உரோமையர்


உரோமையர்
முன்னுரை

விவிலியத்தில் உள்ள ஆழமான இறையியல் பகுதியாக விளங்குவது உரோமையர் திருமுகமாகும். தூய பவுல் எழுதிய போதனையின் சுருக்கம் இந்நூலில் அடங்கியுள்ளது எனலாம். இத்திருமுகக் கருத்துக்களின் அடிப்படையில் திருச்சபையின் இறையியல் கோட்பாடுகள் பல வடிவங்களில் வளர்ச்சியடைந்துள்ளன.


இதனைத் தூய பவுல் கைப்பட எழுதவில்லை; மாறாக 16:22இல் காண்கிறபடி தெர்த்தியு என்பவரை எழுத்தாளராகக் கொண்டு எழுதியுள்ளார்.


சூழலும் நோக்கமும்


தூய பவுல் இத்திருமுகத்தை எழுதும்போது உரோமைக்குச் சென்றிருக்கவில்லை. எனினும், அக்காலத்தில் திருச்சபை அங்கே வேரூன்றியிருந்தது. வேறு பல நற்செய்தியாளர்கள் அங்குச் சென்று மறைப்பணி புரிந்திருந்தனர். அது உரோமைப் பேரரசின் தலைநகராக இருந்ததால், பல நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்கள் அங்குப் போய் வாழ்ந்து வந்தனர். இந்த உரோமைச் சபையைச் சந்திக்க விழைந்தார் பவுல். ஸ்பெயின் நாடு போகும் வழியில் உரோமைக் கிறிஸ்தவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டார் (15:28). மாசிதோனியா, அக்காயா ஆகிய நாடுகளிலிருந்து இறைமக்கள் கொடுத்த காணிக்கையை எருசலேம் கொண்டு போகுமுன் கொரிந்து நகரிலிருந்து இத்திருமுகத்தை அவர் கி.பி. 57-58 காலக் கட்டத்தில் வரைந்திருக்க வேண்டும்.


பவுல் இத்திருமுகத்தை எழுதுமுன் கலாத்தியருக்கு ஒரு திருமுகத்தை எழுதியிருந்தார். நம்பிக்கையினால் இறைவனுக்கு ஏற்புடைமை ஆதல் குறித்து அத்திருமுகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்க வேண்டும். அத்துடன் செயல்கள், சட்டங்கள் ஆகியவற்றை விட நம்பிக்கையே மேலானது என்னும் பவுலின் போதனையும் கடும் எதிர்ப்புக்குள்ளாகியது. சிலர் தவறான கருத்துக்களை உரோமையிலும் பரப்பி, செயல்கள் மற்றும் சட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க முனைந்தனர்; யூத மறைக்கெதிரான பல தவறான கருத்துக்களைப் பவுல் பரப்பிக் குழப்பம் ஏற்படுத்துவதாகக் கூறினர். எனவே பவுல் இத்திருமுகத்தை எழுதுகிறார். தம்முடைய போதனையைக் குறித்தும் தம் திருத்தூதுப் பணியைக் குறித்தும் தெளிவான கண்ணோட்டத்தை உரோமைக் கிறிஸ்தவர்கள் பெறவேண்டும்; தாம் அவர்களைச் சந்திக்குமுன் அவர்கள் தம்மைப் பற்றிய தவறான கருத்துக்களைக் கைவிட வேண்டும் என்றெல்லாம் எண்ணி அவர் இத்திருமுகத்தை எழுதியதாகத் தெரிகிறது.


எருசலேம் மக்களுக்கான நன்கொடையை நேரில் சென்று கொடுக்குமுன் தம்மையும் தாம் திரட்டிய கொடையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி (15:31), அவர்களைத் தயாரிப்பதும் இத்திருமுகத்தின் சில பகுதிகளின் (குறிப்பாக அதி 9-11) நோக்கமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


உள்ளடக்கம்


இத்திருமுகத்தின் அதி 1-11 வரையிலான பகுதியில் ஆழமான இறையியல் கொள்கைகள் காணப்படுகின்றன.


1:17இல் பவுல் திருமுகத்தின் மையக் கருத்தை முன் வைக்கிறார்; நம்பிக்கையினால் இறைவனுக்கு ஏற்புடையவரே வாழ்வு பெறுவர் என்கிறார்.


தொடர்ந்து இக்கருத்து விளக்கம் பெறுகிறது. யூதர்கள் என்றாலும் பிற இனத்தவர்கள் என்றாலும் அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாதவர்களே. மனித குலம் முழுவதுமே பாவத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே எல்லாருக்கும் மீட்பு தேவை. இந்த மீட்பு இயேசு மீது நம்பிக்கை கொள்வதால் வருகிறது. திருச்சட்டத்தினாலோ, விருத்தசேதனத்தினாலோ இது வருவதில்லை.


தொடர்ந்து, புதுவாழ்வு பற்றிப் பேசும் பவுல் அதை ஆவிக்குரிய வாழ்வு என்கிறார். ஏனெனில் தூய ஆவியால் நம்பிக்கை கொள்வோர் பாவம், சாவு ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுதலை பெறுகின்றனர்.


9-11 அதிகாரங்களில் யூதர்களைப் பற்றிப் பேசுகிறார் பவுல். யூதர்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்தது கடவுளின் திட்டப்படி மனிதகுலம் முழுவதும் கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுளின் அருளைப் பெறவே என்றும், பிற இனத்தார் இப்போது மனம் மாறியிருப்பது யூதர்களிடையே போட்டி மனப்பான்மையை வளர்க்கவே என்றும், கடவுள் யூதர்களுக்குக் கொடுத்த வாக்கு மாறுவதில்லை என்பதால் யூதர்கள் ஒருநாள் மனம் மாறுவர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.


12 முதல் 15 வரையுள்ள அதிகாரங்களில் நடைமுறை ஒழுங்குகள் தரப்பட்டுள்ளன. உரோமைத் திருச்சபையில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்துக் கிறிஸ்தவர்களும் இருந்ததை மனத்தில் கொண்டு, அவர்கள் அன்புடன் கிறிஸ்தவ நெறிப்படி வாழும் முறைகுறித்துப் பவுல் பேசுகிறார்.


16ஆம் அதிகாரம்: சில கையெழுத்துப்படிகளில் 15:1-16:24 வரையுள்ள பகுதி நீக்கப்பட்டு, 16:25-27இல் உள்ள இறுதி வாழ்த்து 14ஆம் அதிகாரத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே 15 மற்றும் 16ஆம் அதிகாரம் வேறு ஒருவரால் எழுதப்பட்டது என்பர் சிலர். இருப்பினும் 15ஆம் அதிகாரம் கருத்தின் அடிப்படையில் முன்னைய அதிகாரங்களுடன் ஒத்துப்போகிறது.


16ஆம் அதிகாரத்தில் 26 பேரைப் பவுல் வாழ்த்துகிறார். இவர்கள் பவுல் சென்றிராத உரோமைச் சபையின் உறுப்பினர்களாக இருக்க முடியாது; எபேசில் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டும். இவ்வதிகாரம் இத்திருமுகத்தை எடுத்துச்சென்ற பெய்பா, செல்லும் வழியில், எபேசிலிருந்த பணியாளர்களிடம் கொடுக்க வேண்டிய வாழ்த்து மடலாக இருக்கலாம். அது காலப்போக்கில் உரோமையர் திருமுகத்துடனே இணைக்கப் பெற்றிருக்க வேண்டும்.


அமைப்பு


1. முன்னுரை (வாழ்த்து, நன்றியும் மன்றாட்டும்) 1:1 - 17 2. மனிதருக்கு மீட்பு தேவை 1:18 - 3:20 3. கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறை 3:21 - 4:25 4. கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் புதுவாழ்வு 5:1 - 8:39 5. கடவுளின் மீட்புத் திட்டத்தில் இஸ்ரயேலர் 9:1 - 11:36 6. கிறிஸ்தவ வாழ்வு 12:1 - 15:13 7. முடிவுரையும் வாழ்த்தும் 15:14 - 16:27


அதிகாரம் 1

1. முன்னுரை


வாழ்த்து

1,7கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது:


நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!


2நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார். 3இந்த நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்; 4தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. 5பிற இனத்தார் அனைவரும் இவர்மீது நம்பிக்கை கொண்டு இவருக்குக் கீழ்ப்படியுமாறு இவர் பெயர் விளங்க இவர் வழியாகவே நாங்கள் திருத்தூதுப்பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக்கொண்டோம்.


6பிற இனத்தவராகிய நீங்களும் இயேசுகிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்.


நன்றியும் மன்றாட்டும்


8முதற்கண் உங்கள் அனைவருக்காகவும் நான் இயேசு கிறிஸ்து வழியாய் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஏனெனில், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை உலக முழுவதிலும் தெரிந்திருக்கிறது. 9தம் திருமகனைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் பணியின் மூலம் நான் உளமார வழிபட்டுவரும் கடவுள் சாட்சியாய்ச் சொல்கிறேன்; உங்களை நினைவுகூர்ந்து, 10உங்களுக்காக எப்போதும் இறைவனிடம் வேண்டி வருகிறேன். கடவுளின் திருவுளத்தால் நான் உங்களிடம் வருவதற்கு இப்பொழுதாவது இறுதியாக ஒரு வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென மன்றாடி வருகிறேன். 11நான் உங்களைக் காண ஏங்குகிறேன்; அங்கே வந்து உங்களை உறுதிப்படுத்துவதற்காக ஆவிக்குரிய கொடை ஏதேனும் உங்களுக்கு வழங்க வேண்டுமென விழைகிறேன். 12நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் நானும், நான் கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்களும் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டப் பெறவேண்டுமென விழைகிறேன்.


13பிற மக்களிடையே நான் செய்த பணியால் பயன்விளைந்தது. அதுபோல உங்களிடையேயும் சிறிதளவாவது பயன்விளையும் முறையில் பணியாற்ற விரும்பி உங்களிடம் வர பன்முறை திட்டமிட்டேன்; ஆயினும், இன்று வரை தடைகள் வந்து கொண்டே இருக்கின்றன. சகோதர சகோதரிகளே, இதை நீங்கள் அறியவேண்டுமென விரும்புகிறேன்.✠ 14கிரேக்கருக்கும் கிரேக்கரல்லாதார்க்கும், அறிவாளிகளுக்கும் அறிவிலிகளுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். 15ஆதலால்தான், உரோமையராகிய உங்களுக்கும் நற்செய்தி அறிவிக்கவேண்டுமென நான் ஆர்வம் கொண்டுள்ளேன்.


நற்செய்தியின் ஆற்றல்


16நற்செய்தியை முன்னிட்டு வெட்கப்படமாட்டேன்; ஏனெனில், அதுவே கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை. முதலில் யூதருக்கும், அடுத்துக் கிரேக்கருக்கும் — அதாவது நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவருக்கும் — அந்த மீட்பு உண்டு.✠ 17ஏனெனில், “நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர்” என மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுளின் செயல் நற்செய்தியில் வெளிப்படுகிறது. தொடக்கமுதல் இறுதிவரை இந்தச் செயல் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிகழ்கிறது.✠


2. மனிதருக்கு மீட்பு தேவை


மனிதர் அனைவரும் குற்றவாளிகள்

18இறைப்பற்று இல்லா மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது; ஏனெனில், இவர்கள் தங்கள் நெறிகேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றார்கள்.✠ 19கடவுளைப் பற்றி அறியக்கூடியதெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக விளங்கிற்று; அதைக் கடவுளே அவர்களுக்குத் தெளிவுறுத்தியிருக்கிறார். 20ஏனெனில், கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள் — அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும் — உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக் கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் சாக்குப்போக்கு சொல்வதற்கு வழியே இல்லை. 21ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை; நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின. உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று.✠ 22தாங்கள் ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் மடையர்களே. 23அழிவில்லாக் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக அழிந்துபோகும் மனிதரைப்போலவும், பறப்பன, நடப்பன, ஊர்வன ஆகியவற்றைப் போலவும் உள்ள உருவங்களை வழிபட்டனர்.✠


24ஆகவே, அவர்களுடைய உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்துகின்ற ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார்.25அவர்கள் கடவுளைப் பற்றிய உண்மைக்குப் பதிலாகப் பொய்ம்மையை ஏற்றுக் கொண்டார்கள்; படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்குப் பணி செய்தார்கள்; படைத்தவரை மறந்தார்கள்; அவரே என்றென்றும் போற்றுததற்குரியவர். ஆமென்.


26ஆகையால் கடவுள், கட்டுக்கடங்காத இழிவான பாலுணர்வுகொள்ள அவர்களை விட்டு விட்டார். அதன் விளைவாக, அவர்களுடைய பெண்கள் இயல்பான இன்ப முறைக்குப் பதிலாக இயல்புக்கு மாறான முறையில் நடந்துகொண்டார்கள். 27அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேர்ந்து இன்பம் பெறும் இயல்பான முறையைவிட்டு தங்களிடையே ஒருவர்மீது ஒருவர் வேட்கை கொண்டு காமத்தீயால் பற்றி எரிந்தார்கள். ஆண்கள் ஆண்களுடன் வெட்கத்திற்குரிய செயல்களைச் செய்து, தாங்கள் நெறி தவறியதற்கான கூலியைத் தங்கள் உடலில் பெற்றுக்கொண்டார்கள்.


28கடவுளை அறிந்து ஏற்றுக் கொள்ளும் தகுதியை அவர்கள் இழந்து விட்டதால் சீர்கெட்ட சிந்தனையின் விளைவாகத் தகாத செயல்களைச் செய்யுமாறு கடவுள் அவர்களை விட்டு விட்டார். 29இவ்வாறு, அவர்கள் எல்லா வகை நெறிகேடுகளும், பொல்லாங்கு, பேராசை, தீமை ஆகியவையும் நிறைந்தவர்களானார்கள். அவர்களிடம் பொறாமை, கொலை, சண்டைச் சச்சரவு, வஞ்சகம், தீவினை முதலியவை மலிந்துவிட்டன. அவர்கள் புறங்கூறுபவர்கள், 30அவதூறு பேசுபவர்கள், கடவுளை வெறுப்பவர்கள், இழித்துரைப்பவர்கள், செருக்குற்றவர்கள், வீம்பு பாராட்டுபவர்கள், தீய வழிகளைக் கண்டுபிடிப்பவர்கள், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்கள்; 31சொல் தவறுபவர்கள், மதிகெட்டவர்கள், பாசம் அற்றவர்கள், இரக்கம் இல்லாதவர்கள். 32இப்படியெல்லாம் நடப்பவர்கள் சாவுக்குரியவர்கள் என்னும் கடவுளின் ஒழுங்கை அறிந்திருந்தும் இவ்வாறு நடக்கின்றார்கள்; தாங்கள் நடப்பது மட்டுமன்று, அப்படி நடப்பவர்களையும் பாராட்டுகிறார்கள்.


1:1 திப 26:16-18. 1:13 திப 19:21. 1:16 மாற் 8:38. 1:17 அப 2:4; கலா 3:11; எபி 10:38. 1:18 எபே 5:6; கொலோ 3:6. 1:21 எபே 4:17,18. 1:23 இச 4:16-18; திபா 106:20; திப 17:29.


அதிகாரம் 2

நடுநிலை தவறாத கடவுளின் தீர்ப்பு


1ஆகையால், பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிப்போரே, நீங்கள் யாராயினும், சாக்குப் போக்குச்சொல்வதற்கு உங்களுக்கு வழியில்லை. ஏனெனில், பிறருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும் போது நீங்கள் உங்களுக்கே தண்டனைத் தீர்ப்பை அளிக்கிறீர்கள். தீர்ப்பளிக்கும் நீங்களே அந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கான செயல்களைச் செய்கிறீர்களே!✠ 2இத்தகையவற்றைச் செய்வோருக்குக் கடவுள் அளிக்கும் தீர்ப்பு நீதி வழுவாதது என்பது நமக்குத் தெரியும். 3இவற்றைச் செய்வோர் மேல் தீர்ப்பளிக்கும் நீங்களும் இவற்றையே செய்து வருகிறீர்கள்! நீங்கள் மட்டும் கடவுளின் தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறீர்களா?4அல்லது, அவரது அளவற்ற பரிவையும் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் ஏளனம் செய்கிறீர்களா? உங்களை மனம்மாறச் செய்வதற்கே கடவுள் பரிவுகாட்டுகிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா? 5உங்கள் கடின உள்ளம் உங்களை மனம் மாற விடவில்லை; ஆகையால், கடவுளின் சினமும் நீதித் தீர்ப்பும் வெளிப்பட வேண்டிய நாளில் உங்களுக்கு வரப்போகும் தண்டனையைச் சேமித்து வைக்கிறீர்கள். 6ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார்.✠ 7மனஉறுதியோடு நற்செயல் புரிந்து மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு அவர் நிலைவாழ்வை வழங்குவார்.8ஆனால், தன்னலம் நாடுபவர்களாய் உண்மைக்குப் பணியாமல், அநீதிக்குப் பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும் சீற்றமும் வந்து விழும். 9முதலில் யூதருக்கும் பிறகு கிரேக்கருக்கும் அதாவது, தீமை செய்யும் எல்லா மனிதருக்குமே வேதனையும் நெருக்கடியும் உண்டாகும். 10அவ்வாறே, முதலில் யூதருக்கும் அடுத்துக் கிரேக்கருக்கும் அதாவது, நன்மை செய்யும் அனைவருக்குமே பெருமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும். 11ஏனெனில், கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை.✠


12திருச்சட்டத்தை அறியாமல் பாவம் செய்யும் எவரும், அந்தச் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்படாமலேயே அழிவுறுவர்; திருச்சட்டத்துக்கு உட்பட்டு எவரும் பாவம் செய்தால், அச்சட்டத்தாலே தீர்ப்பளிக்கப்படுவர். 13ஏனெனில், திருச்சட்டத்தைக் கேட்பதால் மட்டும் யாரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை; அதனைக் கடைப்பிடிப்பவர்களே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.14திருச்சட்டத்தைப் பெற்றிராத பிற இனத்தார் அதில் உள்ள கட்டளைகளை இயல்பாகக் கடைப்பிடிக்கும்போது, அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாத போதிலும் தங்களுக்குத்தாங்களே அவர்கள் சட்டமாய் அமைகிறார்கள். 15திருச்சட்டம் கற்பிக்கும் ஒழுக்கநெறி தங்கள் உள்ளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் தங்கள் நடத்தையில் காட்டுகிறார்கள். அவர்களது மனச்சான்றே இதற்குச் சாட்சி. ஏனெனில், அவர்கள் செய்வது குற்றமா குற்றமில்லையா என அவரவர் எண்ணங்களே வெளிப்படுத்துகின்றன. 16நான் அறிவிக்கும் நற்செய்தியின்படி, மனிதர் உள்ளங்களில் மறைந்திருப்பவற்றைக் குறித்து இயேசுகிறிஸ்துவின் வாயிலாய்க் கடவுள் தீர்ப்பளிக்கும் நாளில் மேற்சொன்னவை நிகழும்.✠


திருச்சட்டத்தால் யூதர்களுக்கும் பயனில்லை


17யூதர் என்னும் பெயரைத் தாங்கித் திருச்சட்டத்தின் அடிப்படையில் வாழும் நீங்கள் கடவுளோடு கொண்டுள்ள உறவைப்பற்றிப் பெருமைப்படுகிறீர்கள்; 18அவருடைய திருவுளத்தை அறிந்திருக்கிறீர்கள்; திருச்சட்டத்தைக் கற்றறிந்துள்ளதால் எது சிறந்தது எனச் சோதித்து அறிகிறீர்கள். 19-20அறிவையும் உண்மையும் தன்னகத்தே கொண்டுள்ள திருச்சட்டம் உங்களிடம் இருக்கிறது என்னும் உறுதியான நம்பிக்கையில் பார்வையற்றோருக்கு வழிகாட்டியாகவும், இருளில் இருப்போர்க்கு ஒளியாகவும், அறிவிலிகளுக்குக் கல்வி புகட்டுபவராகவும் குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் இருக்க முற்படுகிறீர்கள். 21ஆனால், பிறருக்குக் கற்றுக்கொடுக்கும் நீங்களே கற்றுக் கொள்ளவில்லையே! திருடாதே எனப்பறைசாற்றுகிறீர்கள்; நீங்களே திருடுவதில்லையா? 22விபசாரம் செய்யாதே எனச் சொல்கிறீர்கள்; நீங்களே விபசாரம் செய்வதில்லையா? தெய்வச் சிலைகளைத் தீட்டாகக் கருதுகிறீர்கள்; நீங்களே அவற்றின் கோவில்களைக் கொள்ளையிடுவதில்லையா? 23திருச்சட்டத்தைப் பற்றிப் பெருமைப்படுகிறீர்கள்; நீங்களே அச்சட்டத்தை மீறிக் கடவுளை இழிவுபடுத்துவதில்லையா? 24ஆம், மறைநூலில் எழுதியுள்ளவாறு “உங்களால் கடவுளின் பெயர் பிற இனத்தாரிடையே இகழப்படுகின்றது.”✠


25நீங்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தால் விருத்தசேதனத்தால் உங்களுக்குப் பயனுண்டு; ஆனால், திருச்சட்டத்தை மீறினால் நீங்கள் விருத்தசேதனம் பெற்றிருந்தும் பெறாதவர்களாகவே இருக்கிறீர்கள். 26ஆகையால், விருத்தசேதனம் செய்துகொள்ளாத ஒருவர் திருச்சட்டத்தின் ஒழுங்குகளைக் கடைப்பிடித்தால், விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டாலும் விருத்தசேதனம் செய்து கொண்டவராக அவர் கருதப்படலாம் அல்லவா? 27உடலில் விருத்தசேதனம் செய்யாதிருந்தும் திருச்சட்டத்தை நிறைவேற்றுவோர், எழுதிய சட்டத்தையும் விருத்தசேதனத்தையும் பெற்றிருந்தும் அச்சட்டத்தை மீறும் நீங்கள் குற்றவாளிகளெனத் தீர்ப்பு அளிப்பர். 28ஏனெனில், புறத் தோற்றத்தில் மட்டும் யூதராய் இருப்பவர் யூதரல்ல; அவ்வாறே, புறத்தோற்றத்தில், அதாவது உடலில் மட்டும் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனம் அல்ல. 29ஆனால் ,அகத்தில் யூதராய் இருப்பவரே உண்மையான யூதர், உள்ளத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே உண்மையான விருத்தசேதனம். அது எழுதிய சட்டத்தின்படி செய்யப்படுவது அல்ல, தூய ஆவியால் செய்யப்படுவதாகும். அத்தகையவர் மனிதரிடமிருந்து அல்ல, கடவுளிடமிருந்தே பாராட்டுப் பெறுவர்.✠


2:1 மத் 7:1; லூக் 6:37. 2:6 திபா 62:12; நீமொ 24:12. 2:11 இச 10:17. 2:16 1 கொரி 4:5. 2:24 எசா 52:5. 2:29 இச 30:6; பிலி 3:3; கொலோ 2:11. 《 உரோமையர் 1மேலே செல்க


அதிகாரம் 3

1அப்படியானால், மற்றவர்களை விட யூதர்கள் பெற்றுள்ள சிறப்பு என்ன? விருத்தசேதனத்தால் அவர்களுக்குப் பயன் என்ன? 2எல்லா வகையிலும் அவர்கள் பெரும்பயன் பெற்றுள்ளார்கள். முதலாவது, கடவுளின் வாக்குகள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. 3ஆனால், அவர்களுள் சிலர் அவ்வாக்குகளை நம்பவில்லையே! அதனாலென்ன? அவர்கள் நம்பாதலால், கடவுள் நம்பத்தகாதவர் ஆகிவிடுவாரா? 4ஒருபோதுமில்லை. மனிதர் எல்லாரும் பொய்யர்; கடவுளோ உண்மை உள்ளவர் என்பது தெளிவாகும். ஏனெனில், “உமது சொற்களில் நீதி வெளிப்படுகிறது; உம் தண்டனைத் தீர்ப்புகளில் வெற்றி விளங்குகிறது” என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!✠


5நீதியற்ற நம் நடத்தையின் மூலம் கடவுளின் நீதி வெளிப்படுமாயின் நாம் என்ன சொல்வோம்? கடவுள் சினந்தெழுந்து தண்டித்தால், அவர் நீதியற்றவர் என்போமா? — இதை நான் மனிதர் பேசும் முறையில் சொல்லுகிறேன் — 6ஒருபோதும் இல்லை. கடவுள் நீதியற்றவர் என்றால் எப்படி அவர் உலகிற்குத் தீர்ப்பளிக்க முடியும்? 7என் பொய்ம்மையின் மூலம் கடவுளின் வாய்மை வெளிப்படுவதோடு அவரது மாட்சியும் பெருகுமானால், இன்னும் நான் பாவி எனத் தீர்ப்பளிக்கப்படுவது ஏன்? 8அப்படியானால், “நன்மை விளையும்படி தீமையைச் செய்வோம்” என்று சொல்லலாமே! நாங்கள் இவ்வாறு கூறுவதாகச் சிலர் எங்கள் மீது வீண்பழி சுமத்துகின்றனர். இவர்கள் தகுந்த தண்டனை பெறுவார்கள்.


எல்லாரும் பாவிகள்


9அப்படியானால், மற்றவர்களைவிட யூதர்களாகிய நாம் மேலானவர்களா? இல்லவே இல்லை. ஏனெனில், யூதர், கிரேக்கர் யாவரும் பாவத்துக்கு உட்பட்டிருப்பதாக ஏற்கெனவே எடுத்துரைத்தாயிற்று. 10அவ்வாறே மறைநூலிலும் எழுதியுள்ளது: “நேர்மையாளரே இல்லை, ஒருவர் கூட இல்லை;


11மதிநுட்பம் உள்ளவர் ஒருவருமில்லை; கடவுளைத் தேடுபவர் எவராவது உண்டோ? 12எல்லாரும் நெறிபிறழ்ந்தனர்; ஒருமிக்கக் கெட்டுப்போயினர். நல்லது செய்பவர் யாருமில்லை; ஒருவர்கூட இல்லை.” 13“அவர்களது தொண்டை திறந்த பிணக்குழி; அவர்களது நாக்கு வஞ்சகமே பேசும். அவர்கள் உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சு.”✠ 14“அவர்கள் வாயில் சாபமும் கொடுமையும் நிறைந்துள்ளது.”✠ 15“இரத்தம் சிந்துவதற்கு அவர்கள் கால்கள் விரைகின்றன; 16பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன; 17அமைதி வழியை அவர்கள் அறியார்.” 18“அவர்களது மனக்கண்களில் இறையச்சம் இல்லை.”✠


19திருச்சட்டம் சொல்வதெல்லாம் அந்தச் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குப் பொருந்தும் என நமக்குத் தெரியும். ஆகவே இவர்களும் உலக மக்கள் அனைவரும் சாக்குப்போக்குச் சொல்ல வழியின்றி இருக்கிறார்கள். 20ஏனெனில், திருச்சட்டம் சார்ந்த செயல்களால் எவரும் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவர் ஆவதில்லை. மனிதர்கள் பாவிகள் என்பதையே சட்டம் அவர்களுக்கு உணர்த்துகிறது.✠


3. கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறை


21இப்பொழுதோ கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளது; திருச்சட்டமும் இறைவாக்குகளும் இதற்குச் சான்று பகர்கின்றன.22இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்; நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார். அவர் வேறுபாடு காட்டுவது இல்லை.✠ 23ஏனெனில், எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர். 24ஆயினும், அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின் மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர். 25இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார். அவரிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவே அவ்வாறு செய்தார். கடவுள் கடந்த காலத்தில் மனிதர் செய்த பாவங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். இவ்வாறு, மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறையை அவர் காட்டினார். 26இக்காலத்தில் தமது நீதியைக் கடவுள் பொறுமையோடு காட்டி வருகிறார். ஆம், அவர் நீதியுள்ளவர். இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி வருகிறார்.


27அப்படியிருக்க, பெருமை பாராட்ட இடமேது? இடமில்லை. எந்த அடிப்படையில் பெருமைபாராட்ட இடமில்லை? செயல்களின் அடிப்படையிலா? இல்லை; நம்பிக்கையின் அடிப்படையில்தான். 28ஏனெனில், திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுவின்மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் எனக் கருதுகிறோம். 29கடவுள் யூதருக்கு மட்டுமா கடவுள்? பிற இனத்தாருக்கும் அவர் கடவுள் அல்லவா? ஆம், பிற இனத்தாருக்கும் அவரே கடவுள். 30ஏனெனில், கடவுள் ஒருவரே. விருத்தசேதனம் பெற்றவர்களாயினும் விருத்தசேதனம் பெறாதவர்களாயினும், இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் யாவரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குகிறார். 31அப்படியானால், நம்பிக்கை தேவை என வலியுறுத்துவதன்மூலம் திருச்சட்டத்தைச் செல்லாததாக்குகிறோமா? ஒரு போதும் இல்லை. மாறாக, அவ்வாறு செய்வதன் மூலம் திருச்சட்டத்தை நிலைநாட்டுகிறோம்.✠


3:4 திபா 51:4. 3:10-12 திபா 14:1-3; 53:1-3. 3:13 திபா 5:9; 140:3. 3:14 திபா 10:7. 3:15-17 திபா 59:7,8. 3:18 திபா 36:1. 3:20 திபா 143:2; கலா 2:16. 3:22 கலா 2:16. 3:31 மத் 5:17; திப 24:14.


அதிகாரம் 4

ஆபிரகாம் ஓர் எடுத்துக்காட்டு


1அப்படியானால், இதுகாறும் கூறியவை நம் இனத்தின் தந்தையாகிய ஆபிரகாமுக்கு எப்படிப் பொருந்தும்? 2தாம் செய்த செயல்களினால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராகியிருந்தால், பெருமை பாராட்ட அவருக்கு இடமுண்டு; ஆனால், கடவுள் முன்னிலையில் அவர் அப்படிப் பெருமை பாராட்ட இடமே இல்லை. 3ஏனெனில், மறைநூல் கூறுவதென்ன? “ஆபிரகாம் கடவுள் மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்.”


✠ 4வேலை செய்தவர் பெறும் கூலி, நன்கொடையாகக் கருதப்படுவதில்லை; அது அவர்கள் உரிமை. 5தம் செயல்கள்மீது நம்பிக்கை வையாது, இறைப்பற்றில்லாதோரையும் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுள்மீது நம்பிக்கை வைப்போரை, அவரது நம்பிக்கையின் பொருட்டுக் கடவுள் தமக்கு ஏற்புடையோர் எனக் கருகிறார். 6அவ்வாறே, கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே, அவரைத் தமக்கு ஏற்புடையவர் எனக் கருதுவதால் அம்மனிதர் பேறுபெற்றவர் என்று தாவீது கூறியிருக்கிறார்:


7“எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ அவர் பேறுபெற்றவர்.✠ 8ஆண்டவர் எந்த மனிதரின் தீச் செயலைக் கருத்தில் கொள்ளவில்லையோ அவர் பேறு பெற்றவர்.” 9பேறுபெற்றோர் விருத்தசேதனம் செய்து கொண்டோர் மட்டுமா? செய்யாதோரும் கூடவா? “ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்; அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்” என்றோமே. 10அவர் எந்த நிலையில் இருந்தபோது கடவுள் அவ்வாறு கருதினார்? விருத்தசேனம் செய்துகொண்ட நிலையிலா? செய்துகொள்ளாத நிலையிலா? விருத்தசேதனம் செய்துகொண்ட நிலையில் அல்ல; செய்து கொள்ளாத நிலையில்தான். 11விருத்தசேதனம் இல்லாத நிலையிலேயே அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளுக்கு ஏற்புடையவர் என்று கருதப்பட்டார்; அதை உறுதிப்படுத்தும் அடையாளமாக விருத்தசேதனத்தைப் பெற்றார். இவ்வாறு விருத்தசேதனம் இல்லாதிருந்தும், கடவுள்மீது நம்பிக்கை கொள்வதால் அவருக்கு ஏற்புடையவர்களாகக் கருதப்படும் அனைவருக்கும் அவர் தந்தையானார்.✠ 12அதேபோல, விருத்தசேதனம் பெற்றிருந்தும், அதுவே போதுமென்றிருந்திடாமல் நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கும் அவர் தந்தையானார்; எப்படியெனில், நம் தந்தையாம் ஆபிரகாம் விருத்தசேதனம் பெறுமுன்பே நம்பிக்கை கொண்டிருந்ததுபோல, இவர்களும் நம்பிக்கை கொண்டவர்களாய் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார்கள்.


நம்பினோர்க்கே வாக்குறுதி பயன்தரும்


13உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை; நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது.✠ 14ஏனெனில், திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குத்தான் அந்த உரிமைச் சொத்து கிடைக்கும் எனின், நம்பிக்கை கொள்வது பொருளற்றதாகும்; அந்த வாக்குறுதியும் செல்லாததாகும்.✠ 15திருச்சட்டம் இறைவனின் சினத்தை வருவிக்கிறது. சட்டம் இல்லையெனில் அதை மீறவும் இயலாது.✠ 16ஆகவே ,கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு, வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் — திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப்போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் — உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை.✠ 17ஏனெனில் “எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள் மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார்.✠ 18“உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்” என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார். ஆகவே, அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார்.✠ 19தமக்கு ஏறத்தாழ நூறு வயது ஆகிவிட்டதால் தமது உடலும் சாராவுடைய கருப்பையும் செத்தவைபோல் ஆற்றலற்றுப் போய்விட்டதை எண்ணிப் பார்த்தபோதுகூட, அவர் நம்பிக்கையில் உறுதி தளரவில்லை;✠ 20கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஐயப்படவே இல்லை; நம்பிக்கையில் அவர் மேலும் வலுப் பெற்றார்; கடவுளைப் பெருமைப்படுத்தினார். 21தாம் வாக்களித்ததைக் கடவுள் செய்ய வல்லவர் என்பதை அவர் உறுதியாய் அறிந்திருந்தார். 22ஆகவே, “அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.”


23“நீதியாகக் கருதினார்” என்று எழுதியுள்ளது அவரைமட்டும் குறிக்கவில்லை; 24நம்மையும் குறிக்கின்றது; இறந்த நம் ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்தவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் நாமும் அவ்வாறே கடவுளுக்கு ஏற்புடையவர்கள் எனக் கருதப்படுவோம். 25நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்; நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச்செய்தார்.✠


4:3 தொநூ 15:6; கலா 3:6; யாக் 2:23. 4:7 திபா 32:1,2. 4:11 தொநூ 17:10; யோவா 7:22. 4:13 தொநூ 17:4-6; 22:17-18; கலா 3:29. 4:14 கலா 3:18. 4:15 கலா 3:10. 4:16 கலா 3:7. 4:17 தொநூ 17:5. 4:18 தொநூ 15:5. 4:19 தொநூ 17:17. 4:25 எசா 53:4,5.


அதிகாரம் 5

4. கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் புதுவாழ்வு


கடவுளுக்கு ஏற்புடையவராதலால் விளையும் பயன்


1ஆகையால், நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். 2நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால் தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது. 3அதுமட்டும் அல்ல, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், 4மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம். 5அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; எனெனில், நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.


6நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். 7நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். 8ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்.✠ 9ஆகையால், இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப்பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?✠ 10நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! 11அது மட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.


ஆதாமும் கிறிஸ்துவும்


12ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.✠ 13திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை. 14aஆயினும், ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று;


14bஇந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார். 15ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும்⁕ இறந்தனர். ஆனால், கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது. 16இந்த அருள்கொடையின் விளைவு வேறு, அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு. எவ்வாறெனில், ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை. பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ அருள்கொடையாக வந்த விடுதலை. 17மேலும், ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி செலுத்தினதென்றால் அருள்பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்து கொண்டவர்கள் வாழ்வுபெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?


18ஆகவே, ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. 19ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர்* பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர்* கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.✠


20குற்றம் செய்ய வாய்ப்புப் பெருகும்படி சட்டம் இடையில் நுழைந்தது; ஆனால், பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது.✠21இவ்வாறு, சாவின் வழியாய்ப் பாவம் ஆட்சி செலுத்தியதுபோல், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது; அந்த அருள்தான் மனிதர்களைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கி, நிலைவாழ்வு பெற வழிவகுக்கிறது.


5:8 யோவா 15:13. 5:9 1 தெச 1:10. 5:12 தொநூ 3:6; 1 கொரி 15:21,22. 5:20 கலா 3:19. 5:15 ‘பலர்’ என்னும் சொல்லை இவ்விடத்தில் ‘அனைவர்’ என்றும் மொழிபெயர்க்கலாம். 5:19 ‘பலர்’ என்னும் சொல்லை இவ்விடத்தில் ‘அனைவர்’ என்றும் மொழிபெயர்க்கலாம்.


அதிகாரம் 6

பாவத்தைவிட்டு கிறிஸ்துவோடு இணைந்து வாழ்தல்


1அப்படியானால் என்ன சொல்வோம்? அருள் பெருகுவதற்காக நாம் பாவத்தில் நிலைத்திருக்கலாமா? 2ஒருபோதும் கூடாது. பாவத்தைப் பொறுத்தமட்டில் செத்துவிட்ட நாம் எவ்வாறு தொடர்ந்து பாவ வாழ்க்கை வாழ முடியும்? 3திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா?✠ 4இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்.✠


5அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். 6நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு, பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். 7ஏனெனில், இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ? 8கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. 9இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். 10அவர் இறந்தார்; பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்; அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார்.


11அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொருத்தமட்டில் இறந்தவர்கள்; கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள். 12ஆகவே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய உங்கள் உடலின்மீது ஆட்சி செலுத்தவிடாதீர்கள். 13நீங்களோ உங்கள் உறுப்புக்களைத் தீவினையின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள்; மாறாக, இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்; கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகளை அவரிடமே ஒப்படையுங்கள். 14பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்தக் கூடாது; ஏனெனில், நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்.


கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை நெறி


15அதனால் என்ன? சட்டத்துக்கு உட்பட்டவர்களாய் இல்லாமல், அருளின் ஆட்சிக்கு உட்பட்டு இருப்பதால் நாம் பாவம் செய்யலாமா? ஒருபோதும் கூடாது. 16எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அதற்கே நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியும் அன்றோ? அப்படியிருக்க, நீங்கள் பாவத்திற்கு உங்களையே அடிமையாக்கினால் சாவீர்கள்; நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவீர்கள். 17-18முன்பு பாவத்திற்கு அடிமைகளாய் இருந்த நீங்கள் பெற்றுக்கொண்ட போதனையில் அடங்கிய ஒழுக்க நெறியை உளமாரக் கடைப்பிடிக்கிறீர்கள். பாவத்தினின்று விடுதலை பெற்ற நீங்கள் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை நெறிக்கு அடிமைகளாயிருக்கிறீர்கள். அதற்காகக் கடவுளுக்கு நன்றி. 19நீங்கள் வலுவற்றவர்கள் என்பதை மனதிற்கொண்டு எளிய முறையில் பேசுகிறேன். முன்பு கட்டுப்பாடற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும் கெட்ட நடத்தைக்கும் நெறிகேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை நீங்கள் அடிமையாக்கியிருந்தீர்கள். அதுபோல இப்பொழுது தூய வாழ்வுக்கு வழிவகுக்கும் ஏற்புடைய செயல்களுக்கு உங்கள் உறுப்புகளை அடிமையாக்குங்கள்.


20நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாய் இருந்தபோது கடவுளுக்கு ஏற்புடையவற்றைச் செய்யக் கடமைப்பட்டிருக்கவில்லை. 21அப்போது நீங்கள் செய்த செயல்களை எண்ணி இப்போது நீங்களே வெட்கப்படுகிறீர்கள். அவற்றால் நீங்கள் கண்ட பயன் யாது? அவற்றின் முடிவு சாவு அல்லவா? 22ஆனால், இப்பொழுது, நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள்; இதனால் நீங்கள் காணும் பயன் தூய வாழ்வு. இதன் முடிவு நிலைவாழ்வு. 23பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு.✠


6:3 கலா 3:27. 6:4 கொலோ 2:12. 6:21-22 இச 30:15-20. 6:23 கலா 6:7-9; யாக் 1:15.


அதிகாரம் 7

மணவாழ்க்கை-ஓர் எடுத்துக்காட்டு


1சகோதர சகோதரிகளே, சட்டம் தெரிந்த உங்களைக் கேட்கிறேன்; உயிரோடு இருக்கும் காலம் வரையில்தான் சட்டம் ஒருவரைக் கட்டுப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியாதா? 2எடுத்துக்காட்டாக, மணமான பெண் ஒருவர் கணவன் உயிரோடு இருக்கும் வரையில்தான் திருமணச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருக்கிறார்; கணவன் இறந்துவிட்டால், கணவனோடு வாழ வேண்டும் என்கிற சட்டத்திலிருந்து விடுதலை பெறுகிறார்.✠ 3ஆகையால், கணவன் உயிரோடு இருக்கும்போது ஒரு பெண் வேறொருவரோடு வாழ்ந்தால், விபசாரி என்னும் பெயர் கிடைக்கும். ஆனால், கணவன் இறந்து போனால், அவர் திருமணச் சட்டத்தினின்று விடுதலை பெற்றவர் ஆகிறார், ஆகவே, பின்பு அவர் வேறொருவருக்கு மனைவியானால், விபசாரி அல்ல. 4அவ்வாறே, என் அன்பர்களே, நீங்கள் கிறிஸ்துவின் உடலோடு ஒன்றித்திருப்பதால் திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள் ஆனீர்கள்; அதன் விளைவாக இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்துவோடு நீங்கள் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள்; இவ்வாறு, நீங்கள் கடவுளுக்கு ஏற்ற பயன் அளிக்க முடியும். 5நாம் நமது ஊனியல்பின்படி வாழ்ந்தபோது, சட்டத்தை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டு பாவ இச்சைகள் நம்முடைய உறுப்புகளில் செயலாற்றின; அதனால் விளைந்த பயன் சாவு. 6ஆனால், இப்பொழுது நம்மை ஒடுக்கி வைத்திருந்த சட்டத்தைப் பொறுத்த மட்டில் நாம் இறந்துவிட்டதால், அச்சட்டத்தினின்று விடுதலை பெற்றோம். ஆகையால், எழுதப்பட்ட சட்டத்திற்குரிய பழைய நெறியில் நாம் ஊழியம் செய்வதைவிட்டுத் தூய ஆவி அருளும் புதிய நெறியில் ஊழியம் செய்ய முடிகிறது.


திருச்சட்டமும் பாவமும்


7அப்படியானால் என்ன சொல்வோம்? திருச்சட்டமும் பாவமும் ஒன்றுதானா? ஒருபோதும் இல்லை. ஆயினும், திருச்சட்டம் வழியாய் அன்றிப் பாவம் என்ன என்று நான் அறிந்திருக்கமாட்டேன். எப்படியெனில், “பிறருக்குரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே” என்று சட்டம் சொல்லாமல் போயிருந்தால், அவ்விருப்பம் என்ன என்றே அறிந்திருக்க மாட்டேன்.✠ 8ஆனால், கட்டளை தந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பாவம் என்னுள் எல்லாவகை ஆசைகளையும் தூண்டிவிட்டது. ஏனெனில், சட்டம் இல்லையேல் பாவத்திற்கு உயிரில்லை.✠ 9ஒரு காலத்தில் சட்டம் இல்லாதபோது நான் உயிர் உள்ளவனாயிருந்தேன். கட்டளை தரப்பட்டபோது பாவம் உயிர்பெற்றது; 10நான் உயிரிழந்தேன். வாழ்வுக்கு வழியாய் இருக்கவேண்டிய கட்டளை எனக்குச் சாவுக்கு வழியாயிற்று என்று கண்டேன்.✠ 11கட்டளை தந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பாவம் என்னை ஏமாற்றி அந்தக் கட்டளை வழியாகவே என்னைக் கொன்றும் விட்டது.


12திருச்சட்டம் தன்னிலே தூயதுதான்; அவ்வாறே கட்டளையும் தூயது, நேரியது, நல்லது.✠ 13அவ்வாறாயின், நல்லது என் சாவுக்குக் காரணமாக மாறிவிட்டதா? ஒருபோதும் இல்லை. எல்லாம் பாவத்தின் வேலைதான்! பாவம் தன் இயல்பை வெளிப்படுத்துவதற்காக நல்லதொன்றைக் கொண்டு எனக்குச் சாவை விளைவித்து, இவ்வாறு கட்டளையின் வழியாகப் பாவம் தன் கொடிய இயல்பை அளவுகடந்த முறையில் வெளிப்படுத்தியது.


மனிதருக்குள்ளே போராட்டம்


14திருச்சட்டம் ஆவிக்குரியது என்பது நமக்குத் தெரிந்ததே; ஆனால், நான் ஊனியல்பினன்; பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன். 15ஏனெனில், நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை; எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை; எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன்.✠ 16நான் விரும்பாததைச் செய்கிறேன் எனில் சட்டம் நல்லது என நான் ஏற்றுக் கொள்ளுகிறேன் என்றாகிறது.17ஆனால், அவ்வாறு செய்வது என்னுள் குடிகொண்டிருக்கும் பாவமே; நான் அல்ல. 18ஏனெனில், என்னுள், அதாவது வலுவற்ற என் ஊனியல்பில், நல்லது எதுவும் குடிகொண்டிருக்கவில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை.19நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன். 20நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது.


21நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல் முறையை என்னுள் காண்கிறேன், 22நான் கடவுளின் சட்டத்தைக்குறித்து உள்ளூர மகிழ்ச்சியடைகிறேன்.✠ 23ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்; என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது; என் உறுப்புகளில் இருக்கும் அந்தப் பாவச் சட்டத்திற்கு என்னைக் கட்டுப்படுத்துகிறது. 24அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்குள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்? 25நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார்; அவருக்கு நன்றி! சுருங்கச் சொல்லின், என் மனத்தால் கடவுளின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருக்கும் நானே என் ஊனியல்பினால் பாவத்தின் சட்டத்திற்கும் கட்டுப்பட்டிருக்கிறேன்.


7:2 1 கொரி 7:39. 7:7 கலா 3:19. 7:8 1 கொரி 15:56. 7:10 எசே 20:11. 7:12 1 திமொ 1:8. 7:15 கலா 5:17. 7:22 2 கொரி 4:16.


அதிகாரம் 8

தூய ஆவி அருளும் வாழ்வு


1ஆகவே, கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது. 2ஏனெனில், கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு வாழ்வு தரும் தூய ஆவியின் சட்டம் பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று என்னை விடுவித்துவிட்டது. 3ஊனியல்பின் காரணமாய் வலுவற்றிருந்த திருச்சட்டம் செய்ய முடியாத ஒன்றைக் கடவுள் செய்தார். அதாவது, ஊனியல்பு கொண்ட மனிதரைப் போன்றவராய்த் தம் சொந்த மகனை அனுப்பி மனிதரிடமுள்ள பாவத்திற்கு முடிவு கட்டினார்.✠ 4ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவ்வாறு செய்தார்.


5ஏனெனில், ஊனியல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டமெல்லாம் அந்த இயல்புக்கு உரியவற்றின்மீதே இருக்கும்; ஆனால், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டம் ஆவிக்கு உரியவற்றின் மீதே இருக்கும். 6ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே; ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும்.✠ 7ஏனெனில், ஊனியல் மனநிலை கடவுளுக்குப் பகையானது; அது கடவுளின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதில்லை, இருக்கவும் முடியாது. 8ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது.


9ஆனால், கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. 10பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். 11மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார்.✠


12ஆகையால், சகோதர சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. 13நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்.✠ 14கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். 15மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். 16நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். 17நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.


வரப்போகும் மாட்சி


18இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். 19இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. 20ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும், அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை.✠ 21அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது.✠ 22இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். 23படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.✠ 24நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா? 25நாமோ காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அதற்காக தளராமனத்தோடு காத்திருக்கிறோம்.


26இவ்வாறு, தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார்.✠ 27உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார். 28மேலும், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். 29தம்மால் முன்பே தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார்.✠ 30தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.


கடவுளின் அன்பு


31இதற்குமேல் நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? 32தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? 33கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. 34அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ! 35கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? 36“உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகிறோம், வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளாகக் கருதப்படுகிறோம்”✠ என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!37ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம். 38ஏனெனில், சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, 39உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.


8:3 திப 13:39. 8:6 கலா 6:8. 8:11 1 கொரி 3:16. 8:13 எபே 4:22-24. 8:15-17 கலா 4:5-7. 8:20 தொநூ 3:17-19. 8:21 2 பேது 3:13. 8:23 2 கொரி 5:2-5. 8:26 யாக் 4:3, 5. 8:29 1 கொரி 15:49; பிலி 3:21. 8:36 திபா 44:22.


அதிகாரம் 9

5. கடவுளின் மீட்புத் திட்டத்தில் இஸ்ரயேலர்


தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேல் இனத்தின் நிலை

1கிறிஸ்துவைச் சார்ந்த நான் சொல்வது உண்மை, பொய்யல்ல. தூய ஆவியால் தூண்டப்படும் என் மனச்சான்றே நான் சொல்வதற்குச் சாட்சி. 2உள்ளத்தில் எனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு. 3என் சொந்த இனத்தைச் சேர்ந்த என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன்.✠4அவர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்; அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக் கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. 5குலமுதல்வர்களின் வழிவந்தவர்கள் அவர்கள்; மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார். இவரே எல்லாவற்றுக்கும் மேலான கடவுள்; என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.


6கடவுளின் வார்த்தை நிறைவேறவில்லை என்பது என் கருத்து அல்ல. ஏனெனில், இஸ்ரயேல் இனத்தில் தோன்றியதனாலேயே அவ்வினத்தில் பிறந்த அனைவரும் இஸ்ரயேலர் ஆகிவிட மாட்டார்கள். 7அவ்வாறே, ஆபிரகாமின் மரபில் தோன்றியவர்கள் அனைவருமே அவருடைய பிள்ளைகள் ஆகிவிடமாட்டார்கள்; ஏனெனில், “ஈசாக்கின் மூலமே உன் வழிமரபு விளங்கும்” என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது.✠ 8அதாவது இயல்பான முறைப்படி பிறந்த பிள்ளைகளல்ல, வாக்குறுதியின் மூலம் பிறந்த பிள்ளைகளே கடவுளின் பிள்ளைகளாகவும் ஆபிரகாமின் வழிமரபினர்களாகவும் கருதப்படுகின்றனர். 9“குறிப்பிட்ட காலத்தில் மீண்டும் உன்னிடம் வருவேன்; அப்போது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்பதே அந்த வாக்குறுதி.✠


10அது மட்டும் அல்ல, நம் மூதாதையாகிய ஈசாக்கு என்னும் ஒரே மனிதர் மூலமாக ரெபெக்கா குழந்தைகளைப் பெற்றார். 11குழந்தைகள் பிறக்குமுன்பே, அவர்கள் நன்மையோ, தீமையோ செய்யுமுன்பே, “மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்” என்று அவருக்குச் சொல்லப்பட்டது. 12அவ்வாறே, “யாக்கோபுக்கு அன்றோ நான் அன்புகாட்டினேன். ஆனால் ஏசாவை வெறுத்தேன்” என்றும் மறைநூலில் எழுதியுள்ளது.✠ 13இதிலிருந்து கடவுள் மனிதரைத் தேர்ந்தெடுத்துத் தம் திட்டத்தை நிறைவேற்றுகிறார் என்பது தெளிவாகிறது. இத்திட்டம் மனிதர் செய்யும் செயல்களின்படியன்றி, அழைக்கும் கடவுளுடைய செயலின்படியே நிறைவேறுகிறது என்பதும் தெளிவாகின்றது.✠


14அப்படியானால் என்ன சொல்வோம்? கடவுள் நேர்மையற்றவரா? ஒருபோதும் இல்லை. 15ஏனெனில், அவரே மோசேயிடம், “யார் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேனோ, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்; யார் யாருக்குப் பரிவுகாட்ட விரும்புகிறேனோ, அவர்களுக்குப் பரிவுகாட்டுவேன்” என்றார்.✠ 16ஆகவே, மனிதர் விரும்புவதாலோ உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை; கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது. 17பார்வோனுக்கு மறைநூல் கூறுவதும் இதுவே; “உன் வழியாய் என் வல்லமையைக் காண்பிக்கவும் என் பெயரை நாடெங்கும் அறிக்கையிடவுமே நான் உன்னை நிலைக்கச் செய்தேன்.”✠ 18ஆகவே, கடவுள் தாம் விரும்புவது போலச் சிலருக்கு இரக்கம் காட்டுகிறார்; வேறு சிலரைக் கடின உள்ளத்தினர் ஆக்குகிறார்.


கடவுளின் சினமும் இரக்கமும்


19“அப்படியானால், கடவுள் மனிதர் மீது எப்படிக் குற்றம் சுமத்தமுடியும்? அவருடைய விருப்பத்தை யாரும் எதிர்க்க முடியாதல்லவா?” என்று நீங்கள் கேட்கலாம். 20மனிதர்களே! கடவுளை எதிர்த்துப் பேச நீங்கள் யார்? உருவாக்கப்பட்ட பொருள் தன்னை உருவாக்கியவரிடம், “ஏன் என்னை இவ்வாறு செய்தாய்?” எனக் கேட்குமோ?✠ 21ஒரே களிமண்ணைப் பிசைந்து மதிப்புள்ள கலனையோ மதிப்பற்ற கலனையோ வனையக் குயவனுக்கு உரிமை இல்லையா?


22தமது சினத்தைக் காட்டவும் தமது வல்லமையை விளங்கச் செய்யவும் கடவுள் விரும்பியபோதிலும், அழிவுக்கும் அவருடைய சினத்துக்கும் இலக்கான கலன்களைப் பொறுத்தவரையில் அவர் மிக்க பொறுமை காட்டினாராயின், யார் என்ன சொல்ல முடியும்? 23அவரது இரக்கத்திற்கு உரித்தான கலன்கள் மாட்சி பெறவேண்டும் என்று முன்னேற்பாடு செய்திருந்தார். அக்கலன்களைப் பொறுத்தவரை அவர் தமது அளவற்ற மாட்சியை வெளிப்படுத்த விரும்பினார்.


24யூதர்கள் நடுவிலிருந்து மட்டுமன்றி, யூதரல்லாதார் நடுவிலிருந்தும் அவரால் அழைக்கப்பட்ட நாமே அந்தக் கலன்கள். 25அவ்வாறே, “என் மக்கள் அல்லாதோரை நோக்கி என் மக்கள் நீங்கள் என அழைப்பேன்; கருணைப் பெறாதோருக்குக் கருணை காட்டுவேன்” என்று ஓசேயா நூலில் எழுதப்பட்டுள்ளது அன்றோ!✠


26“நீங்கள் என்னுடைய மக்கள் அல்ல” என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு மாறாக, “வாழும் கடவுளின் மக்கள்” என்று அவர்களுக்குக் கூறப்படும் என்றும் அதில் எழுதியுள்ளது.✠ 27-28“இஸ்ரயேலே, உன் மக்கள் கடற்கரை மணலைப்போல் இருப்பினும் அவர்களுள் எஞ்சியிருப்போரே திரும்பிவருவர்;காலம் தாழ்த்தாமல் ஆண்டவர் தாம் தீர்மானித்த படியே நாடு முழுவதிலும் அனைத்தையும் செய்வார்”✠ என்றும் எசாயா இஸ்ரயேல் மக்களைக் குறித்துக் கூறியுள்ளார்.


29“படைகளின் ஆண்டவர் நம்மில் சிலரையேனும் எஞ்சியிருக்கச் செய்யாவிடில் சோதோமைப்போல் நாம் ஆகியிருப்போம்; கொமோராவுக்கு ஒப்பாகியிருப்போம்”✠ என்றும் எசாயா முன்னுரைத்துள்ளார்.


இஸ்ரயேலரும் நற்செய்தியும்


30அப்படியானால் என்ன சொல்வோம்? பிற இனத்தார் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவதற்காக முயற்சி செய்யாத போதிலும் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்பட்டார்கள். அப்படி ஆக்கப்பட்டது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையால்தான். 31ஆனால், கடவுளுக்கு ஏற்புடையவர்களாகுமாறு இஸ்ரயேல் மக்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க முயற்சி செய்த போதிலும் அவர்கள் வெற்றி பெறவில்லை. 32இதன் காரணம் என்ன? அவர்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல் செயல்களின் அடிப்படையில் முயற்சி செய்தார்கள். எனவே, ‘தடைக்கல்லின் மேல்’ தடுக்கி விழுந்தனர். 33இதைப்பற்றியே, “இதோ தடுக்கி விழச்செய்யும் கற்பாறையையும் இடறச்செய்யும் கல்லையும் சீயோனில் வைக்கிறேன். அதன்மேல் நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்குள்ளாக மாட்டார்” என்று மறைநூலில் எழுதியுள்ளது.✠


9:3 விப 32:33. 9:7 தொநூ 21:12. 9:9 தொநூ 18:10. 9:12 தொநூ 15:23. 9:13 மலா 1:2,3. 9:15 விப 33:19. 9:17 விப 9:16. 9:20 எசா 29:16; 45:9. 9:25 ஓசே 2:23. 9:26 ஓசே 1:10. 9:27-28 எசா 10:22,23. 9:29 எசா 1:9. 9:33 எசா 28:16.


அதிகாரம் 10

1சகோதர சகோதரிகளே, என் இனத்தார் மீட்படைய வேண்டும் என நான் உளமார விரும்புகிறேன். அதற்காக நான் கடவுளிடம் மன்றாடுகிறேன். 2கடவுள்மேல் அவர்களுக்குப் பற்று உண்டு என்பதற்கு நானே சாட்சி. ஆனால், அப்பற்று உண்மையான அறிவை அடிப்படையாகக் கொண்டதல்ல. 3அதாவது, கடவுள் மனிதர்களைத் தமக்கு ஏற்புடையவர்களாக்கும் முறையை அறிந்து கொள்ளாமல், யூதர்கள் தங்கள் முயற்சியாலேயே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக முயன்றார்கள்; ஆகவே, அவர்கள் கடவுளின் செயல்முறைக்குத் தங்களை உட்படுத்தவில்லை. 4கிறிஸ்துதான் திருச்சட்டத்தின் நிறைவு; அவர்மேல் நம்பிக்கை கொள்ளும் எவரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவார்.✠


மீட்பு எல்லாருக்கும் உரியது


5திருச்சட்டத்தின் வழியாய் கடவுளுக்கு ஏற்புடையவராதல் பற்றி, “நியமங்களையும் ஆணைகளையும் கடைப்பிடிப்போர் அவற்றால் வாழ்வு பெறுவர்” என்று மோசே எழுதியுள்ளார்.✠6-7ஆனால், நம்பிக்கை வழியாய்க் கடவுளுக்கு ஏற்புடையவராதல் பற்றி, கிறிஸ்துவைக் கீழே கொண்டு வருமாறு, “விண்ணகத்திற்குப் போகிறவர் யார்?” என்றும், இறந்த கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து கொண்டு வருமாறு “கடல் கடந்து செல்வோர் யார்?’ என்றும் உனக்குள்ளே சொல்லிக் கொள்ளவேண்டாம்” என்று மறைநூலில் எழுதியுள்ளதன்றோ! 8அதில் சொல்லியிருப்பது இதுவே: “வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.” இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும்.


9ஏனெனில், ‘இயேசு ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். 10இவ்வாறு, உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர்.


11ஏனெனில், “அவர் மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்” என்பது மறை நூல் கூற்று.✠ 12இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார்.


13“ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர். எவரும் மீட்புப் பெறுவர்”✠ என்று எழுதியுள்ளது அல்லவா? 14ஆனால், அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்றுபற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? 15அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்? இதைப்பற்றியே, “நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன” என்று மறைநூலில் எழுதியுள்ளது. ✠ 16ஆயினும் எல்லாருமே நற்செய்தியை ஏற்றுக் கொள்ளவில்லை; இதைக் குறித்தே எசாயா, “ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்?” என்று முறையிடுகிறார்.✠ 17ஆகவே, அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும். கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால் தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு.


18அப்படியானால், அவர்கள் கேள்விப்படவில்லை என்று சொல்ல முடியுமோ? எப்படிச் சொல்ல முடியும்? ஏனெனில், “அவர்களது அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவர்கள் கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது.”


✠ 19ஆனால், இஸ்ரயேல் மக்கள் கண்டு பிடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? முடியாது. முதற்கண், “ஒன்றும் இல்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்; மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன்” என மோசே சொல்லுகிறார்.


✠ 20அடுத்து எசாயாவும், “தேடாதவர்கள் என்னைக் கண்டடைய இடமளித்தேன்; நாடாதவர்களுக்கு என்னை வெளிப்படுத்த இசைந்தேன்” எனத் துணிந்து கூறுகிறார்.


✠ 21ஆனால், இஸ்ரயேல் இனத்தாரைப் பற்றித் “தங்கள் எண்ணங்களின்படி எனக்குக் கீழ்ப்படியாமல் நடக்கும் கலகக்கார மக்களினத்தின்மீது நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன்” என்றும் கூறுகிறார்.✠


10:4 கலா 3:24. 10:5 லேவி 18:5. 10:6-8 இச 30:12-14. 10:11 எசா 8:16. 10:13 யோவே 2:32. 10:15 எசா 52:7. 10:16 எசா 53:1. 10:18 திபா 9:4. 10:19 இச 32:21. 10:20 எசா 65:1. 10:21 எசா 65:2.


அதிகாரம் 11

இஸ்ரயேலருள் எஞ்சினோர்


1அப்படியானால் கடவுள் தம் மக்களைத் தள்ளிவிட்டார் என்று சொல்லலாமா? ஒருபோதும் இல்லை. நானும் ஓர் இஸ்ரயேலன், ஆபிரகாமின் வழிமரபினன், பென்யமின் குலத்தினன்.✠ 2தாம் முன்பே தேர்ந்து கொண்ட மக்களைக் கடவுள் தள்ளி விடவில்லை. இஸ்ரயேல் மக்களுக்கு எதிராகக் கடவுளிடம் எலியா முறையீடு செய்தது பற்றிய மறைநூல் பகுதி உங்களுக்குத் தெரியாதா?


3“ஆண்டவரே, உம் இறைவாக்கினரை வாளால் கொன்றுவிட்டனர்; உம் பலிபீடங்களைத் தகர்த்துவிட்டனர்; நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர்”✠ என்றார். 4ஆனால், அவருக்குக் கிடைத்த இறைமொழி என்ன? “பாகாலுக்கு மண்டியிடாதவர்களாகிய ஏழாயிரம் பேரை மட்டும் எனக்கென்று விட்டு வைத்துள்ளேன்” என்பதாம்.✠ 5அதுபோல் இக்காலத்திலும் சிலர் எஞ்சியிருக்கின்றனர். இவர்கள் இறையருளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 6இவர்கள் அருளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாயின், செயல்களை முன்னிட்டுத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது பொருள். இல்லையேல் அருள் என்பதற்குப் பொருளே இல்லை.


7அப்படியானால் என்ன? தாங்கள் தேடியதை இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் அடைந்து கொள்ளவில்லை. அவர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டோர் சிலரே அடைந்தனர்; எஞ்சியோர்களுடைய மனமோ மழுங்கிப் போயிற்று.


8“ஆழ்ந்த தூக்கம் தரும் ஆவியை ஆண்டவர் உங்கள் மீது அனுப்பியுள்ளார்; காண்கின்ற கண்களையும் கேட்கின்ற செவிகளையும் இந்நாள்வரை ஆண்டவர் உங்களுக்குத் தரவில்லை”✠ என்று மறைநூலில் எழுதியுள்ளது. 9“அவர்களுடைய விருந்துகள் அவர்களுக்குக் கண்ணியாகவும் பொறியாகவும் தடைக்கல்லாகவும் தண்டனையாகவும் ஆகட்டும். 10அவர்களின் கண்கள் காணாதவாறு ஒளி இழக்கட்டும்; அவர்களின் முதுகு கூன்விழுந்தே இருக்கட்டும்” என்று தாவீதும் கூறுகின்றார்.


பிற இனத்தாரின் மீட்பு


11அப்படியானால், அவர்கள் தடுமாறியது அழிந்து போவதற்கா? ஒருபோதும் இல்லை. அவர்கள் தவறு செய்ததால் யூதரல்லாதாருக்கு மீட்புக் கிடைத்தது. அவர்களிடம் பொறாமையைத் தூண்டிவிடவே இவ்வாறு ஆயிற்று. 12அவர்கள் தவறியதால் உலகம் அருள்வளமுற்றது; அவர்கள் வீழ்ச்சியுற்றதால் பிற இனத்தார் அருள்வளம் பெற்றனர்; அப்படியென்றால், எல்லா யூதர்களும் நற்செய்தியை ஏற்கும்போது அருள்வளம் இன்னும் மிகுதியாகும் அன்றோ?


13பிற இனத்தாராகிய உங்களுக்குச் சொல்கிறேன்; உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமை கொள்கிறேன். 14<இதன் வழியாய், என் இனத்தாருள் பொறாமையைத் தூண்டிவிட்டு அவர்களுள் சிலரையேனும் மீட்கமுடியும் என நம்புகிறேன். 15யூதர்கள் தள்ளப்பட்டபோதே உலகம் கடவுளோடு ஒப்புரவாகியது என்றால், அவர்கள் அவரால் ஏற்றுக்கொள்ளப்படும்போது எப்படி இருக்கும்! இறந்தோர் உயிர்பெற்று எழுவர் என்று சொல்லலாம் அல்லவா?


16பிசைந்த மாவில் முதலில் ஒருபிடி எடுத்துக் கடவுளுக்கு அர்ப்பணித்தால் அம்மாவு முழுவதும் அர்ப்பணிக்கப்பட்டதாகிறது. அவ்வாறே மரத்தின் வேர் அர்ப்பணிக்கப்பட்டால் அதன் கிளைகளும் அர்ப்பணிக்கப்பட்டவையாகும். 17நல்ல ஒலிவ மரம் ஒன்றின் கிளைகள் சில தறிக்கப்பட்டு, அந்த ஒலிவ மரத்தில் காட்டொலிவ மரக்கிளை ஒன்று ஒட்டப்பட்டால், அது மரத்தின் செழுமையான வேரிலிருந்து ஊட்டம் பெறுகிறது. 18அந்தக் கிளை தறிக்கப்பட்ட கிளைகளைவிடத் தன்னைப் பெருமையாகக் கருதலாமா? அந்தக் காட்டொலிவ மரக்கிளை நீங்களே. அப்படியே நீங்கள் உங்களைப் பெருமையாகக் கருதினாலும், நீங்கள் வேரைத் தாங்கவில்லை; வேர்தான் உங்களைத் தாங்குகிறது என்பதை மறவாதீர்கள்.


19“நாங்கள் ஒட்டப்படுவதற்கே கிளைகள் தறிக்கப்பட்டன” என நீங்கள் சொல்லலாம். 20சரிதான்; அவர்கள் கடவுள்மேல் நம்பிக்கை கொள்ளாததால் தறிக்கப்பட்டார்கள்; நீங்களோ நம்பிக்கையின் காரணமாய் நிலைத்து நிற்கிறீர்கள். ஆகையால், உங்களுக்கு இருக்க வேண்டியது உயர்வு மனப்பான்மை அல்ல, அச்ச உணர்வே. 21ஏனெனில், இயற்கையாய் வளர்ந்த கிளைகளையே கடவுள் வெட்டாமல் விடவில்லை என்றால், ஒட்டப்பட்ட கிளையாகிய உங்களைத் தண்டிக்காமல் விடுவாரா?✠ 22இதில் கடவுளின் பரிவையும் கண்டிப்பையும் எண்ணிப்பாருங்கள். தவறி விழுந்தவர்களின் மேல் கண்டிப்பும் உங்கள்மேல் பரிவும் அவர் காட்டுகிறார். நீங்கள் அவருடைய பரிவைப் பெறுபவர்களாக வாழாவிட்டால் நீங்களும் தறிக்கப்படுவீர்கள். 23யூதர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டிராத நிலையிலிருந்து மாறினால், அவர்களும் ஒட்டப்படுவார்கள். அவர்களைத் திரும்பவும் ஒட்டுவதற்குக் கடவுள் வல்லவர்.24ஏனெனில், காட்டொலிவ மரத்தில் இயற்கையாய் வளர்ந்த நீங்கள் வெட்டப்பட்டு, இயற்கைக்கு மாறாக நல்ல ஒலிவமரத்தில் ஒட்டுப்போடப்பட்டீர்களானால், இயற்கைக் கிளைகளான அவர்களைத் தாய் மரத்தில் ஒட்டுப்போடுவது எத்துணை எளிது.


இஸ்ரயேலர் இழந்த நிலையை மீண்டும் அடைதல்


25சகோதர சகோதரிகளே, நீங்கள் அறிவாளிகள் எனக் கருதாதவாறு மறைபொருள் ஒன்றை உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். அதாவது, பிற இனத்தார் முழுமையாக இறைவனிடம் வந்து சேரும் வரையில் தான் இஸ்ரயேலில் ஒரு பகுதியினர் மழுங்கிய உள்ளம் கொண்டிருப்பர். 26-27பின்னர், இஸ்ரயேல் இனம் முழுவதும் மீட்கப்படும்; “சீயோனிலிருந்து அவர் மீட்பராக வருவார்; யாக்கோபில் தீயதனைத்தையும் போக்கிடுவார். நான் அவர்களுடைய பாவங்களை அகற்றிவிடுவேன்; அவர்களுடன் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே” என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! 28நற்செய்தியை ஏற்றுக் கொள்ளாததால் அவர்கள் கடவுளுக்குப் பகைவர்கள் ஆயினர்; அதுவும் உங்களுக்கு நன்மையாய் அமைந்தது. ஆனால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாயிருப்பதால் அவர்களுடைய மூதாதையரை முன்னிட்டு அவரது அன்புக்கு உரியவர்கள் ஆனார்கள். 29ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை. 30ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். 31அதுபோல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்குரியவர்களாக இருக்கிறீர்கள்; அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; ஆனால், அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக் கொள்வார்கள்; அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது. 32ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார். 33கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை!✠


34“ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்?✠ 35தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?”


36அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.✠


11:1 திபா 94:14; பிலி 3:5. 11:3 1 அர 19:10,14. 11:4 1 அர 19:18. 11:8 இச 29:4; எசா 29:10. 11:9-10 திபா 69:22,23. 11:21 எரே 49:12. 11:26 எசா 59:20. 11:27 எசா 27:9; எரே 31:33,34. 11:33 திபா 139:17,18; எசா 55:8. 11:34 எசா 40:13. 11:36 1 கொரி 8:6; 11:12.


அதிகாரம் 12

6. கிறிஸ்தவ வாழ்வு


1சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்; கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. 2இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.✠


3இறையருள் பெற்றவன் என்னும் முறையில் உங்களுள் ஒவ்வொருவருக்கும் நான் கூறுவது; உங்களுள் எவரும் தம்மைக் குறித்து மட்டுமீறி மதிப்புக் கொள்ளலாகாது; அவரவருக்குக் கடவுள் வரையறுத்துக் கொடுத்த நம்பிக்கையின் அளவுக்கேற்ப ஒவ்வொருவரும் தம்மை மதித்துக் கொள்ளட்டும். 4ஒரே உடலில் நமக்கு உறுப்புகள் பல உள; அந்த உறுப்புகளெல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை. 5அது போலவே, நாம் பலராயிருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம்.


6ஆயினும், நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு அருள்கொடைகளைப் பெற்றுள்ளோம். இறைவாக்குரைக்கும் கொடையை நாம் பெற்றிருந்தால் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அதைப் பயன்படுத்த வேண்டும். 7தொண்டாற்றும் கொடையை நாம் பெற்றிருந்தால் அதைத் தொண்டு புரிவதற்குப் பயன்படுத்த வேண்டும். 8கற்றுக் கொடுப்போர் கற்றுக் கொடுப்பதிலும், ஊக்கமூட்டுவோர் ஊக்கம் தருவதிலும், தமக்குள்ளதை வழங்குவோர் தாராளமாய்க் கொடுப்பதிலும், தலைமை தாங்குவோர் முழு ஆர்வத்தோடு செயல்படுவதிலும், இரக்கச் செயல்களில் ஈடுபடுவோர் முகமலர்ச்சியோடு அவற்றைச் செய்வதிலும் தாம் பெற்ற அருள்கொடைகளைப் பயன்படுத்த வேண்டும்.


கிறிஸ்தவ வாழ்க்கைக்குரிய ஒழுங்குகள்


9உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். 10உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். 11விடா முயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள். 12எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள். 13வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்.


14உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம்.✠ 15மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள். 16நீங்கள் ஒருமனத்தவராய் இருங்கள்; உயர்வுமனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள். நீங்கள் உங்களையே அறிவாளிகளெனக் கருதிப் பெருமிதம் கொள்ள வேண்டாம்.✠ 17தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; எல்லா மனிதரும் நலமெனக் கருதுபவை பற்றியே எண்ணுங்கள்.✠ 18இயலுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் அமைதியுடன் வாழுங்கள்.✠ 19அன்பார்ந்தவர்களே! பழிவாங்காதீர்கள்; அதைக் கடவுளின் சினத்திற்கு விட்டுவிடுங்கள். ஏனெனில், மறைநூலில் எழுதியுள்ளவாறு, “பழிவாங்குவதும் கைம்மாறு அளிப்பதும் எனக்கு உரியன” என்கிறார் ஆண்டவர். 20நீயோ, “உன் எதிரி பசியாய் இருந்தால், அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடு இருந்தால், அவன் குடிக்கக் கொடு. இவ்வாறு செய்வதால், அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்.”


✠ 21தீமை உங்களை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்!


12:2 எபே 4:23. 12:4-5 1 கொரி 12:12. 12:6-8 1 கொரி 12:4-11. 12:14 மத் 5:44; லூக் 6:28. 12:16 நீமொ 3:7; 26:12. 12:17 நீமொ 20:22. 12:18 மாற் 9:50; இச 12:19; 32:35. 12:20 நீமொ 25:21.


அதிகாரம் 13

அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிதல்


1ஆளும் அதிகாரம் உள்ளவர்களுக்கு எல்லாரும் பணிந்திருங்கள்; ஏனெனில், கடவுளிடமிருந்து வராத அதிகாரம் எதுவுமில்லை; இப்பொழுதுள்ள ஆட்சிப் பொறுப்புகளைக் கடவுளே ஏற்படுத்தினார்.✠ 2ஆகையால் அதிகாரத்தை எதிர்த்து நிற்போர் கடவுளின் ஏற்பாட்டையே எதிர்த்து நிற்கின்றனர். அவ்வாறு, எதிர்ப்பவர்கள் தங்கள் மீது தண்டனைத் தீர்ப்பைத் தாங்களே வருவித்துக் கொள்கிறார்கள். 3நற்செயல் செய்வோர் ஆள்வோருக்கு அஞ்ச வேண்டியதில்லை; தீச்செயல் செய்வோரே அஞ்ச வேண்டும். அதிகாரிகளுக்கு அஞ்சாமல் நீங்கள் வாழ விரும்பினால் நன்மை செய்யுங்கள்; அப்போது அவர்களிடமிருந்து உங்களுக்குப் பாராட்டுக் கிடைக்கும். 4ஏனெனில், அவர்கள் உங்களுக்கு நன்மை செய்வதற்கென்றே கடவுளால் ஏற்படுத்தப்பட்ட தொண்டர்கள். ஆனால், தீமை செய்தால், நீங்கள் அஞ்சவேண்டியதிருக்கும். அவர்கள் கையில் தண்டிக்கும் அதிகாரம் இருக்கிறது. அது வீணாக அவர்களிடம் கொடுக்கப்படவில்லை. தீமை செய்வோர் மீது கடவுளின் தண்டனையை நிறைவேற்ற அவரே ஏற்படுத்திய தொண்டர்கள் அவர்கள். 5ஆகவே, கடவுளின் சினத்தின் பொருட்டு மட்டும் அல்ல, மனச்சான்றின் பொருட்டும் நீங்கள் பணிந்திருத்தல் வேண்டும்.


6இதற்காகவே நீங்கள் வரிசெலுத்துகிறீர்கள். அவர்கள் தங்கள் பணியை ஆற்றும் போது கடவுளுக்கே ஊழியம் செய்கிறார்கள். 7ஆகையால், அனைவருக்கும் நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுங்கள். தலைவரி செலுத்த வேண்டியோருக்குத் தலைவரியையும் சுங்கவரி செலுத்த வேண்டியோருக்குச் சுங்க வரியையும் செலுத்துங்கள்; அஞ்ச வேண்டியவர்களுக்கு அஞ்சுங்கள்; மதிக்க வேண்டியவர்களை மதியுங்கள்.


ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துதல்


8நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார்.✠9ஏனெனில், “விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே” என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், “உன் மீது அன்பு கூர்வது போல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன.✠ 10அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.


இறுதிக்காலம் நெருங்குகிறது


11இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள்; உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததை விட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது.✠12இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கி உள்ளது. ஆகவே, இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! 13பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! 14தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.


13:1 நீமொ 8:15,16; 1 திமொ 2:2; தீத் 3:1; 1 பேது 2:13. 13:6-7 மத் 2:21; மாற் 12:17; லூக் 20:25. 13:8 கொலோ 3:14. 13:9 விப 20:13-17; இச 5:17-21; லேவி 19:18; கலா 5:14. 13:11 1 தெச 5:5,6.


அதிகாரம் 14

சகோதரர் சகோதரிகளுக்குத் தீர்ப்பு அளிக்காதீர்கள்


1நம்பிக்கையில் வலுவற்றவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்; ஆனால், கருத்து வேறுபாடுகளைப் பற்றி அவர்களோடு வாதாடாதீர்கள். 2நம்பிக்கை கொண்டோர் எல்லா வகை உணவையும் உண்ணலாம் எனக் கருதுகின்றனர்; வலுவற்றவரோ மரக்கறியையே உண்கின்றனர். 3எல்லாவகை உணவையும் உண்போர் அவ்வாறு உண்ணாதோரை இழிவாக எண்ணலாகாது; உண்ணாதோரும் உண்பவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தல் ஆகாது. ஏனெனில், கடவுள் அவர்களையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். 4வேறொருவருடைய வீட்டு வேலையாளிடம் குற்றம்காண்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர் நன்கு செயலாற்றுகிறாரா இல்லையா எனத் தீர்மானிப்பது அவர் தலைவரின் பொறுப்பு. அவர் நன்குதான் செயல்படுவார். ஏனெனில், தலைவர் அவரை நன்கு செயல்பட வைக்கமுடியும். 5ஒருநாள் மற்றொரு நாளைவிடச் சிறந்தது எனச் சிலர் கருதுகின்றனர்; வேறு சிலர் எல்லா நாளையும் ஒன்று போலவே கருதுகின்றனர். இத்தகையவற்றில், ஒவ்வொருவரும் தம் மனத்தில் செய்து கொண்ட முடிவின்படி நடக்கட்டும். 6மேற்சொன்னவாறு ஒரு குறிப்பிட்ட நாளைச் சிறப்பாகக் கடைப்பிடிப்பவர் ஆண்டவருக்காகவே அப்படிச் செய்கிறார். எல்லா வகை உணவையும் உண்போர் கடவுளுக்கு நன்றிகூறி உண்பதால், ஆண்டவருக்காகவே உண்கின்றனர். அவ்வாறு உண்ணாதிருப்போரும் ஆண்டவருக்காகவே உண்ணாதிருக்கின்றனர்; ஏனெனில், அவர்களும் கடவுளுக்கு நன்றி கூறுகின்றார்கள்.


7நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை. 8வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். 9ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சிசெலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார். 10அப்படியிருக்க, நீங்கள் ஏன் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் குற்றம் காண்கிறீர்கள்? ஏன் அவர்களை இழிவாகக் கருதுகிறீர்கள்? நாம் அனைவருமே கடவுளின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம் அல்லவா?✠11ஏனெனில், “ஆண்டவர் சொல்கிறார்; நான் என் மேல் ஆணையிட்டுள்ளேன்; முழங்கால் அனைத்தும் எனக்கு முன் மண்டியிடும். நாவு அனைத்தும் என்னைப் போற்றும்” என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!✠ 12ஆகவே, நம்முள் ஒவ்வொருவரும் தம்மைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பர்.


சகோதரர் சகோதரிகளுக்குத் தடைக்கல்லாய் இராதீர்


13ஆகையால், இனி ஒருவர் மற்றவரிடம் குற்றம் காணாதிருப்போம். மேலும், சகோதரர் சகோதரிகளுக்குத் தடைக்கல்லாகவோ இடையூறாகவோ இருப்பதில்லை எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். 14தன்னிலேயே எப்பொருளும் தீட்டானது அல்ல என, ஆண்டவர் இயேசுவுடன் இணைந்து வாழும் எனக்குத் தெரியும். இது என் உறுதியான நம்பிக்கை. எனினும், ஒரு பொருள் தீட்டானது எனக் கருதுவோருக்கு அது தீட்டானதாகவே இருக்கும். 15நீங்கள் உண்ணும் உணவு உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மனவருத்தம் உண்டாக்கினால் நீங்கள் அன்பு நெறியில் நடப்பவர்கள் அல்ல. உணவை முன்னிட்டு நீங்கள் அவர்களை அழிவுறச் செய்யாதீர்கள்; அவர்களுக்காகக் கிறிஸ்து உயிர்துறக்கவில்லையா? 16ஆகவே, உங்களுக்கு நன்மையாய் இருப்பது பிறருடைய பழிச்சொல்லுக்கு இடந்தராதிருப்பதாக! 17இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது. 18இத்தகைய இறையாட்சி மனப்பான்மையோடு கிறிஸ்துவுக்குப் பணிபுரிவோர் கடவுளுக்கு உகந்தோராயும் மக்களின் மதிப்புக்கு உரியோராயும் இருப்பர்.

19ஆகையால், அமைதிக்கு வழிவகுப்பவற்றை நாடுவோமாக! ஒருவர் மற்றவருக்கு வளர்ச்சி தருபவற்றைச் செய்ய முயலுவோமாக! 20உணவின் பொருட்டுக் கடவுளின் படைப்பை அழிக்காதீர். எல்லா உணவும் தூயதுதான்; ஆனால் அடுத்தவருக்குத் தடையாக அமையும் எந்த உணவும் அதை உண்போருக்குத் தீயதுதான். 21உங்கள் சகோதரர் சகோதரிகளுக்குத் தடையாக இருக்குமாயின், இறைச்சி உண்பதையோ, திராட்சை மது குடிப்பதையோ, அதுபோன்ற வேறெதையும் செய்வதையோ தவிர்ப்பதே நல்லது.✠ 22இவற்றைப்பற்றிய உறுதியான மனநிலை உங்களுக்கிருந்தால், அதை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்; அது கடவுளுக்கு மட்டும் தெரிந்திருக்கட்டும். தேர்ந்து தெளிந்து எடுத்த முடிவைச் செயல்படுத்தும்போது மனச்சான்றின் உறுத்தலுக்கு ஆளாகாதோர் பேறுபெற்றோர். 23நல்லதோ கெட்டதோ என்னும் ஐயத்தோடு உண்போர் தண்டனைத் தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில், அவர்கள் உறுதியான மனநிலையோடு செயல்படவில்லை. உறுதியான மனநிலையோடு செய்யப்படாததெல்லாம் பாவமே.


14:1-6 கொலோ 2:16. 14:10 2 கொரி 5:10. 14:11 எசா 45:23. 14:21 1 கொரி 8:13.


அதிகாரம் 15

பிறருக்கு உகந்ததையே தேடுங்கள்


1மன வலிமை கொண்டவர்களாகிய நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்; நமக்கு உகந்ததையே தேடலாகாது. 2அடுத்தவருடைய நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு அவர்களுக்கு உகந்தவர்களாக வாழுங்கள். 3கிறிஸ்துவும் தமக்கு உகந்ததைத் தேடவில்லை. “உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என் மீது விழுந்தன” என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!✠ 4முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது. 5கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக! 6இவ்வாறு, நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள்.


நற்செய்தி யூதருக்கும் பிற இனத்தார்க்கும் உரியது


7ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே. 8கடவுள் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுமாறு கிறிஸ்து விருத்தசேதனம் செய்து கொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார். மூதாதையருக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தவும், 9பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார். ஆகவே, “பிறஇனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்” என் இதைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளது.✠ 10மேலும், “வேற்றினங்களே, ஆண்டவரின் மக்களோடு மகிழுங்கள்” என்றும்✠ 11“பிற இனத்தாரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்; மக்களினத்தாரே நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்”✠ என்றும் எழுதியுள்ளது அல்லவா! 12இன்னும், “ஈசாயின் குலக்கொழுந்து ஒருவர் வருவார்; மக்களினங்களை ஆளும் தலைவராய் அவர் தோன்றுவார்; மக்களினங்கள் அவரையே எதிர்நோக்கி இருப்பர்” என்று எசாயா கூறுகிறார்.✠ 13எதிர்நோக்கைத் தரும் கடவுள், நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும், அமைதியாலும் உங்களை நிரப்புவாராக! அவ்வாறு தூய ஆவியின் வல்லமையால் நீங்கள் இன்னும் மிகுதியான எதிர்நோக்குடன் வாழ அருள்புரிவாராக.


7. முடிவுரையும் வாழ்த்தும் பவுல் பொறுப்பேற்ற பணி


14என் சகோதர சகோதரிகளே, நீங்கள் நன்னயம் நிறைந்தவர்களாயும், எல்லா அறிவும் நிரம்பப் பெற்றவர்களாயும், ஒருவர் மற்றவரை அறிவுறுத்தக் கூடியவர்களாயும் இருக்கிறீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். 15ஆயினும், உங்களுக்கு நினைவூட்டும் வகையில் சிலவற்றை இக்கடிதத்தில் மிகத் துணிவோடு எழுதியுள்ளேன். நான் கடவுளின் அருளைப் பெற்றவன் என்பதால் தான் அவ்வாறு எழுதினேன்.16அந்த அருள்தான் என்னைப் பிற இனத்தாருக்குப் பணிசெய்யக் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாக்கிற்று. பிற இனத்தார் தூய ஆவியால் அர்ப்பணிக்கப்பட்ட, கடவுளுக்கு உகந்த காணிக்கையாகும்படி அவர்களுக்கு கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி. 17ஆகையால், கடவுளுக்காகச் செய்யும் இந்தப் பணியை முன்னிட்டு, கிறிஸ்து இயேசுவுக்குரியவனாகிய நான் பெருமை பாராட்டிக் கொள்ள இடமுண்டு. 18பிற இனத்தார் தமக்குக் கீழ்ப்படியும் பொருட்டுக் கிறிஸ்து என் வழியாய்ச் சொல்லாலும் செயலாலும், அரும் அடையாளங்கள், அருஞ் செயல்களின் வல்லமையாலும், கடவுளின் ஆவியின் வல்லமையாலும் செய்து முடித்தவற்றைத் தவிர வேறெதைப் பற்றியும் பேச நான் துணியமாட்டேன். 19இவ்வாறு, எருசலேம் தொடங்கி இல்லிரிக்கம் மாநிலம் வரை எங்கும் சுற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியை முடித்துவிட்டேன். 20கிறிஸ்துவின் பெயரைக் கேள்விப்படாத இடங்களில் மட்டும் நற்செய்தி அறிவிப்பதே என நோக்கமாய் இருந்தது. ஏனெனில், வேறொருவர் இட்ட அடித்தளத்தின்மேல் கட்டி எழுப்ப நான் விரும்பவில்லை. 21ஆனால், “தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்துகொள்வர்” என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!✠


பவுலின் பயணத் திட்டம்


22எனவேதான் நான் உங்களிடம் வரப் பலமுறை நினைத்தும் அது தடைப்பட்டது.✠ 23-24ஆனால், இப்பொழுது இந்தப் பகுதிகளில் எனக்கு இனி வேலையில்லை. மேலும், நான் ஸ்பெயின் நாட்டுக்குப் போகும்போது உங்களைக் காண வரவேண்டும் என்று பல ஆண்டுகளாகவே ஏங்கிக் கொண்டிருக்கிறேன். போகும் வழியில் உங்களைக் கண்டு, சில நாள்களேனும் உங்களோடு தங்கி மகிழ்ந்த பின்னர் என்னை அங்கிருந்து நீங்கள் வழியனுப்பி வைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.25எனினும் தற்பொழுது இறைமக்களுக்குச் செய்யப்படவேண்டிய பொருளுதவியை முன்னிட்டு எருசலேமுக்குப் புறப்படுகிறேன். 26எருசலேமில் வாழும் ஏழை இறைமக்களுக்கு சிறிது பொருளுதவி செய்ய மாசிதோனியா, அக்காயா மாநிலத்தார் முன்வந்துள்ளனர். 27ஆம், மனமுவந்து முன்வந்துள்ளனர். எருசலேமில் வாழும் இறைமக்களுக்கு உண்மையில் பிற இனத்தார் கடன்பட்டவர்களே. எவ்வாறெனில், ஆவிக்குரிய கொடைகளில் இவர்கள் அவர்களின் பங்காளிகள் ஆயினர்; அதற்கேற்ப உடலைச் சார்ந்த தேவைகளில் அவர்களுக்கு ஊழியம் செய்ய இவர்கள் கடமைப்பட்டவர்கள் அல்லவா?✠ 28எனவே, தண்டல் செய்த தொகையை நானே அவர்களிடம் பொறுப்பாய் ஒப்படைத்துவிட்டு, என் வேலை முடிந்த பின்னர் உங்கள் ஊரின் வழியாக ஸ்பெயினுக்குப் போவேன். 29அப்போது, கிறிஸ்துவின் நிறைவான அருளாசியோடு உங்களிடம் வருவேன் என்பது உறுதி.


30சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை முன்னிட்டும் தூய ஆவி நம் உள்ளத்தில் பொழிந்துள்ள அன்பை முன்னிட்டும் நான் உங்களைக் கேட்டுக்கொள்வது; எனக்காகக் கடவுளிடம் வேண்டி, என் போராட்டத்தில் எனக்குத் துணை செய்யுங்கள்.✠ 31யூதேயாவில் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாதோரிடமிருந்து என்னைக் காப்பாற்றுமாறும் நான் எருசலேமில் செய்யப்போகும் பொருளுதவி இறைமக்களுக்கு உகந்ததாய் இருக்குமாறும் வேண்டுங்கள். 32இவ்வாறு, கடவுளின் திருவுளத்தால் மகிழ்ச்சியுடன் நான் உங்களிடம் வந்து ஓய்வு எடுக்க இயலுமாறு எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள். 33அமைதி தரும் கடவுள் உங்கள் அனைவரோடும் இருப்பாராக! ஆமென்.


15:1-2 கலா 6:2. 15:3 திபா 69:9. 15:9 2 சாமு 22:50; திபா 18:49. 15:10 இச 32:43. 15:11 திபா 117:1. 15:12 எசா 11:10. 15:21 எசா 52:15. 15:22 உரோ 1:13. 15:25-26 1 கொரி 16:1-4. 15:27 1 கொரி 9:11; கலா 6:6. 15:30 2 கொரி 1:11; எபே 6:19; கொலோ 4:3; 1 தெச 5:25.


அதிகாரம் 16

வாழ்த்துகள்


1நம் சகோதரியாகிய பெயிபாவைக் குறித்து நற்சான்று அளிக்க விரும்புகிறேன்; இவர் கெங்கிரேயாவில் இருக்கும் சபையில் திருத்தொண்டராய் இருக்கிறார். 2இறை மக்களுக்கு ஏற்றவாறு ஆண்டவரின் பெயரால் அவரை வரவேற்று, அவருக்குத் தேவையான உதவி செய்யுங்கள். ஏனெனில், அவரும் பலருக்கு உதவி செய்திருக்கிறார்; எனக்கும் உதவி செய்திருக்கிறார்.


3கிறிஸ்து இயேசுவுக்காக என்னோடு சேர்ந்து உழைக்கின்ற பிரிஸ்காவுக்கும் அக்கிலாவுக்கும் என் வாழ்த்து.✠ 4அவர்கள் என் உயிரைக் காக்கத் தலைகொடுக்கவும் முன்வந்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மட்டும் அல்ல, பிற இனத்துத் திருச்சபைகள் அனைத்துமே நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன. 5aஅவர்கள் வீட்டில் கூடும் திருச்சபைக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்./p>

5bஎன் அன்பார்ந்த எப்பைனத்துக்கும் வாழ்த்துக் கூறுங்கள். ஆசியாவில்* கிறிஸ்துவை முதன் முதல் ஏற்றுக் கொண்டவர் இவரே. 6உங்களுக்காக பாடுபட்டு உழைத்த மரியாவுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள். 7என் உறவினர்களும் உடன் கைதிகளுமான அந்திரோனிக்கு, யூனியா ஆகியவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்; திருத்தூதர்களுள் இவர்கள் பெயர்பெற்றவர்கள்; இவர்கள் எனக்குமுன் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.


8ஆண்டவருக்கு உரியவரான என் அன்பார்ந்த அம்பிலியாத்துக்கு வாழ்த்துக்கள். 9கிறிஸ்துவுக்காக உழைக்கும் என் உடன் உழைப்பாளரான உர்பானுக்கும் என் அன்பார்ந்த ஸ்தாக்கிக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். 10அப்பெல்லுக்கும் என் வாழ்த்து; இவர் தகைமை வாய்ந்த ஒரு கிறிஸ்தவர். அரிஸ்தோபுல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள். 11என் உறவினரான எரோதியோனுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். நர்க்கிசு குடும்பத்தில் உள்ள ஆண்டவருடைய அடியார்களுக்கு என் வாழ்த்து. 12ஆண்டவருக்காக உழைக்கும் திரிபேனாவுக்கும் திரிபோசாவுக்கும் என் வாழ்த்து; அன்பார்ந்த பெர்சிக்கும் என் வாழ்த்துகள். இவரும் ஆண்டவருக்காக மிகவும் பாடுபட்டு உழைத்தார். 13ஆண்டவர் பணிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரூபுக்கும் அவர் அன்னைக்கும் வாழ்த்துக் கூறுங்கள். அவருடைய அன்னை எனக்கும் அன்னை போன்றவர்.✠ 14அசிங்கிரித்து, பிலகோன், எர்மசு, பத்திரொபா, எர்மா ஆகியோருக்கும் அவர்களோடு இருக்கும் சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக் கூறுங்கள்.15பிலலோகு, யூலியா, நேரேயு, அவருடைய சகோதரி ஒலிம்பா ஆகியோருக்கும் அவர்களோடு இருக்கும் இறைமக்கள் எல்லாருக்கும் என் வாழ்த்துகள்.


16தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் எல்லாச் சபைகளும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றன.


17சகோதர சகோதரிகளே, நான் உங்களிடம் வேண்டுவது; நீங்கள் கற்றுக்கொண்ட போதனையை மீறிப் பிரிவினைகளையும் தடைகளையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்களை விட்டு விலகுங்கள். 18ஏனெனில், இத்தகையோர் நம் ஆண்டவர் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யவில்லை; தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்கிறார்கள். இவர்கள் இன்சொல் பேசி முகமன் கூறிக் கபடற்ற உள்ளத்தினரை ஏமாற்றுகிறார்கள். 19நீங்கள் நற்செய்தியைப் பின்பற்றி வாழ்கிறீர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. எனவே, உங்களைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். எனினும், நீங்கள் நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாயும், தீமை என்றால் என்ன என்றே தெரியாத கபடற்றவர்களாயும் இருக்க வேண்டும் என விழைகிறேன். 20அமைதி தரும் கடவுள் சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப் போடுவார். நம் ஆண்டவர் இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக! 21என் உடனுழைப்பாளரான திமொத்தேயுவும், என் உறவினர்களான லூகியு, யாசோன், சோசிபத்தர் ஆகியோரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.✠ 22இந்தத் திருமுகத்தை எழுதிக் கொடுத்த தெர்த்தியுவாகிய நான் ஆண்டவருக்கு உரியவன் என்னும் முறையில் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறேன். 23நான் தங்குவதற்கும் சபையினர் அனைவரும் ஒன்று கூடுவதற்கும் தம் வீட்டில் இடமளிக்கிற காயு உங்களுக்கு வாழ்த்துச் சொல்லுகிறார். நகரத்தின் பொருளாளரான எரஸ்தும் நம் சகோதரனாகிய குவர்த்தும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.✠ 24[*]


கடவுளுக்குப் புகழுரை


25யேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 26இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். 27ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.


16:3 திப 18:2. 16:13 மாற் 15:21. 16:21 திப 16:1. 16:23 திப 19:29; 1 கொரி 1:14; 2 திமொ 4:20.


16:5 ஆசியா என்பது உரோமை மாநிலங்களுள் ஒன்று. இது இன்றைய துருக்கி நாட்டின் ஒரு பகுதி ஆகும். 16:24 "நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக! ஆமென்!" என்னும் வசனம் முக்கியமல்லாத சில கையெழுத்துப் படிகளில் மட்டுமே காணப்படுகிறது.