திருத்தூதர் பணிகள்


திருத்தூதர் பணிகள்
முன்னுரை

ஆசிரியர்


திருத்தூதர் பணிகள் என்னும் நூல் லூக்கா நற்செய்தி நூலின் தொடர்ச்சியான இரண்டாவது பகுதி (1:1). ஆகவே மூன்றாவது நற்செய்தி நூலின் ஆசிரியரே இந்நூலின் ஆசிரியர் என்னும் மரபு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்நூலின் பிந்திய பகுதியில் ஆசிரியர் தாமே கண்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதாக எழுதுகிறார். ‘நாங்கள் பயணம்செய்தோம்’, ‘நாங்கள் தங்கியிருந்தோம்’, ‘நாங்கள் போதித்தோம்’ போன்ற பகுதிகள் இந்நூலின் ஆசிரியர் பவுலின் உடன்பணியாளர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன (16:10-17; 20:5-15; 21:1-18; 27:1-28:16). (ஆசிரியரைப்பற்றிய பிற குறிப்புகளை லூக்கா நற்செய்தி நூல் முன்னுரையில் காண்க).


சூழல்


கிறிஸ்துவோ அவர் வழியைப் பின்பற்றுபவர்களோ உரோமை அரசுக்கு எதிராகக் குற்றம் ஏதும் செய்யாதவர்கள் என விளக்கமளிக்கவும், பிற இனத்தாருக்குத் திருத்தூதராகத் தேர்ந்துகொள்ளப்பட்ட பவுல் யூதருக்கு எதிராகப் பெருந்தவறு ஒன்றும் செய்யவில்லை என்று எடுத்துரைக்கவும் இந்நூலை ஆசிரியர் எழுதுகிறார். இச்சூழலில் நற்செய்திப் பணியும் இறைவார்த்தைப் போதனையும் சிறப்பிடம் பெறுகின்றன. ஆவியார் துணையுடன் கடவுளது மீட்புத் திட்டத்துக்குச் சான்று பகர்வது திருச்சபையின் கடமை என்பது தெளிவாகிறது. திருத்தூதர்கள் - குறிப்பாகப் பேதுருவும் பவுலும் - எவ்வாறு திருத்தொண்டாற்றினர் என்பது விளக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது. பவுல் உரோமையில் சான்று பகர்ந்து கொண்டிருப்பதே நூலின் முடிவுரையாக அமைகின்றது.


உள்ளடக்கம்


“தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” (1:8) என்னும் உயிர்த்தெழுந்த ஆண்டவரின் கூற்றே இந்நூலுக்கு மையச் செய்தியாக அமைகின்றது. யூதரும் சமாரியரும் கிரேக்கரும் பிற இனத்தவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு ஆண்டவரின் சாட்சிகளாகின்றனர். இறைவார்த்தைப் பணி வளர்ந்து பெருக, எங்கும் திருச்சபைகள் நிறுவப்படுகின்றன. எனவே, இந்நூலைத் “தூய ஆவியின் பணிகள்” எனவும் அழைக்கலாம். பேதுரு, ஸ்தேவான், பவுல் ஆகியோரின் அருளுரைகள் இயேசு கிறிஸ்து பற்றிய கிறிஸ்தியல் விளக்கங்களை அளிக்கின்றன. பேதுரு, பவுல் ஆகியோரின் மனமாற்ற அனுபவங்களும், எருசலேம் சங்கமும் உலகெங்கும் உருவாகும் பொதுவான திருச்சபைக்கு வித்திடுகின்றன. கிறிஸ்தவர்களைப் பற்றித் தொகுத்துக் கூறுமிடங்களில் நட்புறவு, அப்பம்பிடுதல், இறைவேண்டல், சான்றுபகர்தல், தொண்டாற்றுதல், அன்புப் பகிர்வு (11:27-30; 2:42-47; 4:32-37) போன்றவற்றைச் சீடர்களின் தனித்தன்மைகளாக இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.


அமைப்பு


1. முன்னுரை (விண்ணேற்றம்) 1:1 - 11
2. எருசலேமில் சான்று பகர்தல் 1:12 - 8:3
3. யூதேயா, சமாரியாவில் சான்று பகர்தல் 8:4 - 12:25
4. உலகின் கடையெல்லைவரை சான்று பகர்தல் 13:1 - 28:31


அதிகாரம் 1
abcd
அதிகாரம் 2

தூய ஆவியின் வருகை


1பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்.✠✠ 2திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. 3மேலும், நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். 4அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். 5அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர்.✠ 6அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர். 7எல்லோரும் மலைத்துப்போய், “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? 8அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி?” என வியந்தனர். 9பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், 10பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், 11யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே!” என்றனர். 12எல்லாரும் மலைத்துப்போய் இதன் பொருள் என்னவென்று ஒருவரோடொருவர் கேட்டவாறு மனம் குழம்பி நின்றனர். 13இவர்கள் இனிய மதுவை நிரம்பக் குடித்துள்ளனர் என்று மற்றவர்கள் கிண்டல் செய்தனர்.


பெந்தக்கோஸ்து நாளில் பேதுருவின் அருளுரை


14அப்பொழுது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்தக் குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: “யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்துக்கொள்ளுங்கள். எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள். 15நீங்கள் நினைப்பது போல் இவர்கள் குடிவெறியில் இருப்பவர்களல்ல. இப்போது காலை ஒன்பது மணிதான் ஆகிறது. 16நீங்கள் காணுகின்ற காட்சி இறைவாக்கினர் யோவேல் கூறிய நிகழ்ச்சியே. 17அவர் மூலம் கடவுள் கூறியது: ‘இறுதி நாள்களில் நான் மாந்தர் யாவர் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர். உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் உங்கள் முதியோர் கனவுகளையும் காண்பர். 18அந்நாள்களில் உங்கள் பணியாளர் பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். அவர்களும் இறைவாக்கு உரைப்பர். 19இன்னும் மேலே வானத்தில் அருஞ்செயல்களையும் கீழே வையகத்தில் இரத்தம், நெருப்பு, புகைப்படலம் ஆகிய அடையாளங்களையும் கொடுப்பேன். 20ஒளிமயமான பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்னே கதிரவன் இருண்டு போகும்; நிலவோ இரத்த நிறமாக மாறும். 21அப்பொழுது ஆண்டவரின் திருப்பெயரைச் சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப் பிழைப்பர்.’

22இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்.கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்லசெயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக்காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே. 23கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள்.✠ 24ஆனால், கடவுள் அவரை மரணவேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச்செய்தார். ஏனென்றால், மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.✠ 25தாவீது

அவரைக்குறித்துக் கூறியது: ‘நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். 26இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். 27ஏனென்றால், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுக்குழியைக் காணவிடமாட்டீர். 28வாழ்வின் வழியை நான் அறியச்செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.’

29“சகோதர சகோதரிகளே, நமது குல முதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்கமாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. 30அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார்.✠ 31அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து,

‘அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்’ என்று கூறியிருக்கிறார்.

32கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். 33அவர் கடவுளின் வலதுப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்.

34-35விண்ணுலகிற்கு உயர்த்தப்பட்டவர் தாவீது அல்ல. ஏனெனில், ‘ஆண்டவர் என் தலைவரிடம், “நான் உம் பகைவரை உமக்குக் கால்மனையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” எனக் கூறினார்’ என்று அவரே சொல்கிறாரே.✠ 36ஆகையால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.”

37அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். 38அதற்குப் பேதுரு, அவர்களிடம், “நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். 39ஏனென்றால், இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது” என்றார்.✠ 40மேலும், அவர் வேறுபல சான்றுகளை எடுத்துக்கூறி, “நெறிக்கெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார். 41அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப்பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.


நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கைமுறை


42அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. 43திருத்தூதர் வழியாகப் பல அருஞ்செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன. 44நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர்.✠ 45நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர். 46ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்; பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். 47அவர்கள் கடவுளைப் போற்றி வந்தார்கள்; எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்; ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண்டேயிருந்தார்.


2:1 லேவி 23:15-21; இச 16:9-11. 2:5 மத் 28:19. 2:11-21 1 யோவே 2:28-32. 2:23 மத் 27:35; மாற் 15:24; லூக் 23:33; யோவா 19:18; திப 4:10; 1 தெச 2:15. 2:24 மத் 28:5,6; மாற் 16:6; லூக் 24:5. 2:25-28 திபா 16:8-11. 2:30 திபா 32:11; 2 சாமு 7:12,13. 2:34-35 திபா 110:1. 2:39 எசா 57:19. 2:44 திப 4:32-35.


2:1 ‘பெந்தக்கோஸ்து’ என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள். இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழா. பாஸ்காத் திருவிழாவுக்குப் பின் ஐம்பதாவது நாள் இது கொண்டாடப்பட்டது.


அதிகாரம் 3

கோவிலின் வாயிலில் கால் ஊனமுற்றவர் குணமடைதல்


1ஒருநாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர். 2அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்துக் கொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சைக் கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் ‘அழகுவாயில்’ என்னுமிடத்தில் வைப்பர். 3அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சைக் கேட்டார். 4பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து, “எங்களைப் பார்” என்று கூறினர். 5அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார். 6பேதுரு அவரிடம், “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறி, 7அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன . 8அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்; துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார். 9அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்களனைவரும் கண்டனர். 10அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகு வாயில் அருகே பிச்சைக்கேட்டுக் கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துக்கொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்ம்மறந்து நின்றனர்.


சாலமோன் மண்டபத்தில் பேதுருவின் அருளுரை


11நலமடைந்த அவர் பேதுருவையும் யோவானையும் விடாமல் பற்றிக் கொண்டிருக்க, எல்லா மக்களும் திகிலுற்று சாலமோன் மண்டபம் என்னும் இடத்திற்கு ஒரு சேர ஓடிவந்தனர். 12பேதுரு இதைக் கண்டு மக்களைப் பார்த்துக் கூறியது: “எருசலேம் மக்களே, நீங்கள் ஏன் இதைப் பார்த்து வியப்படைகிறீர்கள்? நாங்கள் எங்கள் சொந்த வல்லமையாலோ இறைப்பற்றாலோ இவரை நடக்கச் செய்துவிட்டதுபோல் ஏன் எங்களையே உற்றுப் பார்க்கிறீர்கள்? 13ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர்⁕ இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால், நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள்.✠ 14நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொண்டீர்கள்.✠ 15வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால், கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள். 16இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர். இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது. அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது.

17அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச் செய்துவிட்டீர்கள் என எனக்குத்தெரியும்.✠ 18ஆனால், கடவுள், தம் மெசியா துன்புறவேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார்.✠ 19எனவே, உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள். 20அப்பொழுது ஆண்டவர் புத்துயிர் அளிக்கும் காலத்தை அருளி உங்களுக்காக ஏற்படுத்திய மெசியாவாகிய இயேசுவை அனுப்புவார். 21விண்ணேற்றமடைந்த இயேசு யாவும் சீர்படுத்தப்படும் காலம் வரை விண்ணுலகில் இருக்கவேண்டும். பழங்காலத் தூய இறைவாக்கினர் வாயிலாகக் கடவுள் இந்தக் காலத்தைக்குறித்து கூறியிருந்தார். 22மோசேயும், “உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரரிடமிருந்து என்னைப்போல் ஓர் இறைவாக்கினரைத் தோன்றச்செய்வார். அவர் உங்களுக்குக் கூறும் எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிசாயுங்கள்.23அந்த இறைவாக்கினருக்குச் செவிசாய்த்துக் கீழ்ப்படியாத எவரும் மக்களினின்று அடியோடு அழிக்கப்படுவர்” என்று கூறியுள்ளார்.✠ 24சாமுவேல் தொடங்கி இறைவாக்குரைத்த அனைவரும் இந்தக் காலத்தைப்பற்றி அறிவித்து வந்தனர். 25அந்த இறைவாக்கினர் உரைத்தவற்றை

உரிமையாக்கிக்கொள்பவர்கள் நீங்கள். கடவுள் ஆபிரகாமிடம், “உன் மரபினர் வழியாக மண்ணின் மக்களினங்கள் அனைத்தும் ஆசிபெறும்” என்று கூறி உடன்படிக்கை செய்தார். கடவுள் உங்கள் மூதாதையரோடு செய்த அந்த உடன்படிக்கையையும் உரிமையாக்கிக் கொள்பவர்கள் நீங்களே.✠ 26ஆகையால், நீங்கள் அனைவரும் உங்கள் தீயசெயல்களைவிட்டு விலகி ஆசி பெற்றுக்கொள்வதற்காகவே, கடவுள் தம் ஊழியரைத் தோன்றச் செய்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்.


3:13 விப 3:15. 3:14 மத் 27:15-23; மாற் 15:6-14; லூக் 23:13-23; யோவா 19:12-15. 3:17 1 கொரி 2:8; 1 திமொ 1:13. 3:18 லூக் 18:31. 3:22 இச 8:15,18. 3:23 இச 18:19. 3:25 தொநூ 22:18.


3:13 இங்கு பயன்படுத்தப்படும் மூலச்சொல் ‘மகன்’ என்றும் பொருள்படும்.


அதிகாரம் 4

யூதத் தலைமைச்சங்கத்தின்முன் பேதுருவும் யோவானும்


1பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்; 2அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதையும் இறந்தோர் இயேசுவின் மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததையும் கண்டு எரிச்சலடைந்து, 3அவர்களைக் கைது செய்தார்கள்; ஏற்கனவே மாலையாகிவிட்டதால் மறுநாள்வரை காவலில் வைத்தார்கள். 4அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்ட பலரும் நம்பிக்கை கொண்டனர். இவ்வாறு, நம்பிக்கை கொண்ட ஆண்களது எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். 5மறுநாள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் எருசலேமில் ஒன்று கூடினார்கள். 6அவர்களுடன் தலைமைக் குருவான அன்னாவும், கயபா, யோவான், அலக்சாந்தர் ஆகியோரும், தலைமைக் குருவின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கூடியிருந்தார்கள். 7அவர்கள் திருத்தூதர்களை நடுவில் நிறுத்தி, “நீங்கள் எந்த வல்லமையால், அல்லது எந்தப் பெயரால் இதனைச் செய்தீர்கள்?” என்று வினவினார்கள். 8அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: “மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, 9உடல் நலமற்றிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். 10நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால், கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். 11இந்த இயேசுவே, ‘கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும், முதன்மையான மூலைக்கல்லாக விளங்குகிறார்.’ ✠

12இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை. 13பேதுருவும் யோவானும் கல்வியறிவற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டனர். 14நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. 15எனவே, அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தைவிட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள். 16“நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால், குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது.✠ 17ஆகவே, இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக் கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்” என்று கூறினார்கள். 18அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, “இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது” என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர். 19அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, “உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; 20என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்றனர்.✠ 21அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர். ஏனென்றால், நடந்ததைக் குறித்து மக்கள் அனைவரும் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். 22இந்த அரும் அடையாளம் வாயிலாக நலம் பெற்ற மனிதர் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்.


துணிவு பெற மன்றாட்டு


23விடுதலை பெற்ற அவர்கள், தங்களைச் சேர்ந்தவர்களிடம் வந்து, தலைமைக் குருக்களும் மூப்பர்களும் தங்களுக்குக் கூறிய யாவற்றையும் அறிவித்தார்கள். 24இவற்றைக் கேட்ட யாவரும் ஒரே மனத்துடன் தங்கள் குரலைக் கடவுள்பால் எழுப்பி, பின்வருமாறு மன்றாடினர்; “‘ஆண்டவரே, விண்ணுலகையும் மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே’.✠ 25எங்கள் தந்தையும் உம் ஊழியருமாகிய தாவீது வாயிலாக தூய ஆவி மூலம் ‘வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்? 26பூவுலகின் அரசர்களும் தலைவர்களும் ஆண்டவருக்கும் அவர்தம் மெசியாவுக்கும் எதிராக அணிவகுத்து நின்றனர்’

என்று உரைத்தீர். 27அதன்படியே இந்நகரில் உம்மால் அருள்பொழிவு பெற்ற உமது தூய ஊழியராகிய இயேசுவுக்கு எதிராக ஏரோதும் பொந்தியு பிலாத்தும் பிற இனத்தவரோடும் இஸ்ரயேல் மக்களோடும் ஒன்றுதிரண்டனர்.✠ 28உமது கைவன்மையும் உமது திட்டமும் குறித்து அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தனர். 29இப்போதுகூட ஆண்டவரே, அவர்கள் அச்சுறுத்துவதைப் பாரும். உம் அடியார் முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக்கூற அருள் தாரும்.✠ 30உமது தூய ஊழியர் இயேசுவின் பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்; அடையாளங்களும் அருஞ் செயல்களும் நடைபெறச் செய்யும்.” 31இவ்வாறு மன்றாடியவுடன் அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.


பொது உடைமை


32நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது.✠ 33திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர். 34தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலன்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டு வந்து 35திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும். 36சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார். இவருக்குத் திருத்தூதர்கள் “ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்” என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தார்கள். 37அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார்.


4:11 திபா 118:22; மத் 21:42; 1 பேது 2:7. 4:16 யோவா 11:47,48. 4:20 1 கொரி 9:16; 2 திமொ 1:7,8. 4:24 விப 20:11; நெகே 9:6; திபா 146:6. 4:25-26 திபா 2:1,2. 4:27 லூக் 23:7-11; மத் 27:1,2; மாற் 15:1; லூக் 23:1; யோவா 18:28,29. 4:29 எபே 6:19. 4:32 பிலி 1:27.


அதிகாரம் 5

அனனியாவும் சப்பிராவும்


1அனனியா என்னும் பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் தன் மனைவி சப்பிராவுடன் சேர்ந்து தன்னுடைய நிலத்தை விற்றான்; 2விற்ற தொகையில் ஒரு பகுதியைத் தன் மனைவி அறியத் தனக்கென்று வைத்துக் கொண்டு, மறு பகுதியைத் திருத்தூதரின் காலடியில் கொண்டுவந்து வைத்தான். 3அப்பொழுது பேதுரு, “அனனியா, நீ நிலத்தை விற்ற தொகையின் ஒரு பகுதியை உனக்கென்று வைத்துக்கொண்டு தூய ஆவியாரிடம் பொய் சொல்லும்படி சாத்தான் உன் உள்ளத்தை ஆட்கொண்டதேன்? 4அது விற்கப்படுவதற்கு முன்பு உன்னுடையதாகத்தானே இருந்தது? அதை விற்ற பின்பும் அந்தப்பணம் உன்னுடைய உரிமையாகத்தானே இருந்தது? பின்பு ஏன் நீ இச்செயலுக்கு உன் உள்ளத்தில் இடமளித்தாய்? நீ மனிதரிடமல்ல, கடவுளிடமல்லவா பொய் சொன்னாய்” என்று கூறினார்.✠ 5அவர் கூறியதைக் கேட்டதும் அனனியா கீழே விழுந்து உயிர்விட்டான். இதைக் கேள்வியுற்ற அனைவரையும் பேரச்சம் ஆட்கொண்டது. 6இளைஞர்கள் எழுந்து வந்து அவனைத் துணியால் மூடிச் சுமந்து கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள். 7ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப் பின் அவன் மனைவி உள்ளே வந்தாள்; நிகழ்ந்தது எதுவும் அவளுக்குத் தெரியாது. 8பேதுரு அவளைப் பார்த்து, “நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள்? சொல்” என்று கேட்க, அவள் “ஆம், இவ்வளவுக்குத்தான் விற்றோம்” என்று பதிலளித்தாள். 9மீண்டும் பேதுரு அவளைப் பார்த்து, “தூய ஆவியாரைச் சோதிக்க நீங்கள் உடன்பட்டதேன்? இதோ! உன் கணவனை அடக்கம் செய்தவர்கள் கதவருகில் வந்து விட்டார்கள். அவர்கள் உன்னையும் வெளியே சுமந்து செல்வார்கள்” என்றார்.✠ 10உடனே அவள் அவர் காலடியில் விழுந்து உயிர்விட்டாள். இளைஞர்கள் உள்ளே வந்து அவள் இறந்துகிடப்பதைக் கண்டு வெளியே சுமந்துகொண்டு போய் அவள் கணவனுக்கு அருகில் அடக்கம் செய்தார்கள். 11திருச்சபையார் யாவரையும், இதைக் கேள்வியுற்ற அனைவரையுமே பேரச்சம் ஆட்கொண்டது.


அடையாளங்களும் அருஞ்செயல்களும்

12மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவராய்க் கூடி வந்தனர். 13மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை. ஆயினும், மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர். 14ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள். 15பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்;✠ 16எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர்.✠


திருத்தூதர் துன்புறுத்தப்படுதல்


17தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்த சதுசேயக் கட்சியினர் அனைவரும் பொறாமையால் நிறைந்து 18திருத்தூதரைக் கைது செய்து பொதுச் சிறையில் காவலில் வைத்தனர். 19ஆனால், இரவில் ஆண்டவரின் தூதர் சிறைச் சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்று, 20“நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்” என்றார். 21இதைக் கேட்ட அவர்கள் பொழுது விடிந்ததும் கோவிலுக்குச் சென்று கற்பித்தார்கள். தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்தவர்களும் அனைத்து இஸ்ரயேல் மக்களின் ஆட்சிப் பேரவையாகிய தலைமைச் சங்கத்தைக் கூட்டித் திருத்தூதர்களைச் சிறையிலிருந்து கொண்டு வருமாறு ஆள் அனுப்பினார்கள். 22அந்த ஏவலர்கள் அங்கு வந்தபோது சிறையில் அவர்களைக் காணவில்லை. எனவே, அவர்கள் திரும்பி வந்து, 23“நாங்கள் சிறைச்சாலை உறுதியாய்ப் பூட்டப்பட்டிருப்பதையும், காவலர் வாயிலருகில் நின்றுகொண்டிருப்பதையும் கண்டோம். ஆனால், கதவைத் திறந்தபோது உள்ளே எவரையும் காணவில்லை” என்று அறிவித்தார்கள். 24இவ்வார்த்தைகளைக் கேட்ட கோவில் காவல் தலைவரும், தலைமைக் குருக்களும் அவர்களுக்கு என்னதான் நேர்ந்திருக்கும் என்று மனங்குழம்பி நின்றனர். 25அப்பொழுது ஒருவர் வந்து, “நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்” என்று அவர்களிடம் அறிவித்தார். 26உடனே காவல்தலைவர் ஏவலர்களுடன் கோவிலுக்குச் சென்று அவர்களை அழைத்துச் சென்றார். மக்கள் கல்லெறிவார்கள் என்று அவர் அஞ்சியதால் வன்முறை எதுவும் கையாளவில்லை. 27அழைத்து வந்தவர்களை அவர்கள் யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி, 28“நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக் கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும், இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!” என்றார்.✠ 29அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? 30நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். 31இஸ்ரயேல் மக்களுக்கு மன மாற்றத்தையும் பாவமன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். 32இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்” என்றனர். 33இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத்தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர். 34அப்பொழுது கமாலியேல் என்னும் பெயருடைய பரிசேயர் ஒருவர் தலைமைச் சங்கத்தில் எழுந்து நின்றார். இவர் மக்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட திருச்சட்ட ஆசிரியர். திருத்தூதரைச் சிறிது நேரம் வெளியே போகும்படி ஆணையிட்டு, 35அவர் சங்கத்தாரை நோக்கிக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். 36சிறிது காலத்திற்கு முன்பு தெயுதா என்பவன் தோன்றி, தான் பெரியவன் என்று கூறிக்கொண்டு, ஏறத்தாழ நானூறு பேரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். ஆனால், அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப் போகவே, அந்த இயக்கம் ஒன்றுமில்லாமல் போயிற்று. 37இவற்றுக்குப் பின்பு மக்கள்தொகை கணக்கிடப்பட்ட நாள்களில் கலிலேயனான யூதா என்பவன் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்யும்படி மக்களைத் தூண்டினான். அவனும் அழிந்தான்; அவனைப் பின்பற்றிய மக்கள் அனைவரும் சிதறிப்போயினர். 38ஆகவே, இப்போது நீங்கள் இம் மனிதர்களை விட்டுவிடுங்கள் என நான் உங்களுக்குக் கூறுகிறேன். இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். 39அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது; நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்.” அவர் கூறியதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர். 40பின்பு, அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப்புடைத்து, இயேசுவைப்பற்றிப் பேசக் கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர். 41இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.✠ 42அவர்கள் நாள்தோறும் கோவிலிலும் வீடுகளிலும் தொடர்ந்து கற்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்துவந்தார்கள்.


5:4 இச 23:22,23. 5:9 1 கொரி 10:9. 5:15 மாற் 6:56. 5:16 லூக் 4:40,41. 5:28 மத் 27:25. 5:38-39 மத் 15:13; லூக் 20:4. 5:41 1 கொரி 4:9,10.


அதிகாரம் 6

திருத்தொண்டர்களை நியமித்தல்


1அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர். 2எனவே, பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, “நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல.✠ 3ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம்.✠ 4நாங்களோ இறை வேண்டலிலும், இறை வார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்” என்று கூறினர். 5திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து 6அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர்.✠ 7கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது. குருக்களுள் பெருங் கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.


ஸ்தேவான் கைது செய்யப்படல்


8ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். 9அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக்கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவனோடு வாதாடத் தொடங்கினர். 10ஆனால், அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.✠ 11பின்பு அவர்கள், “இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்” என்று கூறச் சிலரைத் தூண்டிவிட்டனர். 12அவ்வாறே, அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள். உடனே அவர்கள் எழுந்து வந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் சென்றார்கள்; 13மேலும், பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள், “இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசி வருகிறான்” என்று கூறினார்கள். 14மேலும் அவர்கள், “நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்” என்றார்கள். 15தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப் பார்த்தபோது அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்.


6:2 விப 18:17-23. 6:3 1 திமொ 3:8-10. 6:6 1 திமொ 4:14. 6:10 லூக் 24:15.


அதிகாரம் 7

ஸ்தேவானின் அருளுரை


1தலைமைக் குரு, “இவையெல்லாம் உண்மைதானா?” என்று கேட்டார். 2அதற்கு ஸ்தேவான் கூறியது: “சகோதரரே, தந்தையரே, கேளுங்கள். நம் தந்தையாகிய ஆபிரகாம் காரான் நகரில் குடியேறுமுன்பு மெசப்பொத்தாமியாவில் வாழ்ந்து வந்தபோது மாட்சி மிகு கடவுள் அவருக்கு தோன்றி,

3“நீ உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தாரிடமிருந்தும் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்” என்று கூறினார். 4அதன்பின் அவர் கல்தேயருடைய நாட்டைவிட்டு வெளியேறிக் காரான் நகரில் வந்து அங்கே குடியிருந்தார். அவருடைய தந்தை இறந்தபின்பு, நீங்கள் இப்போது குடியிருக்கும் இந்நாட்டுக்குக் கூட்டி வந்து இங்குக் குடிபெயரச் செய்தார்.✠ 5இங்குக் கடவுள் அவருக்கு ஓர் அடி நிலம்கூட உரிமையாகக் கொடுக்கவில்லை. அவருக்குப் பிள்ளையே இல்லாதிருந்தும் இந்த நாட்டை அவருக்கும் அவருக்குப் பின் வரும் அவர் வழி மரபினருக்கும் உடைமையாகக் கொடுக்கப்போகிறேன் என்று கடவுள் வாக்குறுதி கொடுத்தார்.✠ 6மேலும், அவர்தம் வழிமரபினர் வேறொரு நாட்டில் அந்நியராய்க் குடியிருப்பர். நானூறு ஆண்டுகள் அவர்கள் அங்கே அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று கடவுள் கூறியிருந்தார்.

7‘அவர்கள் அடிமை வேலை செய்யும் நாட்டுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். அதற்குப்பின் அவர்கள் அங்கிருந்து வெளியேறி இவ்விடத்துக்கு வந்து என்னை வழிபடுவார்கள்’ என்றும் அவர் உரைத்துள்ளார். 8பின் அவர் விருத்தசேதனத்தை அடையாளமாகக் கொண்ட உடன்படிக்கையை ஆபிரகாமுக்கு கொடுத்தார். அதன்படியே ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றெடுத்து எட்டாம் நாளில் அவருக்கு விருத்தசேதனம் செய்தார். அவ்வாறே ஈசாக்கு யாக்கோபுக்கும், யாக்கோபு பன்னிரு குலமுதல்வருக்கும் செய்தனர்.✠

9“பின் நம் குலமுதல்வர்கள் பொறாமை கொண்டு யோசேப்பை எகிப்தியருக்கு விற்றுவிட்டனர். ஆனால், கடவுள் அவரோடு இருந்தார்.✠ 10அவருக்கு வந்த அனைத்து இன்னல்களினின்றும் அவர் அவரை விடுவித்தார்; அத்துடன் எகிப்திய அரசரான பார்வோன் பார்வையில் யோசேப்புக்கு அருளையும் ஞானத்தையம் வழங்கினார். அரசர் அவரை எகிப்து நாட்டுக்கும் தன் உடைமை அனைத்துக்கும் ஆளுநராக நியமித்தார்.✠ 11பின் எகிப்து, கானான் ஆகிய நாடுகள் அனைத்திலும் பஞ்சமும் அதனால் மிகுந்த இன்னலும் எற்பட்டன. நம் மூதாதையருக்கும் உணவு கிடைக்கவில்லை.✠ 12அப்போது யாக்கோபு எகிப்து நாட்டில் உணவுப் பொருட்கள் கிடைப்பதாகக் கேள்விப்பட்டு, முதன்முறையாக நம் மூதாதையரை அங்கு அனுப்பி வைத்தார். 13இரண்டாம் முறை அவர்களை அனுப்பியபோது, யோசேப்பு தம் சகோதரர்களுக்குத் தாம் யார் என்று தெரியப்படுத்தினார். பார்வோனுக்கும் யோசேப்பின் இனத்தார் யார் என்பது தெளிவாயிற்று.✠ 14பின்பு, யோசேப்பு தம் தந்தை யாக்கோபையும் தம் உறவினர் அனைவரையும் அங்கு வருமாறு சொல்லி அனுப்பினார். அவர்கள் எழுபத்தைந்து பேர் இருந்தனர்.✠ 15யாக்கோபு எகிப்து நாட்டுக்குச் சென்றார். அவரும் நம் மூதாதையரும் அங்கேயே காலமாயினர்.✠ 16அவர்களுடைய உடல்கள் செக்கேமுக்குக் கொண்டு செல்லப்பட்டன; அங்கு, ஆபிரகாம் அமோரின் மைந்தர்களிடம் வெள்ளிக் காசுகளை விலையாக கொடுத்து வாங்கிய கல்லறையில் வைக்கப்பட்டன.✠

17ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் நேரம் நெருங்கியபோது மக்கள் எகிப்து நாட்டில் மிகுதியாகப் பல்கிப் பெருகியிருந்தனர். 18இறுதியில் எகிப்து நாட்டில் யோசேப்பை அறியாத வேறோர் அரசன் தோன்றினான். 19அவன் நம் இனத்தவரை வஞ்சகத்துடன் கொடுமையாக நடத்தி, நம் மூதாதையர் தங்கள் குழந்தைகளை வெளியே எறிந்து சாகடிக்கச் செய்தான்.✠ 20அக்காலத்தில்தான் மோசே பிறந்தார். கடவுளுக்கு உகந்தவரான அவர் மூன்று மாதம் தந்தை வீட்டில் பேணி வளர்க்கப்பட்டார்.✠ 21பின்பு, வெளியே எறியப்பட்ட அவரை பார்வோனின் மகள் தத்தெடுத்துத் தன் சொந்த மகனைப் போல் பேணி வளர்த்தார்.✠ 22மோசே எகிப்து நாட்டின் கலைகள் அனைத்தையும் பயின்று சொல்லிலும் செயலிலும் வல்லவராய்த் திகழ்ந்தார்.

23அவருக்கு நாற்பது வயதானபோது, தம் சகோதரர்களாகிய இஸ்ரயேல் மக்களின் நிலைமையைச் சென்று கவனிக்க வேண்டும் என்ற ஆவல் அவர் உள்ளத்தில் எழுந்தது. 24அப்போது அவர்களுள் ஒருவருக்கு ஓர் எகிப்தியன் தீங்கு விளைவித்ததைக் கண்டு, அவருக்குத் துணை நின்று, ஊறு விளைவித்தவனை வெட்டி வீழ்த்திப் பழி வாங்கினார். 25தம் கையால் கடவுள் தம் சகோதரர்களுக்கு விடுதலை கொடுப்பார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று மோசே எண்ணினார். ஆனால், அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை. 26மறுநாள் சிலர் சண்டையிடுவதைக் கண்டு, “நீங்கள் சகோதரர்கள் அல்லவா? ஏன் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள்?” என்று கூறி அவர்களிடையே அமைதியும் நல்லுறவும் ஏற்படுத்த முயன்றார்.

27ஆனால், தீங்கிழைத்தவன் ‘எங்களுக்கு உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவர் யார்? 28நேற்று எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா எண்ணுகிறாய்?’ என்று கூறி அவரைப் பிடித்து அப்பால் தள்ளினான். 29இதைக் கேட்ட மோசே அங்கிருந்து தப்பி, மிதியான் நாட்டுக்குச் சென்று அந்நியராக வாழ்ந்து வந்தார். அங்கு அவருக்கு மைந்தர் இருவர் பிறந்தனர்.✠ 30நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்டவரின் தூதர் சீனாய் மலை அருகே உள்ள பாலைநிலத்தில் ஒரு முட்புதர் நடுவே தீப்பிழம்பில் தோன்றினார். 31மோசே இந்தக் காட்சியைக் கண்டு வியப்புற்றார். அதைக் கூர்ந்து கவனிக்கும்படி அவர் நெருங்கிச் சென்றபோது,

32“உன்னுடைய மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் கடவுள் நானே” என்று ஆண்டவரின் குரல் ஒலித்தது. மோசே நடுநடுங்கி இக்காட்சியைக் கூர்ந்து கவனிக்கத் துணியவில்லை. 33கடவுள் அவரிடம், “உன் கால்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு. ஏனெனில், நீ நின்றுகொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம். 34எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன். அவர்களது ஏக்கக் குரலைக் கேட்டேன். அவர்களை விடுவிக்கும்படி இறங்கி வந்துள்ளேன். உன்னை எகிப்துக்கு அனுப்பப்போகிறேன். இப்போதே வா” என்றார். 35முன்பு, ‘உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவர் யார்?’

என்று கூறி மக்கள் மோசேயை ஏற்க மறுத்தார்கள். ஆனால், அதே மோசேயையே கடவுள் முட்புதரில் தோன்றிய தம்தூதர் வழியாய்த் தலைவராகவும் மீட்பராகவும் அனுப்பினார். 36அவர் அவர்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தார்; அங்கும் செங்கடலிலும் நாற்பது ஆண்டுகளாகப் பாலைநிலத்திலும் அருஞ்செயல்களையும் அடையாளச் செயல்களையும் புரிந்தார்.✠ 37“கடவுள் என்னைப்போன்ற இறைவாக்கினர் ஒருவரைச் சகோதரர்களாகிய உங்கள் நடுவிலிருந்து தோன்றச் செய்வார்” என்று இஸ்ரயேல் மக்களிடம் கூறியதும் இதே மோசேதான்.✠ 38பாலை நிலத்தில் மக்கள் சபையாகக் கூடியபோது சீனாய் மலையில் தம்மோடு பேசிய தூதருக்கும் நம் மூதாதையருக்கும் இடையே நின்றவர் இவரே. வாழ்வளிக்கும் வார்த்தைகளை நமக்குப் பெற்றுத் தந்தவரும் இவரே.✠ 39ஆனால், நம் மூதாதையர் அவருக்குக் கீழ்ப்படிய விரும்பாமல் அவரை உதறித் தள்ளினர்; எகிப்துக்குத் திரும்பிச் செல்ல உளம் கொண்டனர்.

40அவர்கள் ஆரோனை நோக்கி, “எகிப்து நாட்டினின்று எங்களை நடத்தி வந்த அந்தஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. எங்களை வழி நடத்தும் தெய்வங்களை நீர் எங்களுக்கு உருவாக்கிக் கொடும்” என்று கேட்டார்கள்.✠ 41அக்காலத்தில் அவர்கள் ஒரு கன்றுக்குட்டிச் சிலையைச் செய்து அதற்குப் பலி செலுத்தினார்கள். தாங்களே செய்துகொண்ட சிலைக்குமுன் மகிழ்ந்து கொண்டாடினார்கள்.✠ 42ஆகவே, கடவுள் அவர்களிடமிருந்து விலகி, வான்வெளிக் கோள்களை வணங்குமாறு அவர்களை விட்டுவிட்டார். இதைக் குறித்து இறைவாக்கினர் நூலில், ‘இஸ்ரயேல் வீட்டாரே, பாலைநிலத்தில் இருந்த அந்த நாற்பது ஆண்டுகளில் பலிகளும் காணிக்கைகளும் எனக்குக் கொடுத்தீர்களோ? 43நீங்கள் மோளோக்குடைய கூடாரத்தையும், உங்கள் தெய்வமாகிய இரேப்பானுடைய விண்மீனையும் தூக்கிக் கொண்டு சென்றீர்கள். நீங்கள் இந்தச் சிலைகளை வணங்குவதற்கென்றே செய்தீர்கள். எனவே நான் உங்களைப் பாபிலோனுக்கும் அப்பால் குடி பெயரச் செய்வேன்’ என்று எழுதப்பட்டுள்ளது.

44பாலை நிலத்தில் நம் மூதாதையருக்குச் சந்திப்புக் கூடாரம் இருந்தது. கடவுள் மோசேயோடு பேசியபோது அவருக்குக் காண்பித்த மாதிரியின்படி அதனை அமைக்கப்பணித்திருந்தார்.✠ 45பின்பு ,நம் மூதாதையர் தங்கள் முன்பாகக் கடவுள் விரட்டியடித்த வேற்றினத்தாரின் நாடுகளை யோசுவாவின் தலைமையில் கைப்பற்றியபோது அவர்கள் தங்கள் தந்தையரிடமிருந்து பெற்றிருந்த அந்தக் கூடாரத்தையும் கொண்டு வந்தனர். தாவீது காலம் வரை அக்கூடாரம் அங்கேயே இருந்தது.✠ 46தாவீது கடவுளின் அருளைப் பெற்றிருந்தார். எனவே, அவர் யாக்கோபின் வீட்டார் வழிபடக் கடவுளுக்கு ஓர் உறைவிடம் அமைக்க விரும்பி அவரை வேண்டிக் கொண்டார்.✠ 47ஆனால், கடவுளுக்குக் கோவில் கட்டியெழுப்பியவர் சாலமோனே.✠ 48“உன்னத கடவுளோ மனிதர் கையால் கட்டிய இல்லங்களில் குடியிருப்பதில்லை” என்று இறைவாக்கினர் கூறியது போல,

49‘விண்ணகம் என் அரியணை; மண்ணகம் என் கால்மணை; அவ்வாறிருக்க, எத்தகைய கோயிலை நீங்கள் எனக்காகக் கட்டவிருக்கிறீர்கள்? எத்தகைய இடத்தில் நான் ஓய்வெடுப்பேன்? 50இவை அனைத்தையும் என் கைகளே உண்டாக்கின’ என்கிறார் ஆண்டவர்.

51திமிர் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே, உங்களுடைய மூதாதையரைப் போல நீங்களும் தூய ஆவியாரை எப்போதும் எதிர்க்கிறீர்கள்.✠ 52எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமலிருந்தார்கள்? நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையும் அவர்கள் கொலை செய்தார்கள். இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக்கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள். 53கடவுளின் தூதர்கள் வழியாய்த் தரப்பட்ட திருச் சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் அதனைக் கடைப்பிடிக்கவில்லை.”


ஸ்தேவான் மீது கல்லெறிதல்


54இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள். 55அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்று நோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, 56“இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்” என்று கூறினார். 57ஆனால், அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக் கொண்டு பெருங் கூச்சலிட்டு ஒருமிக்க அவர்மேல் பாய்ந்தார்கள். 58நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். 59அவர்கள் ஸ்தேவான்மீது கல்லெறிந்தபோது அவர், “ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று வேண்டிக் கொண்டார். 60பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்” என்று சொல்லி உயிர்விட்டார்.


7:2-3 தொநூ 12:1. 7:4 தொநூ 11:31; 12:4. 7:5 தொநூ 12:7; 13:15; 1518; 17:8. 7:6-7 தொநூ 15:13,14. 7:8 தொநூ 17:10-14; 21:2-4; 25:26; 29:31; 35:18. 7:9 தொநூ 37:11,28; 39:2,21. 7:10 தொநூ 41:39-41. 7:11 தொநூ 42:1,2. 7:13 தொநூ 45:1,16. 7:14 தொநூ 45:9,10,17-18; 46:27. 7:15 தொநூ 46:1-7; 49:33. 7:16 தொநூ 23:3-6; 33:19; 50:7-13; யோசு 24:32. 7:17-18 விப 1:7,8. 7:19 விப 1:10,11,22. 7:20 விப 2:2. 7:21 விப 2:3-10. 7:23-29 விப 2:11-15. 7:29 விப 18:3,4. 7:30-34 விப 3:1-10. 7:36 விப 7:3; 14:21-33. 7:37 இச 8:15,18. 7:38 விப 19:1-20:17; இச 5:1-33. 7:40 விப 32:1. 7:41 விப 32:2-6. 7:42-43 ஆமோ 5:25-27. 7:44 விப 25:9,40. 7:45 யோசு 3:14-17. 7:46 2 சாமு 7:1-16; 1 குறி 17:1-14. 7:47 1 அர 6:1-38; 2 குறி 3:1-17. 7:49-50 எசா 66:1-2. 7:51 எசா 63:10.


அதிகாரம் 8

சவுல் திருச்சபையைத் துன்புறுத்தல்


1ஸ்தேவானைக் கொலை செயவதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார். அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்குள்ளாகியது. திருத்தூதர்களைத் தவிர மற்ற அனைவரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போயினர். 2இறைப்பற்று உள்ள மக்கள் ஸ்தேவானை அடக்கம்செய்து, அவருக்காக மாரடித்துப் பெரிதும் புலம்பினர். 3சவுல் வீடுவீடாய் நுழைந்து ஆண்களையம் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தார். இவ்வாறு, அவர் திருச்சபையை அழித்துவந்தார்.✠


3. யூதேயா, சமாரியாவில் சான்று பகர்தல்

சமாரியாவில் நற்செய்தி பரவுதல்

4சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர். 5பிலிப்பு சமாரியா⁕ நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார். 6பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒரு மனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். 7ஏனெனில், பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்தக் குரலுடன் கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். 8இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று. 9அந்நகரில் சீமோன் என்னும் பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் தன் மாயவித்தைகளால் சமாரியாவின் மக்கள் எல்லாரையும் மலைப்புக்குள்ளாக்கித் தன்னை ஒரு பெரிய மனிதனாகக் காட்டிவந்தான். 10சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும், “மாபெரும் வல்லமையாம் கடவுளின் வல்லமை இவரிடம் உள்ளது” என்று கூறி அவனுக்குச் செவிசாய்த்தனர். 11அவன் தன் மாய வித்தைகளால் நெடுங்காலமாக அவர்களை மலைப்புக்குள்ளாக்கியதால் அவர்கள் அவனுக்குச் செவிசாய்த்தார்கள். 12ஆயினும், இறையாட்சியையும், இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரையும்பற்றிய நற்செய்தியைப் பிலிப்பு அறிவித்தபோது பல ஆண்களும் பெண்களும் நம்பிக்கைக்கொண்டு திருமுழுக்குப் பெற்றார்கள். 13சீமோனும் நம்பிக்கைகொண்டவனாய்த் திருமுழுக்குப் பெற்று, பிலிப்புடன் கூடவே இருந்தான்; அவர் செய்த அரும் அடையாளங்களையும் வல்ல செயல்களையும் கண்டு மலைத்து நின்றான். 14சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். 15அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள். 16ஏனெனில், அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை. ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள். 17பின்பு, பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.✠ 18திருத்தூதர் கைகளை வைத்ததும் அவர்கள் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டதைச் சீமோன் கண்டபோது, 19“நான் யார்மீது கைகளை வைப்பேனோ அவரும் தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுங்கள்” என்று கூறி, அதற்காகப் பணம் கொடுக்க முன்வந்தான். 20அப்போது பேதுரு அவனிடம், “கடவுளது கொடையைப் பணம் கொடுத்து வாங்க எண்ணியதால் நீயும் உன் பணத்தோடு நாசமாய்ப் போ. 21உன் உள்ளம் கடவுளின்முன் நேர்மையற்றதாய் இருப்பதால், இதில் உனக்குப் பங்குமில்லை, உரிமையுமில்லை. 22இப்போதே உனது தீய போக்கைவிட்டு நீ மனம் மாறி ஆண்டவரிடம் மன்றாடு. ஒருவேளை உன் உள்ளத்தில் எழுந்த இந்த எண்ணம் மன்னிக்கப்படலாம். 23ஏனென்றால், நீ கசப்பு நிறைந்த உள்ளத்தினனாய் தீவினைக்கு அடிமையாயிருப்பதை நான் காண்கிறேன்” என்று கூறினார். 24சீமோன் அதற்கு மறுமொழியாக, “நீங்கள் கூறிய கேடு எதுவும் எனக்கு நேரிடாதவாறு எனக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்,” என்றான். 25பிறகு, அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை எடுத்துக் கூறிச் சான்று பகர்ந்தவாறே எருசலேமுக்குத் திரும்பினார்கள்; சமாரியாவின் பல ஊர்களிலும் நற்செய்தியை அறிவித்தார்கள்.


பிலிப்பும் எத்தியோப்பிய நிதியமைச்சரும்


26பின்பு, ஆண்டவரின் தூதர் பிலிப்பிடம், “நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ” என்றார். அது ஒரு பாலைநிலப் பாதை. 27பிலிப்பு அவ்வாறே புறப்பட்டுப்போனார். அப்போது எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று, கடவுளை வணங்கி விட்டுத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அவர் ஓர் அலி; எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர். 28அவர் தமது தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருந்தார். 29தூய ஆவியார் பிலிப்பிடம், “நீ அந்தத் தேரை நெருங்கிச் சென்று அதனோடு கூடவே போ” என்றார். 30பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, “நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?” என்று கேட்டார். 31அதற்கு அவர், “யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?” என்று கூறித்தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார். 32அவர் வாசித்துக்கொண்டிருந்த மறைநூல் பகுதி பின்வருமாறு:

“அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர்தம் வாயைத் திறவாதிருந்தார். 33தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவருடைய தலைமுறையைப் பற்றி எடுத்துரைப்பவன் யார்? ஏனெனில், அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே!”

34அவர் பிலிப்பிடம், “இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைக் கூறுகிறார்?தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா? தயவுசெய்து கூறுவீரா?” என்று கேட்டார். 35அப்போது பிலிப்பு, இந்த மறைநூல் பகுதியிலிருந்து தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவருக்கு அறிவித்தார். 36அவர்கள் போய்க் கொண்டிருந்தபோது வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள். அப்போது அவர், “இதோ, தண்ணீர் உள்ளதே, நான் திருமுழுக்குப்பெற ஏதாவது தடை உண்டா?” என்று கேட்டார். 37‘அதற்குப் பிலிப்பு, “நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை” என்றார். உடனே அவர், “இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன்” என்றார்.’✠ 38உடனே அமைச்சர் தேரை நிறுத்தக் கூறினார். பிலிப்பு, அமைச்சர் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். 39அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியேறினவுடனையே ஆண்டவரின் ஆவியார் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அமைச்சர் அதன்பின் அவரைக் காணவில்லை; அவர் மகிழச்சியோடு தம் வழியே சென்றார்.✠ 40பின்பு, பிலிப்பு ஆசோத்து என்னும் இடத்தில் காணப்பட்டார். செசரியா போய்ச் சேரும்வரை அவர் சென்ற நகரங்களிலெல்லாம் நற்செய்தியை அறிவித்தார்.


8:3 திப 9:1,2; 22:4; 26:10,11; 1 கொரி 15:9; கலா 1:13; பிலி 3:6; 1 திமொ 1:13. 8:17 1 திமொ 4:14. 8:32-33 எசா 53:7,8. 8:39 1 அர 18:12.


8:5 சமாரியா நகர் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் செபஸ்து என்று அழைக்கப்பட்டது. 8:37 [‘அதற்குப்… என்றார்’] அடைப்புக்குறிக்குள் உள்ள இவ்வசனம் முக்கியமல்லாத சில கையெழுத்துப்படிகளில் மட்டுமே காணப்படுகிறது.


அதிகாரம் 9

சவுல் அழைப்பு பெறல்
(திப 22:6-16; 26:12-18)


1இதற்கிடையில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் திருத்தூதர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி, 2இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார். 3இவ்வாறு, அவர் புறப்பட்டுச்சென்று தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது. 4அவர் தரையில் விழ, “சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார். 5அதற்கு அவர், “ஆண்டவரே நீர் யார்?” எனக்கேட்டார். ஆண்டவர், “நீ துன்புறுத்தும் இயேசு நானே. 6நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார். 7அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால், ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர்.✠ 8சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே, அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள். 9அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை.

10தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “அனனியா” என அழைக்க, அவர், “ஆண்டவரே, இதோ அடியேன்” என்றார். 11அப்போது ஆண்டவர் அவரிடம், “நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார். 12அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார்” என்று கூறினார். 13அதற்கு அனனியா மறுமொழியாக, “ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். 14உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான்” என்றார். 15அதற்கு ஆண்டவர் அவரிடம், “நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்.✠ 16என் பெயரின்பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக்காட்டுவேன்” என்றார்.

17அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று கைகளை அவர் மீது வைத்து, “சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்” என்றார். 18உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார். 19பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார்.


சவுல் தமஸ்குவில் போதித்தல்


19சில நாள்களாக சவுல் தமஸ்குவில் சீடர்களுடன் தங்கியிருந்தார். 20உடனடியாக அவர் இயேசுவே இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார். 21கேட்டவர் அனைவரும் மலைத்துப்போய், “எருசலேமில் இந்தப் பெயரை அறிக்கையிடுவோரை ஒழிக்க முற்பட்டவன் இவனல்லவா? அவ்வாறு அறிக்கையிடுவோரைக் கைது செய்து, தலைமைக் குருக்களிடம் இழுத்துச் செல்லும் எண்ணத்தோடு இங்கே வந்தவன் தானே இவன்” என்றார்கள். 22சவுல் மேன்மேலும் வல்லமை பெற்றவராய், “இயேசுவே கிறிஸ்து” என்பதை மெய்ப்பித்துத் தமஸ்குவில் வாழ்ந்து வந்த யூதர்கள் அனைவரும் மனம் குழம்பச் செய்தார்.


சவுல் யூதர்களிடமிருந்து தப்பிச் செல்லுதல்


23இவ்வாறே பல நாள்கள் கழிந்தன; யூதர்கள் சவுலைக் கொன்றுவிடத்திட்டமிட்டார்கள். 24அவரைக் கொன்று விடுவதற்காக அவர்கள் இரவும் பகலும் நகர வாயில்களைக் காவல் செய்தார்கள். அவர்களுடைய இச்சூழ்ச்சி சவுலுக்குத் தெரியவந்தது. 25ஆகவே, அவருடைய சீடர்கள் இரவில் அவரைக் கூடையில் வைத்து, நகர மதில் வழியாக இறக்கி விட்டார்கள்.


எருசலேம் நகரத்தில் சவுல்


26அவர் எருசலேம் நகரத்துக்கு வந்தபோது சீடர்களுடன் சேர்ந்து கொள்ள முயன்றார். ஆனால், அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல் அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர். 27பர்னபா அவருக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார். பவுல் ஆண்டவரை வழியில் கண்டதுபற்றியும் ஆண்டவர் அவரோடு பேசியதுபற்றியும் அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும் பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார். 28அதன்பின் சவுல் அவர்களோடு சேர்ந்து எருசலேமில் அங்கும் இங்குமாகச் சென்று ஆண்டவரின் பெயரால் துணிவுடன் பேசிவந்தார். 29கிரேக்க மொழி பேசும் யூதரிடம் சென்று அவர்களோடு வாதாடினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட முயன்றார்கள். 30ஆனால், அவரோடு இருந்த சகோதரர்கள் இதை அறிந்து அவரைச் செசரியாவுக்குக் கூட்டிச்சென்று அங்கிருந்து தர்சு நகருக்கு அனுப்பி வைத்தார்கள். 31யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளிலெல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது.


ஐனேயாவின் பிணி போக்கல்


32பேதுரு எல்லா இடங்களுக்கும் சென்று வந்தார்; ஒருநாள் லித்தாவில் வாழ்ந்த இறைமக்களிடம் வந்து சேர்ந்தார். 33அங்கே அவர் எட்டு ஆண்டுகள் முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த ஐனேயா என்னும் பெயருடைய ஒருவரைக் கண்டார்; 34அவரிடம், “ஐனேயா, இயேசு கிறிஸ்து உம் பிணியைப் போக்குகிறார்; எழுந்து உம் படுக்கையை நீரே சரிப்படுத்தும்” என்று பேதுரு கூறினார். உடனே அவர் எழுந்தார். 35லித்தாவிலும் சாரோனிலும் வாழ்ந்து வந்தவர்கள் அனைவரும் அதைக் கண்டு ஆண்டவரிடம் திரும்பினார்கள்.


தொற்கா மீண்டும் உயிர் பெறுதல்


36யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருடைய பெண் சீடர் ஒருவர் இருந்தார். அவர் தொற்கா⁕ என்றும் அழைக்கப்பட்டார்; நன்மை செய்வதிலும் இரக்கச் செயல்கள் புரிவதிலும் அவர் முற்றிலும் ஈடுபட்டிருந்தார். 37உடல்நலம் குன்றி ஒருநாள் அவர் இறந்துவிட்டார். அங்கிருந்தோர் அவரது உடலைக் குளிப்பாட்டி மேல் மாடியில் கிடத்தியிருந்தனர். 38யோப்பாவிற்கு அருகிலுள்ள லித்தாவுக்குப் பேதுரு வந்திருப்பதைச் சீடர்கள் கேள்விப்பட்டு இருவரை அவரிடம் அனுப்பி, “எங்களிடம் உடனே வாருங்கள்” என்று கெஞ்சிக் கேட்டார்கள். 39பேதுரு புறப்பட்டு அவர்களோடு வந்தார். வந்ததும் அவர்கள் அவரை மேல்மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். கைம்பெண்கள் அவரருகில் வந்து நின்று, தொற்கா தங்களோடு இருந்தபோது செய்துகொடுத்த எல்லா அங்கிகளையும் ஆடைகளையும் காண்பித்தவாறே அழுதார்கள். 40பேதுரு அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு முழந்தாள்படியிட்டு இறைவனிடம் வேண்டினார்; அவரது உடலின் பக்கமாகத் திரும்பி, “தபித்தா, எழுந்திடு” என்றார். உடனே அவர் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டு, எழுந்து உட்கார்ந்தார். 41பேதுரு அவருடைய கையைப் பிடித்து எழுந்து நிற்கச் செய்தார். இறைமக்களையும் கைம்பெண்களையும் கூப்பிட்டு, அவர்கள் முன் அவரை உயிருடன் நிறுத்தினார். 42இது யோப்பா நகர் முழுவதும் தெரிய வரவே ஆண்டவர் மீது பலர் நம்பிக்கை கொண்டனர். 43யோப்பாவிலுள்ள தோல் பதனிடும் சீமோன் என்பவரிடம் பேதுரு பலநாள் தங்கியிருந்தார்.


9:7 10:7. 9:15 1 கொரி 9:16,17. 9:23-25 2 கொரி 11:32,33.


9:36 ‘தொற்கா’ என்பதற்குப் ‘பெண் மான்’ என்பது பொருள்.


அதிகாரம் 10

பேதுருவும் கொர்னேலியுவும்


1செசரியா நகரில் கொர்னேலியு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் இத்தாலியா எனப்பட்ட படைப்பிரிவில் நூற்றுவர் தலைவர். 2அவர் இறைப்பற்றுள்ளவர்; தம் வீட்டார் அனைவருடனும் கடவுளுக்கு அஞ்சி நடந்தவர்; மக்களுக்கு இரக்கச் செயல்கள் பல புரிந்தவர்; இடைவிடாது கடவுளிடம் மன்றாடிவந்தவர். 3ஒரு நாள் பிற்பகல் மூன்று மணியளவில் அவர் ஒரு காட்சி கண்டார். அதில் கடவுளுடைய தூதர் அவரிடம் வந்து “கொர்னேலியு” என்று அழைப்பது தெளிவாகத் தெரிந்தது. 4அவர் வானதூதரை உற்றுப்பார்த்து, “ஆண்டவரே, என்ன?” என்று அச்சத்தோடு கேட்டார். அதற்குத் தூதர், “உமது வேண்டல்களும் இரக்கச் செயல்களும் கடவுள் திருமுன் சென்றடைந்துள்ளன; அவற்றை அவர் நினைவில் கொண்டுள்ளார். 5இப்போது யோப்பா நகருக்கு ஆள் அனுப்பிப் பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரவழையும். 6தோல் பதனிடும் சீமோன் என்பவரின் வீட்டில் அவர் விருந்தினராய் தங்கியிருக்கிறார். அவர் வீடு கடலோரத்தில் உள்ளது” என்றார். 7தம்மோடு பேசிய வானதூதர் சென்றதும் அவர் தம் வீட்டு வேலையாள்களுள் இருவரையும் தம் நம்பிக்கைக்குரிய இறைப்பற்றுள்ள படைவீரர் ஒருவரையும் கூப்பிட்டு, 8நடந்தவற்றையெல்லாம் விளக்கிச் சொல்லி அவர்களை யோப்பாவுக்கு அனுப்பினார். 9அவர்கள் வழிநடந்து மறுநாள் அந்த நகரை நெருங்கிக் கொண்டிருந்தபோது, பேதுரு இறைவனிடம் வேண்ட வீட்டின் மேல்தளத்துக்குச் சென்றார். அப்போது மணி பன்னிரண்டு. 10அவருக்குப் பசி உண்டாயிற்கு. அவர் உணவருந்த விரும்பினார். உணவு தயாராகிக் கொண்டிருக்கும்போது அவர் மெய்ம்மறந்த நிலைக்குள்ளானார்; 11வானம் திறந்திருப்தையும், பெரிய நான்கு கப்பற்பாய் போன்றதொரு விரிப்பு நான்கு முனைகளிலும் கட்டப்பட்டுத் தரையில் இறக்கப்படுவதையும் கண்டார். 12நடப்பன, தரையில் ஊர்வன, வானில் பறப்பன அனைத்தும் அதில் இருந்தன. 13அப்போது “பேதுரு, எழுந்திடு! இவற்றைக்கொன்று சாப்பிடு” என்று ஒரு குரல் கேட்டது. 14அதற்கு மறுமொழியாகப் பேதுரு, “வேண்டவே வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும் தூய்மையற்றதுமான எதையும் நான் ஒருபோதும் உண்டதேயில்லை” என்றுரைத்தார்.✠ 15இரண்டாம் முறையாக அக்குரல், “தூய்மையானது எனக் கடவுள் கருதுவதை தீட்டாகக் கருதாதே” என்று ஒலித்தது.✠ 16இப்படி மும்முறை நடந்தவுடன் அந்த விரிப்பு வானத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 17தாம் கண்ட காட்சியின் பொருள் என்ன என்பது பற்றிப் பேதுரு தமக்குள்ளே குழம்பிக் கொண்டிருந்தபோது, கொர்னேலியு அனுப்பிய ஆள்கள் சீமோன் வீட்டைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கதவருகில் வந்து நின்று, 18பேதுரு என்னும் பெயருடைய சீமோன் என்பவர் இங்குத் தங்கியிருக்கிறாரா?” என்று கூப்பிட்டுக் கேட்டனர். 19பேதுரு இக்காட்சியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது தூய ஆவியார் அவரிடம், “இதோ மூவர் உன்னைத் தேடி வந்திருக்கின்றனர்; 20நீ கீழே இறங்கித் தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு புறப்பட்டுச் செல். ஏனெனில், நான்தான் அவர்களை அனுப்பியுள்ளேன்” என்றார். 21பேதுரு கீழே இறங்கி அவர்களிடம், “நீங்கள் தேடுபவர் நான்தான். நீங்கள் வந்த காரணம் என்ன?” என்று கேட்டார். 22அதற்கு அவர்கள், “நூற்றுவர் தலைவரான கொர்னேலியு ஒரு நேர்மையாளர்; கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்; யூதமக்கள் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர்; உம்மைத் தம் வீட்டுக்கு வரவழைத்து நீர் சொல்வதைக் கேட்கவேண்டும் என்று தூய வானதூதர் அவருக்கு வெளிப்படுத்தியுள்ளார்” என்றார்கள். 23அப்போது பேதுரு அவர்களை உள்ளே அழைத்துச் சென்று விருந்தோம்பினார். மறுநாள் அவர் அவர்களுடன் புறப்பட்டுப் போனார். யோப்பாவிலுள்ள சகோதரர் சிலரும் அவரோடு சென்றனர். 24அடுத்த நாள் அவர் செசரியா நகரைச் சென்றடைந்தார். கொர்னேலியு தம் உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தார். 25பேதுரு உள்ளே வரவே, கொர்னேலியு அவரை எதிர்கொண்டு போய் அவர் காலில் விழுந்து வணங்கினார். 26பேதுரு, “எழுந்திடும்; நானும் ஒரு மனிதன்தான்” என்று கூறி அவரை எழுப்பினார்.✠ 27அவரோடு பேசியவாறே பேதுரு உள்ளே சென்றார். அங்குப் பலர் வந்திருப்பதைக் கண்டு 28அவர்களைப் பார்த்து, “ஒரு யூதன் பிற குலத்தவரிடம் செல்வதும், அவர்களோடு உறவாடுவதும் முறைகேடு என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், யாரையும் தீட்டுள்ளவர் என்றோ, தூய்மையற்றவர் என்றோ சொல்லக்கூடாது” எனக் கடவுள் எனக்குக் காட்டினார்.✠ 29ஆகவே, நீங்கள் என்னை வரவழைத்தபோது மறுப்புக் கூறாமல் வந்தேன். இப்போது சொல்லும்; எதற்காக என்னை வரவழைத்தீர்?” என்று வினவினார். 30அதற்கு கொர்னேலியு கூறியது: “மூன்று நாள்களுக்குமுன் இதே நேரத்தில், அதாவது பிற்பகல் மூன்று மணிக்கு என் வீட்டில் நான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தேன். அப்போது பளபளப்பான ஆடையணிந்த ஒருவர் என்முன் வந்து நின்றார். 31அவர் என்னிடம், “கொர்னேலியு, உம் வேண்டுதலைக் கடவுள் கேட்டருளினார். உம் இரக்கச் செயல்களை அவர் நினைவிற் கொண்டார். 32ஆகவே, நீர் யோப்பாவுக்கு ஆள் அனுப்பிப் பேதுரு என்னும் பெயருடைய சீமோனை வரவழையும். அவர் தோல் பதனிடுபவராகிய சீமோன் வீட்டில் விருந்தினராகத் தங்கியிருக்கிறார். அவ்வீடு கடலோரத்தில் உள்ளது” என்றார். 33எனவேதான், உடனே உமக்கு ஆள் அனுப்பினேன். நீரும் இங்கு வந்தது நல்லது. ஆண்டவர் பணித்த அனைத்தையும் இப்போதும் உம் வழியாகக் கேட்பதற்கு நாங்கள் யாவரும் கடவுள் திருமுன் கூடியிருக்கிறோம்.”


கொர்னேலியுவின் இல்லத்தில் பேதுருவின் உரை


34அப்போது பேதுரு பேசத் தொடங்கி, “கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன்.✠ 35எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். 36இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்றும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர்.✠ 37திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். 38கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். 39யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். 40ஆனால், கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். 41ஆயினும், அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். 42மேலும், வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். 43அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக்குறித்துச் சான்று பகர்கின்றனர்” என்றார்.


பிற இனத்தவர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுதல்


44பேதுரு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர்மீதும் தூய ஆவி இறங்கிவந்தது. 45பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனத்தில் நம்பிக்கையுடையோர் தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டதைக் கண்டு மலைத்துப் போயினர்; 46ஏனென்றால், அவர்கள் பரவசப்பேச்சுப் பேசிக் கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள். 47பேதுரு, “நம்மைப் போலத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்?” என்று கூறி, 48இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கப் பணித்தார். பின்பு அவர்கள் சில நாள் தங்களுடன் தங்கியிருக்குமாறு அவரிடம் வேண்டினார்கள்.


10:14 எசே 4:14. 10:15 தொநூ 1:31. 10:26 திப 14:15; திவெ 19:10. 10:28 திப 15:9. 10:34 இச 10:17; உரோ 2:11; 1 பேது 1:17. 10:36 எசா 52:7.


அதிகாரம் 11

எருசலேம் திருச்சபையில் பேதுருவின் அறிக்கை


1பிற இனத்தவரும் கடவுளின் வார்த்தையை ஏற்றுக் கொண்டதைப் பற்றித் திருத்தூதர்களும் யூதேயாவிலுள்ள சகோதரர் சகோதரிகளும் கேள்விப்பட்டார்கள். 2பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, விருத்த சேதனம் செய்துகொண்டவர்கள் அவரோடு வாதிட்டனர். 3“நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?” என்று குறை கூறினர். 4பேதுரு நடந்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாக விளக்கிக் கூறத் தொடங்கினார். 5“நான் யோப்பா நகரில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது மெய்ம்மறந்த நிலையில் ஒரு காட்சி கண்டேன். பெரிய கப்பற்பாயைப் போன்ற ஒரு விரிப்பு நான்கு முனைகளிலும் கட்டப்பட்டு வானத்திலிருந்து இறக்கப்பட்டு என்னிடம் வந்தது. 6அதை நான் கவனமாக நோக்கியபோது, தரையில் நடப்பன, ஊர்வன, வானில் பறப்பன, காட்டு விலங்குகள் ஆகியவற்றைக் கண்டேன். 7“பேதுரு, எழுந்திடு! இவற்றைக் கொன்று சாப்பிடு” என்னும் ஒரு குரல் ஒலிப்பதையும் கேட்டேன். 8அதற்கு நான், “வேண்டவே வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும் தூய்மையற்றதுமான எதுவும் ஒருபோதும் என் வாய்க்குள் சென்றதில்லை” என்றேன். 9இரண்டாம் முறையும் வானிலிருந்து மறுமொழியாக, “தூய்மையானது எனக் கடவுள் கருதுவதை தீட்டாகக் கருதாதே” என்று அக்குரல் ஒலித்தது. 10இப்படி மும்முறை நடந்தபின்பு யாவும் வானத்துக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டன. 11அந்நேரத்தில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூவர் நான் தங்கியிருந்த வீட்டின் முன் வந்து நின்றனர். 12தூய ஆவியார் என்னிடம், “தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு செல்” என்று கூறினார். உடனே நானும் இந்த ஆறு சகோதரர்களுமாக அந்த மனிதர் வீட்டுக்குச் சென்றோம். 13-14அவர் தம் வீட்டில் வானதூதர் வந்து நின்றதைக் கண்டதாகவும், அத்தூதர் பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரவழையும்; நீரும் உம்வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர் உம்மோடு பேசுவார் என்று தமக்குக் கூறியதாகவும் எங்களுக்கு அறிவித்தார். 15நான் பேசத் தொடங்கியதும் தூய ஆவி முதலில் நம்மீது இறங்கி வந்தது போல் அவர்கள் மீதும் இறங்கி வந்தது. 16அப்போது, “யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார்; ஆனால், நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப்பெறுவீர்கள்” என்ற ஆண்டவரின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன்.✠ 17இப்போதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டபோது நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?” என்றார்.✠ 18இவற்றைக் கேட்டு அவர்கள் அமைதி அடைந்தனர்; வாழ்வுக்கு வழியான மனமாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார் என்று கூறி அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.


அந்தியோக்கிய திருச்சபை


19ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர். அவர்கள் யூதருக்கு மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள்; வேறு எவருக்கும் அறிவிக்கவில்லை.✠ 20அவர்களுள் சைப்பிரசு, சிரேன் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலர் இருந்தனர். அவர்கள் அந்தியோக்கியாவுக்கு வந்து அங்குள்ள கிரேக்கரை அணுகி ஆண்டவராகிய இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள். 21ஆண்டவரின் கைவன்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். பெருந் தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர். 22இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்று வர அனுப்பிவைத்தார்கள். 23அவர் அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்; மேலும், உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். 24அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார். 25பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்; 26அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்து வந்தார். அவர்கள் ஒராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.

27அப்போது ஒருநாள் எருசலேமிலிருந்து இறைவாக்கினர்கள் அந்தியோக்கியாவுக்கு வந்தார்கள். 28அவர்களுள் அகபு என்னும் பெயருடைய ஒருவர் எழுந்து நின்று தூய ஆவியாரால் ஏவப்பட்டவராய் உலகமெங்கும் கொடிய பஞ்சம் ஏற்படப்போகிறது என்று முன்னுரைத்தார். அது கிளாதியு பேரரசர் காலத்தில் ஏற்பட்டது.✠ 29அப்பொழுது சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பொருளுதவியை யூதேயாவில் வாழ்ந்த சகோதரர் சகோதரிகளுக்கு அனுப்பத் தீர்மானித்தனர். 30அப்பொருளுதவியைப் பர்னபா, சவுல் ஆகியோர் வாயிலாக மூப்பர்களுக்கு அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.✠


11:16 திப 1:5. 11:17 திப 15:9. 11:19 திப 8:1-4; 21:4. 11:28 திப 21:10. 11:30 கலா 2:1.


அதிகாரம் 12

யாக்கோபு கொலை செய்யப்படுதலும் பேதுரு சிறையிடப்படுதலும்


1அக்காலத்தில் ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான். 2யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான். 3அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்பவிழா நாள்களில் நடந்தது. 4அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப்பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரிக்கலாம் என விரும்பினான்.✠ 5பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது.


பேதுரு சிறையிலிருந்து விடுவிக்கப்படல்


6ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்துகொண்டிருந்தார்கள். 7அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, “உடனே எழுந்திடும்” என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன. 8வானதூதர் அவரிடம், “இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக் கொள்ளும்” என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர் அவரிடம், “உமது மேலுடையை அணிந்து கொண்டு என்னைப் பின்தொடரும்” என்றார். 9பேதுரு வானதூதரைப் பின் தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார். 10அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம் காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரைவிட்டு அகன்றார். 11பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, “ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்” என்றார். 12அவர் யாவற்றையும் புரிந்துகொண்டவராய் மாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியாவின் வீட்டுக்குப் போனார். அங்கே பலர் ஒருங்கிணைந்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். 13அவர் வெளிக் கதவைத் தட்டியபோது ரோதி என்னும் பெயருடைய பணிப்பெண், தட்டியது யாரெனப் பார்க்க வந்தார். 14அது பேதுருவின் குரல் என்பதை உணர்ந்ததும் மகிழ்ச்சியால் வாயிலைத் திறக்காமல் உள்ளே ஓடி, பேதுரு வாயில் அருகே நிற்கிறார் என்று அறிவித்தார். 15அவர்கள் அவரை நோக்கி, “உனக்குப் பித்துப்பிடித்து விட்டதா?” என்று கேட்டார்கள். ஆனால் அவர், “அது உண்மையே” என்று வலியுறுத்திக் கூறினார். அதற்கு அவர்கள், “அது அவருடைய வானதூதராய் இருக்கலாம்” என்றார்கள்.

16பேதுரு விடாமல் தட்டிக் கொண்டேயிருந்தார். கதவைத் திறந்தபோது, அவர்கள் அவரைக் கண்டு மலைத்துப் போனார்கள். 17அவர்கள் அமைதியாயிருக்குமாறு பேதுரு கையால் சைகை காட்டி ஆண்டவர் எவ்வாறு தம்மைச் சிறையிலிருந்து வெளியே கூட்டி வந்தார் என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்து யாக்கோபுக்கும் மற்றச் சகோதரர் சகோதரிகளுக்கும் இதை அறிவிக்குமாறு கூறினார். பின்பு அவர் புறப்பட்டு வேறோர் இடத்துக்குப் போய்விட்டார். 18பொழுதுவிடிந்ததும், பேதுருவுக்கு என்ன ஆயிற்று என்பது பற்றிப் படைவீரர்களிடையே பெருங்குழப்பம் ஏற்பட்டது. 19ஏரோது அவரைத் தேடிப் பார்க்கச் செய்தான். அவரைக் காணாததால் காவலரை விசாரித்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்தான். பின்பு பேதுரு யூதாயாவைவிட்டுச் செசரியா சென்று அங்கே தங்கினார்.


ஏரோதின் சாவு


20ஏரோது தீர், சீதோன் மக்கள் மீது கடுஞ்சினம் கொண்டிருந்தான். அவர்கள் மனமொத்தவர்களாய் ஏரோதுவைக் காண வந்தார்கள். அவர்கள் அரண்மனை அந்தப்புர அதிகாரியான பிலாஸ்துவின் நல்லெண்ணத்தைப் பெற்று அரசனோடு நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ள விரும்பினார்கள். ஏனெனில், ,அரசனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்துதான் அவர்கள் உணவுப்பொருள்களைப் பெற்றுவந்தார்கள். 21குறித்த நாளில் ஏரோது அரச ஆடை அணிந்து மேடையில் அமர்ந்து அவர்களுக்கு உரையாற்றினான். 22அப்போது மக்கள், “இது மனிதக் குரல் அல்ல; கடவுளின் குரல்” என்று ஆர்ப்பரித்தனர். 23உடனே ஆண்டவரின் தூதர் அவனை அடித்தார். ஏனெனில், அவன் கடவுளைப் பெருமைப்படுத்தவில்லை; அவன் புழுத்துச் செத்தான். 24கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது. 25பர்னபாவும் சவுலும் தங்கள் திருத்தொண்டை முடித்தபின், மாற்கு எனப்படும் யோவானைக் கூட்டிக்கொண்டு, எருசலேமிலிருந்து⁕ திரும்பிச் சென்றனர்.


12:4 விப 12:1-27.


12:25 ‘எருசலேமிலிருந்து…சென்றனர்’ என்னும் சொற்றொடர் சில முக்கிய கையெழுத்துப் படிகளில் ‘எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர்’ என்று உள்ளது.


அதிகாரம் 13

4. உலகின் கடையெல்லைவரை சான்று பகர்தல்

— முதல் தூதுரைப் பயணம் —

பர்னபாவும், சவுலும் பணிக்கென அனுப்பப்படுதல்

1அந்தியோக்கியத் திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரோன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும், போதகராகவும் இருந்தனர். 2அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், “பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்” என்று கூறினார். 3அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.


சைப்பிரசில் திருத்தூதர்


4இவ்வாறு, தூய ஆவியாரால் அனுப்பப்பட்டவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றார்கள்; அங்கிருந்து சைப்பிரசுக்குக் கப்பலேறினார்கள். 5அவர்கள் சாலமி நகருக்கு வந்து அங்குள்ள யூதரின் தொழுகைக் கூடங்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்தார்கள்; யோவானைத் தங்கள் உதவியாளராகக் கொண்டிருந்தார்கள். 6அவர்கள் பாப்போவரை அந்தத்தீவு முழுவதும் சென்றார்கள்; அங்குப் பாரேசு எனும் பெயருடைய போலி இறைவாக்கினனான யூத மந்திரவாதி ஒருவனைக் கண்டார்கள். 7அவன் அத்தீவின் ஆட்சியாளரான செர்கியு பவுலைப் சேர்ந்தவன். அறிஞரான அந்த ஆட்சியாளர் கடவுளின் வார்த்தையைக் கேட்க விரும்பிப் பர்னபாவையும் சவுலையும் தம்மிடம் வரவழைத்தார். 8எலிமா என்னும் மந்திரவாதி அவர்களை எதிர்த்து நின்று ஆட்சியாளர் நம்பிக்கை கொள்ளாதபடி அவரது கவனத்தைத் திருப்ப முயன்றான். — எலிமா என்றாலே மந்திரவாதி என்பது தான் பொருள். — 9அப்போது பவுல் என்னும் சவுல் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவனை உற்றுப் பார்த்து, 10“அனைத்து வஞ்சகத்துக்கும் உறைவிடமானவனே, பழிபாவம் எதற்கும் அஞ்சாதவனே, அலகையின் மகனே, நீதி நேர்மை அனைத்துக்கும் பகைவனே, ஆண்டவரின் நேரிய வழியிலிருந்து திசைதிருப்புவதை நிறுத்தமாட்டாயோ!✠ 11இதோ, இப்போதே ஆண்டவரது தண்டனை உன்மேல் வரப்போகிறது. குறிப்பிட்ட காலம்வரை நீ பார்வையற்றவனாய் இருப்பாய்; கதிரவனைக் காணமாட்டாய்" என்றார். உடனே அவன் பார்வை மங்கியது; இருள் சூழ்ந்தது. அவன் தன்னைக் கைப்பிடித்து நடத்துவதற்கு ஆள் தேடினான். 12நடந்ததைக் கண்ட ஆட்சியாளர் ஆண்டவரின் போதனையைப் பற்றி வியப்பில் ஆழ்ந்தவராய் அவர் மீது நம்பிக்கை கொண்டார்.✠


பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியா நகரில் பவுலும் பர்னபாவும்


13பின்பு, பவுலும் அவரோடு இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பலேறி, பம்பிலியாவிலுள்ள பெருகை நகருக்கு வந்தார்கள். அங்கே யோவான் அவர்களை விட்டு அகன்று எருசலேமுக்குத் திரும்பினார். 14அவர்கள் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வு நாளன்று அவர்கள் தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள். 15திருச்சட்டமும் இறைவாக்கினர் நூல்களும் வாசித்து முடிந்தபின் தொழுகைக் கூடத் தலைவர்கள் அவர்களிடம் ஆளனுப்பி, “சகோதரரே, உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்” என்று கேட்டுக்கொண்டார்கள். 16அப்போது பவுல் எழுந்து கையால் சைகைகாட்டிவிட்டுக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள். 17இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எகிப்து நாட்டில் அந்நியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர்தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டுவந்தார்;✠ 18நாற்பது ஆண்டு காலமாய்ப் பாலை நிலத்தில் அவர்களிடம் மிகுந்த பொறுமை காட்டினார்.✠ 19-20அவர் கானான் நாட்டின்மீது ஏழு மக்களினங்களை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகள் உரிமைச் சொத்தாக அளித்தார்; அதன் பின்பு இறைவாக்கினர் சாமுவேலின் காலம்வரை அவர்களுக்கு நீதித் தலைவர்களை அளித்தார். 21பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.✠ 22பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து “ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்”

என்று சான்று பகர்ந்தார்.✠ 23தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். 24அவருடைய வருகைக்கு முன்பே யோவான், “மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்” என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார்.✠ 25யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் “நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை” என்று கூறினார்.✠ 26சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது. 27எருசலேமில் குடியிருக்கும் மக்களும் அவர்களுடைய தலைவர்களும் அம்மீட்பரை அறியவில்லை; ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைப் புரிந்து கொள்ளவில்லை; ஆயினும் அவருக்கு அவர்கள் தீர்ப்பளித்தபோது அவ்வார்த்தைகள் நிறைவேறின. 28சாவுக்குரிய காரணம் எதுவும் அவரிடம் இல்லாதிருந்தும், அவரைக் கொல்ல அவர்கள் பிலாத்திடம் கேட்டார்கள்.✠ 29மறைநூலில் அவரைப்பற்றி எழுதியுள்ள அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தார்கள். பின்பு அவரைச் சிலுவையிலிருந்து இறக்கிக் கல்லறையில் வைத்தார்கள்.✠ 30ஆனால், இறந்த அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார். 31அவர் கலிலேயாவிலிருந்து தம்முடன் எருசலேம் வந்தவர்களுக்குப் பல நாள்கள்தோன்றினார். அவர்கள் இப்போது அவர்தம் சாட்சிகளாக மக்கள் முன் விளங்குகின்றார்கள்.✠ 32இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையருக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் பிள்ளைகளாகிய நமக்கென நிறைவேற்றினார். இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி. 33இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில், “நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்”

என்று எழுதப்பட்டுள்ளது.✠ 34மேலும், இறந்த அவர் இனி ஒருபோதும் அழிவுக்குட்படாதபடி கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார். இதுபற்றித்தான் “நான் தாவீதுக்கு அருளிய தூய, மாறாத வாக்குறுதிகளை உங்களுக்கும் தருவேன்” என்றும் கூறியிருக்கிறார்.✠ 35எனவே, இன்னோர் இடத்தில் அவர், “உம் தூயவரை படுகுழியைக் காணவிடமாட்டீர்” என்றும் சொல்லியிருக்கிறார்.✠ 36ஏனென்றால், தாவீது தம் காலத்து மக்களிடையே கடவுளின் திட்டத்தை நிறைவேற்றி இறந்தார். அவர் தம் மூதாதையருடன் சேர்க்கப்பட்டார்; இவ்வாறு அழிவுக்குள்ளானார். 37ஆனால், கடவுளால் எழுப்பப்பட்டவரோ அழிவுக்குட்படவில்லை. 38எனவே, சகோதரரே, இது உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும்; இவர் வழியாகவே உங்களுக்குப் பாவ மன்னிப்பு உண்டு என அறிவிக்கப்படுகிறது. மோசேயின் திருச்சட்டத்தால் உங்களை எந்தப் பாவத்திலிருந்தும் விடுவிக்கமுடியாது. 39ஆனால், நம்பிக்கை கொள்ளும் அனைவரும் இவர்வழியாக விடுவிக்கப்படுகின்றனர். 40-41ஆகவே,

‘இழிவுபடுத்துவோரே, கவனியுங்கள், வியப்புறுங்கள், ஒழிந்து போங்கள்; ஏனெனில், உங்கள் வாழ்நாளில் நான் செயல் ஒன்றைச் செய்திடுவேன். யார் விளக்கிச் சொன்னாலும் நீங்கள் அதை நம்பமாட்டீர்கள்!’ என்று இறைவாக்கினர் நூலில் கூறியிருப்பது உங்களுக்கு நேரிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.” 42அவர்கள் வெளியே சென்றபோது, அடுத்த ஓய்வு நாளிலும் இவை பற்றித் தங்களோடு பேசும்படி மக்கள் அவர்களை வேண்டினர். 43தொழுகைக் கூடத்தில் இருந்தோர் கலைந்து சென்றபோது பல யூதர்களும் யூதம் தழுவிக் கடவுளை வழிபட்டவர்களும் பவுலையும், பர்னபாவையும் பின் தொடர்ந்தார்கள். இவ்விருவரும் அவர்களோடு பேசிக் கடவுளின் அருளில் நிலைத்திருக்கும்படி அவர்களைத் தூண்டினர். 44அடுத்து வந்த ஓய்வு நாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடி வந்தனர். 45மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள். 46பவுலும் பர்னபாவும் துணிவுடன், “கடவுளின் வார்த்தையை உங்களுக்குத் தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால், நீங்கள் அதனை உதறித் தள்ளி நிலை வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே, நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம். 47ஏனென்றால், ‘உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்’ என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்” என்று எடுத்துக் கூறினார்கள்.✠

48இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். 49அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது. 50ஆனால், யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். 51அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு இக்கோனியாவுக்குச் சென்றார்கள்.✠ 52சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.


13:10 யோவா 8:44. 13:12 மத் 22:33; லூக் 4:32. 13:17 விப 1:7; 12:51. 13:18 எண் 14:34; இச 1:31. 13:19 இச 7:1; யோசு 14:1. 13:20 நீதி 2:16; 1 சாமு 3:20. 13:21 1 சாமு 8:5; 10:21. 13:22 1 சாமு 13:14; 16:12; திபா 89:20. 13:24 மாற் 1:4; லூக் 3:3. 13:25 மத் 3:11; மாற் 1:7; லூக் 3:10; யோவா 1:20,27. 13:28 மத் 27:22,23; மாற் 15:13,14; லூக் 23:21-23; யோவா 19:15. 13:29 மத் 27:57-61; மாற் 15:42-47; லூக் 23:50-56; யோவா 19:38-42. 13:31 திப 1:2. 13:33 திபா 2:7. 13:34 எசா 55:3. 13:35 திபா 16:10. 13:40 அப 1:5. 13:47 எசா 42:6. 13:51 லேவி 12:34.


அதிகாரம் 14

இக்கோனியாவில் பவுலும் பர்னபாவும்


1இக்கோனியாவிலும் இப்படியே நிகழ்ந்தது. பவுலும் பர்னபாவும் யூதருடைய தொழுகைக் கூடத்திற்குச் சென்று இவ்வாறே பேசியபோது, யூதரிலும், கிரேக்கரிலும் பெருந் திரளானோர் நம்பிக்கை கொண்டனர். 2ஆனால், நம்பாத யூதர், சகோதரருக்கு எதிராகப் பிற இனத்தவரைத் தூண்டிவிட்டு அவர்கள் உள்ளத்தைக் கெடுத்தனர். 3ஆயினும், அவர்கள் அங்குப் பல நாள் தங்கி ஆண்டவரைப்பற்றித் துணிவுடன் பேசினார்கள். ஆண்டவரும் தம் அருள் செய்திக்குச் சான்றாகப் பல அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் அவர்கள் வழியாகச் செய்தார்.✠ 4திரண்டிருந்த நகரமக்கள் இரண்டாகப் பிரித்தனர். ஒரு பிரிவினர் யூதரோடும், மற்றப் பிரிவினர் திருத்தூதரோடும், சேர்ந்துகொண்டனர். 5பிற இனத்தாரும் யூதரும் தம் தலைவர்களுடன் சேர்ந்து திருத்தூதரை இழிவுபடுத்தி, கல்லால் எறியத் திட்டமிட்டனர்.✠ 6இதை அவர்கள் அறிந்து லிக்கவோனியாவிலுள்ள நகரங்களான லிஸ்திராவுக்கும் தெருபைக்கும் அவற்றின் சுற்றுப்புறங்களுக்கும் தப்பிச் சென்றார்கள். 7அங்கெல்லாம் அவர்கள் நற்செய்தியை அறிவித்தார்கள்.


லிஸ்திராவில் பவுலும் பர்னபாவும்


8லிஸ்திராவில் கால் வழங்காத ஒருவர் இருந்தார். பிறவிலேயே கால் ஊனமுற்றிருந்த அவர் ஒருபோதும் நடந்ததில்லை. அவர் அமர்ந்து 9பவுல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் நலம் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதைக் கண்டு பவுல் அவரை உற்றுப்பார்த்து 10உரத்த குரலில், “நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்” என்றார். அவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினார். 11பவுல் செய்ததைக் கூட்டத்தினர் கண்டு லிக்கவோனிய மொழியில், “தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்று குரலெழுப்பிக் கூறினர். 12அவர்கள் பர்னபாவைச் “சேயுசு” என்றும், அங்குப் பவுலே பேசியபடியால் அவரை “எர்மசு” என்றும் அழைத்தார்கள். 13நகருக்கு எதிரிலுள்ள சேயுசு கோவில் அர்ச்சகர் காளைகளையும் பூமாலைகளையும் கோவில் வாயிலுக்குக் கொண்டு வந்து கூட்டத்தினருடன் சேர்ந்து பலியிட விரும்பினார். 14இதைக் கேள்வியுற்ற திருத்தூதர் பர்னபாவும் பவுலும் தங்கள் மேலுடைகளைக் கிழித்துக்கொண்டு கூட்டத்துக்குள் பாய்ந்து சென்று உரக்கக் கூறியது: 15“மனிதர்களே, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்; நீங்கள் இந்தப் பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம். 16கடந்த காலங்களில் அவர் அனைத்து மக்களினங்களையும் அவரவர் வழிகளில் நடக்கும்படி விட்டிருந்தார்;✠ 17என்றாலும், அவர் தம்மைப் பற்றிய சான்று எதுவும் இல்லாதவாறு விட்டுவிடவில்லை. ஏனெனில், அவர் நன்மைகள் பல செய்கிறார்; வானிலிருந்து உங்களுக்கு மழையைக் கொடுக்கிறார்; வளமிக்க பருவ காலங்களைத் தருகிறார்; நிறைவாக உணவளித்து உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சி பொங்கச் செய்கிறார்.” 18இவற்றை அவர்கள் சொன்னபின்பு கூட்டத்தினர் தங்களுக்குப் பலியிடுவதை ஒருவாறு தடுக்க முடிந்தது. 19அப்போது அந்தியோக்கியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல் மேல் கல் எறிந்தார்கள்; அவர் இறந்து விட்டார் என்று எண்ணி நகருக்கு வெளியே அவரை இழுத்துப்போட்டார்கள்.✠ 20சீடர்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது அவர் எழுந்து நகரினுள் சென்றார். மறுநாள் அவர் பர்னபாவுடன் தெருபைக்குப் புறப்பட்டுச் சென்றார்.


சிரியாவிலுள்ள அந்தியோக்கியாவுக்குத் திரும்ப வருதல்


21அந்த நகரில் அவர்கள் நற்செய்தி அறிவித்துப் பலரைச் சீடராக்கிய பின் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். 22அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, “நாம் பலவேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்” என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். 23அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; 24பின்பு, பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். 25பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; 26அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள். 27அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள். 28அங்கே அவர்கள் சீடர்களுடன் பல நாள்கள் தங்கினார்கள்.


14:3 1 தெச 2:14; மாற் 16:17-20. 14:5 2 திமொ 3:11. 14:16 திபா 147:20. 14:19 2 கொரி 11:25; 2 திமொ 3:11.


அதிகாரம் 15

எருசலேம் சங்கம்


1யூதேயாவிலிருந்து வந்த சிலர், "நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்து கொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது” என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர்.✠ 2அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே, பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்த சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர். 3அங்கிருந்து திருச்சபையார் அவர்களை வழியனுப்பி வைத்தனர். அவர்கள் பெனிசியா, சமாரியா வழியாகச் சென்று பிற இனத்தவர் மனந்திரும்பிய செய்தியை எடுத்துரைத்தார்கள். இது சகோதரர் சகோதரிகள் அனைவரிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 4அவர்கள் எருசலேம் வந்தபோது திருச்சபையாரும், திருத்தூதர்களும், மூப்பர்களும் அவர்களை வரவேற்றார்கள். அப்போது கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள். 5ஆனால், பரிசேயக் கட்சியினருள் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட சிலர் எழுந்து, “அவர்கள் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்; மோசேயினது சட்டத்தைக் கடைப்பிடிக்க அவர்களுக்குக் கட்டளையிட வேண்டும்” என்று கூறினர். 6இதனை ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர். 7நெடு நேர விவாதத்துக்குப்பின்பு பேதுரு எழுந்து அவர்களை நோக்கிக் கூறியது: “சகோதரரே, பிற இனத்தவர் என் வாய்மொழி வழியாக நற்செய்தியைக்கேட்டு அதில் நம்பிக்கைகொள்ளும்படி கடவுள் தொடக்கத்திலேயே உங்களிடமிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். 8உள்ளங்களை அறியும் கடவுள் நமக்குத் தூய ஆவியைக் கொடுத்ததுபோல் அவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏற்றுக்கொண்டார். 9நம்பிக்கையால் அவர்களுடைய உள்ளங்களைத் தூய்மைப்படுத்தினார். நமக்கும் அவர்களுக்கும் இடையே அவர் எந்த வேறுபாடும் காட்டவில்லை. 10ஆகவே, நம் மூதாதையரோ நாமோ சுமக்க இயலாத நுகத்தை இப்போது நீங்கள் இந்தச் சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்?✠ 11ஆண்டவர் இயேசுவின் அருளால் நாம் மீட்புப் பெறுவதுபோலவே அவர்களும் மீட்புப் பெறுகிறார்கள் என நம்புகிறோம்.”

12இதைக் கேட்டு அங்குத் திரண்டிருந்தோர் யாவரும் அமைதியாயினர். கடவுள் தங்கள் வழியாகப் பிற இனத்தவரிடம் அடையாளங்களும் அருஞ்செயல்களும் செய்தார் என்பதைப் பர்னபாவும் பவுலும் எடுத்துரைத்ததை அவர்கள் கேட்டுக் கொண்டிருந்னர். 13அவர்கள் பேசி முடித்ததும், யாக்கோபு அவர்களைப் பார்த்துக் கூறியது: “சகோதரரே, நான் கூறுவதைக் கேளுங்கள். 14கடவுள் பிற இனத்தாரிடமிருந்து தமக்கென மக்களைத் தேர்ந்துகொள்ள முதலில் அவர்களைத் தேடி வந்த செய்தியைச் சீமோன் எடுத்துரைக்கக் கேட்டீர்கள். 15இறைவாக்கினர் சொற்களும் இதற்கு ஒத்திருக்கின்றன.

அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்: 16‘இவற்றுக்குப்பின் நான் திரும்பி வந்து விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் எழுப்புவேன்; அதிலுள்ள கிழிசல்களைப் பழுது பார்த்து அதைச் சீர்ப்படுத்துவேன். 17அப்பொழுது மக்களுள் எஞ்சியிருப்போரும் என் திருப்பெயரைத் தாங்கியிருக்கும் வேற்று இனத்தார் அனைவரும் ஆண்டவரைத் தேடுவர், என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.’

18தொடக்கத்திலிருந்தே இதனை அவர் தெரியப்படுத்தியுள்ளார். 19எனவே, என் முடிவு இதுவே; கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது. 20ஆனால், சிலைகளுக்குப் படைக்கப்பட்டுத் தீட்டுப்பட்டவை, கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை, இரத்தம் மற்றும் பரத்தைமை ஆகியவற்றைத் தவிர்க்குமாறு அவர்களுக்கு நாம் எழுதவேண்டும். 21மோசேயின் சட்டத்தை அறிவிப்போர் முற்காலத்திலிருந்தே எல்லா நகரங்களிலும் இருக்கின்றனர்; அதனை ஓய்வுநாள்தோறும் தொழுகைக் கூடங்களில் வாசித்தும் வருகின்றனர்.”


சங்கத்தின் தீர்மானம்


22பின்பு, திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள். 23பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள். அக்கடிதத்தில், “திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம். 24எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை.✠ 25எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம். 26இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். 27எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள். 28இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள் மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம். 29சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள்” என்று எழுதியிருந்தார்கள்.

30யூதாவும் சீலாவும் விடைபெற்று அந்தியோக்கியா வந்தனர். அங்கு மக்களைக் கூட்டிக் கடிதத்தைக் கொடுத்தனர். 31அதை வாசித்ததும் அவர்கள் ஊக்கமடைந்து மகிழ்ச்சியுற்றார்கள். 32யூதாவும் சீலாவும் இறைவாக்கினராய் இருந்ததால் சகோதரர் சகோதரிகளோடு அதிகம் பேசி ஊக்கமூட்டி அவர்களை உறுதிப்படுத்தினர். 33சிறிது காலம் அங்குத் தங்கியபின் சகோதரர் சகோதரிகளிடமிருந்து நல்வாழ்த்துகளுடன் விடைபெற்றுக் கொண்டு, தங்களை அனுப்பியவர்களிடம் சென்றனர். 34[⁕] 35பவுலும் பர்னபாவும் அந்தியோக்கியாவில் தங்கி, மற்றும் பலருடன் ஆண்டவரின் வார்த்தையைக் கற்பித்து நற்செய்தி அறிவித்து வந்தனர்.


- இரண்டாம் தூதுரைப் பயணம் -

பவுலும் பர்னபாவும் பிரிதல்

36சில நாள்களுக்குப் பின்பு பவுல் பர்னபாவிடம், “நாம் ஆண்டவரின் வார்த்தையை அறிவித்த அனைத்து நகரங்களுக்கும் திரும்பிப் போய் அங்குள்ள சகோதரர் சகோதரிகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்று கவனிப்போம், வாரும்” என்றார். 37மாற்கு எனப்படும் யோவானையும் தங்களுடன் கூட்டிச் செல்லப் பர்னபா விரும்பினார். 38ஆனால் தங்களோடு சேர்ந்து அவர் பணி செய்ய வராது, பம்பிலியாவில் தங்களைவிட்டு விலகிச் சென்று விட்டதால் அவரைக் கூட்டிச் செல்ல பவுல் விரும்பவில்லை. 39இதனால் அவர்களிடையே கடுமையான விவாதம் எழுந்தது. எனவே, இருவரும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்தனர். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு சைப்பிரசுக்குக் கப்பலேறினார். 40பவுல் சீலாவைத் தேர்ந்துகொண்டார். சகோதரர் சகோதரிகள் அருள் வழங்கும் ஆண்டவரின் பணிக்கென்று அவரை அர்ப்பணித்தனர். அவர் புறப்பட்டு, 41சிரியா, சிலிசியா வழியாகச் சென்று திருச்சபைகளை உறுதிப்படுத்தினார்.


15:1 லேவி 12:3. 15:10 மத் 23:4; கலா 5:1. 15:16-17 ஆமோ 9:11,12. 15:24 கலா 2:12.


15:34 ‘அவர்களோடு தங்கியிருக்கலாம் என்று சீலா தீர்மானித்தார்’ என்னும் வசனம் சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது.


அதிகாரம் 16

பவுல், சீலா ஆகியோருடன் திமொத்தேயு செல்லுதல்


1பின்பு, பவுல் தெருபை, லிஸ்திரா ஆகிய நகர்களை வந்தடைந்தார். லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள சீடர் ஒருவர் இருந்தார். அவருடைய தாய் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட ஒரு யூதப்பெண். தந்தையோ கிரேக்கர். 2திமொத்தேயு லிஸ்திராவிலும், இக்கோனியாவிலுமுள்ள சகோதரர் சகோதரிகளிடையே நற்சான்று பெற்றவர். 3பவுல் அவரைத் தம்முடன் கூட்டிச்செல்ல விரும்பினார். அவ்விடங்களிலுள்ள யூதரின் பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார். ஏனெனில், அனைவரும் அவருடைய தந்தை கிரேக்கர் என்று அறிந்திருந்தனர். 4அவர்கள் நகர் நகராகச் சென்றபோது எருசலேமிலுள்ள மூப்பரும் திருத்தூதரும் செய்த தீர்மானங்களை அவர்களிடம் கொடுத்துக் கடைப்பிடிக்குமாறு கூறினார். 5இவ்வாறு, திருச்சபைகள் நம்பிக்கையில் உறுதி பெற்று நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிவந்தன.


துரோவாவில் கண்ட காட்சி


6பின்பு, ஆசியாவில்⁕ இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே, அவர்கள் பிரிகிய, கலாத்தியப் பகுதிகளைக் கடந்து சென்றனர். 7அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை. 8எனவே, அவர்கள் மீசியா வழியாகச் சென்று துரொவா நகரை அடைந்தனர். 9பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, “நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்” என்று வேண்டினார். 10இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம்.


லீதியாவின் மனமாற்றம்


11பின்பு, நாங்கள் துரோவாவிலிருந்து கப்பலேறிச் சமொத்திராக்கு தீவுக்கும், மறுநாள் நெயாப்பொலி நகருக்கும் நேராகச் சென்றோம்; 12அங்கிருந்து மாசிதோனியப் பகுதியின் முக்கிய நகரான பிலிப்பி சென்றோம். அது உரோமையரின் குடியேற்ற நகரம். அந்நகரில் சிலநாள்கள் தங்கியிருந்தோம். 13ஓய்வுநாளன்று நாங்கள் நகர வாயிலுக்கு வெளியே வந்து ஆற்றங்கரைக்குச் சென்றோம். அங்கு இறைவேண்டல் செய்யும் இடம் ஏதேனும் இருக்கும் என்று எண்ணி அமர்ந்து, அங்கே கூடியிருந்த பெண்களோடு பேசினோம். 14அங்குத் தியத்திரா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் பெயர் லீதியா. செந்நிற ஆடைகளை விற்பவரான அவர் கடவுளை வழிபட்டுவந்தார். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார். 15அவரும் அவர் வீட்டாரும் திருமுழுக்குப் பெற்றனர். அதன்பின் அவர் எங்களிடம், “நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்” என்று கெஞ்சிக் கேட்டு எங்களை இணங்க வைத்தார்.


பிலிப்பி நகரில் சிறையிடப்படுதல்


16ஒரு நாள் நாங்கள் இறைவேண்டல் செய்யும் இடத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது குறி சொல்லும் ஆவியைத் தம்முள் கொண்ட அடிமைப்பெண் ஒருவர் எங்களுக்கு எதிரே வந்தார். அவர் குறி சொல்லி அதனால் தம்மை அடிமையாக வைத்திருப்பவர்களுக்கு மிகுதியான வருவாய் கிடைக்கச்செய்து வந்தார். 17அவர் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து, “இவர்கள் உன்னத கடவுளின் பணியாளர்கள்; மீட்பின் வழியை உங்களுக்கு அறிவிக்கிறவர்கள்” என்று உரக்கக் கூறினார். 18பல நாள்கள் அவர் அவ்வாறு செய்து வந்தார். பவுல் எரிச்சல் கொண்டு அவர் பக்கம் திரும்பி, “நீ இவரைவிட்டுப் போகுமாறு இயேசு கிறிஸ்துவின் பெயரால் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்று அந்த ஆவியிடம் கூறினார். அந்நேரமே அது அவரைவிட்டுச் சென்று விட்டது. 19அவரை அடிமையாக வைத்திருந்தவர்கள் இதைக் கண்டு தங்களுடைய வருவாய்க்கான வாய்ப்பெல்லாம் போய்விட்டதே என்று எண்ணிப் பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளிக்குத் தம் ஆட்சியாளரிடம் இழுத்துச் சென்றார்கள். 20அவர்கள் தலைமை நடுவர்கள் முன் அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தி, “இவர்கள் யூதர்கள்; நமது நகரில் கலகம் விளைவிக்கிறார்கள். 21உரோமையராகிய நாம் ஏற்றுக் கொள்ளவோ செயல்படுத்தவோ தகாத முறைமைகளை இவர்கள் அறிவிக்கிறார்கள்” என்றனர். 22உடனே மக்கள் திரண்டெழுந்து அவர்களைத் தாக்கினார்கள். நடுவர்கள் அவர்களுடைய மேலுடைகளைக் கிழித்து அவர்களைத் தடியால் அடிக்க ஆணையிட்டார்கள்.✠ 23அவர்களை நன்கு அடித்துச் சிறையில் தள்ளிக்கருத்தாய்க் காவல் செய்யுமாறு சிறைக்காவலர் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள்.✠ 24இவ்வாறு, கட்டளை பெற்ற அவர் அவர்களை உட்சிறையில் தள்ளி, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டிவைத்தார். 25நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினர். மற்ற கைதிகளோ இதனைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.✠ 26திடீரென ஒருபெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைக்கூடத்தின் அடித்தளமே அதிர்ந்தது. உடனே கதவுகள் அனைத்தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுந்தன. 27சிறைக் காவலர் விழித்தெழுந்து, சிறைக்கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி, வாளை உருவித் தற்கொலைசெய்துகொள்ள முயன்றார். 28பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, “நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்து கொள்ளாதீர்; நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்” என்றார். 29சிறைக் காவலர் உடனே ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொல்லி, விரைந்தோடி வந்து நடுங்கியவாறே பவுல், சீலா ஆகியோரின் காலில் விழுந்தார். 30அவர்களை வெளியே அழைத்து வந்து, “பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார். 31அதற்கு அவர்கள், “ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்” என்றார்கள். 32பின்பு, அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும் அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள். 33அவ்விரவு நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களின் காயங்களைக் கழுவினார். பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள். 34அவர் அவர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினார். கடவுள்மீது நம்பிக்கை கொண்டதால் தம் வீட்டார் அனைவரோடும் சேர்ந்து அவர் பேருவகை அடைந்தார். 35பொழுது விடிந்ததும் தலைமை நடுவர்கள் காவல் அதிகாரிகளை அனுப்பி அவர்களை விடுவிக்குமாறு கூறினார்கள். 36சிறைக் காவலர் பவுலிடம் இச்செய்தியை அறிவித்தார்; “தலைமை நடுவர்கள் உங்களை விடுதலை செய்யுமாறு சொல்லியனுப்பியுள்ளார்கள். எனவே, இப்போது நீங்கள் அமைதியுடன் புறப்பட்டுப் போங்கள்” என்றார். 37அதற்குப் பவுல், “நாங்கள் உரோமைக் குடி மக்கள். முறையான தீர்ப்பு இன்றியே அவர்கள் எங்களைப் பொதுமக்கள் முன் நையப் புடைத்துச் சிறையில் தள்ளினார்கள். இப்போது எங்களை யாருக்கும் தெரியாமல் வெளியேற்றப்பார்க்கிறார்களா? அது நடக்காது. அவர்களே வந்து எங்களை வெளியே அழைத்துச் செல்லட்டும்” என்று கூறினார்கள். 38காவல் அதிகாரிகள் இச்செய்தியைத் தலைமை நடுவர்களுக்கு அறிவித்தார்கள். அவர்கள் உரோமைக் குடிமக்கள் என்று கேட்டதும் அந்த நடுவர்கள் அஞ்சினார்கள். 39உடனே அவர்கள் வந்து அவர்களிடம் மன்னிப்புக் கோரி, தங்கள் நகரைவிட்டுப் போகுமாறு வேண்டிக்கொண்டார்கள். 40அவர்கள் சிறையிலிருந்து வெளியேறி, லீதியாவின் வீட்டுக்குச் சென்றார்கள். அங்கு சகோதரர் சகோதரிகளைக் கண்டு, அவர்களை ஊக்கப்படுத்திய பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்கள்.


16:22 பிலி 1:30; 1 தெச 2:2. 16:23 2 கொரி 11:25. 16:25 கொலோ 3:16.


16:6 ஆசியா என்பது உரோமை மாநிலங்களுள் ஒன்று. இது இன்றைய துருக்கி நாட்டின் ஒரு பகுதி ஆகும்.


அதிகாரம் 17

தெசலோனிக்காவில் கலகம்


1அம்பிப்பொலி, அப்பொலோனியா நகர்களின் வழியாக அவர்கள் தெசலோனிக்கா வந்து சேர்ந்தார்கள். அங்கே யூதருடைய தொழுகைக் கூடம் ஒன்று இருந்தது. 2தம் வழக்கத்தின்படியே பவுல் அவர்களிடம் சென்று தொடர்ச்சியாக மூன்று ஓய்வுநாள்கள் மறைநூலை அடிப்படையாக வைத்து அவர்களுடன் வாதாடினார். 3“மெசியா துன்பப்படவும், இறந்து உயிர்த்தெழவும் வேண்டும்; நான் உங்களுக்கு அறிவிக்கிற இயேசுவே அந்த மெசியா” என்று அவர்களுக்கு விளக்கிக் காட்டினார். 4அவர்களுள் சிலர் அதை நம்பி பவுல், சீலா ஆகியோருடன் சேர்ந்துகொண்டனர். கடவுளை வழிபட்ட திரளான கிரேக்கரும் மகளிருள் முதன்மையான பலரும் அவ்வாறு செய்தனர். 5ஆனால், யூதர்கள் பொறாமை கொண்டு, சந்தை வெளியில் இருந்து சில பொல்லாத பேர்வழிகளைச் சேர்த்து, கூட்டத்தைக் கூட்டி நகரில் அமளி உண்டாக்கினார்கள்; பவுலையும் சீலாவையும் தேடிக் கண்டுபிடித்து மக்களிடையே கூட்டிக் கொண்டுவருவதற்காக யாசோனுடைய வீட்டைத் தாக்கினார்கள். 6அவர்களை அங்கே காணாததால் யாசோனையும் அவரோடு சில சகோதரர்களையும் நகராட்சி மன்றத்தினரிடம் இழுத்து வந்து, “உலகமெங்கும் கலகம் உண்டாக்குகிற இவர்கள் இங்கேயும் வந்து விட்டார்கள். 7யாசோன் இவர்களைத் தன் வீட்டில் வரவேற்றிருக்கிறான். இவர்கள் அனைவரும் இயேசு என்னும் இன்னொரு அரசர் இருப்பதாகச் கூறிச் சீசருடைய சட்டங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனர்” என்று கூச்சலிட்டார்கள். 8மக்கள் கூட்டத்தினரும் நகராட்சி மன்றத்தினரும் இவற்றைக் கேட்டுக் கலக்கமுற்றனர். 9யாசோனிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பிணை பெற்றுக்கொண்டு அவர்களை விடுதலை செய்தனர்.

பெரோயாவில் திருத்தூதர்கள்


10இரவோடு இரவாக சகோதரர் சகோதரிகள் பவுலையும் சீலாவையும் பெரோயா நகருக்கு அனுப்பிவிட்டார்கள். அவர்கள் அங்கு வந்ததும் யூதருடைய தொழுகைக் கூடத்துக்குச் சென்றார்கள். 11அங்கு இருந்தவர்கள் தெசலோனிக்காவில் உள்ளவர்களைவிடப் பரந்த மனப்பான்மை உடையவர்கள். அவர்கள் முழு ஆர்வத்துடன் இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டு அவர்கள் கூறுவன மறைநூலுடன் ஒத்துள்ளதா என நாள்தோறும் ஆய்ந்து வந்தார்கள். 12அவர்களுள் பலரும் மதிப்புக்குரிய கிரேக்க மகளிர், ஆடவர் பலரும் நம்பிக்கை கொண்டனர். 13பவுல் இறைவார்த்தையைப் பெரோயாவிலும் அறிவித்ததைத் தெசலோனிக்க யூதர் அறிந்து, அங்கேயும் வந்து மக்கள் கூட்டத்தினரைக் குழப்பிக் கலகம் உண்டாக்கினர். 14உடனே சகோதரர் சகோதரிகள் பவுலைக் கடற்கரைக்குப் போகுமாறு அனுப்பி வைத்தார்கள். ஆனால், சீலாவும் திமொத்தேயுவும் அங்கேயே தங்கினர். 15பவுலுடன் சென்றவர்கள் அவரை ஏதென்சு வரை அழைத்துச் சென்றார்கள். சீலாவும் திமொத்தேயுவும் விரைவில் வந்து சேரவேண்டும் என்னும் கட்டளையைப் பவுலிடமிருந்து பெற்றுக்கொண்டு அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.

ஏதென்சில் பவுல்


16பவுல் அவர்களுக்காக ஏதென்சில் காத்திருந்தபோது, அந்நகரில் சிலைகள் நிறைந்திருப்பதைக் கண்டு மனம் கலங்கினார். 17எனவே, அவர் தொழுகைக் கூடத்தில் யூதர்களோடும் கடவுளை வழிபடுவோரோடும், சந்தை வெளிகளில் சந்தித்த மக்களோடும் ஒவ்வொரு நாளும் விவாதித்து வந்தார். 18எப்பிக்கூரர், ஸ்தோயிக்கர் ஆகிய மெய்யியல் அறிஞர்கள் சிலர் அவருடன் கலந்து உரையாடினர். வேறு சிலர், “இவன் என்னதான் பிதற்றுகிறான்?” என்றனர். அவர் இயேசுவையும் அவரது உயிர்த்தெழுதலையும் நற்செய்தியாக அறிவித்து வந்ததால் மற்றும் சிலர், “இவன் வேற்றுத் தெய்வங்களைப் பற்றி அறிவிப்பவன் போலத் தெரிகிறது” என்றனர். 19பின்பு, அவர்கள் அவரை அரயோப்பாகு என்னும் மன்றத்துக்கு அழைத்துக்கொண்டு போய், “நீர் அளிக்கும் இந்தப் புதிய போதனையைப் பற்றி நாங்கள் அறியலாமா? 20நீர் எங்களுக்குச் சொல்வது கேட்கப் புதுமையாய் உள்ளதே! அவற்றின் பொருள் என்னவென்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்” என்றார்கள். 21ஏனென்சு நகரத்தார் அனைவரும், அங்குக் குடியேறி வாழ்ந்துவந்த அந்நியரும் இதுபோன்ற புதிய செய்திகளைக் கேட்பதிலும் சொல்லுவதிலும் மட்டுமே தங்கள் நேரத்தைப் போக்கினர். 22அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று கூறியது: “ஏதென்சு நகர மக்களே, நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன். 23நான் உங்களுடைய தொழுகையிடங்களை உற்றுப்பார்த்துக் கொண்டு வந்தபோது “அறியாத தெய்வத்துக்கு” என்று எழுதப்பட்டிருந்த பலிபீடம் ஒன்றைக் கண்டேன். நீங்கள் அறியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கும் அந்த தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். 24“உலகையும், அதிலுள்ள அனைத்தையம் படைத்த கடவுள் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர். மனிதர் கையால் கட்டிய திருக்கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை. 25அனைவருக்கும் உயிரையும் மூச்சையும் மற்றனைத்தையும் கொடுப்பவர் அவரே. எனவே, மனிதர் கையால் செய்யும் ஊழியம் எதுவும் அவருக்குத் தேவையில்லை. 26ஒரே ஆளிலிருந்து அவர் மக்களினம் அனைத்தையும் படைத்து அவர்களை மண்ணுலகின் மீது குடியிருக்கச் செய்தார்; அவர்களுக்குக் குறிப்பிட்ட காலங்களையும் குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக் கொடுத்தார். 27கடவுள் தம்மை அவர்கள் தேடவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்; தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். ஏனெனில், அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார். 28அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம். உங்கள் கவிஞர் சிலர் கூறுவதுபோல, “நாம் அவருடைய பிள்ளைகளே.” 29நாம் கடவுளுடைய பிள்ளைகளாய் இருப்பதால், மனித கற்பனையாலும் சிற்ப வேலைத் திறமையாலும் உருவாக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் உருவங்களைப் போலக் கடவுள் இருப்பார் என நாம் எண்ணுவது முறையாகாது.✠ 30ஏனெனில், மக்கள் அறியாமையில் வாழ்ந்த காலத்தில் கடவுள் இதனைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், இப்போது எங்குமுள்ள மக்கள் யாவரும் மனம் மாற வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார்.✠ 31ஏனென்றால், ஒரு நாள் வரும். அப்போது தாம் நியமித்த ஒருவரைக் கொண்டு அவர் உலகத்துக்கு நேர்மையான தீர்ப்பு அளிப்பார். இறந்த அவரை உயிர்த்தெழச் செய்ததன் வாயிலாக இந்நம்பிக்கை உறுதியானதென எல்லாருக்கும் தெளிவுபடுத்தினார்.” 32“இறந்தவர் உயிர்த்தெழுதல்” என்பது பற்றிக் கேட்டதும் சிலர் அவரைக் கிண்டல் செய்தனர். மற்றவர்கள், “இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும்; கேட்போம்” என்றார்கள். 33அதன்பின் பவுல் அவர்கள் நடுவிலிருந்து வெளியே சென்றார். 34சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அவர்களுள் அரயோபாகு மன்றத்தின் உறுப்பினரான தியோனிசியுவும் தாமரி என்னும் பெண் ஒருவரும் வேறு சிலரும் அடங்குவர்.


17:24-25 1 அர 8:27; எசா 42:5. 17:29 எசா 40:18; உரோ 1:22,23. 17:30 உரோ 3:25.


அதிகாரம் 18
ABCD
அதிகாரம் 19
ABCD
அதிகாரம் 20

பவுல் மாசிதோனியா, கிரேக்க நாடு செல்லுதல்

1கலகம் ஓய்ந்தபின் பவுல் சீடர்களை வரவழைத்து அவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களை வாழ்த்தி விட்டு மாசிதோனியா புறப்பட்டுச் சென்றார். 2அந்தப் பகுதி வழியாகச் சென்று அங்குள்ளோர்க்கு அறிவுரைகள் பல கூறியபின் கிரேக்க நாடு போய்ச் சேர்ந்தார்; 3அங்கே அவர் மூன்று மாதங்கள் செலவிட்டார். பின் சிரியாவுக்குக் கப்பலேறப் போகும்போது யூதர்கள் அவருக்கு எதிராகச் சதித்திட்டமிட்டதால் அவர் மாசிதோனியா வழியாகத் திரும்பத் தீர்மானித்தார். 4பெரோயா நகர் பீருவின் மகன் சோப்பத்தர், தெசரோனிக்காவைச் சேர்ந்த அரிஸ்தர்க்கு, செக்குந்து, தெருபையைச் சேர்ந்த காயு, திமொத்தேயு, ஆசியாவைச் சேர்ந்த திக்கிக்கு, துரொப்பிம் ஆகியோரும் அவரோடு சென்றனர். 5அவர்கள் முன்னே சென்று துரோவாவில் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். 6நாங்கள் புளிப்பற்ற அப்பவிழா நாள்களுக்குப் பின்பு பிலிப்பியிலிருந்து கப்பலேறினோம். ஐந்து நாளில் துரோவாவில் இருந்த அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம். அங்கு ஏழு நாள் தங்கினோம்.


பவுல் துரோவாவுக்கு இறுதியாகச் செல்லுதல்


7வாரத்தின் முதல் நாள் அப்பம் பிடுவதற்காக நாங்கள் கூடியிருந்தோம். மறுநாள் பவுல் புறப்பட வேண்டியிருந்ததால் நள்ளிரவு வரை அவர் அவர்களோடு தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார். 8நாங்கள் கூடியிருந்த மேல் மாடியில் விளக்குகள் பல இருந்தன. 9யூத்திகு என்னும் இளைஞர் ஒருவர் பலகணியில் உட்கார்ந்திருந்தார். பவுல் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்; தூக்கத்தில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்தார்; அவரை அவர்கள் பிணமாகத்தான் தூக்கி எடுத்தார்கள். 10பவுல் கீழே இறங்கி வந்து அவர் மீது படுத்து அணைத்துக்கொண்டு, “அமளியை நிறுத்துங்கள்; இவர் உயிரோடுதானிருக்கிறார்” என்று கூறினார். 11பின் மாடிக்குச் சென்று அப்பம் பிட்டு உண்டார். பொழுது புலரும் வரை நீண்ட நேரம் அவர்களோடு உரையாடியபின் புறப்பட்டுச்சென்றார். 12உயிர்பெற்ற இளைஞரை அவர்கள் அழைத்துச்சென்று மிகவும் ஆறுதல் அடைந்தார்கள்.


துரோவாவிலிருந்து மிலேத்துவுக்குச் செல்லுதல்


13நாங்கள் கப்பலேறிப் பவுலுக்கு முன்பாக ஆசோ நகர்வரை சென்றோம். அங்கிருந்து அவரைக் கப்பலில் ஏற்றிச்செல்லவிருந்தோம். ஏனெனில், அந்நகர்வரை தரைவழியாகச் செல்ல அவர் ஏற்பாடு செய்திருந்தார். 14ஆசோவில் அவர் எங்களைச் சந்தித்தார்; அவரை ஏற்றிக்கொண்டு மித்திலேன் நகருக்குச் சென்றோம். 15அங்கிருந்து கப்பலேறி மறுநாள் கீயு தீவின் எதிர்ப்புறம் சென்றடைந்தோம். அதற்கு அடுத்த நாள் சாமு தீவுக்கும் அதற்கு அடுத்த நாள் மிலேத்து நகருக்கும் சென்றோம். 16பவுல் ஆசியாவில் காலம் தாழ்த்த விரும்பாததால் எபேசுக்குப் போகாமலே எருசலேமுக்குச் செல்லத் தீர்மானித்திருந்தார்; முடியுமானால் பெந்தக்கோஸ்து நாளில் அங்கிருக்க வேண்டும் என்று விரைவாய்ச் சென்றார்.


பவுல் எபேசு மூப்பர்களிடமிருந்து விடை பெறுதல்


17பவுல் மிலேத்துவிலிருந்து எபேசுக்கு ஆளனுப்பி, திருச்சபையின் மூப்பர்களை வரவழைத்தார். 18அவர்கள் வந்ததும் அவர்களிடம் அவர் கூறியது: “நான் ஆசியாவுக்கு வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரை எவ்வாறு உங்களிடம் நடந்து கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.✠ 19யூதர்களுடைய சூழ்ச்சிகளால் எனக்கு ஏற்பட்ட சோதனைகளின்போது மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்குப் பணிபுரிந்தேன். 20நன்மை பயக்குமொன்றையும் உங்களுக்கு நான் அறிவிக்காமல் விட்டு விடவில்லை; பொது இடங்களிலும் வீடுவீடாகவும் சென்று உங்களுக்குக் கற்றுக் கொடுத்தேன். 21நம் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளுமாறும், மனம்மாறி கடவுளிடம் வந்து சேருமாறும் நான் யூதரிடமும் கிரேக்கரிடமும் வற்புறுத்திக் கூறினேன். 22இப்போதும் தூய ஆவியாருக்குக் கட்டுப்பட்டு நான் எருசலேமுக்குச் செல்லுகிறேன். அங்கு எனக்கு என்ன நேரிடுமென்பது தெரியாது. 23சிறை வாழ்வும், இன்னல்களும் எனக்காகக் காத்திருக்கின்றன என்று தூய ஆவியார் ஒவ்வொரு நகரிலும் என்னை எச்சரித்து வருகிறார். 24என்னைப் பொறுத்த வரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை. இறையருளைப் பற்றிய நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம். 25இதுவரை நான் உங்களிடையே வந்து இறையாட்சியைப் பற்றி பறைசாற்றினேன். ஆனால், இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை என்று நான் அறிவேன். 26உங்களுள் எவரது அழிவுக்கும் நான் பொறுப்பாளியல்ல என்று இன்று நான் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். 27கடவுளின் திட்டம் எதையும் நான் உங்களுக்கு அறிவிக்காமல் விட்டுவிடவில்லை. 28தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்கு தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள். 29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். 31எனவே, விழிப்பாயிருங்கள்; மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும் இடைவிடாது கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி வந்ததை நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள். 32இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக! அவ்வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்குமுரிய உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்லது. 33எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை. 34என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடிருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். 35இவ்வாறு பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்க வேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன். அதோடு, பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவு கூருங்கள் என்றும் கூறினேன்.”✠ 36இவற்றைச் சொன்னபின் அவர் முழந்தாள் படியிட்டு அவர்களெல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினார். 37பின் எல்லாரும் பவுலைக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கதறி அழுதனர். 38“இனி மேல் நீங்கள் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை” என்று அவர் கூறியது அவர்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது. பிறகு அவர்கள் கப்பல்வரைக்கும் சென்று அவரை வழியனுப்பி வைத்தனர்.


20:18 2 கொரி 1:8,9. 20:35 எபே 4:28.


அதிகாரம் 21

பவுல் எருசலேமுக்குச் செல்லுதல்

1நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து கப்பல் ஏறி நேராகக் கோசு தீவு வந்தடைந்தோம். மறு நாள் நாங்கள் ரோதுக்கும் அங்கிருந்து பத்தாராவுக்கும் சென்றோம். 2அங்கு பெனிசிய நாட்டுக்குச் செல்லும் கப்பலொன்றைக் கண்டு, அதில் ஏறிப் பயணம் செய்தோம். 3வழியில் சைப்பிரசு தென்பட்டது. அங்கே போகாமல் அதன் இடப் புறமாக, சிரியா சென்று பின், தீர் நகரை அடைந்தோம். அங்கே கப்பலிலுள்ள சரக்கு இறக்கப்பட்டது. 4அங்குச் சில சீடர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களோடு ஏழு நாள் தங்கினோம். அவர்கள் தூய ஆவியால் தூண்டப்பட்டு, பவுலிடம் எருசலேம் செல்லக் கப்பலேற வேண்டாமெனக் கூறினர். 5அந்த நாள்கள் முடிந்தபின் நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். அவர்கள் அனைவரும் மனைவி மக்களோடு நகரின் எல்லை வரை எங்களை வழி அனுப்பி வைக்குமாறு வந்தார்கள். கடற்கரையில் நாங்கள் முழந்தாள் படியிட்டு இறைவனிடம் வேண்டினோம். 6பின் ஒருவரிடமொருவர் பிரியா விடை பெற்றுக் கொண்டு கப்பலில் ஏறினோம். அவர்கள் அவரவர் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள். 7நாங்கள் தீர் நகரிலிருந்து எங்கள் கடல் பயணத்தைத் தொடர்ந்து தாலமாய் வந்தடைந்தோம். அங்குள்ள சகோதரர் சகோதரிகளை வாழ்த்தி ஒரு நாள் அவர்களுடன் தங்கியிருந்தோம். 8மறுநாள் நாங்கள் புறப்பட்டுச் செசரியா வந்தோம். நற்செய்தி அறிவிப்பவரான பிலிப்பின் வீட்டுக்குச் சென்று அவருடன் தங்கினோம். அவர் திருத்தொண்டர் எழுவருள் ஒருவர். 9அவருக்குத் திருமணமாகா நான்கு பெண் மக்கள் இருந்தனர். அவர்கள் இறைவாக்குரைத்து வந்தார்கள். 10நாங்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தோம். அப்போது அகபு என்னும் பெயர் கொண்ட இறைவாக்கினர் ஒருவர் யூதேயாவிலிருந்து வந்தார். 11அவர் எங்களிடம் வந்து பவுலின் இடைக் கச்சையை எடுத்து தம் கைகளையும் கால்களையும் கட்டிக் கொண்டு, “இந்தக் கச்சைக்குரியவரை எருசலேமில் யூதர்கள் இவ்வாறு கட்டிப் பிற இனத்தாரிடம் ஒப்புவிப்பார்கள். தூய ஆவியார்தாமே இப்படிக் கூறுகிறார்” என்றார். 12இவற்றைக் கேட்டதும் நாங்களும் அவ்விடத்தாரும் பவுலை எருசலேமுக்குச் செல்ல வேண்டாமெனக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம். 13அதற்குப் பவுல் மறுமொழியாக, “நீங்கள் அழுது ஏன் என் உள்ளத்தை உடைக்கிறீர்கள்? நான் ஆண்டவர் இயேசுவின் பெயருக்காக எருசலேமில் கட்டப்படுவதற்கு மட்டுமல்ல, சாவதற்கும் தயார்” என்றார். 14அவரை நாங்கள் இணங்க வைக்க முடியாது போகவே, “ஆண்டவரின் திருவுளப்படி நடக்கட்டும்” எனக்கூறிப் பேசாமலிருந்து விட்டோம். 15இந்நாள்களுக்குப் பின்பு நாங்கள் பயண ஏற்பாடுகளைச் செய்து எருசலேமுக்குச் சென்றோம். 16செசரியாவிலிருந்து சீடர் சிலரும் எங்களுடன் வந்தனர். சைப்பிரசு தீவைச் சேர்ந்த தொடக்க காலச் சீடரான மினாசோவின் வீட்டில் நாங்கள் விருந்தினராகத் தங்குமாறு அழைத்துச் செல்லப்பட்டோம்.


எருசலேம் நகரில் பவுல்

பவுல் யாக்கோபைச் சந்தித்தல்

17நாங்கள் எருசலேம் சென்று சேர்ந்தபோது சகோதர் சகோதரிகள் எங்களை மகிழ்வுடன் வரவேற்றார்கள். 18மறுநாள் பவுல் எங்களைக் கூட்டிக் கொண்டு யாக்கோபிடம் சென்றார். அங்கு அனைத்து மூப்பரும் வந்திருந்தனர். 19பவுல் அவர்களை வாழ்த்திய பின் தம் திருப்பணி மூலம் கடவுள் பிற இனத்தாரிடம் செய்தவற்றை ஒவ்வொன்றாக விளக்கினார். 20இதைக் கேட்டவர்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள். எனினும், அவர்கள் அவரிடம், “சகோதரரே! யூதருள் எத்தனையோ ஆயிரம்பேர் நம்பிக்கை கொண்டுள்ளதையும் அவர்கள் அனைவரும் திருச்சட்டத்தின்மீது ஆர்வமுடையவர்களாயிருப்பதையும் நீர் பார்க்கிறீர் அல்லவா? 21நீர் பிற இனத்தாரிடையே வாழும் யூதர் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டியதில்லையென்றும் நம் முறைமைகளின் படி நடக்க வேண்டியதில்லையென்றும் கூறி மோசேயின் சட்டத்தை விட்டு விலகுமாறு கற்றுக் கொடுப்பதாக உம்மைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். 22நீர் வந்திருப்பது பற்றி இங்குள்ள யூதர்கள் எப்படியும் கேள்விப்பட்டிருப்பார்கள்” என்று கூறினார்கள். அவர்கள், “இப்போது என்ன செய்வது?” என்று சிந்தித்துக் கொண்டே, 23“நாங்கள் உமக்குக் கூறுவதை நீர் செய்யும். பொருத்தனை செய்து கொண்ட நான்கு பேர் எங்களிடையே உள்ளனர். 24இவர்களைக் கூட்டிக் கொண்டு போய், இவர்களோடு சேர்ந்து தூய்மைச் சடங்கு செய்துகொள்ளும். அவர்கள் முடிவெட்டுவதற்கான செலவை நீரே ஏற்றுக்கொள்ளும். இதனால் நீர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து நடப்பவர் என்றும் உம்மைப்பற்றிக் கேள்விப்பட்டவைகளில் உண்மை எதுவும் இல்லை என்றும் அனைவரும் தெரிந்து கொள்வர். 25சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தமையை ஆகியவற்றை நம்பிக்கை கொண்ட பிற இனத்தவர் தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்து அவர்களுக்கு எழுதியுள்ளோம்” என்று அவரிடம் கூறினார்கள்.✠ 26மறுநாள் பவுல் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களோடு சேர்ந்து தாமும் தூய்மைச் சடங்கு செய்துகொண்டார். பின் கோவிலுள் சென்று எப்போது தூய்மைச் சடங்கு காலம் நிறைவு பெறுகிறது என்றும் எப்போது அவர்களுள் ஒவ்வொருவருக்காகவும் பலி செலுத்தப்படும் என்றும் தெரியப்படுத்தினார்.


கோவிலுள் பவுல் கைது செய்யப்படுதல்


27அந்த ஏழு நாள்களும் முடியப் போகும் வேளையில் ஆசியாவிலுள்ள யூதர் கோவிலுள் பவுலைக் கண்டனர். உடனே அவர்கள் மக்கள் கூட்டம் முழுவதையும் தூண்டிவிட்டுப் பவுலைப் பிடித்து, 28“இஸ்ரயேல் மக்களே! உதவ வாருங்கள்; மக்களுக்கும் திருச்சட்டத்துக்கும் இந்த இடத்துக்கும் எதிராக எல்லா இடங்களிலும் கற்பிப்பவன் இந்த மனிதன்தான்; மேலும் கிரேக்கரைக் கோவிலுக்குள் கூட்டி வந்து இந்தத் தூய்மையான இடத்தை தீட்டுப்படுத்தியுள்ளான்” என்று கத்தினார்கள். 29ஏனெனில், அவர்கள் எபேசியரான துரொப்பியம் என்பவரை அவரோடு நகரில் கண்டிருந்தனர். பவுல் அவரைக் கோவிலுக்குள் கூட்டிக்கொண்டு போயிருப்பார் என்று நினைத்துக் கொண்டனர். 30நகரெங்கும் கலகம் உண்டாயிற்று. மக்கள் கூட்டமாய் ஓடிச்சென்று பவுலைப் பிடித்துக் கோவிலின் வெளியே இழுத்து வந்து கதவுகளை அடைத்தனர். 31அவர்கள் அவரைக் கொலை செய்ய வழி தேடியபோது எருசலேம் நகரம் முழுவதும் குழப்பம் நிலவுகிறது என்ற செய்தி படைப்பிரிவின் ஆயிரத்தவர் தலைவருக்கு எட்டியது. 32உடனே அவர் போர் வீரர்களையும் நூற்றுவர் தலைவர்களையும் கூட்டிக்கொண்டு ஓடி வந்தார். ஆயிரத்தவர் தலைவரையும் அவரோடு போர்வீரர்களையும் கண்டதும் பவுலை அடிப்பதை மக்கள் நிறுத்தினார்கள். 33ஆயிரத்தவர் தலைவர் அருகில் வந்து பவுலைப் பிடித்து இரு சங்கிலிகளால் கட்டுமாறு ஆணை பிறப்பித்தார்; பின்பு “இவன் யார்? என்ன செய்தான்?” என்று வினவினார். 34கூட்டத்திலிருந்தவர்களில் சிலர் இப்படியும் சிலர் அப்படியமாகக் கூச்சலிட்டனர். அமளி மிகுதியால் உறுதியாய் எதுவும் தெரிந்துகொள்ள முடியாதவராய் ஆயிரத்தவர் தலைவர் பவுலைக் கோட்டைக்குள் கூட்டிச் செல்லுமாறு ஆணை பிறப்பித்தார். 35பவுல் படிக்கட்டுகளை அடைந்தபோது மக்கள் கூட்டம் கட்டுங்கடங்காததாய் இருந்ததால் படைவீரர் அவரைத் தூக்கிக்கொண்டு மேலே செல்ல நேரிட்டது. 36ஏனெனில், “இவன் ஒழிக!” என்று கத்திக்கொண்டே அங்குத் திரண்டிருந்த மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர்.


பவுல் தம் நிலையை விளக்குதல்


37அவர்கள் பவுலைக் கோட்டைக்குள் கூட்டிச் செல்லவிருந்தபோது பவுல் ஆயிரத்தவர் தலைவரிடம், “நான் உம்மோடு பேசலாமா?” என்று கேட்க அவர், “உனக்குக் கிரேக்க மொழி தெரியுமா?” என்றார். 38“அப்படியானால் சிலநாள்களுக்கு முன்னால் கலகம் செய்து கத்தி ஏந்திய நாலாயிரம் பேரைப் பாலை நிலத்துக்குக் கூட்டிச் சென்ற எகிப்தியன் நீ தானோ?” என்று கேட்டார். 39அதற்குப் பவுல், நான் ஒரு யூதன்; சிலிசியாவிலுள்ள தர்சு நகரைத்தைச் சேர்ந்தவன். புகழ் பெற்ற அந்நகரத்தின் குடிமகன்; மக்களிடம் இப்போது பேச அனுமதி வேண்டுகிறேன்” என்றார். 40பவுல் அனுமதி பெற்றுப் படிக்கட்டுகளில் நின்று கொண்டு மக்களை நோக்கிக் கையால் சைகை காட்டினார். மிகுந்த அமைதி உண்டாயிற்று. பின் பவுல் எபிரேய மொழியில் உரையாற்றத் தொடங்கினார்.


21:23-24 எண் 6:13-21. 21:25 திப 15:29.


அதிகாரம் 22

1பவுல், “சகோதரரே, தந்தையரே! உங்கள் குற்றச்சாட்டுக்கு நான் கூறப்போகும் விளக்கத்தைக் கேளுங்கள்” என்றார். 2அவர் எபிரேய மொழியில் உரையாற்றுவதை அவர்கள் கேட்டபோது இன்னும் மிகுதியான அமைதி உண்டாயிற்று. பவுல் தொடர்ந்து கூறியது: 3“நான் ஒரு யூதன்; சிலிசியாவிலுள்ள தர்சு நகரத்தில் பிறந்தவன்; ஆனால், இந்த எருசலேம் நகரில் வளர்க்கப்பட்டவன்; கமாலியேலின் காலடியில் அமர்ந்து நம் தந்தையரின் திருச்சட்டங்களில் நுட்பமாகப் பயிற்சி பெற்றவன்; நீங்கள் அனைவரும் இன்று கடவுள் மீது ஆர்வம் கொண்டுள்ளது போன்று நானும் கொண்டிருந்தேன். 4கிறிஸ்தவ நெறியைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையிலடைத்தேன்; சாகும் வரை அவர்களைத் துன்புறுத்தினேன். 5தலைமைக் குருவும் மூப்பர் சங்கத்தாரும் இதற்குச் சாட்சி. இவர்களிடமிருந்து தமஸ்கு நகரிலுள்ள சகோதரர்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டு அங்குள்ள கிறிஸ்தவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டு வந்து தண்டிப்பதற்காக அங்குச் சென்றேன். 6நான் புறப்பட்டுத் தமஸ்கு நகரை நெருங்கியபோது நண்பகல் நேரத்தில் திடீரென வானிலிருந்து ஒரு பேரொளி என்னைச் சூழ்ந்து வீசியது. 7நான் தரையில் விழுந்தேன். அப்போது, “சவுலே, சவுலே நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்ற குரலைக் கேட்டேன். 8அப்போது நான், “ஆண்டவரே நீர் யார்?” என்று கேட்டேன். அவர், “நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே” என்றார். 9என்னோடிருந்தவர்கள் ஒளியைக் கண்டார்கள்; ஆனால், என்னோடு பேசியவரது குரலைக் கேட்கவில்லை. 10ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?” என நான் கேட்க, ஆண்டவர் என்னை நோக்கி, “நீ எழுந்து தமஸ்குவுக்குச் செல். நீ செய்வதற்கென குறிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அங்கே உனக்குக் கூறப்படும்” என்றார். 11அந்த ஒளியின் மிகுதியால் நான் பார்க்க முடியவில்லை. என்னோடியிருந்தவர்கள் எனது கையைப் பிடித்துத் தமஸ்குவினுள் அழைத்துச் சென்றார்கள். 12அங்கு அனனியா என்னும் ஒருவர் இருந்தார். அவர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்; அங்கு வாழ்ந்து வந்த யூதர் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர். 13அவர் என்னிடம் வந்து அருகில் நின்று, “சகோதரர் சவுலே, மீண்டும் பார்வையடையும்” என்றார். அந்நேரமே நான் பார்வை பெற்று அவரைப் பார்த்தேன். 14அப்போது அவர், “நம் மூதாதையரின் கடவுள் தம் திருவுளத்தை அறியவும் தம் நேர்மையாளரைக் காணவும் தம் வாய்மொழியைக் கேட்கவும் உம்மை ஏற்படுத்தியுள்ளார். 15ஏனெனில், நீர் கண்டவைகளுக்கும் கேட்டவைகளுக்கும் அனைவர் முன்பும் நீர் சாட்சியாய் இருக்க வேண்டும். 16இனி ஏன் காலம் தாழ்த்த வேண்டும்? எழுந்து அவரது திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப் பெற்றுத் திருமுழுக்குப் பெறும்” என்றார். 17பின்பு நான் எருசலேம் திரும்பி வந்தேன். கோவிலில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது நான் மெய்ம்மறந்த நிலைக்குள்ளானேன். 18ஆண்டவரை நான் கண்டேன், அவர் என்னிடம், “நீ உடனே எருசலேமை விட்டு விரைவாகப் புறப்படு. ஏனெனில், என்னைப் பற்றி நீ அளிக்கும் சான்றை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்றார். 19-20அதற்கு நான், ‘ஆம் ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை கொண்டோரை நான் சிறையிலடைத்தேன்; தொழுகைக் கூடங்களில் அவர்களை நையப் புடைத்தேன்; உம் சாட்சியாம் ஸ்தேவான் கொலை செய்யப்பட்டபோது நான் அங்கு நின்று உடன்பட்டு, அவரைக் கொலை செய்தோரின் மேலுடைகளைக் காவல் செய்து கொண்டிருந்தேன். இவை அனைத்தும் அங்குள்ளோருக்குத் தெரியும்’ என்றேன். 21அவர் என்னை நோக்கி, ‘புறப்படு! தொலையிலுள்ள பிற இனத்தவரிடம் நான், உன்னை அனுப்புகிறேன்’ என்றார்.”


பவுலும் ஆயிரத்தவர் தலைவரும்


22இதுவரைக்கும் பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள், “இவனை அடியோடு ஒழியுங்கள்; இவன் வாழத் தகுதியற்றவன்” என்று கத்தினார். 23இவ்வாறு கூச்சலிட்டுக் கொண்டே தங்கள் மேலுடைகளை வீசி எறிந்து, புழுதி வாரி இறைத்தார்கள். 24மக்கள் இவ்வாறு கூச்சலிடுவதின் காரணத்தை ஆயிரத்தவர் தலைவர் அறிய விரும்பி அவரைக் கோட்டைக்குள் அழைத்துச் சாட்டைகளால் அடித்து விசாரணை செய்ய ஆணை பிறப்பித்தார். 25அவர்கள் அவரைச் சாட்டையால் அடிப்பதற்கென்று கட்டியபொழுது பவுல் அங்கு நின்ற நூற்றுவர் தலைவரிடம், “உரோமைக்குடி மகன் ஒருவரைச் சாட்டையால் அடிப்பது, அதுவும் முறையான தீர்ப்பின்றி அடிப்பது சட்டப்படி செல்லுமா?” என்று கேட்டார். 26இதைக் கேட்டதும் நூற்றுவர் தலைவர் ஆயிரத்தவர் தலைவரிடம் சென்று பவுல் கூறியதை அறிவித்து, “என்ன செய்யப் போகிறீர்? இவர் ஓர் உரோமைக் குடிமகன் அல்லவா?” என்றார். 27ஆயிரத்தவர் தலைவர் பவுலிடம், “நீர் ஓர் உரோமைக் குடிமகன்தானா? கூறும்” என்றார். அவர், “ஆம்” என்றார். 28அதற்கு ஆயிரத்தவர் தலைவர் மறுமொழியாக, “நான் இக்குடியுரிமையை ஒரு பெருந்தொகை கொடுத்தல்லவா பெற்றுக் கொண்டேன்” என்றார். அதற்குப் பவுல், “நான் ஓர் உரோமைக் குடிமகனாகவே பிறந்தேன்” என்றார். 29உடனே அவரை விசாரணை செய்யவிருந்தவர்கள் அவரைவிட்டு விலகினார்கள். ஆயிரத்தவர் தலைவரோ தாம் கட்டி வைத்திருந்தவர் உரோமைக்குடி மகன் என அறிந்ததும் அச்சமுற்றார்.


தலைமைச் சங்கத்தின் முன் பவுல்


30யூதர்கள் பவுல்மீது என்ன குற்றம் சுமத்துகிறார்கள் என்பதை உறுதியாக அறிய ஆயிரத்தவர் தலைவர் விரும்பினார். எனவே, மறுநாள் தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு அவர் ஆணை பிறப்பித்துப் பவுலைச் சிறையிலிருந்து கொண்டு வந்து அவர்கள் முன் நிறுத்தினார்.


22:4-5 திப 8:3; 26:9-11. 22:20 திப 7:58; 8:1; 26:10.


அதிகாரம் 23

1பவுல் தலைமைச் சங்கத்தாரை உற்றுப் பார்த்து, “சகோதரரே! நான் இந்நாள்வரை கடவள் முன்னிலையில் என் மனச்சான்றுக்கிசைய முற்றிலும் நேர்மையாக வாழ்ந்து வந்தேன்” என்றார். 2அப்பொழுது தலைமைக் குருவாகிய அனனியா அவரது வாயில் அடிக்கும்படியாக அருகில் நிற்பவர்களைப் பணித்தார். 3பவுல் அவரிடம், “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே! கடவுள் உம்மை அடிப்பார். திருச்சட்டத்தின்படி எனக்குத் தீர்ப்பளிக்க அமர்ந்திருக்கும் நீர் அச்சட்டத்துக்கு முரணாக என்னை அடிக்க எப்படி ஆணை பிறப்பிக்கலாம்?” என்று கேட்டார். 4அருகில் நின்றவர்கள், “கடவுளின் தலைமைக் குருவைப் பழிக்கிறாயே?" என்று கேட்டார்கள். 5அதற்குப் பவுல், “சகோதரரே! இவர் தலைமைக் குரு என்று எனக்குத் தெரியாது. ஏனெனில், ‘உன் மக்களின் தலைவரைச் சபிக்காதே’ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.✠ 6அவர்களுள் ஒரு பகுதியினர் சதுசேயர் என்றும், மறுபகுதியினர் பரிசேயர் என்றும் பவுல் அறிந்து, “சகோதரரே! நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்; இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன்” என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார்.✠ 7அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே, அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர். 8சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்; பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்.✠ 9அங்குப் பெருங்கூச்சல் எழுந்தது. பரிசேயப் பிரிவினைச்சேர்ந்த மறைநூல் அறிஞருள் சிலர் எழுந்து, “இவரிடம் தவறொன்றையும் காணோமே! வானதூதர் ஒருவரோ, ஓர் ஆவியோ இவரோடு பேசியிருக்கலாம் அல்லவா!” என வாதாடினர். 10வாக்குவாதம் முற்றவே அவர்கள் பவுலைப் பிய்த்தெறிந்து விடுவர் என ஆயிரத்தவர் தலைவர் அஞ்சி படைவீரரை வரச்சொல்லி அவரை அவர்கள் நடுவிலிருந்து பிடித்துக் கோட்டைக்குள் கூட்டிக்கொண்டு செல்லுமாறு ஆணை பிறப்பித்தார். 11மறுநாள் இரவு ஆண்டவர் அவரருகில் நின்று, “துணிவோடிரும்; எருசலேமில் என்னைப்பற்றி சான்று பகர்ந்தது போல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்” என்றார்.


பவுலுக்கெதிரான சூழ்ச்சி


12பொழுது விடிந்ததும் யூதர்கள் ஒன்று கூடி, “நாங்கள் பவுலைக் கொல்லும் வரை உண்ணவோ, குடிக்கவோ மாட்டோம்” எனத் தங்களிடையே சூளுரைத்துக் கொண்டார்கள். 13இவ்வாறு, சூழ்ச்சி செய்தவர்கள் எண்ணிக்கை நாற்பதுக்குக் கூடுதல் இருக்கும். 14அவர்கள் தலைமைக் குருவிடமும் மூப்பரிடமும் சென்று, “நாங்கள் பவுலைக் கொல்லும் வரை எதுவும் உண்ண மாட்டோம் என்று ஆணையிட்டுச் சூளுரைத்துள்ளோம். 15எனவே, இப்போது நீங்களும் தலைமைச் சங்கத்தாரும் மிகக் கருத்தாய் விசாரிக்கும் நோக்குடன் அவரை உங்களிடம் கூட்டிக்கொண்டு வருவதாக ஆயிரத்தவர் தலைவரிடம் தெளிவுபடுத்துங்கள். அவர் உங்களிடம் வந்து சேருமுன் அவரைக் கொன்றுவிட நாங்கள் ஆயத்தமாயிருப்போம்” என்றார்கள். 16இச் சூழ்ச்சியைப் பற்றிப் பவுலின் சகோதரி மகன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள் சென்று இதனைப் பவுலிடம் அறிவித்தார். 17பவுல் நூற்றுவர் தலைவர்களுள் ஒருவரை வரவழைத்து, “இந்த இளைஞரை ஆயிரத்தவர் தலைவரிடம் கூட்டிச் செல்லுங்கள். அவரிடம் இவர் ஏதோ ஒன்று அறிவிக்க வேண்டுமாம்” என்றார். 18அவரும் அந்த இளைஞரை ஆயிரத்தவர் தலைவரிடம் கூட்டிச் சென்று அவரிடம், “கைதியான பவுல் என்னை வரவழைத்து இந்த இளைஞரை உம்மிடம் கூட்டிக் கொண்டு வருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். இவர் ஏதோ ஒன்று உம்மிடம் சொல்ல வேண்டுமாம்” என்றார். 19ஆயிரத்தவர் தலைவர் அவர் கையைப் பிடித்துத் தனியே கூட்டிச் சென்று, “நீ என்னிடம் என்ன அறிவிக்க வேண்டும்?” என்று வினவினார். 20அவர், “யூதர்கள் பவுலை மிகக் கருத்தாய் விசாரிக்கும் நோக்கம் உடையவர்கள் போல் அவரைத் தலைமைச் சங்கத்திற்கு நாளை கொண்டுவர உம்மைக் கேட்டுக் கொள்ள வேண்டுமென உடன்பாடு செய்து கொண்டுள்ளார்கள். 21நீர் அவர்களுக்கு இணங்க வேண்டாம். ஏனெனில், அவர்களுள் நாற்பதுக்கும் அதிகமானோர் சூழ்ச்சி செய்து நாங்கள் பவுலைக் கொல்லும் வரை உண்ணவும், குடிக்கவும் மாட்டோம் எனச் சூளுரைத்துள்ளனர். உம்முடைய முடிவை அறிந்து கொள்ளத் தகுந்த ஏற்பாடுகளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னார். 22அப்போது ஆயிரத்தவர் தலைவர் இளைஞரிடம், “இவற்றை என்னிடம் தெரிவித்ததாக நீர் எவருக்கும் சொல்லாதீர்” என்று கூறி அவரை அனுப்பிவிட்டார்.


பவுல் செசரியாவுக்கு ஆளுநர் பெலிக்சிடம் அனுப்பப்படுதல்


23பின்பு, ஆயிரத்தவர் தலைவர் நூற்றுவர் தலைவருள் இருவரை வரவழைத்து, “இருநூறு படை வீரருடனும் எழுபது குதிரை வீரருடனும் இரவு ஒன்பது மணிக்குச் செசரியா செல்லுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். 24பவுலை ஏற்றிச் செல்ல விலங்குகளையும் பார்த்து வையுங்கள். அவரை ஆளுநர் பெலிக்சிடம் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார். 25அவர் பெலிக்சுக்குப் பின்வருமாறு ஒரு கடிதத்தையும் எழுதினார்; 26“மாண்புமிகு ஆளுநர் பெலிக்சு அவர்களுக்குக் கிலவுதியு லீசியாவின் வாழ்த்துக்கள். 27யூதர்கள் இம்மனிதரைப் பிடித்துக் கொல்லவிருந்த நேரத்தில், இவர் ஒரு உரோமைக் குடிமகன் என்பதை அறிந்து படைவீரர்களுடன் சென்று இவரை நான் விடுவித்தேன். 28அவர்கள் இனிமேல் குற்றம் சாட்டக் காரணம் என்ன என்று அறிந்து கொள்ள நான் இவரைத் தலைமைக் சங்கத்துக்குக் கூட்டிச் சென்றேன். 29அவர்களுடைய திருச்சட்டம் சார்ந்த கருத்து வேறுபாடுகளின் காரணமாகத்தான் இவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். சாவுக்கோ சிறைத் தண்டனைக்கோ உரிய குற்றம் எதையும் இவரிடத்தில் நான் காணவில்லை. 30இவருக்கு எதிராக யூதர்கள் சூழ்ச்சி செய்திருக்கிறார்கள் என்னும் செய்தி எனக்கு தெரிவிக்கப்பட்ட உடனே இவரை உம்மிடம் அனுப்பி வைக்கிறேன். இவருக்கு எதிராக குற்றம் சாட்டியோர் கூற வேண்டியவற்றை உம்முன் வந்து கூறவும் கட்டளையிட்டுள்ளேன்.”

31படைவீரர்கள் தங்களுக்குப் பணிக்கப்பட்டவாறே இரவிலேயே பவுலைக் கூட்டிக் கொண்டு அந்திப் பத்திரிக்குப் போனார்கள். 32மறுநாள் குதிரை வீரரைப் பவுலுடன் அனுப்பி விட்டு மற்றவர்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள். 33அவர்கள் செசரியா வந்தபோது அக்கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துப் பவுலையும் அவர்முன் நிறுத்தினார்கள். 34ஆளுநர் கடிதத்தை வாசித்தபின் பவுல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரெனக் கேட்டு அவர் சிலிசியாவைச் சேர்ந்தவரென அறிந்து கொண்டார். 35பின்பு “உன்னைக் குற்றம் சாட்டுபவர்கள் இங்கு வந்து சேர்ந்ததும் நான் உன் வழக்கைக் கேட்பேன்” என்று கூறி ஏரோதின் மாளிகையில் அவரைக் காவலில் வைக்குமாறு ஆணை பிறப்பித்தார்.


23:5 விப 22:28. 23:6 திப 26:5; பிலி 3:5. 23:8 மத் 22:23; மாற் 12:18; லூக் 20:27.


அதிகாரம் 24

பவுலுக்கு எதிரான வழக்கு


1ஐந்து நாட்களுக்குப்பின் தலைமைக்குருவான அனனியாவும் சில மூப்பர்களும் வழக்குரைஞரான தெர்த்துல் என்பவரும் வந்து பவுலுக்கெதிராக ஆளுநரிடம் முறையிட்டார்கள். 2-3தெர்த்துல் அழைக்கப்பட்டபோது, அவர் குற்றம் சாட்டத் தொடங்கிக் கூறியது: “மாண்புமிகு பெலிக்சு அவர்களே! உம்மால் தான் நாட்டில் பேரமைதி நிலவுகிறது. உம் தொலை நோக்கால்தான் இந்நாடு எல்லா இடங்களிலும் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. இதனை நாங்கள் மிக்க நன்றியுணர்வோடு ஏற்றுக் கொள்கிறோம். 4இனியும் உம்முடைய நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. நான் கூற விரும்புவதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்; நீர் பொறுமையுடன் கேட்குமாறு வேண்டிக்கொள்கிறேன். 5தொல்லை கொடுக்கும் இந்த மனிதனை நாங்கள் கண்டுபிடித்தோம். இவன் உலகம் முழுவதிலுமுள்ள யூதர் அனைவரிடையேயும் கலகமூட்டி வருகிறான்; நசரேயக் கட்சியினரின் தலைவனாகவும் செயல்படுகிறான். 6aதிருக்கோவிலை இவன் தீட்டுப்படுத்த முயன்றபோது இவனை நாங்கள் பிடித்துக் கொண்டோம். [*] 7[*] [*] 8bநீர் விசாரணை செய்தால் நாங்கள் இவன் மேல் சுமத்தும் குற்றம் அனைத்தும் உண்மை என அறிய முடியும்.” 9யூதர்களும் அவரோடு சேர்ந்து இக்குற்றச்சாட்டுகள் யாவும் உண்மையே எனக் கூறினார்கள்.


பெலிக்சின் முன்னிலையில் பவுல் தம் நிலையை விளக்குதல்


10பவுல் பேசுமாறு ஆளுநர் சைகை காட்ட, அவர் கூறியது: “பல ஆண்டுகளாக நீர் இந்த நாட்டின் நடுவராக இருந்து வருகிறீர் என்பதை நான் அறிந்து நம்பிக்கையோடு என் நிலையை விளக்குகிறேன். 11நான் கடவுளை வணங்குவதற்காக எருசலேமுக்குச் சென்று பன்னிரண்டு நாள் கூட ஆகவில்லை என்பதை நீரே விசாரித்து அறிந்து கொள்ளலாம். 12நான் கோவிலில் எவரோடாவது விவாதித்ததையோ, நகரிலோ தொழுகைக்கூடத்திலோ மக்களிடையே கலக மூட்டியதையோ, இவர்கள் யாருமே கண்டதில்லை. 13இப்போது இவர்கள் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளையும் உம்முன் இவர்களால் மெய்ப்பிக்க முடியாது. 14ஆனால், இந்த ஒன்று மட்டும் உம்மிடம் நான் ஒப்புக்கொள்கிறேன். இவர்கள் ஒரு கட்சி எனக் கூறிவரும் கிறிஸ்தவ நெறியின்படியே, நான் என் மூதாதையரின் கடவுளை வழிபட்டு வருகிறேன்; திருச்சட்டத்திலும், இறைவாக்கினர் நூல்களிலும் உள்ள அனைத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளேன். 15நேர்மையாளரும் நேர்மையற்றோரும் உயிர்த்தெழுவர் என்று அவர்கள் எதிர்நோக்குகின்றார்கள். அதே எதிர்நோக்கைக் கடவுள் எனக்கும் கொடுத்துள்ளார். 16அவர்களைப் போல நானும் கடவுள் முன்னிலையிலும் மக்கள் முன்னிலையிலும் எப்போதும் குற்றமற்ற மனச்சான்றோடு வாழ முயலுகிறேன். 17பல ஆண்டுகளுக்குப் பின் என் இனத்தார்க்குப் பண உதவி செய்யவும் பலி செலுத்தவும் நான் இங்கு வந்தேன். 18நான் கோவிலில் தூய்மைச் சடங்கு செய்துகொண்டிருந்தபோது இவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது அங்கு மக்கள் கூட்டமோ அமளியோ இல்லை. 19ஆனால், ஆசியாவிலிருந்து வந்த யூதருள் சிலர் அங்கிருந்தனர். எனக்கு எதிராக ஏதாவது இருந்திருந்தால் அவர்கள் உமக்குமுன் வந்து குற்றம் சாட்டியிருக்க வேண்டும். 20அல்லது நான் தலைமைச் சங்கத்தரால் விசாரிக்கப்பட்டபோது என்னிடம் என்ன குற்றம் கண்டார்களென இங்கிருப்பவர்களாவது எடுத்துச் சொல்லட்டும். 21சங்கத்தார் நடுவில் நின்று, ‘இறந்தோர் உயிர்த்தெழுவர் என்று சொன்னதால் இன்று நான் உங்கள் முன்பு விசாரிக்கப்படுகிறேன்’ என்று உரத்த குரலில் கூறினேன். இது ஒன்றைத் தவிர வேறு என்ன குற்றம் கண்டார்கள்; சொல்லட்டும்.”✠

22கிறிஸ்தவ நெறியைப் பற்றி மிகத் திட்டவட்டமாக அறிந்திருந்த பெலிக்சு, “ஆயிரத்தவர் தலைவரான லீசியா வரும்போது உங்களை விசாரிப்பேன்” என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார். 23அதோடு அவர், “பவுலைக் காவலில் வையுங்கள் ஆனால், கடுங்காவல் வேண்டாம்; பணிவிடை செய்ய அவரது உறவினரைத் தடுக்கவும் வேண்டாம்” என நூற்றுவர் தலைவரிடம் பணித்தார்.


பவுல் காவலில் வைக்கப்படுதல்


24சில நாள்களுக்குப் பின்பு பெலிக்சு தம் யூத மனைவியாகிய துருசில்லாவுடன் வந்தார். அவர் பவுலை வரவழைத்து, கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கை கொள்வது பற்றி அவர் கூறியவற்றைக் கேட்டார். 25நேர்மை, தன்னடக்கம், வரப்போகும் தீர்ப்பு ஆகியனபற்றிப் பவுல் பேசியபொது பெலிக்சு அச்சமுற்று அவரைப் பார்த்து, “இப்போது நீர் போகலாம், நேரம் வாய்க்கும்போது உம்மை வரவழைப்பேன்” என்று கூறினார். 26அதே வேளையில் பவுல் தமக்குப் பணம் கொடுப்பாரென அவர் எதிர்பார்த்தார்; ஆகையால், அடிக்கடி பவுலை வரவழைத்து அவரோடு உரையாடி வந்தார். 27இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் பெலிக்சுக்குப் பின் பொர்க்கியு பெஸ்து ஆளுநர் பதவியேற்றார். பெலிக்சு யூதரது நல்லெண்ணத்தைப் பெற பவுலைக் கைதியாக விட்டுச் சென்றார்.


24:17-18 திப 21:17-28. 24:21 திப 23:6.


24:6-8 6ஆ ‘நாங்கள் எங்கள் திருச் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்க விரும்பினோம். 7 ஆனால் ஆயிரத்தவர் தலைவரான லீசியா வந்து வலுக் கட்டாயமாக இவனை எங்களிடமிருந்து கூட்டிக் கொண்டு போய் விட்டார். 8அ இவனுக்கு எதிராகக் குற்றம் சாட்டுவோர் உம்மிடம் வர ஆணை பிறப்பித்தார்’ என சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது. 24:8 [நாங்கள்… பிறப்பித்தார்] அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்றொடர்கள் சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது.

அதிகாரம் 25

சீசரின் விசாரணையை பவுல் நாடுதல்


1பெஸ்து, மாநிலத் தலைவராக பதவியேற்று மூன்று நாள் ஆன பிறகு செசரியாவிலிருந்து எருசலேம் சென்றார். 2-3தலைமைக் குருக்களும் யூத முதன்மைக் குடிமக்களும் பவுலுக்கு எதிராக அவரிடம் முறையிட்டுத் தங்களுக்குத் தயவு காட்டிப் பவுலை மீண்டும் எருசலேமுக்குக் கொண்டுவருமாறு வேண்டிக் கொண்டார்கள்; ஏனெனில், வழியில் அவரைக் கொன்றுவிட சூழ்ச்சி செய்திருந்தார்கள். 4பெஸ்து அவர்களைப் பார்த்து, “பவுல் செசரியாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்; நானும் விரைவில் அங்குச் செல்லவிருக்கிறேன். 5உங்கள் தலைவர்கள் என்னுடன் வந்து அவரிடம் ஏதாவது தவறு இருந்தால் அவர்மீது குற்றம் சுமத்தட்டும்” என்றார். 6பெஸ்து மேலும் எட்டு அல்லது பத்து நாள்கள் தங்கிவிட்டுச் செசரியாவுக்குத் திரும்பிச் சென்றார். மறுநாள் அவர் நடுவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு பவுலைக் கூட்டிக்கொண்டு வருமாறு ஆணை பிறப்பித்தார். 7பவுல் வந்து சேர்ந்ததும், எருசலேமிலிருந்து வந்திருந்த யூதர் அவரைச் சூழ நின்று, தங்களால் மெய்ப்பிக்க முடியாத பல பெருங் குற்றங்களை அவர்மீது சுமத்தினார்கள். 8“நான் யூதருடைய திருச்சட்டத்துக்கோ, கோவிலுக்கோ, சீசருக்கோ எதிராகத் தவறு எதுவும் செய்யவில்லை” என்று பவுல் தம் நிலையை விளக்கினார். 9பெஸ்து யூதரின் நல்லெண்ணத்தைப் பெற விரும்பிப் பவுலைப் பார்த்து, “நீர் எருசலேம் வந்து அங்கே இந்தக் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட விரும்புகிறீரா?” எனக் கேட்டார். 10பவுல் அவரிடம், “நான் சீசருடைய நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்; அங்குதான் எனக்குத் தீர்ப்பு வழங்கப்படவேண்டும். நான் யூதருக்கு எதிராக எந்தத் தீங்கும் செய்யவில்லை. இது உமக்கு நன்றாகத் தெரியும். 11நான் மரண தண்டனைக்குரிய குற்றம் ஏதாவது செய்திருந்தால் அத்தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், இவர்கள் என்மீது சுமத்தும் குற்றச் சாட்டுகளில் உண்மை எதுவும் இல்லையெனில் என்னை யாரும் இவர்களிடம் ஒப்பவிக்க முடியாது. சீசரே என்னை விசாரிக்க வேண்டும்” என்றார். 12பின் பெஸ்து தன் ஆலோசகருடன் கலந்து பேசி, “நீர் உம்மை சீசர் விசாரிக்க வேண்டும் என்று கூறினீர். எனவே, நீர் சீசரிடமே செல்லும்” என்றார்.


அகிரிப்பா பெர்னிக்கியிடம் பவுல் கொண்டுவரப்படுதல்


13சில நாள்களுக்குப் பின் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கியுவும் பெஸ்தைச் சந்திக்கச் செசரியா வந்தனர். 14அவர்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தபோது பெஸ்து பவுலுக்கு எதிரான வழக்கை அரசனிடம் எடுத்துக் கூறினார்; “பெலிக்சு கைதியாக விட்டுச் சென்ற ஒரு மனிதர் இங்கு இருக்கிறார். 15நான் எருசலேமிலிருந்தபோது தலைமைக் குருக்களும், யூதரின் மூப்பர்களும் அவரைப்பற்றிய வழக்கை என்னிடம் தெரிவித்து அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். 16நான் அவர்களைப் பார்த்து, “குற்றம் சாட்டப்பட்டவர் எவரும் குற்றம் சாட்டியவர்க்கு முன் நின்று தம் மீது சுமத்தப்பட்ட குற்றத்தைப் பற்றி விளக்குவதற்கான வாய்பைப் பெற வேண்டும். அதற்குமுன் அவருக்குத் தீர்ப்பு அளிப்பது உரோமையரின் வழக்கமல்ல” என்று கூறினேன். 17எனவே, அவர்கள் இங்கே வந்தபோது, சற்றும் காலம் தாழ்த்தாமல் மறுநாளிலேயே நான் நடுவர் இருக்கையில் அமர்ந்து அவரை என்னிடம் கூட்டிக்கொண்டு வருமாறு ஆணை பிறப்பித்தேன். 18குற்றம் சுமத்தியவர்கள் எழுந்து பேசியபோது நான் நினைத்திருந்த கொடிய குற்றம் எதுவும் அவர்மீது சுமத்தவில்லை. 19அவர்கள் அவருக்கு எதிராகச் சொன்னதெல்லாம் தங்கள் சமயத்திலுள்ள சில கருத்து வேறுபாடுகளாகத்தான் இருந்தன. இறந்துபோன இயேசு என்னும் ஒருவரைப் பற்றியும் அவர்கள் பேசினார்கள். இந்த இயேசு உயிரோடு இருப்பதாக பவுல் சாதித்தார். 20இக்கருத்துச்சிக்கல்களைப் பற்றிக் கேட்டதும் நான் குழம்பிப்போய், “நீர் எருசலேமுக்கு வருகிறீரா? அங்கு இவை பற்றி விசாரிக்கப்பட விரும்பகிறீரா?” எனக் கேட்டேன். 21பவுல், பேரரசரே விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும் வரை தம்மைக் காவலில் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆதலால், இவரைச் சீசரிடம் அனுப்பும்வரை காவலில் வைக்குமாறு ஆணை பிறப்பித்தேன்.” 22அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “அவர் பேசுவதை நானும் நேரில் கேட்க விரும்புகிறேன்” என்றார். அதற்குப் பெஸ்து, “நாளை நீர் கேட்கலாம்” என்றார். 23மறுநாளில் அகிரிப்பாவும், பெர்னிக்கியுவும் மிகுந்த பகட்டு ஆடம்பரத்துடனும் ஆயிரத்தவர் தலைவர்களுடனும், நகரத்தின் உயர்குடி மக்களோடும் அவைக் கூடத்திற்கு வந்தார்கள். பெஸ்துவின் ஆணைப்படி பவுலும் அங்குக் கூட்டிக்கொண்டு வரப்பட்டார். 24அப்போது பெஸ்து, “அகிரிப்பா அரசே! எம்மோடு இங்குக் குழுமியிருக்கும் மக்களே! இவரைப் பாருங்கள். எருசலேமிலும், இங்கும் யூதரனைவரும் திரண்டு வந்து இவருக்கு எதிராக என்னிடம் முறையிட்டு, ‘இவன் இனியும் உயிரோடு இருக்கக்கூடாது’ என்று கூச்சலிட்டனர். 25நான் இவர் மரணதண்டனைக்குரிய குற்றமொன்றையும் செய்யவில்லை என்பதைக் கண்டேன். ஆயினும் ,இவர் தம்மைப் பேரரசரே விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அவரிடமே அனுப்பத் தீர்மானித்தேன். 26இவரைப் பற்றிப் பேரரசரருக்கு திட்டவட்டமாய் எழுத என்னிடத்தில் எதுவுமில்லை. எனவே, அவரை இங்கே உங்கள் முன்னிலையிலும், குறிப்பாக, அகிரிப்பா அரசே! உமக்கு முன்பாகவும் கூட்டிக் கொண்டு வந்துள்ளேன். நாம் அவரை விசாரித்தபின் எனக்கு எழுதுவதற்கு ஏதாவது கிடைக்குமென நினைக்கிறேன். 27ஒரு கைதியின் மேல் சாட்டப்பட்டுள்ள குற்றங்களைக் குறிப்பிடாமல் அவனை அனுப்புவது அறிவீனம் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார்.


அதிகாரம் 26

அகிரிப்பா முன் பவுல் தம் நிலையை விளக்குதல்


1அகிரிப்பா பவுலை நோக்கி, “நீர் உம் வழக்கை எடுத்துரைக்க அனுமதிக்கிறேன்” என்று கூறினார். உடனே பவுல் தமது கையை உயர்த்தித் தம் நிலையை விளக்கத் தொடங்கினார்; 2“அகிரிப்பா அரசே! யூதர் எனக்கு எதிராகச் சாட்டும் அனைத்துக் குற்றங்களையும் பொறுத்த மட்டில் என் நிலையை இன்று உமக்குமுன் நான் விளக்கப் போகிறேன். இது எனக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பு என்று கருதுகிறேன். 3ஏனெனில், யூதருடைய முறைமைகளையும் அவர்களுடைய சிக்கல்களையும் குறித்து நீர் நன்கு அறிந்தவர். ஆகவே, நான் சொல்வதைப் பொறுமையுடன் கேட்குமாறு உம்மிடம் வேண்டுகிறேன். 4நான் இளமை முதல் என் இனத்தாரிடையே எருசலேமில் எப்படி வாழ்ந்து வந்தேன் என்பதை யூதரனைவரும் தொடக்கமுதல் அறிவர். 5நான் நமது சமயத்தில் மிகவும் கண்டிப்பான பரிசேயக் கட்சி முறைப்படி வாழ்ந்து வந்தேன் என்பதும் தொடக்கமுதல் அவர்களுக்கே தெரியும்; விரும்பினால் அவர்களே அதற்கு சான்று கூறலாம்.✠ 6நம் மூதாதையருக்குக் கடவுள் அளித்த வாக்குறுதியை நான் எதிர்நோக்குவதால் தான் இப்போது விசாரணைக்காக நிறுத்தப்பட்டுள்ளேன். 7இந்த வாக்குறுதி நிறைவேறும் என்று எதிர்நோக்கி நம் பன்னிரு குலத்தினரும் கடவுளை அல்லும் பகலும் ஆர்வத்துடன் வழிபடுகின்றனர். அரசே! இந்த எதிர்நோக்கை நானும் கொண்டுள்ளதால் யூதர்கள் என்மீது குற்றம் சுமத்துகின்றார்கள். 8கடவுள் இறந்தோரை உயிர்த்தெழச் செய்கிறார் என்பதை இங்கிருக்கும் நீங்கள் ஏன் நம்ப முடியாத ஒன்றாகக் கருதுகிறீர்கள்? 9நானுங்கூட நாசரேத்து இயேசுவுக்கு எதிராகப் பல செயல்களைச் செய்யவேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். 10இதைத்தான் நான் எருசலேமில் செய்தேன். இறைமக்கள் பலரைச் சிறையிலடைக்கத் தலைமைக் குருக்களிடம் அதிகாரம் பெற்றேன். அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க நானும் என் இசைவைத் தெரிவித்தேன். 11கடவுளைப் பழித்துரைக்க அவர்களைப் பலமுறை நான் கட்டாயப்படுத்தினேன்; தொழுகைக் கூடங்களிலும் அவர்களைத் தண்டனைக்கு ஆளாக்கினேன். மேலும், நான் வெளியே உள்ள நகரங்களுக்கும் சென்று, அங்குள்ளோர்மீது வெகுண்டெழுந்து அவர்களைத் துன்புறுத்தினேன்.


பவுல் தம் அழைப்பைப் பற்றிக் கூறுதல்


12“இந்நோக்கத்துடன் நான் தலைமைக் குருக்களிடம் அதிகாரமும் அனுமதியும் பெற்றுக் கொண்டு தமஸ்குவுக்குச் சென்றேன். 13போகும் வழியில் நடுப்பகல் வேளையில், அரசே! கதிரவனை விட அதிகமாகச் சுடர் வீசிய ஒளி ஒன்று வானிலிருந்து தோன்றி என்னையும் என்னோடு வந்தவர்களையும் சுற்றி ஒளிர்ந்ததை நான் கண்டேன். 14நாங்களனைவரும் தரையில் விழுந்தோம். எபிரேய மொழியில், ‘சவுலே! சவுலே! ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? தாற்றுக்கோலை உதைப்பது உனக்குக் கடினமாயிருக்கும்’ என்று ஒரு குரல் ஒலித்ததைக் கேட்டேன். 15அதற்கு நான், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்க அவர், ‘நீ துன்புறுத்தும் இயேசு நானே. 16எழுந்து நிமிர்ந்து நில். என் ஊழியனாகவும் சாட்சியாகவும் உன்னை ஏற்படுத்தவே நான் உனக்குத் தோன்றினேன். நீ என்னைக் கண்டது பற்றியும் நான் உனக்குக் காண்பிக்கப் போவதைப்பற்றியும் சான்று பகர வேண்டும். 17உன் மக்களிடமிருந்தும், பிற இனத்தவரிடமிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன்; பிற இனத்தவரிடமே உன்னை அனுப்புவேன். 18நீ அவர்களை இருளிலிருந்து ஒளிக்கும், சாத்தானின் அதிகாரத்திலிருந்து கடவுளிடத்துக்கும் திரும்புமாறு அவர்கள் கண்களைத் திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்கள்; என்னிடம் நம்பிக்கை கொண்டு தங்களைத் தூயோராக்கிக் கொண்டவர்களோடு உரிமைப்பேறு அடைவார்கள்’ என்றார்.✠


பவுல் யூதருக்கும் வேற்றினத்தாருக்கும் சான்று பகருதல்


19“ஆகையால் அகிரிப்பா அரசே! அந்த விண்ணகக் காட்சிக்கு நான் கீழ்ப் படிந்தேன். 20ஆகவே, முதலில் தமஸ்குவிலும் பின் எருசலேமிலும் யூதயோவின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்வோரிடமும் பிற இனத்தாரிடமும் சென்று அவர்கள் மனம் மாறி கடவுளிடம் திரும்ப வேண்டுமென்றும், மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் அவர்கள் காட்டவேண்டும் என்றும் அறிவித்தேன். 21இதன் காரணமாக யூதர்கள் கோவிலில் என்னைக் கைது செய்து கொல்ல முயன்றார்கள். 22ஆயினும், கடவுளின் உதவிபெற்று, இந்நாள் வரை இறைவாக்கினரும் மோசேயும் நடக்கவிருப்பதாகக் கூறியதையே நானும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சான்றாகக் கூறி வருகிறேன். 23அதாவது, மெசியா துன்பப்படுவார்; எனினும், இறந்த அவர்முதலில் உயிர்த்தெழுந்து நம் மக்களும் பிற இனத்தாரும் ஒளி பெறுவர் என அவர்களுக்கு அறிவிப்பார் என்று அவர்கள் கூறியதையே நானும் கூறி வருகிறேன்.”✠


அகிரிப்பா நம்பிக்கை கொள்ளுமாறு பவுல் வேண்டுதல்


24இவ்வாறு, பவுல் தம் நிலையை விளக்கிக் கொண்டிருந்தபோது, பெஸ்து உரத்த குரலில், “பவுலே! உனக்குப் பித்துப் பிடித்துவிட்டது; அதிகப்படிப்பு உன்னைப் பைத்தியக்காரனாக மாற்றிவிட்டது” என்றார். 25அதற்குப் பவுல், “மாண்புமிகு பெஸ்துவே! எனக்குப் பித்துப் பிடிக்கவில்லை. நான் உண்மையோடும் அறிவுத்தெளிவோடும் பேசுகிறேன். 26அரசர் இவற்றை அறிவார். ஆகவே, நான் துணிவோடு அவர்முன் பேசுகின்றேன். இவற்றில் எதுவும் அவரது கவனத்தில் படாமல் இருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. ஏனெனில், இவை ஏதோ ஒரு மூலையில் நடந்தவையல்ல. 27அகிரிப்பா அரசே, இறைவாக்கினர் கூறியவற்றை நம்புகிறீரா? நீர் நம்புகிறீர் என்பது எனக்குத் தெரியும்” என்றார். 28அகிரிப்பா பவுலை நோக்கி, “இவ்வளவு குறுகிய காலத்துக்குள் என்னைக் கிறிஸ்தவனாக்கி விடலாம் என நம்புகிறீரா?” என்றார். 29அதற்குப் பவுல், “குறுகிய காலத்திலாயிருந்தாலும் சரி, நெடுங்காலத்திலாயிருந்தாலும் சரி, நீர் மட்டுமல்ல, இன்று நான் கூறுவதைக் கேட்கிற அனைவரும் என்னைப் போலாக வேண்டும்; ஆனால், இந்த விலங்குகள் மட்டும் உங்களுக்கு வேண்டாம்; இதுவே கடவுளிடம் எனது வேண்டுதல்” என்றார். 30பின்பு அரசரும் ஆளுநரும் பெர்னிக்கியும் அவர்களோடு அமர்ந்திருந்தவர்களும் எழுந்தார்கள். 31அவர்கள் அங்கிருந்து சென்றபோது, “இவர் மரண தண்டனைக்கோ சிறைத் தண்டனைக்கோ உரிய குற்றம் எதையும் செய்யவில்லையே” என ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். 32அகிரிப்பா பெஸ்துவிடம், “இவர் சீசரே தம்மை விசாரிக்க வேண்டும் என்று கேட்டிராவிட்டால் இவரை விடுவித்திருக்கலாம்” என்று கூறினார்.


26:5 திப 8:3; பிலி 3:5. 26:9-11 திப 8:3; 22:4,5. 26:16-17 எசே 2:1,3. 26:18 எசா 42:7,16. 26:23 எசா 42:6; 49:6.


அதிகாரம் 27

பவுல் உரோமைக்குச் செல்லுதல்


1நாங்கள் கப்பலேறி இத்தாலியா செல்ல வேண்டுமெனத் தீர்மானித்தவுடன் அவர்கள் பவுலையும் வேறுசில கைதிகளையும் அகுஸ்து படைப் பிரிவைச் சேர்ந்த யூலியு என்னும் நூற்றுவர் தலைவரிடம் ஒப்படைத்தனர். 2நாங்கள் அதிராமித்தியக் கப்பலொன்றில் ஏறினோம். அது ஆசிய மாநிலத்துத் துறைமுகங்களுக்குச் செல்லவிருந்தது. எங்களுடன் தெசலோனிக்காவைச் சேர்ந்த அரிஸ்தர்க்கு என்னும் மாசிதோனியரும் இருந்தார். 3மறுநாள் நாங்கள் சீதோன் துறைமுகம் போய்ச் சேர்ந்தோம். யூலியு பவுலை மனித நேயத்துடன் நடத்தினார். அவர் தம் நண்பர்களிடம் செல்லவும் அவர்கள் அவரைக் கவனித்துக் கொள்ளவும் யூலியு அனுமதித்தார். 4அங்கிருந்து நாங்கள் கப்பலேறி, எதிர்க்காற்று வீசியபடியால் சைப்பிரசு தீவின் பாதுகாப்பான பகுதி வழியாகச் சென்றோம்; 5பின் சிலிசியா, பம்பிலியா பகுதிகளை ஒட்டியுள்ள ஆழ்கடலைக் கடந்து லீக்கியா நாட்டின் மீரா நகர் வந்து சேர்ந்தோம். 6நூற்றுவர் தலைவர் அங்கே இத்தாலியா செல்லும் அலக்சாந்திரியக் கப்பலொன்றையும் கண்டு அதில் எங்களெல்லாரையும் ஏற்றினார். 7பல நாள்கள் நாங்கள் மெதுவாகப் பயணம் செய்தோம்; அரும்பாடுபட்டுக் கினிதுவுக்கு எதிரே வந்தோம். எதிர்க்காற்று வீசியபடியால் தொடர்ந்து செல்ல முடியாமல் சல்மோன் முனையைக் கடந்து கிரேத்துத் தீவின் பாதுகாப்பான பகுதி வழியாகச் சென்றோம்; 8பின் அரும்பாடுபட்டுக் கரை ஓரமாகப் பயணம் செய்து இலசயா பட்டணத்துக்கு அருகிலுள்ள “செந்துறை”⁕ என்னுமிடம் வந்து சேர்ந்தோம். 9இவ்வாறு பல நாள்கள் கழிந்தன. நோன்பு நாளும் ஏற்கெனவே கடந்துவிட்டது. அதன்பிறகு கப்பலில் பயணம் செய்வது ஆபத்தானது என்று பவுல் ஆலோசனை கூறினார். 10அவர் அவர்களைப் பார்த்து, “நண்பர்களே! இக்கப்பல் பயணம் கப்பலுக்கும் அதிலுள்ள சரக்குகளுக்கும் மட்டுமல்ல, நம் உயிருக்கும் கூட ஆபத்தானது; பெருங்கேட்டை விளைவிக்கக் கூடியது” என்று கூறினார். 11ஆனால், நூற்றுவர் தலைவர் பவுல் கூறியவற்றை நம்பாமல் கப்பல் தலைவரும் கப்பலோட்டுநரும் கூறியதையே நம்பினார். 12அந்தத் துறைமுகம் குளிர்காலத்தில் தங்க ஏற்றதாயில்லை. ஆகவே, பெரும்பான்மையோர் அங்கிருந்து கப்பலேறி எப்படியாவது குளிர்காலத்தைச் செலவிட பெனிக்சு வந்து சேர்ந்து விட வேண்டும் என்று விரும்பினர். கிரேத்துத் தீவின் இத்துறைமுகம் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கி அமைந்துள்ளது.


கடலில் பேய்ப்புயல்


13தென்றல் காற்று வீசியபோது எங்களது நோக்கம் கைகூடியது என எண்ணி நங்கூரத்தைத் தூக்கிவிட்டு கிரேத்துத் தீவு கரையோரமாகச் சென்றோம். 14சிறிது நேரத்தில் “வாடைக் கொண்டல்”⁕ என்னும் பேய்க் காற்று வீசத் தொடங்கியது. 15கப்பல் அதில் அகப்பட்டுக் கொண்டதால் காற்று வீசிய திசைக்கு எதிராக அதைச் செலுத்த முடியவில்லை; எனவே, காற்று வீசிய திசையிலேயே கப்பலோடு அடித்துச் செல்லப்பட்டோம். 16கவுதா என்னும் சிறு தீவின் பாதுகாப்பான பகுதியில் கப்பல் செல்லும்போது கப்பலின் பின்னால் இணைக்கப்பட்டுள்ள படகை அரும்பாடுபட்டுக் கட்டுப்படுத்த முடிந்தது. 17அவர்கள் அதைக் தூக்கிக் கப்பலில் வைத்த பின் வடத்தால் கப்பலை இறுகக் கட்டினார்கள். கப்பல் புதைமணலில்⁕ விழுந்துவிடாதபடி, கப்பற்பாயை இறக்கிக் காற்று வீசிய திசையிலேயே அடித்துச் செல்ல விட்டோம். 18புயலால் நாங்கள் மிகவும் அலைக்கழிக்கப்பட்டதால் மறுநாள் கப்பலிலுள்ள சரக்குகளை அவர்கள் கடலில் எறியத் தொடங்கினார்கள். 19மூன்றாம் நாளில் கப்பலின் தளவாடங்களை அவர்கள் தங்கள் கையாலேயே எடுத்துக் கடலில் வீசினார்கள். 20கதிரவனோ, விண்மீன்களோ பல நாள்களாய்த் தென்படவில்லை. கடும்புயல் வீசி மழை பெய்து கொண்டிருந்தது. இனி தப்பிப் பிழைப்போம் என்னும் எதிர்நோக்கே எங்களுக்குச் சிறிதும் இல்லாமல் போய்விட்டது. 21பல நாள்களாக் கப்பலில் இருந்தோர் எதுவும் உண்ணாமலிருந்தனர். பவுல் அவர்கள் நடுவில் எழுந்து நின்று கூறியது: “நண்பர்களே! நீங்கள் நான் சொல்வதைக் கேட்டுக் கிரேத்துத் தீவை விட்டுப் புறப்படாமலிருந்திருக்க வேண்டும். அப்போது இந்தக் கேடும் இழப்பும் நேர்ந்திருக்காது. 22இப்போதும் நீங்கள் மனஉறுதியுடன் இருக்குமாறு உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். கப்பலுக்குத்தான் இழப்பு நேரிடுமேயன்றி உங்களுள் எவருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படாது. 23என்மேல் உரிமையுடையவரும் நான் வழிபடுபவருமான கடவுளின் தூதர் நேற்றிரவு என்னிடம் வந்து, 24“பவுலே, அஞ்சாதீர்! நீர் சீசர் முன்பாக விசாரிக்கப்படவேண்டும். உம்மோடுகூடக் கப்பலிலுள்ள அனைவரையும் கடவுள் உம் பொருட்டுக் காப்பாற்றப் போகிறார்” என்று கூறினார். 25ஆகவே நண்பர்களே! மன உறுதியுடனிருங்கள். நான் கடவுளிடம் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அவர் என்னிடம் சொன்னவாறே நடக்கும். 26எனினும் நாம் ஒரு தீவில் தள்ளப்படுவது உறுதி.” 27பதினான்காம் நாள் இரவு வந்தபோது நாங்கள் ஆதிரியா கடலில் அங்குமிங்குமாக அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தோம். நள்ளிரவில் நாங்கள் ஒருகரைப் பக்கம் வந்து கொண்டிருப்பதாகக் கப்பலோட்டுநர்கள் நினைத்தார்கள். 28அவர்கள் ஆழத்தை அளந்து பார்த்து இருபது ஆள் ஆழம்⁕ என்று கண்டார்கள். சற்று தூரம் சென்று மீண்டும் அளந்து பார்த்து பதினைந்து ஆள் ஆழம் எனக் கண்டார்கள். 29பாறையில் எங்காவது மோதி விடுவோமோ என அவர்கள் அஞ்சிக் கப்பலின் பின்பகுதியிலிருந்து நான்கு நங்கூரங்களை இறக்கி எப்போது விடியுமோ என ஆவலோடு காத்திருந்தார்கள். 30கப்பலோட்டுநர்கள் கப்பலில் இருந்து தப்பி ஓட வழி தேடினார்கள். கப்பலின் முன் புறத்தில் இருந்து நங்கூரங்களை இறக்கப் போவதுபோல் நடித்துக் கப்பலிலிருந்த படகைக் கடலில் இறக்கினார்கள். 31பவுல் நூற்றுவர் தலைவரையும் படைவீரர்களையும் பார்த்து, “இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப்பிழைக்க முடியாது” என்று கூறினார். 32ஆகவே, படைவீரர்கள் படகைக் கட்டியிருந்த கயிறுகளை வெட்டி அது கடலில் அடித்துச் செல்லப்படவிட்டுவிட்டார்கள். 33பொழுது விடியம் வேளை வந்தபோது பவுல் அனைவரையும் கூப்பிட்டு அவர்களை உணவருந்தமாறு வேண்டிக் கொண்டார். “இன்றோடு பதினான்கு நாள்காளாக நீங்கள் தொடர்ந்து எதுவும் உண்ணாமல் பட்டினிகிடந்து என்ன நிகழுமோவெனக் காத்திருக்கிறீர்களே! 34எனவே, நீங்கள் உணவருந்தும்படி கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் நீங்கள் உயிர்பிழைக்க முடியும். ஏனெனில், உங்களுள் எவர் தலையிலிருந்தும் ஒருமுடி கூட விழாது” என்றார். 35இவற்றைக் கூறியபின் பவுல் அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி கூறி, அதைப் பிட்டு அனைவர் முன்னிலையிலும் உண்ணத் தொடங்கினார். 36உடனே அனைவரும் மனஉறுதி பெற்று உணவுண்டனர். 37கப்பலில் மொத்தம் இருநூற்று எழுபத்தாறு பேர் இருந்தோம். 38அனைவரும் வயிறார உண்டதும் அவர்கள் கப்பலில் இருந்த கோதுமையைக் கடலில் தூக்கி எறிந்து அதன் பளுவைக் குறைத்தார்கள்.


கப்பல் புயலில் சிக்குதல்


39பொழுது விடிந்தபோது தாங்கள் இருந்த இடம் எதுவென்று அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், ஏதோ மணல்கரையுள்ள வளைகுடாப்பகுதி வருகிறதென்று கண்டு, முடிந்தால் கப்பலைக் கரையில் சேர்க்கலாமென்று அவர்கள் விரும்பினார்கள். 40எனவே, நங்கூரங்களை அவிழ்த்து அவற்றைக் கடலில் விட்டு விட்டார்கள்; அதே வேளையில் சுக்கான்களின் கயிறுகளையும் தளர்த்தினார்கள்; காற்று வீச்சுக்கேற்ப முன்பாயை உயர்த்திக் கட்டிக் கப்பலைக் கரையை நோக்கிச் செலுத்தினார்கள்; 41ஆனால், கப்பல் நீரடி மணல் திட்டையில் மோதியது. கப்பலின் முன் பகுதி புதைந்து அசையாமல் இருந்தது. பின்பகுதி அலைகளின் வேகத்தால் உடைந்து போயிற்று. 42கைதிகளில் எவரும் நீந்தித் தப்பிவிடக் கூடாதென்று படைவீரர்கள் அவர்களைக் கொன்றுவிட திட்டமிட்டார்கள். 43நூற்றுவர் தலைவர் பவுலைக் காப்பாற்ற விரும்பி அவர்கள் திட்டத்தை நிறைவேற்றவிடவில்லை. எனவே, நீந்தத் கூடியவர்கள் கடலில் குதித்து முதலில் கரைசேரவும். 44மற்றவர்கள் பலகைகளையாவது கப்பலின் உடைந்த துண்டுகளையாவது பற்றிக் கொண்டு கரைசேரவும் ஆணை பிறப்பித்தார். இவ்வாறு எல்லாரும் பாதுகாப்பாய்க் கரை சேர்ந்தார்கள்.


27:8 ‘செந்துறை’ என்பது ‘கலோயிலிமெனசு’ என்னும் கிரேக்க பெயரின் தமிழாக்கம். 27:14 ‘வாடைக் கொண்டல்’ என்பது ‘யூரக்கிலோன்’ என்னும் கிரேக்க பெயரின் தமிழாக்கம். 27:17 புதை மணல் என்பது சீர்த்தி என்னும் கிரேக்க பெயரின் தமிழாக்கம். இப்புதை மணல் லிபியா கடல் பகுதியில் உள்ளது. 27:28 ‘ஆள் ஆழம்’ என்பதன் கிரேக்க சொல் ‘ஒர்கியா’ ஆகும்.


அதிகாரம் 28

மால்தா தீவில் பவுல்


1நாங்கள் தப்பிக் கரை சேர்ந்த பின், அந்தத் தீவின் பெயர் மால்தா என்று அறிந்துகொண்டோம். 2அத்தீவினர் எங்களிடம் மிகுந்த மனிதநேயத்துடன் நடந்து கொண்டனர். மழை பெய்து குளிராயிருந்த காரணத்தால் அவர்கள் தீ மூட்டி எங்கள் அனைவரையும் அருகே அழைத்துச் சென்றனர். 3பவுல் சுள்ளிகளைப் பொறுக்கிச் சேர்த்துத் தீயில் போட்டபோது, ஒரு விரியன் பாம்பு சூட்டின் மிகுதியால் வெளியே வந்து, அவரது கையைப் பற்றிக் கொண்டது. 4அவர் கையில் பாம்பு தொங்குவதை அத்தீவினர் பார்த்தபோது, “இவன் ஒரு கொலைகாரன் என்பது உறுதி. கடலிருந்து இவன் தப்பித்துக் கொண்டாலும் நீதியின் தெய்வம் இவனை வாழவிடவில்லை” என்று ஒருவரோடு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள். 5ஆனால், அவர் அந்தப் பாம்பை நெருப்பில் உதறினார். அவருக்குக் கேடு எதுவும் நேரிடவில்லை. 6அவருக்கு வீக்கம் ஏற்படப் போகிறது அல்லது திடீரெனச் செத்து விழப்போகிறார் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் அவருக்குத் தீங்கு எதுவும் ஏற்படாததைக் கண்டு தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்கள்; அவர் ஒரு தெய்வம் என்று சொல்லத் தொடங்கினார்கள். 7அந்த இடத்துக்கு அருகில் அத்தீவின் தலைவருடைய நிலங்கள் இருந்தன. அவர் பெயர் புப்பிலியு. அவர் எங்களை வரவேற்று மூன்று நாள் அன்புடன் விருந்தோம்பினார். 8புப்பிலியுவினது தந்தை காய்ச்சலினாலும் வயிற்று அளைச்சலாலும் நோயுற்றுக் கிடந்தார். பவுல் அங்குச் சென்று அவர்மேல் தம் கையை வைத்து இறைவனிடம் வேண்டி அவரை நலமாக்கினார். 9இந்நிகழ்ச்சிக்குப்பின் அத்தீவில் நோயுற்றிருந்த ஏனையோரும் அவரிடம் வந்து குணமடைந்தனர். 10அவர்கள் எங்களுக்கு மதிப்பு அளித்து பல கொடைகளையும் தந்தார்கள்; நாங்கள் கப்பலேறியபோது எங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் கொடுத்தார்கள்.


பவுல் உரோமையை அடைதல்


11மூன்று மாதங்களுக்குப்பிறகு குளிர் காலத்தில் அத்தீவில் ஒதுங்கியிருந்த ஒரு சிறிய கப்பலில் ஏறினோம். அதில் மிதுனச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அது அலக்சாந்தரியாவைச் சார்ந்தது.✠ 12நாங்கள் சிரக் கூசா துறைமுகத்தை அடைந்து அங்கு மூன்று நாள் தங்கியிருந்தோம். 13அங்கிருந்து கரையோரமாகச் சுற்றி வந்து இரேகியு என்னுமிடத்தை அடைந்தோம். ஒரு நாள் அங்குத் தங்கிய பின் தெற்கிலிருந்து காற்று வீசுவே இரண்டாம் நாள் புத்தயோலி என்னுமிடம் சென்றோம். 14அங்கு நாங்கள் சகோதரர் சகோதரிகளைக் கண்டோம். நாங்கள் அவர்களோடு ஏழு நாள் தங்குமாறு அவர்கள் எங்களைக் கேட்டுக் கொண்டார்கள். அதன்பின் நாங்கள் உரோமை போய்ச் சேர்ந்தோம். 15அங்குள்ள சகோதரர் சகோதரிகள் எங்களைப்பற்றிக் கேள்வியுற்று, ‘அப்பியு சந்தை’⁕ ‘மூன்றுவிடுதி’ என்னுமிடங்கள் வரை எங்களை எதிர்கொண்டு வந்தார்கள். பவுல் அவர்களைக் கண்டபோது துணிவு கொண்டு கடவுளுக்கு நன்றி செலுத்தினார். 16நாங்கள் உரோமைக்கு வந்தபோது பவுல் தனி வீட்டில் தங்கியிருக்க அனுமதி பெற்றுக் கொண்டார். ஆனால், படைவீரர் ஒருவர் அவரைக் காவல் காத்து வந்தார்.


பவுல் உரோமையில் நற்செய்தி அறிவித்தல்


17மூன்று நாள்களுக்குப் பின்பு பவுல் யூத முதன்மைக் குடிமக்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்கள் வந்து கூடியபின் அவர்களை நோக்கி, “சகோதரரே, நான் நம்முடைய மக்களுக்கு எதிராகவோ, மூதாதையரின் மரபுகளுக்கு எதிராகவோ எதுவும் செய்யவில்லை. எனினும், எருசலேமில் நான் கைது செய்யப்பட்டு உரோமையரிடம் ஒப்புவிக்கப்பட்டேன். 18அவர்கள் என்னை விசாரித்தபோது மரண தண்டனைக்குரிய குற்றம் எதுவும் என்னிடம் காணாததால் என்னை விடுதலை செய்ய விரும்பினார்கள். 19யூதர்கள் அதனை எதிர்த்துப் பேசியபோது நான், “சீசரே என்னை விசாரிக்க வேண்டும்” என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளானேன். ஆனால், என் இனத்தவர்க்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை.✠ 20இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேசுவதற்காக அழைத்தேன். இஸ்ரயேல் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன்” என்றார். 21அவர்கள் அவரை நோக்கி, “உம்மைக் குறித்து எங்களுக்கு யூதேயாவிலிருந்து கடிதமொன்றும் வரவில்லை. மேலும், இங்கு வந்த சகோதரருள் எவரும் உம்மைக் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை; தீயது எதுவும் பேசவுமில்லை. 22ஆயினும், இதுபற்றி நீர் எண்ணுவதை நாங்கள் கேட்டறிய விரும்புகிறோம். ஏனெனில், இந்தக் கட்சியை எல்லா இடங்களிலும் மக்கள் எதிர்த்துப் பேசுகிறார்கள் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்றார்கள். 23அதற்காக ஒரு நாளைக் குறித்தார்கள். அன்று பலர் அவர் தங்கியிருந்த இடத்துக்கு வந்தனர். பவுல் காலை முதல் மாலை வரை அவர்களுக்கு இறையாட்சியைப் பற்றிச் சான்றுகளுடன் விளக்கினார். மோசேயின் சட்டம் மற்றும் இறைவாக்கினர் நூல்கள் அடிப்படையில் இயேசுவை அவர்கள் நம்பும்படி செய்தார். 24சிலர் பவுல் கூறியதை நம்பினர்; மற்றவர்கள் நம்பவில்லை. 25இப்படி அவர்கள், தங்களிடையே மன வேற்றுமை கொண்டவர்களாய்க் கலைந்து செல்லும்போது பவுல் அவர்களிடம் ஒன்று கூறினார்; “நம் மூதாதையருக்கு இறைவாக்கினர் எசாயா மூலம் தூய ஆவியார் பின்வருபவற்றைப் பொருத்தமாகக் கூறியுள்ளார்;

26-27“நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் இதயம் கொழுத்துப் போய்விட்டது. காதுகள் மந்தமாகிவிட்டன. இவர்கள் தம் கண்களை மூடிக் கொண்டார்கள்; எனவே, கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றனர். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன் என நீ இம்மக்களிடம் போய்ச் சொல்.”

28“ஆகையால் கடவுள் இந்த மீட்பைப் பிற இனத்தார்க்கு அளித்துள்ளார். அவர்கள் செவி சாய்ப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும்.” 29அவர் இப்படிச் சொன்னதும் யூதர்கள் தங்களிடையே மிகுந்த வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து போய்விட்டார்கள். 30பவுல் அங்கு இரண்டு ஆண்டுகள் முழுவதும் தாம் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்தார். தம்மிடம் வந்த அனைவரையும் வரவேற்று, 31இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி முழுத் துணிவோடு தடையேதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார்.


28:19 திப 25:11.


28:11 ‘மிதுனம்’ என்பது ‘தியோஸ் குரோய்’ என்னும் கிரேக்க பெயரின் தமிழாக்கம். 28:15 ‘அப்பியு சந்தை’, ‘மூன்று விடுதி’ என்பது ‘அப்பியுபோரம்’, ‘திரெஸ்தபர்னே’ என்னும் கிரேக்க பெயர்களின் தமிழாக்கம்.