் சேர்த்துக் கொள்ளவோ ஒப்பிடவோ நாங்கள் துணியவில்லை. அவர்கள் தங்களையே அளவு கோலாகக் கொண்டு தங்களை அளவிட்டுக் கொள்கிறார்கள். தங்களைத் தங்களோடே ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். இது அறிவீனம் அல்லவா!✠ 13ஆனால், நாங்கள் அளவுமீறிப் பெருமை கொள்வதில்லை; அதற்கென்று எங்களுக்கு ஓர் எல்லை இருக்கிறது. அது கடவுளே வரையறுத்த எல்லை. அந்த எல்லைக்கு உட்பட்டே உங்கள் நகர் வரை வந்தோம். 14உங்கள் நகர் வரை நாங்கள் வராமல் இருந்திருந்தால் அளவுமீறிப் பெருமை கொண்டவர்கள் ஆவோம். ஆனால், கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க உங்கள் நகருக்கு முதன்முதல் வந்தவர்கள் நாங்களே. 15மற்றவர்களின் உழைப்பைக் காட்டி நாங்கள் பெருமை பாராட்டினால் அது அளவு மீறிச் செயல்படுவதாகும். நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை வளரவளர உங்களிடையே நாங்கள் ஆற்றும் பணி விரிவடையும்; கடவுள் வரையறுத்துக்கொடுத்த எல்லைக்குள்ளேயே இருப்போம் என்றே நாங்கள் எதிர்நோக்குகிறோம். 16இவ்வாறு, உங்கள் எல்லைக்கு அப்பால் வாழ்வோரிடமும் நாங்கள் நற்செய்தியை அறிவிக்க முடியும். அப்போது மற்றவர்களுக்குக் குறிக்கப்பட்ட எல்லையை மீறிச் செயல்பட்டு அவர்கள் செய்த வேலையைக் குறித்து நாங்கள் பெருமை பாராட்டவும் இடம் இராது.


17“பெருமைபாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.”✠


18தமக்குத் தாமே நற்சான்று கொடுப்போர் அல்ல, மாறாக ஆண்டவரின் நற்சான்று பெற்றவரே ஏற்புடையவர் ஆவர்.


10:12 நீமொ 27:2. 10:17 எரே 9:24.


அதிகாரம் 11

பவுலும் போலித் திருத்தூதர்களும்


1என் அறிவீனத்தை நீங்கள் சற்றுப் பொறுத்துக் கொள்ள வேண்டும்; ஆம் சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள். 2உங்கள் மீது கடவுள் கொண்டுள்ள அதே அன்பார்வத்தை நானும் கொண்டுள்ளேன். கிறிஸ்து என்னும் ஒரே மணமகனுக்கும் உங்களுக்குமிடையே மண ஒப்பந்தம் செய்துள்ளேன். அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியாக நிறுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.✠ 3ஆனால், ஏவா பாம்பின் சூழ்ச்சியினால் ஏமாற்றப்பட்டதைப் போல நீங்களும் உங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டுக் கிறிஸ்துவிடம் விளங்கிய நேர்மையையும் தூய்மையையும் இழந்து விடுவீர்களோ என அஞ்சுகிறேன்.✠ 4உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள்.✠


5இப்படிப்பட்ட ‘மாபெரும்’ திருத்தூதரை விட நான் எதிலும் குறைந்தவன் அல்லேன் என்றே கருதுகிறேன். 6நான் நாவன்மையற்று இருக்கலாம்; ஆனால், அறிவு அற்றவன் அல்ல; இதை எப்போதும் எல்லா வகையிலும் உங்களுக்குத் தெளிவுபடுத்தியே இருக்கிறோம்.


7ஊதியம் எதுவும் எதிர்பார்க்காமல் நான் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தேன். நீங்கள் உயர்வுபெற நான் தாழ்வுற்றேன். இதுதான் நான் செய்த பாவமா? 8நான் உங்களிடையே பணிபுரிந்தபோது என் செலவுக்கு வேண்டியதை மற்றத் திருச்சபைகளிடமிருந்து பெற்றுக் கொண்டேன். உங்களுக்காக அவர்களைக் கொள்ளையிட்டேன் என்றே சொல்லலாம். 9நான் உங்களோடு இருந்தபோது எனக்குப் பற்றாக்குறை இல்லாமல் இல்லை. எனினும், நான் உங்களில் எவருக்கும் சுமையாய் இருந்ததில்லை. மாசிதோனியாவிலிருந்து வந்த அன்பர்கள் என் பற்றாக்குறையைப் போக்கினார்கள். நான் எதிலும் உங்களுக்குச் சுமையாய் இருந்ததில்லை; இனி இருக்கவும் மாட்டேன். 10கிறிஸ்துவின் உண்மையே என்னுள்ளும் இருப்பதால் நான் பெருமைப்படுவதை அக்காயா பகுதியிலுள்ள யாரும் தடுக்க முடியாது. 11ஏன் இப்படிச் சொல்கிறேன்? உங்களிடம் எனக்கு அன்பே இல்லை என்பதாலா? நான் உங்கள் மீது அன்புகொண்டவன் என்பது கடவுளுக்குத் தெரியும்.


12எங்களைப் போன்று பணியாற்றுவதாகக் காட்டித் தம் பணியில் பெருமையடைய சிலர் வாய்ப்புத் தேடுகின்றனர். அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்காதிருக்க நான் இப்போது செய்து வருவதையே தொடர்ந்து செய்வேன். 13ஏனெனில், இத்தகையோர் போலித் திருத்தூதர்; வஞ்சக வேலையாள்கள்; கிறிஸ்துவின் திருத்தூதராக நடிப்பவர்கள்.✠ 14இதில் வியப்பு என்ன? சாத்தான் கூட ஒளியைச் சார்ந்த தூதனாக நடிக்கிறானே? 15ஆகவே, அவனுடைய தொண்டர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக நடிப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அவர்களது முடிவு அவர்களுடைய செயலுக்கு ஏற்பவே அமையும்.


பவுலின் துன்பங்கள்


16நான் மீண்டும் சொல்கிறேன். நான் ஒரு அறிவிலி என எவரும் எண்ண வேண்டாம். அவ்வாறு எண்ணினால், என்னை அறிவிலியாகவே வைத்துக் கொள்ளுங்கள்; அப்படியானால் நானும் சற்றுப் பெருமையடித்துக்கொள்ளலாமே! 17நான் இவ்வாறு பெருமையாய்ப் பேசுவது ஆண்டவரின் தூண்டுதலால் அல்ல; மாறாக நான் ஓர் அறிவிலியாய் இருப்பதால் தான். 18பலர் உலகு சார்ந்த முறையில் பெருமையடித்துக் கொள்வதால் நானும் அவ்வாறே செய்கிறேன். 19நீங்கள் அறிவுக்கூர்மையுள்ளவர்கள் அல்லவா? அறிவிலிகளை மனமுவந்து பொறுத்துக் கொள்பவர்கள் ஆயிற்றே! 20யாராவது உங்களை அடிமைப்படுத்தினாலும் சுரண்டினாலும் உங்களுக்குக் கண்ணி வைத்தாலும் உங்களிடம் இறுமாப்போடு நடந்து கொண்டாலும் உங்களைக் கன்னத்தில் அறைந்தாலும் நீங்கள் பொறுத்துக் கொள்கிறீர்கள்! 21இப்படியெல்லாம் செய்ய நாங்கள் வலுவற்றவர்களே! இது அவமானத்திற்குரிய ஒன்றுதான்! அவர்கள் எதில் பெருமை பாராட்டத் துணிகிறார்களோ அதில் நானும் பெருமைப்பாராட்டத் துணிந்து நிற்கிறேன். இப்போதும் ஓர் அறிவிலியைப் போன்றே பேசுகிறேன். 22அவர்கள் எபிரேயரா? நானும் தான்; அவர்கள் இஸ்ரயேலரா? நானும் தான்; அவர்கள் ஆபிரகாமின் வழிமரபினரா? நானும் தான். 23அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களா? நான் அவர்களைவிடச் சிறந்த பணியாளனே. இங்கும் நான் ஒரு மதியீனனாகவே பேசுகிறேன். நான் அவர்களை விட அதிகமாய்ப் பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன்.✠ 24ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள்.✠ 25மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்; ஒருமுறை கல்லெறிபட்டேன்; மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன்.✠ 26பயணங்கள் பல செய்தேன்; அவற்றில், ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். 27பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண்விழித்தேன்; பசிதாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன். 28இவை தவிர எல்லாத் திருச்சபைகளையும் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது. 29யாராவது வலுவற்றிருந்தால் நானும் அவரைப்போல் ஆவதில்லையா? யாராவது பாவத்தில் விழ நேர்ந்தால் என் உள்ளம் கொதிப்பதில்லையா?✠


30நான் பெருமைபாராட்ட வேண்டுமென்றால் என் வலுவின்மையைப் பற்றியேதான் நான் பெருமை பாராட்ட வேண்டும். 31நான் சொல்வது பொய் அல்ல. இதை ஆண்டவர் இயேசுவின் தந்தையாம் கடவுளே அறிவார். அவர் என்றென்றும் போற்றப்பெறுக! 32நான் தமஸ்கு நகரில் இருந்தபோது அரசர் அரேத்தாவின் கீழிருந்த ஆளுநர் என்னைப் பிடிக்க நகர வாயிலில் காவல் வைத்தார். 33ஆனால், நான் நகர மதிலில் இருந்த பலகணி வழியாகக் கூடையில் வைத்து இறக்கப்பட்டு அவர் கைக்குக் தப்பினேன்.


11:2 எபே 5:27. 11:3 தொநூ 3:1-5,13. 11:4 கலா 1:6-9. 11:13 திவெ 2:2. 11:23 திப 16:23. 11:24 இச 25:3. 11:25 திப 16:22. 11:29 1 கொரி 9:22. 11:32-33 திப 9:24,25.


அதிகாரம் 12

காட்சிகளும் வெளிப்பாடுகளும்


1பெருமை பாராட்டுதல் பயனற்றதே. ஆயினும் பெருமை பாராட்ட வேண்டி இருப்பதால் ஆண்டவர் அருளிய காட்சிகளையும் வெளிப்பாடுகளையும் குறித்துப் பேசப் போகிறேன். 2கிறிஸ்துவின் அடியான் ஒருவனை எனக்குத் தெரியும். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை மூன்றாம் வானம் வரை எடுத்துச் செல்லப்பட்டான். அவன் உடலோடு அங்குச் சென்றானா, உடலின்றி அங்குச் சென்றானா, யானறியேன். கடவுளே அதை அறிவார். 3-4ஆனால், அம்மனிதன் பேரின்ப வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டான் என்பது எனக்குத் தெரியும். நான் மீண்டும் சொல்கிறேன்; அவன் உடலோடு அங்குச் சென்றானா அல்லது உடலின்றி அங்குச் சென்றானா யானறியேன். கடவுளே அதை அறிவார். அவன் அங்கே மனிதரால் உச்சரிக்கவும் சொல்லவும் முடியாத வார்த்தைகளைச் சொல்லக் கேட்டான். 5இந்த ஆளைப் பற்றியே நான் பெருமை பாராட்டுவேன். என் வலுவின்மையே எனக்குப் பெருமை. 6அப்படி நான் பெருமை பாராட்ட விரும்பினாலும் அது அறிவீனமாய் இராது. நான் பேசுவது உண்மையாகவே இருக்கும். ஆயினும் என்னிடம் காண்பதையும் கேட்பதையும் விட உயர்வாக யாரும் என்னைக் கருதாதபடி நான் பெருமை பாராட்டாது விடுகிறேன்.


7எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள் போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப் போல் இருக்கிறது. நான் இறுமாப்படையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது. 8அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். 9ஆனால், அவர் என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார். ஆதலால், நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும்.✠ 10ஆகவே, என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில், நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.


கொரிந்துத் திருச்சபையின் மீது அக்கறை


11நான் ஓர் அறிவிலிபோல் பேசிவிட்டேன். என்னைப் பாராட்டி இருக்க வேண்டிய நீங்களே என்னை அப்படிப் பேசவைத்து விட்டீர்கள். நான் ஒன்றுமில்லை. எனினும், அந்த மாபெரும் திருத்தூதர்களை விட எதிலும் குறைந்தவனல்ல. 12உங்களிடையே நான் கொண்டிருந்த மனஉறுதி, நான் செய்த அரும் அடையாளங்கள், அருஞ்செயல்கள், வல்லசெயல்கள் ஆகியவையே ஒரு திருத்தூதருக்குரிய அறிகுறிகள். 13எந்த முறையில் மற்றத் திருச்சபைகளை விட உங்களைத் தாழ்வாய் நடத்தினேன்? உங்களுக்குச் சுமையாய் இராதது ஒரு குற்றமா? அப்படியானால் அக்குற்றத்தை மன்னித்துக் கொள்ளுங்கள்.


14இதோடு மூன்றாவது முறையாக நான் உங்களிடம் வரத் தயாராக இருக்கிறேன். ஆனால், உங்களுக்குச் சுமையாய் இருக்கமாட்டேன். உங்களுடைய உடைமைகளை அல்ல, உங்களையே நாடி வருகிறேன். பெற்றோருக்குப் பிள்ளைகள் செல்வம் சேமித்து வைக்க வேண்டியதில்லை. மாறாக, பெற்றோரே பிள்ளைகளுக்காகச் சேமிக்க வேண்டும். 15நான் உங்களுக்காக எனக்குள்ளவற்றையும், ஏன் என்னையுமே மனமுவந்து அளித்திடுவேன். உங்கள் மீது நான் இத்துணை அன்பு கொண்டிருக்க நீங்கள் என்மீது கொண்டுள்ள அன்பு குறையலாமா? 16நான் உங்களுக்குச் சுமையாய் இல்லாதது குற்றமாகவே இருக்கட்டும். ஆனால், நான் உங்களைக் சூழ்ச்சியாய் வஞ்சித்தேன் என நினைக்கிறீர்களா? 17நான் உங்களிடம் அனுப்பியவர் எவர் மூலமாவது ஆதாயம் தேடினேனா? 18உங்களிடம் வருமாறு தீத்துவைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்; மற்றொரு சகோதரரையும் அவரோடு அனுப்பிவைத்தேன். தீத்து உங்களிடம் ஆதாயம் தேடினாரா? நாங்கள் ஒரே மனப்பாங்கோடு செயல்படவில்லையா? ஒரே வழிமுறையைப் பின்பற்றவில்லையா?


19நாங்கள் குற்றமற்றவர்கள் என உங்கள் முன் காட்டுவதாக இதுவரை எண்ணியிருப்பீர்கள். அன்பார்ந்தவர்களே, கடவுளின் திருமுன் கிறிஸ்து வழியாய் உங்களுக்குச் சொல்கிறேன்; நான் செய்வதெல்லாம் உங்கள் வளர்ச்சிக்காகவே. 20எனக்கு ஓர் அச்சம்! நான் அங்கே வரும்போது நான் காணவிரும்பும் நிலையில் நீங்கள் இருப்பீர்களோ என்னவோ! ஒருவேளை நீங்கள் காண விரும்பாத நிலையில் நானும் இருக்கலாம். சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, அவதூறு பேசல், புறங்கூறல், இறுமாப்பு, குழப்பம் ஆகியவை உங்களிடம் இருக்கக் காண்பேனோ என்னவோ! 21நான் மீண்டும் உங்களிடம் வரும்போது என் கடவுள் உங்கள்முன் என்னைத் தலைகுனியச் செய்வாரோ என்னவோ! முன்பு பாவம் செய்தவர்களுள் பலர் தங்களுடைய ஒழுக்கக்கேடு, பரத்தைமை, காமவெறி ஆகியவற்றை விட்டு மனம் மாறாமல் இருப்பதைக் கண்டு துயருற்று அழவேண்டியிருக்குமோ என்னவோ!


12:9 எசா 40:29.


அதிகாரம் 13

இறுதி எச்சரிக்கையும் வாழ்த்தும்


1இதோடு மூன்றாம் முறையாக நான் உங்களிடம் வருகிறேன். இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே அனைத்துக் குற்றமும் உறுதி செய்யப்பட வேண்டும்.✠ 2முன்பு, பாவம் செய்தோரையும் மற்ற எல்லாரையும் கூட நான் ஏற்கெனவே எச்சரித்தது போலவே மீண்டும் எச்சரிக்கிறேன். இரண்டாம் முறை நான் உங்களிடம் வந்தபோது செய்தது போலவே இப்போதும் நான் இங்கிருந்தே எச்சரிக்கிறேன். நான் மீண்டும் அங்கு வரும்போது அவர்களை நான் எளிதாக விட்டுவிடப் போவதில்லை. 3கிறிஸ்து என் மூலமாகப் பேசுகிறார் என்பதை மெய்ப்பித்துக்காட்ட வேண்டும் என்கிறீர்கள் அல்லவா? கிறிஸ்து உங்களிடையே என்னைப் போல வலுவற்றவராக இல்லை; மாறாக அவர் வல்லமையோடு செயல்படுகிறார். 4ஏனென்றால், அவர் வலுவற்றவராய்ச் சிலுவையில் அறையப்பட்டார். ஆனால், கடவுளின் வல்லமையினால் அவர் உயிர் வாழ்கிறார். அவருடைய வலுவின்மையில் பங்கு பெறும் நாங்களும் உங்கள் பொருட்டு கடவுளின் வல்லமையால் அவரோடு வாழ்வோம்.


5நீங்கள் நம்பிக்கையில் நிலைத்திருக்கிறீர்களா என உங்களையே சோதித்துப் பாருங்கள். உங்கள் நடத்தையைச் சீர்தூக்கிப் பாருங்கள். இயேசு கிறிஸ்து உங்களுள் செயலாற்றுகிறார் என உணராமலா இருக்கிறீர்கள்? நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தீர்கள் என்றால் அதை உணர்வீர்கள். 6நாங்கள் எங்கள் தகுதியை மெய்ப்பித்துக் காட்டியுள்ளோம் என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன். 7நீங்கள் தீமை எதுவும் செய்யாதிருக்க உங்களுக்காக நாங்கள் கடவுளிடம் வேண்டுகிறோம். எங்கள் தகைமையை எடுத்துக்காட்ட நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் தகைமையற்றவர்களாகக் காணப்பட்டாலும் நீங்கள் நன்மையையே செய்யவேண்டும் என்பதே எங்கள் வேண்டல். 8ஏனெனில், உண்மைக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்ய இயலாது. உண்மையின் பொருட்டே அனைத்தையும் செய்கிறோம். 9நாங்கள் வலுவற்றவர்களாயிருப்பினும் நீங்கள் வல்லமையுடையவர்களாய் இருப்பது எங்களுக்கும் மகிழ்ச்சியே! நீங்கள் நிறைவடைய வேண்டும் என்றே நாங்கள் இறைவனிடம் வேண்டுகிறோம். 10நான் இங்கிருந்தே இதையெல்லாம் எழுதுகிறேன். ஏனெனில், நான் உங்களிடம் வரும்போது என் அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களிடம் கண்டிப்பாய் நடந்துகொள்ள விரும்பவில்லை. உங்கள் அழிவுக்காக அல்ல, உங்கள் வளர்ச்சிக்காகவே ஆண்டவர் இந்த அதிகாரத்தை எனக்கு அளித்துள்ளார்.


8. முடிவுரை


11சகோதர சகோதரிகளே, இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது; மகிழ்ச்சியாயிருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.


12தூயமுத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.


13ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!


13:1 இச 17:6; 19:15; மத் 18:16; 1 திமொ 5:19.


அதிகாரம் 2

எருசலேமில் திருத்தூதர்களின் கூட்டம்


1பதினான்கு ஆண்டுகளுக்குப்பின் தீத்துவையும் கூட்டிக்கொண்டு பர்னபாவுடன் நான் மீண்டும் எருசலேமுக்குப் போனேன்.✠ 2நான் போக வேண்டும் என்று வெளிப்படுத்தப்பட்டபடியால்தான் அங்குப் போனேன். பிற இனத்தார் நடுவில் நான் அறிவித்து வந்த நற்செய்தியைப் பற்றி அங்கே எடுத்துக் கூறினேன். செல்வாக்கு உள்ளவர்களிடம் தனிமையில் எடுத்துரைத்தேன். நான் இப்போது செய்யும் பணியும் இதுவரை செய்த பணியும் பயனற்றுப்போகக் கூடாதே என்பதற்காகத்தான் இவ்வாறு செய்தேன். 3என்னுடன் இருந்த தீத்து கிரேக்கராய் இருந்தும் விருத்தசேதனம் செய்து கொள்ளுமாறு அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. 4திருட்டுத்தனமாய் நுழைந்த போலிச் சகோதரர்கள் அங்கே இருந்ததால்தான் விருத்தசேதனத்தைப் பற்றிய பேச்சே எழுந்தது. கிறிஸ்து இயேசுவோடு ஒன்றித்து நாம் வாழும் விடுதலை வாழ்வைப் பற்றி உளவுபார்க்க வந்தவர்கள் அவர்கள். நம்மை மீண்டும் அடிமை நிலைக்குக் கொண்டு வருவதே அவர்களது நோக்கம். 5உங்கள் பொருட்டு, நற்செய்தியின் உண்மை என்றும் நிலைத்திருக்குமாறு, நாங்கள் ஒரு நாழிகையேனும் அவர்களுக்கு அடிபணியவில்லை.


6செல்வாக்கு உள்ளவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் கூட நான் கற்பிப்பதற்கு அதிகமாய் எதுவும் சொல்லவில்லை. இவர்கள் முன்பு எப்படிப் பட்டவர்களாய் இருந்தார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. கடவுள் ஆளைப் பார்த்தா செயல்படுகிறார்! 7ஆனால், யூதர்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போலவே, பிறஇனத்தாருக்கு அதை அறிவிக்கும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். 8ஆம், யூதர்களின் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலைப் பேதுருவுக்குத் தந்தவரே பிற இனத்தாருக்குத் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலை எனக்கும் தந்தார். 9அந்த அருள்பணி எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து திருச்சபையின் தூண்கள் எனக் கருதப்பட்ட யாக்கோபு, கேபா, யோவான் ஆகியோர் நட்புறவின் அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் கை கொடுத்தனர். யூதர்களுக்கு அவர்களும் யூதரல்லாதோர்க்கு நாங்களும் நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்று ஒத்துக்கொண்டோம். 10ஏழைகளுக்கு உதவிசெய்ய மறக்கவேண்டாம் என்று மட்டும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதைச் செய்வதில்தான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன்.


அந்தியோக்கியாவில் பவுல் பேதுருவைக் கடிந்துகொள்தல்


11ஆனால் கேபா அந்தியோக்கியாவுக்கு வந்தபோது அவர் நடந்து கொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன். 12அதாவது யாக்கோபின் ஆள்கள் சிலர் வருமுன் கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார்; ஆனால், அவர்கள் வந்தபின் அவர்களுக்கு அஞ்சி அவ்வாறு உண்பதை விட்டுவிட்டார். 13மற்ற யூதர்களும் இந்த வெளிவேடத்தில் அவரோடு சேர்ந்து கொண்டனர். இந்த வெளிவேடம் பர்னபாவைக் கூடக் கவர்ந்து விட்டது. 14இவ்வாறு அவர்கள் நற்செய்தியின் உண்மைக்கேற்ப நேர்மையாய் நடவாததைக் கண்ட நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், “நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிறஇனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க பிற இனத்தார் யூதமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?” என்று கேட்டேன்.


பவுல் அறிவிக்கும் நற்செய்தி


15பிறப்பால் நாம் யூதர்கள்; பாவிகள் எனப்படும் பிற இனத்தாரைச் சேர்ந்தவரல்ல. 16எனினும் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக்கிறோம். ஆதலால்தான் நாமும் சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, நம்பிக்கையால் இறைவனுக்கு எற்புடையவராகுமாறு கிறிஸ்து இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் எவருமே இறைவனுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை.✠ 17கிறிஸ்து வழியாக இறைவனுக்கு ஏற்புடையவராவதற்கு முயலும் நாமும் பாவிகளே என்றால் கிறிஸ்து பாவத்திற்குத் துணைபோகிறார் என்றாகுமே! இப்படி ஒருபோதும் இருக்க முடியாது.18நான் இடித்துத் தகர்த்ததை நானே மீண்டும் கட்டி எழுப்பினால் சட்டத்தை மீறினவன் என்பதற்கு நானே சான்று ஆவேன். 19திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் இறந்தவன் ஆனேன். அதற்கு அச்சட்டமே காரணம். நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.✠ 20எனவே, இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார். 21நான் கடவுளின் அருள் பயனற்றுப்போக விட மாட்டேன். ஏனெனில், சட்டம் சார்ந்த செயல்களால் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகக்கூடுமானால் கிறிஸ்து இறந்தது வீண் என்றாகுமே!


2:1 திப 11:30; 15:2. 2:16 திபா 143:2; உரோ 3:20,22. 2:19 உரோ 6:11.